மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியும் ஆனையூரும்


         இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டுவிழா பற்றித் தற்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அவரோடு தொடர்புடைய ஒரு செய்தியை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோவையிலிருந்து திண்டுக்கல் வழியாக உசிலம்பட்டிக்குப் பயணம்   சென்றோம். செல்லும் வழியில் ஆனையூர் என்றொரு சிற்றூரில் பழமையானதொரு கோயில் உள்ளதென்றும், கோயிலில் கல்வெட்டுகள் உள்ளனவென்றும் அறிந்து ஆனையூர் சென்றோம்.

ஆனையூர்
ஆனையூர் ஒரு சிறிய கிராமம். மதுரைப் பகுதியில் பொதுவாக ஒரு சிற்றூர் வெளிப்படுத்தும் எளிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. நகரத்தின் வாடை சிறிதுமில்லை. நிலமும், மண்ணும், நிலம் சார்ந்த கால்நடைகளும், எளிமையான சிறு வீடுகளுமே காட்சிப்பொருள்கள்.

ஐராவதேசுவரர் கோயில்
இததகைய கிராமச் சூழலில் இங்கே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐராவதேசுவரர் கோயில் அமைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட சுற்றுச்சுவருடன் கோயில் தோற்றமளித்தது. கோயிலின் நுழைவு வாயில் ஒரு முகப்பு மண்டபமாக அமைகிறது. இந்த மண்டபம் பிற்காலக் கட்டுமான அமைப்புடன் இருந்தாலும் அழகான தூண்களைக்கொண்டுள்ளது. அடிப்புறத்தில் சதுரம், சதுரத்தில் நாகபந்தம், உச்சியில் போதிகை, இடைப்பட்ட பகுதியில் (கால் என்று பெயர்) நாகபந்தத்தை அடுத்து வேறு சதுரங்களோ எண்பட்டை அமைப்போ இன்றி நெடியதொரு உருளையும் உருளையில் வரிவரியான வேலைப்பாடும் கொண்ட தூண்கள். உள்ளே, மகா மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அமைந்துள்ளது. அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய இடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மண்டபங்கள் இரண்டும் கோயிலின் பழமையை நன்கு எடுத்துக்காட்டுகின்றன.

மூத்ததேவி (ஜேஷ்டாதேவி)
கோயிலின் உட்சுற்றில் ஓரிடத்தில் ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவியின் சிற்பம் அழகுறக் காட்சி தருகின்றது. தேவி தன் இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையிலும், இருபுறமும் உள்ள காளைமுக மாந்தனும், மாந்தியும் தம் கால்களில் ஒன்றைக் குத்திட்டு மடக்கியும், மற்றதைத் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறார்கள். மூத்ததேவியின் சிற்பத்தை அஞ்சனா தேவியாகவும், மாந்தனின் சிற்பத்தை ஆஞ்சனேயனாகவும் எண்ணி, அவ்வாறே எழுதியும் வைத்துள்ள அறியாமையை என்னென்பது? மாந்தியின் நிலை என்ன?

                        ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவி


                        கோயிலின் முகப்புத்தோற்றம்


                                                                                 முகமண்டபத்தூண்



                                                                                       மகாமண்டபம்




கோயிலுக்கு வெளியே
கோயிலுக்கு வெளிப்புறத்தில்மேடையொன்றின்மீது பிள்ளையார் சிற்பமும், அதன் அருகே பழஞ்சிற்பங்களின் தோற்றத்தில் இரண்டு நந்தி சிற்பங்களும் காணப்பட்டன. இவையெல்லாம் உடைந்துபோன சிற்பங்கள். எனவே, கோயிலின் உட்புறத்தில் வைக்காமல் வெளியில் வைத்துள்ளனர் எனலாம். மற்றொரு நந்திச் சிற்பம் மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. இதுவும் உடைந்த நிலையில் உள்ளது. நாங்கள் பார்க்கும்போது, உயிரற்ற இந்த நந்தியின் அருகில் உயிருள்ள நந்தி ஒன்று அச்சிற்பத்தைப்போன்றே காட்சிக்கோணத்தில் படுத்திருந்தது ஓர் இனிய காட்சி.



நந்தியும் நந்தியும்


கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு சிதைந்த கற்கட்டுமானம் காணப்படுகிறது. ஒரு கருவறை அல்லது அர்த்தமண்டபம் போன்ற தோற்றத்துடனும், கட்டுமானக்கூறுகளுடனும் இருப்பதை நோக்குமிடத்து, இதுவும் இடைக்காலத்தைச் (10/11 நூற்றாண்டு) சேர்ந்தது எனக்கருதலாம். கட்டுமானத்தின் அதிட்டானம் காணப்படவில்லை. நிலத்தின்கீழ் புதைந்துள்ளது. சுவர்ப்பகுதியில், தூண்கள், கோட்டம் (கோஷ்டம்), கும்ப பஞ்சரத்தின் எச்சம் ஆகிய கூறுகள் சோழர் பாணியில் அமைந்துள்ளன. கோட்டத்தில் சிற்பம் ஏதுமில்லை. தூண்கள், உச்சியிலிருந்து பார்க்கும்போது போதிகை, பலகை, தாமரை (பதுமம்), குடம், கலசம் ஆகிய கூறுகளுடன் காணப்படுகின்றன. தூண்களுக்கு மேலே, கர்ணகூடுகளோடு கூடிய உத்தரம் என்னும் பகுதியும் காணப்படுகிறது. 

சிதைந்த கட்டுமானம்


மற்றோரிடத்தில், கோயிலைப் புதுப்பிக்கும்போது களைந்தெறிந்த பழைய தூண்ககளும் இருவரிக் கல்வெட்டுடன் கூடிய ஒரு பாறைத்துண்டும் காணப்பட்டன. கோயில் இறைவற்குப் பன்னிரண்டரை பொற்காசுகள் கொடையாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு வரிகள் கூறுகின்றன.

                                  பழந்தூண்கள்


                       கல்வெட்டுடன் கூடிய பாறைத்துண்டு
                          கல்வெட்டு வரிகள்
                     ...பன்னிரண்டரையுங்கொண்ட...
                     .... இக்காசு பன்னிரண்டரை..


கல்வெட்டுகள்
தஞ்சைத் தமிழ்ப்பல்கலையைச் சேர்ந்த முனைவர். பா.ஜெயக்குமார், “பாண்டிநாட்டின் ஆனையூர் என்னும் நூலில் இக்கோயிலில் உள்ள இருபதுக்கும் மேலுள்ள கல்வெட்டுகளைக் குறிப்பிட்டு அவற்றின் பாடங்களையும் தந்துள்ளார். ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே வட்டெழுத்தில் இருப்பதாக அவர் நூலில் குறித்திருந்தாலும், நான் நேரில் பார்த்தவரையில் மொத்தம் நான்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. அவ்ற்றில் ஒன்று மட்டும் முதலாம் இராசராசனின் காலத்தது. மற்ற மூன்றும் சோழன் தலைகொண்ட வீரபாண்டியனுடையவை.  இந்த வீரபாண்டியனின் ஆட்சிக்காலம் கி.பி. 946-966 ஆகும். ஒரு சோழனை இவன் வெற்றிகொண்டிருக்கலாம் என்றும், தோற்கடிக்கப்பட்ட சோழ அரசன் யார் என்பது தெளிவாகவில்லை என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், இப்பாண்டியனின் தலைகொண்ட சோழ இளவரசன் இராசராசனின் தமையனான இரண்டாம் ஆதித்தன் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். 

                                        சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் கல்வெட்டுகள்




                      முதலாம் இராசராசனின் கல்வெட்டு - 1


               முதலாம் இராசராசனின் கல்வெட்டு - 1-இன் தொடர்ச்சி


கல்வெட்டுச் செய்திகள்
வீரபாண்டியனின் கல்வெட்டுகளில், ஆனையூர், தென்கல்லக நாட்டைச் சேர்ந்த திருக்குறுமுள்ளூர்  எனக்குறிப்பிடப்படுகிறது. இது ஒரு தேவதானம் என்னும் குறிப்பும் உள்ளது. தேவதானம் என்பது கோயிலுக்கு இறையிலியாக அரசனால் அளிக்கப்பட்ட ஊராகும். இராசராசனின் வட்டெழுத்துக்கல்வெட்டிலும் திருக்குறுமுள்ளூர் என்னும் குறிப்பே உள்ளது. இராசராசனின் கல்வெட்டில் கோயில் இறைவர்க்கு இரவும் பகலும் முட்டாமல் (தடையில்லாமல்) நந்தாவிளக்கெரிக்கக் கொடையளிக்கப்பட்ட செய்தி உள்ளது. வீரபாண்டியனின் கல்வெட்டுகளிலும் விளக்கெரிக்கக் கொடையளிக்கப்பட்ட செய்தியே காணப்படுகிறது. வீரபாண்டியனின் ஒரு தமிழ் எழுத்துக் கல்வெட்டில் நமக்கு யிராச்சியத்தை தந்தருளின நாயனாற்கு என்று வருவதைக்குறிப்பிட்டு மேற்படி நூலாசிரியர், இக்கோயில் இறைவனின் அருளால் பாண்டியர் ஆட்சியை மீண்டும் பெற்றதாகக் கூறுகிறார். ஆனையூர், இடைக்காலத்திலிருந்து விஜயநகர, நாயக்கர் காலங்கள் வரை முதன்மையான ஒரு ஊராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இன்றோ அது மிகச் சிறிய ஓர் ஊர்.
வட்டெழுத்துக் கல்வெட்டொன்றின் ஒரு பகுதி- படமும் பாடமும்
                                    படம்

பாடம் :
                                                     வரி 1            ண்டு தென்கல்லக
                                                               2            நாட்டு தேவதானமா
                                                               3            ந திருக்குறுமு
                                                                4           ள்ளூர் தேவர்க்கு
                                                                5           அளற்று நாட்டு
                                                                6           கொளத்தூர் மூர்க
                                                                7            விச்சாதிர பல்
                                                                8            லவரையன் ஆன
                                                                9             சாத்தன்

 இசைப்பேரரசியும் ஆனையூரும்
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட செய்தி இப்போது. ஆனையூரில் சிலரிடம் பேசும்போது, அவர்கள் சொன்ன செய்தி மிகவும் வியப்பை அளித்தது. இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் இந்த ஆனையூரில் பிறந்து வளர்ந்தவர் என்றும், அவர் தம் இசை அரங்கேற்றத்தை இந்த ஊரில்தான் நிகழ்த்தினார் என்றும் கேள்விப்பட்ட செய்தி உண்மையிலேயே வியப்பளிக்கும் செய்தி என்பதில் ஐயமில்லை.




து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

கார்வழி அழகுகுலக் கொங்குவேளாளர்கள்

முன்னுரை

         அண்மையில் கோவை-மலுமிச்சம்பட்டிப் பகுதியில் வாழ்ந்துவருகின்ற கொங்குவேளாளர்களில் அழகு குலத்தைச்சேர்ந்த சிலர், தங்களது குலதெய்வக்கோயில் எங்குள்ளது என்னும் விவரங்கள் தெரியாமல் இருந்துள்ளனர்.  அவர்கள், தம் குலதெய்வக்கோயில் பற்றி அறிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொண்டு, கோயிலின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டனர். அவர்களில், மூவர் ஒரு குழுவாகச் செயல்பட்டு மேலதிகமான செய்திகள் எவையேனும் கிடைக்க வாய்ப்புள்ளதா என்னும் தேடலில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுக்கு நாமக்கல்-வையப்பமலையைச் சேர்ந்த பிரபு என்னும் இளைஞருடன் தொடர்பு கிடைதுள்ளது. அழகு குலத்தைச் சேர்ந்த பிரபு என்னும் இவ்விளைஞர், அழகு குலம் பற்றிய சான்றுகளைத்தேடிக்கண்டறிந்துள்ளார்.

         இந்நிலையில், மலுமிச்சம்பட்டி மூவர் அணி, கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் பழனிசாமி அவர்களிடம் தம் கோயிலைப்பற்றிக் கூறி, அக்கோயிலில் உள்ள இறைவியின் சிற்பத்திருமேனியின் பின்புறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றைப்படித்துச் செய்திகள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புவதாகவும் கூறியுள்ளது. பழனிசாமி அவர்கள், இக்கட்டுரை ஆசிரியருடன் கல்வெட்டியல் பட்டயப்படிப்பு படித்த நண்பராகையால், அவருடைய ஏற்பாட்டின்படி, இவ்வனைவரும் சென்ற 17-07-2016 அன்று அழகு குலத்தாரின் கோயிலுக்குப் பயணப்பட்டோம்.

கோயில் இருப்பிடம்
          ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் அமைந்துள்ள சிவகிரியிலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் கார்வழி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. ஆயினும், கார்வழி இருப்பது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில். இக் கார்வழியில் அழகு குலத்தாரின் கோயிலான திருமிகு செல்லாண்டியம்மன்-அழகு நாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. கார்வழி அழகு குலக் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நல அறக்கட்டளை (பதிவு செய்யப்பட்ட ஒன்று) நிருவாகத்தில், கோயிலின் அன்றாட வழிபாடுகள், பராமரிப்பு, திருப்பணி ஆகியவை நடைபெறுகின்றன. மாதந்தோறும், பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் சிறப்புப் பூசையும் அன்னதானமும் நடைபெறுகின்றன. 










சிவகிரி சிவசமயபண்டித குரு மடம்
        அழகு குலத்தாரின் குலக்குரு சிவகிரியில் இருப்பதோடு அவரிடம் அழகு குலத்தார் பற்றிய சில ஆவணங்களும் இருப்பதால் முதலில் நாங்கள் சிவகிரி சென்றோம். அங்குள்ள மடம், ஸ்ரீமது சிவசமயபண்டித குருசுவாமிகள் மடம் என்னும் பெயரில் இயங்கிவருகின்றது.
மடத்து ஆவணங்கள்
அங்குள்ள சில ஆவணங்களைப் பார்வையிட்டோம். சில ஆவணங்கள் ஓலை ஆவணங்கள்; சில காகிதத்தாள் ஆவணங்கள். 12-06-32 எனத் தேதியிட்ட ஒரு காகித ஆவணத்தில், இருபத்தொரு குலத்தவர் பெயர்களும் அவர்தம் ஊர்ப்பெயர்களும் பேனா மையால் எழுதப்பட்டிருந்தன. அவற்றின் பட்டியல் கீழ்வருமாறு:
  
ஊர்ப்பெயர்கள்:
தலையநல்லூர்
காஞ்சிக்கோவில்
அவிநாசி
மோகவனூர்
படவேடு
மின்னாம்பள்ளி
பொடாரியூர்
செம்புமாதேவி
பெரியபுலியூர்
ஆரியூர்
மொளசி
பரமத்தி
தோளூர்
பில்லூர்
கார்வழி
காக்காவேரி
ஒடுவங்குரிச்சி


குலப்பெயர்கள்:
கூரை குலம்
கன்ன குலம்
செம்ப குலம்
பொருள்தந்த குலம்
மணிய குலம்
காடை குலம்
வெள்ளைய குலம்
ஆந்தை குலம்
வெண்டுவ குலம்
சோழிய வெள்ளாளர்
ஸ்ரீ கணக்கப்பிள்ளை
அளக குலம்

ஊர்ப்பெயர்கள் – ஒரு பார்வை
தலையநல்லூர் – சிவகிரியின் பழம்பெயர்; 13-ஆம் நூற்றாண்டு (கொங்குப்பாண்டியன்                    வீரபாண்டியன் காலம் கி.பி. 1274) முதல் கி.பி. 1830 வரை கல்வெட்டுகளில் தலைய நல்லூர் என்றே வழங்கியது.
காஞ்சிக்கோவில் – பழம்பெயர் காஞ்சிக்கூவல் (ஈரோடு மாவட்டம்)
அவிநாசி - (திருப்பூர் மாவட்டம்)
மோகவனூர் – தற்போது (நாமக்கல் மாவட்டம்) மோகனூர் என்றழைக்கப்படும் ஊராகலாம்.  மோகவனூர் மணிய குலம் என்று மடத்து ஆவணத்தில் உள்ளது. கோவை அருகே பனப்பட்டி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 1872-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றில் முகவனூர் மணிய குலம் என்னும் குறிப்பு வருவதை நோக்கின், முகவனூர்-மோகவனூர்-மோகனூர் ஆகிய மூன்று ஊர்களும் ஒன்றே என்னும் முடிவுக்கு வரலாம்.
மின்னாம்பள்ளி – கரூருக்கருகில் உள்ள ஊர்.
பொடாரியூர் – தற்போதைய பிடாரியூர் (பெருந்துறை வட்டம்) ஆகலாம். கொங்குச் சோழன் வீர்ராசேந்திரன் (கி.பி. 1225) காலத்திலேயே பூந்துறை நாட்டுப் பிடாரியூர் என வழங்கிய ஊர்; கி.பி. 1531-ஆம் ஆண்டு அச்சுதராயர் கல்வெட்டிலும் பூந்துறை நாட்டுப் பிடாரியூர் என்னும் பெயர் காணப்படுகிறது.
ஒடுவங்குரிச்சி – நாமக்கல் மாவட்டம்- இராசிபுரம் பகுதியில் உள்ள ஊர்.
ஆரியூர், பரமத்தி ஆகியவை கரூர் அருகே உள்ள ஊர்கள்.
மொளசி – திருச்செங்கோட்டுபகுதியில் உள்ள ஊர்.
செம்புமாதேவி – கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வழங்கிய செம்பியன் மாதேவி என்னும்
ஊர்ப்பெயர் இன்றும் ஏறத்தாழ அதே பெயரில் வழங்கிவருவது சிறப்பானது. ஆனால், தற்போது எங்குள்ளது என்று தெரியவில்லை.

குலப்பெயர்கள் – ஒரு பார்வை
கூரை குலம் – 18-ஆம் நூற்றாண்டுக்கல்வெட்டில் குறிப்புள்ளது.
கன்ன குலம் – மடத்து ஆவணத்தில் கன்ன குலம். கன்ன குலம் பற்றிய குறிப்பு, உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலக் கல்வெட்டுகளில் (கி.பி. 1500) வருகிறது.
செம்ப குலம் – செம்ப குலம் பற்றிய குறிப்பும், உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலக் கல்வெட்டுகளில் (கி.பி. 1500) வருகிறது.
பொருள் தந்த குலம் – மடத்து ஆவணத்தில் பொருள் தந்த குலம் என்று வரும் பெயர், பழைய கல்வெட்டுகளில் பொருளந்தை என்று குறிப்பிடப்படுகிறது. பொருளந்தை குலம் பற்றிய குறிப்பும், உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலக் கல்வெட்டுகளில் (கி.பி. 1500) வருகிறது.
மணிய குலம் – விஜய நகர அரசர் மல்லிகார்ஜுனர் ஆட்சியில் கி.பி. 1447-ஆம் ஆண்டுக்கல்வெட்டில் மணிய குலம் பற்றிய குறிப்பு வருகிறது. இக்கல்வெட்டு நத்தக்காடையூர் (பழம்பெயர் காரையூர்) கோவிலில் உள்ளது. கோவை அருகே பனப்பட்டி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 1872-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றிலும் முகவனூர் மணிய குலம் என்னும் குறிப்பு வருகிறது.
காடை குலம் – வள்ளியிறச்சல் கோயில் கல்வெட்டில் (காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு) சிற்றிலோட்டில் (தற்போதைய சித்தோடு) காடை குல வெள்ளாளன் பற்றிய குறிப்பு உள்ளது. கீரனூர் கல்வெட்டிலும் கி.பி. 1537-ஆம் ஆண்டைச் சேர்ந்த
விஜய நகர அரசர் அச்சுதராயர் ஆட்சிக்காலத்தில் காடை குலம் குறிக்கப்படுகிறது.
வெள்ளைய குலம் – விஜயமங்கலம் நாகீசுவரர் கோயில் கல்வெட்டில் வெள்ளைகள்
பற்றிய குறிப்பு உள்ளது. காலம் கி.பி. 1122. அரசன் இரண்டாம் வீரசோழன்.
ஆந்தை குலம் – வெள்ளகோவில் கல்வெட்டில் ஆந்தை குலம் பற்றிய குறிப்பு.     
காலம்-கி.பி. 1832
வெண்டுவ குலம் – கத்தாங்கண்ணிக் கல்வெட்டில் குறிப்புள்ளது. காலம் – கி.பி. 1888.
சோழிய வெள்ளாளர் குலம் – கல்வெட்டுக் குறிப்பு இல்லை.
ஸ்ரீ கணக்கப்பிள்ளை – வள்ளிஎறிச்சல் கல்வெட்டில் வெள்ளாளன் கணக்கரில்
                     என்னும் குறிப்பு உள்ளது. காலம் – கி.பி. 1284; அரசன்
                     மூன்றாம் விக்கிரம சோழன்.
அளக குலம் (அழகு குலம்) – கல்வெட்டுக் குறிப்பு இல்லை.
த்ற்போது அழகு குல் மக்கள் வாழும் ஊர்கள்
நாமக்கல், வையப்பமலை, எஸ்.மேட்டுப்பாளையம், ஈரோடு, அள்ளாளபுரம், முத்தணம்பாளையம், கோவை, மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், பொள்ளாச்சி, மதுக்கரை, பாலத்துறை, உடுமலை, புக்குளம், குறுஞ்சேரி.
ஓலை ஆவணம்
ஓலைச்சுவடிகள் ஒரு சிலவற்றைப் பார்வையிட்டபோது, அழகு குலம் பற்றிய குறிப்புகள் கிடைத்தன. அவற்றில், “கார்வளி அளகன் குலம்” , “காற்வளி அளகன் குலம்”  என்னும் குறிப்புகளோடு, அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் மடத்துக்குக் காணிக்கை கொடுத்த கணக்கு விவரங்கள் காட்டப்பட்டுள்ளன. காணிக்கை கொடுத்த கணக்கு” , “வசுல்”  என்னும் தொடர்கள் உள்ளன. குலக்கடவுளான செல்லாண்டியம்மன் கிருபையால் எல்லாம் சுகம்”  என்னும் தொடரும் உள்ளது.










அழகு குலச் சான்றுகள்
இவ்வாறாக, அழகு குலம், குலதெய்வம்  பற்றிய சான்றுகள் சிவகிரி மடத்தில் கிடைத்துள்ளன.

ஆங்கிலேயர் காலத்து அரசு ஆவணம்


மடத்தில், ஆங்கிலேய அரசு காலத்தைச் சேர்ந்த ஒரு ஆவணம் கிடைத்துள்ளது. இனாம் கமிஷன், மதராஸ் என்னும் அரசுத் துறையினரால் வெளியிடப்பெற்ற இந்த ஆவணம், கி.பி. 1863-ஆம் ஆண்டு, மே மாதம் 18-ஆம் தேதியில் உதவி இனாம் கமிஷனர் கையொப்பமிட்ட ஒன்று. சிவகிரி மடத்து நிலமானியம் பற்றியது. 
கார்வழி செல்லாண்டியம்மன் கோயில்
        அடுத்து நாங்கள் சென்ற இடம், அழகு குலத்தாரின் குலக்கோயிலான கார்வழி செல்லாண்டியம்மன் கோயில்.  அமைதியான, சுற்றிலும் வீடுகள், விளைநிலங்கள் அற்ற புன்செய் நிலப்பகுதியில் கோயில் அமைந்திருக்கிறது. பெரியதொரு வளாகம். வளாகத்தைச் சுற்றி மூடியதுபோல, கோட்டைச்சுவரை நினைவு படுத்தும் வகையில் கற்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர். பெரிய கருங்கற்களை, எந்தவிதமான ஒட்டுப்பொருளும் இல்லாமல் அப்படியே ஒன்றை ஒன்று அடுத்து அடுக்கியும், ஒன்றன்மேல் ஒன்று உயர அடுக்கியும் சுவர் எழுப்பியுள்ளனர். ஏறத்தாழ பத்து வரிசை உயரம் இருக்கும் அளவு கட்டப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கற்கள் பெயர்ந்து விழுந்து விட்டமையால் ஆறு,ஏழு வரிசைகள் காணப்படுகின்றன. வெறும் கற்களைக்கொண்டே அமைக்கப்பட்ட கட்டுமானத்தைப் பார்த்தாலே, கோயிலின் பழமை புலப்படுகிறது. கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு அடிப்படைப் பகுதிகளைக்கொண்டு கோயில் விளங்குகிறது. அடித்தளப்பகுதி, கல் கட்டுமானத்தில் அமைந்துள்ளது. ஜகதி, பதுமம், சிறிய முப்பட்டைக்குமுதம், மேலே கண்டப்பகுதி போன்ற ஒரு அமைப்பு அடித்தளத்தில் காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தை அடுத்து, தற்காலத்தே கட்டப்பெற்ற மகா மண்டபம் இரும்புக்குழல் தூண்களும், மேலே உலோகக் கூரையும் கொண்டுள்ளது.

                                    கற்சுவர்             






அம்மன் சிலையும் கோயிலின் பழமையும்
செல்லாண்டியம்மன் சிலை, எட்டுக்கைகளுடன் கூடிய காளி என்னும் கொற்றவையின் தோற்றத்தை ஒத்துள்ளது. தலையில் தீப்பிழம்பின் முடி (ஜுவாலா முடி), விரிந்த பெரிய கண்கள், தடித்த நீள்மூக்கு, தடித்த இதழ், இதழோரத்தில் கீழ்நோக்கி வளைந்த கோரைப்பற்கள் என்று சினந்த முகத்துடன் காணப்படுகிறது. காதுகளில் தோடு உள்ளது. கை மணிக்கட்டில் வளைகள் உள்ளன. கழுத்தணிகளைக்காண இயலவில்லை. புடவை சாத்தப்பட்டிருந்தது.  வலது முன்கையில் பெரியதொரு சக்தி ஆயுதமும், இடது முன்கையில் ஒரு கும்பமும் காணப்படுகின்றன. மற்ற ஆறு கைகளில், வலப்புறமுள்ள மூன்று கைகளில் ஒன்றில் மானை ஏந்தியிருக்கிறாள்; மற்றொன்றில் மனிதத் தலையை ஏந்தியிருக்கிறாள்; மூன்றாவது கை மூடிய நிலையில் உள்ளது. அதேபோல், இடப்புறமுள்ள மூன்றுகைகளில் ஒன்றில் உடுக்கையையும், மற்றொன்றில் மணியையும் ஏந்தியிருக்கிறாள்; மூன்றாவதில் என்ன இருக்கிறது என்பது புலப்படவில்லை. வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு ஒரு அரக்கனின் காலை மிதித்துக்கொண்டிருப்பதுபோல் வைத்திருக்கிறாள். மொத்தத்தில், காளிக்கே உரித்தான தோற்றம். சிற்பத்தின் வடிவமைப்பு, அதன் காலம் இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைகொண்டது எனக் கருத இடமளிக்கிறது. கோயிலின் பழமை, கட்டுவித்தவர் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளக் கல்வெட்டுச் சான்றுகள் எவையுமில்லை. நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல், சிற்பத்தின் பின்புறம் எழுத்துப் பொறிப்புகள் இல்லை. கொங்குநாடு முழுமையும் தாய்த்தெய்வ வழிபாடே மிகுந்து விளங்கியது என்னும் அடிப்படைக்கருத்து கொண்டு நோக்கும்போது, கோயில் பழமையானதொன்று என்பதில் ஐயம் இல்லை.

                      காளியின் கையில் மனிதத்தலை

                                               காளியின் கையில் மான்

                               
                                காளியின் கையில் உடுக்கையும், மணியும்

2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்விடம்
கோயிலின் அருகிலே சற்றுத் தொலைவில், பெருங்கற்காலம் என்று தொல்லியலார் குறிப்பிடும் காலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்விடம் இருந்ததற்கான சில சான்றுகள் கிடைத்தன. 1800 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய, சிவப்புப்பானை ஓட்டுச்சில்லுகள் நிறையக் காணப்பட்டன. இரும்பு பயன்படுத்தப்பட்ட அடையாளங்களாகக் கருதப்படும் இரும்புக்கழிவுகளும் கிடைத்தன. கோயிலுக்கருகிலேயே, இதே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமப்பொருளான முதுமக்கள் தாழி என்னும் பானையின் ஓட்டுத் துண்டுகள் கிடைத்தன. மக்கள் வாழ்விடத்தில் கிடைத்த பானை ஓட்டுச் சில்லுகள் மெல்லியவை. ஆனால், இந்த ஈமப்பானைகளின் ஓடுகள் தடித்தவை. எனவே, கார்வழியும் கார்வழிக்கோயிலும் அமைந்துள்ள இந்த இடம், மிகப்பழமையானது என்பதை இங்குக்கிடைத்த மேலோட்டமான சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. தொல்லியல் துறையினர் இவ்விடத்தைப் பார்வையிட்டால், இந்த இடம் அகழாய்வு செய்யத்தகுந்ததா என்பதை அறிய இயலும்.

                    முதுமக்கள் தாழியின் ஓட்டுத்துண்டுகள்


                       வாழ்விடப்பானைச் சில்லுகளும், இரும்புக்கசடுகளும்

பாழிகள்
கோயிலுக்கு அருகில் மூன்று சுனைக்குழிகள் காணப்படுகின்றன. எப்போதும் நீர் நிறைந்து பச்சை நிறத்தில் காணப்படும் இச்சுனைக்குழிகள் மூன்றும் பாறைப்பரப்புகளுக்கிடையே அமைந்துள்ளன. இவற்றை இப்பகுதி மக்கள் “பாழிஎன்று கூறுவது குறிப்பிடத்தக்கது. 2000 ஆண்டுகளுக்கு முன், குன்றுகளில் இயற்கையாய் அமைந்திருந்த குகைத்தளங்களில் சமண முனிவர்கள் தங்கித் தவமியற்றும் இடங்களில் இதுபோன்ற பாறைக்குழிச் சுனைகள் இருந்துள்ளன. அவையும் குகைத்தளங்களும் ‘பாழி”, “பள்ளி”  என அழைக்கப்பட்டமை  இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
ஒரு சுனைக்குழிப்பாறையின் பரப்பில், பசு மாடு ஒன்று இலிங்கத்தின் மேல் பால் சுரப்பதைப்போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

                                                                                   சுனைக் குழி


                                     பாறையில் புடைப்புச் சிற்பம்- பசு, இலிங்கம்





து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.