மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 மே, 2014










பழமையைப் போற்றுவோம்


         கல்வெட்டு நூல்களைப் படித்துக்கொண்டிருக்கையில் நூறு கல்வெட்டுகளுக்கிடையில் ஒரு கல்வெட்டு வேறுபட்டு நின்றது. கும்பகோணம் வட்டத்தில் திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரர் கோயிலில் அக்கல்வெட்டு உள்ளது. திருக்கோடிக்காவல் ஊர், பண்டு நல்லாற்றூர் என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. அதே நாட்டுப்பிரிவைச்சேர்ந்த ஒரு பிரமதேயம் (பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்த ஊர்ப்பகுதி), நாரணக்க சதுர்வேதிமங்கலம் ஆகும். இந்தச் சதுர்வேதிமங்கலத்தை நிருவாகம் செய்ய ஒரு குழு இருந்தது. அது சபை எனப்பட்டது. இச்சபையார்  திருக்கோடீசுவரர் கோயிலுக்குத் தானமாக நிலம் ஒன்றை அளிக்கிறார்கள். இந்த நிலம் விற்ற நில விலையாவணம் என்னும் நடைமுறையில் தானமாக அளிக்கப்பட்டது. இந்த நடைமுறைப்படி, சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த நிலம் விலை கூறப்பட்டு ஒருவருக்கு விற்கப்படும். விலைப்பணம் சபைக்கு உரிமையாகும். நிலத்தை விலை கொண்டு வாங்கியவர் அந்நிலத்தைக் கோயிலுக்குக் கொடையாகத் தருவார்.

         மேலே கூறப்பட்ட விலையாவணம் பற்றிய கல்வெட்டு, இக்கோயில் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. தனிக்கல்லில் வெட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், உத்தம சோழரின் தாயாரும், கண்டராதித்த சோழரின் அரசியாரும் ஆன செம்பியன் மகாதேவியார், இக்கோயிலைக் கற்றளியாகப் (செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானம்) புதுப்பித்தார். அவ்வாறு புதுப்பிக்கையில், இக்கல்வெட்டு கற்றளிக்கோயிலின் சுவர்களின் கற்களில் மீண்டும் வெட்டப்பட்டது. மீண்டும் வெட்டும்போது புதிய கல்வெட்டு வரிகளில் பழங்கல்வெட்டுப்படி வெட்டிய கல்வெட்டு என்னும் குறிப்பைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆவணப்படுத்துதலில் எவ்வளவு நேர்மை!  கல்வெட்டு வரிகளைக் கீழே தந்துள்ளேன்:

      ஸ்வஸ்திஸ்ரீ இதுவும் மொரு பழங்க
      ல்படி கோவிராஜகேசரிபன்மற்கு யாண்டு நான்காவது வடகரை
      நல்லாற்றூர் நாட்டு பிரமதேயம் நாரணக்கசதுர்வேதிமங்கலத்து
      சபையோம் விற்ற நிலவிலையாவணம் ......................................
   
      .............................................................................................................................
      .............................................................................................................................
      .............................................................................................................................

      ..............
      இவிசைத்த பெருநான்கெல்லையிலும் அகப்பட்ட நிலம் மேடும் 
      பள்ளமும் உள்பட முக்கால் செயும் விற்று விலையாவணம் செய்து
      குடுத்தோம் ......................... நாரணக்கச் சதுர்வேதிமங்கலத்து சபையோம்
      இது பழய கல்படி இந்த ஸ்ரீவிமாநத்திலே  ஏற வெட்டிநமையில் முன்
      னிவாஜகம் வெட்டிக்கிடந்த தனி கல்லால் உபையோகம்
      இல்லாமையால் அது தவிர்ந்தது இது முட்டில் பன்மாயேச்வர கடை
      கூட்டப்பெற்றார் ||


         பழமையைப் பாதுகாக்க அக்கால மக்கள் மேற்கொண்ட அக்கறை தற்போது நம்மிடம் உள்ளதா என்பது நம் முன் உள்ள கேள்வி. சில ஒளிப்படங்களை இங்கே இணைத்துள்ளேன். தற்காலம் கோயில்கள் புதுப்பிக்கப்படுகையில் பழங்கல்வெட்டுகள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றன என்பதை ஒருவாறு உணர இப்படங்கள் துணை செய்யும்.

               
பழமையைச் சற்றேனும் போற்றுவோம்.




  
       




து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலை பேசி : 9444939156.         

திங்கள், 12 மே, 2014

குருநல்லிபாளையம் சூலக்கல் கல்வெட்டு
                                              து.சுந்தரம், கோவை

       நெகமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொல்லியல் தொடர்பான நடுகல் சிற்பங்களும், கல்வெட்டுகளும் அண்மைக் காலத்தில் கிடைத்து வந்துள்ளன. அந்த வகையில், நெகமத்துக்கருகில் அமைந்துள்ள குருநல்லிபாளையம் கிராமத்தில் சூலக்கல் என அழைக்கப்படும் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த, வரலாற்று ஆர்வலர் ருத்திரன் என்பவர்  தெரிவித்த தகவலின் அடிப்படையில் கோவை, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் நேரில் பார்வையிடச்சென்றார். ஊர்க்கவுண்டர் வேலுச்சாமி அவர்களும், அவரது நண்பரான அருணாசலம் என்பவரும் சூலக்கல் இருந்த இடத்துக்கு அழைத்துச்சென்றனர். ருத்திரனும் உடன் இருந்தார்.

           குருநல்லிபாளையத்தில்  தற்போது  பைரவர் கோயில்  அமைந்துள்ளது.
அதற்கு எதிர்ப்புறத்தில் சற்றே மேட்டுப்பாங்கான இடத்தில் விவசாய நிலத்தில்,
ஒரு சிறிய வேப்பமரத்தை ஒட்டிச்சாய்ந்த நிலையில், செடி புதர்களுக்கிடையில் உயரமாக குத்துப்பாறைக்கல் காணப்பட்டது. வெளியே தெரிந்த பக்கத்தில் ஒரு திரிசூல உருவம் செதுக்கப்பட்டிருந்தது. மறுபுறம் சரியாகப் பார்க்க இயலாததால், ஊர்க்கவுண்டரின் உதவிபெற்று ஆட்களைக்கொண்டு செடி,கொடிகளை அகற்றிவிட்டு, மண்ணைத்தோண்டிக் கற்பாறையை நிமிர்த்துச் சாய்த்துப்பார்த்ததில் எழுத்துகள் காணப்பட்டன. பாறையை நீரால் கழுவித்தூய்மைப்படுத்தி, கருப்பு மசியால் படியெடுத்து, கல்வெட்டு வாசகத்தைப் படித்ததில் பின் வரும் செய்திகள் புலனாயின.

         குறுநீலி என்னும் கிராமம், கோயில் ஒன்றுக்குத் தேவதானமாகச் சர்வமானியமாகத் தானம் அளிக்கப்பட்டது என்பது செய்தி. குறுநீலி கிராமம் தேவதானமாகக் கொடுக்கப்பட்டதால், குடி மக்கள் செலுத்தும் கடமை போன்ற அரசு வருமானம் கோவிலுக்கே பயன்படக்கூடியது என்னும் கருத்தை உள்ளடக்கி, கல்வெட்டு வாசகம் அமைந்துள்ளது. இந்தத் தானம் அளிக்கப்பட்ட காலம் சர்வதாரி என்னும் வருடத்தில் தை மாதம் ஆகும். கல்வெட்டின் முதல் ஆறு வரிகள் மிகவும் சிதைந்து போயிருந்த நிலையில், அந்த ஆறு வரிகள் படிக்க இயலவில்லை. எனவே, தானம் எந்த அரசர் காலத்தில் அளிக்கப்பட்டது என்னும் செய்தியும், எந்தக்கோயிலுக்குத் தானம் அளிக்கப்பட்டது என்னும் செய்தியும் உறுதிபடத்தெரியவில்லை. ஆனால், கல்வெட்டுகளில் காணப்படும் “ தேவதானம்  என்னும் சொல், சிவன் கோவிலுக்கு அளிக்கப்பட்ட தானத்தையே குறிப்பதால், இந்த தேவதானக்கொடையும் ஒரு சிவன் கோவிலுக்குரியது என்பதில் ஐயமில்லை. குருநல்லிபாளையத்தில் எந்த ஒரு சிவன் கோவிலும் இல்லை என்பதாலும், இவ்வூருக்கருகில் அமைந்துள்ள தேவனாம்பாளையத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் என்னும் பெயரில் சிவன் கோவில் இருப்பதாலும், இங்குக் குறிப்பிட்ட கொடையானது தேவனாம்பாளையம் சிவன் கோவிலைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக்கருத நிறைய வாய்ப்புண்டு.

