மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 25 நவம்பர், 2019



வெள்ளலூரில் மேலும் சில தொல்லியல் தடயங்கள்

முன்னுரை

கோவைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளலூர், சங்ககாலந்தொட்டுச் சிறப்புடன் திகழ்ந்த பழமை வாய்ந்த ஓர் ஊராகும். வணிகப் பின்னணியுள்ள ஒரு நகரமாகவே இவ்வூரைக் கருதலாம். சங்க நூலான பதிற்றுப்பத்தில் ”காஞ்சி நதி”  என்று குறிப்பிடப்பெறும் நொய்யலாற்றங்கரையில் அமைந்த ஊர். கொங்கு நாட்டுப் பாலக்காட்டுக் கணவாயிலிருந்து பிரிந்து சென்ற பண்டைப் பெருவழிகள் மூன்றில் இராசகேசரிப் பெருவழி பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கயம், கரூர், உறையூர், குடந்தை ஆகிய ஊர்களைக் கடந்து பூம்புகாரை அடைந்தது. இவ்வழியைப் பயன்படுத்திய யவன வணிகர்கள் விட்டுச் சென்ற உரோமானிய நாணயங்கள் பெருமளவு வெள்ளலூரில் கிடைத்துள்ளன. மேலைக்கடற்கரையில் வந்திறங்கிய யவனர்கள் (கிரேக்கர், உரோமானியர் ஆகிய இரு நாட்டாரையும் “யவனர்” என்னும் பொதுப்பெயர்கொண்டு பழந்தமிழர் அழைத்தார்கள்), வெள்ளலூரிலும் கொடுமணலிலும்  கல்மணிகளாலான அணிகலன்களைப் பொற்காசுகளும் வெள்ளிக்காசுகளும் கொடுத்து வாங்கிக்கொண்டு போனார்கள். தொல்லியல் நோக்கில், MEGALITHIC  AGE என்று கூறப்படும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பழந்தடயங்களும் இங்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  இத்தகு சிறப்புப்பெற்ற வெள்ளலூர், கல்வெட்டுகளில் வேளிலூர்த் தென்னூர் என்னும் பெயரிலும், அன்னதான சிவபுரி என்னும் பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.

வெள்ளலூர்ப் பகுதியில் கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த புதிய கல்வெட்டுகள்  பற்றியும்,  இப்பகுதியின் தொல்லியல் தடயங்கள் பற்றியும் ஏற்கெனவே கட்டுரைகள் பதிவாகியுள்ளன எனினும்,  கட்டுரை ஆசிரியர் கண்ணுற்ற, மேலும் சில தொல்லியல் தடயங்களைப் பற்றிய பதிவு இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றது.

13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு

2018, அக்டோபர் மாதத்தில், நண்பரும் வரலாற்று ஆர்வலருமான துரை.பாஸ்கரன் தொடர்புகொண்டு வெள்ளலூரில் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி அதைக்காண வெள்ளலூர் போகலாம் என அழைத்தார்.  நாங்கள் இருவரும் புறப்பட்டோம்.  வெள்ளலூரை அடைந்து அங்கிருக்கும் வ.உ.சி. வீதியில் குடியிருக்கும் சாந்தப்பா அவர்களைச் சந்தித்தோம். அவர் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்.  அவர் வீட்டுக்கருகிலேயே ஒரு சிறிய கோயில்.  முக்கண் விநாயகர்  என்னும் பெயரமைந்த ஒரு பிள்ளையார் கோயில். தற்காலக் கட்டுமானம். சிறு சதுரக்கற்களைக்கொண்டு கட்டப்பெற்ற கருவறைச் சுவர்கள். வடக்குப் பார்த்த சுவரின் தரைப்பகுதியில், தனிக்கல் ஒன்று பதிக்கப்பெற்றிருந்தது. மூன்றடிக்கு, இரண்டடி அளவில் நீள் சதுரமாக உள்ள அக்கல்லின் மையத்தில் மீன் சின்னம் என்று கருதத்தக்க அளவில், ஒரு புடைப்புச் சிற்ப முயற்சியாக, முற்றுப்பெறாத புடைப்புருவம் ஒன்று காணப்பட்டது. கல்லின் மையப் பரப்பு முழுதும் இச்சிற்ப முயற்சி இடம் கொண்டுவிட்டது. மீதமுள்ள, கல்லின் இடப்பக்க விளிம்பிலும், தரை மட்ட விளிம்பிலும் எழுத்துகளைப் பொறித்திருக்கிறார்கள். எனவே, தரைமட்டத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் நம் நேர்ப்பார்வையில் படிக்கும் வகையிலும்,  பக்கவாட்டுப் பொறிப்புகள் வேறு திசையிலும் காணப்பட்டன.


முக்கண் விநாயகர் கோயில் முகப்பும் சாந்தப்பா அவர்களும்

கல்வெட்டு அமைந்த பகுதி


தனிக்கல்லாகையால், சரிந்துவிடாமல் இருக்கும் பொருட்டுக் கட்டிடப்பணியில் பயன்படுத்தும் இரும்புக்கம்பியின் துண்டுகள் இரண்டைக் கீழ்ப்பகுதியில் அணைத்துப் பதித்துள்ளனர். கல்லின் மீது சுண்ணாம்புப் பற்று இருந்ததால் எழுத்துகள் நன்கு புலப்படவில்லை. சுண்ணாம்புப் பற்றை நீக்கிக் கழுவித் தூய்மை செய்து, வெள்ளை மாவு பூசிய பின்னர் எழுத்துகள் தெளிவாகப் புலப்பட்டன. கல்லின் கீழ்ப்பகுதியில் இரண்டு வரிகளும், பக்கப் பகுதியில் இரண்டு வரிகளும் ஆக நான்கு வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் பாடம் (வாசகம்) கீழ்க்கண்டவாறு;

கல்லின் கீழ்ப்பகுதி:

வரி 1     ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பன்மரா(ந) திரிபுவந
வரி 2     [தே]வற்கு யாண்டு ..வது வெள்ளலூர்


கீழ்ப்பகுதிக் கல்வெட்டு


கல்லின் பக்கப்பகுதி:

வரி 1    (டை)யார் திருவாசிராமம் உடை
வரி 2    யான் ஆவுடை பிள்ளையான்


பக்கப்பகுதிக் கல்வெட்டு

கல்வெட்டுச் செய்திகள்

கீழ்ப்பகுதியில் உள்ள கல்வெட்டு வாசகம் முற்றுப்பெறவில்லை ஆதலால், மீதமுள்ள சில எழுத்துகள் இருந்த பகுதி உடைந்து போயிருக்கக்கூடும். அல்லது, மீதமுள்ள சில எழுத்துகள் அடுத்து ஒரு கல்லில் எழுதப்பட்டிருக்கவேண்டும்; அக்கல் கிடைத்தால், கல்வெட்டு எந்த அரசன் காலத்தது என்று அறிய இயலும்.  பக்கப்பகுதியில் உள்ள எழுத்துகள் ஒரு தொடர்ச்சியுடன் உள்ளன. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.

கல்வெட்டு குறிப்பிடும் பொதுச் செய்தியைக் கல்வெட்டுகளின் பொதுக் கட்டமைப்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். கல்வெட்டுகளின் தொடக்கம் ஒரு மங்கலச் சொல். அது வழக்கமாக எழுதப்படும் ஸ்வஸ்திஸ்ரீ”.  அதை அடுத்து, கல்வெட்டு எழுதப்பெறும் காலத்தில், ஆட்சியிலிருக்கும் அரசன் பெயரும், அவனது ஆட்சியாண்டும் குறிக்கப்பெறும். இக்கல்வெட்டில் இந்தக் குறிப்பு காணப்பட்டாலும் அரசனின் இயற்பெயர் அமைகின்ற எழுத்துகள் இல்லை. ஆனால், அரசனின் பெயருக்கு முன்னால் எழுதப்பெறும் அவனது பட்டப்பெயரும் விருதுப்பெயரும், பெயரைத் தொடர்ந்து “தேவர்என்னும் சொல்லும் இக்கல்வெட்டில் உள்ளன. அடுத்து, அரசனின் ஆட்சியாண்டைக்குறிக்கும் வகையில் “யாண்டு ..வது  என்னும் தொடரும் உள்ளது. அரசனின் பட்டப்பெயரையும், விருதுப்பெயரையும் அடிப்படையாகக் கொண்டு அரசன் யார் என்பதை ஒருவாறு யூகம் செய்து அறிந்துகொள்ள முடிந்தது. தற்போதைய கோவை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் கல்வெட்டுகள் தொகுக்கப்பெற்ற, தொல்லியல் துறையினரின் வெளியீடான “கோவை மாவட்டக் கல்வெட்டுகள்என்னும் நூலின் முன்னுரையில் தரப்பட்டுள்ள செய்திகளையும், கல்வெட்டுகளையும் அடிப்படையாகக்கொண்டு சிறிது ஆய்ந்து பார்க்கும்போது, அரசன், கொங்குச் சோழனாகிய  இரண்டாம் விக்கிரம சோழன் என்னும் முடிவை எட்டலாம். கோப்பரகேசரி பன்மர்என்னும் கல்வெட்டுத் தொடரில் உள்ள பரகேசரி  என்னும் பட்டப்பெயரையும், திரிபுவநச் சக்கரவத்திகள்  என்னும் விருதுப்பெயரையும் ஒரு சேரக் குறிக்கும் வகையில் இரண்டாம் விக்கிரம சோழனின் பெயரே மிகுதியாக மேற்படி நூலில் காணப்படுவதால், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் அரசன் கொங்குச் சோழனாகிய  இரண்டாம் விக்கிரம சோழன் எனக்கருதலாம். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1256 – 1265. அவ்வாறெனில், கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு என்பது பெறப்படுகிறது.

அடுத்து, கல்வெட்டுகளில், கொடைச் செய்தி எழுதப்படும். இதில், கொடையாளியின் பெயர், கொடைப்பொருள், கொடையைப் பெறுகின்றவர் அல்லது எந்தக்கோயிலுக்குக் கொடை அளிக்கப்படுகிறது போன்ற செய்திகள் இருக்கும். ஆய்வுக்குரிய நம் கல்வெட்டில், கொடையாளியின் பெயர் மட்டும் காணப்படுகிறது. கொடை தரப்பட்ட கோயிலின் பெயர், கொடையின் தன்மை ஆகிய செய்திகள் இல்லை. கொடையாளி, ஆவுடை பிள்ளை என்பவன் ஆவான். அவன், திருவாசி என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்பதை “திருவாசிராமம் உடையான்என்னும் தொடர் குறிப்பிடுகிறது. திருவாசிராமம் என்னும் ஊர் தற்போது திருவாசி என்னும் பெயரில், திருச்சி மாவட்டம் முசிறிக்கருகில் அமைந்துள்ள ஊராகும். வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளலூரில் கொடையளிக்கிறார் எனில், கொடை அளிக்கப்பட்டது சிறப்பான நிலையில் இருந்த ஒரு கோயிலுக்கு எனக் கருதவேண்டியுள்ளது. கோயில் எது என்று கல்வெட்டு வாயிலாக நாம் அறிய இயலவில்லை என்றாலும் அது வெள்ளலூர் தேனீசுவரர் கோயில் என்று கருத வாய்ப்பு மிகுதியாக உள்ளது. தேனீசுவரர் கோயில் ஆயிரம் ஆண்டுப்பழமை கொண்டது. சேர அரசன் கோக்கண்டன் வீரநாராயணன் காலத்து 10-ஆம் நுற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று, தேனீசுவரர் கோயில் தரையில் பதிக்கப்பட்டிருந்தது தற்போது பாதுகாப்பாகக் கோவை அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் “வேளிலூர் தென்னூர் எம்பெருமானடிகள் ஸ்ரீகோயில்   என்று வெள்ளலூர் சிவன் கோயில் குறிக்கப்படுகிறது. அண்மையில், சென்ற 2017-ஆம் ஆண்டு, வெள்ளலூர் காசி அப்பச்சி கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட தனிக்கல்லொன்றில் பொறிக்கப்பட்ட 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, இறைவனை வேளிலூர் தென்னூராண்டார்என்று குறிப்பிடுவதோடு, வெள்ளலூரின் ஒரு பகுதியாகிய அன்னதான சிவபுரியில் கைக்கோளர் நிலைப்படையொன்று இருந்ததைக் கூறுகிறது. இக்காரணங்களால், கொடை அளிக்கப்பட்ட கோயில் வெள்ளலூர் சிவன் கோயிலாக இருக்கவேண்டும் என்னும் கருத்து உறுதியாகிறது. கொடையாளி திருவாசிராமம் (தற்போது திருவாசி) என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்பதைப்பார்த்தோம். வெள்ளலூரில் அமைந்துள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றிலும் திருவாசிராமம் ஊர் குறிப்பிடப்படுகிறது. அக்கல்வெட்டில், திருவாசிராமம் கோயிலைச் சேர்ந்த தேவகன்மிகள் (கோயில் பணியாளர்கள்)  வெள்ளலூர் கோவிலுக்குக் கொடை யளித்த செய்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கண் விநாயகர்

பிள்ளையார் - முன்பக்கத்தோற்றம்


பிள்ளையார் -பின்பக்கத்தோற்றம்


முக்கண் விநாயகர் சிற்பம் மிகவும் பழமையான தோற்றத்தைக் கொண்டிருப்பதோடு, வழக்கமாக நாம் காணும் விநாயகர் சிற்பத்திலிருந்து சற்று மாறுபட்டுள்ளது. சிற்பத்தின் பின்புறப்பகுதியிலும் விநாயகரின் உருவம் கரண்ட மகுடத்தோடு கூடிய தலைப்பகுதி, குழல் கற்றைகளோடு கூடிய தலைமுடி, மற்றும் இரண்டு கைகள் ஆகியவற்றோடு வடிக்கப்பட்டுள்ளது. முன்புற நெற்றியில் ஒரு கண்ணின் அமைப்பு காணப்படுவது சிறப்பு. இதை ஒட்டியே, இங்குள்ள மக்கள் முக்கண் விநாயகர் என்னும் பெயரைச் சூட்டியிருக்கவேண்டும்.

மேற்படி பிள்ளையார் கோயில் கல்வெட்டினை ஆய்வு செய்வதற்கு முன்னர், கடந்துவிட்ட 2017-ஆம் ஆண்டிலும், நண்பர் பாஸ்கரன் வெள்ளலூருக்கு அழைத்துச் சென்றார். இந்தப் பயணத்தில், அவருடைய நண்பர் இருவரின் வீடுகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பெருங்கற்கால எச்சங்களைப் பார்வையிடுவதே நோக்கம். வெள்ளலூர் செல்லப் பல வழிகள் இருந்தபோதிலும், போத்தனூர் வழியாகச் செல்லலாம் என்றும், போத்தனூரில் ஆங்கிலேயர் காலத்துக் கல்வெட்டு ஒன்றைக் காட்டுவதாகவும் கூறி ஆவலைக் கூட்டினார்.

புலியோடு போராடிய இரயில் வண்டி ஓட்டுநர்

வெள்ளலூரை அடையும் நெருக்கத்தில், சற்று முன்னதாகவே, போத்தனூர் ஊருள் நாங்கள் சென்றோம். தார்ச்சாலையின் ஓரத்தில் மண் தரைப்பகுதியில் தரையோடு தரையாகப் பதிக்கப்பெற்ற ஒரு கல் மேடையை நண்பர் காட்டினார். சிலுவை வடிவத்தில் அமைக்கபெற்றிருந்த அந்த மேடைக்கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அது ஒரு கல்லறைக் கல்வெட்டுப் போன்றது. ஆனால், அந்த இடம் கல்லறைத் தோட்டம் அல்ல. கிறித்தவ ஆலயமும் அல்ல. மக்கள் நடமாட்டமுள்ள சாலை. எனவே, அது, பொதுமக்கள் பார்வையில் இடம் பெறவேண்டும் என்னும் நோக்கத்தில் பதிக்கப்பட்ட ஒரு நினைவுக்கல் என்றே கருதவேண்டும். முதல் பார்வையில், எழுத்துகள் முற்றாகப் படிக்கும் வண்ணம் தெளிவாக இல்லை. எழுத்துப் பொறிப்பிலும் ஆழமில்லை.  கல்லின் பரப்பைத் துடைத்து, வழக்கம்போல், மாவு பூசிப்படித்தோம். ஆங்கிலத்தில் எழுதப்பெற்றிருந்தது.


                                         கல்லறைக் கல்வெட்டு -  சில தோற்றங்கள்







கல்வெட்டின் பாடம்

          SACRED TO THE MEMORY OF
              JOHN WILSON
       ENGINE DRIVER MADRAS RAILWAY
  WHO WAS KILLED AT WALLIAR BY A TIGER
             ON THE 10TH  APRIL 1868
                 AGED 29 YEARS








1868-ஆம் ஆண்டில், கோவை மாவட்டத்தை அடுத்துள்ள வாளையாறு என்னுமிடத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி அது.  வாளையாறு கேரளத்தைச் சேர்ந்த ஊர். கேரளத்தை நோக்கிச் சென்ற இரயில் வண்டியாக இருக்கவேண்டும். இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இரயில் தடம் அமைந்த பகுதி, காட்டுப் பகுதியாக இருந்திருத்தல் வேண்டும். வாளையாற்றில்,  புலி ஒன்று இரயில் எஞ்சின் இருந்த பகுதியில் பாய்ந்து நுழைந்தது யாரும் எதிர்பாராத நிகழ்வாக இருந்திருக்கும். வண்டி ஓட்டுநர் புலியோடு போராடி உயிரிழந்தார். அவர் நினைவாக எழுப்பப்பட்ட  நினவுக்கல்லைப் பார்க்கையில் அந்நிகழ்ச்சி நம் கற்பனையில் காட்சியாக விரிந்தது. 

இரயில் நிருவாகத்தினர் ஜான் வில்சன் என்னும் அந்த ஓட்டுநரின் நினைவைப் போற்றிக் கல் எடுத்துள்ளனர். அந்த ஓட்டுநர் ஒரு ஆங்கிலேயர் (BRITON) என்பதாக அறிகிறோம். போத்தனூர், ஆங்கிலோ-இந்தியக் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாக விளங்கியது. பிரிட்டிஷார், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர் ஆகிய ஐரோப்பியரோடு மண உறவின் வழி வந்தோரே ஆங்கிலோ-இந்தியர் ஆவர். கி.பி. 1860-இல் பிரிட்டிஷ் இரயில்வேத் துறையில் போத்தனூர் சந்திப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்போது கோவை, சந்திப்பு நிலையில் இருக்கவில்லை. பயணிகள் ஏறி இறங்கும் ஒரு எளிய நிலையமாக மட்டுமே இருந்தது. கோவைக்கு முதல் இரயில் 1874-ஆம் ஆண்டு விடப்பட்டது. ஐரோப்பியரும் ஆங்கிலோ-இந்தியரும் பெரும்பாலும் போத்தனூர் இரயில்வேத்துறையில் பணியாற்றியுள்ளனர் எனலாம். 1950-60 பதின்ம ஆண்டுகளில் ஏறத்தாழ ஆயிரம் ஆங்கிலோ-இந்தியக் குடும்பங்கள் போத்தனூரில் இருந்தன என அறியப்படுகிறது. நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான – மேற்குறித்த கல்லறைக்கல்வெட்டு - தொல்லியல் எச்சமாக  இன்றும் கவனம் ஈர்க்காமல், ஒரு சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கின்றது.  (அண்மையில், 12-10-2019 அன்று தொல்லியல் அறிஞர் திரு பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடந்த கொங்கு மரபு நடைப் பயணத்தில் இக்கல்லறைக் கல்வெட்டு காண்பிக்கப்பட்டு வரலாற்றுக் குறிப்புகள் பயண உறுப்பினர்க்கு விளக்கப்பட்டன.)

பெருங்கற்கால எச்சங்கள்

முதுமக்கள் தாழி

2017-ஆம் ஆண்டில், நாங்கள் பார்வையிட்ட தொல்லியல் எச்சங்களில் ஒரு முதுமக்கள் தாழியும், மட்கலன்களும் அடங்கும். வெள்ளலூரில்  பல ஆண்டுகளுக்கு முன்னர், தனியார் ஒருவர், வீடு கட்டுவதற்காகத் தோண்டியபோது அடித்தளக் குழியில் ஒரு முதுமக்கள் தாழி வெளிப்பட்டுள்ளது. அதைப் பாதுகாப்பாக எடுத்து அவ்வீட்டில் வைத்துள்ளனர். அரிசிப்பானையாகப் பயன்பாட்டில் இருக்கும் அந்த முதுமக்கள் தாழியைப் பார்வையிட்டோம். சுண்ணம் பூசி வைத்திருந்த அந்தத் தாழி பார்க்க அழகு. தாழியின் தொன்மையையும், வரலாற்றுத் தடயத்தையும் எடுத்துக்கூறினோம். அரசு அருங்காட்சியகத்தில் சேர்ப்பதாக வீட்டுக்குரியவர் கூறியுள்ளார். (சேர்ந்ததா என்று தெரியவில்லை). 














மட்கலன்கள்

இன்னொருவரும் வீடு கட்டும் முயற்சியின்போது கண்டெடுத்த பெருங்கற்கால மட்கலன்களைப் பாதுகாப்பாக வீட்டில் வைத்திருக்கிறார்.   முழுதும் சிவப்பு நிறங்கொண்ட அகன்ற வயிறு கொண்ட குடுவை, உட்புறம் கருப்பு நிறமும், வெளிப்புறம் சிவப்பு நிறமும் கொண்ட – கருப்பு சிவப்பு நிரமுள்ள -  மற்றொரு சிறிய குடுவை, இரண்டு அழகான தாங்கிகள் (மட்கலன்களைத் தாங்கும் தாங்கிகள்),  நான்கு சிறிய தட்டுகள் (அவற்றில் இரண்டு கருப்பு நிறங்கொண்டவை)  ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.


பெருங்கற்கால மட்கலன்கள்






குறிப்புதவி:

1    The Hindu - COIMBATORE:, JUNE 11, 2012
2     Pradeep damodaran’s blogspot
3     இந்து-தமிழ் திசை நாளிதழ் – 24-11-2019.







துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை,
அலை பேசி :  9444939156.

வெள்ளி, 15 நவம்பர், 2019



அதியரும் கொங்குநாடும்

வாணவராயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு

கோவையில், மாதந்தோறும், வாணவராயர் அறக்கட்டளையினர் ஏற்பாட்டில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. பெரும்பாலும் அவை, வரலாறு தொடர்புடையனவாய் அமைவது வழக்கம். அவ்வகையில், 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் நா. மார்க்சிய காந்தி அவர்கள் மேலே கண்ட தலைப்பில் உரையாற்றினார்.  அது பற்றிய ஒரு பதிவு இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

முனைவர் நா. மார்க்சிய காந்தி

முனைவர் நா. மார்க்சிய காந்தி அவர்கள் தமிழகத் தொல்லியல் துறையில் சேர்ந்து பணியாற்றிய முதல் பெண்மணி என்பது சிறப்புக்குரியது. இச்செய்தியை அவர், 2014-ஆம் ஆண்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஆற்றிய உரையில் சுவையாகக் குறிப்பிடுகிறார்.  கல்வெட்டுத் துறை அவரை எவ்வாறு ஈர்த்துப் பிடித்தது என்பதை அவர் கூற்றிலேயே இங்கு காணலாம். அவருடைய உரையில் உளம் திறந்த ஒரு நேர்மையும் எளிமையும் காணக்கிடைக்கின்றன. இந்த முழு உரையையும் கேட்பவர் கல்வெட்டியலில் ஆர்வம் கொள்ளாமல் இருக்க இயலாது.

“ தமிழ் படித்துவிட்டு இந்தத் துறைக்கு வந்ததே ஒரு கொடுப்பினை. 1972-73 காலகட்டத்தில், கல்வெட்டுகள் படிப்பதில் ஆற்றல் உடையவர்கள் மட்டுமல்ல, படிக்கத் தெரிந்தவர்களாகக்கூட விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தனர். தில்லியில் “தொல்லியல் பள்ளி” (SCHOOL OF ARCHAEOLOGY) என்னும் ஒரு பயிற்சி நிறுவனம் மட்டிலுமே இருந்தது. சமற்கிருதம் அல்லது வரலாறு படித்தவர்கள் மட்டுமே அதில் சேர்ந்து பயிலமுடியும். பிற மொழிப் படிப்புப் படித்தவர்க்கு அங்கு இடமில்லை. இந்திய அளவிலான கல்வெட்டுகளின் எண்ணிக்கையில், தமிழ்நாட்டில் மட்டுமே ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் கல்வெட்டுகள் இருக்கும் நிலை. இந்தப் புரிதலில், கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் ஒன்றைத் திரு. நாகசாமி அவர்கள் ஏற்படுத்தினார். தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் விருப்பமுடைய முதுகலைத் தமிழ் மாணவர்களைச் சேர்ப்பது பயிற்சியை மகிழ்ச்சியோடு செய்வதாக இருக்கும் என்ற புரிதலில், தமிழ் முதுகலைப் படிப்புப் படீத்தவர்கள் சேரலாம் என்ற நிலையை அவர் உருவாக்கினார். ஆண்டுக்கு எட்டுப்பேர் சேர்ப்பதாகத் திட்டம். பயிற்சி  நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே நான் படித்தேன். பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள்ளேயே, இந்த அறிவுப்புலத்துக்குக் கிடைத்த அறிமுகம் பிடிவாதமாய் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டது. வேறு வாய்ப்புகள் கிடைத்தும் இதை விட்டுப் போக இயலவில்லை. தமிழ் நாட்டில் உள்ள கல்வெட்டுகளைப் படித்துப் புரிந்துகொள்ளவே வாழ்நாள் போதாது. ”

இனி, கோவை உரையிலிருந்து…….

கொங்கு நாட்டு அதியர்கள்

பழங்காலத்தில், கொங்குநாட்டில் சிறு சிறு தலைவர்கள் மிகுதியும் இருந்தனர். இவர்கள், குடி மரபுத் தலைவர்கள், ஊர்க்கிழார்கள் எனப் பல பெயர்களால் அறியப்பட்டவர்கள். அவ்வாறான தலைவர் மரபுகளுள் சிறந்த ஒரு மரபு அதியர் மரபு. சங்க நூல்களில் அதியரைப் பற்றிய பாடல்கள் என நாற்பத்து நான்கு உள்ளன. மூவேந்தர்களை அடுத்த ஒரு நிலையில் வைத்துப் பாடப்பெற்ற தலைவர்கள் அதியர் ஆவர். தமிழகத்தின் வடவெல்லையில் அவர்களது இருப்பிடம் அமைந்திருந்தது. மேற்கு மலைத் தொடரும் கிழக்கு மலைத்தொடரும் இணையும் பகுதி அவர்கள் பகுதி. கனிம வளங்களும், காட்டு வளங்களும் நிறைந்த பகுதி. மலைபடு பொருள்களின் வளத்தால் வணிக வழிகள் நிறைந்த பகுதியாகத் திகழ்ந்தது. குறு நாடு என்னும் நாமக்கல் பகுதி அதியர் நாடாக அறியப்படுகிறது.

நடுகல் வழிபாடு

இடைக்காலத்தைச் சேர்ந்த சமண, பௌத்தத் தடயங்கள் இங்கு கிடைத்துள்ளன. நடுகல் வழிபாடு மிகுதியாக இருந்த பகுதி அதியர் பகுதி. பூசல் என்னும் சிறு போர்கள் மிகுதியும் நிகழ்ந்துள்ளன. எனவே, நடுகற்களும் மிகுதி. நடுகற்களில் அதிய மரபுத் தலைவர்கள் பேசப்படுகிறார்கள். ஒட்டம்பட்டி, இருளப்பட்டி ஆகிய ஊர்களில் இவ்வகை நடுகற்கள் உள்ளன.

குடைவரைக் கோயில்

பல்லவர், பாண்டியர் போன்று அதியரும் 6-7-ஆம் நூற்றாண்டில் நாமக்கல் பகுதியில் வைணவம் சார்ந்த குடைவரைக் கோயிலை எழுப்பியிருக்கிறார்கள்.

கங்கரோடு போர்

கங்கர்கள் தர்மபுரியைத் தாண்டிப் படையெடுத்து வந்துள்ளனர். அவர்கள் அதியரைத் தாக்கியுள்ளனர். ஆனால், அதியர் கங்கரை அடிப்படுத்தினர். தலைக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் எல்லைக்காவல் பணி அதியர் பணியாக இருந்தது.


சோழர் தொடர்பு

குறும்பனையூர் அதியன் ஒருவன், திறை கொடாது சோழரை எதிர்த்த செய்தி பெரியபுராணத்தில் காணப்படுகிறது.  அதியர், அரசியல் அறிவு நிரம்பப்பெற்றவர்கள்; சோழர், அதியர்களிடம் பெண்ணெடுக்கும் வகையில் சோழருடன் உறவு பேணப்பட்டது. பதிற்றுப்பத்தில் அதியர், வேளிர் குடியில் பெண்ணெடுத்த செய்திக் குறிப்பு உள்ளது. அதியரும் சேரரும் மழவர் என்று போற்றப்படுகின்றனர். வீரமும் இளமையும் உள்ளவர் மழவர். சோழர்களின் வீழ்ச்சிக் காலமான 12-13-ஆம் நூற்றாண்டில் அதியர் சிற்றரசர்களாய்த் திகழ்ந்தனர். அதியமானார் என்னும் பெயருடன் சோழ அரசர் போலத் தோற்றம் கொண்டிருந்தனர்.  இராஜராஜ அதியமான் என்னும் பெயரும், விடுகாதழகிய பெருமாள்  என்னும் பெயரும் அறியப்படுகின்றன. இராஜராஜ அதியமானின் மகன் விடுகாதழகிய பெருமாள் என்று கூறப்படுகிறது. பேரரசர்கள், அதியரைப் பயன்படுத்தி -  அதியர் துணையுடன் -  போசளரைத் தடுக்கின்றனர். 

சமணத்துக்கு ஆதரவு

அதியர் சமணர்களுக்கு ஆதரவு தந்தவர்கள். வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருமலையில் அதியர் கல்வெட்டு உள்ளது. கோட்டைக் கோயிலுக்கு அதியனே நேரில் வந்து நீர்வார்த்து நிவந்தங்கள் அளித்திருக்கிறான். எழினி, அஞ்சி ஆகியவை சங்ககாலத்தில் அதியருக்கு வழங்கிய பெயர்களாகும். புகழ் பெற்ற ஜம்பை பிராமிக்கல்வெட்டில் அஞ்சி என்னும் பெயர் உள்ளது.

”ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி”

என்பது கல்வெட்டு வரி. “ஸதியபுதோ”  என்பதில் உள்ள ’சதிய’  என்னும் சொல், தொல் திராவிடமொழிச் சொல் வடிவமாகும். ‘அதிய’ என்பதன் பழம் வடிவம். “ஸதியபுதோ”  என்னும் சொல் மௌரியப் பேரரசன் அசோகனின் கல்வெட்டில் காணப்படும் பிராகிருதச் சொல்லாகும்.  மௌரியர்கள் மலைகளில் வழியை அமைத்துக்கொண்டு வந்தார்கள் என்னும் குறிப்பு சங்க நூல்களில் காணப்படுகிறது.

நாமக்கல் குடைவரைக் கோயில்

அதியர், நாமக்கல்லில் இரண்டு குடைவரைக் கோயில்களை எழுப்பியுள்ளனர். நாமக்கல்லின் பழம்பெயர் திரு ஆலைக்கல் என்பதாகும். கி.பி. 860-இல் இக்குடைவரைக் கோயில்கள் எழுப்பப்பட்டன. இரண்டுமே வைணவக் கோயில்கள். ஒன்றில் பால நரசிம்மர் அமைதியான தோற்றத்துடன்.  ஹரிஹர மூர்த்தியின் உருவமும் இதில் உள்ளது. இன்னொன்றில் அனந்த சயனச் சிற்பம். பல்லவர், பாண்டியர் கால அனந்த சயனச் சிற்பங்களில் காணப்படாத ஒரு சிறப்புக்கூறு இந்தச் சிற்பத்தில் காணலாம். நாகத்தின் முகத்தில் சிம்ம முகம் இருப்பதே அச்சிறப்புக்கூறு. திருமாலின் ஆயுதங்கள் மனித உருவமாக வடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றின் கீழே பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பானது. இங்கு வாமனச் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது. வாமனச் சிற்பத்தைச் சுற்றிலும் பல உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவை மார்க்கண்டேய புராணத்தில் வரும் பாத்திரங்களாகும்.  மாவலிச் சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தபோது வாமன அவதாரம் நிகழ்ந்தது. எனவே, வாமனர் சிற்பத்தொகுதியில் குதிரை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. 

பல்லவ கிரந்தம்

நாமக்கல் குடைவரைக் கோயிலில் பல்லவ கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.  கோயிலின் பெயர் “அதியேந்திர விஷ்ணுகிருகம்”. இது பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. அதியனின் சிறப்புப் பெயரான “அதிய அன்மயன்”  என்னும் பெயரும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சமற்கிருதப் பெயரான “அதிய அன்மய”  என்பது தமிழ்ப்பெயர்களில் உள்ள “அன்”  விகுதி சேர்த்து எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற குடைவரைக் கோயில்கள்

தான்தோன்றி மலையில் உள்ள முழுமை பெறாத அரைகுறைக் குடைவரைக் கோயில் அதியர் பணி எனக் கருதப்படுகிறது. இதுவும் ஒரு வைணவக் கோயிலாகும். கோயிலின் பூதவரி  பார்க்கும்படியுள்ளது.

கூத்தம்பூண்டியிலும் முழுமை பெறாத ஒரு குடைவரைக்கோயில் உள்ளது. இதுவும் அதியர் பணியே.

அதியரின் இறுதிக்காலம்

தலைக்காட்டுப் பகுதியில் நடந்த ஒரு போர் பற்றிய கல்வெட்டில் அதியமான் ஒருவனின் பெயரும், அவன் போரில் இறந்த  செய்தியும் காணப்படுகிறது.  அதியரின் இறுதிக்காலங்களில் அதியமான் குலத்தவர், கொங்குச் சோழரின் கீழும், பாண்டியரின் கீழும் அதிகாரிகளாகப் பணியாற்றினர். 



முடிவாக

அதியர் வணிகத்தில் சிறந்தவராய்த் திகழ்ந்தனர். அதியர் காலத்தில் வணிக வழிகள் பல இருந்துள்ளமைக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. தகடூரிலிருந்து காஞ்சி வரையில் சென்ற ஒரு பெருவழி அதியமான் பெருவழி என்னும் பெயரால் வழங்கியது. மற்றொரு பெருவழி பற்றிய கல்வெட்டில் “நாவல் தாவளம் 27”  என்னும் எழுத்துப்பொறிப்பு காணப்படுவதோடு “27”  என்னும் எண்ணைக் குறிக்கும் வகையில் குறியீட்டுக் குழிகள் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு கல்வெட்டில், “மகதேசன் பெருவழி”  என்னும் பெயர் காணப்படுகிறது.




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.