மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 30 ஜனவரி, 2019


ஒரு குறுஞ்சிற்றூரில் இராசராசன் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு


முன்னுரை


ஆராய்ச்சியாளர்கள்  வியப்படையும் வகையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டுப் பகுதியில், இராயண்டபுரம் என்னும் முகம் தெரியாக் குறுஞ்சிற்றூரில் சோழப்பேரரசன் முதலாம் இராசராசனின் கல்வெட்டுகள் பல கண்டறியப்பட்டுள்ள செய்தி நக்கீரன்”  29-01-2019 இதழில் வெளியாகியுள்ளது. இச்செய்தியை முக நூல் பகுதியில் நேற்றுப் பார்க்க நேர்ந்தது. செய்தியும் உடன் கொடுக்கப்பட்டிருந்த ஒளிப்படங்களும் மிகவும் ஈர்த்தன. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே;

குக்கிராமத்தில் இராஜராஜன் காலக் கல்வெட்டுகள்
நக்கீரன் 29-01-2019 இதழில் வெளியான செய்தி

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மாவட்டத்தில் வாரந்தோறும் வரலாற்று ஆவணங்களை தேடி அதனை ஆவணப்படுத்தி வருகின்றனர். அதன்படி தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ள பழைய சிவன் கோயில் அருகில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது இராயண்டபுரம் - தொண்டமானூர் செல்லும் வழியில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவன்கோயில் அருகில் உள்ள பாறையில் சோழர்காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்வெட்டுகளில் 3 சிதைந்த நிலையிலும் 3 நல்ல நிலையிலும் உள்ளன. இக்கல்வெட்டுகளைச் படித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபால் இக்கல்வெட்டுகள் சோழ அரசன் முதலாம் இராஜராஜனின் காலத்தில்  வெட்டப்பட்டுள்ளது என்றும் இக்கல்வெட்டு இங்குள்ள சிவன் கோயிலுக்கு விளக்கெரிக்க ஆடுகளை தானம் செய்த விவரம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்

முதல் கல்வெட்டில் வாணகோப்பாடி பெண்ணைத் தென்கரையில் இராஜகண்டபுரத்தில்  உள்ள கானநங்கை என்ற கொற்றவை தெய்வத்திற்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகளை மும்முடிச் சோழ வாணகோவராயன் என்ற தொங்கல மறவன் என்ற இப்பகுதியில் இருந்த சிற்றரசன் இக்கல்வெட்டை வெட்டியுள்ளான்.   இரண்டாவது கல்வெட்டு இராஜராஜ சோழனின் 12 வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டதாகும். இதில்  இராஜகண்டபுரத்தைச் சேர்ந்த கோசக்கர எழுநூற்றுவர் என்ற வணிகக்குழு இவ்வூரில் உள்ள திருக்குராங்கோயில் என்ற சிவபெருமானுக்கு இரண்டு நந்தாவிளக்கு எரிக்க 192 ஆடுகள் தானமாக விடப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் இவ்வூர் மன்றாடிகளில் ஒருவரான அமத்தனின் மகன் காமன் என்பவர் இவ்வூரில் உள்ள  திருக்குரால் ஆள்வார் கோயிலுக்கு விளக்கெரிக்க 30 ஆடுகள் கொடுத்த செய்தி வெட்டப்பட்டுள்ளது. மற்ற கல்வெட்டுகளில்  சிதைந்து இருந்ததால் அதன் முழு விவரம் அறியஇயலவில்லை.

இக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளிலிருந்து தற்போது ராயண்டபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூர் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இராஜகண்டபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரில் உள்ள இக்கோயில் இறைவன் பெயர் இது வரை வெளியில் தெரியாமல் இருந்தது- தற்போது இக்கோயில் பெயர் திருக்குராங்கோயில் என்றும் இவ்வூரில் கானநங்கை என்ற கொற்றவை சிற்பம் இருந்தது பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஆனால் கொற்றவை சிற்பம் தற்போது கிடைக்கவில்லை. சோடச லிங்கம் என்ற பதினாறு பட்டை ஆவுடையாரும் சண்டிகேஸ்வரர் சிலையும்  தற்போது கோயிலில் உள்ளது. பழைய கோயிலும் தற்போது இல்லை புதியதாக செய்த இரும்பு ஷீட் கொட்டைகையில் இக்கோயில் சிலைகள் வைத்துள்ளார்கள்.


இக்கோயில் அக்காலத்தில் மிகவும் சிறப்படைந்த கோயிலாக இருந்திருக்க வேண்டும் ஏனெனில் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தில் மன்றாடி என்று வழங்கப்படுகின்ற இடையரும், கோச்சகர எழுநூற்றுவர் என்ற எண்ணை வணிகக்குழுவும், வாணகோவராயன் என்ற சிற்றரசனும் இக்கோயிலுக்கு தானம் அளித்துள்ளார்கள்மற்ற கல்வெட்டுகள் சிதைந்து போனால் பல வரலாற்றுத்தகவல்கள் தெரியாமல்போயின. இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் 3 கல்செக்குகள் காண்படுகின்றன. இவை இக்கோயில் இறைவனுக்கு விளக்கெரிக்க எண்ணை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும்.

இப்பகுதியில் பாயும் தென்பெண்ணையாற்றுக் கரையில் மிகப்பழங்காலந்தொட்டே மனிதநாகரிகம் வளர்ந்த சான்றுகள் உடையது. தொன்டைமானூரில் உள்ள பெருங்கற்கால நினைவுச்சின்னமும் பாறைக்கீறல்களும், இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்களும் கல்செக்குகளும் இப்பகுதியின் தொன்மையை பறைசாற்றுகின்றன. தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுச்சிறப்பு மிக்க தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


இந்த ஆய்வுக்கு வரலாற்று ஆய்வு மைய தலைவர் ..பிரகாஷ், செயலாளர் .பாலமுருகன், பொருளாளர் ஸ்ரீதர், இணைச்செயலர் மதன்மோகன் போன்றோர் ஊர் பொதுமக்கள் ஆதரவுடன் நடத்தி கண்டறிந்துள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் ஆதாரங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.கல்வெட்டுப்படங்கள்- ஓர் ஆய்வு


முதல் படம்முதல் படம்: 

செய்திக் கட்டுரையில்,  இக்கல்வெட்டுப் படம் மூன்றாவதாகக் குறிப்பிடப்படுகிறது. 

கல்வெட்டின் பாடம்:

1     ஸ்வஸ்திஸ்ரீ கோவி(ரா)[ச]
2     (சே)க . பந்ம(ற்)கியாண்டு ..(றா) வது
3     கோப்பாடிப் பெண்ணைத் தென்கரை [ரா]
4     சகண்டபுரத்து இ[ரு]ந்து  வாழு மன்றா(டி)
5     அமத்தன் மகன் காமன் திரு
6                                               ர்க்கு விள
7                                               இவை


குறிப்பு:   சிவப்பு எழுத்துகள் கிரந்தம்.


விளக்கம்:   கல்வெட்டின் ஒளிப்படத்தில் முழுப் பாடமும் காணப்படவில்லை. எனவே, இறைவர் பெயர் திருக்குரால் ஆள்வார் பெயரையும், கொடை ஆடுகள் முப்பது என்னும் செய்தியையும் காண இயலவில்லை. ’இராசகேசரி’    என்னும் தொடர் இக்கல்வெட்டில் பிழையாக எழுதப்பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது.   காரணம், இரண்டாம் வரியில், முதல் இரண்டு எழுத்துகள் “சேக”  என்பதாக உள்ளன.  அரசனின் ஆட்சியாண்டைக் குறிப்பிடும் தொடரில், வழக்கமாக  “யாண்டு”  என்னும் சொல்லையடுத்து ஆட்சியாண்டு எண்களால் குறிக்கப்பெறும். இங்கும் அதே முறை கையாளப்பட்டுள்ளதா என உறுதியாகக் கூற இயலவில்லை. காரணம்,  “றாவது”   என்று படிக்கும் படியாகக் கல்வெட்டுப் பாடம் அமைந்திருக்கிறது. நான்காவது வரியில், ”மன்றாடி”  என்னும் சொல்லில், “றா”  எழுத்து வழக்கமாகக்  கல்வெட்டுகளில் எழுதப்படுவதுபோல் அமையவில்லை.  தற்காலம் நாம் எழுதுவது போல் “ற”  குறில் எழுத்தை அடுத்துக் கால் சேர்த்ததுபோல் எழுதப்பட்டுள்ளமை வியப்பளிக்கிறது.  இது மெய்யானதுதானா அல்லது தோற்ற மயக்கமா எனத் தெரியவில்லை.  ஒப்பீட்டுக்காக இரண்டு எழுத்துகளையும் தனிப்படங்களில் கீழே காட்டியுள்ளேன்.


றா  வது


மன்றா(டி)
ஊரின் பெயரான இராஜகண்டபுரம்  மற்ற கல்வெட்டுகளில், “இராஜகண்டபுரம்”  என்றே எழுதப்பட்டிருக்க, இக்கல்வெட்டில் வடமொழி எழுத்தான “ஜ” , சகரமாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொடையாளியான அமத்தன் மகன் காமன் இராசகண்டபுரத்தில் வாழ்கின்றவன் என்பதைக் குறிப்பிடும் “இருந்து வாழும் மன்றாடி”  என்னும் தொடர்,  “இந்து வாழு  மன்றாடி”  என்று எழுதப்பட்டுள்ளது.  “ரு’  எழுத்து விடுபட்டமையைப் பிழை எனக்கொள்ளலாம்.  ஆனால், “வாழும்+மன்றாடி”  என்பது, இலக்கண மரபில் மகர ஈறு கெட்டது எனக் கொள்ளலாம். இரண்டாம் படம்
இரண்டாம் படம்:

செய்திக் கட்டுரையில்,  இக்கல்வெட்டுப் படம் முதலாவதாகக் குறிப்பிடப்படுகிறது.   

கல்வெட்டின் பாடம் :

1     ஸ்வஸ்திஸ்ரீ  கோவிராஜராஜ
2     கேசரி பன்மற்கி யாண்டு ஆவ
3     து வாணகோப்பாடிப் பெண்
4     ணைத் தென்கரை இராஜகண்ட பு
5     ரத்தில் காந நங்கைய்க்கு ஸ்ரீமன்மு
6     ம்முடிச் சோழ வாணகோவரை
7     யனாகிய தொங்கல மறவன் வை
8    ய்த்த திருநொந்தா விளக்கு ஒன்று
9    ஒன்றிநால் ஆடு ... இது  பந்மா
10                          ஹேச்வர ரக்ஷை
   

குறிப்பு:   சிவப்பு எழுத்துகள் கிரந்தம்.

விளக்கம் :    செய்திக்கட்டுரையில், அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறவில்லை. ஆனால், இரண்டாம் வரியில்,  அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறும் பகுதியில்,   எழாம் ஆண்டைக் குறிக்கும்
எண் குறியீடு  “எ”   என்பது தெளிவாகப் புலப்படுகிறது.  எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 992 எனலாம்.  கொற்றவையைக் குறிக்கும் 
”காந நங்கை”  என்னும் சொல்  கல்வெட்டுகளில் மிகுந்த புழக்கத்தில் இல்லை
எனத்தெரிகிறது. “காடு கிழாள்”   என்னும் சொல்லுக்கு ஒப்பான ஒரு சொல்லாக இதைக் கருதலாம்.  ”நங்கை”  என்னும் சொல் இக்கல்வெட்டில் சொல்லின் இறுதியில் கூடுதலாக “ய்”  என்னும் மெய் சேர்ந்து “நங்கைய்”  என எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்து முறையைத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் காணலாம். அவற்றில் (பிராமிக் கல்வெட்டுகளில்), “ப(ள்)ளிய்” என்றும், “கணிய்” என்றும்  ”அந்தைய்”  என்றும்  பல இடங்களில் வருவதைக் காணலாம்.  5-ஆவது வரியின் இறுதியிலும், 6-ஆவது வரியின் தொடக்கத்திலும் சேர்ந்து “மும்முடிச்சோழன்”  என்னும் சிறப்புப் பெயர் காணப்படுகிறது.  இப்பெயருக்கு முன்னொட்டாக  “ஸ்ரீமன்”  என்னும் வடசொல் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது வியப்புக்குரியது.  ஏனெனில், 10-நூற்றாண்டில் இராசராசன் காலத்துக் கல்வெட்டுகளில் “ஸ்ரீமன்”   என்னும் சொல் பயின்று வரக்காணோம்.  இச்சொல்,  விஜயநகரர், நாயக்கர்  காலத்துப் பயன்பாடு.  கொடையாகக் கொடுக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை 96 என்று
செய்திக்கட்டுரை கூறுகிறது. எண்ணிக்கையைச் சுட்டும்  தமிழ் எண்களுக்கான குறியீடு  வழக்கமான குறியீடாகத் தோன்றவில்லை. 


மூன்றாம் படம்

மூன்றாம் படம் :

செய்திக் கட்டுரையில்,  இக்கல்வெட்டுப் படம் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டின்  பாடம்:

1     ஸ்வஸ்திஸ்ரீ  காந்தளூர்ச் சாலை கலம
2     றுத்த கோவிராஜராஜ கேசரி பந்மற்கு  யா
3     ண்டு 12 ஆவது வாணகோப்பாடிப்
4     பெண்ணைய்த் தென்கரை இரா
5     ண்டபுரமுடைய கோசக்கர எழுநூற்று
6     வரோம் இவ்வூர்த் திருக்குராங்கோ
7     யில்  மாஹதேவர்க்கு வைய்த்த திரு 
8    நொன்தா  விளக்கு இரண்டு இரண்டிநால்
9    ஆடு ...  இது பந்மாஹேச்வர ர
10                                                  க்ஷை
குறிப்பு:   சிவப்பு எழுத்துகள் கிரந்தம்.


விளக்கம் :   மற்ற கல்வெட்டுகளினின்றும் இக்கல்வெட்டு மாறுபட்டுள்ளது.
இராசராசனின் மெய்க்கீர்த்தியில் காணப்பெறும் “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய”  நிகழ்வு இக்கல்வெட்டில் முதல் வரியில் அமைந்துள்ளது. 
இக்குறிப்பு செய்திக்கட்டுரையில் குறிக்கப்படவில்லை.  ஆட்சியாண்டு 12 என்பது ஓரளவு புலப்படுகிறது. இக்கல்வெட்டிலும் சொல்லின் இறுதியில்
“ய்”  என்னும் மெய்யெழுத்து கூடுதலாக எழுதப்பட்டுள்ளது.  ”பெண்ணைய்”
(வரி 4), “வைய்த்த”  (வரி 7)   ஆகியன சான்று.  இக்கல்வெட்டில் கோயிலின் பெயர் திருக்குராங்கோயில் என உள்ளது. மேலே மற்றொரு கல்வெட்டில், 
செய்திக் கட்டுரைப்படி இறைவரின் பெயர் “திருக்குரால் ஆள்வார்”  என்று
குறிக்கப்பட்டுள்ளது.  இந்த மாறுபாடு குறிப்பிடத்தக்கது. இறைவனைக்
குறிக்கும் “மஹாதேவர்”  என்னும் வடசொல் இங்கு பிழையாக “மாஹதேவர்”
என எழுதப்பட்டுள்ளது.


---------------------------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.
வெள்ளி, 18 ஜனவரி, 2019கோவை மாநகர் அன்றும் இன்றும்


முன்னுரை

கவிஞர் புவியரசு. கோவை வானம்பாடி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பேரூர் சாந்தலிங்கர் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்ற தமிழாசிரியர். கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நாடகங்கள் என இதுவரை 106 நூல்களை எழுதியுள்ளவர். சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றவர். தேசியத் திரைப்பட வளர்ச்சித்துறையில் பணியாற்றியவர். இவ்வாறு, இயற்றமிழ், நாடகத்தமிழ் ஆகிய இரண்டிலும் வல்ல இத்தமிழறிஞர், கோவை விழா நிகழ்ச்சிகளின் தொடராக, 11-01-2019 அன்று கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவொன்றை ஆற்றினார். கோவையைப் பற்றித் தம் வாழ்க்கையோடு இயைந்த அனுபவங்களையும், கோவையைப் பற்றிய பல்வேறு செய்திகளையும் சுவையோடு பகிர்ந்துகொண்டார். கோவையின் பழமை எவ்வாறிருந்தது என்பதை இன்றைய தலைமுறை அறிந்து மகிழும் வண்னமும், பழங்கோவையின் சாயலை, ஓரளவு தம் சொந்த வாழ்வில் கண்ட சில மூத்த குடிமகன்களின் நினைவைக் கிளறி மகிழவைக்கும் வண்ணமும் அமைந்த அவரது சொற்பொழிவிலிருந்து சில துளிகள் இங்கே.

சொற்பொழிவாளரின் இளமைப்பருவம்-கல்விச் சூழல்

கவிஞர் புவியரசு தம் இளமைப்பருவத்தை நினைவு கூர்ந்தமை, நாம் அன்றைய கோவை நகரின் சூழலையும், அன்றைய கல்விச் சூழலையும் அறிந்துகொள்ளப் பெரிதும் துணை செய்தது. அவரே கூறியது போல அவரது உரை வெறும் புள்ளி விவரம் அல்ல; அது ஓர் அனுபவம். உடுமலைக்கருகில் ஒரு சிறிய கிராமத்தில் பிறப்பு. முதல் வகுப்பு படிக்கும் காலத்தில், கோவை நகரில் இருப்பு. கோவையில் இன்றும் “மாட்டாசுபத்திரி”  என்ற பெயரில் வழங்கும் கால்நடை மருத்துவமனையின் அருகில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆசிரியர் அடித்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். ஓராண்டுகூட நிறைவுறவில்லை. ஏதோ காரணம்பற்றி, இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான காலகட்டத்தில் பள்ளி செல்லவில்லை. பின்னர், இடையர் வீதியில் இருந்த எஸ்.ஆர். சந்திரன் பள்ளியில் (S. R. CHANDRAN PREPARATORY SCHOOL) ஆறாம் வகுப்பில் சேர்ந்தார்.  ஐந்து வகுப்புகள் படிக்காத நிலையில் பாடங்கள் எவையும் படியவில்லை. இந்நிலையில், கோவையில் “பிளேக்” (PLAGUE) என்னும் கொள்ளை நோய் பரவியது. படிப்பு நின்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நகராட்சிப் பள்ளியில் (CITY MUNICIPAL HIGH SCHOOL)  நேரடியாக எட்டாம் வகுப்பில் சேர்க்கை. இப்பள்ளி, பெரும் விளையாட்டு வீரர்களைத் தந்திருக்கிறது. இவருக்குக் கணக்குப்பாடம் தெரியாது. ஆனால், கணக்கு ஆசிரியர் ஒவ்வொரு கணக்கையும் தாமே போட்டுக் காண்பித்துக் காண்பித்து மாணவர்களுக்குக் கணக்குப் புகட்டினார். கணக்கு ஆசிரியரை மறக்கவியலாது. காரணம் செந்தமிழில் பேசுவார். கோவையின் கல்விச் சூழல் பற்றி ஒரு குறிப்பு.  கோவையில், 1860-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியக் கிறித்தவச் சபையாரின் செயிண்ட் மைக்கேல் பள்ளியில் (ST.MICHAEL’S)  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிறித்தவரல்லாதார் அப்பள்ளியில் சேர இடம் கிடைக்காத சூழலில், கோவையின் நாயுடு வகுப்புச் செல்வர் ஒருவர் கோவை பீளமேட்டில், 1924-ஆம் ஆண்டு, அனைத்துச் சமயத்தாரும் கல்வி பயிலப் பள்ளி ஒன்றை அமைத்தார். சர்வ ஜன உயர்நிலைப்பள்ளி என அதற்குப் பொருத்தமானதொரு பெயரையும் இட்டார்.

