மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 28 ஜனவரி, 2014

பட்டணத்தில் தாய்த்தெய்வச்சிற்பம்


பட்டணத்தில் தாய்த்தெய்வச்சிற்பம்
                  
                                                        து.சுந்தரம், கோவை


     நெகமத்துக்கு அருகில் அமைந்துள்ளது பட்டணம் என்னும் சிற்றூர். இவ்வூரில் கிடைத்த ஒரே ஒரு கல்வெட்டு ஆதாரத்தைக்கொண்டு இவ்வூர் இருநூற்று அறுபது ஆண்டுப்பழமை வாய்ந்தது என்றும், அது ஒரு வணிக நகரமாக விளங்கியது என்றும் அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, அங்கு ஓர் அரிய தாய்த்தெய்வ நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த, வரலாற்று ஆர்வலர் ருத்திரன் என்பவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் நேரில் சென்று அந்தச் சிற்பத்தை ஆய்வு செய்தார்.

      பட்டணத்தில், நல்லட்டிபாளையம் பிரிவுச் சாலையோரத்தில் செடிகளுக்கிடையில் காணப்படுகின்ற அந்தச் சிற்பமானது, பெண்ணொருத்தி தன் வலக்கையில் குழந்தையை அணைத்துப்பிடித்தவாறு அமைந்துள்ளது. பெண்ணின் இரு புறமும், இரு எருதுமாடுகள், தம் தலைகளைக் கீழ்நோக்கிச் சாய்த்தபடி,  கொம்புகளை உயர்த்தி அந்தப்பெண்ணின் இடைப்பகுதியில் குத்துவதைப்போல் காணப்படுகின்றன. அப்பெண், தன் கூந்தலில் வலப்புறமாகக் கொண்டை போட்டிருக்கும் தோற்றம். காதுகளில், காதணிகள் உள்ளன. ஆனால், கழுத்தில் அணிகள் எவையும் காணப்படவில்லை. கைகளில் ஒன்றில் மட்டும் வளைகள் காணப்படுகின்றன. இடையிலிருந்து கணுக்காலுக்குச் சற்று மேலே வரை ஆடை, மடிப்புகளோடு காணப்படுகிறது.  சிற்பத்தின் பீடப்பகுதியில் எழுத்துகள் தெரிந்ததால், சிலையை நன்கு தோண்டி நிற்கவைத்துப் பார்த்ததில் மூன்று வரிகளில் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. எழுத்துகளைப்படித்த வாசகம் பின்வருமாறு:

       குறோதி வருசம் அற்ப்பிசை மீ (மாதம்) 9 உ (தேதி)
       முத்திலிவாட செட்டி உபையம்

அதாவது, தமிழ் ஆண்டான குரோதி வருடத்தில், ஐப்பசி மாதத்தில் ஒன்பதாம் தேதி, முத்திலிவாட செட்டி என்பவரால் இச்சிற்பம் உபையமாகச் செய்து தரப்பட்டது எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. எழுத்தமைதியை வைத்துப் பார்க்கும்போது குரோதி வருடம், கி.பி. 1724 அல்லது கி.பி. 1784 ஆண்டுகளோடு பொருந்தி வருகிறது. ஐப்பசி மாதம், செப்டம்பர், 1724 அல்லது அக்டோபர், 1784 என்னும் காலக்கணக்கீட்டுடன் பொருந்தி வருகிறது.

ஏறத்தாழ, இருநூற்றைம்பது ஆண்டுகள் பழமை கொண்ட இச்சிற்பம், நமது கோவைப்பகுதியில் கிடைத்துள்ள அரிய சிற்பமாகவே கருதப்படவேண்டும். ஏனெனில், எழுத்துப்பொறிப்புகளோடு உள்ள நடுகல் சிற்பங்கள் இப்பகுதியில் காணக்கிடைப்பது மிகவும் அரிது. மேலும், இறந்துபட்ட வீரனோடு தானும் மாய்ந்துவிட்ட பெண்ணுக்கு எடுக்கப்பட்ட “மாசதிக்கல்”  என்னும் நடுகல் கோவைப்பகுதியில் காணப்பட்டாலும், குழந்தையோடு உள்ள தாய்ப்பெண்ணுக்கு எடுக்கப்பட்ட நடுகல் இதுவரை கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

    இவ்வூர் மக்கள், இந்தச் சிற்பத்தைப்பற்றி ஒரு செய்தி சொல்கிறார்கள். கருவுற்ற ஒரு பெண், மாடு முட்டியதால் இறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது போன்ற, மக்களிடையே வழங்கும் கதை மரபும் இச்சிற்பத்தின் உண்மைப் பின்னணியைத் தெரிந்துகொள்ள உதவும் சான்றுகளில் ஒன்று. இந்தச் சிற்பத்தின் ஒளிப்படத்தைப் பார்த்த தொல்லியல்  ஆய்வாளரான,  சென்னை சு.இராசகோபால் அவர்கள், இச்சிற்பம், தாய்த்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கலாம் எனக்குறிப்பிடுகிறார்.

    தாய்த்தெய்வ வழிபாடு தமிழ்நாடெங்கும் வழக்கில் உள்ள ஒன்றுதான். தாய்த்தெய்வ வழிபாட்டின் தாயகம் இந்தியா என்னும் கருத்து நிலவுகிறது. சிந்துவெளியில், கருத்தாங்கிய நிலையில் சில தாய்த்தெய்வங்களின் வடிவங்கள் கிடைத்துள்ளதாக அறிகிறோம். கருவுற்ற நிலையில் கொல்லப்பட்ட பெண் ஒருத்தி பொன்னரத்தா என்னும் அம்மன் வடிவில் தெய்வமாக, திருநெல்வேலி அருகே கடையம் ஊரில் வழிபடப்பெறுகிறாள். குமரி,நெல்லை,தூத்துக்குடி,விருதுநகர்,சிவகாசி ஆகிய மாவட்டங்களில் கிராம தேவதையாக பேச்சியம்மன்(பேய்ச்சியம்மன்), இசக்கியம்மன் ஆகிய தெய்வங்கள் வணங்கப்படுகின்றன. இவ்வகைக் கோயில்கள் சிலவற்றில், இத்தெய்வங்கள் கைகளில் குழந்தை வைத்திருப்பதைக் காணலாம். மதுரை, வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயிலில், பேச்சியம்மன் கையில் குழந்தையுடன் ஆறடி உயரத்தில் இருப்பதைக் காணலாம். பேச்சியம்மனுக்கு மரத்தொட்டில், மரப்பாச்சி பொம்மை ஆகியவற்றைக் காணிக்கையாகக்கொடுத்து, பிள்ளைப்பேற்றுக்காக வேண்டிக்கொள்கிறார்கள். இசக்கி என்பது ‘இயக்கிஎன்பதன் திரிபு என்றும், சமணத் தீர்த்தங்கரர்களின் பரிவாரத்தெய்வங்களுள் ஒன்றான ‘யக்‌ஷியான அம்பிகா என்னும் தெய்வத்தையே கிராமங்களில் இசக்கியாக வழிபடுகிறார்கள் என்னும் கருத்து நிலவினாலும், கொலையுண்ட அல்லது தற்கொலை புரிந்துகொண்ட பெண்கள் இசக்கி என்னும் தெய்வமாகிறார்கள் என்னும் கருத்தும் வலுவாக உள்ளது. இசக்கியின் உறைவிடம் கள்ளிமரம் எனக்கூறப்படுகிறது.  நீலி என்று கூறப்படும் பெண்தெய்வம் இந்த இசக்கிதான் எனக்கூறப்படுகிறது.


     செட்டி நாட்டில், பூமணத்தாள், அக்கினியாத்தாள்,  டைக்கம்மையாத்தாள்,   மெய்யம்மையாத்தாள் ஆகிய தெய்வங்கள்  வணங்கப்படுவதாகவும், அவற்றில் பல தெய்வங்கள்  கையில் குழந்தையுடன்   காணப்படுவதாகவும் அறிகிறோம்.
இத்தெய்வங்களுக்குப் படையல்  இட்டு  வழிபடுவதால், ஒவ்வொரு கோயிலையும் படப்பு”  என்னும் பெயரிலேயே குறிப்பிடுகிறார்கள்.  வழிபடப்படும் தாய் பற்றிய கதைகள், அவளை அகால மரணமடைந்தவளாகச் சொல்கின்றன. கணவனால் ஒதுக்கப்பட்டு, கர்ப்பிணியாகவோ, குழந்தையுடனோ தனித்துச் சென்றபோது நிகழ்ந்த மரணமாக இருக்கலாம். கள்ளர்களாலும், விலங்குகளாலும் மரணம் நிகழ்ந்திருக்கலாம். கருவுற்றபெண், கருக்குழந்தையோடு இறந்துபோகும் சூழ் நிலையில், வயிற்றைக்கிழித்துக் குழந்தையை எடுத்து, இரண்டு உடல்களையும் ஒன்றாகப்புதைத்தபின் அப்பெண்ணைத் தெய்வமாக வணங்குகிறார்கள் என்பது குமரி மாவட்டத்தில் நிலவும் கதை.

    மேலே கூறப்பட்ட நாட்டார் வழக்குகள் எல்லாம், கருவுற்ற நிலையில் அகால மரணம் எய்திய பெண், தெய்வமாக வழிபடப்பெறுகிறாள் என்பதை உறுதி செய்வதால், பட்டணத்தில் நாம் புதிதாகக் கண்டறிந்த தாய்-குழந்தை சிற்பமும், ஊர் மக்கள் வழங்கும் கதை மரபோடு சேர்த்து ஆய்வு செய்யும்போது, கருவுற்ற பெண் அகால மரணம் ( இங்கே விலங்கால் மரணம்) அடைந்ததால் நினைவுக்கல் ( நடுகல் ) எடுக்கப்பட்டுள்ளது எனக்கருதலாம்.
கருவுற்ற  நிலையைச் சிற்பத்தில் குறிப்பாகக் காட்டவே, கையில் குழந்தையைச் செதுக்கியுள்ளார்கள் எனக் கருதுவதில் தவறில்லை.

    சிலையை ஒரு செட்டி உபையமாக அளித்திருப்பதால், வணிக நகரமாக இருந்த பட்டணத்தில் வணிகரின் குலதெய்வ வழிபாட்டின் எச்சமாக இச்சிற்பத்தைக் கருதவாய்ப்புண்டு. இது போன்ற பல வரலாற்று யூகங்களுக்கு இடமளிக்கும் இச்சிற்பத்தைத் தொல்லியல் துறையினர் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் புதிய செய்திகள் கிடைக்கக்கூடும்.






து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156








து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.



 







திங்கள், 27 ஜனவரி, 2014

ஜார்ஜ் மன்னர் பெயரில் ஒரு விநாயகர்
                                                                    து.சுந்தரம், கோவை.


         விழுப்புரம் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சி.வீரராகவன், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் ஆகியோர், அண்மையில் தாராபுரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது அலங்கியம் ஊரில் பேருந்து நிறுத்தம் மற்றும் காவல் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த  ஒரு சிறிய பிள்ளையார் கோவில் மேடையில் ஒரு கல்வெட்டைப்பார்த்தனர். நெடுஞ்சாலைகளில் காணப்படும் மைல்கல்லின் வடிவத்தில் அக்கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது. அகலமான அதன் முன்பக்கத்துப்பரப்பில் ஆங்கிலத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகலம் குறைவாயுள்ள அதனுடைய பக்கவாட்டு முகங்கள் இரண்டிலும் தமிழில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.

    ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் பெரிய அளவில் தெளிவாகக் காணப்படுகின்றன. கல்லின் மேற்புற வளைவுப்பகுதியில் “ சக்கரவர்த்தி வி நாயகர் “  என்னும் தலைப்பு உள்ளது. தலைப்பில் இருக்கும் நாயகர் என்னும் பகுதி, வளைவை அடுத்துக்கீழே எழுதப்பட்டுள்ள முதல் வரியில் அமைகின்றது. இதனைத்தொடர்ந்து அமைந்துள்ள எட்டு வரிகளில், 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதியன்று (இவ்வூர்) இந்துக்கள், நமது சக்கரவர்த்தி ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் முடிசூட்டு விழாவின் நினைவாக இந்த விநாயகரை  நிறுவியுள்ளனர் என்னும் செய்தி எழுதப்பட்டுள்ளது.

   தமிழில் பொறிக்கப்பட்டிருக்கும் இரண்டு பக்கங்களில் ஒன்றில்,

கலியுகாதி 5013 வரு. காத்திகை மீ 27 தேதி
                 சார்சு சக்கரவர்த்திக்கி டில்
என்றும், மற்றொரு பக்கத்தில்,

                “பிசேகஞ்செய்த ஞாபகத்திற்கு இந்தவூர்
                 இந்துக்கள் செய்து வைத்த பிரஸ்டை
                 சக்கிரவர்த்தி வினாயகன்

என்றும் எழுதப்பட்டுள்ளது. அதாவது, கலியுக ஆண்டு 5013-இல் கார்த்திகை மாதம், (இங்கிலாந்து) ஜர்ர்ஜ் சக்கரவர்த்தியவர்களின் முடிசூட்டு விழா (பட்டாபிஷேகம்) தில்லியில் நடைபெற்றதன் நினைவாக அலங்கியம் ஊர் இந்துக்கள் விநாயகரை எழுந்தருளிவித்து (பிரதிஷ்டை செய்து)) அந்த விநாயகருக்கு சக்கரவர்த்தி விநாயகன் என்று பெயர் சூட்டியிருந்திருக்கிறார்கள்.  

   ஆங்கிலமொழியில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டின் பாடத்தின்படி, விநாயகரைப் பிரதிஷ்டை செய்தது டிசம்பர், 12, 1911. இந்தத் தேதியோடு, கல்வெட்டின் தமிழ்ப்பகுதியில் குறிப்பிடப்பெறும் கலியுக ஆண்டு கார்த்திகை இருபத்தேழாம் தேதி சரியாகப் பொருந்திவருகிறது. ஆங்கிலப்பகுதியில், முடிசூட்டு விழா எங்கு நடைபெற்றது என்னும் குறிப்பு இல்லை. ஆனால், தமிழ்ப்பகுதியில், விழா டில்லியில் நடைபெற்றது என்னும் குறிப்பு காணப்படுகிறது. “ஜார்ஜ்”  என்னும் வடமொழி உச்சரிப்பு “ சார்சு “ என்றும், “பிரதிஷ்டை”  என்னும் வடமொழி உச்சரிப்பு “ பிரஸ்டை “ என்றும், பட்டாபிஷேகம்”  என்னும் வடமொழி உச்சரிப்பு “ (பட்டா)பிசேகம் “ என்றும் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

   ஆங்கிலப்பகுதி “ கடவுள் மன்னரைக் காப்பாற்றுவாராக “ என்னும் பொருள் அமைந்த ஆங்கிலத்தொடருடன் முடிகின்றது.

    மற்ற கடவுளர்க்கும் பிள்ளையார் என மக்களால் வழங்கப்படும் விநாயகருக்கும்  ஒரு வேறுபாடு உள்ளது. மக்கள் நடுவில் எளிமையாக எங்கு வேண்டுமென்றாலும், கூரையே இல்லாமலும் கோவில் எழுப்ப இடங்கொடுக்கும் கடவுள் விநாயகர்தான். அதே போல், மக்கள் அவரவர்க்குத் தோன்றியவாறு புதுமையான பெயரிட்டு அழைக்கும் உரிமையும் பிள்ளையார்மேல்தான் உண்டு. விநாயக சதுர்த்தியின் போது, வெவ்வேறு வடிவக்காட்சிகளில் பிள்ளையார் சிலைகளை அமைப்பதைப்பார்க்கிறோம். அதேபோல், பல்வேறு பெயர்களையும் பிள்ளையாருக்குச் சூட்டிமகிழ்கிறார்கள்.
   மேலே கண்ட அலங்கியம் விநாயகர் “சக்கரவர்த்தி விநாயகர்என்னும் பெயரில் இங்கிலாந்துச்சக்கரவர்த்தி ஜார்ஜ் மன்னரை நினைவூட்டுகிறார்.

   இனி, கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா பற்றிச் சில செய்திகளைக்குறிப்பிட வேண்டியுள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், லண்டனில் “வெஸ்ட் மினிஸ்டர் அப்பே என்னும் வளாகத்தில் 1911-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முடிசூட்டிக்கொண்டார். இந்தியா போன்ற சில நாடுகள் இங்கிலாந்துச் சக்கரவர்த்தியின் ஆளுகைக்கீழ் இருந்தமையால், இந்தியச் சக்கரவர்த்தி என்னும் நிலையை வெளிப்படுத்திக்கொள்ள அவர் தில்லி அரசர்கள் நடத்திவந்த “தர்பார்”  மரபுப்படி, தில்லியில் மீண்டும் முடி சூட்டும் விழாவினை நடத்த விருப்பங்கொண்டு, விழா தில்லியில் காரனேஷன்பூங்காவில் நடத்தப்பட்டது. விழாவில் மேரி அரசியாரும் கலந்துகொண்டார். இதில் சிறப்பு என்னவெனில், இங்கிலாந்தில் சூடிய முடியை இங்கிலாந்தைவிட்டு வெளியில் கொண்டு செல்ல உரிமையில்லை என்னும் காரணத்தால் இந்திய முடிசூட்டு விழாவுக்குத் தனிப்பட ஒரு முடி ( IMPERIAL CROWN OF INDIA )  செய்யப்பட்டது.


   ஆனால், அது இந்தியாவில் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அரச மரபினர்க்கென அணிகலன்கள் செய்து தரும் GARRARDS & CO. என்னும் வணிக நிறுவனம் செய்து தந்தது. விழா 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதியன்று நடைபெற்றது. மரபுப்படி, இந்திய சமஸ்தான மன்னர்கள் தர்பாரில் மன்னர்முன் நின்று வணங்கிச்சென்றனர். இவ்வாறு இங்கிலாந்துக்கு வெளியில் நடைபெற்ற விழாவில் நேரில் அரசர்,அரசியார் கலந்துகொண்ட விழா இது ஒன்றே எனக்கூறப்படுகிறது.

   நாட்டு விடுதலை  பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்பிருந்த காலகட்டமாகையால். ராஜமரியாதையைக்காட்டுவது வழக்கத்தில் இருந்திருக்கவேண்டும். இது போன்ற நினைவுச்சின்னங்கள் நாட்டில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன எனத்தெரிகிறது. சென்னையில் உள்ள கல்வெட்டு அறிஞரான சு.இராசகோபால் அவர்கள் கொடுத்த சில செய்திகளாவன:
         மதுரை அருகே திருவாதவூரில், மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசியார் மேரி இருவரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு விளக்குத்தூண் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நகரத்தார் ஊரான கோட்டையூரில், ஒரு வீட்டு நுழைவாயில் வளைவுகளில் இங்கிலாந்து அரசர் மற்றும் அரசியரின் சுதை உருவங்களும், வீட்டினுள் வண்ணப்படங்களும் காணப்படுகின்றன.

         புதுமையான பெயரில் பிள்ளையார் கோவில் எழுப்பப்படுவது உண்டு. அவ்வகையில், சென்னையில் உள்ள அறுபடை முருகன் கோவிலின் நடுவில், அமெரிக்கா வாழ் நகரத்தார் எழுப்பிய நியூயார்க் பிள்ளையார் “ கோவில் அமைந்துள்ளது.

   மேற்படி அலங்கியம் விநாயகர் கோவில் கல்வெட்டு, தமிழகத்தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்டு 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற “திருப்பூர் மாவட்டக்கல்வெட்டுகள்”  நூலில் தொகுக்கப்பட்டிருப்பினும், அலங்கியம் ஊர் மக்கள் தம் ஊரில் இருக்கும் கல்வெட்டினை அறியாதிருக்கலாம். அறிந்திருப்பவர்களிலும் பலருக்கு அதன் வரலாற்றுப்பின்னணியும், செய்தியும் தெரியாதிருக்கலாம். பண்டைய அரசியல், வரலாறு, சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிய முதன்மைச்சான்றுகளாக அமையும் கல்வெட்டுகளின்”  செய்திகள் மக்களை எட்டவேண்டும் என்பதற்காகவே இக்கல்வெட்டுச்செய்தி வெளியிடப்பெறுகிறது.

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.



 









கோட்டமங்கலத்தில் வரலாற்றுச்சின்னம் – வீரக்கம்பம்

கோட்டமங்கலத்தில் வரலாற்றுச்சின்னம் வீரக்கம்பம்

                                                       து.சுந்தரம், கோவை.







         நடுகல் வழிபாடு, தமிழகத்தில் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது. வீரச்செயல் புரிந்து இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் எடுத்து, அதில் அவனுடைய உருவத்தைச்சிற்பமாக வடித்து, மாலை அணிவித்துப் படையல் இட்டு வழிபடுவது மரபு.  நடுகற்களில் காணப்படும் வீரர்கள், தங்கள் கிராமங்களில் கால்நடைகளைக் காவல் காக்கும் கடமையில் ஈடுபட்டிருக்கும்போது, கால் நடைகளைத்தாக்க வருகின்ற புலி, கரடி, பன்றி ஆகிய விலங்குகளை எதிர்த்துப் போரிடும்போது, அவ்விலங்குகளைக் கொன்ற பின்னர் அவர்களும் இறக்க நேரிடும். அவ்வாறு இறந்துபடும் வீரர்களுக்கு நினைவுச்சின்னமாக வீரக்கல் எனப்படும் நடுகல் எடுக்கப்பட்டது. இதேபோல், ஒரு கிராமத்தின் ஒரு குழுவைச்சேர்ந்த மக்களின் கால் நடைகளை, மற்றொரு ஊரின் குழுவினர் (வீரர்கள்) போரிட்டுக் கவர்ந்து செல்வதும், அவற்றை மீட்கும் முயற்சியாகப் போரிடுவதும் தொறுப்பூசல் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. தொறுப்பூசலில் இறந்துபடும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் தமிழகத்தில் நிறையக்காணப்படுகின்றன.

      சில நடுகற்களில், வீரனுடைய மனைவியும் சிற்பமாகக் காட்டப்படுவதுண்டு. வீரனுடைய மனைவி, தன் கணவனின் இறப்பைத்தொடர்ந்து அவளும் தீயில் பாய்ந்து மாண்டு போவதையே இது குறிக்கும். இத்தகைய கல், மாசதிக்கல் எனப்படும். பெரும்பாலும் ஒற்றைக் கல்லிலேயே இச்சிற்பங்கள் வடிக்கப்படும். சில ந்டுகற்களில், மூன்று அடுக்குகளாகச் சிற்பங்கள் செதுக்கியிருப்பார்கள். முதல் அடுக்கில், வீரன் விலங்கோடு போரிடும் காட்சியும், இரண்டாவது அடுக்கில், உடன்கட்டை ஏறி உயிர் நீத்த வீரனின் ம்னைவி சொர்க்கம் போவதுபோன்ற காட்சியும், மூன்றாவது அடுக்கில், வீரன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற காட்சியும் காணப்படும். (வீரன் சிவலோகம் அடைந்தான் என்பதன் குறியீடு).

      மிகவும் அரிதாக, நான்கு பக்கங்களுடைய தூண் வடிவில் அடுக்குநடுகல் சிற்பமும் காணப்படுவதுண்டு. அவ்வகை தூண் நடுகல் சிற்பம் ஒன்று, திருப்பூர்-உடுமலைச் சாலையில், குடிமங்கலத்தை அடுத்துள்ள கோட்டமங்கலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  தஞ்சையில் இயங்கும் தமிழகத்தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களான, விழுப்புரம் சி.வீரராகவன் மங்கையர்க்கரசி, கோவை து.சுந்தரம்  ஆகியோர் உடுமலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்தத் தூண் நடுகல்லைக்கண்டறிந்தனர். கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோயிலை ஒட்டியுள்ள ஊர்ப்பகுதியில் இந்தத் தூண் நடுகல் காணப்படுகிறது. ஊர் மக்கள் இதை “ மாலக்கோயில் “ என அழைக்கின்றனர். ஏறத்தாழ, 8 அடி உயரமும், 2 அடி அகலமும், 1 ¼ அடி கனமும் கொண்டு பிரமாண்டமாக நிற்கும் இந்த அடுக்கு நடுகல் தூணில் 9 அடுக்குகள் உள்ளன. இவ்வடுக்குகள், போட்டோக்களுக்கு சட்டம் அமைத்ததுபோல் நேர்த்தியாகச் செவ்வக வடிவில் பிரிக்கபட்டுள்ளன. தூணின் நான்கு முகங்களிலும் உள்ள எட்டு விளிம்புகளும் புடைப்பு அமைப்பில் வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. தூணின் உச்சி, ஒரு கோயில் கருவறை விமானம்போல் அழகுற அமைக்கப்பட்டுத் தெய்வச்சிற்பங்களைக் கொண்டுள்ளன.
      தூணுக்கு இருபுறமும், இரண்டு தனிக்கல்லில் அரசர்களின் உருவில் சிற்பங்கள். அரசர்களின் அருகில் அவர்களது மனைவியர் உருவங்கள்.  இவையும் நடுகல் சிற்பங்களே.  இவர்கள், இப்பகுதியிலிருந்த பாளையப்பட்டு  நாயக்கர்களாக இருக்கக்கூடும்.

     தூணின் நான்கு முகங்களில் மைய முகத்தில், உச்சியில் நடராசர் சிற்பம், அதன் கீழே உள்ள அடுக்குகளில் வியாக்கிரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) சிவனை வழிபடும் சிற்பம், கஜலட்சுமி, குழலூதும் கண்ணன், சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் சிற்பம், பல்லக்கேறி வீரர்கள் செல்லும் காட்சியில் சிற்பம் போன்ற பல சிற்பங்கள். தூணின் மற்ற முகங்களில், யானை,குதிரை ஆகியவற்றின் மீது வீரர்கள் அமர்ந்து போரிடும் காட்சி, வில்லேந்தி வீரர்கள் போரிடும் காட்சி ஆகிய பல்வேறு சிற்பங்கள் உள்ளன. இவை தவிர வரிசையாக வீரர்கள் மற்றும் பெண்கள் (உடன்கட்டை ஏறிய மனைவியர்களாக இருக்கக்கூடும்) ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பெண்கள் வில்லேந்திப் போரிடும் காட்சியில் அமைந்த சிற்பங்கள் என,  நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் தூணில் காணப்படுவதை ஆய்ந்து நோக்கும்போது, ஒரு போர்ச்சூழலில் இறந்து போன பெரும் வீரர்களுக்கும், அவர் மனைவிமார்க்கும், பாளையப்பட்டுக் குறு நில மன்னர் நிலையில் இருந்தவர்க்கும் எடுக்கப்பட்ட மிகப்பெரிய  நினைவுக்கல்லாக இதைக் கருத வேண்டும். தூணின் உயரம், பெரும் வடிவம், நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சிற்பங்கள், சிற்பங்களின்   நேர்த்தியான வேலைப்பாடுகள், அதன் ஒட்டுமொத்த பிரமாண்டம், பக்கத்திலே உள்ள வேலைப்பாடுகள் மிகுந்த தனிச் சிற்பங்கள் ஆகியவற்றை நோக்கும்போது மிகவும் முக்கியமான நிகழ்வு கருதி இந்த நினைவுத்தூண் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்பதையும், நினைவுத்தூண் எழுப்பியவரும் ஒரு முக்கியத்துவம் நிறைந்த பெரிய பதவியில் இருந்த தலைவராகத்தான் இருந்திருக்கவேண்டும் எனவும் கருதலாம். இக்கருத்தை, இவ்வூர்ப் பெரியவர்கள் கூறும்-மரபு வழியில் காப்பாற்றி வைத்திருக்கும்-செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
 
      நினைவுத்தூண் அமைந்துள்ள இந்த மாலக்கோயிலில் வழிபாடு நடத்துபவர்கள் இங்குள்ள “ பாலவாரு “  குலத்தவர். இவர்கள், ராஜ கம்பள நாயக்கர் வழி வந்தவர்கள்.
ராஜ கம்பள நாயக்கர் மொத்தம் ஒன்பது வகையினர் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்குக் குலதெய்வம் வல்லக்கொண்டீசுவரி என்னும் வல்லக்கொண்டம்மன் ஆகும். இந்தப் பாலவாரு குலத்தினர் திருமணச் சம்பந்தம் வைத்திருப்பது சில்லண்ணவார் குலத்தில். இந்தப் பாலவார் மக்கள், இந்த மாலக்கோயிலில் வாரத்துக்கு இருமுறை திங்கள், வெள்ளி ஆகிய நாள்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். ஆண்டுக்கொருமுறை, மாசி மாதம் மகாசிவராத்திரியன்று இரவு 12 மணியளவில் வல்லக்கொண்டம்மனுக்குத் திருக்கல்யாணம்  நடத்தி, அன்னதானம் செய்து சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். குலதெய்வப்பாடல்களாக இங்குள்ள மூதாட்டிகள் பாடும் நாட்டுப்பாடல்களில் போர் பற்றிய செய்திகளும், பாளையப்பட்டுத் தலைவர்களின் பல்வேறு பெயர்களும் காணப்படுவதாகச் சொல்கிறார்கள்.

      மேலே கூறப்பட்ட மரபு சார்ந்த செய்திகளை உறுதிப்படுத்துவதுபோல், தூணின் மைய முகத்தில் அமைந்துள்ள புடைப்பு விளிம்புகளில், கல்வெட்டு எழுத்துகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் மூவரும், இந்த எழுத்துகளை ஆய்ந்து படித்து அதில் உள்ள செய்திகளை அறிந்தனர்.
கல்வெட்டு வரிகள் கீழே உள்ளவாறு படிக்கப்பட்டன.

                      சிறீமுக வருடம் ஆடி மாதம் 8 தேதி ஏகாதெசி
              பெற்ற திங்கள் கிளமை னாள்
              பாலவாரில் காம நாயக்கர் மகன்
              வல்லைக்கொண்டம நாயக்கர் உண்டாக்கின
              வீரகம்பம்.


தமிழ் வருடமான ஸ்ரீமுக ஆண்டில், ஆடி மாதம் எட்டாம் தேதி ஏகாதசி நாளன்று, பாலவார் குலத்தைச்சேர்ந்த காம நாயக்கர் மகன் வல்லக்கொண்டம நாயக்கர் என்பார் இந்த நினைவுச்சின்னமான வீரகம்பத்தை நிறுவினார் என்பது கல்வெட்டுச்செய்தி.

      கல்வெட்டில் வரும் “ பாலவார் “ என்னும் சொல், இந்த நினைவுச்சின்னத்தை வழிபட்டு வரும் இவ்வூர் பாலவார் மக்களே என்று உறுதி செய்கிறது. வீரகம்பம் என்பது வீரக்கல் அல்லது நடுகல், தூண் ( கம்பம் ) வடிவில் எழுப்பப்பட்டதை உறுதி செய்கிறது. ஸ்ரீமுக ஆண்டு, கி.பி. 1693, கி.பி. 1753 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் பொருந்தி வரும் ஆண்டாகும். கி.பி. 1693-ஆம் ஆண்டு, பாளையக்கார நாயக்கர்களின் காலத்தை ஒட்டிவருவதால் இந்த வீரகம்பமானது, பாலவார் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த வல்லைக்கொண்டம நாயக்கர் என்பவரால் எடுப்பிக்கப்பட்டது எனக்கொள்ளலாம். இவர் பெயரும், இக்குலத்தவரின் குலதெய்வமான வல்லக்கொண்டம்மனுடன் இயைந்து போவதைப்பார்க்கிறோம். மேலும், கி.பி. 1693-ஆம் ஆண்டுக்காலகட்டத்தில் கம்மவாரு, கொல்லவாரு ஆகிய பாளையக்கார நாயக்கர்கள் மதுரை நாயக்க அரசர்களுக்குக் கீழ்ப்படிந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதைக்கொண்டு இக்கல்வெட்டு மற்றும் இந்த வீரகம்பத்தின் காலம் கி.பி. 1693 எனக்கொள்வதில் தவறில்லை.

      குலதெய்வ வழிபாடு நடத்துவதன் மூலம், பாலவார் குல மக்கள் இந்த வரலாற்றுச் சிறப்புடைய தூண் நடுகல்லைப் பாதுகாத்து வருகிறார்கள் என்பதோடு தொடர்ந்து பாதுகாப்பார்கள் என்பது திண்ணம்.









து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
















வெள்ளலூர் தனிக்கல்வெட்டு

வெள்ளலூர் தனிக்கல்வெட்டு
                                                       து.சுந்தரம், கோவை.


                                             

         கொங்கு நாட்டில் பண்டைக்காலத்தில் கால் நடை வளர்ப்பே மேலோங்கியிருந்தது. “ ஆகெழு கொங்கு “ என்பது சங்க இலக்கியம் ஒன்றில் பயில்கின்ற தொடர். மலைப்பகுதியிலும், சமவெளியிலும் கால் நடைகளை மேய்த்து வளர்த்தனர். கொங்குப்பகுதியில் வழங்கும் “பட்டி”, “தொழுஆகிய சொற்கள் கால் நடை வளர்ப்பை ஒட்டி எழுந்தவையாகும். சோழர்களின் ஆட்சி கொங்குச்சோழர்களின் மூலம் நடைபெறத்தொடங்கியது முதலே வேளாண்மை முதன்மை பெற்றது. இருப்பினும், கால் நடை வளர்ப்பு என்பது கொங்கு மக்களின் பிரிக்கமுடியா அங்கம். கால் நடை வளர்ப்புக்குப் பொறுப்பேற்றவர்கள் இடையர்கள். “யாதவர்என வழங்கப்பட்டவர்களும் இவரே. கல்வெட்டுகளில் இவர்கள் “கோன்” , “கோனார்எனக் குறிக்கப்படுகிறார்கள்.

         கோவில்களில், நந்தா விளக்கு எரிக்கவும், அமுதுபடி (நைவேத்தியம்) மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளுக்காகவும்  தேவைப்படும் நெய் இந்த இடையர்களிடமிருந்தே பெறப்பட்டது. இது கல்வெட்டுகள் சொல்லும் செய்தி. சந்தியா தீபம் என்னும் கோவில் விளக்கு ஒன்றுக்குத் தொண்ணூறு ஆடுகள் என்ற கணக்கில் நிவந்தம் அளிக்கப்பட்டது. இதிலிருந்து, கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் இடையர்களின் செல்வாக்கு ஆகியவை பற்றி உணர்ந்துகொள்ளலாம். அத்தகு இடையர்களில் ஒருவர் கோவிலுக்குக் கொடை அளித்த செய்தியைக் கொண்டிருக்கும் கல்வெட்டு ஒன்று கோவை வெள்ளலூரில் இருக்கும் தேனீசுவரர் கோவிலில்  கண்டறியப்பட்டுள்ளது.

         கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு, கரு நிறக்கல்லைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான இதன் உச்சிப்பகுதி மட்டும் ஒரு மைல் கல்லின் வளைவோடு காணப்படுகிறது. இப்பகுதியில், நடுவில் ஒரு நந்தியும், நந்திக்கு மேற்பகுதியில் திரிசூலம் ஒன்றும் புடைப்புருவமாகச் செதுக்கப்பட்டுள்ளன. நந்திக்கு இடப்புறமும் வலப்புறமும் சூரிய, சந்திரர்களின் புடைப்புருவங்கள். சூரிய, சந்திரர்கள் உள்ளவரையிலும் கோவிலுக்குச் செய்த தன்மம் (கொடை) தடையின்றி நடக்கவேண்டும் என்பதன் குறியீடாகவே சூரிய,சந்திரர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழே பட்டையாக ஒரு புடைப்புச் செதுக்கம். இதன் கீழே பதினேழு வரிகளில் கல்வெட்டு. கல்வெட்டு பிள்ளையார் சுழியுடன் தொடங்குகிறது.(முதல் வரி). இரண்டாம் வரியில் “சிவமயம்”  என்று உள்ளது.

வெள்ளலூர் மஜார் இடையர்பாளையத்தைச் சேர்ந்த குமரக்கோனான் என்பவரின் மனைவியான (கல்வெட்டு பெண்ஜாதிஎனக்கூறுகிறது) மருதக்காள் என்பவர் விசுவநாதர், விசாலாட்சி ஆகிய கடவுளர்களின் சன்னிதிகளை அமைத்து, அறுபத்துமூன்று நாயன்மார் சிலைகளை எழுந்தருளச்செய்து (பிரதிஷ்டை செய்து), நாயன்மாருக்கென மண்டபமும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமன்றி, வெள்ளலூர், சிங்கனூர் ( தற்போதைய சிங்கநல்லூர் கல்வெட்டில் சிங்கனூர் எனக் குறிப்பிடப்படுகிறது ), மற்றும் செட்டிபாளையம் ஆகிய ஊர்களில் இவருக்குப் பாகமாக வந்த நிலங்களையும் கோவிலுக்கே கொடையாக அளித்துள்ளார். இந்த நிலங்களின் மதிப்பு, கொடை வழங்கிய காலத்தில் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு பெறுமானம் உடையதாக இருந்தது.

         கல்வெட்டின் காலம் கல்வெட்டின் தொடக்கத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது. அக்கால வழக்கப்படி கலியுக ஆண்டும், சாலிவாகன ஆண்டும் (சக ஆண்டே சாலிவாகன ஆண்டென்றும் வழங்கப்பெறும்) குறிக்கப்படுகின்றன. ஆங்கில ஆண்டான கிறித்து பிறப்புக்கு 3101 ஆண்டுகளுக்கு முன்பே கலியுக ஆண்டுப் பிறப்பு அமைந்துள்ளதால், கல்வெட்டு குறிப்பிடும் கலியுக ஆண்டான 5022-இலிருந்து 3101-ஐக் கழிக்கக் கிடைப்பது கி.பி. 1921 . அதேபோல், சக ஆண்டு, கி.பி. 78-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குவதால், கல்வெட்டு குறிப்பிடும் சக ஆண்டான 1843-உடன் 78-ஐக் கூட்டக் கிடைப்பது கி.பி. 1921. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் கலியாண்டும், சகவாண்டும் கி.பி. ஆண்டோடு சரியாகப் பொருந்துகிறது. கல்வெட்டில் குறிக்கப்படும் தமிழ் ஆண்டான துன்மதி ஆண்டும் கி.பி. 1921-ஆம் ஆண்டுடன் பொருந்திவருகிறது. சரியாக 11.7.1921 திங்கள் கிழமையன்று இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. காலத்தைத் தெளிவாகக் காட்டும் வகையில் பழைய கல்வெட்டுகளிலும், பத்திரங்களிலும் கலியாண்டும், சகவாண்டும், தமிழ் (அறுபது ஆண்டுகள் கொண்ட வட்டம்) ஆண்டும் குறிக்கப்படுவதைப் பார்க்கிறோம். மேலும் ஆனி மாதம் 28-ஆம் நாள், சோமவாரம், சிம்ம லக்கினம், அஸ்த நட்சத்திரம் ஆகிய கோள் நிலைக்கிறிப்புகளும் கல்வெட்டில் உள்ளன. அஸ்த நட்சத்திரம் என்னும் குறிப்பு, கல்வெட்டு எழுத்துகளைப் பொறிக்கும்போது விடுபட்டுப்பொனதால், ஐந்தாம் வரிக்கும் ஆறாம் வரிக்கும் இடையில் செருகலாகப் பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். 

கல்வெட்டின் பாடம்:

1                 உ
2          சிவமயம்
3 சாலியவாகன சகாப்தம் - 1843 - கலியு
4 காதி 5022 - துன்மதி வரு - ஆனி மீ
5 28 தேதி சோமவாரம் சிம்மலக்
          ந.அஸ்தம்
6 கினம் வெள்ளலூர் மஜார் இடைய
7 பாளையம் குமரக்கோனான்
8 பெண்ஜாதி மருதக்காள் வி
9 ஸ்வநாத விஸாலாக்ஷி அம்மன் 
10 அறுபத்திமூவர் நாயன்மார்க
11 ளுடன் மண்டபமும் நூதன
12 பிரதிஷ்டை உபயம்
13 வெள்ளலூர்-சிங்கனூர் 
14 செட்டிபாளையம் இந்த 
15 மூன்று ஊரில் மருதக்கா 
16 ளுக்கு பாகம் வந்த பூமி
17 2500 ரூ பொரும் பூமி உபயம்


         மேற்படி கல்வெட்டின் காலத்தில், வெள்ளலூர், செட்டிபாளையம், சிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் “கோனார்என்னும் இடையர்கள் மிகுதியும் இருந்தமையும், இக்குலத்தவரில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தமையும், பெண்கள் தம் விருப்பத்துடன் தம் சொத்துக்களை அறச்செயல்களுக்குப் பயன்படுத்தியமையும் கல்வெட்டுச் செய்தியின் வாயிலாக அறிகிறோம். மருதக்காள் போலக் கொடையுள்ளம் கொண்ட செல்வர்கள், தற்போது சிதைவு கண்டு வரும் கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்தால், பழங்கோவில்கள் பல புத்துயிர் பெறும்.

----------------------------------------------------------
து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.