மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 18 ஏப்ரல், 2016



                       வட்டெழுத்து கற்போம்-1      

வட்டெழுத்து - தோற்றம்

    தமிழெழுத்துகளில் தொன்மையான எழுத்துகள் என்பதாக நமக்குக் கிடைத்துள்ள எழுத்துகள் “தமிழி”  என்னும் “தமிழ் பிராமிஎழுத்துகளாகும். இந்தத் தொன்மைத் தமிழ்எழுத்து தமிழகத்தில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ எழுநூறு ஆண்டுக்காலம்  வழங்கிவந்துள்ளது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டு அளவில் தொன்மைத் தமிழ் எழுத்திலிருந்து வட்டெழுத்து” ,  “பிற்காலத்தமிழ் எழுத்து என்று இருவகை எழுத்துகள் வலர்ச்சியுறத்தொடங்கின. அறச்சலூர், பிள்ளையார்பட்டி, திருநாதர் குன்று ஆகிய இடங்களில் காணப்பெரும் கல்வெட்டுகளில் இத்தகைய வலர்ச்சியைத் தெளிவாகக் காணலாம்.

வட்டெழுத்து வளர்ச்சி நிலைகள்

முதல் நிலை
    வட்டெழுத்து வளர்ச்சி நிலையை மூன்று கால கட்டங்களாக அறிஞர்கள் பகுத்துள்ளனர். முதல் நிலை கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6-ஆம் நூர்றாண்டு வரை. ஒரு சிலர், முதல் நிலையைக் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை கொண்டுசெல்வர். முதல் நிலையில், வட்டெழுத்துகளும் தொன்மைத்தமிழ் எழுத்துகளைப்போலவே நேர் நேராக எழுதப்பட்டன. பூலாங்குறிச்சிக் கல்வெட்டும், வட ஆர்க்காடு, தர்மபுரி மாவட்ட நடுகற்கள் கல்வெட்டுகளும் முதல்வகையைச் சார்ந்தன.

இரண்டாம் நிலை
    இரண்டாம் நிலை, கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை என்பதாக ஒரு சாராரும், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை என்பதாக மற்றொரு சாராரும் கருதுகின்றனர். இரண்டாம் நிலையில், எழுத்துகள் இடப்பக்கம் சிறிது சாய்த்து வட்டம் வட்டமாக் எழுதப்பெற்றன. இவ்வகை எழுத்துகள் தமிழகத்தின் வட மாவட்டங்கள், தஞ்சை, திருச்சி, தென்மாவட்டங்கள், கொங்கு நாடு எனப்பரவலான இடங்களில் காணப்படுகின்றன. கேரளப்பகுதியிலும் இந்த எழுத்துகளே புழக்கத்தில் இருந்துள்ளன. கேரளாவில் இவ்வெழுத்தை “நானா மோனா” , “தெக்கன் மலையாள , “கோலெழுத்து’  ஆகிய பெயர்களில் அழைத்தனர். ஓலைகளில் எழுதிய காரணத்தாலேயே இவ்வாறு வட்டமாக எழுதவேண்டி நேர்ந்தது எனக் கருதப்படுகிறது. (கோல் என்பது எழுத்தாணியைக்குறிக்கும். எழுத்தாணியால் எழுதியதால் “கோலெழுத்துஎன வழங்கலாயிற்று.)

மூன்றாம் நிலை

    மூன்றாம் நிலை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர் உள்ள கால கட்டம் எனவும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரையுள்ள கால கட்டம் எனவும் இருவேறு கருத்துகள் உள்ளன. மூன்றாம் நிலையில், பல எழுத்துகள் வேறுபாடு இன்றி அல்லது மிகக் குறைந்த வேறுபாட்டோடு, ஒன்றுபோலவே எழுதப்படலாயின. எனவே, இவ்வகை எழுத்துகளை மிகக் கவனமாகப் படித்தால்தான் புரிந்துகொள்ளமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. விரைவாக எழுத விரும்பியதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும். இவ்வகை எழுத்துகள், கன்னியாகுமரி மாவட்டம், கேரளம் ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. கோயில்கள் அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்டபோது, வட்டெழுத்தில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுகளைத் தமிழ் எழுத்தில் மீண்டும் வெட்டியுள்ளனர். சான்றாக, 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றில், திருமலை ஜீரணிக்கையால் உத்தாரணம் பண்ணினவிடத்து திருமலையில் கல்வெட்டு வட்டமாகையில் தமிழாகப் படியெடுத்து  என்று கூறப்படுகிறது. திருக்குற்றாலத்துக் குற்றாலநாதசுவாமிக் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று, புரிந்துகொள்ளமுடியாத வட்டம் நீங்கலாக மற்ற எல்லாக் கல்வெட்டுகளும் திரும்பச் சுவரில் பொறிக்கப்பட்டதைச் சொல்லுகிறது. இவற்றிலிருந்து, ஒரு கால கட்டத்தில், வட்டெழுத்து மக்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அந்நியமாகிவிட்டதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.


மேற்படி கருத்துகள் உதவி :
1. திரு. நடன. காசிநாதன் அவர்கள் எழுதிய தமிழக வரலாற்றுத்தடயங்கள்நூல்    .
2. பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வுமையம் வெளிட்டுள்ள “கல்வெட்டுக்கலைநூல்.

பயிற்சி

    வட்டெழுத்துப்பயிற்சியில் நாம், இரண்டாம் நிலை எழுத்துகளைப் பயிலவிருக்கிறோம். காரணம், இரண்டாம் நிலையில்தான் வட்டெழுத்து முழு வளர்ச்சியில் பரவலாகத் தமிழகத்தில் வழங்கியுள்ளதைக் காண்கிறோம். முறைப்படுத்தப்பட்டனவாகவும், தேர்ச்சியாகவும் அவை இருப்பதால் அவற்றைப்பயின்ற அனுபவத்தில் அவ்வெழுத்துகளின் மாறுபட்ட எழுத்துகளையும் ஒருவாறு யூகித்துப் படிக்கமுடியும். மேலும், மூன்றாம் நிலை எழுத்துகள் படிக்க மிகக் கடினமானவை என்று முன்னுரையில் பார்த்தோம்.