கவிஞர் புவியரசு அவர்கள் பின்னர் அரசு கலைக் கல்லூர்ரியில் இடைநிலைப் பட்டம் (Intermediate) பெற்றார். இராமச்சந்திர ஐயர் என்னும் ஆசிரியர் கல்லூரியின் ஆய்வுக்கூடப் பொறுப்பாளராக இருந்தார்; ஆய்வுக்கூடப் பொருள்களில் கண்ணாடிப்பெட்டி ஒன்றில் வைக்கபட்டிருந்த, பதப்படுத்தப்பட்ட மனிதத்தலையும் ஒன்று. சக மாணவர்களின் மிரட்சிக்கிடையில், அதை அச்சமின்றிக் கையில் எடுத்துக் காண்பித்த அனுபவம் கவிஞருக்குண்டு. ஆய்வுக்கூடத்தில் இருந்த இன்னொரு பொருள் மனித எலும்புக்கூடு. கைகளும், கால்களும் சிறு சிறு பகுதிகளாகத் திருகு ஆணிகளால் மூட்டப்பெற்றவையாக இருந்ததால், கவிஞர், நாள்தோறும் கைகளை வெவ்வேறு நிலைகளில் பொருத்தி வைத்து மகிழ்வாராம். ஒரு நாள் கை குவித்து வணங்கும் மனித எலும்புக்கூடு மறுநாள் வேறொரு தோற்றத்தில். இன்னொரு ஆசிரியர் சுப்புரத்தின ஐயர்; தலை முழுக்க முடியற்ற தோற்றம். உச்சியில் ஒரு சிறு குடுமி. புவியியல் (GEOGRAPHY) கல்விக்கான ஆசிரியரான அவர் தன் தலையையே பாடத்துக்கான கோளமாக வடிவமைத்துக்கொண்டு உலக நாடுகளைக் காட்டிக் கல்வி பயிற்றுவார் எனக் கவிஞர் கூறுகையில் அவையில் சிரிப்பலைகள்.

அக்காலக் கோவையில் கல்வி, தரம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. எல்லாரும் படித்தனர். மணி மணியான ஆசிரியர்கள். கல்விக்குப் பெரிய மரியாதை இருந்த காலம் அது. இன்று அந்த மரியாதை காணாமல் போயிற்று. அக்காலக் கோவையில், பிச்சைக்காரர்கள் கூடப் படித்தவராயிருந்தனர். பக்திப் பாடல்களைப் பாடிப் பிச்சை எடுத்தனர்.

கவிஞரின் சிரு பிள்ளைப் பருவத்தில் கோவை நகரம் மிக அமைதியான இடமாக இருந்தது. வெறிச்சொடிய சாலைகள். எங்கோ ஒலிக்கும் மிதிவண்டியின் மணிச் சத்தம். அல்லது குதிரை வண்டிகளின் சத்தம்.

கோவையின் மையப்பொருள்-பருத்தி

கோவையின் இயக்கம் பருத்தியை மையமாகக்கொண்டே சுழன்றது. ஒரு பக்கம் பஞ்சாலைகள்; ஒரு பக்கம் நெசவாளர்கள். கருங்கண்ணி, கம்போடியா என இருவகைப் பருத்தி. பருத்திச் செடிகள் அழகான மலர்களைக் கொண்டிருந்தன. பருத்தியிலிருந்து, விதை தனியாகவும் பஞ்சு தனியாகவும் பிரிக்கும் பணிக்கு ஜின்னிங் ஆலைகள் (GINNING MILL). அதை அடுத்து, நூல் நூற்கும் பணிக்கு நூற்பாலைகள் (SPINNING MILL). பின்னர் நெசவாலைகள். கோவை எங்கும் கைத்தறி நெசவு. நெசவுத் தொழில் நடக்கும் இடங்கள், பேட்டைகள் எனப் பெயர் கொண்டன. கோவையின் மையப்பகுதியில் தெப்பக்குளம் மைதானம் அமைந்திருந்தது. மைதானத்திலும், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களிலும் பாம்பு போல் நீண்டு கிடக்கும் சேலை வடிவில் விரித்து வைத்த நூல் பாய்கள்.

முதல் பஞ்சாலையும் பஞ்சாலைப் போராட்டமும்

நூலிழை அறுந்து போகாமல் இருக்கும்படி சரியான அளவில் ஈரப்பசை இருக்கும் பகுதி கோவைப்பகுதி. எனவே, பஞ்சாலை அமையத் தகுதியான இடமாகக் கோவை இருந்தது. கோவையின் முதல் ஆலை ஸ்டேன்ஸ் பஞ்சாலை. உரிமையாளர் ஸ்டேன்ஸ் துரை. அவருக்குப் பஞ்சாலைக்கான நிலம் கொடுத்தவர் சேலம் நரசிம்மலு நாயுடு என்பவர். “விக்டோரியா அச்சகம்  என்னும் பெயரில் முதல் அச்சகத்தை நிறுவியவர். தொண்ணூற்றாறு நூல்களை எழுதியவர். ஸ்டேன்ஸ் பஞ்சாலை இயங்கியபோது, சொற்பொழிவாளர் கவிஞர் புவியரசு அவர்கள், ‘சிட்டி யூனியன்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஸ்டேன்ஸ் பஞ்சாலையைத் தொடர்ந்து கோவையில் மொத்தம் நூற்றுப்பத்து ஆலைகள் தொடங்கப்பட்டு இயங்கின. நூறாம் எண் பருத்தி இழை கோவையில்தான் முதன்முதலில் நெய்யப்பட்டது.

பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு முறை நடந்தது. போராட்டம் வலுத்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியும் இங்கு நடந்தது. போராட்டத்துக்கு ஆதரவாக இரயில் வண்டி ஓட்டுநர் ஒருவர் இரயிலை நிறுத்திவிட்டுப் போராட்டத்தில் கல்ந்து கொண்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது.

திரைப்படக் கலையும் கோவையும்

திரைப்படக் கலைக்கு முன்னோடி கோவையே. பிரஞ்சுக்காரன் ஒருவன் திரையில் படம் காட்டும் ஒரு கருவியோடு திருச்சி-பொன்மலையில் சலனப் படக்காட்சிகளைத் திரையில் ஓடவிட்டதைப் பார்த்து அதில் மனதை ஈடுபடுத்திய வின்சென்ட் அவர்களை இங்கு நினைவு கூரவேண்டும். அந்தக் காலத்தில் ஆறாயிரம் ரூபாய்ப் பணம் கொடுத்து அந்தப் பிரஞ்சுக்காரனிடம் திரைப்படக் கருவியை (PROJECTOR) விலைக்கு வாங்கித் தம் தோள்களில் சுமந்தவாறு ஊர் ஊராய் அலைந்து சலனப்படத்தை மக்களிடம் காட்டியவர் அவர். ஆப்கானிஸ்தான் வரை அவர் சென்றதாகக் கேள்விப்படுகிறோம். பிரிட்டிஷ் மகாராணியாரின் அரண்மனையின் தோற்றத்தை ஒத்த வடிவத்தில், “வெரைட்டி ஹால்  (VARIETY HALL)   என்னும் பெயரில் திரைப்பட அரங்கு ஒன்றை அவர் கட்டுவித்தார்.  அதில் சலனப்படங்களை ஓடவிட்டார். பேச்சொலி இல்லாத ஊமைப்படங்கள். கார்ட்டூன் படங்கள் வெளியிடப்பட்டன. MEGAPHONE என்னும் ஒலிபெருக்கி மூலம் படங்களின் கதையை, உரையாடல்களைக் கலைஞர் ஒருவர் திரைக்கு முன் உள்ள மேடைப்பகுதியில் நின்றுகொண்டு பேசிக் காட்சிகளை விளக்குவார். “வெரைட்டி ஹால்  (VARIETY HALL)   என்னும் பெயருக்கேற்ப அந்த அரங்கில் சலனப்படத்தைத் தவிர்த்து, ஆங்கிலோ-இந்திய மக்களின் BALL”  என்னும் உள் அரங்க நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்தத் திரையரங்கு இருக்கும் அதே வீதியில் பின்னர் “எடிசன்என்னும் பெயரிலும் ஒரு திரையரங்கு கட்டப்பெற்றது. சலனப்படத்தின் அடிப்படையைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எட்சனை நினவூட்டும் வண்ணம் இப்பெயர் இடப்பெற்றது எனலாம். பின்னாளில், இந்த அரங்கு “சாமி தியேட்டர்என்னும் பெயரில் இயங்கி இன்று மறைந்து போனது. மலையாளப் படங்களுக்கென்றே “சீனிவாஸ்  திரையரங்கும், ஆங்கிலப்படங்களுக்கென்றே “ரெயின்போ  திரையரங்கும் இயங்கின. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  கட்டுரை ஆசிரியர் கோவையில் 1964-ஆம் ஆண்டு, கல்லூரிப்படிப்புக்காகக் கோவை வந்தபோது, இந்த “சீனிவாஸ்  திரையரங்கு முற்றிலும் ஆங்கிலப்படங்களைத் திரையிடும் அரங்காக மாறிவிட்டிருந்தது. அத் திரையரங்கு, திரையரங்குக்கான பெரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கவில்லை ஒரு சிறிய மாளிகை  (BUNGALOW) போன்றிருக்கும். ஒரு வீட்டுக்குள் அமர்ந்து படம் பார்க்கும் உணர்வே ஏற்படும். 1964-ஆம் ஆண்டில் அத்திரையரங்கில், ஆங்கிலப்பட இயக்குநர் ALFRED HITCHCOCK- இன்   “THE BIRDS”  என்னும் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்ததை மறக்க இயலாது.)


வின்சென்ட் அவர்கள், பின்னர்  லைட் ஹவுஸ்  (LIGHT HOUSE) என்னும் பெயரில் ஒரு திரையரங்கத்தைக் கட்டுவித்தார். கலங்கரை விளக்கத்தைக் குறிக்கும் இப்பெயருக்கும் கலங்கரை விளக்கத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. திரை அரங்கின் உட்புறக்கூரை முழுதும் வானத்தைப்போலக் காட்சிதரும் வண்ணம் நிலா, விண்மீன்கள்  ஆகியன விளக்கொளிகளின் மூலம் காணுமாறு அழகூட்டபெற்றிருந்தது. அரங்கின் பக்கவாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்ட சிலைகளின் மீதும் விளக்கொளி பட்டு மிளிர்ந்தது. எனவே, ‘விளக்குகளின் மாளிகை  என்னும் பொருளில் திரையரங்குக்கு இப்பெயரிடப்பட்டது இன்று பலருக்கும் தெரியாது. அந்தத் திரையரங்கு பின்னாளில் “கென்னடி தியேட்டர்  என்று இயங்கித் தற்போது இல்லாமலே மறைந்த பின்னும், திரையரங்கு இருந்த வீதி இன்றளவிலும் ‘லைட் ஹவுஸ்வீதி என்றே வழங்கி வருகிறது.

கோவை, திரைப்படக்கலையில் முன்னோடியாகத் திகழ்ந்தது பற்றி முன்னரே குறிப்பிட்டோம். கோவையில், பட்சிராஜா, சென்ட்ரல்  ஆகிய படப்பிடிப்பு நிலையங்கள் பெரிய வளாகங்களுடன் இருந்தன. பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர். போன்ற பல நடிகர்கள் நடமாடிய நகரம் கோவை. கோவையைச் சேர்ந்த வேல்சாமிக் கவிராயர் என்பார், அக்காலத்தே சேலம் “மாடர்ன் தியேட்டர்ஸ்   படப்பிடிப்பு நிலையத்தில் இயக்குநராய் இருந்தார். சிறப்பானதொரு நிலைக்கு உயர்ந்த அவர், பின்னாளில், அன்னார் ஒருவர் இருந்தார் என்ற தடயமே இல்லாமல் வீழ்ச்சியுற்றார்.

நாடகக் கலையும் கோவையும்

நாடகக் கலை என்பது அற்புதமான ஒரு கலை. அது, கோவையில் சிறப்புற்றிருந்தது. எம்.ஆர்.இராதாவின் நாடகங்கள் அரசியல் பரப்புரைக்காகப் பெயர்பெற்றவை. நாளும் நாடகத்தில், அரசியல் தொடர்பான சாடல்களுடன் உரையாடல்கள் அமைந்திருக்கும். முதல் நாள், குறிப்பிட்ட சாடலுக்காகக் காவல்துறையினர் நெருக்கடி அளித்தால், அடுத்த நாள் வேறொரு உரையாடல் மூலம் சாடல் தொடரும். நாடகம் ஒன்றே. கதை தூக்கு தூக்கியாக இருக்கும். ஆனால் அரசியல் உரையாடல்கள் இடை புகும். மக்களின் பேச்சு இலக்கியப்பேச்சல்ல.  நாடகப்பேச்சாகவே இருக்கும். டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவின் பணி குறிப்பிடத்தக்கது. டி.கே. சண்முகம் அவர்கள் கோவையில் “சண்முகா  நாடக அரங்குக் கட்டிடத்தைக் கட்டுவித்தார். அரங்கின் மேடை பெரியதொரு மேடை. நாடகக் காட்சிகளில் மெய்யாகவே வண்டிகள் மேடையில் வரும். இரவோடிரவாக நாடகக் கதையை உருவாக்கிய நாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். அறிஞர் அண்ணாவும் அவ்வாறு எழுதிய “ஓர் இரவு  நாடகம் இங்கு அரங்கேறியுள்ளது. சொற்பொழிவாளர் கவிஞர் புவியரசு, அண்ணாவுடனா சந்திப்பை நினைவு கூர்ந்தார்.

முன்னர்க் குறிப்பிட்டவாறு, கவிஞர் புவியரசு அவர்களும் ஒரு நாடக ஆசிரியரே. ஆண்டு முழுதும் இருபத்தைந்து நாடகங்களுக்குக் குறையாமல் நாடகங்கள் அரங்கேறும். நாடகங்களின் போட்டியும் பரிசுகளும் உண்டு. புவியரசு அவர்களின் ஒரு நாடகம் பதினாறு முதற்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. “சலங்கைஎன்னும் பெயரில் புவியரசு அவர்கள் எழுதிய நாடகம் (தேவதாசிகள் பற்றியது) வாதங்களுக்கு இடமளித்ததும், பெரும் கண்டனங்களுக்கு உள்ளானதும் நிகழ்ந்தன. புவியரசு அவர்கள், பின்னர் நாடகப்போட்டியின் நடுவராக இயங்கியதும் உண்டு. “செம்மீன்  திரைப்படப் புகழ் நடிகை ஷீலா, கோவையில் போத்தனூரில் வாழ்ந்தது, அவரைப் புவியரசு அவர்கள் நாடகத்துக்கு அழைத்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். நாடகச் சம்பளமாக எழுபது ரூபாய்ப் பணமும், போக்குவரத்துக்கான குதிரைவண்டிக் கூலியாகப் பணம் ரூபாய் பதினைந்தும், முன்பணமாக முப்பது ரூபாய்ப் பணமும் ஷீலாவுக்குக் கொடுக்கப்பட்டது.

( கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  நடிகை ஷீலா, கோவையில் தங்கி நாடகங்களில் நடித்து வந்தார் என்று புவியரசு அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டபோது, கட்டுரை ஆசிரியரும் தம் பள்ளி நாள்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளின் காலம். கட்டுரை ஆசிரியரின் சொந்த ஊரான அவிநாசியில் அவரது சிற்றப்பாவான “அன்புவாணன் என்பவர் -  இடைநிலை ஆசிரியர் (SECONDARY GRADE TEACHER) பயிற்சிப்பணி  -  அவிநாசியில் இருந்த நாடக ஆர்வலர்களைக் கொண்டு “பொன்விலங்கு  என்னும் புதுமைத் தலைப்பில் நாடகம் ஒன்றை ஆக்கி, அதில் நடிகை ஷீலாவைக் கோவையிலிருந்து வரவழைத்து நாடகம் நிகழ்த்தினார். அந் நாடகத்தை நேரில் பார்த்த நினைவும், நாடகத்தின் இடை நேரத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், டி.ஆர். இராமச் சந்திரனும் நாடகத்தைச் சிறிது நேரம் பார்த்துப் பாராட்டிவிட்டுக் கோவை நோக்கிப் பயணப்பட்டதைக் கண்ட நினைவும் கட்டுரை ஆசிரியருக்குப் பசுமைப் பதிவு. பொன்விலங்கு என்னும் புதுமைத் தலைப்பை முதலில் அறிமுகப்படுத்தியவர் அன்புவாணன் அவர்களே. பின்னாளில், இந்தத் தலைப்பில் நா.பார்த்தசாரதி அவர்கள் நாவல் ஒன்றை எழுதினார் என்பது நாம் அறிந்ததே.)  

கோவை இன்று எவ்வாறு இருக்கிறது?

படைப்பிலும் கலையிலும் எழுச்சிபெற்ற அந்தக் கோவை இன்று எங்கே? நூற்றுப்பத்து ஆலைகள் இருந்தனவே; அவை என்னவாயின?  எப்படி மறைந்தன? நெசவால் செழித்த, நெசவாளர்களால் உருவாக்கப்பெற்ற நகரம் இன்றைக்கு என்னவாயிற்று?  பெரியதொரு கேள்வி. விடை காண இயலவில்லை. இன்று, இரண்டும் கெட்டானாய் போய்க்கொண்டிருக்கிறது. நாசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை வேறு புலத்திலிருந்து மக்கள் பெயர்ந்து கோவைக்கு வருதல் நிகழ்ந்துகொண்டு வருகின்றது. கோவைக்கென்று ஒட்டுமொத்தமான கருத்து, தெளிவு என்பது காணப்படவில்லை. சொற்பொழிவாளர் நகைச் சுவையாகச் சொன்ன ஒரு கருத்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இன்றையத் திரைப்படத்துறையினர் கூறுவதுபோலத் திரைப்படங்கள் பற்றிய கோவை மக்களின் கணிப்பைப் புரிந்து கொள்ள இயலவில்லை. கோவை இன்று பெரியதொரு மருத்துவ நகரமாகத் திகழ்கிறது. உண்மை. ஆனால் மருத்துவச் செலவு?  எந்த ஒரு நாடு மருத்துவத்தையும், கல்வியையும் இலவசமாக வழங்குகிறதோ அந்த நாடுதான் மெய்யான “ஜனநாயக  நாடு. பிரிட்டனும், ஜெர்மனியும் அத்தகைய நாடுகள்தாமே.

கோவை நாளை எவ்வாறிருக்கும்?

நாளை என்பது எவ்வாறிருக்கும்?  நம் வீட்டில் செவிட்டுப் பிள்ளைகள் பிறப்பார்கள். நாம் உண்மையில் கால்களைக்கொண்டு நடக்கிறோமா?  நம் கால்களின் விரல்கள் மண்ணில் பதிகின்றனவா? இல்லை. நாளை, கால் விரல்கள் இல்லாப் பிள்ளைகள் பிறப்பார்கள். பயன்படுத்தாத விரல்களுக்குப் படைப்பு இருக்காதல்லவா? மக்கள், தனித்தனியே பறப்பார்கள்.

அறம் இருக்காது. ஒழுக்கம் இருக்காது. அநியாயத்தை நியாயப்படுத்துவோம். கைப்பேசிகள் என்னும் செல்பேசிகள் நமது சாத்தான்களாய் மாறிவிட்டிருக்கும் காலம் இது. இவற்றால் நிச்சயம் நமக்கு நன்மை நிகழாது.

முப்பது ஆண்டுகளுக்கு மேல் உலகம் இருக்காது; அழிந்து போகும். இதைக் கவிஞர் சொல்லவில்லை. மூளைப்பகுதியைத் தவிர உடம்பின் அத்தனை வெளி உறுப்புகளும் வளைந்து மடிந்து முடங்கிப்போன நிலையில், சிந்தனை மட்டுமே உயிரோட்டமாய், ஒரு நாற்காலியில் சுருண்டு கிடந்த ஒரு சிறந்த அறிவியல் மேதை -  அண்மையில் மறைந்து போனாரே -   ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (STEPHEN HAWKINS) அவர் சொன்னது. உலகம் அழியும்; ஆனால் நாய்கள் சாகா.

முடிவுரை :

மனிதனுக்கு மரணம் அருகில் இருக்கும்போது மனிதம் இருக்கும்.


துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.