மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 4 மார்ச், 2018

கொங்குநாட்டு நிலத்தியல்
(GEOLOGY OF KONGU  NADU)


முன்னுரை
கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் நடத்திவருகின்ற சொற்பொழிவுகள், கொங்கு நாட்டைச் சார்ந்த வரலாறு, தொல்லியல், நிலவளம், மக்கள் கலை ஆகியன பற்றி அமைவன. அவ்வகையில் இம்மாத (ஃபிப்ரவரி”, 2018 )  நிகழ்ச்சியாகக் கொங்கு நாட்டு நிலத்தியல் குறித்து நிலத்தியல் பேராசிரியர் முனைவர். கி.கதிர்வேலு அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு பற்றிய ஒரு பதிவை இங்கு பகிர்கிறேன். இவர் திருப்பூரைச் சேர்ந்தவர். நிலத்தியல் படிப்பு சென்னையில் மாநிலக் கல்லூரியில் மட்டுமே இருந்த நாள்களில் முதுகலை நிலத்தியல் படித்து முனைவர் பட்டமும் பெற்றவர்.

நிலத்தியல் ஓர் அறிமுகம்
நிலத்தியல் என்பது புவியைப் பற்றிய அறிவியல் என்றாலும், அதன் கீழ் உட்பிரிவுகள் பல உள. கட்டமைப்பு நிலத்தியல்”  (STRUCTURAL GEOLOGY) என்று ஒரு பிரிவு. பாறைகள், அவற்றின் தோற்றம் ஆகியவை பற்றிய அறிவியல் துறை. கனிமவியல் (MINEROLOGY) என்றொரு பிரிவு. கனிமங்களைப் பற்றிக் கூறுவது. இவை போன்று பல்வகைப் பிரிவுகள். புவி (EARTH)  தோன்றி 4567 மில்லியன் ஆண்டுகள் ஆயின என்று கணிக்கப்படுள்ளது. புவியின் தோற்றத்துக்குப் பெருவெடிப்பு (BIG BANG) என்னும் நிகழ்வு காரணமாயிருந்துள்ளது என்று அறிவியலார் கண்டறிந்துள்ளனர். கோள்களின் மோதல்களாலும், விண் கற்களின் மோதல்களாலும் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகவே புவி தோற்றம் பெற்றது.

புவி, கதிரவனிடமிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் அமைந்துள்ளது. 3476 கி.மீ. விட்டம் கொண்டது. 5 கோடி 10 மில்லியன் சதுர கி.மீ. அளவு  பரப்புக்கொண்டது. புவி தோன்றி 4567 மில்லியன் ஆண்டுகள் ஆயின என்பது அறிவியலாளர்கலின் கருத்து. புவியின் தோற்றத்தைப் பற்றிய குறிப்பு “பைபிளில் உள்ளது. அதன்படி 6000 ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது என்றும், 12000 ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது என்றும் இரு குறிப்புகள் பைபிள் வழி அறியப்படுகின்றன. இந்தியக் கணிப்பில் பத்து யுகங்களுக்கு முன்னர் புவி தோன்றியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. கி.பி. 1403 வரை, அதாவது கோபர்னிகஸ் (COPERNICUS) என்னும் அறிவியலாளரின் கண்டுபிடிப்புக்கு முன்பு வரை, புவியை மையமாகக் கொண்டு மற்ற கோள்கள் சுற்றுவதாகக் கருதப்பட்டது. அதே போல், கலிலியோ (GALILEO) என்னும் அறிவியலாளர் கண்டறிந்து சொன்ன பின்னரே, புவி உருண்டை வடிவுடையது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், மாணிக்கவாசகப் பெருமான், தம் திருவண்டப் பகுதியில், அண்டம், பேரண்டம் ஆகிய சொற்களால் உலகத்தைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். பேரண்டம் என்பது எண்ணற்ற கோளங்களை உள்ளடக்கியது. கதிரவனின் ஒளிக் கற்றைகளுக்கிடையில் நாம் காணுகின்ற தூசிப் படலத்தைப் போல் அண்டத்தில் கோளங்கள் இயங்குகின்றன என்று மாணிக்கவாசகர் கூறுவது கருதத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாரும் தம் அகவலில் அண்டம் உருவாகியதைக் குறிக்கிறார். கதிரவனை மையமாகக் கொண்டுள்ள விண்ணியல் அமைப்பில் (SOLAR SYSTEM),  கதிரவனைச் சுற்றும் முதலிரு கோள்களாகிய வெள்ளியிலும் புதனிலும் (VENUS, MERCURY)  அவற்றின் மிகு வெப்பம் காரணமாக உயிரினம் இல்லை. மூன்றாவதாகச் சுற்றும் புவியில் மட்டுமே உயிரினம் தோன்றியது.

புவியின் உட்புறத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதற்பகுதி, மேற்பரப்பு. இதனை ஆங்கிலத்தில் CRUST என்பர். இதன் ஆழம் 50 கி.மீ.. அதற்கடுத்த பகுதி 50-2980 கி.மீ. ஆழம் கொண்டது இதனை ஆங்கிலத்தில் MANTLE என்பர். மூன்றாவது பகுதி 6378 கி.மீ வரையிலான ஆழம். இதனை ஆங்கிலத்தில் CORE என்பர். புவியின் மேற்பரப்பில் எட்டு அடுக்குகள் (PLATES) உள்ளன. கடலுக்கு அடியில் அமைந்துள்ள நிலத்தின் அடர்த்தியை விடப் புவியின் மேற்பரப்பு (எட்டு அடுக்குகள் கொண்ட 50 கி.மீ. ஆழம் கொண்ட பகுதி) அடர்த்தி குறைவானது. எனவே, இந்த எட்டு அடுக்குகளும் கடலில் மிதக்கின்றன. இந்த அடுக்குகளில்தான் கண்டங்களின் நகர்வுகள் நிகழ்ந்துள்ளன. இந்த எட்டு அடுக்குகளில் அன்ட்டார்டிகா, ஆர்க்டிக் ஆகியன இரு அடுக்குகள்; ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா போன்றவை ஆறு அடுக்குகள். இந்தியக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்ததுண்டு. இந்த அடுக்குகளின் நகர்வின்போது, இந்தியக்கண்டம் யூரேசியாவின் மீது மோதியபோது இமயமலை தோன்றியது.  இவ்வடுக்குகள் உட்பகுதியில்  பாறைகளைக் கொண்டுள்ளன. CORE  எனப்படும் மூன்றாவது   பகுதியில், திடப்பொருள் வடிவிலான இரும்பு, நிக்கல் ஆகியன இருக்கும். மரியானா அகழி (MARIANA TRENCH) என்னும் இடம்தான் கடலின் மிக ஆழமான பகுதி எனக் கண்டறியப்பட்டுள்ளது.  ஏறத்தாழ 11 கி.மீ. ஆழம் கொண்டது.

பூமிக்கடியில் செல்லச் செல்ல வெப்பமும் அழுத்தமும் மிகுதி. எனவே, பூமிக்குக் கீழ் செல்வது இயலாது. பூமியின் மேற்பரப்பில் ஏறத்தாழ 115 தனிமங்கள் (ELEMENTS) உள்ளன. சிலிக்கான், அலுமினியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், நிக்கல், சல்ஃபர் என்பன போன்ற இருபது தனிமங்கள் மட்டும் 98 விழுக்காடு உள்ளன. 1638 வகையான பாறைகள் உள்ளன. 700 கி.மீ. ஆழத்தில், பாறைகள் உருகி “மாக்மா”  (MAGMA) என்னும் பாறைக்குழம்பு உருவாகிறது. அதுவே குளிர்ந்து பின்னர் கனிமப் பாறைகளாக மாறுகின்றது. பாறைகளில் தீப்பாறைகள் (IGNEOUS ROCKS),   படிவுப்பாறைகள் (SEDIMENTARY ROCKS),  உருமாற்றுப் பாறைகள் (METAMORPHIC ROCKS)  எனப் பல்வேறு பாறை வகைகள் உள்ளன.