         மேற்படிக் கருத்தை உறுதிப்படுத்துவது போன்று, சில சான்றுகள் தென்படுகின்றன. குருநல்லிபாளையம் எனத் தற்போது அழைக்கப்படும் இந்த ஊர், கல்வெட்டில் “ குறு நீலி “  என்ற பழம்பெயரால் வழங்கப்பட்டு வந்துள்ளது. தேவனாம்பாளையம் சிவன் கோவிலில், மொத்தம் எட்டு பழங்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் கொங்குச்சோழர்களில் ஒருவனான மூன்றாம் விக்கிரம சோழன் காலத்துக்கல்வெட்டுகள் ஆகும். இவனுடைய ஆட்சிக்காலம், கி.பி. 1273 முதல் கி.பி. 1305 வரையிலானது. இவ்வரசனுடைய இருபத்தொன்பது, முப்பது ஆகிய ஆட்சியாண்டுகளில் (அதாவது கி.பி. 1302-1303), இக்கோவிலில் பெரியதொரு திருப்பணி நடைபெற்றிருக்க வேண்டும் எனக்கல்வெட்டுச் செய்திகளால் அறிகிறோம். அது சமயம், குறுநீலியைச்சேர்ந்த வெள்ளாளர்கள் பலர் கோவிலுக்குக் கொடை அளித்துள்ள செய்தி தேவனாம்பாளையத்து சிவன் கோவில் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. எனவே, குறுநீலி கிராமத்தவர்க்கும் தேவனாம்பாளையம் சிவன் கோவிலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு  தெளிவாகிறது. இதிலிருந்து, குறுநீலி என்னும் குரு நல்லிபாளையத்து சூலக்கல்லில் குறிப்பிடப்படுகின்ற தேவதானக்கொடை தேவனாம்பாளையம் சிவன் கோவிலுக்கு அளிக்கப்பட்டது எனக்கொள்வதில் தவறில்லை.

         மேலும், கல்வெட்டில் வரும் ஒரு வரியானது,

“ ............................................ப் பிள்ளையா
 ற்குப் பூசைக்கு ....

என்று காணப்படுவதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், தானம் எந்த இறைவர்க்கு அளிக்கப்பட்டிருக்கக்கூடும் என யூகிக்கலாம். “பிள்ளையார்(ற்)  என்னும் தொடர் கல்வெட்டில் பொதுவாக மூன்று கடவுளர்களைக் குறிப்பதாக அமையும். “மூத்த பிள்ளையார் என்னும் தொடர் வினாயகரையும், “இளைய பிள்ளையார்“ என்னும் தொடர் முருகனையும், “க்‌ஷேத்திரப்பால பிள்ளையார் என்னும் தொடர் கால பைரவரையும் குறிக்கும். மேற்படி கல்வெட்டு வரியையும், இக்குறிப்புகளையும் கொண்டு, தேவனாம்பாளையம் சிவன் கோவிலில் எழுந்தருளியிருந்த முருகன் திருச்சன்னதியின் பூசைக்கோ, அல்லது காலபைரவர் திருச்சன்னதியின் பூசைக்கோ தானம் அளிக்கப்பட்டது எனக்கருதலாம்.

         தற்போது, குறுநீலியில் பைரவர் கோவில் இருப்பதைப்பார்க்கும்போது, கொடை காலபைரவர்க்காகத் தரப்பட்டது என்றும், காலபைரவர், தேவனாம்பாளையத்திலிருந்து கொணரப்பட்டு ஏதோ ஒரு காரணத்துக்காகக் குறு நீலியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருத வாய்ப்புள்ளது. இவ்வாறு, பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ள- கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சூலக்கல், இப்பகுதி வரலாற்றுத் தொடர்புடைய ஒன்று என்பதை உறுதி செய்கிறது. இச்சூலக்கல், மீளாய்வுக்கு உட்படுத்தப்படும்போது மேலும் பல புதிய செய்திகளைத் தரக்கூடும்.

கல்வெட்டின் பாடம் வருமாறு :

1.  -   6. வரிகளில் எழுத்துகள் தேய்ந்துள்ளன.
7.   . . . ப்பிள்ளையா
8.   ற்குப்பூசைக்கு சறு
9.   வதாரி வருஷத்து தை
10.  மாதம் முதலிந்த நா
11.   ட்டில் குறுநீலி தேவதா
12.   நமாகச்சறுவமானிய
13.   மாகக்குடுத்தோம் சந்
14.   திராதித்தவரைக்கு இக்
15.   கோயிலி(ல்) .. .. ..  னுகு
16.   ..  ..   ..  ..  பட்ட குடி
17.   மைப்பாடுந்தாழ்வற நட
18.   த்தபெ(று)வார்களாக
19.   இப்படிக்கு இது பந்மாஹே
20.   ஸ்வர இர‌ஷை




கல்வெட்டு காணப்பட்ட இடம்-அரசாணிக்காய்த்தோட்டம்








து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
9444939156.

  

         
காணாமல் போன கடவுள் சிலைகள்


        முகலாயர்களின் படையெடுப்பின்போது தென்னகத்தில் பல கோயில்கள் தாக்குதல்களுக்கு உள்ளாயின. கட்டுமானப்பகுதிகளும் சிலைகளும் உடைக்கப்பட்டன. மூலஸ்தானத்து விக்கிரகங்கள் பல காணாமல் போயின. ஒரு சில கோயில்களில் அவ்விக்கிரகங்களைக் காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்ட நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

        அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெற்றுள்ளது. முகலாயப்பேரரசன் ஔரங்கசீப் தென்னிந்தியாவில் கி.பி.1688-இல் நடத்திய படையெடுப்பின்போது மராட்டர்களின் மீதும் காஞ்சியின் மீதும் தாக்குதல் நடத்தினான். அதுசமயம் தென்னிந்தியாவின் வேறு சில பகுதிகளும் தாக்குதல்களுக்குள்ளாயின. இத்தாக்குதல்களின்போது கோயில் சிலைகள் உடைக்கப்பட்டன. காஞ்சித்தாக்குதலைத்தெரிந்து முன்னெச்சரிக்கையாக காஞ்சியிலிருந்த மூன்று பெரிய கோயில்களின் நிர்வாகத்தினர் கோயில்களின் இறைவர் திருமேனிகளை அடையாளம் தெரியாதவாறு தோற்றத்தை மாற்றி, திருச்சி மாவட்டம் உடையார்பாளையத்துக்காடுகளில் ரகசியமாக ஒளித்து வைத்தனர். முகலாயரின் தாக்குதல் ஆபத்து நீங்கி, காஞ்சியின் பாதுகாப்பு உறுதியானதும் மீண்டும் பெருமாளைக் காஞ்சிக்குக்கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது உடையார்பாளையத்து ஆட்சித்தலைவனாக இருந்தவன், பெருமாள் மீது கொண்ட பக்தியால் பெருமாள் திருமேனியைத்தர மறுக்கவே,காஞ்சியின் ஜீயரான ஸ்ரீனிவாசர் என்னும் ஆத்தான் திருவேங்கட ராமானுஜர் குறுக்கிட்டார். அவரது சீடரான ராஜா லாலா தோடர்மல் என்பவனின் உதவியை நாடினார். ராஜா தோடர்மல், கர்னாடக நவாபின் படைத்தலைவனாக இருந்தவன். அவன், உடையார்பாளையத்துத் தலைவனைப் படைகொண்டு தாக்கப்போவதாக வெருட்டிப்பணியவைத்து, பெருமாளின் சிலையை மீண்டும் காஞ்சியில் பிரதிஷ்டை செய்துவைத்தான். இந்நிகழ்ச்சி, மிகச்சிறப்பான முறையில் கொண்டாட்டத்துடன் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் காஞ்சியில் உடையார்பாளையம் திருவிழா என்ற பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்பெறுகிறது.

          இச்செய்திக்கு ஆதாரமாக கல்வெட்டுச்செய்தி ஒன்று உண்டு. காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் தாயார் சன்னதிக்கெதிரில் உள்ள பலகைக்கல்வெட்டில் இச்செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஜீயர் திருவேங்கட ராமானுஜரின் வேண்டுகோளை ஏற்று ராஜா லாலா தோடர்மல், பெருமாளின் திருமேனியைத் திரும்பக்கொண்டுவந்து மீண்டும் பிரதிஷ்டை செய்து வைத்ததைக்குறிப்பிடுகிறது.
கல்வெட்டின் காலம் கி.பி. 1710(விரோதி வருடம்,பால்குன மாதம்). கல்வெட்டின் முதல் பகுதியில், இரண்டு வடமொழிச்செய்யுள்களும், அவற்றுக்கான தெலுங்கு மொழிபெயர்ப்பு வரிகளும், அவற்றையடுத்து நாகரி எழுத்துகளில் பன்னிரண்டு வரிகளில் சிலை மீட்புச்செய்தியும் உள்ளன.
  
        இங்கே குறிப்பிட்ட ராஜா தோடர்மல், செஞ்சியின் மீது படையெடுத்து, புகழ்பெற்ற ராஜா தேசிங்கைத்தோற்கடித்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.






குறிப்பு: துணை நின்ற நூல் :- இந்தியத் தொல்லியல் துறையின் 1919-20-ஆம் ஆண்டறிக்கை.


 து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
கோவை-641004.
அலை பேசி: 9444939156.











கரப்பாடி அமணலிங்கேசுவரர் கோயில்


கோயிலின் தோற்றமும் காலமும்

கரப்பாடியில் அமைந்துள்ள இக்கோயில் தற்போதும் அமணலிங்கேசுவரர் கோயில் என்னும் பெயருடன் வழங்குவதால், பழங்காலத்தில் இது ஒரு ஜைனக்கோயிலாக இருந்திருக்கவேண்டும். பல்லவர் காலத்தில் - கி.பி. 7-ஆம் நூற்றாண்டு பல்லவர்கள் சைவ சமயத்தை ஆதரித்ததால், வட தமிழகத்தில் ஜைனக்கோயில்கள் சிவன் கோவில்களாக மாற்றம் பெறும் சூழ் நிலை ஏற்பட்டது. அது போலவே, சோழர் காலத்தில் கி.பி. 10-12 நூற்றாண்டுகளில்   சைவம் எழுச்சியும் மறுமலர்ச்சியும் பெற்றபோதும், சில ஜைனக்கோயில்கள் சிவன் கோவில்களாக உருவெடுத்தன. அந்தக் காலகட்டத்தில், கொங்கு நாட்டில் கொங்குச்சோழர்களின் ஆட்சியின்போது, கொங்குப்பகுதியில் சில ஜைனக்கோவில்கள் சிவன் கோவில்களாக மாற்றம் பெற்றன என்பதைக் காண்கிறோம். மாற்றத்தின்போது, ஜைனத்தின் எச்சமாக, கோவில்களின் பெயரில் “ அமண “ என்னும் சொல் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேசுவரர் கோயில், தேவனாம்பாளையத்தில் உள்ள அமணீசுவரர் கோயில் ஆகியனவற்றைக்குறிப்பிடலாம். அது போலவே, கரப்பாடி கோவிலும் “ அமண “ என்னும் பெயரைத்தாங்கியுள்ளது.

ஜைனக்கோவிலாக இருந்ததால், இக்கோயில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டினை ஒட்டிய பழமையான கோயில் என்பதை உணரலாம். ஆனால், சமண (ஜைன) சமயத்தொடர்புள்ள கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படவில்லை. இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் காலத்தால்  முற்பட்டது கொங்குச்சோழனான வீரராசேந்திரனின் 16-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். வீரராசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரையிலான காலமாகும். எனவே, கல்வெட்டின் காலம் கி.பி. 1223 என்பதாகும். இதைக்கொண்டு, கோயில் ஏறத்தாழ 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியாகின்றது. அடுத்து, கொங்குப்பகுதியை ஆண்ட கொங்குப்பாண்டியனான வீரபாண்டியனின் கல்வெட்டும் இக்கோயிலில் கிடைத்துள்ளது. அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1265 1285 ஆகும்.


கோயிலின் சிறப்புகள்

        கல்வெட்டுகள் வாயிலாக, கோயிலின் பல்வேறு சிறப்புகள் தெரிய வருகின்றன. கல்வெட்டுகளில் இவ்வூர் கரைப்பாடி  எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர், கொங்கு மண்டலத்தில்,  “ காவடிக்கா(ல்) “  நாட்டைச்சேர்ந்தது.
         இறைவன் பெயர் தான்தோன்றீசுவரர் “ என்பதாகும். தான்தோன்றி என்பதால் தானே தோன்றிய சுயம்புலிங்கம் என்று நாம் பொருள் கொள்ளலாம்.
         கோயிலில் இறைவிக்கு (அம்மனுக்கு)த்தனியே சன்னிதி இருந்திருக்கவேண்டும். கல்வெட்டில், நாச்சியார் “ , “ திருப்பள்ளியறை நாச்சியார் “ என்னும் வரிகள் வருகின்றன. திருப்பள்ளியறை நாச்சியார் இறைவிக்கு திரு ஆடிப்பூர விழாவன்று நடக்கும் சிறப்புக்குக் கொடை அளிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பூரத் திருவிழாவினைக் கல்வெட்டு திருநோன்பு “ எனக் கூறுகிறது. இவ்விழாவின்போது ஐந்தடுக்குகள் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சுபாத விளக்கு “ என்று இதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
         மற்றுமொரு கல்வெட்டில், தென்கொங்கில் கண்மாளர்களுக்கு வழங்கப்பட்ட சில உரிமைகளைப்பற்றிய செய்தி காணப்படுகிறது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் நிலவிய சமுதாயச் சூழ்நிலையை அறிந்துகொள்ள இக்கல்வெட்டுச் செய்தி உதவுகிறது. கண்மாளர்கள், தங்கள் வீடுகளில் நடைபெறும் நன்மை தீமைகளின்போது இரட்டைச்சங்கு ஊதிக்கொள்ளவும், பேரிகை முதலிய (கொட்டு) இசைக்கருவிகளைக் கொட்டுவித்துக்கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குக் காலில் செருப்பணிந்து செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.
         கோவிலுக்குத் தானமாக நிலங்கள் அளிக்கப்பட்ட செய்திகளில், சோழவதி, வீரகேரளவதி, குலசேகரவதி ஆகிய வாய்க்கால்கள் மற்றும் தலைமடை (பாசனத்துக்கான முதல் மடை), மண்ணறை (உழு நிலமாக மாற்றப்பட்ட வனப்பகுதி), மன்றாட்டு (மேய்ச்சல் நிலம்) ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இதன்மூலம் வேளாண்மை, நீர் நிர்வாகம் ஆகியவை பற்றி அறிகிறோம்.



து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
21, கிரீன்வியூ டெலிகாம் காலனி, விளாங்குறிச்சி சாலை,
பீளமேடு, கோவை-641 004.

அலை பேசி: 9444939156.

ஞாயிறு, 11 மே, 2014

அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு1


அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு2

அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு3

அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு4

அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு5

அலங்கியம் பிள்ளையார் கோவில் கல்வெட்டு
                                                        து.சுந்தரம், கோவை


         அண்மையில், விழுப்புரம் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சி. வீரராகவன், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து. சுந்தரம் ஆகியோர் தாராபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, அலங்கியம் ஊரில் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி அருகே இருந்த பிள்ளையார் கோவிலின் அடித்தளத்தில் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். பிள்ளையார் கோவில் பழமையான கோவிலாகவே காட்சியளித்தது. கோவிலுக்கருகிலேயே, கோவில் பொறுப்பாளரான ஓமியோபதி மருத்துவர் சோமசுந்தரம் என்பவர் இருந்தார். அவர், வேறொரு ஊரிலிருந்து இவ்வூருக்கு வந்தபோது, பிள்ளையார் கோவில் பராமரிப்பின்றி, செடிகளும்,புதர்களும் மண்டிய நிலையில், வழிபாடு அற்றுச் சற்றே பாழடைந்த சூழ்நிலையில் இருந்ததாகவும், அவர், தம் சொந்தச்செலவில் கோவிலின் அகப்புறப்பகுதிகளைச் செப்பனிட்டுத் திருப்பணியாகக் கருவறை விமானம், முன்மண்டபம் ஆகியவற்றை அமைத்து, ஐயப்பன் மற்றும் முருகன் ஆகிய இறைவர் திருமேனிகளை எழுந்தருளுவித்து, வழிபாடுகள் நடக்க ஏற்பாடுகளைச் செய்ததாகத் தெரிவித்தார். கோவிலின் அடித்தளம் முழுதும் பல வருடங்களாக மஞ்சள் நிறச்சுண்ணாம்பு பூசப்பெற்றதால்,  எழுத்துகள் மறைந்து காணப்பட்டன.

         முதல் கட்ட ஆய்வாக, கோவிலின் வடக்குப்பகுதியில் சில கல்வெட்டுகளை, அவற்றின் மீதிருந்த சுண்ணாம்புப்பற்றினைச் சுரண்டியெடுத்துத் தூய்மைப்படுத்திக் கல்வெட்டுகளின் வரிகளைப்படித்து ஆய்வு செய்தனர். முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்த சில செய்திகள் இங்கே தரப்பட்டுள்ளன.

         கல்வெட்டொன்றில், கொங்கு நாட்டை ஆண்ட கொங்குச்சோழன் வீரராசேந்திரன் பெயரும், அவனுடைய ஆட்சியாண்டு இருபத்தேழு என்பதும் குறிக்கப்பெறுவதால், கல்வெட்டு அவனுடைய இருபத்தேழாவது ஆட்சியாண்டான கி.பி. 1234-ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பது பெறப்படுகிறது. (வீரரசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரை ஆகும்) எனவே, கோவில் 750 ஆண்டுகள் பழமை உடையது எனக்கருதலாம். அலங்கியம் ஊர், பொங்கலூர்க்கால் நாட்டைச்சேர்ந்ததாக இருந்தது. பழங்கொங்கு நாட்டில், வடபரிசார நாடு, பூந்துறை நாடு, தென்கரை நாடு, பொங்கலூர்க்கா நாடு, கரைவழி நாடு என நாட்டுப்பிரிவுகள் இருபத்துநான்கு இருந்தன. அலங்கியம் ஊர், பொங்கலூர்க்கா(ல்) நாட்டுப்பிரிவைச்சேர்ந்ததாக இருந்தது. இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ள கீரனூரும் பொங்கலூர்க்கா நாட்டில் அமைந்திருந்தது என்பதை அந்தக்கோவிலின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
         இந்தக்கோவிலுக்கு, அரசு உயர்பதவி ஒன்றை வகித்திருந்த விக்கிரம சோழ விருதராயன் என்பான் நிலம் கொடையாகக் கொடுத்திருந்தான் என்பதைக் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். இந்த நிலத்துக்கு எல்லைகள் கூறப்பட்டுள்ளன. எல்லைகளைக் குறிப்பிடும்போது கனகராயன் செய் மற்றும் பிடாகை ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன. செய் என்பது ஒரு குறிப்பிட்ட பரப்புள்ள வயலைக்குறிக்கும். பிடாகை என்பது ஊர்ப்பகுதியிலேயே அமைந்த உட்கிடை கிராமத்தைக்குறிக்கும். நிலத்தின் விளைச்சலிலிருந்து கிடைக்கும் வருவாய்(நெல்) கோவிலின் வழிபாடு, மற்றும் அமுதுபடி (நைவேத்தியம்) ஆகியவற்றுக்காகச் செலவிடப்பட்டது. நிலம் சார்பாக அரசுக்குக் கட்டவேண்டிய வரியான இறை மற்றும் புரவு எனப்படும் நிலவரி  ஆகியனவற்றிலிருந்து கொடை நிலத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.  மேலும், வெட்டி, முட்டாவாள் ஆகிய உழைப்பைத் தருவதினின்றும் விலக்கு தரப்பட்டது. வெட்டி, முட்டாவாள் என்பவை அக்காலத்துச் சமுதாயக்கடமையை உணர்த்துபவை ஆகும். நில உடமையாளர்கள், தாங்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய நிலவரி தவிர, சமுதாயத்துக்காக அரசு உடல் உழைப்பைக்கோரும்போது கட்டாய உழைப்பைக் கொடுக்கக்கடமைப்பட்டவர்கள் ஆவர். ஏரி குளங்களைத் தூர் எடுக்கும் பணி, வாய்க்கால் வெட்டும் பணி போன்றவற்றுக்கு ஆள் தருவது கட்டாய உழைப்பாகும். மற்றொரு கல்வெட்டின்படி, கொடை நிலத்தின் வருமானம் கோவிலின் அமுதுபடிக்காக அல்லது அடியார்க்கு உணவு அளிப்பதற்கு வேண்டிய காய்கறிகளுக்காகச் செலவிடப்பட்டது. காய்கறிகளைக் கல்வெட்டு விஞ்சனம் எனக்குறிப்பிடுகிறது. மற்றுமொரு கல்வெட்டு வரியானது, இரு தூணிப்பதக்கு நெல் கோவிலுக்கு அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. தூணி, பதக்கு என்பவை அக்காலத்தில் வழக்கில் இருந்த முகத்தல் அளவையைக் குறிப்பன. ஒரு பதக்கு என்பது தற்போதைய பதினாறு படி அளவுக்கும், ஒரு தூணி என்பது தற்போதைய முப்பத்திரண்டு படி அளவுக்கும் இணையானது. இன்னொரு கல்வெட்டில் பசானம் என்னும் சொல் காணப்படுகிறது. பசானம், சித்திரை மாத அறுவடைக்காலத்தைக் குறிக்கும்.  இவ்வாறு, இந்தக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், 750 ஆண்டுகளுக்கு முன் இருந்த சமுதாயச் சூழ்நிலை, கோவில் கொடை, நீர்ப்பாசன மேலாண்மை ஆகிய பல்வேறு செய்திகளை அறியச்செய்கின்றன.

         மீதமுள்ள கல்வெட்டுப்பகுதிகளையும் ஆய்வுக்குட்படுத்தும்போது, மேலும் பல அரிய செய்திகள் தெரியவரும்.

து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.



வெள்ளி, 9 மே, 2014

அவிநாசி கல்வெட்டறிஞர் முனைவர் மா.கணேசனார்
                                                        து.சுந்தரம்,கோவை.


         



               கடந்த 8.4.2014 செவ்வாய்க்கிழமையன்று தம் 82 -ஆம அகவையில் இயற்கை எய்திய கல்வெட்டறிஞர் முனைவர் திரு. மா.கணேசனார் அவர்கள், தற்போதைய திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் பிறந்து வளர்ந்தவர். (பிறந்த தேதி 14.11.1932). செல்வச்செழிப்பு இல்லாத எளிய குடும்பச் சூழலில் வளர்ந்த அவர், தம் குடும்பம் அமைத்துத் தரமுடிந்த வாய்ப்பினைக்கொண்டு எஸ்.எஸ்.எல்.சி என்னும் பள்ளி இறுதி வகுப்பு மட்டுமே படித்துமுடித்தார். ஆசிரியப்பயிற்சி இல்லாமலே சிறிது காலம் ஆசிரியப்பணி ஆற்றியபின்னர் அப்பணியின்மூலம் சேர்த்த பணத்தைக்கொண்டும், தம் தமையனாரின் உதவிகொண்டும் திருப்பராய்த்துறையில் புலவர் பட்டம் படித்துமுடித்து ஆசிரியர் பணியில் அமர்ந்தார். சேவூர், காரமடை, அவிநாசி ஆகிய ஊர்களில் ஆசிரியப்பணி புரிந்த அவர், தம் நேரிய உழைப்பால் எம்.ஏ., பி.டி. ஆகிய பட்டங்களை முடித்து முனைவர் ஆய்வுப்பட்டத்தையும் பெற்றார். கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.


         முனைவர் பட்ட ஆய்வுக்கு, கல்வெட்டுகளே அடித்தளம் அமைத்துக்கொடுத்தன. கல்வெட்டுகளில் அளவிலா ஆர்வமும் ஆழ்ந்த அறிவும் உடையவர். கொங்கு நாட்டுப் பாடல்பெற்ற தலங்களிலுள்ள கல்வெட்டுகள் ஓர் ஆய்வு என்ற பொருளில் முனைவர் ஆய்வை மேற்கொண்டார். அது பற்றி அவரே கூறுவதைப்பார்க்க:

         “என் ஆய்வுக்காக 1978 முதல் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியை மேற்கொண்டு அவிநாசி, ஆலத்தூர், சேவூர், சூலூர், பெருமாநல்லூர் ஆகிய ஊர்களில் நான் புதிதாகக் கண்டறிந்து பல கல்வெட்டுகளை வெளிப்படுத்தினேன். இப்பணியில் ஒரு தனிமனிதனாக ஈடுபட்டுக் கல்வெட்டுகளை வெளிப்படுத்தியதைக் கண்டு நடுவணரசின் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பேரறிஞர் திருவாளர் கே.ஜி.கிருஷ்ணன் அவர்கள் என்னைப் பெரிதும் பாராட்டி ஊக்குவித்தார். முனைவர் இரா.சந்திரசேகரன், நண்பர் முனைவர் அர.பூங்குன்றன் ஆகியோருடைய ஊக்குவிப்பும் நெறிப்படுத்தலுமே கொங்கு நாட்டில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளைப் படியெடுக்க என்னை எழுச்சியுறவைத்தன. 

         கோவை மாவட்டத்தின் தொல்லியல் துறைப் பொறுப்பாளராக திரு. பூங்குன்றன் பணியாற்றியபோது அவருடைய நட்பினைப்பெற்ற கணேசனார் அவருடன் சேர்ந்து கோவை மாவட்டக் கோயில்களின் கல்வெட்டுகளைப் படித்து ஆய்வு செய்திருக்கிறார். பின்னர், கோவை மாவட்டக் கல்வெட்டுகளைத் தொகுத்து “கொங்கு நாட்டுக்கல்வெட்டுகள் கோயம்புத்தூர் மாவட்டம் என்னும் நூலாகப் பதிப்பித்துள்ளார். கோவை மாவட்டத்திலுள்ள நாற்பத்தொரு ஊர்களில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்க அவர் கொடுத்த உழைப்பு எத்துணை! நூலின் நுழைமுகத்தில் பாரதியார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள் கூற்று கணேசனாரின் உழைப்பையும், கல்வெட்டுத்துறைக்கு அவரின் பங்களிப்பையும் மெய்ப்பிக்கும். இரா.சந்திரசேகரன் அவர்களின் வரிகளை இங்கே தந்துள்ளேன்.

         ..... ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் படிக்கப்படாமலும் படியெடுக்கப்படாமலும் இருக்கின்றன. தத்தம் முயற்சியில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் அவற்றைத் தேடித்திரட்டி வருகிறார்கள். அத்தகைய ஆய்வாளர்களுள் முனைவர் மா. கணேசன் தலைசிறந்தவர். ...............         கல்வெட்டுகளைத் தேடவும், படியெடுக்கவும் அவர் அலைந்த அலைச்சல்... அவர் மேற்கொண்ட சிரமங்கள்..... மிகமிக அதிகம்.
ஆனால் புதியனவற்றைக் கண்டவுடனே எல்லாத் துன்பங்களும்   அழிந்து போய் மீண்டும் புத்துணர்ச்சி.... தன் வாழ்நாளையே கல்வெட்டுகளுக்காக அர்ப்பணித்தவராக இயங்கிக்கொண்டிருக்கிறார் இன்னும்... இன்னும். ஓய்வே இல்லாமல். கொங்குநாட்டு வரலாற்றின் நடமாடும் ஆவணமாக இயங்கிக்கொண்டிருக்கும் அவிநாசி முனைவர் மா. கணேசன் ....

                   பேரூர்  தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் ந.இரா. சென்னியப்பனார் அவர்கள் நூலின் அணிந்துரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

         நண்பர் மா.கணேசன் அவர்கள் தற்காலத்தில் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளை வெளிக்கொண்டு வரப் பெருமுயற்சி செய்துள்ளார்.  நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை அரிதின் முயன்று படித்தறிந்து படியெடுத்துள்ளார். எங்கேனும் கல்வெட்டுள்ளதென்று கேள்விப்பட்டால் செலவையும், காலத்தையும், உணவையும் பொருட்படுத்தாது பெரிதும் முயன்று படித்து வெளிக்கொணர்ந்துள்ளார். (முனைவர் பட்டத்துக்கான) ஆய்வு மேற்கொண்டபோது தாமாகவே முயன்று நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை வெளிக்கொணர்ந்தார். அந்தணர்,கம்மாளர்,இடையர்,தேவரடியார் முதலியோர் பெற்ற உரிமைகள் பற்றிய கல்வெட்டுகள் இவருடைய மிகச்சிறந்த கண்டுபிடிப்பாகும். திருமுருகன்பூண்டியில் திருவாதிரைத்திருவிழாவை ஒட்டி நடைபெறும் பாவைவிழாவின்போது ஆலாலசுந்தரநங்கை, சவுண்டைய நங்கை,திருவுண்ணாழி நங்கை ஆகியோர் கருவறை வரை சென்ற கல்வெட்டுச்செய்தி இவரால் வெளிக்கொணரப்பட்டது. இச்செயலுக்காகச் சைவ உலகமும் தமிழ் உலகமும் நன்றிக்கடப்பாடு உடையதாக இருக்கவேண்டும்.

        
         புதுதில்லி இலக்கிய வரலாற்று ஆய்வுப்பெருமன்றத்தின் துணையுடன் 1992 முதல் 1995 முடிய பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிலவுடைமையும் வேளாண்மை வளர்ச்சியும் என்ற தலைப்பில் மிகச்சிறந்த ஆய்வை நிறைவு செய்து தந்துள்ளார். நீர்ப்பாசன முறை, வாய்க்கால் அமைக்கும் முறை,அந்நிலத்துக்கு  வரிவிலக்குக் கொடுத்தமுறை முதலிய செய்திகளை மிகச்சீரிய முறையில் இதுவரை வரலாற்றறிஞர் யாரும் விளக்காத முறையில் வெளிக்கொணர்ந்துள்ளார். சர்க்கார் பெரியபாளையம் கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய் (தேவாரம்) எனப்புகழப்படும் கோவிலில் காணப்பெறும் வணிகம் பற்றிய மிகப்பெரிய கல்வெட்டை வெளிக்கொணர்ந்துள்ளார். ... பல்கலைக்கழகங்களும், கல்வி நிலையங்களும், ஆராய்ச்சிக்கழகங்களும் செய்யவேண்டிய பெரும்பணியைத் தனிப்பட்ட ஒருவர் செய்திருப்பது எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத அருஞ்செயலாகும்.  

         தமிழகத் தொல்லியல் கழகத்தைச்சேர்ந்த கல்வெட்டறிஞர் முனைவர் சு.இராசகோபால் அவர்கள் கூறுவதை இங்கே தருகிறேன்.

         ஆவணக்கூட்டங்கள், கோடைகாலக் கல்வெட்டுப் பயிற்சி, தொல்லியல் தொழில் நுட்பப்பணியாளர் கழக நிகழ்வு முதலிய விழாக்களின் மூலம் அவரை நன்கு அறிவேன். ஒருமுறை, பயிற்சியாளர்க்கு அவி நாசிக்கோயிலை விளக்கிய பாங்கும், சீனக்குடை தொடர்பான கல்வெட்டை அறிமுகப்படுத்திய முகமலர்ச்சியும் இன்றும் நினைவில் உள்ளன. சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டில் கேரள வணிகர்களின் கையொப்பங்கள் வட்டெழுத்தில் உள்ளமையையும் காட்டி மகிழச் செய்துள்ளார். தமிழகத்தொல்லியல் தொய்வு கண்ட காலத்தில் கொங்குக் கல்வெட்டுகள் தொகுதி வெளியிட்டு இடைவெளி நிரப்பிய தொண்டும் நினைவில் உள்ளது.

         திரு.மா.கணேசனாருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கம் தொடர்பான  நிகழ்வுணர்வு (அனுபவம்) பற்றிச் சிறிது இங்கே கூற விழைகிறேன்.   அவர் பிறந்து வளர்ந்த ஊரான அதே அவிநாசியில் நானும் பிறந்து வளர்ந்தாலும் அவரை நேரில் கண்டு பழகும் வாய்ப்பு 2008-ஆம் ஆண்டுதான் கிடைத்தது. என்னைவிடப் பதினான்கு ஆண்டுகள் அகவையில் மூத்தவர். அவிநாசியில் என் பள்ளிப்பருவத்தின்போது, அவர் வேறு ஏதோவொரு ஊரில் ஆசிரியர். பார்க்கும் வாய்ப்பில்லை. ஆனால், என் தம்பி அவரிடம் படித்திருக்கிறான். என் குடும்பத்தாரை அவர் குடும்பத்தினர் நன்கறிவர். 1970-ஆம் ஆண்டு நான் கல்லூரிப்படிப்பு முடித்து பணி நிமித்தம் ஊரைவிட்டுச் சென்றவன், பணிக்காலத்தை முடித்து 2006-ஆம் ஆண்டில் கோவையில் நிலைகொண்டுவிட்டேன். 2008-ஆம் ஆண்டில், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தொல்லியல் பகுதி நேரப் பட்டயப்படிப்பு மாணவனாகச் சேவூர் சுந்தரபாண்டிய விண்ணகரம் என்றழைக்கப்பெற்ற வைணவத்திருக்கோவிலின் கல்வெட்டுகளைக் காணச்சென்றபோது கணேசனார் கல்வெட்டுகளைப் படித்துக் காண்பித்து விளக்கம் தந்த அந்நிகழ்வை மறக்கவியலாது. அதற்குப்பின் கல்வெட்டுகள் தொடர்பாக நிறையத் தெரிந்துகொண்டது அவரிடம்தான். கல்வெட்டுகளின்பால் எனக்கிருந்த ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்துகளையும் என்னால் ஓரளவு படிக்க இயன்றதையும் பார்த்து, “நீங்கள் தொல்லியல் துறையிலேயே பணியாற்றியிருப்பின் இந்நேரம் வல்லுநராக வளர்ந்திருப்பீர்கள்”  என அவர் பாராட்டியது கல்வெட்டு ஆய்வில் நன்கு செயலாற்ற அவர் கூற்றிலேயே சொல்லவெண்டுமானால் என்னை எழுச்சியுற வைத்தது.

         கணேசனார் முன்பு எப்போதோ ஒரு கன்னடக்கல்வெட்டைக் கண்டறிந்து வைத்திருந்தார். அதைப் படித்து அதன் செய்தியை வெளிக்கொணர இயலாமல் போனது பற்றி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது குறிப்பிட்டார். அக்கல்வெட்டு அவினாசி அன்னூர் சாலையில் கருவலூர் அருகே நரியம்பள்ளி என்னும் சிற்றூரில் சாலையோரத்திலேயே அமைந்துள்ள கோபாலசாமி கோவிலின் முன்புறத்தில் ஒரு பலகைக் கல்லில் எழுதப்பட்டிருந்தது. நெடுநாள் படிக்கப்படாமல் இருந்த அக்கல்வெட்டு படிக்கப்பட்டு அதன் செய்தி வெளிப்படுவதற்குக் காலம் இப்போதுதான் கனியவேண்டும் என்பது இறை எண்ணமோ என்னுமாறு, நானும் அவரும் இணைந்த வேளை அமைந்தது. எனக்கு, கன்னட மொழியைப் படிக்கவும் படித்துப்பொருள் கொள்ளவும் இயலும் என்று நான் கூறியவுடன் அவர் மகிழ்ந்தார். பின்னர் இருமுறை நாங்கள் அக்கோவிலுக்குச் சென்று ( ஒரு ஒளிப்படக்காரரையும் உடன் அழைத்துச் சென்றோம் ) செங்கல் பொடி கொண்டும், சுண்ணப்பொடி கொண்டும் பூசி ஒருவாறு படிக்கும் நிலையில் ஒளிப்படம் எடுத்துப் படித்துப்பார்த்து செய்தியறிந்து ஜூன் 21, 2010 தேதியிட்ட தினமலர் நாளிதழில் வெளியிட்டோம். கி.பி. 1760-61 ஆம் ஆண்டில் மைசூர் அரசின் கோயமுத்தூர் மண்டல அதிகாரியாக ஆட்சி செய்த மாதையன் காலத்தில் இக்கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியமங்கலத்துக்கு வடக்கே தெற்கணாம்பியில் எழுந்தருளியுள்ள கோபாலசாமி விண்ணகர ஆழ்வார்க்கு நித்திய வழிபாடுகளுக்கும், நந்தா விளக்கு எரிப்பதற்கும் படித்தரமாக, அவிநாசி தாலூகா கஞ்சப்பள்ளியை அடுத்துள்ள அய்யம்பாளையத்தில் சில நிலங்களையும் வரிகளையும் ஸ்ரீரங்கப்பட்டணம் கோவிந்தையன் என்பவர் தானமாக வழங்கியுள்ளார் என்னும் செய்தி இருந்தது. இதில் சிறப்பு என்னவெனில், “சங்கரையன் மகன் மாதையன்”  என்னும் தொடர் கல்வெட்டில் இருந்ததுதான். வேறெந்தக் கல்வெட்டிலும் மாதையனின் தந்தை பெயர் கிடைத்திராத நிலையில் இக்கல்வெட்டில் மாதையனின் தந்தை பெயர் குறிப்பிடப்பெற்றிருந்தது கண்டு கணேசனாருக்குப் பெருமகிழ்வு ஏற்பட்டது. இதுவரை கிடைக்கப்பெறாத ஒரு வரலாற்றுக் குறிப்பு கிடைத்தது சிறப்பான கண்டுபிடிப்பாக அமைந்தது.

         அவர் காட்சிக்கெளியர். விருந்தோம்பும் நற்பண்பினர். அவருடைய இரங்கல் கூட்டத்தில் அன்பர்கள் கூறியவாறு பட்டிமன்றக் கூட்டங்களை நடத்தித் தமிழ்ப்பணி ஆற்றியவர். எடுப்பான குரலும், தெளிவான தடையற்ற மொழிப்பொழிவும் பெற்றவர். திருக்குறள் போலக் குறளான உருவம் பெற்றிருப்பினும், அதே திருக்குறளையொத்த அறிவுச்செறிவு நிரம்பப் பெற்றவர். கல்வெட்டியல் கழகம் நடத்திய ஆவணம்”  விழாவுக்குக் கடைசியாக (ஆண்டு 2012) காரைக்குடிக்கு வந்திருந்தார். அவரோடு ஒன்றாக விழாவில் கலந்துகொண்டு மகிழ்வுற்றது மறக்கவியலாது. விழா மண்டபத்திலும், வள்ளல் அழகப்பச்செட்டியாரின் மாளிகையிலும் அவரோடு சேர்ந்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டேன். அவர் கலையையும், கலைஞரையும் சுவைத்து மகிழும் உள்ளத்தினர் என்பதை அவ்விழாவின்போது உணர்ந்தேன். விழாவில் கலந்துகொண்ட சின்னத்திரைக் கலைஞரான இளைஞர் சக்தி சரவணனுடன் கணேசனாரும் அவர் நண்பரான பழனியப்பனும் நானும் ஒன்றாக நின்று ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்ததையும் மறக்கவியலாது. ஒளிப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டதே அவர்தான்.   

         முடிவாக, கோவை மாவட்டக் கல்வெட்டுகள் எல்லாம் அவர் பெயரைச் சொல்லாமல் சொல்லும். அவரை நினைத்தே என் கல்வெட்டு ஆராய்ச்சிப்ப்பணி தொடரும் எனக்கூறி இக்கட்டுரையை  நிறைவு செய்கிறேன்.











து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.


        

ஞாயிறு, 4 மே, 2014

கொங்கவிடங்கீசுவரர் கோவில்
                                                         து.சுந்தரம்,கோவை



         உடுமலை அருகே ஒரு சிற்றூர். அங்கே ஒரு சிவன் கோவில். ஏறத்தாழ இன்றைக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பது உறுதி. ஏனெனில், கி.பி. 1221-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இக்கோவிலில் காணப்படுகிறது. கொங்கு நாட்டை ஆண்ட கொங்குச் சோழ அரச






ன் வீரராசேந்திரன், கொங்கு நாட்டில் வடகொங்கு, தென்கொங்கு ஆகிய இரு பகுதிகளையும் ஆண்ட அரசன் ஆவான். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரை என வரலாற்று அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். இவன் காலத்துக் கி.பி.1221-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இக்கோவிலில் இருப்பதனால், இக்கோவில் எண்ணூறு ஆண்டுப்பழமையானது என்பதை உறுதி செய்ய இயலுகிறது.

         முற்றிலும் கற்களால் ஆன கற்றளியாகக் கட்டப்பட்ட இக்கோவில், சோழர் காலத்துப்பாணியில் அமைந்த கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. கருவறையில் குடி கொண்டுள்ள இறைவர் லிங்கத்திருமேனியர். இந்த லிங்கத்திருமேனிக்கு ஒரு சிறப்புண்டு. தானாய்த் தோன்றிய இறைத்திருமேனி. உளி கொண்டு செதுக்கப்படாத லிங்கத்திருமேனியை “விடங்கர்  என அழைப்பது மரபு. அந்த மரபில் இவ் இறைவரும் விடங்கீசுவரர் “ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். கொங்கு நாட்டில் அமையப்பெற்ற சிவன் கோவில்களில் “ கொங்கு “ என்னும்  நிலத்தின் பெயரைத் தாங்கியுள்ள கோவிலைக்காண்பது அரிது. இந்தக் கோவில் அத்தகைய அருமையை உடையது. இறைவர், இந்த அருமையைத் தாங்கி, “ கொங்கவிடங்கீசுவரர் “  என்று அழைக்கப்படுகிறார்.

         பழங்காலத்தில் கோவில்களின் நிலை என்ன, சிறப்பும் பயன்பாடும் என்ன என்பதைச் சற்றுக் காண்போம். கோவில்கள் அரசர்களால் கட்டுவிக்கப்பட்டன. அரசர்கள், மக்களிடமிருந்து பெற்ற வரி வருமானங்களையும், போர் மூலம் கவர்ந்த பொன்னையும் பொருளையும் கோவில்களைப் பேணுவதில் செலவிட்டனர். அரசர்கள், கோவிலுக்கு நிலங்களைத் தானமாக அளித்ததோடல்லாமல் அந்நிலங்களின் வரிகளை நீக்கி னர். இவை இறையிலி நிலங்கள் எனப்பட்டன. அரசியரும் தனிப்பட்ட முறையில் கோவில்கள் எழுப்பினர்; கொடைகள் வழங்கினர்; திருப்பணிகள் செய்தனர்.




         குடிமக்களும் கோவில்களுக்குக் கொடைகள் பல அளித்தனர்.  குடிமக்களில் பலவகைப் பிரிவினரும் இதில் அடங்குவர். வேளாண்குடிகள், சிறு வியாபாரிகள், பெரு வணிகர்கள், தேவரடியார்கள் போன்ற பலரும் கோவில் பணிகளுக்காகக் கொடைகள் வழங்கியுள்ளனர். அரசு அதிகாரிகளும் பெருமளவில் தானங்கள் வழங்கியுள்ளனர். கோவில்களில் நாள்தோறும் நடைபெறும் வழிபாட்டுக்காகவும், சந்தியாதீபம் எனப்படும் விளக்கெரிக்கவும் மற்றும் பல்வேறு பணிகளுக்காகவும் இக்கொடைகள் பயன்பட்டன.

          வழக்கமாக ஒவ்வொரு கோவிலும் கருவறை, அர்த்தமண்டபம் என்னும் நடுமண்டபம், முன்மண்டபம் இவற்றைக் கொண்டிருக்கும். கோவிலைச் சுற்றிலும் ஒரு திருச்சுற்றும் (பிராகாரம்) மதிலும் இருக்கும். பெரிய கோவில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திருச்சுற்றுகள் அமைவதுண்டு. இத்திருச்சுற்றுகளில் அரசர், அரசரைச் சார்ந்தோர் முதலியோர் எடுப்பித்த சிறிய கோவில்கள் இடம்பெறும். பெரிய கோவில்களை நிருவாகம் செய்யத் தனிக்குழுவினர் இருந்தனர். ஸ்ரீ காரியம் செய்வார், கோவில் தானத்தார், ஊர்ச்சபையினர், மாகேசுவரர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். வழிபாட்டுப்பொறுப்பில் சிவப்பிராமணர்களும் கோவிலின் பிற பணிகளுக்குப் பணியாளர்களும் இருந்தனர். கோவிலுக்கென்று தனியே கருவூலம் இருந்தது. இது ஸ்ரீ பண்டாரம் என்று அழைக்கப்பட்டது. கோவிலின் வரவு செலவு கணக்குகள் கோவில் கணக்கர் பொறுப்பில் இருந்தன.

          கோவிலின் பல்வேறு பணிகளுக்குப் பணியாளர்கள் இருந்தனர் என்று மேலே குறிப்பிட்டோம். அப்பணியாளர்கள் திருஅலகிடுதல், திருமெழுக்கிடுதல், பூத்தொடுத்தல், மடைப்பள்ளிப்பணி ஆகிய பணிகளைச் செய்தனர். அலகிடுதல் என்பது துடைப்பம் கொண்டு கோவிலைத் தூய்மை செய்தலைக்குறிக்கும். மெழுகிடுதல் என்பது சாணத்தால் தரையை மெழுகித் தூய்மை செய்தலைக்குறிக்கும். இவ்வகைப்பணிகளுக்கும் பிற பணிகளுக்கும் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் பணியமர்த்தப்பட்டிருப்பினும், குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவரடியார் என்று அழைக்கப்பட்ட பெண்கள் இருந்தனர். அலகிடுதல், மெழுக்கிடுதல், பூத்தொடுத்தல் ஆகியவை தவிர தேவாரம், திருவாசகம் ஓதுதல்(திருப்பதியம் பாடுதல்), நடனம் ஆடுதல், அம்மனை எழுந்தருளுவிக்கும்போது அம்மனுக்குக் கவரி வீசுதல் ஆகியவற்றை இந்தத் தேவரடியார்கள் செய்தனர். இவர்கள் பதியிலார், தளிச்சேரிப்பெண்டுகள் என்று அழைக்கப்பட்டனர். ஏறக்குறைய எல்லாக்கோயில்களிலுமே தேவரடியார்கள் தொண்டு செய்து வந்தனர் எனத் தெரிகின்றது.

         கோயில்களில் நாள்தோறும் ஆறு சந்திப் பூசை வழிபாடு நிகழ்ந்தது.  விழாக்கள் பல கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு மாதத்திலும் மாத விழாக்களும், ஆண்டுக்கொருமுறை பெருவிழாவும் (பிரம்மோத்சவம்) நடைபெற்றன. சிவராத்திரி, சங்கராந்தி, உத்தராயணம், மற்றும் கிரகணங்கள் நிகழ்ந்த நாள்கள் ஆகிய சிறப்பு நாள்களிலும் விழாக்கள் எடுக்கப்பட்டன. மன்னர்கள் பிறந்த நட்சத்திரங்களிலும் விழா எடுக்கப்பட்டது. விழாக்களின்போது தேவரடியார்கள்  சாந்திக்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக்கூத்து ஆகிய கூத்துகள் நிகழ்த்தினர். (கூத்து நிகழ்த்தும் ஆண்களும் இருந்தனர்.) சமய நூல்கள் கோயில்களில் படிக்கப்பட்டன. அரசர்களும் கோயில் விழாக்களை நேரில் கண்டு களித்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.         

         கோயில்கள் இறைவழிபாட்டு இடங்களாக மட்டுமன்றி சமுதாயப்பணிகள் நடைபெற்ற இடங்களாகவும், பொருளாதார மையங்களாகவும் விளங்கின. இன்னலுற்ற மக்களுக்குப் புகலிடங்களாகவும் பயன்பட்டன. வறட்சியிலும், பஞ்சத்திலும் குடிமக்களுக்குக் கோயில்களிடமிருந்து பொருளுதவி கிடைத்தது. பஞ்சம் தீர்ந்தபிறகு கடன் திருப்பித் தரப்பட்டது. கோயில்களில் நந்தா விளக்கு, சந்தியா தீபம் ஆகிய நிவந்தங்களுக்காக விடப்படும் ஆடுகள் (ஒவ்வொரு விளக்குக்கும் தொண்ணூறு ஆடுகள் என்ற கணக்கில்) இடையர்களுக்குத் தரப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்களாக அமைந்தன. விளக்குகளுக்கான எண்ணையைக் கோயிலுக்கு வழங்கவேண்டியது அவர்கள் பொறுப்பு.

         மக்கள் பலர் தம் எண்ணங்கள் நிறைவேறவேண்டும் என்று இறைவன் முன்பு வேண்டுதல் (பிரார்த்தனை) செய்துகொண்டு காணிக்கை செலுத்திக்கொள்ளும் வழக்கம் பதின்மூன்றாம் நூற்றண்டிலேயே காணப்படுகிறது. மக்களில் ஒரு சிலர், கோயில் பணிகளுக்காகத் தம்மையே கோயிலுக்கு அடிமையாக விற்றுக்கொண்டமையும் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படுகிறது.

         கோயில்களைப்பற்றிய சிறப்புகளையும் செயல்பாடுகளையும் மேலே விளக்கமாக உரைத்ததன் நோக்கம் இச்செயல்பாடுகளில் ஒரு சிலவேனும்  கொங்கவிடங்கீசுவரர் கோயிலிலும் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நம் எண்ணத்தில் பதியவேண்டும் என்பதுதான். ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளாக எத்துணை ஆயிரம் மக்கள் இக்கோயிலினுள்ளே நடமாடி இறைவனை வழிபட்டிருப்பர். வழிபாடும் விழாவுமாக எத்துணை உயிர்ப்புடன் கோயில் விளங்கியிருக்கும். ஆனால், அந்த உயிர்ப்பு காணாமல் ஒழிந்து போய் கோயில் தற்போது சிதைந்து அதன் சீர்மை இழந்து, கருவறையும் அர்த்தமண்டபமும் மட்டிலுமே இடிந்துவிட்ட கட்டுமானங்களாய் எஞ்சியிருப்பதைக்காண்போர் நெஞ்சம்  கலக்கமுறும். திருச்சுற்று இல்லை; சுற்று மதில் இல்லை; திருச்சுற்றில் எழுந்தருளப்பெற்ற சிறு கோவில்கள் (சன்னதிகள்) இல்லை. வெற்றுப் பாழும் இடிந்த கூரையும் ஆங்காங்கே எறிந்து கிடக்கும் கட்டுமானக் கற்களும் அழிவுக் கோலம் காட்டுகின்றன. கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன் என்பார் கூறுவதை நோக்குங்கள்:


         “நான் ஒரு பழமைப்பித்தன். அருமையான ஆலயங்களைக் கண்டால் ஆனந்தக் கண்ணீர் விடுவேன். இடிந்த கோயில்களைக் கண்டால் நானும் இடிந்து போய்விடுவேன். பாழடைந்து இடிந்து கிடக்கும் ஆலயங்களுக்குச் சென்று அப்பிரகாரங்களில் சிறிதாவது படுத்துப்புரளுவதில் ஒரு ஆனந்தம். 


இத்தகைய அழிவின் விளிம்பிலும் கோயிலின் கருவறைச் சுவர்கள் மற்றும் அர்த்தமண்டபச் சுவர்கள் ஆகியன கல்வெட்டுகளின் கருவூலங்களாய்த் திகழ்கின்றன. தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமய வரலாற்றையும், சமுதாய வரலாற்றையும்  அறிய உதவும் மூலப்பொருள்களுள் ஒன்றாய் விளங்குவன கல்வெட்டுகளே. அத்தகு கல்வெட்டுகள் பத்து இங்குள்ளன. முதல் கல்வெட்டு, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து அஞ்சாதகண்ட பிரமாராயன் என்பவர் இக்கோயிலில் சுப்பிரமணியப் பிள்ளையாரை எழுந்தருளிவித்தார் என்னும் செய்தியைக் கூறுகிறது. பிரமாராயன் (பிரமமாராயன் எனவும் கூறப்படுவர்) என்பது அரசு அதிகாரிகளில் மிக உயர்ந்த பதவியைக் குறிக்கும் சொல். படைத்தளபதியாகவும் மந்திரியாகவும் பொறுப்புடையவர். இவர் வடுகக்கொத்து என்னும் படைப்பிரிவில் ஒரு படைத்தளபதியாக இருந்தார் என்று கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் தென்கொங்கு நாட்டில் உடுமலை அருகில் கடத்தூரில் அமைந்துள்ளது; ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்பது தொண்டை நாடு. முதன்மைச் சோழரின் (தஞ்சைச் சோழரின்) படைத்தளபதி ஒருவர் இக்கோயிலுக்குச் செய்திருக்கிறாரென்றால் கோயிலின் சிறப்பான நிலையை உணரலாம்.  

         அடுத்த கல்வெட்டு, தாராபுரத்துக் கீரனூர் ஊரைச்சேர்ந்த அரசு அதிகாரிகள் இருவர் கீரனூர் வாகீசுவரமுடையார் சிவன் கோயிலுக்கு நிலம் கொடையாக அளித்ததைக் குறிப்பிடுகிறது. கீரனூர் கோயிலுக்கு அளித்த கொடை கடத்தூர் கோயிலில் காணப்படுவது ஏன் என்னும் கேள்வி எழலாம். கொடையாகக் கொடுத்த நிலம் கடத்தூரில் அமைந்திருந்தது என்பதுதான் செய்தி. கோயிலுக்கு அளித்த நிவந்தங்களை அக்காலத்தே முறையாக ஆவணப்படுத்தியமைக்கு இக்கல்வெட்டும் ஒரு சான்று. கடத்தூர் கொங்கு நாட்டின் ஒரு பிரிவான கரைவழி நாட்டில் அமைந்திருந்தது எனக் கல்வெட்டு கூறுகிறது. மூன்றாம் கல்வெட்டு, கொங்கவிடங்கீசுவரர் கோயிலுக்கு சந்தியா தீபம் எரிப்பதற்காகக் காசு இரண்டு அச்சு ஒருவர் கொடையாக அளித்ததைக் கூறுகிறது. காசு கோயில் பண்டாரத்தில் ஒடுக்கப்பட்டது. அக்காசினைக்கொண்டு காரைத்தொழு என்னும் ஊரில் நிலம் வாங்கப்பட்டு அந்நிலதின் விளைச்சலில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஆண்டு முழுதும் சந்தியா தீபம் எரிக்கப்பட்டது.  கோயிலுக்கென்று தனியே கருவூலம் (பண்டாரம்) இருந்ததைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். அடுத்த கல்வெட்டிலும் இதுபோலவே சந்தியா தீபத்துக்காகக் காசு கொடுக்கப்பட்டு நிலம் வாங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. ஐந்தாவது கல்வெட்டு, சோழமாதேவி ஊரில் நிலம் கொடையாகத் தந்து, கொங்கவிடங்கீசுவரர் கோயிலில் அவிநாசிக்கூத்தரையும் நாச்சியாரையும் எழுந்தருளச்செய்துள்ளனர் என்னும் செய்தியைச் சொல்லுகிறது. கூத்தர் என்பது நடராசரையும், நாச்சியார் என்பது அம்மனையும் குறிப்பதாகும். எனவே, கொங்கவிடங்கர் கோயிலில், கோயில் நடைமுறைகளை நாம் மேலே விவரித்ததற்கிணங்க அம்மன் சன்னதி, முருகன் சன்னதி, நடராசர் சன்னதி ஆகிய சன்னதிகள் எழுப்பப்பட்ட செய்தியினை அறிகிறோம்.

         அடுத்து ஆறாம் கல்வெட்டு மிகவும் சிறப்புடைய ஒன்று. மக்கள் பலர் தம் எண்ணங்கள் நிறைவேறவேண்டும் என்று இறைவன் முன்பு வேண்டுதல் (பிரார்த்தனை) செய்துகொண்டு காணிக்கை செலுத்திக்கொள்ளும் வழக்கம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்துள்ளதை மேலே குறிப்பிட்டோம். அது போன்ற ஒரு நிகழ்வுக்குச் சான்றாக இக்கல்வெட்டு உள்ளது. கி.பி. 1233-ஆம் ஆண்டுக்குரிய இக்கல்வெட்டு, அரசன் வீரராசேந்திரனின் கிரகதோஷம் நீங்க வேணும் என்று அரசனின் அதிகாரிகளுள் ஒருவனான அணுத்திரப்பல்லவரையன் என்பான் இறைவர் அமுதுபடிக்கு அமுதுபடிப்புறமாகக் கண்ணாடிப்புத்தூரில் நிலம் கொடையாக வழங்கினான் என்று தெரிவிக்கிறது. அதனால் அரசன் வீரராசேந்திரனுக்குக் கிரக தோஷம் பிடித்திருந்தது என்பதும் அக்கால மக்கள் சோதிடத்தையும் வான சாத்திரத்தையும் அறிந்திருந்தார்கள் என்பதும் புலப்படும். அடுத்த கல்வெட்டு, கோட்டையில் சேனாபதிகளில் அவிமானராமப் பல்லவரையன் என்பான் விரதம் முடித்த வினாயகப் பிள்ளையாருக்கு அமுதுபடிக்காக அரசனின் சரக்கில் (கருவூலத்தில்) பொன் முதலாக வைக்கிறான். இப்பொன்னுக்கு அரசன் நிலம் ஒதுக்கி இந்த நிலத்துக்கு வரிவிலக்கும் அளிக்கிறான். இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் பிள்ளையார் கோயில் வழிபாட்டுக்குச் செலவிடப்படுகிறது. இந்தக் கல்வெட்டிலும் ஒரு சிறப்பான பகுதி உள்ளது. கோட்டையில் தெற்கில் அரசின் கீழ் நம் பேரால் விரதமுடித்த வினாயகப்பிள்ளையாற்கு அமுது படிக்கு என்று கல்வெட்டுவரி இருப்பதால் இந்தப்பகுதியில் “கோட்டை ஒன்று அமைந்திருந்தது என்பது அறியப்படுகிறது. தற்பொழுதும்கூட இவ்வூர் மக்கள் ஊரில் ஒரு பகுதியைக் கோட்டை என்று அழைக்கிறார்கள்.

         அடுத்துவரும் ஏழாவது கல்வெட்டு சமுதாய வரலாற்றைச் சொல்லும் சிறப்பான கல்வெட்டாகும். தென்கொங்கில் கம்மாளர்களுக்கு அரசன் வழங்கிய சிறப்புரிமைகளை இக்கல்வெட்டு கூறுகிறது. உழவுத்தொழிலை மேற்கொண்ட வெள்ளாளர்களுக்கும், தொழில் வினைக்கலைஞர்களுக்கும் இடையில் சமுதாய வேறுபாடும் பகைமையும்  கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் காலகட்டத்திலிருந்து தோற்றம் பெற்றுள்ளதாக தொல்லியல் வரலாறு கூறுகிறது. கம்மாளர்கள்  சமுதாயச் சூழ்நிலையில் உரிமைக்குறைபாடுகளைச் (Social disadvantages) சந்தித்தார்கள் எனத்தெரியவருகிறது. உழவருக்கு வேண்டிய தொழிற்கருவிகளைச் செய்து கொடுக்கும் நிலையில் கம்மாளர் இருந்ததால், கம்மாளர் என்போர் உழவர்களின் பணிமகன்களே என்று உழவர் எண்ணித் தம் மேலாதிக்கத்தைக் காட்டியிருக்கவேண்டும் எனலாம். வெள்ளாளர்களுக்கிருந்த உரிமைகள் கம்மாளர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் செருப்பணிந்து வெளியே செல்ல முடியாது. தங்கள் வீடுகளுக்குச் சாந்து (காரை) இட்டுக்கொள்ள இயலாது. தங்கள் வீடுகளில் நடைபெறும் நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதுவதற்கில்லை. பேரிகை (drums) என்னும் இசைக்கருவி கொட்டுவிக்க முடியாது. தம் வீடுகளுக்கு இரண்டு வாசல்கள் அமைத்துக்கொள்ள முடியாது. இவ்வகையான ஏற்றத் தாழ்வு உரிமைக்குறைகளைக் களைய கம்மாளர்களின் முறையீட்டின்மேல் அரசனுடைய சிறப்பு ஆணையால்தான் முடிந்தது. அத்தகைய சிறப்புரிமைகளைக் கம்மாளர்க்கு அரசன் வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

         மிகுதியுள்ள இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று, திருமடை வளாகத்தில் இருக்கும் தபசி சுந்தர நன்னெறி காட்டினான் என்பவர் கொங்கவிடங்கர் கோயிலுக்கு நந்தாவிளக்கு ஒன்றுக்காகப் பதினாறு காசு கொடை அளித்துள்ளான் என்றும், மற்றொன்று, கடத்தூரிலிருந்த மன்றாடிகளில் காவன் சோழன் என்பான் இறைவற்கு மகுடம் சாத்தினான் என்றும் கூறுகின்றன. திருமடை வளாகம் என்பது கோயிலைச் சுற்றியிருக்கும் வசிப்பிடத்தையும், மன்றாடி என்பது கால்நடை வளர்ப்போரையும், தபசி என்பது துறவிகளான சிவனடியார்களையும் குறிப்பன.

         இவ்வாறு, அரிய வரலாற்றுச் செய்திகளைத் தம்முள் கொண்டிருக்கும் கல்வெட்டுகள் இன்றும் நல்ல நிலையில் சிதைந்து போகாமல் படிக்கும் அளவுக்கு உள்ளன என்பது பெரிய பேறு. ஆனால், அழிவைத் தொட்டுக்கொண்டிருக்கும் கட்டுமானங்கள் சிதைந்து விழத்தொடங்குமானால் அரிய கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கும் கற்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போகும் அச்சமான சூழ்நிலை உள்ளது. மீண்டும் கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன் அவர்கள் கூறுவதை இங்கே தந்துள்ளேன்:

“ நான் ஒரு கல்வெட்டுப் பித்தன். கல்வெட்டுகளைப் படிக்கும்போதெல்லாம் என்னை மறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் அம்மன்னர்கள் வாழ்ந்த காலத்திற்கே சென்றுவிடுவேன். “



         கொங்கவிடங்கீசுவரர் கோவிலும் அதன் கல்வெட்டுகளும் நம்மைக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்றாலும் கோவில் அதன் உயிர்ப்பு இன்றிப் பாழ்பட்டு நிற்பதைக் காண்கையில் நாமும் இடிந்து போகாமல் கோயில் அதன் பழைய கட்டுமானத்துக்கு மீட்சி பெற என்ன செய்யலாம் என்பதில் எண்ணம், செயல் இரண்டினாலும் முயலவேண்டும். கோயில்களைப்பேணும்  அரசுத்துறை, தொல்லியல் துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஆவன செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.


        














துணை நின்ற நூல்கள் :
கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் டாக்டர் கே.கே.பிள்ளை.
தமிழக கலைகளும் கல்வெட்டுகளும் டாக்டர் மா. இராசமாணிக்கனார்.



து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
அலை பேசி : 9444939156.