இனி, எழுத்துகள்:

“அ    
                                       ஐவர் மலைக் கல்வெட்டில் உள்ளவாறு





"அ”,   “ஆ”
                                                       கையால் எழுதியன


பாடம்  தொடரும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

ஆலத்தூர் சமணக்கோயில்


ஆலத்தூர் - அமைவிடம்
         கோவை மாவட்டம் அன்னூர் அருகே மொண்டிபாளையம் என்று ஓர் ஊர் அமைந்துள்ளது. அவ்வூரில் உள்ள பெருமாள் கோயிலும் அங்கு ஆண்டுதோறும் நடக்கும் தீமிதித் திருவிழாவும் இம்மாவட்டப்பகுதியில் பேர் பெற்றவை. (கோவைப்பகுதியில் தீ மிதிக்கும் கோயிற்சடங்கு, “குண்டம்”  என மக்கள் வழக்கில் அழைக்கப்படுகிறது. குண்டம் என்பதற்குக் குழி என்பது பொருள். எனவே நெருப்புக்குழியை மக்கள் குண்டம் என அழைப்பது முற்றிலும் பொருந்தும். கோயிலோடு தொடர்புபடுத்தும்போது அதுவே, “பூக்குழிஎன்றாகிறது.) சிறப்புப் பெற்ற மொண்டிபாளையத்துக்கு அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சிற்றூர் உண்டு.

சமணக்கோயில் கண்டுபிடிப்பு
         வெளியே அறியப்படாத அச்சிற்றூர், ஒரு நாளில் வரலாற்று வெளிச்சம் பெற்றது. காரணம் அங்கே ஒரு சமணக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வூர்தான் ஆலத்தூர். கண்டுபிடித்தவர், கோவை மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த தமிழ்ப்பேராசிரியர் மா.கணேசனார் ஆவார். இவர், கோவை மாவட்டக் கல்வெட்டுகளை முதன்முதலில் தொகுத்து நூலாக வெளியிட்டவர். (அதன்பிறகு, 2006-ஆம் ஆண்டுதான், தொல்லியல் துறையின் “கோயமுத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்நூல் வெளியானது.) முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது 1980-82 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் அவர் இக்கோயிலைக் கண்டறிந்தார். அவர் பார்க்கும்போது கோயில் மிகச்சிதைந்த நிலையில் இருந்தது. கோயிலின் முன் வாசலின் கதவு, நிறைய வேலைப்பாடுகளோடு அழகுறக் காணப்பட்டது. கோயிலின் தென்புறமுள்ள ஒரு குழியில் இரண்டு அடி உயரமுள்ள ஒரு சிலை புதைந்து கிடந்தது. சிலை பார்ப்பதற்கு அழகாக இருந்தது.  அது ஒரு தீர்த்தங்கரர் சிற்பம். (பின்னாளில் இந்தத் தீர்த்தங்கரர் சிற்பம் தோண்டியெடுக்கப்பட்டுக் கோவை அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டது.) கோயிலில், நான்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் இரண்டு தமிழ்க் கல்வெட்டுகளும் இருந்தன. அவர் தம் ஆய்வில் கண்டறிந்த செய்திகள் வருமாறு:

“கி.பி.9-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த அச்சமணக்கோயில், ஒரு சமணப்பள்ளியாகவும் இயங்கிவந்தது. இங்கு எழுந்தருளியிருந்தவர் ஒரு சமணத்தீர்த்தங்கரர் ஆவார். ஒன்பதாம் நூற்றாண்டில் கொங்குநாட்டில் சமணசமயம் சிறந்து விளங்கியது. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொங்குச் சோழனாகிய குலோத்துங்கர், இந்த ஊரை அவிநாசி சிவன் கோயிலுக்குத் தானமாக வழங்கியுள்ளார். அக்காலத்தில், கொங்குநாட்டில் சமணர்களுக்கும் சைவர்களுக்கும் பெரும் போராட்டம் நடந்துள்ளது. சைவர்கள், மன்ன்ன் துணையோடு சமணப்பள்ளிகளை இடித்து அழித்திருக்கலாம். சில சமணப்பள்ளிகள் சிவன் கோவில்களாக மாற்றப்பட்டன. சமணப்பள்ளிகள் சிவன்கோவில்களாக மாறியுள்ளதை வரலாற்று அறிஞர் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் ’கொங்குநாடும் சமணமும்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.”

அவிநாசி சிவன்கோவிலும்-ஆலத்தூர் சமணக்கோவிலும்
        மேலே குறிப்பிட்ட கண்டுபிடிப்பு, ஆய்வு ஆகியவற்றுக்குப் பின்னர் வேறொரு ஆய்வு நிகழ்வில், அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேசுவர்ர் கோயில் கல்வெட்டொன்றை ஆய்வுசெய்து பேராசிரியர் கணேசனார் வெளியிட்ட செய்திகள் பின்வருமாறு:

பண்டைய காலத்தில் கோயில்களே வழக்குமன்றங்களாகத் திகழ்ந்தன என்பதற்கு நமது கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் சான்றுகள் உள்ளன. அவிநாசிலிங்கேசுவரர்  கோயிலில் உள்ள கல்வெட்டிலும், ஆலத்தூர் சமணக்கோயிலில் உள்ள கல்வெட்டிலும், அக்கோயில்களே வழக்குமன்றங்களாகத் திகழ்ந்தன என்பதைத் தெளிவுபடுத்தும் விதமான செய்திகள் உள்ளன.
திருப்பணிக்கு வரிப்பணம்.
கொங்குச்சோழமன்னன் திரிபுவனச்சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவன் தனது நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி.1200) தற்போதைய ஆலத்தூரான நிலைமை அழகியசோழ நல்லூரிலும் மற்றும் அதன் எல்லைகளிலும் வசூலிக்கப்படுகிற வருவாய்களான நத்தவரி, மன்றுபாடு, தெண்டக்குற்றம் முதலியவற்றை அவிநாசிலிங்கேசுவரர்க்கு அமுதுபடிக்காகவும், திருப்பணிச் செலவுகளுக்காகவும் வழங்கியதாக அவிநாசிக் கல்வெட்டில் செதுக்கிவைத்துள்ளான்.
       அதேசமயம் ஆலத்தூரில் உள்ள வீரசங்காதப்பெரும்பள்ளியின் கருவறையின் முன்மண்டப மேற்குச்சுவரில் ஒய்சள அரசன் வீரவல்லாளன் (கி.பி. 1332) செதுக்கிவைத்துள்ள கல்வெட்டில், ஆலத்தூரிலும் அதைச்சுற்றியுள்ள எல்லைகளிலும் வரும் வருவாய்களை இந்த ஊரில் உள்ள அணியாது அழகியாராகிய தீர்த்தங்கரருக்கு கி.பி.9-ஆம் நூற்றாண்டின் சோழ மன்னன் வழங்கியதாக்க் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறுநாட்டார் சபை
      இந்த இரு கல்வெட்டுகளிலும் வெவ்வேறு விதமான கருத்துகள் வெட்டிவைக்கப்பட்டிருந்ததால் ஆலத்தூரில் வருவாயை யார் வசூலிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்ட்து. எனவே, ஆலத்தூர் சமணப்பள்ளியைச் சேர்ந்தவர்களும், அவிநாசிலிங்கேசுவரர் கோயிலைச் சேர்ந்தவர்களும் சிக்கலைத் தீர்ப்பதற்காக ‘ஆறுநாட்டார் சபைஎன்னும் அறங்கூறும் அவையத்தாரை நாடினார்கள். பேரூர்நாடு, வடபரிசாரநாடு, வீரசோழவளநாடு, ஐங்கரைநாடு, குறுப்புநாடு, நாலூர்ப்பற்றுநாடு என்ற ஆறு நாடுகளைச்சேர்ந்த சபையே ஆறுநாட்டார் சபையாகும். இவ்வழக்கு சமணம், சைவம் ஆகிய இரு சமயக் கோவில்களைப்பற்றியது என்பதை மனதில்கொண்டு ஆறூநாட்டார் சபை ஆய்வுகளை மேற்கொண்ட்து. இரு கோவில்களும் வடபரிசாரநாட்டைச் சேர்ந்தவை என்பதையும், தானம் செய்யப்பட்ட ஆலத்தூரையும் அதன் எல்லைகளையும் ஆய்வு செய்த்தோடு இரண்டு கல்வெட்டுகளின் உண்மைத் தன்மைகளையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினார்கள்.

தீர்ப்பு
       அந்தத் தீர்ப்பில், ஆலத்தூர் மற்றும் அதன் எல்லைப்பகுதிகளில் வரும் வருவாய் இவ்விரு சமயக்கோவில்களுக்கும் பொதுவானது என்றும், ஆலத்தூரின் தெற்குப்பகுதித் தெருவும், சமணக்கோயிலும், அதைச்சுற்றியுள்ள சமணர் குடியிருப்புகளும் சமணதேவருக்குச் சொந்தமானது என்றும், மற்ற பகுதிகள் அனைத்தும் அவிநாசிலிங்கேசுவரருக்குச் சொந்தமானது என்றும் தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பின் முடிவில் ஆறுநாட்டவரோம் என்று எழுதிக் கையெழுத்திட்டுள்ளனர். ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே சான்றோர்கள் வழங்கிய தீர்ப்பு நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகிறது.

         இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக்கொண்ட ஆலத்தூர் சமணக்கோயிலையும் கல்வெட்டுகளையும் காணக் கட்டுரையாசிரியர் 2012-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சென்றபோது கண்டு உணர்ந்தவை இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
கோயில் அமைவிடம்
    சமணக்கோயில் எனினும், நீண்ட காலமாகச் சிவன்கோவிலாகவே மக்களால் கருதப்பட்ட சிவன்கோயிலுக்கு எப்படிச் செல்வது என ஒரு சிலரிடம் கேட்டபோது சரியான வழி புலப்படவில்லை. பாழடைந்த கோயில் என்னும் அளவில் ஊர் மக்களுக்கு அக்கோயில் அறிமுகமாயுள்ளது. ஒருவாறு, ஒரு பாதை காண்பிக்கப்பட அப்பாதையில் செல்ல நுழைந்தால் வளர்ந்து நின்ற முள்மரங்கள் போகவிடாது தடுத்தன. பின்னர், சரியான வழி என்று ஒருவர் சொல்ல, அவ்வூரின் ஒரு வீதியிலிருந்த, உடையார் வீட்டிற்குச் சென்று வழி கேட்டேன். வீட்டுக்குடையவர், மண்ணுடையார் என்னும் தொழிற்பிரிவினரான வேட்கோவர் ஆவார். உள்ளே நுழைந்ததும், ஆங்காங்கே மண் சட்டிகள், பானைகள், அடுப்புகள் எனப் பல மட்கலன்கள். வீட்டுக்குடையவர் வீட்டுக்குள் அழைத்துச் சென்று வீட்டின் பின்புறமுள்ள புறக்கடையைக் காண்பித்தார். வீட்டின் தொழுவமாகப் பயன்பாட்டில் இருக்கும் அந்த இடத்தில் மாடுகள், மாட்டுச்சாணம், வைக்கோல் பொதிகள், உடைந்த சட்டிபானைகள், காய்ந்த மரக்கழிகள், காய்ந்த பனை,தென்னை ஓலை மட்டைகள், குப்பை,கூலங்கள் புடை சூழ, முள்மரங்களினூடே ஏதோ ஒரு கட்டுமானம் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபின்னரே கோயிலின் சுவர்களும், கூரைப்பகுதியின் கற்களும் வெளிப்பட்டன.

     கட்டுமானத்தின் முன்புறப்பகுதி வழியே உள்ளே நுழைந்து சென்றதும் காணப்பட்டது, கருவறையை அடுத்த முன்மண்டபம். அதற்கு அப்பால், கருவறையைக் காணோம். கருவறையின் நுழைவாயில் நிலைக்கால்களோடு இருந்தது. கருவறை முற்றிலும் அழிந்து இருந்த இடம் தெரியாமல் மேடிட்டுக் கிடந்தது. கட்டுமானக்கற்கள் அங்கொன்றும் இங்கொன்றும் எனச் சிதைந்த தோற்றத்தில் இருந்தன. முன்மண்டபச் சுவர்களில் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து, மேற்கூரையும், தூண்களும் சிதைந்து காணப்பட்டன. முன்னரே சொன்னதுபோல், கோயிலைச்சுற்றிலும் முள்மரங்களும், புதர்ச்செடிகளும் மூடிப் பாழுங்கோயிலாகத் தெரிந்த தோற்றத்தைக்கண்டு, வரலாறு பேசும் அரிய கல்வெட்டுகளைத் தாங்கி நிற்கும் ஒரு கோயிலுக்கு இதுதான் இறுதிக்காலமோ என்று மனம் துன்புற்றது.

சமணமதத்தின் பழமைச் சின்னம்

         ஆலத்தூரே ஒரு வரலாற்றுப்பின்னணி கொண்ட ஊராகும். பழங்காலத்திலேயே, கோவைப்பகுதியிலிருந்து கருநாடகத்துக்குச் செல்லும் வணிக வழியில் இவ்வூர் இருந்துள்ளது. அக்காலத்தில் வணிகர்கள் பெரும்பாலும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்த காரணத்தால், சமண வணிகர்கள் இக்கோயிலைக் கட்டியிருக்கக்கூடும் என்றொரு கருத்து நிலவுகிறது. இக்கோயில் கல்வெட்டில், கோயிலானது “வீரசங்காதப்பெரும்பள்ளி என அழைக்கப்படுகிறது. “வீரசங்கம்”  என்னும் ஜைனச் சங்கம், விழுப்புரம் மாவட்டம் திருநறுங்கொண்டை என்னும் ஊரில் தொடங்கப்பட்டு செயல்பட்டுவந்துள்ளது என்பது வரலாற்றுக்குறிப்பு. அந்த வீரசங்கத்தைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்டதால் வீரசங்காதப்பெரும்பள்ளி என அழைக்கப்பட்டிருக்கலாம்.

கல்வெட்டுகள்

         கொங்குநாட்டை ஆண்ட கொங்குச் சோழர்களில் முதலாம் அரசன் கோநாட்டான் வீரசோழன் ஆவான். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 942 980 ஆகும். கோநாட்டான் வீரசோழனின் முப்பதேழாம் ஆட்சியாண்டில் (கி.பி. 979) செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இக்கோயிலில் இருந்துள்ளது. (கோயிலின் வாசல் கல்லில் செதுக்கப்பட்ட இக்கல்வெட்டு தற்போது கோவை அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கோயில் ஆயிரம் ஆண்டுப்பழமை பெற்றது எனத் தெளியலாம். இக்கல்வெட்டின் இன்னொரு சிறப்பு, இது “வட்டெழுத்துஎன்னும் வகையைச் சேர்ந்த தமிழ் எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளதாகும். மற்றுமொரு கல்வெட்டு இதுவும் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது சேர அரசர் ஒருவரின் மனைவியான வானவன்மாதேவி சிற்றாச்சர் என்பவர் இந்த ஜைனக்கோயிலைப் புதுப்பித்தார் என்னும் செய்தியைத் தெரிவிக்கிறது. (புதுப்பித்தார் என்பதைக் கல்வெட்டு புதுக்குவித்தார் என்று குறிப்பிடுகிறது.) இவ்வரசியார், கருநாடகத்தைச் சேர்ந்த சிந்தரையர் மகள் என்னும் குறிப்பும் இக்கல்வெட்டில் வருவது, அக்காலத்தில் அரசர்களிடையே இருந்த மண உறவு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள உதவுகிறது. இக்கல்வெட்டில், ஆலத்தூர் அடிகள் பள்ளி என்றொரு தொடர் வருகிறது. இது, வீரசங்காதப்பெரும்பள்ளி என்னும் பெயருடைய பள்ளி, மக்கள் வழக்கில் சுருக்கமாக ஆலத்தூர் அடிகள் பள்ளி என வழங்கியதைச் சுட்டுகிறது. “அடிகள் என்னும் சொல் அங்கே நோக்கத்தக்கது. துறவிகளுக்குச் சமணர் நடுவில் வழங்கிய அருமையானதொரு தமிழ்ச் சொல் இந்த அடிகள். சமணத்துறவியரையும், சமணப்பெரியாரையும் “அடிகள் என்னும் சொல்லாலும், குரவர் என்னும் சொல்லாலும் அழைத்தனர். (”குரத்தி” என்பது பெண்பால் பெயர்) இந்த மரபே, சைவ சமயத்திலும் பின்பற்றப்பட்டது போலும்! இல்லையெனில் நாயன்மார் நால்வரைச் சைவ சமயக்குரவர் நால்வர் என்று அழைத்திருப்பரா? (அப்பூதியடிகள் என்னும் பெயரையும் இங்கு நினைவில் கொள்க.) அடிகள்என்னும் சொல் உயர்ந்தோரைக் குறிப்பதாலேயே, தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள், மகாத்மா காந்தியைக் “காந்தியடிகள்என அழைத்தார் எனக்கொள்ளலாம். மற்றுமொரு கல்வெட்டு, அர்த்தபுயங்க தேவர் என்பவர் மண்டபம் அமைத்துக்கொடுத்ததைச் சொல்கிறது. இன்னொரு கல்வெட்டு, கோவில் கதவுநிலை சமைப்பித்ததைக் கூறுகிறது. கொங்குச்சோழன் குலோத்துங்கன், ஒய்சள அரசன் வீரவல்லாளன் ஆகியோரின் கல்வெட்டுகள் பற்றி மேலே பேராசிரியர் மா.கணேசனாரது குறிப்புகளில் பார்த்தோம். வீரவல்லாளன் கல்வெட்டில், கோயிலில் எழுதருளியிருந்த அமணதேவர் (தீர்த்தங்கரர்), அணிஆதழகிய நாயனார் எனக்குறிப்பிடப்படுகிறார். திக்கு (திசை) ஒன்றைத்தவிர்த்து வேறு ஆடை அணியாத அமணதேவரை அழகான தமிழ்ச் சொல் கொண்டு அணிஆதழகிய நாயனார் எனக்கூறுவது சிறப்பினும் சிறப்பு.

         இவ்வாறாக, மொத்தம் ஆறுகல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன. பெரும்பாலானவை, முற்றிலும் சிதையாமல் இருப்பதால், தொன்மைச் சிறப்புள்ள கல்வெட்டுகளையும், கல்வெட்டுகள் அடங்கியுள்ள மண்டபச் சுவர்களையும் பாதுகாக்கவேண்டிய கடமை அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் மிக உண்டு.

கல்வெட்டுகளின் பாடங்களும் சில விளக்கங்களும்.

1.        கோநாட்டான் வீரசோழன் கல்வெட்டு :
கல்வெட்டுப்பாடம்: (தொல்லியல்துறையின் நூலிலிருந்து)

1.        ஸ்வஸ்திஸ்ரீ கோநாட்டான் வீ
2.        ர சோழப்பெருமாநடிகளுக்கு திரு
3.        வெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு முப்
4.        பத்தேழாவது ஆனித்திங்கள் முதல் ஆளுடை
5.        யார் வீரசங்காதப் பெரும்பள்ளி ....யி..
6.        ..... ப ..... த்த ....... நியாயத்தார்தம்......
7.        து....லினசெ.....ளிநால்..... திங்கள்ளி
8.        மு ழெயும் முக .........
9.        ........ யான் வழி ஏழெச்சம் ஒழியாமல் அறுவான்


                                           கோநாட்டான் வீரசோழன் கல்வெட்டு 



                         கோநாட்டான் வீரசோழன் கல்வெட்டு வட்டெழுத்தில்                                            கல்வெட்டுப்பாடம் - பார்வைப்படி (ஒரு சில வரிகள்)


இன்றைய  வரிவடிவில்:

ஸ்வஸ்திஸ்ரீ கோநாட்
ர சோழப்பெருமாநடிக
வெழுத்தி டுச் செல்லாநி யா  முப்
த்தே வது ஆனித்திங்  மு ல் 
               ம்பள்ளி ....யி..
.............நி  யத்தார்


                கருவறை வாசல்கால் கல்வெட்டு (வட்டெழுத்தில்)


கல்வெட்டுப்பாடம்: (தொல்லியல்துறையின் நூலிலிருந்து)

  1.  பெங்கல்
  2. லூர் வண்ணா
  3. ன் நீலன்
  4. செல்லன்
  5. மணவாட்டி
  6. காவஞ்சாத்தி
  7. யையும் ம
  8. கள் செல்லங்
  9. கணத்தியையும்
  10. சார்த்தி
  11. நாட்டுவித்த
  12. கல்நிலை

                                    
                                 கருவறை வாசல்கால் கல்வெட்டு (வட்டெழுத்தில்)
                              கல்வெட்டுப்பாடம் - பார்வைப்படி (ஒரு சில வரிகள்)      


இன்றைய  வரிவடிவில்:


  1. பொன்கல்ல்
  2. லூர் வண்ணா
  3. ன் நீல
  4. செல்லன்
  5. மணவாட்டி
  6. காவஞ்சாத்தி
  7. யையும் மக
  8. ள் செல்ல
  9. கணத்தி
  10.         ம்சாத்
குறிப்பு:
வரி 1     துறை நூலில் “பெங்கல்”  எனப் படிக்கப்பட்டுள்ளது.
              ஆனால்,  கல்வெட்டில் ”பொன்கல்ல்”  என்றுள்ளது.
வரி 7    துறை நூலில் “யையும் ம”  எனப் படிக்கப்பட்டுள்ளது.
              “க” எழுத்து அடுத்தவரியில் சேர்க்கப்பட்டுள்ளது.
             ஆனால்,  கல்வெட்டில் ”யையும் மக”  என்றுள்ளது.

               கருவறைச்சுவர்க்கல்வெட்டு - அணிஆதழகிய நாயனார்
                      இடம்பெறும் கல்வெட்டு

கல்வெட்டுப்பாடம்: (தொல்லியல்துறையின் நூலிலிருந்து)

  1. கீரச வருஷத்து ஆடி மாதம் 2ஆம் தியதி தெ
  2. ண்ணாயக்கர் கோட்டைக்குத்தெற்கும்
  3. ஆறுநாட்டு நாட்டவரோம் வடப
  4. ரிசாரநாட்டு ஆலத்தூர் அமண
  5. தேவர் அணி ஆதழகிய நாயனாற்கும்
  6. புக்கொளியூர் அவிநாசி ஆளுடையாற்கு
  7. ம் தன்மசாதனம் பண்ணி குடுத்த பரி
  8. சாவது இந்த ஆலத்தூ முழுதும்

  
           கருவறைச்சுவர்க்கல்வெட்டு - அணிஆதழகிய நாயனார்

           இடம்பெறும் கல்வெட்டு - பார்வைப்படியில் சில வரிகள்

இன்றைய வரிவடிவில்:

  1. ருஷத்து ஆடி மா
  2. கர் கோட்டை
  3. டு நாட்டவ
  4. ட்டு ஆலத்தூர்
  5. அணி ஆதழகிய நாய
  6. யூர் அவிநாசி ஆ
  7. சாதனம் பண்ணி குடு
  8. ஆலத்தூ மு(ழு)தும்
வழக்குமன்றத் தீர்ப்புகூறும் கல்வெட்டுப்பாடம்

  1. ஸ்வஸ்திஸ்ரீ வீரவல்லாள தேவர்க்கு
  2. மேல் செல்லாநின்ற ஆங்
  3. கீரச வருஷத்து ஆடிமாதம் 2ஆம் டியதி தெ
  4. ண்ஆயக்கர் கோட்டைக்குத் தெற்கும்
  5. ஆறுநாட்டவரோம் வடப
  6. ரிசார நாட்டு ஆலத்தூர் அமண
  7. தேவர் அணிஆதழகிய நாயனாற்க்கும்
  8. புக்கொளியூர் அவிநாசி ஆளுடையாற்க்கு
  9. ம் தன்மசாதனம் பண்ணிக் குடுத்த பரி
  10. சாவது இந்த ஆலத்தூர் முழுதும் அவி
  11. நாசி ஆளுடையார்க்கு திரிபுவனச்சக்
  12. கரவர்த்தி குடுத்தான் என்றும் அணியா
  13. தழகியார்க்கு சேரமான் சக்கரவர்த்தி குடுத்தார்
  14. என்றும் இரண்டு கோயில் தானதரும்
  15. தேவர் சிரீதனமும் சோமப்பருக்கும்
  16. கணி ஸ்ரீயக்கி உடையார்முன்பும்
  17. நாட்டார் முன்பு முறபட்டு இரண்டு சா
  18. தனமும் காட்டுகையில் இரண்டு சா
  19. தனமும் பார்த்த அளவில் இரண்டும் பூ
  20. ர்வ சாதனம் ஆனபடிஆலே இரண்
  21. டு கோயிலுக்கும் பொதுவாகு இந்த ஊ
  22. ர் தெற்கில் தெருவும் இறை இறுப்பு கீழை கு
  23. டி சூழும் அமணதேவற்கும் இம்மருவாதி பிற
  24. வும் திருமலையில் வெட்டு
  25. வித்துக் குடுத்தமைக்கு இதுவே சாதனமா
  26. கவும் அறுதிபியெர் சாதனமா
  27. வதாக கடவதல்ல ஆகவும் இ
  28. துக்கு இருபாலாக பிரித்து குடுத்தோம்
  29. ஆறுநாட்டவரோம் அமணதே
  30. வர் அணிஆதழகிய நாயநார் இந்த தன்மம் விலக்கினவன்
  31. ஏழெச்சம் அறுவான் ஸ்ரீ ஜிநான்ம ரக்ஷை 

          
முடிவுரை    

         தமிழகத்தில் ஏறத்தாழ 150 ஊர்களில் ஜைனக்கல்வெட்டுகளும், 20-25 ஊர்களில் ஜைனக்கோவில்களும் உள்ள நிலையில், இவையனைத்தும் சிதையாமல் உள்ளன என்று சொல்வதற்கில்லை. எஞ்சியுள்ள இக்கோயில்களில் பல சிதைந்தும், பல, புதுப்பிக்க முடியும் என்ற நிலையிலும் இருக்கக்கூடும். அந்தவகையில், ஆலத்தூர் ஜைனக்கோயிலின் இப்போதுள்ள முன்மண்டபம் ஒரு சில அடிப்படைப்பணிகள் மூலமாகவே புதுப்பிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் உடன்பாடான சூழ்நிலையே தற்போது காணப்படுகிறது.

         இத்தகு சிறப்பையும், பாரம்பரியப் பெருமையையும், வரலாற்றுப்பதிவையும் பெற்ற ஜைன மதத்தின் தொன்மை எச்சங்களையும், சின்னங்களையும் பாதுகாக்கத் தொல்லியல் ஆர்வலர்களோடு துணை நின்று செயல்பட ஜைன அன்பர்களும் கடமையுணர்வோடு இணைவார்கள் என்னும் நம்பிக்கையும் தோன்றுகிறது. அரசு, தொல்லியல்துறை, தொல்லியல் ஆர்வலர்கள், செல்வம் பெற்ற புரவலர்கள், ஊர்மக்கள், ஜைன அன்பர்கள் என அனைவரையும் ஒருங்கிணைக்க வல்ல வழி  யாது அல்லது அமைப்பினர் யார் என்பது பெரிய கேள்வி.


குறிப்பு : கட்டுரை ஆசிரியர், 2012-ஆம் ஆண்டில் ஆலத்தூர் சென்றபோது காணப்பட்ட கோயிலின் சிதைந்த நிலை, மீண்டும் 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்றபோது பின்னும் பாழ் பட்டுக் காணப்பட்டது. ஒளிப்படங்கள் சான்று பகரும். 2012-இல் கோயில் சுவர்களை நெருங்கிக் கல்வெட்டுகளை ஒளிப்படம் எடுக்கும் சூழ்நிலை இருந்தது. 2015-இல், அச்சூழ்நிலைகூட இல்லை. புதர் மண்டியிருந்ததால், இம்முறை கல்வெட்டுப்படங்களை எடுக்க இயலவில்லை.

2012-ஆம் ஆண்டு - கோயிலின் நிலை









2015-ஆம் ஆண்டு - கோயிலின் நிலை

















சமர்ப்பணம்: 
கோயிலை வரலாற்றுலகுக்கு வெளிக்கொணர்ந்த
மறைந்த அவிநாசி கிழார் - கல்வெட்டுக்காவலர் 
முனைவர் மா.கணேசன் அவர்களுக்கு.










------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.









செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கோவைப்பகுதியில் தொல்லியல் சின்னங்கள்
நடுகற்களூம் சிற்பங்களும்


1.       கவுந்தப்பாடி சண்டிகேசுவரர்



      ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருக்கும் விசுவேசுவரசுவாமி-விசாலாட்சி சிவன்கோயில் வளாகத்தில் பழமையான சண்டிகேசுவரர் சிற்பம் காணப்படுகிறது. சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது. இடது காலைத் தரையில் கிடைமட்டமாகக் கிடத்தி, வலது காலைத் தூக்கிக் குத்திட்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். வலது கையில் மழுவை ஏந்தியிருக்கிறா. இடது கையை இடது காலில் பதித்துள்ளார். தலை, நன்கு விரிந்த சடைமண்டலத்துடன் உள்ளது. செவிகளில் குண்டலங்களும் கழுத்தில் தடித்த ஆரமும் உள்ளன. கைகளில் தோள்வளைகளும் முன்கைவளைகளும் உள்ளன. கால்களில் கழல்கள் உள்ளன. முப்புரிநூல் என்னும் உபவீதம் இடது தோளிலிருந்து புறப்பட்டு வலதுபுற வயிற்றுப்பகுதிவரை வந்து பின்புறம் செல்கிறது. சிற்பத்தின் காலம் கொங்குச்சோழர் காலமான கி.பி. 13-ஆம் நூற்றாண்டாக இருக்கக்கூடும்.

2.       கவுந்தப்பாடி  மூத்ததேவி



      மேற்சொன்ன அதே இடத்தில் காணப்படும் மூத்ததேவியின் சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது. இடது காலைக்கிடை மட்டத்தில் வைத்தும் வலது காலைத் தொங்கவிட்டவாறும் அமர்ந்திருக்கிறாள். தலையலங்காரம் சடைமுடியா அல்லது கிரீடமுடியா என்று இனம் காண இயலவில்லை. கழுத்தில் ஆரம் உள்ளது. செவிகளில் தடித்த காதணிகள். இடது முன்கையில் வளை காணப்படுகிறது. வலது கையில் உள்ள பொருள் இன்னதென்று தெளிவாகப் புலப்படவில்லை. மூத்ததேவிக்கே உரிய காக்கைக் கொடியாகவோ, துடைப்பமாகவோ இருக்கலாம். இடது கை இடது தொடையில் இருத்தப்பட்டுள்ளது. தேவியின் வலப்பக்கத்தில் காளை முகத்துடன் கூடிய மாந்தனின் உருவமும் இடப்பக்கத்தில் மாந்தியின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளன. இருவரின் அமர்ந்த கோலமும் தேவியின் கோலத்தை ஒத்துள்ளது. இருவரின் வலக்கைகளிலும் இருப்பன எவை எனத்தெரியவில்லை. மாந்தியின் மார்பில் கச்சு காணப்படுகிறது. தேவியின் உருவத்தில் கச்சு இல்லை.மூவரின் கால்களின் கீழ்ப்பகுதி மண்ணுக்குள் புதைந்த சிற்பப்பகுதியில் மறைந்துள்ளது.

3         குறிஞ்சேரி முருகன் சிற்பம்



உடுமலை வட்டம் குறிஞ்சேரி ஊரில் தற்போது விநாயகர் கோயில் என்றழைக்கப்படும் கோயில் வளாகத்தில் அழகிய தோற்றத்தில் முருகனின் சிற்பம் நின்ற கோலத்தில் உள்ளது. சிங்கமுகத்துடன் கூடிய திருவாசியுடன் காணப்படுகிறது. வழிப்பாட்டுக்குரியதாகக் கோயிலின் உள்ளே இருந்த சிற்பம் இன்று வெளியே பாதுகாப்பின்றி உள்ளது. உடன் வள்ளி, தெய்வானை தேவியர் சிற்பங்கள் உடைந்துவிட்ட நிலையில் மார்புப்பகுதிவரை காணப்படுகின்றன. மயில் சிற்பம் முழுதாக உள்ளது. முருகனின் முகத்தில் சற்றே சிதைவு உள்ளது. அழகான பீடத்தில் இவை கிடத்தப்பட்டுள்ளன. பீடத்திலிருந்து பெயர்த்துவிட்டனர் எனத்தெரிகிறது. ஊர்ப்பூசல் ஒன்றின் காரணமாக இச்சிற்பங்கள் பெயர்க்கப்பட்டன எனக்கூறப்படுகிறது. அணிகலன்கள், ஆடை அமைப்பு என அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சிற்பங்கள். கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.
    
4         நாதம்பாளையம் நடுகல் சிற்பம்



திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகில் நாதம்பாளையம் என்னும் கிராமத்தில் காணப்படும் இந்த நடுகல் சிற்பத்தில் வீரன் தன் இடது கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு இருப்பதுதான் இப்பகுதியில் இதுவரை பார்த்த நடுகற்களினின்றும் இந்நடுகல்லை வேறுபடுத்திக்காட்டுகிறது. அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. சிதைவுகளின்றித் தெளிவாகவும் முழுமையாகவும் உள்ள சிற்பம். நாயக்கர் காலப்பாணியில் பெரிய தலைக்கொண்டை; நீண்ட செவிகளும் அவற்றில் த்டித்த காதணிகளும் உள்ளன. கழுத்தை ஒட்டிய கழுத்துச்சரமும், அதனை அடுத்துப் பதக்கத்துடன் கூடிய ஆரமும் தோள்வளையும், கைவளையும், கால் கழலும் சிற்பவடிவை அழகுசெய்கின்றன. வீரனின் வலது கையில் உள்ள ஆயுதம் ஒரு வேல்கம்பாக இருக்கக்கூடும். முழங்காலுக்குச் சற்று மேலே வரை ஆடை உடுத்தியுள்ளான். இடை ஆடையின் இருபுறமும் ஆடைத்தொங்கல்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி, புழக்கத்துக்கு வந்த காலகட்டமாக இருக்கவேண்டும்.

5         பாப்பம்பட்டி நினைவுக்கல் சிற்பம்



கோவை வட்டம் கோவில்பாளையம் அருகில் பாப்பம்பட்டியில் உள்ள கருகாளியம்மன்கோவில் வளாகத்தில் ஒரு நினைவுக்கல் சிற்பம் உள்ளது. சிற்பத்தை மேடைத் தளத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். இது மக்கள் வழிபாட்டில் உள்ளது. இச்சிற்பத்தில் ஆணும் பெண்ணும் நின்ற நிலையில் கைகளைக் கூப்பி வணங்கும் நிலையில் காணப்படுகிறார்கள். இருவரின் தலைக்குமேல் சிங்கமுக நாசி கானப்படுகிறது. ஆணின் தலைமுடி தெளிவாக இல்லை. கொண்டை அமைப்பு காணப்படவில்லை. பெண்ணின் தலைமுடியில் வலதுபுறமாகச் சரிந்த கொண்டை உண்டு. செவிகள் நீண்ட அமைப்பைக்கொண்டுள்ளன. செவிகள், கழுத்து, தோள்கள், கைகள் ஆகியவற்றில் அணிகள் மிக எளிமையான தோற்றத்தில் உள்ளன. ஆணின் வலது கையில் மட்டுமே தோள்வளை உள்ளது. இடது கையில் தோள்வளையும், முன்கையில் கைவளைகளும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. பெண்ணின் கைவளை பட்டையாக வேலைப்பாடுடன் உள்ளது. இருவரின் ஆடைகளும் பாதம் வரையில் உள்ளன. ஆனால்,  மடிப்புகள், கச்சைகள் ஆகியன இல்லாது மிக எளிமையாக வடிக்கப்பட்டுள்ளன. பெண்ணின் ஆடையில் மட்டும் இருபுறமும் தொங்கல்கள் காணப்படுகின்றன. ஆணின் வலது புறம் இரு முனைகளைக்கொண்ட சூலம் போன்ற ஓர் ஆயுதம் நிறுத்தப்பெற்றுள்ளது. இச்சிற்பம் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.


6         துங்காவி நினைவுக்கல்  சிற்பம்




உடுமலை அருகே துங்காவி என்னும் ஊரில் அமராவதி ஆற்றின் வாய்க்கால் உள்ளது. அதன் அருகே, ஒரு சிறிய செங்கல் கட்டுமானக்கோயில் உள்ளது. அக்கோயிலின் கருவறைக்கு அருகிலேயே, ஒரு சிறிய மாடம் மூடு அமைப்பினுள் ஆணும் பெண்ணுமாக இருக்கும் புடைப்புச் சிற்பமாக ஒரு நினைவுக்கல் உள்ளது. சிற்பம் அழகாக உள்ளது. இடுப்பளவு மட்டுமே உருவங்கள் தெரிகின்றன. மீதிப்பகுதி நிலத்துள் புதைந்து கிடக்கின்றது. உருவங்களின் தலைப்பகுதிக்கு மேலே மாலை போன்ற ஒரு தோரண அமைப்பு காணப்படுகிறது. ஆணும் பெண்ணும் இருவரும் கை கூப்பிய நிலையில் உள்ளனர். ஆண் தன் இடது பக்கமும், பெண் தன் வலது பக்கமும் கொண்டை முடியுடன் உள்ளனர். செவிகள், கழுத்து, கழுத்தை ஒட்டிய தோள்பகுதி மற்றும் கைகளில் அணிகலன்கள் அழகுறக் காணப்படுகின்றன. நிலத்தில் புதைந்த காரணத்தால் இடைப்பகுதியின் ஆடை அமைப்பை அறிய இயலவில்லை. சிற்பத்தின் காலம் தெரியவில்லை. 16-ஆம் நூற்றாண்டாக இருக்கக்கூடும்.


7         கோதவாடி தாய்த்தெய்வச் சிற்பம்



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்        கோதவாடி. தார்ச் சாலையின் ஓரத்தில் ஒரு சிறிய மரத்தடியில் அச்சிற்பம் இருந்தது. அது ஒரு பெண்ணின் சிற்பம். இரண்டடி உயரத்தில் சிறியவடிவம். பெண் தன் கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கிறாள். அவளது உடலை ஒட்டிய நிலையில் உடலின் இருபுறமும் பெண்ணை முட்டுகின்ற தோற்றத்தில் இரு மாடுகளின் உருவங்கள். பெண்ணின் தலை கொண்டை முடிந்த தோற்றம். காதுகளில் காதணிகள் உள்ளன. கைகளில் வளைகள் காணப்படுகின்றன. கணுக்கால் வரையிலான ஆடை. சிலையின் அருகில் மண்ணாலான ஒரு விளக்கு மாடம். சிலை முழுதும் ஆங்காங்கே திருநீற்றைப் பூசிக் குங்குமம் இட்டிருக்கிறார்கள். மக்கள் வழிபாட்டில் அச்சிலை உள்ளதுஊர் மக்கள், இச்சிலையை ஒட்டாலம்மன் என்னும் பெயரிட்டு வணங்கி வருகின்றனர். கருவுற்ற போயர்குலப்பெண் ஒருத்தி மாடுமேய்க்கும்போது மாடு பாய்ந்து இறந்து போனதாகவும் அவளே ஒட்டாலம்மன் என்னும் சிறுதெய்வமாக வழிபடப்படுகிறாள் என்பது ஒரு செவி வழிச்செய்தி. மற்றொரு செவிவழிச்செய்தியில், வேளாண்பணிக்குச் சென்ற கணவனுக்கு உணவு எடுத்துச் செல்லும் வழியில் கருவுற்ற அப்பெண் மாடு முட்டியதால் இறந்து போகிறாள். குழந்தையைக் கருவில் சுமந்த நிலையில் இறந்துபோவதால் குறியீட்டாகக் கையில் குழந்தையுடன் சிலையை வடித்துள்ளனர். சிலையை வடித்துவைத்தவர் மாகாளி ஆச்சாரி என்னும் சிற்பி என்பது ஒரு செய்தி.                                                                                                                
                                                                                                                      
8         கண்ணாடிப்புத்தூர் ஐயனார் சிற்பம்



உடுமலையை அடுத்துள்ள கண்ணாடிப்புத்தூரில் முள்மரங்களும் புதர்ச்செடிகளும் நிறைந்த ஓரிடத்தில் ஐயனார் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. ஒரு பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஐயனார் சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது. வலது காலைக் கிடை நிலையில் வைத்தும், இடது காலை உயர்த்தி மடக்கியும் அமைந்துள்ளது. தலைப்பகுதி ஜடா மண்டலத்துடன் காணப்படுகிறது. காதில் பத்திர குண்டலமும் கழுத்துப்பகுதியில் கழுத்தை ஒட்டியவாறு தடித்த கழுத்தணி ஒன்றும் கழுத்தின் கீழ், தொங்கிய நிலையில் ஆரம் ஒன்றும் காணப்படுகின்றன. வலது கையில் செண்டு வைத்திருக்கிறார். இடது கையை மடக்கிய நிலையிலிருக்கும் இடது காலின்மீது பதிய வைத்திருக்கிறார். கைகளில் தோள் வளையும், முன்கை வளையும் உள்ளன. மார்பின் குறுக்காக இடது தோளிலிருந்து கீழாகச் சரிந்து இடையின் வலப்பகுதியில் வளைந்து பின்னோக்கிப்பொகும் உபவீதம் என்னும் முப்புரி நூல் தடித்துக் காணப்படுகிறது. உயர்த்தி மடக்கிய இடது காலையும் வயிற்றுப்பகுதியையும் சேர்த்துப் பிணைக்கும் நிலையில் யோகப்பட்டை உள்ளது. இடையில் இடைக்கச்சு காணப்படுகிறது. தொடை மற்றும் கால் பகுதியில் ஆடை இருப்பது தெளிவாகப் புலப்படவில்லை. வலது காலில் கணுக்கால் பகுதியில் கழல் அணிந்திருப்பது போல் தோன்றுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 94449939156