மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 27 செப்டம்பர், 2019


பிராட்வே சாலையில் கிறித்தவத் தேவாலயங்கள்

முன்னுரை

அண்மையில், சென்னை சென்றிருந்தபோது ஒரு வேலை நிமித்தம் பிராட்வே சாலைக்குச் செல்லவேண்டியிருந்தது. மதராஸ் உயர்நீதி மன்றத்துக்கு எதிரே அமைந்துள்ள இச்சாலையில் பகல் ஒரு மணியளவில் ஒரு முகவரியைத் தேடி நடைப்பயணம். பெயரளவில் அகலச்சாலையாய் (BROADWAY) இருப்பினும், நடக்க நடக்க முடிவில்லாது நீண்டுகொண்டே சென்றது அந்த நீள் சாலை. நடை தந்த அயர்ச்சி, வெயில் தந்த புழுக்கம் இவற்றோடு தேடிப்போன முகவரியும் கிடைக்கவில்லை. ஆனால் வழியெங்கும் ஆங்காங்கே பழமையான கிறித்தவத் தேவாலயங்களின் கட்டடங்கள் உள்ளத்தை ஈர்த்தன. எனவே, முகவரி கிட்டாமல் திரும்பும் வழியில், அக்கட்டடங்களை ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டேன். ஊர் திரும்பியதும் அப்படங்களைப் பார்க்கும்போது அவை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம் என்னும் எண்ணம் வருத்தத்தை அளித்தது. ஆழ ஆய்வு செய்யும் சூழ்நிலை இல்லை எனினும் மேலோட்டமாக அவை பற்றிய தேடலில் கிடைத்த செய்திகளின் பகிர்வு இங்கே.

வெஸ்லியன் சாப்பல் -  WESLEYAN CHAPEL

சாப்பல் என்பது சிறியதொரு ‘சர்ச்என்னும் வழிபாட்டு மையத்தைக் குறிக்கும் எனலாம். ஒரு வீடு அல்லது ஒரு பெரிய கட்டடத்தின் அறை கூட ஒரு சாப்பலாக இயங்கமுடியும்.  கிறித்தவத்தின் பழமைச் செயல்பாட்டாளர்களிலிருந்து மாறுபட்டுப் புதுமையான ஒரு மறுமலர்ச்சிக் கோட்பாடு கொண்ட பலர் பல அமைப்புகளைத் தோற்றுவித்தனர். இவ்வமைப்புகள் ‘புரோட்டஸ்டண்ட்  (PROTESTANT) அமைப்பு என்னும் பொதுப்பெயரில் வழங்கின. இது, கத்தோலிக்க வழிபாட்டு மதத்திலிருந்து கிளைத்த புதிய அமைப்பாகும். மறு மலர்ச்சி  என்று இதைக் கருதலாம். ‘மறுமலர்ச்சி’, ’நற்செய்தி ஆகிய அடைமொழிகளோடு சுட்டப்பெறும் இவாஞ்சலிக்கல்  (EVANGELICAL) மற்றும் லூத்தரன்’ (LUTHERAN)  என்னும் பெயர் கொண்ட அமைப்புகளும் ‘புரோட்டஸ்டண்ட்  (PROTESTANT) அமைப்பைச் சார்ந்தவையே ஆகும்.  

வெஸ்லி சர்ச்  அமைப்பு, இங்கிலாந்து சர்ச்  (CHURCH OF ENGLAND)  என்னும் மரபு சார் அமைப்பிலிருந்து ஜான் வெஸ்லி என்பாரின் கொள்கையில் பிரிந்த ஒரு மறுமலர்ச்சிப் ‘புரோட்டஸ்டண்ட்  (PROTESTANT) அமைப்பாகும்.  இது மெதடிஸ்ட் இயக்கம்’ (METHODIST MOVEMENT) என்று குறிப்பிடப்படுகிறது.

பிராட்வே சாலை அமைந்திருக்கும் பகுதியில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரை கடல் நீர் தொடர்ந்து உட்புகுதலும் வெளியேறுதலும்  நிகழ்ந்தவண்ணமே இருந்தன. இதன் விளவாக ஒரு பக்கம் மண் திட்டுகளும் மற்றொரு பக்கம் நீர்ப்பள்ளங்களும் தோன்றின. திட்டுப்பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர்.  சில பள்ளங்கள் வடிகால்களாய் (DRAINAGE) மாறின. பிராட்வே சாலை இருக்கும் இப்பகுதி அட்டப்பள்ளம் என்னும் வடிகால் பகுதியாக அறியப்பட்டது. இதன் பெரும்பகுதி, ஸ்டீஃபன் பொஃபாம் (STEPHEN POPHAM)  என்பவருக்குச் சொந்தமாயிருந்தது. இவர் இங்கிலாந்தில் ஒரு M.P. பதவியில் இருந்தவர். 1778-இல் சென்னையில் குடியேறியவர். பின்னர், கல்கத்தாவில் ADVOCATE GENERAL ஆகப் பதவியேற்றவர். இவர் பெயரால் POPHAM’S BROADWAY என்று இச்சாலை அழைக்கப்பெற்றது.

வெஸ்லி இயக்கத்தார் (WESLEYAN MISSION)  கி.பி. 1817-ஆம் ஆண்டு சென்னையில் கால் பதித்த சில நாள்களில் முதலில் சிறியதொரு சாப்பல் கட்டப்பட்டது. பின்னர், பொருள் திரட்டிச் சற்றுப் பெரிய அளவில் 1822-இல் இப்போதுள்ள வெஸ்லியன் சாப்பல் (WESLEYAN CHAPEL) கட்டப்பட்டது. தரைத்தளத்தில் அலுவலகமும், மக்கள் கூடும் கூடமும் அமைந்தன. வழிபாட்டுக் கூடம் மாடியில் அமைக்கப்பட்டது. சாரா வெஸ்லி (SARAH WESLEY) என்பவர் ஜான் வெஸ்லியின் (JOHN WESLEY) உடன்பிறந்தவர். இப்பெண்மணி, தமிழகத்தில் தங்கிப் பல ஊர்களுக்கும் பயணம் சென்றதன் நிகழ்வுகள் குறித்து இங்கிலாந்திலிருந்த தம் தோழிக்குக் கடிதங்கள் வாயிலாகப் பகிர்ந்துள்ளார். இது நூல் வடிவில் வெளியிடப்பெற்றது. இதில் அவர் சில ஓவியங்களையும் வரைந்துள்ளார். இவர் கி.பி. 1848-இல் வரைந்த வெஸ்லியன் சாப்பல் -  WESLEYAN CHAPEL   ஓவியங்களைக் கீழே காணலாம்.





வெஸ்லியன் சாப்பல்-இன்றைய தோற்றம்


சாரா வெஸ்லி வரைந்த ஓவியம்-கி.பி. 1848


ஓவியத்தின் மற்றொரு தோற்றம்



சி.எஸ்.ஐ. வெஸ்லி (C.S.I. WESLEY)  தமிழ் ஆலயம்

கி.பி. 1861-ஆம் ஆண்டு கட்டப்பெற்ற இந்த ஆலயம் செங்கற் சிவப்பு நிறம் கொண்ட ஒரு கட்டடம். இந்த ஆலயத்தில் 2013-ஆம் ஆண்டில் சென்னை ‘மெட்ரோஇரயில் நிறுவனத்தாரின் நிலத்தடி அகழ்வுப்பணியின் போது  தரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு நிலத்தடியிலிருந்து நீர் வெளிப்பட்டு நிரம்பியது.


     சி.எஸ்.ஐ. வெஸ்லி (C.S.I. WESLEY)  தமிழ் ஆலயம்



ஆர்க்காடு லூத்தரன் தேவாலயம் (ARCOT LUTHERAN CHURCH)


1863-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட டானிஷ் மிஷனரி சர்ச் (DANISH MISSIONARY CHURCH) என்னும் அமைப்பினரால் நடத்தப்பெறுகின்ற கிறித்தவச் சபை பின்னாளில் ‘லூத்தரன் சபை’  என்னும் பெயர் பெற்றது.  ஆர்க்காட்டுபகுதியின் லூத்தரன் அமைப்பில் சென்னையில் 1892-ஆம் ஆண்டு பிராட்வேயில் இந்த தேவாலயம் கட்டப்பெற்றது. இதன் கட்டட அமைப்பு “கோதிக்” (GOTHIC) கட்டடக் கலை அமைப்பைக்கொண்டது.  லார்சன் என்பவர் (L.P. LARSEN) இந்த ஆலயத்தின் முதல் சமய ஆசான் (PASTOR) ஆவார். 



ஆர்க்காடு லூத்தரன் தேவாலயம் - முன்புறத்தோற்றம்




ஆர்க்காடு லூத்தரன் தேவாலயம் - பின்புறத்தோற்றம்


சி.எஸ்.ஐ. டக்கர் தேவாலயம் (C.S.I. TUCKER CHURCH)


”சர்ச் மிஷனரி” (CHURCH MISSIONARY SOCIETY) அமைப்பினரால் 1820-ஆம் ஆண்டு நிறுவப்பெற்ற டக்கர் தேவாலயம், இதன் இரண்டாவது சமயப் பரப்பாளரான ஜான் டக்கர் (JOHN TUCKER) என்பவர் பெயரால் இயங்கியது. முசல்மான் ஒருவரிடமிருந்து வாங்கப்பெற்ற நிலத்தில் இத்தேவாலயம் கட்டப்பெற்றது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேல் பழமையுடைய இந்த தேவாலயத்தின் சன்னலின் மரக்கதவுகள், திறந்து மூடும் வகையில் மடிப்புப் பலகைகள் கொண்டவை (SHUTTER-WINDOWS).  ஆனால், இவை காலப்போக்கில் கண்ணாடிக் கதவுகளாக மாற்றப்பட்டுவிட்ட போதிலும், இந்த தேவாலயத்தில் உள்ள ஓர் இசைக்கருவி மட்டும் அதன் பழமை மாறாமல் இன்னும் புழக்கத்தில் இருந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த இசைக்கருவி குழல்களின் தொகுப்புக்கொண்டு (PIPE ORGAN) செய்யப்பெற்றவை. இலண்டன் நகரில் செய்யப்பட்ட இக்குழல் கருவி நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும், ஒவ்வொரு ஞாயிறன்றும் தமிழ் வழி நடைபெறுகின்ற இறைவழிபாட்டுச் சடங்குகளில் இக்கருவி உரக்க ஒலிப்பதைக் காணலாம். இந்தத் தேவாலயத்தையும் மேலே குறிப்பிட்ட சாரா வெஸ்லி (SARAH WESLEY)  ஓவியமாக வரைந்துள்ளார். அந்த ஓவியத்தின் வடிவம் மாறாமல் இன்றும் இந்தத் தேவாலயம் காட்சியளிக்கிறது எனக்கூறப்படுகிறது. (இந்த ஓவியத்தின் படம் கட்டுரை ஆசிரியருக்குக் கிடைக்கவில்லை.)



சி.எஸ்.ஐ. டக்கர் தேவாலயம் 

                                                        குழல் இசைக்கருவியின் எடுத்துக்காட்டு
சி.எஸ்.ஐ. டக்கர் தேவாலயத்தில் உள்ள இசைக்கருவி அல்ல


பின்னுரை


முன்னுரையில் குறிப்பிட்டவாறு பிராட்வே சாலையில் தேடிப்போன முகவரி அங்குக் கிடைக்கவில்லை; பிராட்வே சாலைக்கு இணையாக மேற்குப்புறம் அமைந்த ஒரு சிறு தெருவில் அந்த முகவரி இருப்பதாகத் தெரிந்து அங்கு சென்றேன். தெருப்பெயர் “ஸ்ட்ரிஞ்சர்”  தெரு.  இந்தத் தெருப்பக்கம் வருவது இதுவே முதல் முறை. இந்தப் பெயரையும் கேள்வியுற்றதில்லை. சென்னையில் ஏழு ஆண்டுகள் இருந்தும், வரலாற்று நோக்கில் சென்னையைச் சுற்றிப்பார்க்காத ஒரு மடமை என்னை அழுத்தியது. இப்போது சிறிது சிறிதாக வரலாற்றுக் குறிப்புகளைத் தெரிந்துகொண்டு வருவது ஆறுதல் தருகின்றது. இருப்பினும், நாம் சிறிது சிறிதாகத் தெரிந்துகொள்வதும் கற்றுக்கொள்வதும், நாம் கற்றுக்கொள்ளாதது நம்முன் பெரிதாக விரிந்து கிடக்கிறது என்பதை உணர்த்துகிறது என்பதுவே உண்மை.  பிராட்வே பயணம் ஜூலை, 1, 2019 அன்று. “ஸ்ட்ரிஞ்சர்”  தெருவும் ஒரு வரலாற்றுச் செய்தியைத் தன்னுள் வைத்திருக்கிறது என்பதை  ஜூலை, 21, 2019 அன்று, கோவைப் புத்தகத் திருவிழாவில் வாங்கிய ”காலனியத் தொடக்க காலம் – கி.பி. 1500-1800”  என்னும் தலைப்பிலான நூல் சுட்டியது. நூலாசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் (S. JEYASEELA STEPHEN).  NCBH வெளியீடு.

”புதுச்சேரியை ஆண்டுவந்த பிரெஞ்சுக்காரர்கள் 1746-இல் மதராசை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். இந்நிகழ்வு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரை முழு அளவிலான ஒரு படை அமைப்பைத் தோற்றுவிக்கத் தூண்டியது. 1748-இல் மேஜர் ஸ்ட்ரிஞ்சர் லாரன்ஸ் (MAJOR STRINGER LAWRENCE) 2000 சிப்பாய்களைக்கொண்ட மெட்ராஸ் படையைத் தோற்றுவித்தார்”  என்பது நூலில் உள்ள செய்தி.  இந்தத் தளபதியின் பெயரால் மேற்படி தெரு அழைக்கப்பட்டுள்ளது.   

பிரிட்டனின் கலைக் களஞ்சியமான ”என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா” (ENCYCLIPAEDIA BRITTANICA) கூறுகின்ற செய்தி: கி.பி. 1750-இல் பணியைத் துறந்து தாய் நாடு சென்றவரைக் கி.பி. 1761-இல் திரும்ப அழைத்துக் கிழக்கிந்தியக் கம்பெனியின் அனைத்துப் படைகளுக்கும் தலைமைத் தளபதியாக ஆக்கியது கம்பெனி. இவருக்குக்கீழ் பணியாற்றிய கிளைவ் இவருக்கு உற்ற நண்பராய் இருந்தார். கிளைவுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி வாள் பரிசு தந்து பெருமைப்படுத்தியபோது, தம் படைத்தலைவராயிருந்த ஸ்ட்ரிஞ்சர் லாரன்ஸ்  புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து கிளைவ் பரிசைப் பெற மறுத்திருக்கிறார். ஸ்ட்ரிஞ்சர் லாரன்ஸ் பணி நிறைவில் நாடு திரும்பியபோது, ஓய்வூதியம் உரியவாறு கிடைக்கச் செய்து அவருடைய பொருளாதாரச் சூழல் தந்த சங்கடத்தை நீக்கியுள்ளார்.  








துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.



புதன், 11 செப்டம்பர், 2019



திருவல்லா விண்ணகரத்தில் ஓணம் பண்டிகை

திருவல்லா

திருவல்லா, திருவாங்கூர் மாநிலத்தில் திருவல்லா வட்டத்தில் அமைந்த ஓர் ஊராகும். இங்குள்ள விண்ணகரம் (விஷ்ணு கோயில்), கேரளத்து மலைநாட்டுத் திவ்வியதேசங்கள் பதின்மூன்றனுள் ஒன்று என்னும் சிறப்புடையது. ஆழ்வார்களில் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இதன் சிறப்பைப் பாடியுள்ளார்கள். இதன் பழம்பெயர் திருவல்லவாழ் என்பதாகும். கோயிலில் எழுந்தருளிய இறைவன் திருவல்லவாழப்பன் என்றும், திருவல்லவாயப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் கிடைக்கப்பெற்ற செப்பேடு “ஹுஜூர் கருவூலச் செப்பேடுகள்  (HUZUR TREASURY PLATES)  என்னும் பெயரால் அழைக்கப்படும் செப்பெடுகளில் ஒன்று. நாற்பத்து நான்கு ஏடுகளும், அறுநூற்று முப்பது வரிகளும் கொண்டது. சில ஏடுகள் இல்லை.  தற்போது இது திருவனந்தபுரம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் (NAPIER MUSEUM) வைக்கப்பட்டுள்ளது.

திருவல்லா செப்பேடு

திருவல்லா செப்பேடு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நிலக்கொடைகளைப் பற்றியும், அவற்றைக்கொண்டு கோயிலின் வழிபாடு மற்றும் பிற நிவந்தங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றது. அழகான வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. 

திருவல்லா கோயிலும் ஓணம் பண்டிகையும்

திருவல்லா செப்பேடு, ஓணம் பண்டிகையின்போது கோயிலில் என்னென்ன வழிபாடுகள் நடந்தன, அவற்றுக்கான நிவந்தங்கள், நிவந்தப்பொருள்கள் என்னென்ன என்பதைப்பற்றிப் பல செய்திகளைக் கூறுகிறது.  அச்செய்திகள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.


ஓணம் திருவிழா, ஆவணி மாதத்தில் ஏழு நாள்கள் கொண்டாடப்பெற்றது.  ஓணத்திருவிழாச் செலவினங்களுக்காகக் கொடுக்கப்பட்ட நிவந்த நிலங்கள் இரண்டு. ஒன்று, இடைச்சேரி என்னும் ஊரில் இருக்கும் சேந்தன் கேசவன்  என்பானின் வெளியனார்க்காடு என்னும் பெயரமைந்த நிலம். இந்நிலத்திலிருந்து எண்பது பறை நெல் பெறப்பட்டது. மற்றொரு நிலம் முஞ்ஞி நாட்டில் இருந்த திருவோணக்கரி என்னும் நிலம். இந்நிலத்திலிருந்து நூற்றிருபத்தைந்து பறை நெல் பெறப்பட்டது. பறை என்பது மலபார்ப் பகுதியில் வழங்கிய முகத்தல் அளவை.

நெல்லின் பயன்பாட்டு அளவும், பயன்பாட்டு இலக்கும் கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன.

நெல் அளவு                   இலக்கு

  40 நாழி                   ஐந்து காணம் அளவுள்ள கற்பூரம்
  5 நாழி                   பத்து காணம் அளவுள்ள சந்தனக் குழைவு
 10 நாழி                   பத்து காணம் அளவுள்ள அகில்  (அகிற் புகைக்காக)
700 நாழி (அரிசி)          கோயிலின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில்
                                     இருக்கும் சன்னதிகளின் இறைவர்க்கு அமுதுபடிக்காக.
                                    கோயிலின் மடைப்பள்ளியில் பயன்பாட்டில் இருக்கும்
                                    கோயில்  நாழி அளவைக் கருவியால் அளந்தவாறு.
                                    இந்த அமுதில் அரைப்பகுதி கோயிலில் கல்வி பயிலும்
                                     மாணாக்கர்க்காக.
 4 நாழி அரிசியால்
   சமைத்த அமுது        கோயிலில் எழுந்தருளியிருக்கும் வராகப்பன்
                                             இறைவர்க்கு அமுதுபடியாக.
4 நாழி அரிசியால்
  சமைத்த அமுது         திருவாயம்பாடியில் உள்ள கிருஷ்ணன் 
                                            இறைத்திருமேனி அமுதுபடிக்காக.
4 நாழி                              ஆதிரசாலை என்னும் மருத்துவ மனைக்காக.
                                           (ஆதுல சாலை, ஆதுரசாலை எனவும் வழங்கும்).

4 நாழி                      கோயிலில் எழுந்தருளியிருக்கும் அய்யப்பன்
                                  இறைவர் அமுதுபடிக்காக. (இவர் ஆரியா, சாஸ்தா 
                                   எனவும் அறியப்படுகிறார்.)
12 நாழி                     பூத பலிக்காக.
16 நாழி                     மஹாயக்ஷி (மாயியக்கி)க்காக.
20 நாழி                     கோயில் தானத்தாருள் மேல் எம்பெருமக்கள்
                              இருவர்க்காக. இவர்கள்  மேல்சாந்தி என்னும்
                              பெயர் கொண்ட பூசையாளர் ஆவர். (இன்றும்,
                              சபரி மலைக்கோயில் பூசகர், மேல் சாந்தி                                     
                              என்றழைக்கப்படுவதைக் காண்க.)
50 நாழி                     கீழ் சாந்திக்கார் என்றழைக்கப்பெறும் மேல்
                              சாந்தியாரின் உதவியாளர் ஐவர்க்காக.
4 நாழி                  கோயிலின் பட்டர்களுக்காக.
4 நாழி                   கோயிலின் கீழ் சமஞ்சிதனுக்காக. சமஞ்சிதன்
                               என்பான் ஊர்க்கணக்கன் அல்லது (சதுர்வேதி
                               மங்கலத்துச்) சபைக்கணக்கன் ஆவான்.
20 நாழி                 கோயிலின் ஐந்து பண்டாரிகளுக்காக.
                               கோயில் கருவூலம் பண்டாரம் என்றும், கருவூலப்
                               பனியாளர்  பண்டாரகர் என்றும் பெயர் கொள்வர்.
4 நாழி                   கோயிலுக்கு வெற்றிலை வழங்குகின்றவனுக்கு.
                               கல்வெட்டில் “இலையிடுபவன்  என்று குறிக்கப்
                               படுகிறது.
4 நாழி                   கோயிலின் வாயிற்காவலர்க்கு.
3 நாழி                   கோயிலில் ஸ்ரீபலியின்போது பறை அல்லது முரசு
                             கொட்டும் ஆளுக்கு.
99 நாழி                கோயிலில் பணிபுரியும் ஏவல் பணியாளர் முப்பத்து
                               மூவருக்கு.
8 நாழி (அரிசி)               கோயிலின் உள்புறத்தைப் பெருக்கும் (தூய்மைப்
                                           படுத்தும்) ஆள்கள் நால்வருக்கு.
20 நாழி (அரிசி)              மடைப்பள்ளிக்கு விறகிடுவான் ஒருவனுக்கு.
20 நாழி                 மடைப்பள்ளிக்கு வேண்டிய மண் கலன்கள் செய்து
                               தருகின்ற கலவாணியன் ஒருவனுக்கு. (மண் கலன்கள்
                               குசக்கலம்  என்று கல்வெட்டுகளில் சுட்டப்பெறும்.)
4 நாழி                       அடையமிர்து என்னும் வெற்றிலை-பாக்குக்காக.
8 நாழி                        பூமாலைகள் கட்டித்தருகின்ற திருப்பள்ளித்தாமம்
                                   கட்டுமவன் நான்கு பேருக்கு.
8 நாழி                        கோயிலின் வெளிப்புறத்தைப் பெருக்கும்                               
                                   ஆள்களுக்கு.
4 நாழி                       கோயிலின் மதிலுக்கு வெளிப்புறத்தைப் பெருக்கும்                                                            ஆள்களுக்கு.
5 நாழி                       கோயில் கணக்கனுக்கு.
5 நாழி                       வக்காணித்திருக்கும் பட்டர்கள் ஒவ்வொருவர்க்கும்.
                                   வக்காணிப்பார் என்பவர், சாத்திரம் முதலானவற்றை
                                   விரித்துரைத்து விளக்கம் அளிப்போராவர்.
3 நாழி                       கை விளக்கும், வெற்றிலை பாக்கும் கொடுப்பவனுக்கு.
12 நாழி                      தேவரடியார் நால்வருக்கு.
6 நாழி                       இசைக்கருவிகள் கொட்டுபவர் ஒவ்வொருவர்க்கும்.


இவை தவிர,  நெல் வருவாயைக் கொண்டு ஓணம் பண்டிகைக்குக் கீழ் வரும்
பொருள்கள் பெறப்பட்டன.
நெய்  -   எட்டு நாழி; நெய்யை அளக்க இடங்கழி  என்னும் முகத்தல் அளவுக்கருவி பயன்பாட்டில் இருந்தது.
எண்ணெய்  -  ஐந்து நாழி, “இடங்கழிக் கருவியால் அளந்தவாறு.
மிளகு  -  நாழி,  “இடங்கழிக் கருவியால் அளந்தவாறு.
சீரகம்  -  நாழி,   உழக்குக் கருவியால் அளந்தவாறு.
காயம்  (பெருங்காயம்)  -  ஒரு பலம்.
தேங்காய்  -  அறுபது.
வாழைப்பழம் -  ஆறு குலை.
வாழைக்காய்  -  ஏழு குலை.
வெற்றிலை   -   பதினாயிரம்; அதற்கேற்றவாறு அடைக்காய் (பாக்கு).
கற்பூரம்  -   ஐந்து காணம்.
உப்பு, புளி  -   அளவு குறிப்பிடப்படவில்லை.
பசறு   -   பயறு (பச்சைப்பயறு). இரண்டரைப் பறை நெல் இதற்குத் தேவைப்பட்டது.
வாகைப்பொடி  -   இரண்டு நாழி.

ஓணத்தன்று, சிறுகாலைப் பூசையின்போது திருவமுது இருநூற்று நாழி சமைக்க விதை நெல் இருபத்தைந்து பறை பயன்பட்டது.

அறியப்பெறும் கோயில் நடைமுறைகள்

இடைக்காலத்தில், தமிழகத்தில் சேர நாடு தனித்தன்மையை நோக்கி (கேரளம்) மாற்றம் உற்றது எனலாம். 10-11 நூற்றாண்டுகள் அளவில் கேரளத்தின் அடையாளம் முழு அளவில் வெளிப்படுவதைக் காணலாம். மலை மண்டிலம் என்னும் சொல்லாட்சியும், மலையாண் என்னும் முன்னொட்டுச் சொல்லும் கல்வெட்டுகளில் மிகுதியும் பயில்கின்றன. மலையாண் சியல் விளக்கு என்றொரு கேரள நாட்டு விளக்கு குறிப்பிடப்படுகிறது. அதுபோலவே, மலையாண் பரிவாரம், மலையாண் ஒற்றைச் சேவகர் ஆகிய பெயர்களில் மலையாளத்தாரைக் கொண்ட சோழர் படைப்பிரிவுகள் இருந்துள்ளன. இவ்வகை வெளிப்பாட்டை எடுத்துக்காட்டும் பல கூறுகளைத் திருவல்லா செப்பேட்டிலும்  நாம் காண முடிகின்றது. தமிழகக் கல்வெட்டுகளில் கோயில் பூசையாளர்கள் உண்ணாழிகையுடையார், உண்ணாழிகைப் பெருமக்கள் என்னும் பெயரில் வழங்கும்போது, திருவல்லா செப்பேட்டில் பூசை என்பதற்குச் “சாந்தி  என்னும் சொல்லும், பூசையாளரைக்குறிக்க “மேல் சாந்தி,  “கீழ்சாந்தி   ஆகிய சொற்களும் வழங்குகின்றன. மேல் சாந்தி என்பவர் முதன்மை அருச்சகர் ஆவர். கீழ் சாந்தி எப்ன்பவர் மேல் சாந்திகளின் உதவியாளர் ஆவர். சாந்திகள் இருவரும்  சாந்தியடிகள், சாந்திக்கார் என்னும் பொதுப்பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். 

அய்யப்பன் வழிபாடு கேரளத்தில் நிலைகொள்வதைக் காண்கிறோம். கோயிலின் பரிவாரக் கடவுளாக அய்யப்பனுக்குத் தனிச் சன்னிதி திருவல்லா திருவல்லவாழப்பன் பெருமாள் கோயிலில் அமைந்திருந்தது. அது போலவே, மாயியக்கி என்னும் பெண் தெய்வத்துக்கும் பரிவாரச் சன்னதி அமைந்திருந்தது.  (கட்டுரை ஆசிரியர் கருத்து : செப்பேட்டில் “அய்யப்பன்”,  மாயியக்கி  எனக் குறிப்பிடப்பெறும் சொற்களை விளக்கும்போது நூல் பதிப்பாளர், முறையே “ஆர்யாஅல்லது சாஸ்தாஎன்றும், “மஹாயக்ஷி  என்றும் சுட்டுகின்றமையை நோக்கும்போது, சமணம் சார்ந்த சாத்த வழிபாடும், யக்ஷி வழிபாடும் வைணவ வழிபாட்டுக்குள் இயைந்து போகும் வகையில் பெருஞ்சமயம் அவற்றை அணைத்துச் செல்லும் பாங்கு புலப்படுகிறது.)

அரசுக்கும் கோயிலுக்கும் தனித்தனியே கருவூலங்கள் இருந்தன. கோயில் கருவூலங்களைக் குறிக்க “ஸ்ரீபண்டாரம்  என்னும் சொல் வழங்குவதைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். திருவல்லா செப்பேட்டில் கோயில் கருவூலத்தின் பெயர் குறீப்டப்படவில்லை; கோயில் கருவூலங்களைக் காப்பவரும் கருவூலக் கணக்குகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பேற்ற கணக்கரும் பண்டாரிகள் என்று சுட்டப்பெறுவர். பண்டாரகள் ஐந்து பேர் இக்கோயிலில் பணியாற்றினர் என்று செப்பேடு குறிப்பிடுகிறது. கோயிலின் நிவந்தங்கள் பற்றிய கணக்குகளைப் பார்த்துக்கொள்ளத் தனியே கணக்கன் உண்டு. கோயிலின் பல்வேறு நிவந்தங்கள் பற்றிய ஆவணங்களை எழுதும் பொறுப்பும் இவனுடையதே. தமிழகக் கல்வெட்டுகளில் “கணக்கன்  என்று குறிக்கப்பெறும் ஆள் திருவல்லா செப்பேட்டில் “சமஞ்சிதன்என்று குறிக்கப்ப்டுகிறான். இது மலையாள வழக்காகலாம்.

கோயில்களில், இசைக்கருவிகளை (வாத்தியங்கள்) இசைப்போர் இருந்தனர். இவர்கள், “உவச்சர் எனப்பட்டனர். வேணாட்டுச் செப்பேடுகளில் உவச்சகள்  எனக் குறிப்பிடப்படுகிறார்கள். திருவல்லா செப்பேடு, கொட்டுமவாள்  எனக்குறிக்கிறது. உவச்சகள்”, ”கொட்டுமவாள்ஆகிய சொற்களில் மலையாளச் சாயல் படர்ந்துள்ளதைக் காணலாம்.  உவச்சர்கள் கொட்டுகின்ற (இசைக்கின்ற) இசைக்கருவிகளாக மத்தளம், பறை, முரசு, பஞ்சமகாசப்தம் ஆகியவை சுட்டப்பெறுகின்றன. செண்டை, திமிலை, சேகண்டி, கைத்தாளம் காகளம் (காளம்?)  ஆகியன பஞ்சமகாசப்தத்தில் அடங்கும். வழிபாடு (பூசை),  ஸ்ரீபலி என்னும் நிகழ்வு ஆகியவற்றின்போது உவச்சர்கள் கொட்டுவார்கள்.

கோயில்கள் கல்விச்சாலையாகப் பயன்பட்டுள்ளமை அறிகிறோம். கல்வி பயிலும் மாணாக்கர்க்கு ஓண விழாவின்போது சமைக்கபடும் அமுதில் அரைப்பகுதி மாணாக்கர்க்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலைச் சார்ந்து அதன் நிருவாகத்தில் ஆதுல சாலை என்னும் மருத்துவ மனை இருந்துள்ளது  எனத்தெரியவருகிறது. இந்த ஆதுல சாலைக்கும், ஓணத்திருவிழாவின்போது நான்கு நாழி அமுது அளிக்கப்பட்டது.


கோயில்களில் சமயம் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற்றன என அறிகிறோம். பாரதம் (மகாபரதம்)  படிக்கப்பட்டது. மெய்யியல் (PHILOSOPHY) சார்ந்த சமற்கிருத நூல்களான பிரபாகரம்” (PRABHAKARAM),   வைசேஷிகம்” (VAISHESHIKAM)  ஆகியவையும், சில சாத்திரங்களும் கோயில்களில் விரிவான உரையுடன் விளக்கப்பட்டன என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அவ்வகையாக விரித்துரைக்கும் அறிஞர்களைக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் “வக்காணிப்பார் என்று குறிக்கின்றன. திருவல்லா செப்பேடும், ஓணத்திருவிழா நடைபெறும் ஏழு நாள்களில்  “மதிலகத்தன்று வக்காணிச்சிருக்கும் பட்டகள்   ஒவ்வொருவர்க்கும் ஐந்து நாழி அரிசி வழங்கப்பட்டதாகக் கூறுகிறது. (கட்டுரை ஆசிரியர் கருத்து :  “வக்காணித்தல்என்பதற்குக் கல்வெட்டு அகராதி, விரித்துரைத்தல், விளக்கஞ் செய்தல் எனப்பொருள் தருகின்றது. இச்சொல், நல்ல தமிழ்ச் சொல்லா அல்லது தமிழ்ச் சொல்லிலிருந்து திரிபுற்ற சொல்லா என்பது ஆய்வுக்குரியது.  ஆனால், மக்களிடையே இன்றும் புழங்குகின்ற ஒரு எளிமையான சொல்லுக்கும் வக்காணித்தலுக்கும்  தொடர்புள்ளதாகத் தெரிகிறது. மக்கள் வழக்கில் இன்றுள்ள ஒரு சொல் “வக்கணை  என்பது.  வக்கணையாகப்  பேசுதல் என்னும் மக்கள் வழக்கு, ஒருவகையில் விளக்கமாகவும், விரித்தும் பேசுகின்ற ஒரு செயலைச் [வக்காணித்தலை] சுட்டுகிறது என்பதில் ஐயமில்லை.) மேற்படி செப்பேடு குறிக்கின்ற வக்காணிச்சிருக்கும் பட்டகள்பிராமணர் என்றறிகிறோம். மதிலகத்தன்று  என்பதை மதிலகத்து+அன்று  எனப்பிரித்து, ஓணத்து விழா நாளில் கோயிலின் (கோயில் சுவரின்) உள்புறத்தில் என்று பொருள் கொள்ளலாம்.

அடுத்து, தேவரடியார்கள். கோயில்களில் தேவரடியார் பணி செய்துள்ளமை நன்கு அறியப்பட்ட செய்தி. திருவோணப் பண்டிகை நாள்களில் மேற்படி கோயிலில் அவர்களும் பங்கேற்றுப் பணியாற்றியுள்ளனர் என்றும் அவர்கள் நால்வருக்குப் பன்னிரண்டு நாழி அரிசி வழங்கப்பட்டது என்று செப்பேடு கூறுகிறது.

கோயில் பணியாளர் பலர் இருந்துள்ளனர். இலை இடுபவன் (வெற்றிலை வழங்குபவன்), வாயிற்காவலன், மடைப்பள்ளிக்கு வேண்டிய மண் கலன்கள் செய்து தருகின்ற கலவாணிகன், மடைப்பள்ளிக்கு விறகிடுவான், திருப்பள்ளித்தாமம் கட்டுபவன், கோயிலைப் பெருக்கித் தூய்மைப்படுத்துபவன் (அடிக்குமவன்), ஏவல் பணியாளர் (விளிக்குமவாள்) எனப் பலரும் கோயிற்பணி செய்துள்ளனர்.  ஆனால், மடப்பள்ளியில் அமுது (உணவு)  சமைப்பவனைப் பற்றிய குறிப்பு செப்பேட்டில் இல்லாதது வியப்பாயுள்ளது.


                                                            எடுத்துக்காட்டு-1
திருவல்லா செப்பேடு


                                                            எடுத்துக்காட்டு-2
திருவல்லா செப்பேடு



துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.



திங்கள், 2 செப்டம்பர், 2019


சற்று அரிதாய் ஒரு கல் தொட்டி

முன்னுரை

ஜூன், 2019 10-ஆம் நாள். நம்பியூரிலிருந்து ஹரி கிருஷ்ணன் என்னும் இளைஞர் தொலை பேசியில் அழைத்துப்பேசினார். தாம் நம்பியூருக்கருகில் இருக்கும் கிடாரை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும், தொல்லியலில் ஆர்வம் உண்டு என்றும், தம் ஊர்ப்பகுதியில் சில கல் தொட்டிகளைக் கண்டறிந்து வைத்துள்ளதாகவும், அவற்றில் இரண்டு தொட்டிகளில் எழுத்துப் பொறிப்புகள் இருப்பதாகவும் கூறி இக்கட்டுரை ஆசிரியரை நேரில் வந்து பார்க்கும்படிக் கேட்டுக்கொண்டார். கிடாரை என்னும் ஊர்ப்பெயரே சற்று வியப்பை அளித்து ஆர்வத்தை ஏற்படுத்தியது. கேள்விப்பட்டிராத ஒரு பெயர். கொங்குப்பகுதியில் மழைக் காலம் என்பதால் ஜூன் மாதத்தில் நம்பியூர் செல்ல இயலாது போனது. ஜூலை மாதம் 24-ஆம் நாள் கட்டுரை ஆசிரியர் நம்பியூர் சென்று கல் தொட்டிகளைப் பார்வையிட்டதில் புதிய செய்தி ஒன்றைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அது பற்றிய பகிர்வு இங்கே.

கல் தொட்டிகள்

வரலாற்றில் கொங்குப்பகுதி, கால்நடை  வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் தொழிலுக்குப் பெயர் பெற்றது. “ஆ கெழு கொங்கு  என்னும் இலக்கிய வரி பலரும் அறிந்த ஒன்று. எனவே, ஆங்காங்கே, சிற்றூர்கள் பலவற்றில் கால்நடைகள் நீர் அருந்த வகை செய்யும் கல் தொட்டிகள் இருப்பதைக் காணலாம். இதில் வியப்பொன்றுமில்லை. அவற்றில் ஒரு சில கல் தொட்டிகளில் எழுத்துப் பொறிப்புகளும் இருந்துள்ளன. அக் கல்தொட்டிகளை அமைத்துக் கொடுத்தவர் பெயர் பொறிக்கப்பட்டவையாக அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன.

சாலைவழி நடைப்பயணம்

மேலே குறிப்பிட்ட கல்தொட்டிகள் ஊருக்குள் காணக்கிடைப்பவை. இவ்வகைக் கல்தொட்டிகள் தவிர வேறுவகைக் கல்தொட்டிகளும் உண்டு. அவை, சாலைப் புறங்களில் காணப்படும் கல்தொட்டிகள். பழங்காலத்தில், சாலைப்போக்குவரத்தில் இன்றுள்ளவாறு வண்டி-வாகனங்கள் மிகுதியாய் இருக்கவில்லை. சாலைகளில் நடந்து செல்வோர் மிகுதியாய் இருந்தனர். வணிகப்பண்டங்களை ஊர் விட்டு ஊருக்கு எடுத்துச் செல்வோர், மாட்டுவண்டிகளில் எடுத்துச் சென்றனர்.  சிறு வணிகர்கள் தம் வணிகப் பண்டங்களைப் பொதிகளாகச் செய்து கழுதை அல்லது மாடுகளைச் சுமக்கவைத்துச் சென்றனர். கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் இருந்தவர்கள் தம் கால்நடைகளை இடம் மாற்றிக் கொண்டு செல்லும்போது சாலைகளில் நடைப்பயணமாகவே செல்வர். கால் நடைகளுக்கான சந்தைகளுக்கும் இவ்வாறே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கால்நடைகளை ஓட்டிச் செல்வோருக்கும் நடைப்பயணமே வழி.  இவ்வாறாகப் பல்வேறு தரப்பினர்க்கும் சாலை வழி நடைப்பயணமே பயன்பாட்டில் இருந்தது. நடைப்பயணர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியோரின் நீர் வேட்கையைத் தீர்க்கும் பொருட்டுச் சாலைகளில் ஆங்காங்கே கிணறுகள் அமைத்து அவற்றின் அருகிலேயே கல்லால் சமைக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டிகளை வைத்து அறச் செயல்களில் ஈடுபட்ட பெரியோர்கள் பலர் ஊர்களில் இருந்துள்ளனர்.

மணியம்பாளையம் கல் தொட்டி

நம்பியூர்-பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள ஊர் மணியம்பாளையம்.   நம்பியூரிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து பெருமாநல்லூர் பதினைந்து கி.மீ. தொலைவில் உள்ளளது. 15 கி.மீ. என்று பொறிக்கப்பட்ட நெடுஞ்சாலைக் கல்லின் அருகில்தான் கிடாரை ஆர்வலர் கூறிய கல் தொட்டியும் காணப்படுகிறது. சாலையோரத்தில், ஆனால் சாலைக்குச் சற்றுத் தள்ளி, அம்மன் கோயிலுக்கு முன்புறத்தில் மண் தரையில் இந்தக் கல் தொட்டி உள்ளது. வெள்ளை நிறக்கல்லால் அமைக்கப்பட்ட தொட்டி. கல்லின் பரப்புச் செம்மையாக இல்லை; கரடு முரடாக உள்ளது. தொட்டியின் முன்புற நீளவாட்டுப்பகுதியில் ஐந்து வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.  எழுத்துகள அமைந்த கல் பரப்பும் சமன் செய்யப்படாமல் சிறு சிறு மேடு பள்ளங்களைக் கொண்டுள்ளது. எனவே, எழுத்துகள் சில இடங்களில் படிக்க இயலாதவாறு உள்ளன. கல்தொட்டிக்குத் தொடர்ந்து சுண்ணம் பூசி வந்துள்ளனர். எனவே, எழுத்துகள் சுண்ணப்பூச்சு காரணமாக மறைந்து தெளிவில்லாமல் இருந்தன.  உடன் வந்தவர்கள், சுண்ணப்பற்றை நீக்க நீண்ட நேரம் ஆனது. அகற்றிய பின் எழுத்துகள் படிக்கப்பட்டன.


துளையுடன் கூடிய பண்ணையோடிக் கல்தொட்டி


கல்வெட்டுப் பாடம்

1    துந்துமி வருஷம் ….. மாதம் திறவலூர் யிருக்கு
2    ம் பாலை வேளாள(ரில்)………ணி….   சின்ன
3    ய கவுண்டன் மகன் (மாலை கவுண்டன் பண்
4    ணையோடி வச்ச உபயம்
5    அழகப்பெருமாள்  லட்சிக்க


கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டு, துந்துமி வருடத்தில் பொறிக்கப்பட்டது எனக் கல்வெட்டில் குறிப்புள்ளது.  துந்துமி என்கிற துந்துபி ஆண்டு வியாழவட்டத் தமிழ் ஆண்டுப்பட்டியலில் கி.பி. 1862, கி.பி. 1922 ஆகிய இரு ஆண்டுகளில் அமைகிறது. எழுத்தமைதியை அடிப்படையாகக் கொண்டால், கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு, கி.பி. 1862-ஆம் ஆண்டு எனக்கொள்ள வாய்ப்பு உள்ளது.  எனவே, கல்வெட்டு நூறாண்டுக்கு மேல் பழமையானது எனக் கருதலாம். கல்வெட்டில் வருகின்ற திறவலூர் பெருமாநல்லூருக்கருகில் அமைந்த துரவலூர்/தொரவலூர் ஊராகலாம். அவ்வூரைச் சேர்ந்த பாலைகுல வேளாளர்களில் சின்னய கவுண்டர் என்பாரின் மகன் மாலைக்கவுண்டர் என்பார் இந்தக் கல்தொட்டியைச் செய்துகொடுத்துள்ளார் என்று கல்வெட்டு கூறுகிறது. இந்தத் தர்மத்தை அழகப்பெருமாள் காக்கவேண்டும் என்று கல்வெட்டு வரி முடிகின்றது. மேற்கண்ட துரவலூரில் இருக்கும் பெருமாள் கோயிலின் இறைவன் பெயரான அழகப்பெருமாள் என்பதுதான் கல்வெட்டிலும் குறிக்கப்படுகிறது.  எனவே, கல்வெட்டில் வரும் திறவலூர், தற்போதுள்ள துரவலூரே என்பதில் ஐயமில்லை. காக்கவேண்டும் என்னும் கருத்தைக் கல்வெட்டில் எழுதப்பட்ட “லட்சிக்க   என்னும் சொல்லால் அறிகிறோம். “ரக்ஷிக்க   என்னும் வடமொழிச் சொல்லே ‘லட்சிக்க   என்று எழுதப்பட்டுள்ளது. ’, ‘’ ஆகிய இரண்டெழுத்துகளும் தம்முள் இடம் மாறிக்கொள்வது தமிழில் நாம் காணுகின்ற ஒன்றே. கொடை அல்லது தர்மம் என்பதைக் கல்வெட்டில் உள்ள “உபயம்  என்னும் சொல் குறிக்கிறது.

வேளாளர் குலப்பிரிவு -  பாலைக் கூட்டம்

பாலவேளாளர் என்று தற்போது அழைக்கப்பெறும் குலப்பிரிவினர், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டவாறு முற்காலத்தில் பாலை வேளாளர்  எனப்பட்டனர். நம்பியூரில் அமைந்திருக்கும் தான்தோன்றீசுவரர் கோயில் கல்வெட்டுகளில் வேளாளர் குலப்பிரிவைச் சேர்ந்த மேன்மணியர், கழஞ்சியர், சோழர் ஆகியோர் குறிக்கப்பெறுகிறார்கள்.  கொங்கு குலகுருக்கள்  என்னும் வலைப்பூத் தளத்தில், பாலவேளாளர்களாகப் பைத்தலை,  வெள்ளேலி, மேல்மணியன், குண்டெலி, கழஞ்சியர் ஆகியோர் குறிக்கப்படுகிறார்கள். இவர்களில், பைத்தலை என்பார் சேவூர்ப் பகுதியிலும், வெள்ளேலி என்பார் தொரவலூரிலும், மேல்மணியன் என்பார் கிடாரையிலும் தற்போது இருப்புக்கொண்டுள்ளனர் என்று மேற்படி வலைத்தளம் குறிக்கிறது.  நமது கல்தொட்டி அமைக்கப்பட்ட ஊர் மணியம்பாளையம், மேல்மணிய குலப்பிரிவினரின் பெயரால் அமைந்த ஊராகலாம் எனக் கருத இடமுண்டு. இக்கருத்துக்குச் சான்றாக இங்குள்ள மக்கள், மேல்மணிய குலப்பிரிவினர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்து இவ்வூருக்கு அருகில் உள்ள வெள்ளாளபாளையம், கிடாரை ஆகிய ஊர்களில் குடியேறியுள்ளனர் என்று கூறுகின்றனர். கல்வெட்டிலும் கொடையாளி தொரவலூரைச் சேர்ந்த பாலைப் பிரிவினர் என்று குறிப்பிடுவதைக் காணலாம். கிடாரை, மணியம்பாளையம், வெள்ளாளபாளையம் ஆகிய ஊர்கள் நம்பியூரைச் சுற்றிலும் மிகுந்த அண்மையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  வெள்ளாளர் புதிதாகக் குடியேறிய பகுதி என்பதாலேயே வெள்ளாளபாளையம் என்று ஊர்ப்பெயர் அமைந்தது எனலாம். வெள்ளாளபாளையத்திலும் ஒரு கல்தொட்டி எழுத்துப் பொறிப்புகளுடன் இருப்பதைப் பார்த்தோம். ஆனால், முற்றிலும் கல் பொரிந்து போனதால் எழுத்துகள் அழிந்துவிட்டன.

கல்தொட்டியின் இன்னொரு பயன்பாடும் அது தெரிவிக்கும்
அரிய செய்தியும்

கல்வெட்டில், கல்தொட்டி என்னும் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாகப் பண்ணையோடி  என்னும் சொல் காணப்படுகிறது. “பண்ணையோடி வச்ச உபயம்   என்பது கல்வெட்டுத் தொடர்.  இங்குள்ள கல்தொட்டி “பண்ணையோடி  என ஏன் குறிப்பிடப்பெறுகிறது என மேலே ஆய்வு செய்யும்போது, இச்சொல் குறித்துக் கல்வெட்டு அகராதியின் துணையை நாடினோம். பண்ணையோடி  என்னும் சொல் அதில் காணப்படவில்லையெனினும், ‘பண்ணை  என்னும் சொல்லுக்கு “நீர்நிலை  என்று பொருள் கொடுத்திருந்ததோடு, அதற்கு எடுத்துக்காட்டாக, கி.பி. 950-ஆம் ஆண்டுக் கல்வெட்டுத் தொடரான “துலாசெய்க்கிறைக்கும் தேயாற பண்ணையினின்றும் தெற்கு நோக்கி  என்பது கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கல்வெட்டு, TRANSACTIONS OF ARCHAEOLOGICAL SOCIETY OF SOUTH INDIA நூலில் உள்ளது. இத்தொடரோடு பண்ணையோடி என்னும் தொடரையும் இணைத்துக் கல்வெட்டு அறிஞர் பூங்குன்றன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, அவர் கூறிய விளக்கம் அரியதோர் செய்திக்கு அடித்தளம் இட்டது.

பண்ணையும் பண்ணையோடியும்

கிணறுகளில் ஏற்றம் வைத்து நீர் இறைத்த முற்காலத்தில்,  கவலை (கமலை என்னும் வழக்கும் உண்டு) என்னும் தோல் பை முகந்துவருகின்ற நீர் முதலில் கொட்டப்படும் கல்தொட்டியே பண்ணையோடி என்று வழங்கப்பட்டிருக்கவேண்டும். பண்ணை என்பது கல்தொட்டியைக் குறிக்கும் சொல்லாக மக்கள் வழக்கில் இருந்தது எனலாம். இக்கல்தொட்டியினின்றும் நீர் வயலுக்குப் பாயும் வண்ணம் தொட்டியின் கீழ்ப்புறத்தில் துளை அமைக்கப்பட்டதால் பண்ணையோடி எனப்பெயர் அமைந்தது. பண்ணையோடியாகிய நீர்த்தொட்டியில் சேருகின்ற நீர், தொட்டியின் கீழ்ப்புறத்தில் அமைந்த துளையினூடே வெளியேறிக் கால்களின் வழியே செய் என்னும் வயல் பரப்புக்குப் பாயும் வகையில் நீர் மேலாண்மை அமைப்பு செயல்பட்டது எனலாம். இக்கருத்தை உறுதி செய்யும் வகையான்,  மணியம்பாளையம் கல்தொட்டியின் கீழ்ப்பகுதியில் துளை அமைந்துள்ளது.  வேளாண் தொடர்பான இந்த அமைப்பு ஒரு புதிய அரிய செய்தியாக நம்முன் வெளிப்படுகிறது.  

மணியம்பாளையம் ஊர்ப்பெரியவர்கள் கூறுகையில், இக் கல்தொட்டி, அருகில் இருக்கும் கிணற்றுக்கருகில் நீண்ட காலம் இருந்துள்ளதாகவும் தற்போதுதான் இங்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். கிணற்றிலிருந்து ஏற்றம் வழியாக நீர் இறைக்கும்போது பயன்பாட்டில் இருந்த இந்தக் கல்தொட்டிக்குச் சற்று அருகிலேயே கிணறு ஒன்று தற்போதும் உள்ளதைக் காணலாம்.  ஆனால், பழைய ஏற்றத்தின் அமைப்பு -  கல் தூண்கள், அவற்றை இணைக்கும் குறுக்குச் சட்டம், கப்பி, உருளை  - ஆகியனவற்றை இன்று காண இயலாது. சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுக் கிணற்றின் தோற்றமே முற்றும் மாறியுள்ளது.

பண்ணை என்னும் வழக்கு

பண்ணை என்னும் சொல் தற்போது வேளாண்(பயிர்) நிலம், வேளாண் தோட்டம் என்கின்ற பொருளில் வழங்குகிறது. ஆனால், சென்ற இரு நூற்றாண்டுகளில் ‘பண்ணை’ , நீர் தொடர்பாக வழங்கியது என்று இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இதற்குச் சான்றாக, கோவைக்கருகில் இருக்கும் வெள்ளலூரில் ஆனைமலையம்மன் கோயிலில் இக்கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த கல்வெட்டு அமைகிறது. கோவிலில், நீர்ப் பயன்பாட்டுக்காகக் கிணறு ஒன்றை வெட்டிக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டு, கிணற்றை வெட்டிக் கொடுத்தவர் கிணற்றோடு கூடி “கல்லுப்பண்ணையும்  போட்டதாகக் குறிப்பிடுவதினின்று, ‘பண்ணை” என்னும் சொல் வழக்கில் இருந்துள்ளது என்றும், கல்லால் பண்ணை அமைக்கப்பட்டமை வழக்கம் என்றும் அறிகிறோம். இக்கல்வெட்டு,  தொல்லியல் கழகத்தின் 2019-ஆம் ஆண்டுக்கருத்தரங்கில் வெளியிட்ட “ஆவணம்  நூலில் பதிவாகியுள்ளது. வரி 14-15 –இல் கல்லுப்பண்ணை  என்னும் சொல்லைக் காண்க. அதன் ஒளிப்படம் பார்வைக்கு:



வெள்ளலூர்க் கல்வெட்டு






துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :   9444939156.