மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 25 டிசம்பர், 2019கோவை - தமிழ் சுவிசேஷ லுத்தரன் கிறித்து ஆலயம்
(THE TAMIL EVANGELICAL LUTHERAN CHURCH - COIMBATORE)

முன்னுரை

நண்பர் துரை.பாஸ்கரன், என்னைப்போல்  நடுவண் அரசுப் பணிநிறைவு செய்தவர். வரலாறு, தொல்லியல் மற்றும் சூழலியல் ஆர்வலர். இன்றும் கிராமப்பகுதிகளில் மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்க்க மக்களை ஊக்கப்படுத்தி வருபவர். தாவரங்கள் பற்றிய செய்திகளை அறிந்துவைத்திருப்பவர். இளமையில், மலையேற்றப் பயிற்சிக்குழுவில் இணைந்து மலையேற்றத்தில் (TREKKING) ஈடுபட்டவர். என்னோடு தொல்லியல் களப்பணிகளில் இணைந்து பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்த நிகழ்வுகளில் பங்கு கொண்டவர். அவர் அவ்வப்போது மேற்கொள்ளும் பயணங்களின்போதும், முன்பு மேற்கொண்ட பயணங்களின்போதும் தாம் பார்த்த, பெருங்கற்காலச் சின்னங்களான கல்திட்டைகள், நெடுங்கற்கள், நடுகற்கள் ஆகிய தொல்லியல் தடயங்கள் பற்றித் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கமுடையவர்.  அவர் ஒரு முறை, கோவையில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச் சபையைச் (THE TAMIL EVAGELICAL LUTHERAN CHURCH) சேர்ந்த கிறித்து நாதர் தேவாலயத்தைக் குறிப்பிட்டு, அத்தேவாலயம் தன் நூற்றிருபதைந்தாவது ஆண்டு நிறைவை முடித்துள்ளது என்றும், 1992-ஆம் ஆண்டு நூற்றாண்டு நிறைவுக்கு விழா எடுத்து விழா மலரையும் வெளியிட்டுள்ளது என்றும் அது தொடர்பாக ஒரு பதிவினை எழுதலாம் என்னும் கருத்தைப் பகிர்ந்துகொண்டார். அவரோடு அந்தத் தேவாலயத்துக்கு நேரில் சென்று அறிந்த செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

லுத்தரன் திருச்சபை (LUTHERAN CHURCH)

16-ஆம் நூற்றாண்டில் கிறித்தவச் சமயத்தில் நிகழ்ந்த புரோடஸ்டண்ட் (PROTESTANT) மறுமலர்ச்சியின் போது, ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் லூத்தர் (MARTIN LUTHER) என்பவரின் சீர்திருத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய புதிய வடிவம் லுத்தரன் திருச்சபையாகும். இறையியல் மற்றும் திருச்சபை செயல்பாடுகளில் லூத்தர் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

ஸ்வீடன் (SWEDEN)  நாட்டில் லுத்தரன் திருச்சபை

16-ஆம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவியன் (SCANDINAVIAN) என்னும் பெயரில் ஸ்வீடன், நார்வே, டென்மார்க்  ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு நிலவியது. ஸ்வீடன் நாட்டு அரசர் முதலாம் கஸ்டவ் (GUSTAV I) என்பார், கூட்டமைப்பிலிருந்து விலகி (விடுதலை பெற்று) லுத்தரன் கொள்கை அடிப்படையில் லுத்தரன் திருச்சபையை நிறுவினார். 1887-ஆம் ஆண்டில் ஸ்வீடன் லுத்தரன் அமைப்பில் இருந்த டேவிட் பெக்செல் (DAVID BEXELL)  என்பவர் தமிழகத்துத் தரங்கம்பாடிக்கு வந்தார். 1893-ஆம் ஆண்டு கோவைக்கு வந்து ஆறு ஆண்டுகள் கோவையிலேயே இருந்து இறைப்பணியை ஆற்றினார். 1928-ஆம் ஆண்டு தரங்கம்பாடியின் இரண்டாவது பிஷப்பாகப் பொறுப்பேற்றார். 1934-ஆம் ஆண்டு கோவைக்குத் திரும்பி வந்து மறைவு (05.07.1938) வரை இறைத்தொண்டாற்றினார்.

கோவை - தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை மற்றும் தேவாலயத்தின் தோற்றம்

சுவார்ச் ஐயர் (C.F. SCHWARTZ)

கி.பி. 1784.  சுவார்ச் ஐயர் (C.F. SCHWARTZ) கோவைக்கு வருகை தருகிறார். இவர் ஒரு ஜெர்மன் நாட்டு லுத்தரன் சமயப் பரப்பாளர் (GERMAN LUTHERAN MISSIONARY). புரோடெஸ்டண்ட் சமயப்பரப்பு வரலாற்றில் பெரிதும் அறியப்படுகின்ற சீகன்பால்கு (ZIEGENBALG) என்னும் ஜெர்மன் சமயப் பரப்பாளரை முன்னோடியாகக் கொண்டு, கி.பி. 1750-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தவர். தரங்கம்பாடியில் தம் பணியைத் தொடங்கியவர். தஞ்சை சரபோஜி மன்னரான துளஜியிடம் அமைச்சருக்குரியதொரு  மதிப்புறு நிலையில் நெறியாளராக இருந்தவர்.  துளஜிக்குப் பின்னர் இளம்வயதில் அரசுப்பட்டத்துக்கு வந்த சரபோஜி மன்னருக்கு ஆசானாகவும் தந்தை போன்றும் துணையாக இருந்தவர். இவர் 1798-ஆம் ஆண்டு இறந்தபோது, தஞ்சைத் தேவாலயத்தில் துளஜி மன்னர் தாமே ஆக்கிலத்தில் இயற்றிய போற்றிப் பாட்டைப் (EULOGY) பாடித் தம் அன்பைக் காட்டினார். ஐயர், இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, போர்த்துகீசியம், சமற்கிருதம், தமிழ், உருது, பாரசீகம், மராத்தி, தெலுங்கு ஆகிய பன்மொழி வல்லுநராக அறியப்படுவதோடு பிரிட்டிஷாரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். பிரிட்டிஷார் இவரை அமைதித் தூதுவராக ஐதர் அலியின் அரசவைக்கு அனுப்பியதுண்டு.  கிழக்கிந்தியக் கம்பெனியார் அவரைத் தம் பணியில் அமர்த்தினர். இவரது நினைவுச் சின்னம் சென்னைக் கோட்டையில் உள்ள செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தில் (St.MARY’s CHURCH) உள்ளது.சுவார்ச் ஐயர் - நினைவுச்சின்னம்


கோவையில் சுவார்ச் ஐயர் (C.F. SCHWARTZ)

கி.பி. 1784-ஆம் ஆண்டு கோவைக்கு அவர் வந்தது திப்பு சுல்தானைப் பார்க்க. நோக்கம் இன்னதெனத் தெரியவில்லை. நோக்கம் கைகூடாமலே தஞ்சை திரும்பினார். திரும்பும் முன்னர் சில நாள்கள் அவர் கோவையில் தங்கினார். இந்தக் காலகட்டத்தில், கோவை மிகவும் எளிமையான ஒரு சிற்றூர். அதன் அண்மையில் உள்ள பேரூர்தான் புகழ் பெற்ற ஊர். கோவையில் சுவார்ச் ஐயர்  தங்கியிருந்த சில நாள்களில், அவரைக் கண்டு உரையாடிய – ஏழு பேரைக்கொண்ட – ஒரு சிறிய கத்தோலிக்கக் குடும்பத்தினர், சுவார்ச் ஐயரின் இனிமையான தமிழ்ப் பேச்சால் ஈர்க்கப்பட்டு ஐயரின் லுத்தரன் சமய நெறியைப் பின்பற்ற முடிவு செய்தனர்.

கோவை - தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் தொடக்கப்புள்ளி

1799-ஆம் ஆண்டு திப்பு சுல்தான் இறந்தவுடன், கோவை முற்றிலுமாக ஆங்கிலேயரின் கைக்குள் வந்தது. அப்போது, தரங்கம்பாடியில் ‘துபாஷியாகப் பணியில் இருந்த தானியேல் பிள்ளையின் (DANIEL PILLAI) உடன்பிறந்தாரான யாக்கோபுப் பிள்ளை (JACOB PILLAI) என்பவர் கோவையில் குடியேறினார். இவரது வீட்டில் நற்செய்திச் சபை (சுவிசேஷச் சபை) கூடி ஆராதனை நடத்தத்தொடங்கினர். 1853-ஆம் ஆண்டு. கோவைப்பகுதியில் இரயில் பாதைப் பணி தொடங்கிய காலம். தரங்கம்பாடியிலிருந்து அனுப்பப்பட்ட ஷான்ஸ் (SCHANZ)  என்பவரும் நல்லதம்பி என்பவரும் மேற்கொண்ட முயற்சியால் 1867-ஆம் ஆண்டு பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. ஆராதனை இப்பள்ளியில் தொடர்ந்தது.

தேவாலயம் எழுந்தது

கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு விலகி லுத்தரன் சபைக்கு வந்த ஆரோக்கியசாமிப்பிள்ளை, ஜேக்கப் பிள்ளையார் ஆகியோரின் முயற்சியால் தேவாலயம் கட்டுவதற்கான பொருள் சேர்க்கப்பட்டு ஸ்டேன்ஸ் ஆலை நிறுவனத்தில் முதலீடாக வைக்கப்பட்டது. 1884-ஆம் ஆண்டில் தொடங்கிய முயற்சி பல தடைகளைத்தாண்டி 1890-இல் முழுமை பெற்று ஆலயம் கட்டும் பணி நடந்தது. 1892-ஆம் ஆண்டு, நவம்பர் 10-ஆம் நாள் ஆலயம் விழாக்கோலத்துடன் எழுந்தது. இந்த நாள், மார்ட்டின் லூத்தரின் (MARTIN LUTHER)  பிறந்த நாள் என்பது சிறப்பு. இதன் தனிச் சிறப்பு, கோபுரத்தின் உச்சியிலுள்ள சேவல் சின்னமும் ஆலய மணியும்.  கோவை லுத்தரன் தேவாலயம்


நூற்றாண்டு விழா

1892-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள் தேவாலயத்தின் நூற்றாண்டு விழா தொடங்கி ஐந்து நாள்கள் நடந்தது.

கிறித்து நாதர் ஆலயம் -  பார்வையிடல்

தற்போது, நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் பழமையான இத்தேவாலயத்துக்கு நண்பர் துரை. பாஸ்கரன் மற்றும் நண்பர் இதழியலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன்  2017, நவம்பர் 20 அன்று நேரில் சென்று பார்வையிட்டேன்.

ஆலயத்தின் நுழைவு வாயிலிலேயே  1892-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட “கிறிஸ்து ஆலயம்”   என்னும்  பலகைக் கல் பொறிப்புக் காணப்பட்டது.ஆலய நுழைவாயில்


பழமை கூறும் பலகை

ஆலயத்தின் உள்பகுதி

தொடர்ந்து ஆலயத்தின் உள்பகுதிக்குள் சென்று அதன் நடுமேடையை நோக்கிச் செல்லும்போதே தரையில் டேவிட் பெக்செல் ஐயரின் கல்லறைக் கல்வெட்டும் நினைவுக் கல்வெட்டும் இருந்தன.டேவிட் பெக்செல் - கல்லறைக் கல்வெட்டு

டேவிட் பெக்செல் - நினைவுக்கல்

தனியறை ஒன்றில் டேவிட் பெக்செல் ஐயரின் முழு உருவப்படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

டேவிட் பெக்செல் ஐயர்
ஆலயத்தின் நடுக்கூடத்தில் நின்றுகொண்டு கூடத்தின் இருபுறமும் மேலே
சுவர்ப்பகுதியைப் பார்வையிட்டபோது உச்சியில் வட்டவடிவத்தில், வண்ணக் கண்ணாடிகொண்டு அழகூட்டப்பட்ட குழிவுச் சன்னல்கள் காணப்பட்டன. சன்னல்கள் என்று இவற்றைக் குறிப்பிட இயலாது. ஏனெனில், காற்று வரும் திறப்பு இவற்றில் இல்லை.  இவை அழகுக்காக அமைக்கப்ப்ட்ட  கட்டுமானக் கலை வடிவங்கள்.  இவற்றின் சிறப்பு என்னவெனில், வட்ட வடிவத்தின் மையத்தில் மிக அழகாக வரையப்பெற்ற ஹீப்ரு மொழியின் எழுத்துகளே.   


ஹீப்ரு எழுத்து -  DALET

ஹீப்ரு எழுத்து - CHET

ஹீப்ரு எழுத்து - LAMED


ஞானஸ்நானத்தொட்டி

அடுத்து அங்கே நாம் பார்வையிட்டது ஞானஸ்நானத் தொட்டி.  அழகான மர வேலைப்பாடுடன் கூடியது.  பழமையானதொன்று எனப் புலப்பட்டது. 

பழமைத் தோற்றம்  மாறாத பள்ளி வகுப்பறை ஒன்றையும் பார்வையிட்டோம்.


பள்ளி வகுப்பறை - பழமை மாறாத்தோற்றம்

பள்ளி வகுப்பறை - பழமை மாறாத்தோற்றம்

இறுதியாக நாங்கள் பார்த்தது பிஷப்பின் பழமையான குடியிருப்பு வீடு.   முடிவுரை

சேவல் கோழி தேவாலயம் என்று முன்னாளில் மக்கள் வழங்கிய இத்தேவாலயத்தில் இன்று அதன் உச்சியில் சேவல் சின்னம் காணப்படவில்லை. தற்போது சிலுவைச் சின்னத்தை அமைத்திருக்கிறார்கள். நூற்றிருபத்தைந்து ஆண்டுகளாக நிற்கும் இத்தேவாலயத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளும் நம் முயற்சியில், 18-ஆம் நூற்றாண்டின் சூழலில் (1784)  கோவையில் திப்பு சுல்தான் தங்கியிருந்தமையும் கிழக்கிந்தியக் கம்பனியாரின் தூதுவராக சுவார்ச் ஐயர் அவரைச் சந்தித்த நிகழ்வும், சுவார்ச் ஐயர் தஞ்சை அரசரிடம் பெற்றிருந்த பெருமதிப்பும், கோவையில்   லுத்தரன் திருச்சபையின் தோற்றத்துக்கு சுவார்ச் ஐயர் அடித்தளமாக அமைந்தார் எனபதுவும் புதிய செய்திகள்.  கோவை வரலாற்றின் ஒரு உறுப்பாகத் திகழும் இத்தேவாலயம் தொல்லியல் நோக்கில் ஒரு தொன்மைச் சின்னம்.  வரலாறு மற்றும் தொன்மைச் செய்திகளை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள இந்தப் பகிர்வு சற்றேனும் பயன்படும் என்பது நம் நம்பிக்கை.

துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :   9444939156.ஞாயிறு, 15 டிசம்பர், 2019                                                                 சிவன்படவன்

முன்னுரை

இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் (ARCHAELOGICAL SURVEY OF INDIA) கல்வெட்டியல் ஆண்டறிக்கைகளைப் (ANNUAL REPORTS ON INDIAN EPIGRAPHY) படித்துக்கொண்டிருக்கையில், 1945-ஆம் ஆண்டிலிருந்து 1952 –ஆம் ஆண்டுவரை துறையின் செயல்பாடுகளை விளக்கும் ஆண்டறிக்கைத் தொகுதியில் ஒரு கல்வெட்டுச் செய்தி என்னைக் கவர்ந்தது. அது பற்றிய பதிவை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

திருக்குவளை -  திருக்கோளிலி

தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்த இவ்வூர், மேற்குறித்த ஆண்டறிக்கை வெளியான ஆண்டுகளின்போது, தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்திருந்தது. தற்போது திருக்குவளை என்னும் பெயர் வழங்கினாலும் இவ்வூரின் பழம்பெயர் திருக்கோளிலி என்பதாகும்.  ஆண்டறிக்கையில் இவ்வூரில் இருக்கும் தியாகராசர் கோயில் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. மொத்தம் இருபத்து நான்கு கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன.  கல்வெட்டுகளில் கோயிலின் இறைவன் பெயர் ஊர்ப்பெயரோடு சேர்த்துத் திருக்கோளிலி உடையார் என வழங்குகிறது. மனித வாழ்க்கையில் நேரும் உயர்வு தாழ்வுகளும், இன்பமும் இடர்ப்பாடும்  ஒன்பது கோள்களின் தாக்கத்தால் நிகழ்வன என்னும் கருதுகோள் மக்களிடையே நம்பிக்கை மரபாக இருந்து வந்துள்ளது.  அத்தகு வலிமை பெற்ற கோள்களே இவ்வூர்க்கோயிலின் இறைவனை வணங்கியதாலும், கோள்களால் ஏற்படும் குற்றங்கள் இவ்வூர் இறைவனால் நீங்குவதாலும் இவ்வூர் “கோளிலி”  என்னும் பெயர் பெற்றது எனத் தொன்மைப் புனைவுகள் கூறுகின்றன.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் பதிவாகியுள்ள இருபத்து நான்கு கல்வெட்டுகளில் பெரும்பாலானவை சோழர் காலத்தவை. மூன்றாம் இராசராசன், இராசாதிராசன், இராசேந்திர சோழதேவன், குலோத்துங்க சோழன், வீரராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் சோழ அரசர்கள் ஆவர். பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மூன்றில், இரண்டு கல்வெட்டுகள் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவை. ஒன்று மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தது.  கொடைகளில் பெரும்பாலானவை விளக்கெரிக்க அளிக்கப்பட்டன. சில, விழாக்காலச் சிறப்பு வழிபாடு, பஞ்சதிரவியம் கொண்டு திருமஞ்சனம், செப்புத்திருமேனிகளின் ஊர்வலம், தேவாரப் பண்ணிசைத்தல் ஆகிய நிகழ்வுகளுக்காகக் கொடுக்கப்பட்டன.  ஒரு கல்வெட்டு, புதியதொரு நிகழ்வைச் சுட்டுகின்றது. ஊர்ப்பகுதியில் பாய்ந்து செல்கின்ற பெருவாய்க்கால் ஒன்று,  மழை வெள்ளம் காரணமாக நீர்ப்பெருக்கெடுத்துக் கோயிலுக்கருகில் உள்ள தெருவில் புகுந்து சேதம் விளவித்ததால்  திருமறைக்காடுடையான் என்பவன் வாய்க்காலின் மேட்டுப்பகுதியில் இருந்த கோயில் நிலங்கள் சிலவற்றின் ஊடே புதிதாக வெட்டிய பாதை வழியாக வாய்க்காலைத் திசை திருப்பும் பணியைச் செய்தான் என்று கல்வெட்டு குறிப்பதோடு, கோயில் நிலங்களின் இழப்பை ஈடு செய்ய இரண்டு வேலி நிலம் கோயிலுக்கு உரிமையாகும் செயலையும் செய்தான் என்கிறது.   சிறப்பான செய்தியைக் கூறும் இக்கல்வெட்டின் படம் நூலில் தரப்படாமையால், கல்வெட்டின் பாடத்தை இங்கு குறிப்பிட இயலவில்லை. இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ளவிருக்கும்  கல்வெட்டின் படம் அதன் சிறப்புச் செய்தி காரணமாக நூலில் தரப்பட்டுள்ளதால் அதன் பாடத்தைக்கொண்டு செய்தி விளக்கப்படுகிறது.

அதிபத்த நாயனார்

சைவ சமய அடியார் அறுபத்துமூவருள்  ஒருவர் அதிபத்த நாயனார்.  அவர் மீனவர் குலத்தவர். அவர் எவ்வாறு இறையன்பு செலுத்தினார் என்பதையும் எவ்வாறு அவரை இறைவன் ஆட்கொண்டான் என்பதையும் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் எழுதிய கதைக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.


சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார். மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார். இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள். அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு, "இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன்மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்" என்று கடலிலே விட்டார். அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள; அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.

திருக்குவளைக் கல்வெட்டில் அதிபத்த நாயனார்

தொல்லியல் ஆண்டறிக்கை நூலில் உள்ள திருக்குவளைக் கல்வெட்டின் படம் கீழே தரப்பட்டுள்ளது.  
கல்வெட்டின் பாடம்

1    ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள்
2    ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு 4
3    வது மார்கழி மாதத்தொருநாள் உ
4    டையார் திருக்கோளிலி உடை
5    யார் கோயிலில் முன்னாளில் சிவன்
6    படவரில் ஆலன் எழுந்தருளிவித்த
7    அதிபத்த நாயனார்க்கு திருப்படிமா
8    ற்றுக்கு இவன் தன் சாதியார் பக்க
9    ல்  இரந்து பெற்ற காசா(ய்)…..
10  ..காவசேரி ஐ.யன்னைய பட்டன்
11  மகன் தாமோதரபட்டன் பக்கல்
12  நெல் பொலிசைக்கு குடுத்த காசாய்
13  இவன் ஒடுக்கின காசு (2100) இக்கா
14  சு இரண்டாயிரத்தொருநூறும்
15  கைக்கொண்டு திருப்படிமாற்றுக்
16  கு நாள் ஒன்றுக்கு இரு நாழி அரிசி
17  அமுதுபடிக்கு அளப்போமாகவு
18  ம் நாங்கள் இப்படி செய்வோ
19  மாக ம்மதித்தோம்


குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.சிவன்படவர் - கல்வெட்டு - திருக்குவளை
கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் ஸ்ரீராஜராஜதேவர் மூன்றாம் இராசராசன் என்பதாக நூலின் பதிப்பாசிரியர் குறித்துள்ளார். இவ்வரசனின் ஆட்சிக்காலம் கி.பி. 1216-1246. கல்வெட்டில், இவனுடைய ஆட்சியாண்டு நான்கு என இருப்பதால் கல்வெட்டு எழுதபட்ட காலம் கி.பி. 1220 என அமைகிறது. கோயிலின் பெயர் இறைவனின் பெயரைக்கொண்டு திருகோளிலி என அறிகிறோம். இக்கோயிலில்,  சிவன் படவரில் ஆலன் என்பவன் முன்னரே அதிபத்த நாயனார் திருமேனியை எழுந்தருளச் செய்திருக்கிறான். இப்போது, அந்தத் திருமேனிக்கு அமுது படைத்து வழிபாடு செய்ய 2100 காசு முதலாக வைக்கிறான். இக்காசை அவன் தன் குலத்தவரிடம் இரந்து பெற்றுக் கோயிலுக்குக் கொடையாக அளித்திருக்கிறான். தெய்வத்திருமேனியாக அவன் தான் எழுந்தருளுவித்த அதிபத்தனாருக்கு நாள்தோறும் அமுது படைத்து வழிபாடு செய்தல் தடையின்றி நடைபெறவேண்டும் என்பதற்காகத் தன் குலத்தாரிடம் இரந்து காசு சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கோயில் சிவப்பிராமணனாகிய தாமோதர பட்டன் என்பவன் மேற்படி 2100 காசுகளைப்பெற்றுக்கொண்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் பொலிசை (வட்டி) வருவாயைக்கொண்டு நாள் ஒன்றுக்கு இரண்டு நாழி அரிசியால் அமுது படைப்போம் என்று பொறுப்பேற்றுக்கொள்கிறான்.

சிவன்படவர்

அதிபத்த நாயனார் ஒரு மீனவர்.  அவருக்கு ஒரு மீனவனான ஆலன் என்பவன் வழிபாட்டுத் திருமேனியைக் கோயிலில் நிறுவி வழிபாட்டுச்செலவுக்கு வகை செய்கிறான் என்பது பெருமைக்குரியது.  கல்வெட்டில் உள்ள சிறப்புச் செய்தி என்னவெனில் மீனவர்,  சிவன்படவர் என அழைக்கப்பெற்றார்கள் என்பதுதான். நாம் இன்றைய நாளில் மீனவர் என்று அழைத்தாலும் சங்ககாலத்தில் மீனவர் என்னும் சொல்லாட்சி இல்லை என்பதாகத் தெரிகிறது. அகநானூற்றுப் பாடல் ஒன்று (அகம்-320) திமிலோன் என்றும், புறப்பாடல் ஒன்று (புறம்-24) பரதவர் என்றும் சுட்டுகிறது. மற்றொரு புறப்பாடல் (புறம்-249) வலைஞர் என்று குறிப்பிடுகிறது. மேலும், பரவர், முக்குவர், பட்டினவர், வலையர், கரையார், மரக்காயர் எனப் பல்வேறு பெயர்களில் மீனவர் தாம் சார்ந்த தொழிலின் அடிப்படையில் அறியப்படுகிறார்கள்.

கல்வெட்டில் மீனவர்களைச் சுட்டும் “சிவன்படவர் என்னும் பெயர் 13-ஆம் நூற்றாண்டில் வழங்கியது என்பது புதிய செய்தி. சிவன்படவர் என்னும் இப்பெயர் காலப்போக்கில் “செம்படவர்  எனத் திரிந்திருக்கலாம் எனக் கருதத்தோன்றுகிறது. கல்வெட்டின் காலம் இடைக்காலம். இடைக்காலச் சோழர் ஆட்சியின்போதே வலங்கை,இடங்கைப் பிரிவுகள் ஏற்பட்டு வெவ்வேறு தொழில் சார்ந்தோரிடையே பகைமையும் பிளவுகளும் ஏற்பட்டன. சாதியப் பாகுபாடுகள் அப்போதிருந்தே கிளைக்கத் தொடங்கின எனலாம். திருக்குவளைக் கல்வெட்டில், சாதி என்னும் சொல் (வரி-8) ஆளப்பட்டுள்ளதை நோக்கும்போது 12-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சாதிபிறந்துவிட்டதை அறிகிறோம்.

மீனவரில் பல்வேறு பிரிவினர்

முக்குவர் என்னும் பெயர் முத்துக்குளிக்கும் தொழிலோடு தொடர்புடைய சொல்லாகலாம். கரையார் என்பவர் படைவீரராகவும், கப்பல் கட்டும் தொழில் அறிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கடல் வணிகத்தோடு தொடர்புடைய கடலோடிகளாக மீனவர் அறியப்படுகிறார்கள். தமிழகக் கடற்கரையோர மக்கள் கரையாளர்கள், பரவர்கள், செம்படவர்கள், வலையர்கள், முக்குவர்கள், பட்டனவர்கள் என்னும் ஆறுவகைப் பிரிவினராக இருந்தனர் என்று எஸ். ஜெயசீல ஸ்டீபன் என்பவர் தாம் எழுதிய ‘காலனியத் தொடக்கக் காலம்  என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அவர்களது கடல்சார் அறிவுத்திறனும் தொழில் நுட்பமும் தொன்று தொட்டு மரபு வழி வந்தவை. தோணி, வள்ளம், சலங்கு என்னும் பல்வகைப் படகுகள் இருந்துள்ளன. பாய்மரம் உள்ள படகு தோணியாகும். சாம்பன் என்னும் ஒருவகைப் படகு கடல் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டது. கரையார் என்னும் மீனவ இனத்தவர் கரையோரப் பகுதியில் வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றனர். 1530களில் ஃபிரான்சிஸ்கன் சபை பரப்பாளர்களால் முதன்முதலில் கிறித்தவத்தைத் தழுவியோர் கரையாளர்களே ஆவர். பரவர்கள் (பறவர்கள்)  பெரும்பாலோர் முத்துக்குளிப்பவர் ஆவர். வலையர் (வலைஞர்),  செம்படவர் ஆகியோர் ஆறு, குளங்களில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர் ஆவர். கடலில் மீன் பிடிக்கும் பட்டனவர் வலங்கைப் பிரிவினராகக் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களது இருப்பிடம் பட்டினச்சேரி என்னும் பெயருடையது.  பட்டினவர் இனத்தாரிடை மட்டிலுமே தூக்க ஊஞ்சல் திருவிழாவைக் கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. உயரே தொங்கும் மரச்சட்டத்தில் கயிற்றிணைப்பின் மூலம், முதுகில் கொக்கியை  மாட்டித் தொங்கிய வண்ணம்  உடல் சுழலப்பெறும் இந்தச் சடங்கு வேட்டைத் தொல்குடிகளின் சடங்கை நினைவூட்டுவதாக உள்ளது. மீன் பிடித்தலில் அவர்களது பெண் தெய்வமான எல்லம்மாளின் ஆசியைப் பெறும் நேர்ச்சி நோன்பாகக் இத்திருவிழா கொண்டாடப்பட்டாலும், இச்சடங்கு, “போலச் செய்தல்  என்னும் தொல்மாந்தர் மரபின் நீட்சி எனக் கருதுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில், சென்னைக் கருப்பர் நகரத்தில் (BLACK TOWN) இருபத்தொன்பது சாதியினர் குடியேறியிருந்தனர். அவர்களில் மூன்று மீனவ இனங்களான செம்படவர், கரையாளர், முக்குவர் ஆகியோரும் அடக்கம். முக்குவர் வலங்கைப் பிரிவினராய் இருந்தனர். முக்குவர்கள் கடலின் நடுவில் நிற்கும் கப்பலுக்கும் கடற்கரைக்குமாகப் படகைச் செலுத்தி கப்பல் சரக்குகளை இரு இடங்களிலும் ஏற்றி இறக்கும் பணியைச் செய்தனர்.

முடிவுரை

சிவன்படவர் என்னும் சொல் திருக்குவளைக் கல்வெட்டில்  பயின்று வருதல் புதுமையாய் இருப்பதை வியந்து தொடங்கிய இந்தப் பதிவு, மாந்த வாழ்வின் முதல் தொழில்களில் ஒன்றான மீன் பிடித்தல் தொழிலை நேற்கொண்ட மீனவர் பற்றிய ஓர் அறிமுகப் புரிதலை நமக்கு உணர்த்தியது எனில் மிகையல்ல.

துணை நின்ற நூல்களும் பார்வைக் குறிப்புகளும்:

1       இந்தியக் கல்வெட்டியல் ஆண்டறிக்கை – தொகுதி 1945-1952)
[ANNUAL REPORTS ON INDIAN EPIGRAPHY  (1945-1952) ]

2       காலனியத் தொடக்கக் காலம் 9கி.பி. 1500-1800) –
எஸ். ஜெயசீல ஸ்டீபன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

3       SHAIVAM.ORG


4       இணையம் – Wikipediya

  
   

துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.