ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரு
கரஷிமாவுக்குப் புகழஞ்சலி
தமிழுக்குத் தொண்டாற்றிய அயல்நாட்டுப் பெருமக்கள் பலப்பலர். அத்தகைய
பெருமக்களுள் ஒருவர், அண்மையில் 26.11.2015-இல் மறைந்த ஜப்பானிய அறிஞர் நொபுரு
கரஷிமா அவர்கள். நம்மில் பலருக்கு அவரைப்பற்றித் தெரியுமா என்பது ஐயமே. (கட்டுரை
ஆசிரியர் குறிப்பு: கட்டுரை ஆசிரியர் கல்வெட்டியலைக் கற்கத்தொடங்கி
தமிழகத்தொல்லியல் கழகத்தில் சேர்ந்த பின்னரே கரஷிமா என்பவர் யார் எனத்தெரிய
வந்தது..) தமிழ்க் கல்வெட்டுகளை ஆராயும் முகத்தான் தமிழ் கற்ற அப்பெருமகனாருக்குப்
புகழஞ்சலி செய்யும் நிகழ்வு 5.12.2015 அன்று கோவையில் ”தமிழ்நாடு கலை
இலக்கியப்பெருமன்ற”த்தின் சார்பில் நடைபெற்றது. அதுபோழ்து, தொல்லியல் அறிஞர் பேராசிரியர்
எ.சுப்பராயலு அவர்களும், தொல்லியல் அறிஞர் முனைவர் அர.பூங்குன்றன் அவர்களும் உரை
நிகழ்த்தினர். பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள், நொபுரு கரஷிமா அவர்களுடன்
இணைந்து பணியாற்றியவர் என்னும் கரணியத்தால் அவர் கரஷிமா பற்றி விரிவாகப் பேசினார்.
அவருடைய உரை கரஷிமாவைப்பற்றி நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளப் பெரிதும் துணை
செய்தது. அவருடைய உரையைச் செவிமடுத்து உள்வாங்கியவற்றை இங்கே கட்டுரை வடிவில்
தந்துள்ளேன். (பிழைகள் சுட்டப்பட்டால் திருத்தம் எளிதாகும்.)
1933-ஆம் ஆண்டு பிறந்த கரஷிமா தம் இருபத்தைந்தாவது
அகவையில் 1958-இல் டோக்கியோ பல்கலையில் வரலாற்றுத்துறையில் பட்டப்படிப்பை (Graduation) முடித்தார். அது ஒரு
முதன்மையான பட்டமாகும். அப்போதே அவரது எதிர்காலப்பணி தொடங்கியது எனலாம்.
அப்பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையாக அவர் தெரிவு செய்தது சோழர் வரலாறு. (ஆசிரியர்
குறிப்பு; ஜப்பான் பட்டப்படிப்பில் ஒரு
ஜப்பானியர் அவரது நாட்டின் வரலாற்றுக்கூறுகளில் ஒன்றைத் தெரிவு செய்யாமல் தமிழக
வரலாற்றில் நாட்டம் கொண்டார் என்பது வியப்பையே அளிக்கிறது.) அந்த ஆய்வுக்கட்டுரையை
அவர் எழுதியது ஜப்பானிய மொழியில்தான். அவருக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது.
ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் குறைவு. (பின்னாளில் 1980களில் உலகமயமாக்கல்
கரணியமாக ஜப்பானில் மற்ற மொழிகளுக்கும் முதன்மை தரப்பட்டபோது. அவர் ஆங்கிலத்தில்
எழுதினார்.)
அவருடைய காலகட்டத்தில், கல்விக்கு மதிப்பும் முதன்மையும் இருந்தன.
கல்வியாளர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். கல்வித்துறையில் புதிய திட்டங்களைக்
கல்வித்துறை அறிஞர்கள்தாம் கொண்டுவந்தனர். அரசோ அல்லது அரசியல்வாதிகளோ தலையிடவில்லை. மற்ற துறைகளுக்கும் இந்த
நடைமுறைதான். வெளிநாட்டுக்கல்வியும் கொண்டுவரப்பட்டது. தாய் மொழியான ஜப்பானிய
மொழியிலேயே கல்வி கற்றதும், அரசியல் தலையீடற்ற கல்வித்திட்டங்கள், செயல்பாடுகள்
ஆகியன நடைமுறையில் இருந்தமையும் கரஷிமாவின் வளர்ச்சிக்குக் கரணியங்களாக அமைந்தன.
மேலும், Study Group என்னும் கற்போர் குழுக்கள்
இருந்தமையும் கரஷிமாவின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைசெய்தன. ஆய்வுக்கான
பாடங்களைப் பயில்வோர் சிலர் ஒன்றுசேர்ந்து மாதம் ஒரு முறை இத்தகைய கற்போர் குழுவாக
அமைந்து கூடிப்பேசுவர். கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர். கூட்ட விவாதங்களின்
அடிப்படையில் ஆய்வுக்கருத்துகள் பின்னர் நூலாக வெளிவரும். பின்னாளில் இவ்வாறான
குழுக்கூட்டங்களுக்குக் கரஷிமா சுப்பராயலுவை அழைத்துக்கொண்டதுண்டு. (சுப்பராயலு
அவர்கள் 1973-இல் டோக்கியோ பல்கலையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தபோதுதான்
கரஷிமாவுடன் முறையான அறிமுகம் வாய்க்கப்பெற்றார்.)
ஜப்பானில் பிறமொழிகளுக்கும் இடம் கிடைத்த காலத்தில்தான் கரஷிமா ஆங்கில
அறிவை வளர்த்துக்கொண்டார். முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கிய ஜப்பானியர்
கரஷிமாவாக இருக்க வாய்ப்புண்டு. 1966-இல் முதன் முதலில் கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில்
தம்முடைய முதல் ஆங்கிலக்கட்டுரையை வெளியிட்டார். அதற்கு முன்னரே, 1963-இல்
ஜப்பான்-இந்தியா நாடுகளுக்கிடையேயான மாணவர் பரிமாற்றத்தில் (Exchange students) வரலாற்று ஆய்வு மாணவராகச்
சென்னைப்பல்கலைக்கு வந்தார். அப்போது, நடுவணரசின் தொல்லியல் துறையின் தென்னிந்திய
மையம் உதகையில் இயங்கிவந்தது. எனவே 1963-இல் தமிழ்க் கல்வெட்டுகளைப் படிப்பதற்காக
கரஷிமா உதகை வந்து சில மாதங்கள் படித்தார். தமிழ்க்கல்வெட்டுகளைப் படிப்பதற்காகவே
தமிழ் கற்றார். 1968-இல் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்னை
வந்தார். அப்போது சுப்பராயலு அவர்கள் சென்னைப் பல்கலையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
சோழ நாட்டு நாடுகள், ஊர்கள் ஆகியன பற்றிய ஒரு அட்டவணையை சுப்பராயலு அவர்கள்
ஆக்கியிருந்தார். கரஷிமா அதைப் படித்திருக்கிறார்.
1968-இல்
சென்னை வந்த கரஷிமா 1968 முதல் 1971 வரை மூன்றாண்டுகள் மீண்டும் கல்வெட்டுத்துறையில்
கழித்தார். இந்தக் காலகட்டத்தில் கரஷிமாவுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது. ஒரு
மகன் உண்டு. இப்போது கல்வெட்டுத்துறையின் தென்னிந்திய மையம் மைசூரில் இயங்கியது. மைசூரில்
இரண்டாவது மகன் பிறப்பு. இந்த மூன்றாண்டுகளில் அவர் தமிழ் நன்றாகக் கற்றார்.
கல்வெட்டுத்தமிழை நன்றாகப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆனால் பேசுவதற்குத் தயக்கம்.
ஜப்பானில் அவர் தலைமையேற்ற கற்போர் குழுவினர்க்குத் தமிழைக் கற்றுவித்தார். இந்நிலையில்,
1967-1974 ஆண்டுகளில் கரஷிமா டோக்கியோவில் ஆசிய ஆப்பிரிக்க மொழி மற்றும் பண்பாட்டு
ஆய்வு நிறுவனத்தில் ஆசிரியப்பணியையும் மேற்கொண்டிருந்தார். 1973-1975 ஆண்டுகளில் சுப்பராயலு
அவர்கள் டோக்கியோ சென்றார்; கரஷிமாவுடன் கூட்டு ஆராய்ச்சியில் இணைந்துகொண்டார்.
தலைப்பு “சோழர் காலக் கல்வெட்டுகளில் ஆள்பெயர்கள்”. இங்கு கரஷிமா அவர்களின் ஆய்வு முறை
கருதுதற்குரியது. காலமுறைப்படியும் இட முறைப்படியும் ஆய்வு செய்வதில் அவர்
முனைந்தார். கல்வெட்டுகளைப் படித்துப் புரிந்துகொள்வதில் “Contextual meaning” முதன்மையான ஒன்று என அவர் கருதினார். எல்லாக்
கல்வெட்டுகளையும் தொகுத்துக் கிடைக்கும் ஒருங்குநிலையில் சொற்களுக்குப்
பொருள்காணவேண்டும் என்பது அவரது ஆய்வு நெறிமுறை. புள்ளியியல் முறை(Statistics)யோடு இயைந்த ஒன்று. மேற்படி ஆள்பெயர் ஆய்வில் 9000 சொற்களை
வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரஷிமா
அவர்கள் ஒரு ஆய்வாளர் என்ற நிலையில் தமக்கு முன்னர் இருந்த வரலாற்று ஆய்வாளர்களை
ஒருபோதும் மதிக்காமல் இருந்ததில்லை. அவருடைய ஆய்வுக்கட்டுரைகளில் முந்தைய வரலாற்று
ஆசிரியர்களைப் பற்றிய குறிப்புகள் உள. ஆனால் அவர் வலியப்போய் மற்றவரிடம்
வம்பிழுப்பதில்லை. கருத்தியல் (Theoretical)
சார்ந்த
ஆய்வுமுறைகளை அவர் ஏற்கவில்லை. காட்டாக மார்க்சியம் சார்ந்த ஆய்வினை முன்வைத்து
அவர் ஆய்வு செய்யவில்லை. சார்பின்மை என்பது அவரது ஆய்வு நெறிமுறை. கல்வெட்டு
ஆய்வுகளிலும் நூல்கள் தொகுத்தலிலும் அவர் கூட்டு முயற்சியை ஊக்குவித்தார். முதன்முதலில்
அவர் தம் ஆய்வுக்கட்டுரையை 1980-இல்
எழுதினார். முதலில் ஜப்பானிய மொழியில் எழுதி அவரே அதை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தார். அந்த ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட பொருள் சோழர்கால
ஊர்களிலிருந்த நிலவுடைமை. சோழர்களின் 10, 11 –ஆம் நூற்றாண்டைச் சார்ந்த
கல்வெட்டுகளைக் கொண்டு அவர் தம் ஆய்வை மேற்கொண்டார். அதற்காகப் பயன்படுத்திய
கல்வெட்டுகள் திருச்சிக்கருகில் அமைந்த அல்லூர் மற்றும் ஈசானமங்கலம் ஆகிய ஊர்களின்
கல்வெட்டுகள். பெரும்பாலான ஊர்களில் நிலவுடைமையில் கூட்டுடைமை இருந்தது என்பதும்,
மாறாகப் பிராமண ஊர்களில் தனியுடைமை நிலவியது என்பதும் அவர் நிறுவிய
கருதுகோள்களாகும். 1980-ஆம் ஆண்டில் அவர் விஜய நகர வரலாற்றில் ஆய்வு செய்தார்.
முதலில் தமிழ்க் கல்வெட்டுகளைப் படித்தும் பின்னர் கன்னடக் கல்வெட்டுகளைப்
படித்தும் அவர் ஆய்வுசெய்தார். நாயக்கர் என்பது ஒரு பட்டமே; அது சாதிப்பெயரல்ல.
“நாயக்கத்தனம்” என்று தமிழிலுல் “நாயங்க்கரம்” என்று தெலுங்கிலும் நாயக்கர்களின் தன்மை மற்றும்
நிலையை விளக்கினார். நாயக்கர் என்பது சாதியன்று என்பதற்குச் சான்றாக சாளுவநாயக்கன்
என்பான் காஞ்சிபுரத்திலிருந்த ஒரு பிராமணன் ஆவான் என்னும் குறிப்பு சிறந்த எடுத்துக்காட்டு.
கி.பி.
1350-இலிருந்து விஜயநகர ஆட்சி தொடங்குகிறது. விஜயநகர ஆட்சியில் ஆட்சிக்குட்பட்ட
நிலப்பகுதி பல இராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. நாற்பதுக்குமேல்
இராஜ்ஜியங்கள் இருந்தன. திருச்சி, தஞ்சை, வழுதலம்பட்டு, தாராபுரம்,
டணாயக்கன்கோட்டை ஆகியன அவற்றுள் ஒரு சில. இராஜ்ஜியங்களின் ஆட்சிப்பொறுப்பும்
தலைமையும் பிரதானிகள் என்பாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இத்தகைய இராஜ்ஜிய-பிரதானி
ஆட்சிமுறை விஜயநகர ஆட்சியில் மூன்றாண்டுக்காலம் நிலவியது.
மூன்றாண்டுகளுக்குப்பின்னர், படைத்தலைவர்களுக்கு முதன்மையிடம் அளிக்கப்பட்டது.
விஜயநகரப்பேரரசு உருவாக்கத்துக்காக விஜயநகர அரசர்கள் பல போர்களில்
ஈடுபடவேண்டியிருந்தது. படைத்தலைவர்கள் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே நிலை நிற்க (தங்க)
வேண்டியிருந்தது. அவர்களின் நிலை நிற்றலுக்குத் தொடர்ச்சியான செலவுகளும் இருந்தன.
அச்செலவுகளை ஈடுகட்ட அவர்களுக்கு விஜயநகர அரசர்கள் நிலங்களை ஒதுக்கீடு செய்தனர்.
அந்நிலங்களின் வரி வருமானங்களில் ஒரு பகுதி படைத்தலைவர்களுக்கும் மிகுந்தபகுதி
விஜயநகர அரசுக்கும் பங்கீடு செய்யப்பட்டன. இதை நாயக்கர்கள் சற்றே மாற்றினர்.
விஜயநகர அரசுக்கு முறையான வரி வருமானத்தில் சிக்கல் ஏற்பட்டது. கி.பி. 1460-க்கு
மேல் குறுநிலத் தலைவர்களின் ஆட்சி மேலோங்கியது. கி.பி. 1505 முதல் துளுவ
அரசர்களின் ஆட்சி ஏற்பட்டது. கிருஷ்ணதேவராயர் நாயக்கர்களைக் கட்டுக்குள்
கொண்டுவருவதற்காக நாயக்கர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார். நாயக்கர்கள்
கிருஷ்ணதேவராயருக்குப் பணிந்தனர். மைசூர் நஞ்சராயர்கள் மட்டும் பணியவில்லை. ஆட்சி
அதிகாரம்,
1. அரசன்
2. நாயக்கர்கள் (பெரிய நாயக்கர்)
3. சின்ன நாயக்கர்கள்
என்னும் படிநிலையில் அமைந்தன.
தஞ்சை, மதுரை, செஞ்சி ஆகிய பகுதிகளின் நாயக்கர்கள்
பெரிய நாயக்கர் வரிசையில் அடங்குவர்.
கரஷிமாவின் நாயக்கர்கள் பற்றிய ஆய்வில் ஏறத்தாழ 150
ஆண்டுகள் காலகட்டத்தில் 300 நாயக்கர்கள் குறிக்கப்படுகிறார்கள். நாயக்கர்களின்
தொடர்ச்சியாகப் பாளையக்காரர்கள் காணப்படுகிறார்கள்.
அடுத்து, கரஷிமா அவர்களின் ஆய்வு, தென்னிந்தியாவுக்கும்
தென்கிழக்காசியாவுக்கும் இருந்த தொடர்பு மற்றும் பண்பாட்டுத் தாக்கம் பற்றியது.
இந்த ஆய்வும் ஜப்பானிய மற்றும் தமிழ் அறிஞர்களின் கூட்டு ஆய்வாக நிகழ்ந்தது.
அடுத்து மேற்கொண்ட தென்னிந்திய வணிகக்குழுக்கள் பற்றிய ஆய்விலும் மேற்சொன்னவாறு
ஜப்பானிய, தமிழ் அறிஞர்களின் கூட்டு ஆய்வு நடைபெற்றது. தென்னிந்திய வணிகக்
குழுக்களில் முதன்மையானவர்கள் நானாதேசி வணிகக்குழுவினர் ஆவர். இவர்களின் தொடக்கம்
கன்னடப்பகுதியிலிருந்து காணப்படுகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே
தமிழகத்தில் இவர்கள் குறிக்கப்பெறுகிறார்கள். இவர்களது வணிகத் தொடர்பு மற்றும்
செயல்பாடுகள் பல்வேறு அயல் நாடுகளுடன் என்றாலும் இவர்களின் தொடர்பு மொழி தமிழாகவே
இருந்துள்ளது. இதன் கரணியமகவே, நானாதேசிகளின் கல்வெட்டுகள், மியான்மர்(பர்மா),
மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் தமிழ்க்கல்வெட்டுகள்
வடிவிலே கிடைக்கின்றன. முதல் குலோத்துங்கனின் தமிழ்க்கல்வெட்டொன்று இந்தோனேஷியாவில் உள்ளது. இதில் ஜாவா, தமிழ்
ஆகிய இரு மொழிகளும் காணப்படுகின்றன. லாவோஸ் நாட்டில் ஒரு மலைமீதுள்ள சிவன்கோவிலில்
சமற்கிருதக் கல்வெட்டொன்று காணப்படுகிறது.
கரஷிமா
அவர்கள் எட்டு தமிழ் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். அவரைப்பற்றித்
தெரிந்துகொள்ளும்போதே ஜப்பானிய நாட்டுச் சூழ்நிலையும் மக்களின் பண்பும் நமக்கு
ஒருவாறு விளங்கும். உலகப்போரின் தாக்கங்கள், சிக்கல்கள்(பிரச்சினைகள்) அவர் அறிந்திருந்தவர். ஜப்பானியர் அணுசக்தியின்
பேரழிவைச் சந்தித்தவர்களாகையால் அணுசக்திக்கு எதிர்ப்புக் காட்டியவர்கள்.
இருப்பினும், தற்போது, நிலைமை மாறி ஆக்கப்பணிகளுக்கு அணுசக்தியை
ஏற்றுக்கொள்கின்றனர். ஜப்பானியர் கல்வியை மிக உயர்வாக மதித்தனர். ஜப்பானியப்
புத்தாண்டன்று ஜப்பானியர் முதலில் சந்தித்து மரியாதை செய்வது தம்
ஆசிரியர்களைத்தான்.
கரஷிமா
அவர்கள் தம் 72-ஆம் அகவையில் எழுத்துப்பணிகளை நிறுத்திவிட்டுத் தமக்குப்பிடித்த
மரச்சிற்பங்கள் செய்யும் பணியில் ஈடுபடப்போவதாகக் கூறினாலும், ஆய்வும்
எழுத்துப்பணியும் அவரை விடவில்லை.
இறப்புவரை எழுத்துப்பணி. அவருக்குக் கடந்த பத்து ஆண்டுகளாக உடல் நலக்குறைவு
இருந்துள்ளது. முன்னர் ஒருமுறை மஞ்சள் காமாலை நோய் தாக்கியதுண்டு. எனினும் குருதிப்புற்று நோய் கரணியமாக அவரது
மறைவுக்கு ஒரு மாதம் முன்பு அவரது பணி முடங்கியது. வருகின்ற 2016 ஜனவரியில் கரஷிமா
அவர்கள் தம் மனைவியோடு தமிழகம் வந்து உதகை, மைசூர், சென்னை ஆகிய ஊர்களில்
பதினைந்து நாள்கள் கழிக்கத் திட்டஏற்பாடு வைத்திருந்தார்.
ஆனால் நிகழ்ந்தது வேறு.
முடிவுரை: கரஷிமா அவர்களின் ஆய்வுகள் இளைஞர்களை எட்டவேண்டும். தற்போதுள்ள
சூழ்நிலையில், ஆய்வுப்பட்டமான முனைவர் பட்டம் பெற்றவர் ஏராளமாக உளர். எளிதில்
பட்டம் பெறும் சூழலும் உள்ளது.
ஆனால், ஆய்வறிவில் ஆழம் இருப்பதில்லை. முந்தைய
ஆய்வறிஞர்களின் நூல்களை எல்லாம் படித்துள்ளனரா என்பது ஐயமே. குறிப்பாக
ஆங்கிலத்தில் கிடைக்கின்ற மிகுதியான ஆய்வு நூல்கள் படிக்கப்படுவதில்லை. அவை
தமிழில் மொழியாக்கமும் செய்யப்படுவதில்லை. இனிவரும் ஆய்வாளர்கள், இவற்றையெல்லாம்
செய்யவேண்டும்.
முனைவர் அர.பூங்குன்றன் அவர்களின்
சுருக்கவுரையிலிருந்து சில செய்திகள்:
கரஷிமா
அவர்களைச் சந்தித்ததுண்டு. அவருடன் உரையாடியதுண்டு. ஆனால் அவருடைய நூல்களைப்
படித்துத்தான் அவருடைய ஆய்வுப்பணியை அறியமுடிந்தது. சோழ நாட்டில் ஏற்பட்ட
மாற்றங்கள் குறித்த நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவரது நூல்கள் உறுதியான சான்றுகள்
கொண்டவை. சோழர் காலத்தில் நூற்றுக்கணக்கான வரிகள் நடைமுறையில் இருந்தன என்றாலும்,
அனைத்துமே அனைத்துப் பகுதிகளிலுமே நடைமுறையில் இல்லை. ஏழே ஏழு வரிகள் மட்டிலுமே
எல்லாப்பகுதிகளிலும் வாங்கப்பட்டன. மற்றவரிகள் யாவும் அவ்வப் பகுதிகளைப் பொறுத்தன.
மேலும் பல்வேறு காலங்களில் பல்வேறு வரிகள் நடைமுறையில் இருந்தன. கரஷிமாவின் ஆய்வு
புள்ளிவிவரங்களைக் கொண்டு அமைந்தவை. அவரது ஆய்வு நெறிமுறை விஞ்ஞான
அடிப்படையிலானது. அது பல ஆய்வுகளுக்கு உற்ற துணையாக இருக்கும். 1984-இல் முதல்
நூல்; அதுவும் தமிழக வரலாற்றைப்பற்றியது. முன்னர் ஆய்வு செய்த அறிஞர்களைப்பற்றிய
குறிப்புகள் அந்நூலில் உண்டு. காட்டாக, இந்திய ஆய்வறிஞர் திரு. டாங்கேயின் நூல்
பற்றிய குறிப்பைச் சொல்லலாம். அவருக்கென்று ஒரு நெறிமுறை இருந்தது. ஜப்பானில்
ஆய்வு நடைபெற்றாலும் ஜப்பான், மைசூர் ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்குழுவினர்
ஆய்வு செய்தனர். இங்கிருந்து பல அறிஞர்களை அழைத்துச் சென்று ஆய்வுகள நடத்தினார்.
ஆய்வுச் சொற்களைப் பொருள்கொள்வதில் காலமும்,புலமும் (context meaning) இன்றியமையாதன என்றார். அவரது
“காணியாட்சி” பற்றிய ஆய்வு சிறப்பானது. காணியாட்சி பற்றிய தமிழ்க்கல்வெட்டுகளில்
“குடும்பு” என்னும் சொல் பயில்கிறது. அது
நிலம் என்னும் பொருளையும், ஆங்கிலச் சொல்லான “ward”
என்னும்
பொருளையும் கொண்டது. அதுபோல், “கரை”
என்னும்
சொல்லையும் நுணுக்கமாக ஆய்வு செய்தவர் அவர். 2013-இல் வெளியான “Concise History of South India” என்னும் நூல் மிகச் சிறந்த ஒன்று.
அவரது நூல் ஒன்று இறுதியாக 2014-இல் வெளியானது.
உரையின் கட்டுரை வடிவாக்கம்: து.சுந்தரம், கல்வெட்டு
ஆராய்ச்சியாளர், கோவை. அலைபேசி : 9444939156.