மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 20 மார்ச், 2018

தஞ்சைப்பெரிய கோயில் கல்வெட்டுகள்-1

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில், தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தன. கல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும், தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தன. கல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும். ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:

குறிப்பு:  அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படாவிட்டாலும், கல்வெட்டில் உள்ளவையே. பொருள் எளிதில் விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.


கல்வெட்டுப் பாடம்
1  று கழஞ்சரை ஒட்டுவட்டில் ஒன்று பொ(ன்)...........
2  (ஒ)ன்று பொன் இருநூற்றுத்தொண்ணூ(ற்).....
3  (ண்)ணூற்று எழு கழஞ்சேய் கால் - கல(சப்பானை)...
4  (கழஞ்)சேய் கால் வெண்சாமரைக்கைய் ...
5  (பொற்)பூ ஒன்று பொன் ஐங்கழஞ்சாகத் திரு....
6  (தி)ருப்பொற்பூ ஆறிநால் பொன் இருப(த்)...
7  (பொ)ற்பூ மூன்றிநால் பொன் பதிநாற்க(ழஞ்சு)

சிறு விளக்கங்கள்;
ஒட்டுவட்டில் - ஒரு குழிவுப்பாத்திரம்
வெண்சாமரைக்கைய் -  சாமரம் என்னும் விசிறியின் கைப்பிடி (பொன்னால் செய்யப்பட்டதாகலாம்).
பொற்பூ - பொன்னாலான பூ
கழஞ்சு - பொன்னின் எடை. 
ஒரு கழஞ்சு = 20 மஞ்சாடி = 40 குன்றி(மணி) = 4.4 கிராம்
கழஞ்சரை = தற்கால வழக்கில் ஒன்றரைக் கழஞ்சு எனக் கூறுகிறோம். சோழர் காலக்கல்வெட்டுகளில் முழு எண்களுக்கும் “கழஞ்சு” என்னும் எழுத்துத் தொடருக்கும் பிற்பகுதியில் பின்னக் குறிப்பு இடம்பெறும். எனவே கழஞ்சரை. இதுபோலவே, ஐந்தரைக் கழஞ்சு என்பது ஐங்கழஞ்சரை என எழுதப்படும்.

(தொடரும்)
------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

2 கருத்துகள்: