மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 14 ஜூலை, 2016

கல்வெட்டுகள் உதிர்க்கும் செய்திகள்
சாரிகை

         கொங்குச்சோழர் காலக் கல்வெட்டுகளில், அரசனின் பெயர் குறிப்பிடப்படாமல் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் “கோநேரின்மைகொண்டான்என்று அரசனைப் பொதுவாகக் குறிக்கும் சொல் பயின்று வருகிறது. அத்தகு கல்வெட்டுகள் அரசனின் நேரடி ஆணையைத் தெரிவிப்பனவாக அமைந்துள்ளன. இவ்வகைக் கல்வெட்டுகளில், அக்காலத்தே விதிக்கப்பட்ட (வருவாய்) வரிகள், செலுத்துவதினின்றும் விலக்களிக்கப்பட்ட வரிகள் ஆகியன பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பல கல்வெட்டுகளில், குறிப்பிட்ட ஒன்பது வகை வரிகள் ஒரு தொடராக வருவதைப்பார்க்கிறோம். எடுத்துக்காட்டாகச் சில கல்வெட்டுகள் இங்கே சுட்டப்பெறுகின்றன.

1 அவிநாசி அவிநாசியப்பர் கோயில் - கல்வெட்டு எண் 775/2003.

வரி 6 ழ நல்லூர் இன்நாயனாற்கு நாம் குடுக்கையில் இ
வரி 7 வூரால் வரும் நத்தவரி மன்றுபாடு தெண்டக்குற்றம்
வரி 8 மற்றும் எப்பேற்பட்ட இறை புரவு சிற்றாயம் உள்ள

2 அவிநாசி அவிநாசியப்பர் கோயில் - கல்வெட்டு எண் 793/2003.

வரி 4 மேனோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு இறை புரவு சிற்றாயம் எலவை உகவை மன்றுபாடு தெண்டக்குற்றம் சுங்கம்

3 சேவூர் கபாலீசர் கோயில் கல்வெட்டு எண் 876/2003.

வரி 3 முன்காட்சி மன்றுபாடு தெண்டக்குற்றம் இறை புரவு சிற்றாயம் சுமை சுங்கம் சாரிகை தறிஇறை தட்டார்பாட்டம் ஈழம் புன்செய் தெரிவெருது மற்றும் எப்பேற்பட்டனவும் கொண்டு...........................

4 சேவூர் கபாலீசர் கோயில் கல்வெட்டு எண் 882/2003.

வரி 4 ........................................................................................இந்நான்
வரி 5 கெல்லைக்குட்பட்ட நஞ்செய் புந்செய் .... லுள்ள இறை புரவு சிற்றாயமெலவை யுகவை மந்றுபாடு தெண்டக்குற்றஞ் சுமை சுங்கம் சாரிகை மற்றுமெப்பேற்ப(ட்ட) 

5 கோவில்பாளையம் காலகாலேசர் கோயில் -  கல்வெட்டு எண் 160 /2004.

வரி 21 யளப்பதாக உதக
வரி 22 ம் பண்ணி நாமி
வரி 23 வர்களை யிறை
வரி 24 புரவு சிற்றாயஞ்சு
வரி 25 ங்கஞ் சாரிகை
வரி 26 மற்றுமெப்பேற்
வரி 27 பட்டநவு
மேற்படி வரிகள் எவற்றைக்குறிக்கின்றன என்று கல்வெட்டுச் சொல் அகராதிகள் கூறுவதைப் பார்ப்போம்.

தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி சாந்தி சாதனா பதிப்பு.
இறை அரசனுக்குரிய வரி
புரவு நிலவரி
சிற்றாயம் முக்கிய வரி
எலவை (பொருள் தரப்படவில்லை)
உகவை திருமணம் முதலிய மகிழ்ச்சியான காரியங்கள் செய்வோர் செலுத்தும் வரி.
மன்றுபாடு - அபராதப்பணம்
தெண்டக்குற்றம் அபராதத்தொகை மூலம் வரும் வருவாய்.
சுமை - (பொருள் தரப்படவில்லை)
சுங்கம் விற்பனைப்பொருள் போக்குவரத்துக் காலத்தில் வசூல் செய்யும் வரி.
சாரிகை - ஒருவரி

தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் தி.நா. சுப்பிரமணியன்.
இறை அரசாங்கத்துக்கு இறுக்கும் வரியைப் பொதுவாக உணர்த்தும் சொல்.
புரவு நிலவரி
சிற்றாயம் சிறு வரிகள்
எலவை சாவுக்கான வரி; பிணத்தை இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு இறுக்கும் கடமை.
உகவை கல்யாணம் போன்ற சந்தோஷ காரியங்களுக்குச் செலுத்தும் வரி
மன்றுபாடு நியாய விசாரணை சபைக்கு இறுக்கும் அபராதப்பணம்.
தெண்டக்குற்றம் அபராதமாக விதிக்கும் வரி.
சுங்கம் “கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறை
சுமை தலையில் சுமந்து விற்போர் இறுக்கும் வரி.
சாரிகை, சரிகை கூட்டம்; கூடுதல்; (ஊர்ச்சரிகை - ஊர்க்கூட்டம்)


மேற்படி வரிகள் பற்றி சிறு விளக்கம்.
இறை -  இறை என்பது அரசனைக் குறிக்கும் சொல். அரசாங்கத்துக்கும் ஆகி வந்தது.
          எனவே, அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய வரி.
புரவு கல்வெட்டுச் சொல்லகராதி, நிலவரியைச் சுட்டுகிறது. புரவு என்னும் சொல்லுக்கு நிகண்டு என்ன சொல்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், சிறுபாணாற்றுப்படையில் “புறவு என்னும் சொல் வந்துள்ளது நினைவுக்கு வருகிறது. “குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
 முல்லை சான்ற கற்பின் மெல்லியல்”             (வர்கள்: 29-30)
உ.வே.சா. அவர்கள், புறவு என்பதற்கு, காடு, புறம்பு என அரும்பத அகராதியில் குறிப்பிடுகிறார். காட்டையும், புறம்பையும் நிலம் எனக்கருதலாம். எனவே, புறவு, புரவு ஆகியிருக்கலாம். நிலவரியைக்குறிக்கச் சரியான சொல்லாகக் காண்கிறது.


சிற்றாயம் முக்கிய வரி என்னும் பொருளைக்காட்டிலும், சிறு வரிகள் என்பது பொருந்துகிறது. ஆயம் என்பது தற்காலத்திலும் வரியைக் குறிப்பதைக் காணலாம். சிறுமை+ஆயம் = சிற்றாயம்.

எலவை சாவுக்கான வரி. கோவைப்பகுதியில், இறப்பைக்குறிக்கும் சொல்லாக “இழவு” (எழவு-மக்கள் வழக்காறு) என்பது வழக்கிலுண்டு. இந்த “எழவுஎன்பது “எலவை”  ஆகியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

உகவை உகத்தல், உவத்தல் என்பன மகிழ்வைக்குறிப்பன. எனவே, உகவை மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குச் செலுத்தும் வரியாகிறது. 

சுங்கம் தற்காலத்தும் சுங்கவரி என்கிறோம். இலக்கியங்களில் “உல்கு”  எனப்பயிலும்.
கோவையில், உக்கடம் என்னும் ஒரு பகுதி உண்டு. முற்காலத்தில் “உல்கு”  வசூலித்த இடம், உல்கிடம்-உல்கடம்-உக்கடம் ஆயிற்றென்பர். சுங்கம் தவிர்த்த சோழன் என்றோர் அரசன் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறுகிறான்.

மன்றுபாடு, தெண்டக்குற்றம், சுமை ஆகியன எளிமையாகப் பொருள் தருகின்றன.
சாரிகை ஓர் அகராதி, ஒரு வரி என்பதாக மட்டும் குறிப்பிட்டு விளக்கம் தரவில்லை. தி.நா.சுப்பிரமணியம் அவர்கள் கூட்டம், ஊர்க்கூட்டம்”  என்பதாகத் தரும் விளக்கம் வரி விதித்தலுடன் எவ்வாறு பொருந்துகிறது எனத் தெளிய இயலவில்லை. அவர் குறிப்பிடும் “சரிகை, சாரிகை”  ஆகியன கூட்டத்தைக் குறிக்கலாம். ஆனால், கூட்டம், வரி இரண்டின் தொடர்பு நமக்குத் தெளிவாகவில்லை. 

இந்நிலையில் ஒரு நாள், தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் “என் சரித்திரம் நூலைப் படித்துக்கொண்டிருந்தபோது, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் திருநாகைக்காரோணப்புராணத்தில் ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லுவதாக வரும் பகுதியில், “அறிவிலார் எங்குச் சாரினும் சுகம் அடையாரால் என்ற தொடருக்கு “அறிவில்லாதவர்கள் எங்கே போனாலும் சுகம் அடைய மாட்டார்கள் என்பதாகப் பொருள் கூறுவார். இங்கே வருகின்ற “சாரினும் என்னும் சொல் எனக்கு ஒரு வெளிச்சப்பொறியைக் காட்டியது. சாரினும்-போனாலும்.  போதல்=செல்லுதல். மனிதர் போனாலும் சாருதல்; வணிகப்பண்டம் போனாலும் சாருதல் தானே. கலத்தினும் காலினும் வரும் பண்டங்களுக்கு இறை சுங்கம் என்பதுபோல், இடம் விட்டு இடம் போகும், ஊர் விட்டு ஊர் போகும் (கொண்டுபோகும்)  பண்டங்களுக்கு விதிக்கப்படும் வரி சாரிகை என்பது முற்றிலும் பொருந்துவதாக எனக்குத் தோற்றுகிறது.  அப்பாடலைக் கீழே தந்துள்ளேன்:

முறிவி ராயபைம் பொழிலிற்செம் முழுமணிநோக்கிச்
செறிவ தீயெனக் குடாவடி வேறுகான் சென்று
பிறவி லாவிர வழலெனப் பிறங்கவுள் வெதும்பும்
அறிவி லாரெங்குச் சாரினுஞ் சுகமடை யாரால்.
  
பிள்ளையவர்கள் தந்த விளக்கம் வருமாறு:

“தழைகள் விரவியுள்ள பசுமையான சோலையில் இருக்கும் சிவப்பாகிய மாணிக்கத்தைப் பார்த்த கரடியானது, அதனைத் தீயென்று எண்ணிபயந்து வேறு காட்டுக்குச் செல்ல, அங்கே இரவில் அக்காடு சோதிமரம் நிறைந்தமையால் நெருப்புப்போலப் பிரகாசிக்க அதைக்கண்டு, இந்த நெருப்பு நம்மை விடாதுபோல் இருக்கின்றதேயென்று எண்ணி மனத்துள்ளே துயரத்தை அடையும்; அறிவில்லாதவர்கல் எங்கே போனாலும் சுகம் அடையமாட்டார்கள்.

அடுத்து, கருநாடகத்தில் அரசுப்போக்குவரத்துக் கழகம், போக்குவரத்துஎன்னும் சொல்லைக்குறிக்கச்  “சாரிகெ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதும் நினைவுக்கு வந்தது.  அங்கே, பயன்படுத்தும் ஆங்கிலத் தொடரையும், அதற்கு இணையான கன்னடத்தொடரையும் கீழே தந்துள்ளேன். ஒப்புநோக்குக.

Karnataka State Road Transport Corporation

ಕರ್ನಾಟಕ                ರಾಜ್ಯ                   ರಸ್ತೆ                   ಸಾರಿಗೆ                   ನಿಗಮ

Karnāaka            Rājya                  Raste                Sārige                  Nigama

கருநாடகஅரசுப் போக்குவரத்துக்கழகத்தின் சின்னத்தையும் காண்க. இச்சின்னத்தில் காணப்படும் பறவை கண்டபேருண்டப்பறவை எனக்கூறப்படுகிறது. இச்சின்னத்தைப் பழைய மைசூர் அரசு பயன்படுத்தியுள்ளது. 


                        கருநாடகஅரசுப் போக்குவரத்துக்கழகத்தின் சின்னம்                 மைசூர் இலலித மகால் அரண்மனையில் காணப்படும் சின்னம்                                   மைசூர்  அரண்மனையில் காணப்படும் சின்னம்--------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

சனி, 9 ஜூலை, 2016

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  18


கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

கல்வெட்டு  1             கல்லின் முன்புறம்


கல்வெட்டின் பாடம் :

1 யுவ வரு சித்
2 திரை மீ
3 ஸ்ரீ ராமப்ப
4 அய்யனவ
5 ர்கள் காரிய
6 த்துக்குக்கற்த
7 ரான சிதம்
8 பரநாத பிள்ளை
9 பாரபத்தியத்தில்
10 வடபரிசாரநா
11 ட்டு ஒத்தனூரா
12 ன பெரும்பழ
13 னத்துக் காணி
14 யுடைய வெள்
15 ளாழர் மூலர்க
16 ளில் வேலப்ப
17 னும் பாளந்தை
18 களில் உத்தமனு
19 (ம் மேற்படியூர்ச்)
20 ..................................


                                                                 கல்லின் பின்புறம்


கல்வெட்டின் பாடம் :

1 இ நித்த தன்ம
2 ம் பரிபாலன
3 மாக நடத்தின
4 பேரெல்லா
5 ங் காசிராமே
6 சுரம் சேவித்தா
7 பலன் பெறுவ
8 ராகவும் இந்த
9 த்தன்மம் வில
10 கினவர்கள் கெ
11 ங்கைக் கரையி
12 ல்க்காராம்பசு
13 ப்பிராமணன் 
14 மாதாபிதாகுரு
15 இவர்கள் அஞ்
16 சுபேரையுங்
17 கொன்ற தோ
18 ஷத்திலே
19 போகக்கடவ
20 தாகவும் 

குறிப்பு : 

கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலின் குறிப்புகளில், ராமப்பய்யன் அலுவலராகிய சிதம்பரநாதபிள்ளை காலத்தில் வெளியிடப்பெற்ற அரசு ஆணை
என்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு என்று தரப்பட்டுள்ளது.
ராமப்பய்யன் என்பவர் திருமலை நாயக்கரின் படைத்தளபதி ஆவார். எனவே இக்கல்வெட்டு, திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1623-1659. கல்வெட்டில் வரும் யுவ வருடம்  (அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு வட்டத்தில் ஒரு ஆண்டின் பெயர்)  என்னும் குறிப்பு 
கி.பி. 1635-ஆம் ஆண்டுடன் பொருந்துகிறது. எனவே, கல்வெட்டின் காலம் சரியாகக்
கி.பி. 1635 எனலாம். இங்கே தரப்பட்டுள்ள கல்வெட்டின் படத்தில் 20-ஆம் வரியிலிருந்து மேலும் ஒன்பது வரிகள் நிலத்தில் புதைந்து போயுள்ளன.
மேற்படி நூலின் குறிப்புப்படி, கொங்கு நாட்டின் வடபர்ரசார நாட்டுப்பிரிவைச்
சேர்ந்த ஒத்தனூரான பெரும்பழனத்து உத்தமசோழீசுவரர் கோயிலுக்கு அபிஷேகம், 
நைவேத்தியம், நந்தாதீபம், சந்தியா தீபம் ஆகியவற்றுக்காக ஊர்ச்சந்தையின் மகமை
வருமானத்தைக் கொடையாக அளித்துள்ள செய்தி தெரியவருகிறது. 
காரியத்துக்குக் கர்த்தரான என்னும் தொடர் நாயக்கர் காலக் கல்வெட்டுகளில்
பெரும்பாலும் காணப்படுகின்ற ஒன்று. வெள்ளாளர்களில், மூலர்கள், பாளந்தைகள்
ஆகிய கூட்டப்பிரிவினர் இருந்துள்ளனர் என்பது அறியப்படுகிறது. 
தன்மத்தைக் காப்பவர், காசி-இராமேசுவரம்  சென்றுவழிபட்ட நன்மையையும், 
தன்மத்தை விலக்கினவர் கங்கைக் கரையில், பசு, பிராமணன், தாய்,தந்தை, குரு
ஆகிய ஐவரைக்கொன்ற தோஷத்தை அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது 
குறிப்பிடத்தக்கது.
பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ்ச்சொற்கள் பயின்றதைப் போலன்றி, 
நாயக்கர் காலக் கல்வெட்டுகளில், காரியகர்த்தர், பாரபத்தியம், அபிஷேகம்,
நைவேத்தியம், பரிபாலனம், சேவித்தல், தோஷம்  ஆகிய வடமொழிச் சொற்கள்
மிகுதியும் காணப்படுவது சிந்தனைக்குரியது. ஆட்சியாளர்களைச் சார்ந்தே மொழி 
வளர்வதும் தேய்வதும் நடைபெற்றுவந்துள்ளது என்பது வரலாற்றுச் சான்றாகும்.
கல்வெட்டில் வரும் பெரும்பழனம் (பெரும்பழன நல்லூர்) தற்போது
பெருமாநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.


------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.