மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 19 ஜனவரி, 2018

பாலமலை

முன்னுரை
நண்பர் துரை.பாஸ்கரன், அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்ளச் சில இடங்களைப் பரிந்துரை செய்வது வழக்கம். அவ்வாறான இடங்களுள் ஒன்றுதான் பாலமலை. 16-01-2018 அன்று பாலமலைக்குப் பயணப்பட்டோம். அது பற்றிய ஒரு பதிவு இங்கே.

பாலமலை-இருப்பிடம்
கோவை-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர் பெரியநாயக்கன்பாளையம். பெரியநாயக்கன்பாளையம் என்றதுமே நம் நினைவுக்கு வருகின்றவர் தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களே. வழக்கறிஞர், விடுதலைப்போராட்ட வீரர், காந்தியவாதி, கல்வியாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்ட, கொங்குநாடு பெருமைகொள்ளும் பெரியார்களுள் ஒருவர். அவர் நிறுவிய இராமகிருஷ்ண வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து பிரியும் ஒரு கிளைச்சாலை வழியே கோவனூர் என்னும் ஊரை அடைந்தால் அங்கிருந்து செல்லும் மலைப்பாதை பாலமலைக்குச் செல்கிறது.

நண்பரும் நானும் பேருந்து ஒன்றில் பயணப்பட்டுப் பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து கோவனூர் சென்றோம். கோவனூர் என்னும் ஊர் பழம் வரலாற்றுடன் தொடர்புடையது. இருளர் என்னும் பழங்குடிகளின் தலைவன் கோவன். இவன் பெயரால் கோவன்புத்தூர் என்னும் கோவை உருவானதாகக் கருதப்படுகிறது. அதே பெயருடைய ஒரு தலைவன் பெயரில் இந்த கோவனூர் வழங்கியிருக்கலாம். ஏனெனில், கோவனூரை அடுத்துள்ள குறிஞ்சி நில மலைப்பகுதிகள் ப்ழங்குடிகள் வாழ்ந்த பகுதிகளாகும்.

கோவனூரிலிருந்து பாலமலை செல்ல வாடகை ஜீப்புகள் நிறைய உண்டு. ஒரு பத்துப்பேர் கட்டணத்தைப் பகிர்ந்துகொண்டு பயணம் செய்யும்படியான ஏற்பாடு. கோவனூரிலிருந்து பாலமலை நோக்கிப் போகும் மலைப்பாதை. மலைப்பாதைக்கே உரிய வளைவுகள். பாதையின் இரு மருங்கிலும் மலைச் சரிவுகள். அண்மைக்கால மழைபொழிவின் காரணமாக மலைச்சரிவு மரங்கள் அடர்ந்து பசுமையாகக் காணப்பட்டது. ஓரிரண்டு இடங்களில் மரங்களற்ற பாறைப்பகுதி தொலைவில் வெண்மையாகக் காணப்பட்டது. விழியக்காட்சி எடுக்காதது குறையாகப் பட்டது. ஜீப்புக்குள்ளிருந்து ஒளிப்படம் எடுப்பதற்குக்கூட ஓர் இசைவு கிட்டவில்லை. நேரே கோயிலை அடைந்தபின்னரே ஒளிப்படக் கருவியை வெளியே எடுத்தோம்.

பாலமலை அரங்கநாதர் கோயில்



மலைமேல் ஒரு பெரிய சமதளப்பகுதியில், நான்கு புறமும் மதில் சூழ்ந்து, மூன்று நிலை கொண்ட கோபுரத்துடன் கோயில் காட்சியளித்தது. கோயிலின் முன்புறம் கொங்குப்பகுதிக்கே உரிய கருட கம்பம் என்னும் விளக்குத்தூணுடன் விளங்கும் சிறு மண்டபம். கோயில் மிகப் பழமையானதாகக் கருதப்பட்டாலும், கோயில் கட்டுமானம் அதன் பழமையை ஒரு முந்நூறு ஆண்டுகள் பின்னோக்கிக் காட்டுகிறது எனலாம். கோயிலினுள் கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய பகுதிகளில் கல்வெட்டுகள் எவையும் இல்லை. கொங்குப்பகுதியில், பல இடங்களில், கால்நடை மேய்ப்பின் பின்னணியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆநிரைகள் எங்கோ ஓரிடத்தில் தாமாகவே பாலைச் சுரந்து திரும்பியபின் பட்டியில் பால் கறக்க இயலாத நிலையைக் கண்ணுறுவதும், பின்னர், காரணத்தை ஆய்கையில் அந்த ஆநிரைகள் தான்தோன்றி இறையுருவங்களுக்குப் பாலைச் சொரிவதை அறிந்து அவ்விடங்களில் இறைவழிபாடு தொடங்குவதும் ஆன செவிவழிக் கதைகள் நிறைய வழங்குகின்றன. ஒன்றுபோல, எல்லாக்கோயில்களுக்கும் இவ்வகைப் புனைவுப் பழங்கதைகள் (தலபுராணங்கள்) வழக்கில் இருப்பது எண்ணத்தக்கது. இதன் பின்னணியில், கால்நடை வளர்ப்பும், பழங்குடிகளும் இருப்பது, பழங்குடிகளின் இறைவழிபாட்டுத் தலங்களின் தொன்மையை எடுத்துக்காட்டும். பாலமலைக் கோயிலின் தலபுராணத்திலும் மேற்சொன்ன கதை, ஆதிவாசி என்னும் பழங்குடியினர் தொடர்புடன் குறிக்கப்படுகிறது.
  
கருடகம்பத்தில் எழுத்துப் பொறிப்பு
கருடகம்பம் கலகட்டுமானம் கொண்டது. சிறிய மேடை மண்டபத்தின் நடுவில் கல்லாலான விளக்குத்தூண். நான்கு மண்டபத் தூண்கள். அவற்றில் இரு தூண்களில் ஆண் சிற்பம் ஒன்றும், பெண் சிற்பம் ஒன்றும் காணப்பட்டன. அவை, இந்த கருடகம்ப மண்டபத்தை நிறுவியவர்களாக இருக்கவேண்டும். கருட கம்பக் கட்டுமானத்தில் இவ்வாறு சிற்பங்களை வடிப்பது பெரும்பாலான வழக்கம். இந்தப் புடைப்புச் சிற்பங்களின் வடிவமைப்பு, இந்தக் கட்டுமானம் நாயக்கர் காலத்துக்கும் சற்றே பிற்பட்டது என்பதைக் காட்டியது. விளக்குத் தூணின் அடிப்பகுதிச் சதுரங்களில் சங்கு, சக்கரம் ஆகியன புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. சங்குருவம் செதுக்கப்பட்ட சதுரப்பகுதியில் இரண்டு வரிகளில் எழுத்துகள் காணப்பட்டன. முதல் வரி படிக்கக் கூடியதாக இருந்தது. இரண்டாவது வரியில் எழுத்துகள் புலப்படவில்லை. எழுத்தமைதி பிற்காலத்துக்குரியது. கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு:

                                                   கருடகம்பம்

                             கருடகம்பத்தூணில் ஆண், பெண் சிற்பங்கள்



                                        கருடகம்பத்தில் எழுத்துப் பொறிப்பு


1  சருவசித்து வரு. சித்தி
2  (ரை மீ)

சருவசித்து என்பது தமிழ் ஆண்டுகளின் சுழற்சி ஆண்டுகள் அறுபதில் ஒன்றான சர்வஜித்து”  என்பதன் திரிபு. சர்வஜித்து ஆண்டு, 1887 அல்லது 1947 ஆகிய ஆங்கில ஆண்டுகளோடு பொருந்தும். கருட கம்பத்தின் கட்டுமானப் பழமை, கல்வெட்டின் எழுத்தமைதி ஆகியவற்றைக் கொண்டு இதன் காலம் 1887 எனலாம்.

கொங்கும் பழங்குடி மரபும்
குறிஞ்சி நிலப்பகுதியைச் சூழ்ந்த காடும் காடு சார்ந்த முல்லைப்பகுதிகள் நிறைந்தது கொங்கு நாடு. சங்க காலம் தொட்டுப் பல்வேறு குடிகளின் வாழிடப்பகுதியாகக் கொங்குநாடு திகழ்ந்துள்ளது. வேட்டைத் தொழிலையும், கால்நடை வளர்ப்பையுமே முதன்மையாகக் கொண்ட கொங்கு மக்கள், மழை நீரைச் சார்ந்து புன்செய்ப் பயிர்களை விளைவித்தும் வாழ்ந்துள்ளனர். தொல்குடிகள் குழுக்களாகவும், பின்னர் குடிகள் வளர்ச்சியுற்ற நிலையில் வேளிர் தோற்றமுமே இங்கு நிகழ்ந்த அரசியல். அடுத்துள்ள மன்னன், (முடியுடை) வேந்தன்  ஆகிய நிலைகள் கொங்குப்பகுதியில் சங்க காலம்தொட்டு அமையவில்லை. இடைக்காலத்தில் சோழரின் ஆளுகையில் கொங்கு நாடு வந்தபின்னரே, சோழரின் கிளை அரசர்களான கொங்குச் சோழரின் ஆட்சி இங்கு நிலைபெற்றது. அவர் காலத்தில்தான், நன்செய்ப் பயிர் வேளாண்மை இடம்பெற்றுப் பழங்குடிகள் வேளாண் சமூகத்துடன் இணைக்கப்பெற்றனர். அதுவரை வழக்கிலிருந்த, பழங்குடிகளின் பழந்தெய்வ நாட்டார் வழிபாடு சோழர்காலப் பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைக்கப்பெற்றது. இதன் அடிப்படையிலேயே, பாலமலைப் பழங்குடிகள் வழிபட்டு வந்த சிறு தெய்வ வழிபாட்டிடம், பின்னாளில் பெருந்தெய்வ வழிபாட்டுக் கோயிலாக உருப்பெற்றிருக்கக் கூடும் என்று கருத இடமுண்டு. எனவேதான், பாலமலை அரங்கநாதர் கோயிலின் தோற்றம் குறித்த வரலாற்றில் பாலமலைப் பழங்குடிகளையும் இணைத்துக் கூறுகிறார்கள். அவர்கள் (பழங்குடிகள்), அரங்கநாதரின் பாதுகாவலர்கள் என்று கருதப்படுகின்றனர். கோயில் திருவிழாவின்போது அவர்களுக்குத் தனிக் கட்டளைகள் இருப்பதும் மேற்சொன்ன காரணத்தினால்தான். பழங்குடிகளைத் தற்போது ஆதிவாசிகள் என அழைக்கின்றனர்.

தெப்பக்குளம்
கோயில் அமைந்துள்ள சமதளத்தை அடுத்து, பள்ளமான ஒரு பாதை கீழிறங்கிச் செல்கிறது. அவ்வழியே இருபது நிமிடப்பயணமாக இறங்கிச் சென்றால் ஓர் அழகான தெப்பக்குளம் உள்ளது. வழியில் பாதையெங்கும் துண்டுக் கற்களைப் பாவியுள்ளனர். கற்கள் பாவப்பட்ட பாதையும், அதன் இருமருங்கிலும் இருக்கும் காட்டுச் செடிகளும் காண அழகானவை. தெப்பக்குளம் பழங்காலக் கட்டுமானத்துடன் தோற்றமளிக்கிறது. குளத்தின் நீர் தேக்கப்படுகின்ற அடிப்பகுதி ஒரு நீண்ட சதுர வடிவில் அமைக்கப்பட்டு அதன் தலைப்பகுதி (தென்பகுதி) மட்டும் வட்டத்தின் வில் வடிவத்தில் வளைவாகக் கட்டப்பட்டு அழகான தோற்றத்தைக் கொண்டுள்ளது. வடபகுதிக்கு மிக அருகில் ஒரு மண்டபம் (நீராழி மண்டபம்?) உள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து கிளம்பி நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டு மேலே நிலப்பரப்பில் சுற்றுச் சுவர்களுடன் குளத்தின் கட்டுமானம் நேர்த்தியாக உள்ளது. சுற்றுச் சுவர்களின் மூன்று பக்கங்களில் மூன்று திறப்புகள், கீழே இறங்குவதற்காக. குளத்தின் உட்பகுதியில் வடமேற்கு மூலையில் ஆறு தூண்களோடு ஒரு மண்டபம். அதில் ஏழு கன்னிகளின் சிலைத்தொகுப்பு ஒன்று காணப்படுகின்றது. குளத்துக்கு வெளியே வட கரையில், பன்னிரண்டு தூண்களுடன் சற்றுப் பெரிதாக ஒரு மண்டபம் உள்ளது. மண்டபங்கள் இரண்டும் மக்கள் புழக்கமின்றிப் பாழடைந்துள்ளன. மொத்தத்தில், தெப்பக்குளம் அதன் பழந்தோற்றத்துடன், நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுப்பழமையை நினைவூட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில், குளத்தின் பயன்பாடு மிகுதியாக இருந்திருக்கும்.

               கற்கள் பாவிய அழகான பாதை

                          தெப்பக்குளத்தின் பல்வேறு தோற்றங்கள்      



                      குளத்துக்கு வெளீயே- மண்டபம்

                         குளத்துக்கு உள்ளே - மண்டபம்

                           மண்டபத்துள் கன்னிமார் சிற்பம்


சித்தர் பீடம்
தெப்பக்குளத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் காட்டுச் செடிகளையும் பறவைகளின் ஒலிகளையும் பார்த்துக் கேட்டு மகிழ்ந்தோம். நண்பர் தாவரவியல் அறிந்தவர். தம் இளமைக் காலங்களில், மலைப்பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிகளில் (TREKKING) பங்கு கொண்டவர். எனவே, அவர் “இது புல்புல் பறவையின் ஒலி; இது மூக்குத்திப்பூ; இதன் பெயர் தொ3ட்3ட3 தும்பை.”  என்றெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததில் வியப்பில்லை. 

              தொட்ட தும்பை. -  பூவுடன்   

                                   மூக்குத்திப்பூ

மீண்டும் கோயில் இருக்கும் சமதளப்பகுதிக்கு வந்ததும், அங்கிருந்த கிருஷ்ணானந்த சித்தர் பீடத்தைப் பார்த்தோம். நீலகிரியில் ஹுலிக்கல் கிராமத்தில் 1913-இல் பிறந்து, இளம் வயதில் மனம் துறவு வழியை நாட, இமயமலைப்பகுதியில் முப்பது ஆண்டுகளைக் கழித்துக் கிருஷ்ணானந்தா என்னும் பெயரில் திரும்பிவந்து இந்தப் பாலமலையில் தனிமைத் தவத்தில் த்ங்கியவர் 1983-இல் மறைந்தார் என்று இவரது வாழ்க்கைக் குறிப்பு கூறுகிறது. இவரது பிறப்பிடம் நீலகிரியாதலால், நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்துத் தன்னார்வலர் சிலர் இந்த சித்தர் பீடத்தைப் பேணி வருகின்றனர். ஓர் அறையில் சித்தரின் படமும், மற்றுமோர் அறையில் சித்தரின் சிற்ப உருவமும் வழிபாட்டில் உள்ளன. தரைக்குக்கீழ் நிலவறையில் தியான அறையும் உள்ளன. நுழைவு வாயிற்சுவரில் கன்னட எழுத்துகள் புலப்பட்டன. கன்னட எழுத்துகளைப் படிக்க முடியும் என்னும் ஆர்வத்தால் அருகில் சென்று பார்த்தேன். அவ்வெழுத்துகள் கன்னட எழுத்துகளின் வடிவங்களைப் போலிருந்தாலும் எந்த எழுத்தும் முழுதாகக் கன்னட எழுத்தோடு பொருந்தவில்லை. அங்கிருந்த படுகப் பெண்மணி, இந்த எழுத்துகள் படுக மொழியின் எழுத்துகள் என்று கூற, வியப்பேற்பட்டது. காரணம், துளு, படுகு(படுக), குடகு, கொங்கணி ஆகிய மொழிகளுக்குத் தனி எழுத்துகள் இல்லை; கன்னட எழுத்தையே பயன்படுத்துகின்றனர். இந்த ஐயத்தைக் கேட்டபோது அப்பெண்மணி, அண்மையில் ஓலைச்சுவடிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி இங்குவந்த ஒருவர் இந்த (படுக) எழுத்துகளால்,

                       ஓம்
                     பூஜ்ய ஸ்ரீ
              குரு கிருஷ்ணானந்தய
                     நமஹ

என்று எழுதிச் சென்றார் என்னும் செய்தியைச் சொன்னார். படுக மொழிக்கு எழுத்துகள் கண்டறியப்பட்டது  ஆய்வுக்குரியது.

                             சித்தர் பீடம்

                 படுக மொழியின் எழுத்துகள்

                                                               சித்தர்


இருளர் பதிகள்
கோயிலின் கோபுர வாசலில் இருளர் குடியைச் சேர்ந்த ஒரு இணையரைப் பார்த்துப்பேசினோம். அவர்களிடம் பேசியதில் கிடைத்த செய்திகள்:  பாலமலையைச் சுற்றிலும் ஏழு மலைக்கிராமங்கள் உள்ளன. அவை, குஞ்சூர்பதி, பெரும்பதி, பெருக்கைப்பதி, பெருக்கைப்பதிப்புதூர், மாங்குழி, பசுமணி, பசுமணிப்புதூர் ஆகியன. மேற்சொன்ன இணையர் குஞ்சூர்பதியைச் சேர்ந்தவர்கள். கணவர் அரங்கசாமி; மனைவி காளியம்மா. கணவர் 75 அகவையைக் கடந்தவர்; மனைவி 60 அகவையைக் கடந்தவர். மனைவி கோயில் வாசலில் பூ விற்பவர். கணவர் வேளாண் கூலி. இந்த ஏழு மலைக்கிராமங்களிலும் சேர்ந்து சற்றொப்ப ஆயிரம் இருளர் குடியினர் வாழ்கின்றனர். இவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் பாலமலையே மையம். குடிமைப் பொருள் வழங்கும் அங்காடியும் இங்கு பாலமலையில்தான். பாலமலைக் கோயிலும், கோயில் விழாக்களும் இவர்களுக்கு மேன்மையானவை; முதன்மையானவை. மேற்சொன்ன இணையரின் இரண்டாம் தலைமுறைப் பேத்தி, கல்லூரியில் படிக்கிறாள். கொங்குச்சோழர் காலத்திலிருந்து (12-ஆம் நூற்றாண்டு முதல்) இன்றுவரையிலும் நிகழ்ந்த மாற்றம் இவ்வளவுதானா?

குஞ்சூர்பதி காளியம்மாவிடம் அவர் பேசும் மொழி யாது எனக் கேட்டபோது, அவர் படுக மொழி என்று சொன்னார். படுகரின் மொழி படுகு. கோவைக்கொங்குக்கும் நீலகிரிக்கும் வட பகுதியாய் அமைந்த கருநாடப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் மொழி வடுக (படுக) மொழியாயிற்று. ஆதலால், தமிழ்ப்புலத்தைச் சேர்ந்த இருளருக்குத் தமிழை வேராகக் கொண்டுள்ள ஒரு மொழிதானே இருக்கவேண்டும் என்று ஒரு கேள்வி எழுகிறது. இது ஆய்வுக்குரியது. காளியம்மா, அவர் மொழியைப் பேசிக்காண்பித்தபோது, கன்னடம் கலந்த படுக மொழியை என்னால் அடையாளம் காண முடிந்தது. ஆனால், தமிழின் “அம்மா” என்பதற்கு அவர் மொழியில் “அக்3கா3” என்றும், “அப்பா” என்பதற்கு அவர் மொழியில் “அம்மா” என்றும் அவர் சொன்னது மிகவும் மாறுபட்டுத் தோன்றியது. 

                 குஞ்சூர்பதி அரங்கசாமி

                     குஞ்சூர்பதி காளியம்மா

குருவரிஷி மலை குருடி மலை
பாலமலைக் கோயிலிலிருந்து பார்த்தால் எதிரே நெடிதுயர்ந்த ஒரு மலை காணப்படுகிறது. இம்மலையில் தங்கியிருந்த முனிவர் ஒருவர் பெயரால் குருவரிஷி மலை என்றழைக்கப்பட்ட மலை, காலப்போக்கில் மருவி குருடிமலை என்று வழங்குவதாயிற்று. இந்த மலையில், பெரிய பாறை போல அமைந்திருக்கும் ஓர் உச்சி, மேல்முடி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த மேல்முடியிலும் அரங்கநாதருக்கு ஒரு கோயில் அமைந்துள்ளது. இது பற்றிச் சென்ற 2017-ஆம் ஆண்டு “தினமணி”  நாளிதழ் வெளியிட்ட சிறப்பிதழில் வெளியான செய்திப்பகுதியை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.

                         குருடிமலைத் தோற்றம் - பாலமலையிலிருந்து

மேல்முடி அரங்கநாதர் கோயில் “தினமணி”  நாளிதழ்ச் செய்தி
கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள மேல்முடியைப் பாலமலை அடிவாரத்திலிருந்து நான்கு மணி நேர நடைப்பயணம் மூலம் அடையலாம். இங்கும் அரங்கநாதர் கோயில் உள்ளது. பாறைப்படிக்கட்டுகள். வழியில் தண்ணீர் சோலை, வழுக்குப்பாறை ஆகிய இடங்களில் அரிய மூலிகைகள், செடிகள். கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கருகே உள்ள “மல்லாண்டைப் பாறையினைப் பழங்குடிகளும் மற்றவரும் வணங்குகின்றனர். வேளாண்மைப் பணி தொடங்கும் முன் இந்த “மல்லாண்டைப்பாறையை வழிபடுவது மரபு. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  வேளாண் மரபில் மல்லாண்டை வழிபாடு பற்றிக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரை இதே வலைத்தளத்தில் “தாசபாளையத்தில் மல்லாண்டைஎன்னும் தலைப்பில் உள்ளது. வெளியான நாள் 20-12-2015.) இக்கோயிலிலிருந்து வடக்கே ஒரு மணி நேர நடைப்பயணத்துக்குப் பின்னர் நாம் அடையும் காட்சி முனை “நாடுகண்ட போலி  என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட காஃபித்தோட்டம் இன்றும் மேல்முடியில் உள்ளது.

குருவரிஷி மலையும் லாம்டன் உச்சியும் (LAMBTON’S  PEAK)
குருடிமலை என்று தற்போது வழங்கும் குருவரிஷிமலை,  ஆங்கிலேயர் காலத்தில் (1800களில்) LAMBTON’S PEAK என்னும் பெயரில் வழங்கிற்று. வரலாற்றுச் செய்திகளைப் பதிவிடும் குறிப்பாகச் சென்னை பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் பதிவிடும்  -  எஸ்.முத்தையா அவர்கள் 2002-ஆம் ஆண்டு ஜூன் 3 “ஹிந்துநாளிதழில் பதிவிடும்போது வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள எழுதிய செய்தியை மேற்கோள் காட்டுகிறார். அது பின்வருமாறு:
                               லாம்டன் உச்சி
                            (இணையத்திலிருந்து)

“கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிப் பயணம் செய்யும்போது, ஒரு மலைத்தொடர் கண்ணில் படும். அதன் உச்சி (சிகரம்) ஒரு முக்கோண வடிவில் தோற்றமளிப்பதையும் பார்க்கலாம். இதுதான் லாம்டன் உச்சி. இங்கு நான் என் குழந்தைகளுடன் மலை ஏறிச் சென்றுள்ளேன். அப்போது ஒரு மலைச்சரிவு முழுதும் வெள்ளை நிற மலர்கள் பூத்த மரங்கள் தென்பட்டன. அது ஒரு கைவிடப்பெற்ற தேயிலைத்தோட்டம். பிரிட்டிஷார் அந்த மலைத்தொடரை “லாம்டன் மலைத்தொடர் என்ற பெயரால் குறித்தார்கள். 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த மலைத்தொடரில் புலிகளும், சிறுத்தைகளும், காட்டெருதுகளும் மிகுந்திருந்தன. தேயிலைப்பயிர் செழித்துவளரவில்லை என்ற காரணத்தினால் இந்த மலைத்தொடரும் “லாம்டன் மலைத்தொடர் என்னும் பெயரை இழந்தது. ஆனால், ஆவணங்களில் “லாம்டன் மலைத்தொடர்  என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. தற்போது “குருடிமலை என்ற பெயரால் வழங்கும் இம்மலையின் உச்சி, நெடுந்தொலைவிலிருந்தும் கண்ணில் படும் வகையில் உள்ளது. ஈரோட்டிலிருந்து கோவை நோக்கி வரும் வழியிலேயே இந்த உச்சி கண்களுக்குப் புலப்படுவது சிறப்பு. வானம் தெளிவாக இருந்த ஒரு நாளில்,  ஏற்காட்டில் “LADY’S  SEAT”  என்னும் முனையிலிருந்து நானே இதைப் பார்த்திருக்கிறேன். சேலம் அரசிதழைப் (GAZETTEER) பார்க்கும் வரையிலும் லாம்டன் உச்சி யைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதன் பிறகே அவ்வுச்சியைப் பார்க்கும் முனைப்பு வந்தது.

மேலே “தினமணி”  நாளிதழ்ச் சிறப்பிதழில், மேல்முடியில் காஃபித் தோட்டம் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்படும் செய்தி,  தியடோர் பாஸ்கரனின் தேயிலைத் தோட்டக்குறிப்பிலிருந்து மாறுபடுகிறது.

லாம்டன் உச்சி பெயர்க்காரணம்

                    வில்லியம் லாம்டன்

லாம்டன் உச்சிக்கு அப்பெயர் வந்த காரணம் பொருள் நிறைந்தது. லெஃப்டினண்ட் கர்னல் வில்லியம் லாம்டன் (Lieutenant-Colonel William Lambton 1753-1823) என்பார் ஒரு நிலவியலாளர்; நிலம் அளக்கும் அறிவியல் அறிஞர். பிரிட்டிஷ் படையிலிருந்து “லெஃப்டினண்ட்”  பதவி உயர்வு பெற்று 1796-ஆம் ஆண்டு இந்தியா வந்தவர்; திப்பு சுல்தானுடனான நான்காம் மைசூர்ப்போரில் 1799-ஆம் ஆண்டு கலந்துகொண்டவர். போரில், வானவியல் பற்றிய தம் அறிவுத்திறத்தால் பலவகையில் துணையாய் இருந்தவர். ஜெனரல் பார்ட் (GENERAL BAIRD), திப்புவின் படை முகாமை ஓர் இரவுப்பொழுதில் தாக்கப் புறப்படும்போது, நாள் மீன்களின் (நட்சத்திரங்கள்) இயக்கத்தைக் கொண்டு, ஆங்கிலப்படை தவறான திசையில் செல்வதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மைசூரைக் கைப்பற்றியதும் அப்பகுதியை அளவீடு செய்யவேண்டிய ஒரு திட்டத்தை முன் வைத்தவர். ஏற்கெனவே, கர்னல் காலின் மெக்கன்சி (COLONEL  COLIN MACKENZIE ) இது போன்ற வேறொரு அளவீட்டுத் திட்டத்தைத் தொடங்கிவிட்டதால், லாம்டனின் திட்டம் முதலில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர், கிளைவ் பிரபுவால் ஒப்புகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1802-இல் லாம்டன், “முக்கோண அளவீட்டியல்”  (TRIGONOMETRICAL SURVEY) என்னும் தொழில் நுட்ப அளவீட்டு முறையில் பணியைச் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியிலிருந்து தொடங்கினார். 1806-இல் குருடி மலை முனை அளக்கப்பட்டது. இதன் காரணமாகவே லாம்டன் உச்சி”  (LAMBTON’S PEAK)  என்னும் பெயர் குருடி மலைக்கு அமைந்தது. 

லாம்டனின் முக்கோண அளவீடு, உலகிலேயே மிகப்பெரியதொரு திட்டமாகக் கருதப்படுகிறது. 1802-ஆம் ஆண்டு தொடங்கிய அவரது திட்டப்பணி நாற்பது ஆண்டுகள் கழித்து 1843-ஆம் ஆண்டு ஜார்ஜ் எவரெஸ்ட்டால் (George Everest) நிறைவுற்றது. நிறைவில், எவரெஸ்ட்  முனை உலகிலேயே உயர்ந்த சிகரம் என்னும் முடிவு எட்டப்பெற்றது. 2002-ஆம் ஆண்டு லாம்டனின் “முக்கோண அளவீட்டியல் திட்டத்தின் இருநூறாம் ஆண்டு நிறைவை நினைவு கூரும் ஆண்டு.  அவர் பயன்படுத்திய THEODOLITE  என்னும் கருவி அரை “டன்”  நிறையுடையது; அதைத் தூக்கிக் கையாள பன்னிரண்டு ஆள்கள் தேவைப்பட்டார்கள் என்பது வியப்பான செய்தி.
                  
                    THEODOLITE  கருவி            


Frontline – Issue 9 Apr-May, 2002
He died to the cause at the age of 70, midway through his task, while surveying at a place called Hinganghat in Maharashtra, where is situated his uncared-for grave, today no more than a flat, weathered and battered piece of stone.


லாம்டன், தம் எழுபதாவது வயதில் மகாராட்டிரத்தில் வார்தாவுக்கு அருகில் “ஹிங்கன்காட்”  என்னுமிடத்தில் பணியின்போது மறைந்தார். அங்கே எழுப்பப்பட்ட அவருடைய கல்லறை இன்று யாராலும் கண்டுகொள்ளப்படாமல், காற்றாலும் மழையாலும் வெயிலாலும் மோதுண்டு சிதைந்து கிடக்கும் ஒரு கல்லாகத்தான் இருக்கக் கூடும். மகாராட்டிர அரசின் தொல்லியல் துறை இக்கல்லறையைப் பேணி வைத்துள்ளதா என்பது தெரியவில்லை. கல்லறையின் படமும் - கல்லறையில் கல்வெட்டும் இருக்கலாம் - கல்வெட்டின் படமும் கிடைக்குமா?

முடிவுரை
பாலமலைப் பயணத்தின்போது, தொல்லியல் தடயங்கள் எவையும் கிடைப்பது அரிது என்னும் எண்ணத்தோடுதான் பயணப்பட்டோம். பழங்குடிகளின் வழிபாட்டுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் அரங்கநாதர் கோயில் பழமையானது என்றும், கோயிலின் தெப்பக்குளம் பழமையானது என்றும் அறிந்து அவற்றைப் பார்க்க எண்ணிச் சென்ற எங்களுக்கு லாம்டன் உச்சி பற்றிய வரலாற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது மகிழ்வையும் நிறைவையும் அளித்தது. சேலம் அரசிதழைப் (GAZETTEER) பார்க்கும் வரையிலும் லாம்டன் உச்சி யைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை.”   என வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரனே கூறியிருக்கையில் கொங்கு மக்கள் எத்துணை பேருக்குத் தெரிந்திருக்கும்? எனக்கும் நண்பர் பாஸ்கரன் குறிப்பிடும் வரையில் குருடி மலை என்னும் பெயர் மட்டுமே தெரியும். கோவைப்பகுதியின் மற்றுமொரு வரலாற்றுச் செய்தியைச் சிலருக்காவது கொண்டுசேர்க்கும் வண்ணம் வலைப்பூ வழி இக்கட்டுரை அமைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். 



துணை நின்ற குறிப்புதவிகள்:
1 WIKIPEDIA
2 FRONTLINE MAGAZINE – ISSUE 9, 2002.
3  kvijayendran.blogspot.in
4  THE HINDU METROPLUS , CHENNAI-JUN 03, 2002.
“தினமணி”  பாலமலை தேர்த்திருவிழா சிறப்பிதழ்-2017
-----------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

புதன், 10 ஜனவரி, 2018

கோவை கிழாரின் காலடித்தடத்தில்
முன்னுரை
நண்பர் துரை.பாஸ்கரன் ஒரு வரலாற்று ஆர்வலர்; பசுமை பேணும் சூழலியலாளர். அவர் அண்மையில் பேசியில் அழைத்து, “தொல்லியல் தடயங்களைத் தேடும் பயணங்களில் கோவையின் புறவூர்ப் பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கிறீர்களே, கோவையின் நகரப் பகுதியிலேயே தொல்லியல் எச்சமான புலிகுத்திக்கல் என்றழைக்கப்படும் ஒரு நடுகல் சிற்பம் பார்க்கப்படாமல் உள்ளது தெரியுமா?”  எனக் கேட்டபோது மிகுந்த வியப்பு ஏற்பட்டதோடல்லாமல் அதைப் பார்க்கவேண்டும் என்னும் ஆவலும் மிகுந்தது. அவரையும், இதழியலாளர் நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துக்கொண்டு கட்டுரை ஆசிரியர் நடுகல் சிற்பம் இருக்கும் இடத்துக்குச் சென்றார். நடுகல் சிற்பத்தை ஆய்வு செய்து மேலும் பல தரவுகளைத் துணையாகக் கொண்டதில் புலப்பட்ட செய்திகள் இக்கட்டுரையில் பதிவு செய்யப்படுகின்றன.

கோவை நகரத்தின் மையப்பகுதியில் ஒரு புலிகுத்திக்கல்
கோவை. மக்கள் கூட்டமும், வண்டிகளின் நெரிசலும் கலந்த ஆரவாரம் நிறைந்த தொழில் நகரம். நகரத்தின் மையப்பகுதியைத் தொட்டு அமைந்திருக்கும் பகுதி உக்கடம். இங்கு அமைந்துள்ள ஒரு குளம் வாலாங்குளம். இக்குளத்தின் தென்கரையை ஒட்டியுள்ள புறவழிச்சாலையில தென்கரைச் சரிவில்தான் நாங்கள் பார்க்க விரும்பிய நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. சாலையின் சரிவில் கீழிறங்கிச் சென்றதும் ஒரு சிறிய திடல் காணப்பட்டது. திடல் அல்லது வெளி என்னும் அப்பகுதி ஒரு பெரிய அரசமரத்தைச் சூழ்ந்திருந்தது. மரத்தடியில் அந்தப் புலிகுத்திக்கல் இருந்தது.

            புலிகுத்திக்கல் - கோயிலின் தோற்றம்


புலிகுத்திக்கல்-நடுகல்
ஏறத்தாழ நாலரை அடி உயரத்தில் மூன்றடி அகலத்தில் முக்காலடிப் பருமன் கொண்ட தடித்த பலகைக்கல்லில் வடிக்கப்பட்டிருந்த புலிகுத்திக்கல் சிற்பம் ஒரு மேடையில் நிறுத்தப்பட்டிருந்தது. மேடையை அணுக இரண்டு படிக்கற்களும் இருந்தன. மேடையைச் சுற்றிலும் நான்கு பக்கங்களில் கற்றூண்களை நட்டு அவற்றை வலைக்கம்பி வேலியால் இணைத்து அரண் செய்திருந்தனர். ஒரு செவ்வக வடிவில் நின்றிருந்த அப்ப்லகைக்கல்லின் சுற்று விளிம்புகள் புடைப்பு நிலையில் அமைக்கப்பட்டுச் சிற்பத்தொகுதிக்குச் சட்டமிட்டாற்போலச் செதுக்கப்பட்டிருந்தது. உச்சிப்பகுதியின் இரு முனைகள் சற்றே வளைவாக வடிக்கப்பட்டிருந்தது. பலகைக்கல்லின் உள்பரப்பு இரு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. பிரிவுப்பகுதியிலும் சட்டம் போன்ற விளிம்பு உள்ளது. கீழடுக்கில், வீரன் ஒருவன் ஈட்டியால் புலியைக் குத்திக்கொண்டிருப்பதுபோல் ஒரு சிற்பம். வீரனின் முகம் முன்புறமாக நம்மை நோக்கியவாறு அமைந்துள்ளது. முகத்தில் கண்கள், மூக்கு போன்றவை தெளிவாகப் புலப்படவில்லை. மழுங்கியிருக்கிறது. அவனுடைய கால்களின் நிலை முன்புற நோக்கில் இல்லாமல் பக்கவாட்டில் புலியை எதிர்கொள்ளும் கோணத்தில் உள்ளது. வீரன் தன் தலை முடியை அவனது வலப்புறத்தில் கொண்டையாக முடிந்துள்ளான். செவிகளில் காதணிகள் உள்ளன. கால்களில் கழல் அணிந்திருப்பதாகக் காணப்படுகிறது. இடையில் அரையாடை அணிந்துள்ளான். இடைக்கச்சில் குறுவாள் காணப்படுகிறது. கீழாடை முழங்கால் வரை உள்ளது. எதிரில் புலியின் உருவம், அவனது உயரத்துக்குச் சமமாகத் தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி நின்று, முன்னங்கால்களால் வீரனைத் தாக்கியவாறு காணப்படுகிறது. புலியின் வால் மேல்புறமாக உயர்த்திய நிலையில் உள்ளது. பெரும்பாலான புலிகுத்திக்கல் சிற்பங்களில் புலியின் வால் உயர்த்தியவாறு காட்டபெறுவதே வழக்கம். இந்த அமைப்பு, புலியின் சீற்றத்தைக் குறிக்கவந்தது. புலியின் உடல் நீளமாகக் காணப்படாததும், அதன் தலை சற்றுப் பெரிதாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்த எண்ணெய்ப் பூச்சின் காரணமாகச் சிற்பங்களின் நுணுக்கமான வடிவமைப்பு புலப்படவில்லை.

              புலிகுத்திக்கல் - அண்மைத் தோற்றங்கள்



நடுகல்லின் மேலடுக்கில், இரண்டு பெண்கள் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நின்றுகொண்டிருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இருவரும் தங்கள் தலை முடியை இடப்புறமாக முடிந்திருக்கின்றனர். காதில், கழுத்தில், கைகளில், காலில் அவர்கள் அணிந்திருக்கும் அணிகள் தெளிவாகப் புலப்படவில்லை. அவர்களது ஆடை அமைப்பும் புலப்படவில்லை. காரணம் முன்னரே குறித்தவாறு, சிற்பங்களின் மேல் தொடர்ந்து பூசிய எண்ணெய்ப்பூச்சே. வணங்கிய நிலையில் உள்ள இரண்டு பெண்களின் சிற்பம், வீரன் மேலுகம் சென்றதைக் குறிக்கும். இவ்வகை அடுக்குநிலை நடுகல் சிற்ப அமைப்பு, நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கருநாடகத்திலிருந்து பின்பற்றிய பாணியாகும். தமிழகத்தில், தமிழகப்பாணியில் நிறுவப்பட்ட நடுகற்களில் இந்த அடுக்குகள் இரா.

                பெண்களின் சிற்பம்


நாட்டார் வழிபாடும் நடுகல்லும்
நடுகல் வழிபாடு தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. போரில், பூசலில் இறந்து படும் வீரனுக்கு வீரக்கல் என்னும் நடுகல் எடுக்கப்படுவது வழக்கம். சங்ககாலப் பாடல்களில் நடுகல் பற்றிய செய்திகள் நிறையக் காணப்படுகின்றன. கால்நடைகளே செல்வமாகக் கருதப்பட்ட காலங்களில், கால்நடைகளைக் காத்தல் பெரும்பணியாயிருந்தது. கால்நடைகளைக் கவர்வதிலும், அவற்றைக் காத்தலிலும் வீரர்கள் போரிடுதல் இயல்பான சமூக நிகழ்வாயிருந்தது. அது போலவே, கால்நடைகளைக் காட்டு விலங்குகளினின்றும் காப்பதற்காகக் காவல் வீரர்கள் விலங்குகளோடு சண்டையிட்டு விலங்குளைக் கொல்லுதலும், சண்டையின்போது வீரர்கள் இறந்துபடுதலும் மிகுதியாக நிகழ்ந்தன. இவ்வகை வீரர்களுக்கும் நடுகல் எடுப்பித்து நாட்டார் வழிபடும் மரபு நாயக்கர் காலம் வரை தொடர்ந்தது.

மதுரை வீரன் சாமி
உக்கடம் நடுகல்லும், இவ்வகையில் வழிபட்டுவந்துள்ளதாகக் கருதலாம். ஒரு வகையில், வழிபாடு காரணமாகவே இந்த நடுகல் இதுவரை அழிவுக்குட்படாமல் ஒரு தொல்லியல் எச்சமாகப் பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது. நடுகல்லின் அமைவிடத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கிருந்த ஒரு இசுலாமியப் பெண்மணி ஒருவர், இந்த நடுகள் சிற்பம் மதுரை வீரன் சாமி என்னும் பெயரால் வழிபடப்பட்டு வருவதாகவும், அருகிலேயே இருப்பதால் நாள்தோறும் அப்பெண்மணி அவ்விடத்தைப் பெருக்கித் தூய்மை செய்து, ஒரு கற்பூரத்தையும் ஏற்றி வைப்பதாகவும் கூறியது அவரது நல்லெண்ணத்தையும், மத நல்லிணக்கத்தையும் நமக்கு உணர்த்தியது.

கோவையும் கோவன்புத்தூரும்
கொங்குநாட்டின் கோவைப்பகுதி பண்டைய நாள்களில், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை அரணாகக் கொண்ட காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருந்த காரணத்தால், கால்நடை வளர்ப்புச் சமுதாயமே மேலோங்கியிருந்தது. வளமான வேளாண்மை இல்லை. இடைக்காலக் கொங்குச் சோழரின் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்த பின்னரே வேளாண்மை செழிப்புற்றது. கொங்குச் சோழர் ஆட்சிக்கு முன்புவரை கோவைப்பகுதி முன்னிலையில் ஒரு நகரப்பகுதியாக் இருந்திருக்கவில்லை. கோவைக்கருகில் அமைந்துள்ள பேரூரே பெரியதொரு நகரமாக இருந்தது. கொங்குநாட்டின் இருபத்து நாலு நாட்டுப்பிரிவுகளில் பேரூர் நாடும் ஒன்றாக இருந்தது. கோவைப்பகுதி, காடுகள் சூழ்ந்த பகுதியாகவும், கால்நடை வளர்ப்புப் பகுதியாகவும் இருந்துள்ளது. பின்னரே, கொங்குச்சோழர் காலக்கல்வெட்டுகளின்படி, கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கோவன்புத்தூர் என்று புதியதாக ஓர் ஊர் அமைக்கப்பட்டதாகவும், அது பேரூர் நாட்டில் இருந்ததாகவும் செய்தி காணப்படுகிறது. காடழித்து ஊராக்கப்பட்ட கோவன்புத்தூர், நாயக்கர் காலத்திலும், காடுகள், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளை விலங்குகளிடமிருந்து காத்தல் ஆகிய கூறுகளைக் கொண்டிருந்தது. எனவே, மேற்படி உக்கடம் புலிகுத்திக்கல் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட நடுகல்லாகும்.

உக்கடம் புலிகுத்திக்கல்லின் காலம்
இந்த நடுகல்லின் காலத்தை, இதைப் பார்வையிட்ட வரலாற்றுப்பேராசிரியர் திரு. இளங்கோவன் அவர்கள், இந்நடுகல் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது எனத்தெரிவித்துள்ளார். எனவே இந்நடுகல், கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

கோவை கிழாரும் உக்கடம் புலிகுத்திக்கல்லும்
மேற்படி உக்கடம் புலிகுத்திக்கல் பற்றிக் கோவை கிழார் என்னும் பெயரில் அறியப்படுகிற கோவையின் வரலாற்றினை ஆய்வு செய்த சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் தம்முடைய இதுவோ எக்கள் கோவை”  நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. அவர் கூற்றிலேயே அக்குறிப்பைக் காணலாம்:

“ஊராரின் பாதுகாப்பிற்காகப் புலியுடன் போர்புரிந்த வாலிபனுடைய உடலைக் கிராமப் பொது இடத்தில் புதைத்துவிட்டு அவனைப்போல் ஒரு கல்லுரு அமைத்து ஊர்ப்பொது இடமான அக்குளக்கரையின் தென்சரிவில் நட்டுப் பூசை செய்தார்கள். இப்போது அவ்வீரனின் கல் அதே இடத்தில் நிற்கிறது. இப்போதும் சில தடவைகளில் அதற்குப் பூசை நடப்பதுண்டு. ஒரு வாலிபன் புலியுடன் போர்புரிந்ததும் அவன் அடக்கமானதும் அடங்கிய சமாதிக்கருகில் இரண்டு பெண்கள் கும்பிடுவதும் அக்கல் சிலையில் செதுக்கப்பட்டிருக்கிறது.


                                    களப்பணியாளர்கள்


முடிவுரை
பல ஆண்டுகளுக்கு முன்பே, கோவை கிழார் உக்கடம் நடுகல்லை அறிந்துவைத்திருக்கிறார். ஆனால் அது, வரலாறு தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு இதுவரை புலப்படாமல் இருந்துள்ளது. அதன் அமைப்பு, இருப்பிடம் ஆகியவை அவர் பார்த்தவாறே இருப்பதும் அவருடைய காலடித் தடத்திலேயே நாங்கள் கோவை நகர மையப்பகுதியில் இந்தப் புலிகுத்திக்கல்லைக் கண்டறிந்ததும் ஒரு வியப்பான நிகழ்வே.



------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.