கொங்கு நாட்டு நிலத்தியல்
கொங்கு நாடு, நான்கு புறமும் மலைகள் அரணாகச் சூழ்ந்து மிகுந்த பாதுகாப்பாக அமைந்துள்ளது. காவிரி, அமராவதி, நொய்யல், குடவனாறு, சண்முக நதி, பவாநி, உப்பாறு, நல்காஞ்சி போன்ற பன்னிரண்டு ஆறுகள் ஓடுகின்ற நாடு. “கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்”  என்று பழமொழி உள்ளது. கொங்கு” என்னும் சொல்லுக்குத் தேன் என்றும், சாரல் என்றும் பொருள் உண்டு. மேற்கு மலைத் தொடரில், கிழக்குச் சாரலில் அமைந்துள்ளது கொங்கு நாடு. சேர, சோழ, பாண்டியரின் நாடுகளின் ஓரத்தில் கொங்கு நாடு அமைந்திருந்ததால் “கங்கு  என்று பெயரமைந்தது எனலாம். கங்கு”  என்னும் சொல், எல்லை, கரை, வரம்பு ஆகியவற்றைக் குறிக்கும். (கங்கு, கொங்காகத் திரிந்திருக்கலாம்). கொங்கு நாட்டுப் பாறைகள் பெரும்பாலும் தீப்பாறைகள் (IGNEOUS ROCKS) வகையைச் சேர்ந்தன. உருமாற்றுப் பாறைகளும் உண்டு. படிவுப்பாறைகளோ, எரிமலைப் பாறைகளோ கொங்கில் இல்லை. இதன் காரணமாகவே, கொங்கு நாட்டில் நில நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

கொங்கு நாட்டில் பச்சைக் கல் (BERYL) ஒட்டன் சத்திரம், சித்தம்பூண்டி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. ஊத்துக்குளிப் பகுதியில் படிகக் கற்கள் (QUARTZ)  கிடைக்கின்றன. கோவையில் பெருமளவில் செய்யப்படும் மாவரைக்கும் பொறிக்கான (GRINDER) கற்களான “பேசிக் சார்னக்கைட்”  (BASIC CHARNOCKITE) ஊத்துக்குளிப்பகுதியில்தான் உள்ளன. பல்லடத்தில் “ஜிப்சம்”  என்னும் கல் கிடைக்கின்றது. ஆங்கிலேயரான இராபர்ட் புரூஸ்ஃபுட் (ROBERT BRUCE FOOTE) என்னும் நிலத்தியல் அறிஞர், 1905-இல் சிவன் மலைப்பகுதியில் ஆய்வு செய்து, இப்பகுதியில் நெஃப்லைன் சைனைட்” (NEPHELINE SYENITEமற்றும் கொரண்டம் சைனைட் (CORUNDUM SYENITEஆகிய பாறைகள இருப்பதைக் கண்டறிந்தார். இவை, ALKALINE ROCKS வகைக் கற்களைச் சேர்ந்தன. இக்கற்கள் தமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைப்பதில்லை என்பதோடு, இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம். சேலத்தில், ட்யுனைட் (DUNITE), பெரிடோடைட் (PERIDOTITE) ஆகிய கற்கள் இருப்பதையும் இவர் கண்டறிந்தார். இவையும் கொங்கு நாட்டில் மட்டுமே உள்ளன. ட்யுனைட் (DUNITE) என்பது, மாக்னசைட்டின் நரம்புகள் எனப்படுவன. தொழிற்சாலைகளில் வெப்பம் தாங்கிகளாகப் பயன்படுவன. இராமயணத்தில், சீதையைக் கடத்திச் செல்லும் இராவணனுடன் போரிட்டு மடியும் ஜடாயுவின் இறக்கைகளே இந்த மாக்னசைட் நரம்புகள் என்னும் ஒரு புனைவு உண்டு. 

               நெஃப்லைன் சைனைட்”  பாறைக்கல் 
                                           சிவன் மலையில்  இராபர்ட் புரூஸ்ஃபுட் கண்டறிந்தது
                        படம் - இணைய தளம்
கொங்கு நாட்டின் கொடுமணல் பகுதியில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் நிறுத்தியிருக்கும் நடுகற்கள் BIOTITE GRANITE GNEISS என்னும் உருமாற்றுப்  பாறைக்கற்களால் ஆனவை. நெடிதுயர்ந்த அக்கற்கள் பெருந்துறை, சென்னிமலைப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை. இடம் பெயர்ந்து கொண்டுவரத் தக்க தொழில் நுட்பம் அப்போதே இருந்துள்ளமை வியக்கத்தக்கது. கொடுமணலில், பச்சைக் கற்கள், படிகக் கற்கள் ஆகியவற்றைக் கொண்டு அழகிய மணிகளைச் செய்து மாலைகளாக்கி உரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்கூடங்கள் இருந்தன என்பதை நாம் அறிவோம். கொடுமணலில், பெருங்கற் சின்னங்களான கல்பதுக்கைகளில் (CIST), சார்னக்கைட்”  (CHARNOCKITE)  வகைக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறிப்பு:  "சார்னக்கைட்”  (CHARNOCKITE)  வகைக் கற்களுக்கு அப்பெயர் வந்த பின்னணி கருதத்தக்கது. 1656-இல் கல்கத்தாவில் முதல் வைஸ்ராயாகப் பதவியேற்ற ஜாப் சார்னக்”  (JOB CHARNOCK) என்பவர் கல்கத்தா நகரை உருவாக்கியவர். 1693-இல் மறைந்த அவருக்குக் கல்கத்தாவில் கல்லறை கட்டப்படும்போது, சென்னைக்கருகிலுள்ள பல்லாவரத்திலிருந்து ஒரு வகைக் கற்கள் கொண்டு செல்லப்பட்டன. ஹாலந்து (T.H. HOLLAND) என்னும் நிலத்தியல் அறிஞர் 1893-இல் இவ்வகைக் கற்களுக்குச் சார்னக்கின் பெயரையே சூட்டினார்.) கொடுமணலில் காணப்படும் கல்வட்டங்களில் (CAIRN CIRCLE) பயன்படுத்தப்பட்ட கற்கள் மாக்னடைட் (MAGNETITE)  என்னும் இரும்புத்தாது கொண்ட கற்களாகும்.

                BIOTITE GRANITE GNEISS   பாறைக் கல்  
                                                 (கொடுமணல் நடுகற்களில் காணப்படுவது)
                            படம் - இணைய தளம்

                      "சார்னக்கைட்  கல் 
         (பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ்ஃபுட் கண்டறிந்தது)    
                           படம் - இணைய தளம்

                 ஜாப் சார்னக்”கின் கல்கத்தாக் கல்லறை  
                                                   படம் - இணைய தளம் 

கொங்குநாட்டில் சேலத்தில் கஞ்சமலைப்பகுதியில்,  மாக்னடைட் (MAGNETITE)  என்னும் இரும்புத்தாது கொண்ட கற்கள் கிடைக்கின்றன. ஆனால், சுரங்கம் அமைத்து இரும்பு எடுக்கும் தொழில் தொடங்கப்படவில்லை.

                            கொடுமணல் - பெருங்கற்காலச் சின்னங்கள்   
                                               படம் - இணைய தளம்

                                                    படம் - கட்டுரை ஆசிரியர்

                                               படம் - இணைய தளம்

கனிமங்களும் சித்தமருத்துவமும்
சித்தர்கள், கனிமங்களைப் ( MINERALS) பற்றி நன்கு அறிந்திருந்தனர். குறிப்பாக, போகர் கனிமங்களைச் சித்தமருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பது ஆய்வு வழி வெளிப்பட்டுள்ளது. அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய “போகர் ஏழாயிரம்” என்னும் நூலில், அவர் பயன்படுத்திய கனிமங்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. சென்னையைச் சேர்ந்த சித்தமருத்துவர் திருமதி சொர்ண மாரியம்மாள்  என்பவர், போகர் ஏழாயிரத்தில் பயன்படுத்திய கனிமங்கள்”  என்னும் நூலில் இக்கனிமங்கள் பற்றி எழுதியுள்ளார். இவர் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

வேறு செய்திகள்
அமெரிக்காவில், அரிசோனா பகுதியில் “பெரும் பள்ளத்தாக்கு”  (GRAND  CANYON)   அமைந்துள்ளது. 446 மைல் நீளமும், 24 மைல். அகலமும், 5000 அடி ஆழமும் கொண்டது. நிலத்தியல் அறிவியலாளர்களின் சொர்க்கம் என்று அதனைக் குறிப்பிடுவர். ஏனெனில் அங்கு புவி தோன்றிய நாளிலிருந்து இன்று வரையிலான காலத்துக் கற்கள் அனைத்தும் காணக்கிடைக்கின்றன.  1925-45 காலக்கட்டத்தில், அமெரிக்கர் அங்கு சுரங்கம் அமைத்து “யுரேனியம்”  (URANIUM) எடுத்தனர். இந்தக் கனிம வளமே அமெரிக்கா வளர்ந்த நாடாக உருவாகக் காரணமாயிற்று. இந்தப் பள்ளத்தாக்கில் “LORD SHIVA”  என்னும் பெயரமைந்த குன்று உள்ளது. இங்கிருந்த தொல்குடிகளான செவ்விந்தியருக்குச் சிவனைப் பற்றிய அறிவு இருந்துள்ளது என்பதையே இது சுட்டுகின்றது. பெரும் பள்ளத்தாக்கில் 5000 அடி ஆழத்தில் விஷ்ணு பெயரில் அமைந்த பகுதி VISHNU GNEISS என்பபடுகிறது. இப்பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு மலைகள், தோற்றத்தில் கருடப் பறவை போல் இருக்கின்றன. இந்தத் தோற்றத்தையே அமெரிக்கர் தம் நாட்டுச் சின்னமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.

             “பெரும் பள்ளத்தாக்கு”  (GRAND  CANYON) - சிவன் மலை
                      படம் - இணைய தளம்

கொடுமணல் காலத்திலிருந்து சிவன் மலையாக அடையாளம் கொண்ட சிவன் மலை, பின்னாளில் முருகன் மலையாக மாற்றப்பட்டிருக்கலாம். இன்றுவரை, சிவன் மலை என்னும் பெயரே வழங்குவதைக் காண்க.

திருப்பதி மலைப்பகுதி முன்பு கடலாயிருந்தது. இந்த மலை, படிவுப்பாறைகள் கொண்டது. இப்படிவுப்பாறைகள் சார்ந்த மண்ணில் செம்மரம் வளரும். திருப்பதி மலை தோன்றி 120 மில்லியன் ஆண்டுகள் ஆயின. திருவண்ணாமலை தோன்றி 2800 மில்லியன் ஆண்டுகள் ஆயின.

நொய்யல் ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடியது என்றொரு நிலத்தியல் கருதுகோள் உள்ளது. இது ஆய்வுக்குரியது.

ஆண்டாள் தன் பாசுரத்தில் “வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று”   என்பதாகப் பாடியிருக்கிறாள். வெள்ளிக் கோள், வியாழக் கோள் (VENUS, JUPITER) பற்றிய வானியல் அறிவு, கோபர்னிகஸ் காலத்துக்கு முன்பே இங்கு இருந்துள்ளதை இது புலப்படுத்துகிறது எனலாம்.

முடிவுரை-கட்டுரை ஆசிரியர் கருத்து.
நிலத்தியல் பற்றிய அறிவு, அதன் துறை சார்ந்த படிப்புப் படித்தவர்க்கே கிடைப்பது இயல்பு. அவ்வகைப் படிப்பு அற்றவர்க்கும் நிலத்தியல் பற்றிய புரிதலுக்கும், நிலத்தியலின் அடிப்படையில் கொங்கு நாட்டமைப்பைப் பற்றிய புரிதலுக்கும் ஏதுவாக எளிமையாக ஆனால் ஆழ்ந்த செய்திகளைத் தம் உரை மூலம் எடுத்துச் சொன்ன பேராசிரியர் கி. கதிர்வேலு அவர்கள் பாராட்டுக்குரியவர். மூப்பின் காரணமாக உரை நிகழ்த்துவதற்குத் தளர்வு ஏற்பட்டாலும்  நெடு நேரம் நின்று உரையாற்றியது சிறப்பு. கொங்கு மக்கள் பேறு பெற்றவர்கள். பேரிடரான நில நடுக்கம், நம்மை அண்டாது என்னும் நம்பிக்கையை அவரது உரை ஊட்டியது எனில் மிகையல்ல.
படங்கள் உதவி : இணைய தளம் 

------------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
மின்னஞ்சல் : doraisundaram18@gmail.com

3 கருத்துகள்: