மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 17 மார்ச், 2018

திப்பு சுல்தானும் மதச்சார்பின்மையும்

முன்னுரை
அண்மையில் நவம்பர், 10 (2017) தேதியிட்ட “தி இந்து”  நாளிதழில், “திப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி”  என்னும் பெயரில் செல்வ புவியரசன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். “கருத்துப்பேழை” என்னும் பகுதியின் கீழ் வந்திருந்த இக்கட்டுரையில், திப்பு சுல்தான் நஞ்சன்கூடு கோயிலில் கொடுத்த மரகதலிங்கமும், மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் கொடுத்த முரசும் இன்றும் பார்வைக்கு இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார். அக்கொடைகளின் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளனவா எனத் தேடியதில், “எபிகிராஃபியா கர்நாடிகா”  என்னும் கல்வெட்டுத் தொகுதியில் சில செய்திகள் கிடைக்கப்பெற்றன. அவற்றின் பகிர்வு இங்கே.





நஞ்சன்கூடு-நஞ்சுண்டேசுவரர் கோயில்
நஞ்சன்கூடு கோயில் கல்வெட்டுகளில், திப்பு சுல்தான் மரகதலிங்கத்தைக் கொடையாக அளித்த செய்தி காணப்படவில்லை. ஆனால், நஞ்சன்கூடு வட்டத்தில், கழலை (கன்னடத்தில் கழலெ”  என்று பயில்கிறது. சொல்லின் முடிவில் தமிழில் ஒலிக்கும் ஐகாரம், சில போது, கன்னடத்தில் எகரமாக ஒலிக்கின்றதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, கடலை, கடலெ ஆகிறது. மழை, மழெ ஆகிறது) என்னும் ஊரில் உள்ள இலட்சுமிகாந்தர் கோயிலில் இருக்கும் வெள்ளியாலான நான்கு கிண்ணங்களிலும் (silver cups), ஒரு எச்சிற்படிக்கத்திலும் (silver spittoon) இரண்டு வரிகள் கொண்ட எழுத்துப்பொறிப்புகள் உள்ளன.

எழுத்துப்பொறிப்பு: (கன்னட எழுத்துகளில்) க.வெ. எண்: 34/1946

1 டிப்புசுல்தான பாத3சா0ர த3ர்ம
2 . தூக்க க3 84

தமிழில் கீழ்க்கண்டவாறு பெயர்க்கலாம்.

1 திப்புசுல்தான் அரசருடைய கொடை (தன்மம்)
2 எடை 84 க

தமிழில் திப்பு என நாம் ஒலித்தாலும், ஆங்கிலத்தில் ‘டிப்பு’  என்பதாகவே ஒலிக்கப்படுகிறது. இசுலாமியப்பெயர் டிப்பு என்னும் ஒலிப்பில் இருக்கக் கூடும்; எனவே தான், கன்னடத்தில் ‘திப்பு’  எனக் குறிப்பிடாமல் ‘டிப்பு’ என்பதாக எழுதியிருக்கிறார்கள் எனக் கருதலாம்.
  
அடுத்து இன்னொரு கொடைப்பொருள் பெரியதொரு வெள்ளித் தட்டாகும். அதன் எடை 422 க. 

எழுத்துப்பொறிப்பு: (கன்னட எழுத்துகளில்) க.வெ. எண்: 35/1946

1 சுல்தானி பாத3சா0ஹர த4ர்ம
2 . தூக்க க3 422

தமிழில்:
1 சுல்தானி அரசருடைய கொடை (தன்மம்)
2 எடை 422 க

‘பாத3சா0’  என்னும் சொல் ‘Bhadshah’  என்னும் அரபுச் சொல்லின் கன்னடப் பெயர்ப்பு. அரசனைக் குறிக்கும் சொல். பொறிப்பின் இரண்டாவது வரியில் கொடைப்பொருளின் எடை காட்டப்பட்டுள்ளது. எடை என்பதற்குத் ‘தூக்கம்’  என்னும் சொல்லும் தமிழில் வழங்கும். இந்த நல்ல தமிழ்ச் சொல் கன்னடத்தில் இயல்பாய் வழங்குவது குறிப்பிடத்தக்கது. 84 க’ என்பதில் உள்ள ‘க’ என்பது ஓர் எடையின் அளவுப்பெயர். தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் ‘பலம்’   என்பது போல. தஞ்சைக்கல்வெட்டுகளில், கோயில் கொடைப் பொருள்களான சர்க்கரை, புளி ஆகியன பலம் என்னும் அளவால் குறிக்கப்படுகின்றன.. எச்சிற்படிக்கம் கொடைப்பொருள்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுகின்றது. வெற்றிலை பாக்கு உண்போர், எச்சிலைத் துப்புதற்காகப் பயன்படுத்துவது எச்சிற்படிக்கமாகும். எச்சிற்படிக்கத்தைக் கோயிலுக்குக் கொடையாக அளிக்கும் வழக்கத்தைத் தமிழகம், கருநாடகம் ஆகிய இரு பகுதிகளின் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. 

மேல்கோட்டை நம்மாழ்வார் கோயில்
மாண்டியா மாவட்டம், மேல்கோட்டையில் உள்ள நம்மாழ்வார் கோயிலில் இரண்டு வெள்ளிக் கிண்ணங்கள் திப்புசுல்தானால் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் காணப்படும் பொறிப்பு கீழ்வருமாறு:

கன்னட எழுத்துகளில்:
1 டிப்புசுல்தான பாத30ஹர த3ர்ம

 தமிழில்:

1 திப்புசுல்தான் அரசருடைய கொடை (தன்மம்)

கொடைப்பொருளின் எடை அளவு இதில் கொடுக்கப்படவில்லை.

மேல்கோட்டை நரசிம்மர் மலைக்கோயில்

மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் ஒரு பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கீழ்க்கண்டவாறு உள்ளது:

1 ஸ்ரீ திருநாராய
2 ணஸ்வாமி ந்ருஸிம்ஹ ஸ்வாமிகெ3
3 மாஹெ தா3ரா இ
4 சால ஜலௌ
5 நம்
6 பிஜால்
7 விச்0வாவசு நாம ஸம்வத்ஸரத3 ஆஷாட3 சு0 7 லு
8 நவாப3 டிப்புசுல்தான் பா3ஷாயி அதி3ல்
9 ஆனெ 2 ஹெண்ணானெ 10 ஸ ஸ்ரீரங்கபட்ட
10 ணதிந்த3 ஹுஜூரநாயக்க ஸ்ரீநிவாசாச்சாரி ஹரிகா
11 ரப3க்‌ஷி சஹா மேலுகோட்டெ பாரபதி காசி0ராஉ மீ
12 ரஜைனு உன் முந்திட்டு வபிசி0யிதெ3


மேல்கோட்டை நரசிம்மர் மலைக்கோயிலுக்குத் திப்பு சுல்தான் இரண்டு ஆண் யானைகளையும், பத்துப் பெண்யானைகளையும் கொடையாக அளித்துள்ளார். திப்புசுல்தானின் அரசு அதிகாரி ஹுஜுர் நாயக்கன் என்னும் பதவியிலிருக்கும் சீநிவாசாச்சாரி என்பவரும், ஹரிகார பக்‌ஷி என்னும் பதவியிலிருப்பவரும், கோயில் நிருவாகிகளான (பாரபதி) காசிராவ், மீராஜைனு  ஆகியோரிடம் கொடைப்பொருள்களை ஒப்படைக்கிறார்கள். ஜலௌ நம்பிஜால் என்னும் இசுலாமிய ஆண்டு, தாராய் மாதத்தில் கொடை அளிக்கப்படுகிறது. அதற்கு ஈடான இந்திய ஆண்டு விசுவாவசு. மாதம் ஆஷாடம். நாள், வளர்பிறையில் 7-ஆம் நாள். இதற்கு ஈடான ஆங்கிலத் தேதி ஜூலை 13, 1785 என நூல் குறிப்பு கூறுகிறது.

வரி-3 மாஹெ- மாதத்தைக் குறிக்கும் சொல்லாகலாம்.
வரி-8 திப்பு சுல்தான், நவாப் திப்பு சுல்தான் பாத்ஷா அதில் எனக் குறிக்கப்படுகிறார்.
 வரி-9 ஆனெ=ஆனை=யானை;  ஹெண்ணானெ=பெண் யானை. தமிழில் பெண்,
கன்னடத்தில் ஹெண்  ஆனது.

கோயில் முரசில்-பாரசீக எழுத்துப் பொறிப்பு
மேல்கோட்டை நரசிம்மர் மலைக்கோயிலின் முரசின் மீது பாரசீக எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. அதன் பாடம் ஆங்கில எழுத்துகளில் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

பாடம்:

Ya-Karrar
2 qita I duam nakkara I  Zafar Ashar Ali
3 baksha nam Sirkar  I hydari
4 Sal I Shita  san 1215 Muhammad wazan Kham
5 haft
6 a(ra)tal si o haft nim dak

கல்வெட்டில் முரசு, நக்காரா எனக் குறிக்கப்படுகிறது. நகரா என்னும் வழக்கு, தமிழகத்தில் பரவலாக வழங்கும் பிறமொழிச்சொல் வழக்காகும். கல்வெட்டில் உள்ள 1215 என்பது  நூல் குறிப்புப்படி மௌலூதி ஆண்டுக்கணக்காகும். அதற்கு ஈடான ஆங்கில ஆண்டு 1786. இது திப்பு சுல்தானின் ஆட்சிக்கால ஆண்டாகையால், இக்கொடை திப்புசுல்தானால் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம். ஆனால், நூலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம், கொடை ஹைதர் அரசின் மேற்பார்வையில் செய்து முடிக்கப்பட்டது என்றும், முரசின் எடை ஏழு அதல் (ராத்தல்) முப்பத்தேழரை த3க் (தா3ங்கு) என்றும் கூறுகிறது. (ராத்தல் என்னும் எடை அளவு 1950-இன் பதின் ஆண்டுகளில் நம் ஊர்களில் பயன்பாட்டில் இருந்துள்ளதை நான் கண்டிருக்கிறேன்).

ஸ்ரீரங்கபட்டணம்-அரங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கபட்டணம் அரங்கநாதர் கோயிலில் ஏழு வெள்ளிக் கிண்ணங்களிலும், பஞ்சாரத்தி என்னும் பூசைப் பொருளிலும் திப்பு சுல்தானின் கொடைச் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய கிண்ணத்தில் திப்பு சுல்தானின் கொடைச் செய்தி கீழ் வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

1 டிப்பு சுல்தான பாச்சாரவர த4ர்ம
2 ஸ்ரீகிருஷ்ண

இதிலும் ‘திப்பு’ என்னும் ஒலிப்பு இல்லை; டிப்பு’ என்னும் ஒலிப்பே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொறிப்பில் கூடுதலாக ஸ்ரீகிருஷ்ண’  என எழுதப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் அளித்த கொடையை மைசூர் அரசரான மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் மீண்டும் வழங்கினார் என நூல் குறிப்பு சொல்கிறது. பொறிப்பில் காணப்படும் பாச்சா’  என்னும் சொல், ‘பாத்3ஷா’  என்னும் சொல்லின் கன்னடத் திரிபாகும்.

அடுத்து மூன்று கிண்ணங்களில், ஒரே ஒரு வரிப்பொறிப்பு உள்ளது.

1 டிப்பு சுல்தான பாச்சாரவர த4ர்ம

அடுத்து இன்னும் மூன்று கிண்ணங்களில் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

1 களுலெ காந்தைய்யனவர சேவெ
2 டிப்புசுல்தான பாச்சாரவர த4ர்ம

தமிழாக்கம் :

1 கழலை என்னும் ஊரைச் சேர்ந்த காந்தைய்யன் என்பவரின் சேவை
2 திப்புசுல்தான் அரசரின் தன்மம்

கொடை காந்தைய்யன் அளித்தது; அது, மீண்டும் திப்பு சுல்தானால் வழங்கப்பட்டது என்பது குறிப்பு. ஏற்கெனவே அளிக்கப்பட்ட கொடையை மீண்டும் வழங்கும் செயல் பற்றிய காரணம் தெரியவில்லை.

அடுத்து, பூசையின்போது பயன்படுத்தப்படும் “பஞ்சாரத்தி”  (பஞ்ச+ஆரத்தி)யில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை,

1 களல காந்தையன சேவெ
2 த3ண்டி3 சஹா தூக்க 167
3 டிப்புசுல்தான் பாச்சாரவர த4ர்ம

தமிழாக்கம் :

1 கழலை என்னும் ஊரைச் சேர்ந்த காந்தைய்யன் என்பவரின் சேவை
2 தண்டோடு சேர்ந்து எடை 167
3 திப்புசுல்தான் அரசரின் தன்மம்

காந்தைய்யன் அளித்த கொடை மீண்டும் திப்புசுல்தானால் வழங்கப்படுகிறது.
  
திப்புசுல்தானின் இறப்பு பற்றிய கல்வெட்டு
திப்பு சுல்தான், தன் தந்தை ஹைதர் அலி கானுக்கு எழுப்பிய மசோலியம் (MAUSOLEUM) என்னும் சமாதி சீரங்கபட்டணத்து வட்டத்தில் க3ஞ்சாம் என்னும் ஊரில் உள்ளது. சமாதியில், திப்புசுல்தானின் இறப்பு பற்றிய ஒரு கல்வெட்டு உள்ளது. மொத்தம் பதிநான்கு வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டு, பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பாரசீகம், அரபு ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. பாரசீகப் பாடல்களை இயற்றியவர்கள் மீர், உசைன், ஷஹீர் ஆகிய மூவர். அரபுப் பாடல்களை இயற்றியவர் சய்யித் ஷைக் ஜஃபரீ என்பவர்.  

கல்வெட்டின் பாடல் வரிகள் கூறுவதை நூலின் பதிப்பாசிரியர் ஆங்கிலத்தில் பெயர்த்து எழுதியுள்ளார். அதன் கருத்துச் சுருக்கம் தமிழில் கீழ்வருமாறு:

“இறைவன் தன் கருணையைப் பெருமைமிகு சுல்தானுக்கு அருளியிருக்கிறான். சுல்தான் ஒரு வீரத் தியாகியாய் வீழ்ந்துபட்டனன். அவனுடைய குருதி இறைவனின் பாதையில் சிந்தியது. எதிர்பாராவண்ணம் இந்த நிகழ்வு ஜிகதா3 மாதத்தில் இருபத்தெட்டாம் நாள் நடந்தேறியது. (ஜிகதா3 மாதம் “தி4கதா3” என்றும் ஒலிக்கப்பெறுகிறது).

மீர் சொல்கிறார் : ஐதரின் மகன் சுல்தான் கொல்லப்படுகின்ற நாளில் இசுலாத்தின் ஒளியும் நம்பிக்கையும் ஒரு சேர இவ்வுலகை விட்டுப் பிரிந்தன. முகம்மதுவின் சமயத்துக்காகவே திப்பு வீழ்ந்தான். அவ்வீரன் உலகிலிருந்து மறைந்த போது ஒரு குரல் கேட்டது-” வாள் மறைந்து விட்டது”.

ஷஹீர் சொல்கிறார் : (இசுலாத்தின்) நம்பிக்கை-நம் யுகத்தின் அரசன் மறைந்தனன்.

திப்பு இறந்த ஆண்டு
திப்பு இறந்த ஆண்டு, இக்கல்வெட்டுப் பாடலில் நேரடியாக எண்களால் குறிக்கப்படாமல், பாரசீக எழுத்துகளுக்கு எண் வடிவம் கொடுத்து எழுதப்படும் ஒரு வாய்ப்பாடு வழியே குறியீடாகக் குறிக்கப்பட்டுள்ளது இக்கல்வெட்டின் சிறப்பாகும். இத்தகைய முறைக்கு ஆங்கிலத்தில் “CHRONOGRAM”  என்பது பெயர். குறியீட்டு முறையில் கல்வெட்டுப் பாடலில் குறிக்கப்பட்ட ஹிஜிரி ஆண்டு 1213 என்பதாகும். ஹிஜிரி ஆண்டு 1213, ஜிகதா3 மாதம், இருபத்தெட்டாம் நாளுக்கு இணையான ஆங்கில நாள் 1799, மே மாதம் 4-ஆம் நாள். 

எழுத்துக் குறியீட்டில் காலக்கணக்கு
இக்கல்வெட்டில் காணப்படுவது போன்ற, குறியீட்டு முறையில் காலக் கணக்கை எழுதும் மரபு நம் நாட்டிலும் வடமொழியாளர்களிடையே உள்ளது. மூன்று வகையான முறைகள் வழக்கத்தில் உள்ளன. அவையாவன:

  1. கடபயாதி3
  2. சித்3த4மாத்ரிகா
  3. பூ4த சங்(க்)யா


கடபயாதி3 முறை
இந்த முறையில், சமற்கிருத உயிர்மெய்எழுத்துகள் ஒரு வடிவத்துள் அமைக்கப்படுகின்றன.

க-ச  வரிசை:    க1   க2   க3   க4   ங    ச1   ச2   ஜ1   ஜ2   ஞ
குறியீட்டெண் :   1    2     3     4    5    6    7     8    9     0


ட-த  வரிசை:    ட1   ட2   ட3   ட4   ண    த1   த2   த3   த4    ந
குறியீட்டெண் :   1     2     3     4    5     6     7     8    9     0

ப வரிசை :       ப1    ப2     ப3     ப4     ம
குறியீட்டெண் :    1     2      3      4      5


சித்3த4மாத்ரிகா முறை
இந்த முறையில் சமற்கிருத உயிர் எழுத்துகள் ஒரு வடிவத்துள் அமைக்கப்படுகின்றன.

அ   ஆ    இ    ஈ     உ    ஊ    ஏ    ஐ    ஓ     ஔ    அம்    அஹ   
 1    2     3    4     5      6     7    8     9      10      11       12


இம்முறையில் பன்னிரண்டு எண்கள் வரை குறிக்கப்படுவதால், பா3ராக2டி3 (Baaraakhadi) எனவும்,  து3வாத3சாக்ஷரி (dvaadasaakshari) எனவும் அழைக்கப்படுவதுண்டு. 

பூ4த சங்(க்)யா முறை
இந்த முறையில், சொற்களுக்கு எண் மதிப்பு அளிக்கப்படும். அதாவது, எண்களோடு தொடர்புடைய சொற்கள் குறியீடாக அமையும். எடுத்துக்காட்டாக, விசும்பு (ஆகாசம்)  ஒன்று.  
கண்கள் (நயனம்)  இரண்டு.
உலகு (லோகம்)   மூன்று.
மறைகள் (வேதங்கள்)  நான்கு.
பொறிகள் (இந்திரியம்) ஐந்து.
காலம் (பருவம்-ருது)  ஆறு.
இசை (ஸ்வரம்)  ஏழு.
மங்கலம் எட்டு
கோள் (கிரகம்)  ஒன்பது.
உரு (அவதாரம்)  பத்து.
உருத்திரர் பதினொன்று.
கதிரவன் (ஆதித்யா)  பன்னிரண்டு.


மேற்படி சொற்குறியீடுகள் இடமிருந்து வலமாகக் காணப்படும். அவற்றுக்கான  எண்களை இடமிருந்து வலமாக எழுதியபின்னர், மற்றொரு முறை வலமிருந்து இடமாக எழுதக் கிடைப்பது நம் இலக்குக்குரிய எண்ணாகும். எடுத்துக்காட்டாக, சக ஆண்டு 1536.  சொற்குறியீட்டில் இது, 

ருது லோகம் இந்திரியம் ஆகாசம்
  6    3        5          1     -> 6351

என்பதாக அமையும். 6351 என்னும் இந்த எண்ணை வலம்-இடமாக மாற்றி எழுத, சரியான சக ஆண்டு (1536) கிடைக்கும்.

நஞ்சன்கூடு இராகவேந்திரர் மடத்தில் பதினாறு செப்புப் பட்டையங்கள் உள்ளன. அவை சமற்கிருத மொழியில் தெலுங்கு எழுத்தில் எழுதப்பெற்றவை. அவற்றில் பலவற்றில் பூ4தசங்(க்)யா முறையில் சக ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. ஒரு செப்பேட்டில், கீழ்க்காணும் வரிகளில் சக ஆண்டுக்குறிப்பு வருவதைக்காண்க:

வரி 42  ...சின்ன சவப்பாக்2ய மஹீப தி
வரி 43  லக ஸ்வயம்|  ரித்வக்3நிபா3ணபூ4ஸங்க்யாக3ணிதே
வரி 44 |ச0கஜந்மநா

இதில்,  ரித்வக்3நிபா3ணபூ4  என்பது சக ஆண்டுக்குறிப்பு. இதை,

ரித் வக்3நி பா3ண பூ4  என்று முதலில் பிரித்துப் பின்னர்,
ரிது அக்3நி பா3ண பூ4 என அமைத்துப் பொருள் காணவேண்டும்.

ரிது – பருவம் = 6
அக்3நி – தீ = 3
பா3ண – அம்பு = 5
பூ4 – புவி (பூ4மி) = 1

கிடைக்கப்பெறும் எண் :  6351. வலம்-இடமாக மாற்றி எழுத, சரியான சக ஆண்டு (1536) கிடைக்கும். 

ரிது (ருது) – ஆறு: வசந்த, கிரீஷ்ம, வர்ஷ, சரத், ஹேமந்த, ச்சி.
அக்3நி (தீ) – மூன்று. புறநானூற்றின் இரண்டாம் பாடலில், பொற்கோட்டு இமயத்தில்,

 சிறு தலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்

என வரும் வரிகளுக்கு விளக்கவுரை அளிக்கும் ஔவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள், “முத்தீயாவன : ஆசுவனீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி”  எனக் கூறுவார்.

பூ4 (புவி) ஒன்று என நாம் அறிவோம். ஆனால், பா3ண (அம்பு) ஐந்து யாவை எனத் தெரியவில்லை.  


குறிப்புதவி :
1 எபிகிராஃபியா கர்நாடிகா (EPIGRAPHIA CARNATICAதொகுதிகள்-3, 6.
2 தென்னிந்தியக் கோயில் சாசனங்கள்  தி.நா. சுப்பிரமணியன்.
(SOUTH INDIAN TEMPLE INSCRIPTIONS-By T.N. SUBRAMANIAN)




--------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.
மின்னஞ்சல்  : doraisundaram18@gmail.com

1 கருத்து:

  1. கட்டுரையின் அடிப்படையில் கல்வெட்டு ஆதாரத்தைத் தேடிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு