மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 20 ஜனவரி, 2015சாமளாபுரத்தில் புதியதொரு கல்வெட்டு
                                                       து.சுந்தரம்,கோவை


         அண்மையில், சாமளாபுரத்திலிருக்கும் வேலுச்சாமி மற்றும் சின்னையன் ஆகியோர், சாமளாபுரம் பகுதியில் சோழீசுவரர் கோயில், பெருமாள் கோயில் போன்ற இடங்களில் கல்வெட்டுகள் கிடைக்கக்கூடும் என அழைத்திருந்தனர். தொல்லியலில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் அஞ்சல்துறை செந்தில்குமார், ஆசிரியர் கிருஷ்ணகுமார் ஆகியோருடன் சாமளாபுரம் சென்றிருந்தேன். நொய்யலாற்றின் கரையில் சோழீசுவரர் கோயில் அமைந்திருந்தது. கோயிலில் கல்வெட்டுகள் காணப்படவில்லை. பழமையான கோயில் புதுப்பிக்கப்பட்டு (முழுதும் கல் கட்டுமானப்பணியே) மிக அழகாகப் பேணப்படுகிறது. அங்கே சோழீசுவரர் கோவிலில் சுற்றுச்சுவரில் கருங்கல்லைக்கொண்டு (Granite) அமைக்கப்பட்ட பெரியதொரு கல்வெட்டு. 1999-ஆம் ஆண்டில் திருப்பணியின்போது பதிக்கப்பட்டது. அதில் கோவிலின் தலவரலாறு எழுதப்பட்டிருந்தது. சோழர் பூர்வ பட்டயம் என்னும் நூலைச் சான்றாகக் காட்டி (நூல் இருக்குமிடம் என்று தஞ்சைப்பல்கலைத் தொல்லியல் துறையைச் சுட்டியிருக்கிறார்கள்) தலவரலாற்றை எழுதியுள்ளனர். வரலாறு கீழ்வருமாறு செல்கிறது.

         உறையூர்ச் சோழன் ஒருவன் கொடுங்கோலனாக இருந்தான். காஞ்சிக்கருமாரி அவனை மண்மாரி பொழிந்து அழிக்கவே, அவனுடைய மனைவியர் சிங்கம்மாளும், சாமளம்மாளும் கொங்கு நாடு பெயர்ந்து அங்கே ஒரு பிராமணர் குடியிருப்பில் உழைத்து வாழ்ந்து வந்தனர் ஏற்கெனவே கருவுற்றிருந்த சிங்கம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்து பன்னிரண்டு அகவை ஆகியது. இந்நிலையில், சோழ நாடும்,தொண்டை நாடும் அரசனின்றி அல்லலில் இருப்பதால் திருவாரூரில், அரசகாரியத்தார் கூடிப்பேசி, காசி சென்று விசாலாட்சி அன்னையை வழிபட்டு, யானை, திருமஞ்சனக்குடம், மாலை ஆகியவற்றோடு வந்து யானையையே அரசனைத் தேர்ந்தெடுக்க வேண்டினர். யானை கொங்குநாடு வந்து சிங்கம்மாளின் மகனை மாலையிட்டுத் தேர்ந்தெடுத்தது. சிங்கம்மாள் அரசனுக்கு கரிகாலன் எனப்பெயரிட்டு, சோழ நாடு திரும்பினர். அப்போது வாழ்த்தி வழியனுப்பியவர்கள் இராம பட்டரும், சந்திர பட்டரும் ஆவர். சிங்கம்மாள் சிங்கநல்லூர் என்ற குடியிருப்பையும், சாமளம்மாள் சாமளாபுரம் என்ற குடியிருப்பையும் உருவாக்கியதாகவும் அவற்றை முறையே இராம பட்டருக்கும் சந்திர பட்டருக்கும் நிவந்தமாகக் கொடுப்பதாக சிங்கம்மாள் உறுதியளித்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
  
         சோழ அரசன், சாமளாபுரம் வந்து சோழீசுவரர் கோவிலைக்கட்டுவித்துக் குளங்களையும் வெட்டுவித்து சாமளம்மாள் பெயரில் அக்கிராமத்தைச் சந்திர பட்டருக்கு வழங்கினார். இராம பட்டருக்கு சிங்க நல்லூர் கிடைத்தது. இதுவே சாமளாபுரம் உருவான வரலாறு. சோழீசுவரர் கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது எனக் கோயில் தலவரலாற்றில் குறிப்பிடும் அதே வேளையில் அரசன், கல்லணை கட்டிய கரிகாலன் அல்லன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே காலக்குறிப்பு தவறாகத் தோன்றுகிறது.
தொல்லியல் துறையைச் சேர்ந்த அறிஞர் பூங்குன்றன் அவர்கள், மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குக் கரிகாலன் என்னும் விருதுப்பெயர் இருந்தது எனக் குறிப்பிடுகிறார். இம் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக்காலம் கி.பி. 1178 முதல் கி.பி. 1218 வரை. எனவே சோழீசுவரர் கோவில், ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். ஆனால் இதைச் சரிபார்க்க, கோவிலில் கல்வெட்டுச் சான்றுகள் எவையும் இல்லை.
         கல்வெட்டு ஆய்வுப்பயணத்தின் ஒரு கட்டமாக சாமளாபுரத்தில் அமைந்திருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்றபோது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. கோவிலின் வளாகத்தில் மதிற்சுவரை ஒட்டி ஒரு கல்வெட்டைக் கண்டறிந்தோம். கோவிலைச் சேர்ந்தவர்கள், கோவிலைப் புதுப்பிக்கும்போது இக்கல்வெட்டைப் பாதுகாப்பாக விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதே பெருமையும் அருமையுமான செயலாகும். சற்றேறக்குறைய ஐந்தரை அடி உயரமும் இரண்டு அடி அகலமும், ஒன்றேகால் அடிப் பருமையும் கொண்ட பெரியதொரு கல்லில் எழுத்துகள் காணப்பட்டன. பெருமளவு பரப்பில் கல் பொரிந்துபோய் எழுத்துகள் மறைந்துபோயிருந்தன. கல்லின் முதன்மைப்பரப்பிலும், பக்கவாட்டுப்பரப்பிலும் (பருமைப்பரப்பிலும்) எழுத்துகள் வெட்டப்பட்டிருந்தன. கல்லைத் தூய்மைப்படுத்தி ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.
         கல்வெட்டு படிக்க எளிதாயில்லை. வரிகளில் தொடர்ச்சியும் காணப்படவில்லை. கணினியில் உருவப்பெருக்கம் செய்து வலிந்து படித்துப்பார்க்கையில் வியப்பு மேலிட்டது. வாயறைக்கா நாடு என்னும் நாட்டுப்பெயர் காணப்பட்டது. வாயறைக்கா நாட்டில் தற்போதைய பல்லடம் வட்டம் இருந்துள்ளது. ( சாமளாபுரமும் இப்பகுதியில் இருக்கிறது. ) வாயறைக்கா நாட்டவர் (நாட்டுச்சபையினர்) ஒரு நிவந்தம் (கொடை) அளிப்பது பற்றிப்பேசி சம்மதித்து அதை ஆவணப்படுத்தியதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. நாட்டுக்கணக்கு ஆவணத்தை எழுதிப்பதிவு செய்கிறான்.

 நாட்டவரோம்”, சம்மதித்து”, இட்டுக்குடுத்தோம்”,  “நாட்டுக்கணக்கு என்னும் தொடர்கள் இப்பொருளை உணர்த்துகின்றன. அளிக்கப்பட்ட கொடை, நிலம், காடு ஆகியனவாக இருக்கலாம். இதை காடும் எல்லையும் நாங்காத்துக் குடுப்போமாகவும்  என்னும் தொடரால் அறிகிறோம். இவற்றுக்கெல்லாம் தலையாயதாக “இந்த அகரமும்”,  “சாமளதேவிச் சதுர்வேதிம...  என்னும் தொடர்களே நமக்கு வியப்பை அளித்தவை. ஏனெனில், சோழன் பூர்வ பட்டயத்தில் குறிப்பிடப்பட்ட சாமளாபுரம் என்னும் பிராமணர் குடியிருப்பு கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் சாமளதேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரில் இருந்துள்ளமை பட்டயத்தில் இருக்கும் செய்திக்குச் சான்றாயமைகிறது.

அகரம் என்பதும், சதுர்வேதிமங்கலம் என்பதும் பிராமணக் குடியிருப்பைக் குறிக்கும் சொற்களாகும். அகரம் என்னும் சொல் வழக்கு மருவி அக்ரகாரம்”  எனப் பிற்கால வழக்காக மாறியிருக்கும் என்பது கண்கூடு.  கல்வெட்டின் தொடக்கவரிகளும், மையப்பகுதி வரிகளும் கிடைக்கப்பெறாமையால் அரசன் பெயர் தெரியவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டும், கல்வெட்டின் அமைப்பு மற்றும் பயிலும்  சொற்கள் ஆகியன கொண்டும் கல்வெட்டின் காலத்தைக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டாகக் கொள்ள வாய்ப்புள்ளது. அரசனும் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்க வாய்ப்புள்ளது. சோழன் பூர்வ பட்டயத்தில் இதற்குச் சான்றுகள் எவையேனும் உள்ளனவா என ஆய்வு செய்யவேண்டும். கல்வெட்டும் மீளாய்வு செய்யப்படவேண்டும்.

         சோமனூர் நண்பர் வேலுச்சாமி, அண்மையில் தம் வீட்டருகே வயலில் ஒரு பழங்காலத் தாய்த்தெய்வச் சிலையைக் கண்டுபிடித்ததாகவும், அதை மண்ணில் சிறிதளவு புதையுண்ட நிலையிலேயே வைத்துச் சிறு குடிசை போன்ற கீற்றுக்கூரை அமைத்து வழிபாடு செய்து வருவதாகவும் கூறி அங்கு எங்களை அழைத்துச்சென்று காட்டினார். அருகிலேயே, நொய்யலாற்றின் நீர்வழிப்பாதையாக அமைந்த இராஜவாய்க்கால் இருந்தது. தற்போது நீர் இல்லை. இராஜவாய்க்காலுக்கு மறுகரையில் சிறிது தொலைவிலேயே  நொய்யலும் அதன் கரையில் சோழீசுவரர் கோயிலும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தாய்த்தெய்வச் சிலை கிடைத்த வயல் ஊராரால் கோபாலய்யர் தோட்டம் என்று அழைக்கப்படுவது எண்ணத்தக்கது. இப்பெயர், அப்பகுதியில் பிராமணர்க்கு நிலங்கள் இருந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. சிலை கிடைத்த இடம் பழைய அக்ரகாரம் என்பதால் சிலை பழஞ்சிலை என்பதை எளிதில் உணரலாம். அருகில் இருக்கும் இராஜவாய்க்கால் பழங்கால வாய்க்காலாக இருக்குமா என்பதைச் சான்றுகள் கிடைத்தால் உறுதி செய்ய இயலும்.
  
         பெருமாள் கோயில் வளாகத்தில் மேலும் இரு கல்வெட்டுகள் கிடைத்தன. உடைந்த நிலையில் இருந்த இரண்டு துண்டுக்கற்களில் அக்கல்வெட்டு எழுத்துகள் தேய்ந்துபோன நிலையில் இருந்ததால் படிக்க இயலவில்லை. இக்கல்வெட்டுகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

         முடிவாக, சாமளாபுரம் சாமளாதேவிச் சதுர்வேதிமங்கலம்என்ற பெயரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதைக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். சோழீசுவரர் கோயிலும் பழமையானதென்று அறிகிறோம். மேலும் சான்றுகள் கிடைக்கும்போது இன்னும் பல புதிய செய்திகள் வெளிவரும் வாய்ப்பு உள்ளது.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.புதன், 7 ஜனவரி, 2015

சின்னவீரம்பட்டி - தனிக்கல்வெட்டு


         தற்காலத்தே, பல்வேறு அறக்கட்டளைகளும் தொண்டு நிறுவனங்களும் மக்கள் பயனுறும் வகையில் பல அறச்செயல்களை மேற்கொள்ளுவதைக் காண்கிறோம். கடந்தகாலங்களில், பல அறச்செயல்கள் தனியொருமனிதரால் நிகழ்த்தப்பெற்றன. அவ்வகையில், தனிமனிதர் பலர், தண்ணீர்ப்பந்தல்களை அமைத்தும் கிணறுகளை வெட்டியும் தொண்டாற்றியுள்ளனர். அவ்வாறான ஓர் அறச்செயலைச் சின்னவீரம்பட்டியில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது.

         கோவைப்பகுதியில் பேருந்து நடத்துநராகப் பணியிலிருக்கும் தங்கவேலு என்பவர் சின்னவீரம்பட்டி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலுக்கருகில் ஒரு தனிக்கல்லில் கல்வெட்டு இருப்பதாகத் தெரிவித்த செய்தியின் அடிப்படையில், இக்கட்டுரை ஆசிரியர் உடுமலைக்கருகில் உள்ள சின்னவீரம்பட்டிக்கு நேரில் சென்று கல்வெட்டை ஆராய்ந்து பார்த்தார். உடுமலை-திருப்பூர் சாலையில் அமைந்துள்ள சின்னவீரம்பட்டியில் பேருந்து நிறுத்தத்திலேயே சாலையை ஒட்டி, ஒரு சுமைதாங்கிக்கல்லும், ஒரு தனிக்கல்லும் காணப்பட்டன. சாலையின் எதிர்ப்புறத்தில் மாகாளியம்மன் கோயில் அமைந்திருந்தது. தனிக்கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.  தூசியும் புழுதியும் படிந்த நிலையில் எழுத்துகள் படிக்கும் நிலையில் இல்லை. எனவே, கல்லை நீர் கொண்டு கழுவித் தூய்மையாக்கி, சுண்ணப்பொடியால் பூசிய பிறகே எழுத்துகள் தெளிவாகத் தெரிந்தன. கல்லைத் தூய்மைப்படுத்துவதில் அங்கிருந்த பள்ளிச் சிறார்கள் ஆர்வமுடன் உதவினர். கல்வெட்டைப் படித்துப்பார்த்ததில் பின்வரும் செய்தி இருந்தது.

         சின்னவீரம்பட்டியில் இருக்கும் பெரிய நாச்சிய கவுண்டர் குமாரர் நாச்சிய கவுண்டர் என்பவர் தருமத்துக்கு கிணறு வெட்டி வைத்துள்ளார். இவர் பவள குலத்தைச் சேர்ந்த, தளவாய்பட்டினத்துக் காணியாளர் ஆவார். (தளவாய்பட்டினம், தாராபுரம்  வட்டத்தில் அமைந்துள்ளது).  இவருடைய காணி குல தெய்வம் காளியம்மன் என்பதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கிணறு வெட்டிமுடித்து கல்வெட்டு பொறிக்கப்பட்டது 1916-ஆம் ஆண்டு, டிசம்பர் 4-ஆம் தேதி. கல்வெட்டின் இறுதியில் இத்தேதி, 4.12.1916 எனப்பொறிக்கப்பட்டுள்ளது. இத் தேதிக்கு இணையாகத் தமிழ் ஆண்டு நள வருடம், கார்த்திகை மாதம் 20-ஆம் தேதி திங்கள் கிழமை எனத்தரப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டுத் தேதியும், ஆங்கில ஆண்டுத் தேதியும் சரியாகப் பொருந்துகின்றன. கல்வெட்டு குறிப்பிடும் கிணறு, கல்வெட்டின் அருகிலேயே அமைந்துள்ளது. தரைக்கு மேலே கற்களைக்கொண்டு எழுப்பப்பட்ட சுற்றுச்சுவருடன் கிணறு அமைந்துள்ளது. சுற்றுச் சுவர், கிணறு அமைத்த காலத்திலேயே கட்டப்பட்டிருக்கவேண்டும் எனக்கருதலாம். ஏறத்தாழ, நூறு ஆண்டுகளாகியும் கிணற்றில் நீர் இருப்பதும், இன்றளவும்  நீர் மக்கள் பயன்பாட்டில் இருப்பதும் சிறப்புக்குரியன. கிணற்றின் மேற்பரப்பு முழுதும் இரும்புக்கம்பிவலை கொண்டு மூடப்பட்டுள்ளது. மின் இயந்திரம் கொண்டு நீர் இறைக்கப்பட்டு, கிணற்றையொட்டிக் கட்டப்பட்டுள்ள தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக எந்நேரமும் நீர் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

         அருகிலேயே குடியிருக்கும் பணி நிறைவு பெற்ற பள்ளி ஆசிரியர் சிவசுப்பிரமணியம் என்பவர் தெரிவித்த செய்தி: கிணற்றை வெட்டிய நாச்சிய கவுண்டரின் வழித்தோன்றல் தற்போதைய ஊர்ச்சபைத் தலைவராக இருக்கிறார். கிணறு வெட்டப்பட்ட காலத்தில், திருவண்ணாமலைக் கோயிலுக்குச் செல்லும் அடியார் கூட்டத்தினருள் சில பிரிவினர் பயணம் செய்து ( கால் நடைப்பயணமாகவோ, மாட்டு வண்டிப் பயணமாகவோ இருக்கக்கூடும். ), ஒரு பிரிவினர் பழநி நோக்கியும், இன்னொரு பிரிவினர் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை நோக்கியும், மற்றுமொரு பிரிவினர் கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை நோக்கியும் செல்வார்கள். அவ்வாறு வருகின்ற பயண அடியார்கள் சின்னவீரம்பட்டி வழியாகச் செல்வது வழக்கமாகையால் அவ்வடியார்களின் வேட்கை மற்றும் பிற தேவைகளைத் தீர்க்கும் நற்பணியை இக்கிணறு ஆற்றியுள்ளது.

         இக்கல்வெட்டுக்கருகிலேயே அமைந்துள்ள சுமைதாங்கிக் கல்லிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. இதையும் படித்துப்பார்த்ததில், இதே ஊரைச் சேர்ந்த காணி சின்னாயக் கவுண்டர் என்பவர் இச் சுமைதாங்கிக் கல்லை உபயமாகச் செய்து வைத்தார் என்னும் செய்தி தெரிய வருகிறது. இந்தக் கல்வெட்டில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட நாள் சக ஆண்டு 5021, ரௌத்தரி வருடம், பங்குனி மாதம் 10-ஆம் தேதி புதன் கிழமை எனக் காணப்படுகிறது. இதற்கு இணையான ஆங்கிலத் தேதி 23.3.1921 ஆகும். இவ்வழியே பயணம் செய்த அடியார்களுக்கு இச்சுமைதாங்கியும் பயன்பட்டு வந்துள்ளதை இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.