மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 2
                            து.சுந்தரம், கோவை. அலைபேசி : 9444939156


         முதற்பகுதியில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் பார்த்தோம். இனிக் காண இருப்பவை உயிர்மெய் எழுத்துகள். பெரும்பாலும் தற்போதுள்ள எழுத்துகளை ஒத்திருப்பினும், ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகள் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முன்பு வழக்கில் இருந்த எழுத்துகளை ஒட்டியிருப்பன. பாடம் தொடர்கிறது.
வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் பகுதி-1
                                                                                   து.சுந்தரம், கோவை                                                                                                                                                                அலைபேசி:     9444939156.

         கோயில்கள். வரலாற்றுக் கருவூலங்களுள் சிறப்பிடம் பெறுபவை. வரலாற்று ஆவணங்களான கலவெட்டுகளைத் தம்மகத்தே பொதித்து வைத்துள்ள களஞ்சியங்கள். நினைத்தவுடனே கல்வெட்டுகளைப் பார்க்க வாயில் திறந்து காத்திருக்கும் எளிமை அகங்கள். கோயில்கள் இல்லையேல் தொல்லியல் துறையே இல்லை எனலாம்.

         கோயில்களுக்குச் செல்கிறோம். கோயிற்சுவர்களில் ஏதோ எழுதப்பட்டுள்ளதைக் கண்கள் பார்க்கின்றன. மனமோ அறிவோ அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. கல்வெட்டுகளில் காணும் எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தாம் என்றுகூட அறிந்திருப்பதில்லை. பெரும்பாலான நிகழ்வு இது. ஆனால், இதற்கு விலக்கு உண்டு. பலர் இக்கல்வெட்டுகள் பற்றிச் சற்றே எண்ண முற்படுகின்றனர். ஆனால் மேலே முயலுவதில்லை. கல்வெட்டுகளைப் பற்றிய அறிவு குடத்துக்குள் வைத்த சிறு விளக்கொப்ப வெளிச்சம் பரப்பாமலே மறைந்துவிடுகிறது.

         இக்கட்டுரை ஆசிரியரின் நிலையும் மேற்சொன்னவாறுதான். சிறுவயது முதல் பார்த்துவரும் கல்வெட்டுகளைப்பற்றிய ஒரு விழிப்பு, பணி ஓய்வுக்குப்பிறகு (அகவை அறுபதுக்கு மேல்) ஏற்படுகிறது. முயற்சி தொடர்கிறது. தமிழகத் தொல்லியல் கழகத்தின் தொடர்பு ஏற்படுகிறது. அங்கு, மூத்த அறிஞர்கள், கல்வெட்டறிவை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறுகின்றனர். அண்மையில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் மு.முத்துவேல் அவர்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் சொன்னதும் கல்வெட்டு அறிவை இளய தலைமுறைக்குச் சேர்ப்பியுங்கள் என்பதே. இந்த நோக்கமே இப்பகுதியைத் தொடங்கியமைக்குக் காரணம்.

         கல்வெட்டு எழுத்துகள் தமிழிஎன்னும் தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என முப்பெரும் பிரிவாக விரியும். தமிழ் பிராமியும், வட்டெழுத்தும் எங்கும் காண இயலா. அவற்றைத் தேடித்தான் போகவேண்டும். ஆனால், ஏழைக்கும் கிடைக்கும் உப்புப் போல எங்கும் கிடைப்பது தமிழ் எழுத்தே. கிடைக்குமிடம் கோயில்கள். கற்க எளிது. கற்றபின் காண எளிது. இளைய தலைமுறையினர் முன்வரவேண்டும்.

         முதல் பகுதியில், உயிர் எழுத்துகளும், மெய்  (உயிர்மெய் வடிவில்) எழுத்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன என்னும் வரிசையை மனப்பாடமாக வைத்துப்பழகுதல் நல்லது பயக்கும். ஏனெனில் ங் எழுத்து க எழுத்துடன் இணைந்தே பார்க்கப்படும். இதுபோலவே, ஞ்-ச, ண்-ட, ந்-த, ன்-ற ஆகியன இணைந்து வருவன. இனி, பாடம் தொடர்கிறது.


திங்கள், 2 பிப்ரவரி, 2015கொங்குப்பாண்டியன் வீரபாண்டியனின்
13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு
                                                      து.சுந்தரம், கோவை.


         கொங்குப்பகுதியை வீரகேரளர், கொங்குச் சோழர், கொங்குப்பாண்டியர், போசளர்(ஹொய்சளர்), விசயநகரர், மைசூர் உடையார்கள் எனப்பல அரசர்கள் ஆண்டுள்ளனர். அவர்களில் கொங்குப்பாண்டிய அரசர்களில் இருவரின் பெயர்களே கல்வெட்டுகளில் காணப்பெறுகின்றன. ஒருவன் வீரபாண்டியன்; மற்றவன் சுந்தர பாண்டியன். தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள் நூல்களில் உள்ள குறிப்புகள் வீரபாண்டியன் கொங்குப்பகுதியைக் கி.பி. 1265-கி.பி. 1285 ஆகிய காலகட்டத்தில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான் எனத்தெரிவிக்கின்றன. வீரபாண்டியனுடைய பதிநான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்த (கி.பி. 1279)  புதிய கல்வெட்டு  ஒன்று அவிநாசியை அடுத்துள்ள அவிநாசிலிங்கம்பாளையத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

         7.11.2013 அன்று அவிநாசியருகே உள்ள பழங்கரை பொன்சோழீசுவரர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, அங்கு பூசையாளராக இருக்கும் சந்திரசேகர் என்பவர் அவிநாசி-திருப்பூர் சாலையில் அமைந்துள்ள அவி நாசிலிங்கம்பாளையத்தில் உள்ள நடுத்தோட்டத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் அதில் இருப்பதை யாரும் படிக்கவில்லை; நீங்கள் போய்ப்பாருங்கள் என்றும் கூறினார்.  20.11.2013 அன்று அக்கோயிலுக்குச் சென்று பார்வையிட்டேன். எளிய அமைப்பில் காணப்பட்ட அக்கோயிலின் வளாகத்தில் நிலத்தில் மூன்று துண்டுகளாக உடைந்த நிலையில் கல்வெட்டு காணப்பட்டது. கல்வெட்டின் மேற்பரப்பு தேய்ந்துபோன நிலையில் இருந்ததால் சரியாகப் படிக்க இயலாமல் போனது. எழுத்தமைதியைக் கொண்டு கல்வெட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக்கருதினேன். மீண்டும் பின்னொருமுறை ஆய்வு செய்ய எண்ணித் திரும்பினேன். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, 27.1.2015 அன்று, அவிநாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர், திருநெல்வேலியைச் சேர்ந்த இரகுராம் ஆகிய கல்வெட்டியல் ஆர்வலர்களைத் துணைக்கழைத்துக்கொண்டு அவிநாசிலிங்கம்பாளையம் சென்றேன். கல்வெட்டுப் பாடத்தை நீண்ட நேர முயற்சியால் படித்து முடிக்க இத்துணைவர்களின் பங்களிப்பு பெரிது.

         கல்வெட்டு காணப்படும் இடம் அவிநாசிலிங்கம்பாளையத்தில் உள்ள நடுத்தோட்டத்து ஐயன்கோயில் வளாகம் ஆகும். ஏறத்தாழ நான்கடி நீளமும், இரண்டடி அகலமும், ஒன்றரை அடிப்பருனும் உள்ள கல் மூன்று துண்டுகளாக உடைந்த நிலையில் தரையில் காணப்பட்டது. பல ஆண்டுகளாகத் தரையில் கிடந்ததாலும் மனிதர்களின் கால்கள் தொடர்ந்து பட்டுவந்ததாலும் (கோயிலுக்கு ஆண்டுதோறும் மக்கள் நிறைய வருகிறார்கள்; வண்டிகளும் கல்லின் மீது வந்து செல்வதால் கல் உடைந்து போனது என்று சொல்கிறார்கள்.) எழுத்துகள் தேய்ந்த நிலையில் இருந்தன. கருமை நிறத்தில் கல் இருப்பதால் எழுத்துகள் நன்கு புலப்படவில்லை. கல்லை நன்கு நீரால் கழுவித் தூய்மையாக்கி வெள்ளைச் சுண்ணப்பொடிகொண்டு பூசிய பின்னர் ஒருவாறு எழுத்துகள் பார்வைக்குத் தெரிந்தன. இந்தப்பகுதியின் எழுத்துகள் கல்வெட்டின் பிற்பகுதி எனத்தெரிந்ததால் மூன்று துண்டுக்கற்களையும் அடிப்புறம் மேலே தெரியுமாறு புரட்டிப்போட்டதில் அடிப்புறத்திலும் எழுத்துகள் காணப்பட்டன. மண்ணிலேயே அழுந்திய நிலையில் அடிப்பகுதி இருந்ததால் எழுத்துகள் ஓரளவு தெளிவாகப் புலப்பட்டன. கல்வெட்டின் இறுதிப்பகுதிக்கான துண்டுக்கல் கிடைக்கவில்லை. எனவே கல்வெட்டின் இறுதிவரிகள் கிடைக்கவில்லை.         இருபுறங்களிலும் இருபது வரிகளுக்கு மேல் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கவேண்டும். கல்வெட்டு எழுத்துகளைப் படித்துப்பார்த்ததில் கீழ்வரும் செய்திகள் தெரியவந்தன.
        
         “ஸ்வஸ்திஸ்ரீஎனக் கல்வெட்டு தொடங்கியுள்ளது. வீரபாண்டிய தேவற்கு யாண்டு 14 ஆவது”  என்னும் வரிகள் வீரபாண்டியனின் பதிநான்காம் ஆட்சியாண்டைச் சுட்டுகிறது(கி.பி. 1279). வீரராசேந்திர நல்லூர் என்னும் ஊர்ச்சபையானது ஒரு கோயிலின் பண்டாரத்தார்க்குத் தானம் பற்றித் தெரிவிக்கும் வகையில் கல்வெட்டு அமைந்துள்ளது. பண்டாரம் என்பது கோயிலின் கருவூலத்தைக் குறிப்பதாகும். பண்டாரத்தார் என்பவர் கருவூல நிருவாகிகள் ஆவர். தானம் பெறுகின்ற ஊர்க்கோயில் எது என்பது  தெரியவில்லை. வீரராசேந்திர நல்லூர் என்பது  கொங்குச் சோழனான வீரராசேந்திரனின் பெயரால் அமைந்த ஊராகும். ஊரின் இயற்பெயர் தெரியவில்லை.  பார்ப்பார்பூண்டி என்னும் தேவதான ஊர் பற்றிய குறிப்பு கல்வெட்டில் வருவதால், பார்ப்பார்பூண்டி என்னும் ஊர், கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம். அல்லது பார்ப்பார்பூண்டி என்னும் ஊரில் இருந்த கோயிலுக்குக் கொடை அளிக்கப்பட்டது எனக்கருதவும் வாய்ப்புண்டு. அன்னூர் மன்னீசர் கோயில் கல்வெட்டொன்றிலும் பார்ப்பார்பூண்டி குறிக்கப்படுகிறது. பார்ப்பார்பூண்டி தற்போது எப்பெயரில் அமைந்துள்ளது என்பது தெரியவில்லை. கோயில் இறைவர்க்கு அமுதுபடி(நைவேத்தியம் எனப்படும் படையல்), கறி அமுது ஆகிய வழிபாட்டுச் செலவினங்களுக்குக் கொடையின் வருமானத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இவை எல்லாம் கல்வெட்டின் முன்பகுதிச் செய்திகள்.

         கல்வெட்டின் பின்பகுதியில் கல்வெட்டுச் சாசனத்துக்குச் சான்றாளர்களாகக் கையொப்பமிட்டவர்களைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. அவர்களில் இடங்கை நாயகன் தம்பிரான் தோழன், நம்பி, அவிநாசி நக்கன், பூலுவன் மாணிக்கன், சாத்தன் ஆகியோர் பெயர்கள் இடம்பெறுகின்றன. இங்கே இடங்கை நாயகன் தம்பிரான் தோழன் என்பவன் குறிப்பிடப்படுகிறான். சோழர் காலத்தில் வலங்கைப்படை, இடங்கைப்படை என இரு படைப்பிரிவுகள் இருந்துள்ளன. வேளாளரும் அவரைச்சார்ந்தவரும் வலங்கைப் படைப்பிரிவில் அடங்குவர். வணிகரும் அவரைசார்ந்தோரும் இடங்கைப்பிரிவினர் ஆவர். கொங்கு நாட்டில் இடங்கைப்பிரிவு பற்றிப் பல கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இடங்கை நாயகன்என அழைக்கப்படுபவர் இடங்கைப் படையில் தலைவராக இருந்தவர் என அறியப்படுகிறது. மேலும் இடங்கை பற்றிய செய்திகள் தெரிய இதே வலைப்பூப் பகுதியில்  வலங்கை,இடங்கை-சில குறிப்புகள் என்னும் (பிப்ரவரி,2014) கட்டுரையைப் பார்க்க.

         கையொப்பம் இடத்தெரியாதவர்கள் தங்கள் கையெழுத்துக்கு மாற்றாகக் குறி ஒன்றைக் கீறுவர். இது, கல்வெட்டின் மூல ஓலை உருவாக்கப்படும்போது  நிகழும் செயலாகும். இவ்வாறு எழுத்தறிவு இல்லாத சான்றாளர்களைக் குறிப்பிடும்போது “கை மாட்டாமையால்என்று ஒரு தொடர் கல்வெட்டில் பயில்வது மரபு. சில கல்வெட்டுகளில் இது இன்னாரின் தற்குறி எனக் குறிப்பிடுவதுண்டு. எழுத்தறிவற்றவர்களை இன்றும் “தற்குறிஎன்றழைக்கும் மரபு கல்வெட்டு மரபின் தொடர்ச்சி எனக்கருதலாம். அவ்வாறான “கைமாட்டாமையால்என்னும் தொடர் இக்கல்வெட்டில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பழங்காலச் சமுதாயச் சூழலை நாம் அறிய இக்கல்வெட்டு துணை நின்றது. மேலும்,  பண்ணை செய்வார் என்னும் தொடர் கல்வெட்டில் காணப்படுகிறது. பண்ணை செய்வார் என்பது குத்தகைதாரர் எனக் கல்வெட்டு அகராதி குறிப்பிடுகிறது. கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகை எடுத்தவரைக் குறிப்பதாகலாம். கோவைப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளில் “பண்ணை செய்வார் என்னும் தொடர் முதன்முறையாகக் காணப்படுவது இக்கல்வெட்டில்தான் எனக்கருதத்தோன்றுகிறது. கல்வெட்டு வரிகளில் வரும் ”(ஆ)லால சுந்தர ஆசாரியி என்னும் தொடர், கல்வெட்டைக் கல்லில் வெட்டியவர் ஆலாலசுந்தர ஆசாரி என்பவராக இருக்கக்கூடும் எனச் சுட்டுகிறது. (ஆலால சுந்தரர் என்னும் அழகிய பெயரைத் தற்காலத்தே காண்பது அரிது.)

         ஒரு கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடை பற்றி வெட்டப்பட்ட கல்வெட்டு அந்தக்கோயிலின் வளாகத்தில் இல்லாமல், முற்றிலும் தொடர்பு இல்லாத ஓர் இடத்தில் காணப்படுவது எவ்வாறு  என்பது தெளிவாகவில்லை. கல்வெட்டில் கோயிலின் பெயரும் காணப்படாததால் கல்வெட்டு எந்த ஊர்க்கோயிலுக்குச் சொந்தமானது என்பது புதிராக உள்ளது.

         இறுதியாக, நடுத்தோட்டத்து ஐயன் கோயில் பற்றிச் சிலவரிகள். அவி நாசிலிங்கம்பாளையத்தில் “ஏறாமேடு தோட்டம்”  என்னும் தோட்டத்தில் இருப்பது நடுத்தோட்டத்து ஐயன் சமாதிக்கோயில். இந்த நடுத்தோட்டத்து ஐயன் என்பவர் ஓதாள குலத்தைச் சேர்ந்த வேளாளர். பெரிய நிலக்கிழார். சோமனூர் அருகேயுள்ள வாழைத்தோட்டத்து ஐயன் கோயிலைச் சேர்ந்த ஐயன் போல இவரும் பெயர் பெற்றவர். ஆனால், சித்துவேலைகள் தெரிந்து வைத்திருப்பவர் என்னும் கருத்து நிலவுகிறது. மக்களிடையில் மந்திரவாதி என்று அழைக்கப்பட்டிருக்கிறார். முட்டியங்கிணறு என்னும் கிணறு இக்கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் நடு இரவில் தண்ணீரில் “உருப்போடுவார்எனச் சொல்கிறார்கள். உருப்போடுதல் என்பது தண்ணீரின் மீது அமர்ந்து தியானம் செய்வதைக் குறிக்கும். இவருக்கு அவிநாசிக்கவுண்டர், வாரணாசிக்கவுண்டர், ஆறுமுகத்தாக் கவுண்டர் எனப் பல பெயர்கள் வழங்கின. மக்களின் நோய்களையும் சில இடர்ப்பாடுகளையும் நீக்கியுள்ளார். இவரை வேண்டிக்கொண்ட ஒருவருக்கு வலிப்பு நோய் தீர்ந்ததாகவும், மற்றொருவருக்கு ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர்தம் மகன் (சிறுவன்) உயிரோடு கிடைத்ததாகவும் எனப் பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.. அச் சிறுவனின் சிலையை வேண்டுதல் நிறைவேறியதன் நினைவாக வைத்திருப்பதை இன்றும் காணலாம். ஐயனின் வழித்தோன்றல்கள் ஆறுமுகத்தாக்கவுண்டர் தண்ணீர்ப்பந்தல் என்னும் பெயரில் அவிநாசித் தேர்த்திருவிழாவின்போது மக்கள் தொண்டாற்றுகிறார்கள். கோயிலைக்கட்டி, எழுபத்தாறு செண்ட் நிலம் ஒதுக்கிக் கோயிலைப் பேணிவருகின்றனர். கோயில் தற்போது பொதுமக்கள் எல்லாரும் வணங்கும் நிலையில் அமைந்துள்ளது. வெளியூரிலிருந்தும் மக்கள் வந்து வழிபட்டுத்திரும்புகின்றனர். சுற்றுவட்டத்தில் உயிர்ப்பலி எதுவும் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கல்வெட்டின் பாடம்-கல்லின் முன்முகம்


ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய தே
வற்கு யாண்டு யச ஆவ
து உடையார்
ஆளுடைய நாயனார்ப
ண்டாரத்தாற்கு ஆளுடை
னார்(க்கு) தேவதான பார்
ப்பார்பூண்டியில் வீர
ராசேந்திர நல்லூர் ஊ
ரும் ஊரார்க(ளோமும்)
தன பள்ளி(ய)
நாயநாற்கு
வாட்(டை ஆ)
இருபத்து நா
சீ/கீழத       கா
ளொன்றுக்கு
படிக்கு (அந்தி)
(கும்) கறி அமுது (ஒ)
த்துக்குமுட்பட்டகல்வெட்டின் பாடம்-கல்லின் மறுமுகம்

ழுத்து
நல்(லூர்)
..........  கோயில்
வெட்டிக்

க்கு இவை இடங்கை நா
யகன் தம்பிராந்தோழ
நாந  ................... ல/வ மு ..யார்
பி எழுத்து இப்படிக்கு
சன் விநாசி ஆந  (அன்ன)
நான நம்பி(எழு)த்து இப்
படிக்கு அவிநாசி .. நக்கனும்
பூலுவன் மாணிக்கனும்
கைமாட்டாமையால்
-  யச்சினை மாட்டெ

யார் கோயி(ற்)
சிப் பண்ணைசெய்வார்
களில் சாத்தன்
--(ஆ)லால சுந்தர ஆசாரியி

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.