மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 16 செப்டம்பர், 2017

                                            பட்டிபுரோலு (BHATTIPROLU)
                                    தென்னாட்டுப் பிராமி எழுத்துகள்

முன்னுரை
இணையவழி  நண்பர்  (கல்வெட்டுகளில் நாட்டமுடையவர்) அண்மையில் சென்னை அருங்காட்சியகம் சென்றபோது  அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பட்டிபுரோலு பிராகிருதக் கல்வெட்டுகளைப் பார்த்துப் படத்தை அனுப்பியிருந்தார்.
பட்டிபுரோலு
தொல்லியலில் கல்வெட்டுகளைப்பற்றிப் படிக்கையிலேயே, பிராமி எழுத்துகள் இந்திய நாடு முழுமையிலும் வழக்கில் இருந்தமையும், தென்னாட்டில் தமிழுக்கென்று தனியே பிராமி எழுத்துகள் வழக்கில் இருந்தமையும் அறிந்தோம். தென்னாட்டில் மிகப்பழைய பிராமி எழுத்துகள் ஆந்திரப்பகுதியில் குண்டூர் மாவட்டத்தில், தெனாலி வட்டத்தில் அமைந்துள்ள பட்டிபுரோலு என்னும் இடத்தில் கிடைத்துள்ளன.

புத்த விகாரையும் தூபியும்
குண்டூருக்கு அருகில் உள்ள ஊர் பட்டிபுரோலு. இதன் பழம்பெயர் பிரகதிபுர(ம்)
இங்கு ஒரு புத்த தூபி இருந்துள்ளது. ஆந்திரப்பகுதியில் கட்டப்பெற்ற பழமையான புத்த தூபிகளில் இது ஒன்று என்று கருதப்படுகிறது. இங்குள்ள புத்த மதத்தைச் சேர்ந்த கட்டுமான எச்சங்கள் த்ற்போது மேடுகளாக உள்ளன. இதை விக்கிரமார்க்க கோட்டை திப்பா என்த் தற்போது மக்கள் அழைக்கிறார்கள். பாஸ்வெல் என்னும் ஆங்கிலேயர் கி.பி. 1870-இல் இங்கு வந்தபோதுதான்  புத்த தூபி பற்றித் தெரியவந்துள்ளது. பின்னர், கி.பி. 1890-இல் தொல்லியல் துறைத் தலைவர் அலெக்சாண்டர் ரே என்பார் இங்கு அகழாய்வு செய்த பின்னரே இங்கு ஒரு புத்த சைத்தியம் இருந்த செய்தி வெளியானது. சைத்தியத்தில் இருந்த பொருள்களாக கற்பேழைகள்  எழுத்துப் பொறிப்புகளோடு கிடைத்தன.  இவ்வெழுத்துகள், அசோகனின் பிராமி எழுத்துகளுக்கும் முந்தியவை. சர்.வால்டெர் எலியட், இராபர்ட் சிவெல் ஆகிய
ஆய்வறிஞர்களும் இங்கு அகழாய்வு செய்துள்ளனர்.
20-ஆம் நூற்றாண்டில், 1969-70 ஆண்டுகளில் தொல்லியல் துறை ஆய்வதிகாரி ஆர். சுப்பிரமணியம் என்பவர் ஆய்வு செய்து, இங்கு விகாரையும், 65 அடி உயரமும், 148 அடி விட்டமும் உள்ள தூபியும் இருந்துள்ளதாகக் கண்டறிந்தார். பின்னர் அத் தூபி 18 அடியாகக் குறைந்தது. தூபியின் உச்சியில்  சக்கரம் போன்ற அமைப்பு இருந்துள்ளது. குபிரகா என்னும் அரசன் காலத்திய துப்பி என்று அறியப்பட்டுள்ளது. தற்காலம், 2007-இல்  இச்சின்னங்கள் பொது மக்கள்
பார்வைக்கு விடப்பட்டன.

பட்டிபுரோலு பிராமி எழுத்துகள்
பட்டிபுரோலுவில் கிடைத்த கற்பேழைகளில் இந்த பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த எழுத்துகளஇலிருந்துதான் கன்னட, தெலுங்கு மொழி எழுத்துகள் தோற்றம் பெற்றன எனக் கருதப்படுகிறது.  இக்கல்வெட்டின் மொழி பிராகிருதம்  ஆகும். பிராகிருதம், சமற்கிருதத்துக்கு முன்னர் வழங்கிய
மொழியாகும்.

கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பட்டிபுரோலு (BHATTIPROLU) கிராமத்தில் கிடைத்த பிராமி எழுத்து, வட இந்தியாவில் வழக்கிலிருந்த அசோகர் பிராமி எழுத்துகளின் தென்னிந்திய வடிவ வகைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது எனவும், இவ்வகை வடிவம் அசோகனின் கல்வெட்டு எழுத்துகளினின்றும் தனித்து இயங்கியதோடல்லாமல், கி.பி. 3-ஆம் நூற்றாண்டு அளவில் பல்வேறு முறைகளில் எழுதப்பெற்று வந்தது என்றும் பூலர் குறிப்பிடுகிறார். அதில் ஒரு கல்வெட்டுப்படமும் சில விளக்கங்களும் சி.சிவராமமூர்த்தி அவர்களின் நூலில் காணப்படுகின்றன. எழுத்துப்பொறிப்பு பிராகிருத மொழியில் எனத் தெரிகிறது. ஏனெனில்,  இக்கல்வெட்டில் உள்ள சொற்களுக்குச் சமமான சமற்கிருதச் சொற்கள், நூலில் குறிக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுப்படம் கீழ் உள்ளவாறு:


                                      பட்டிபுரோலு- பிராமிப் பொறிப்பு


கல்வெட்டின் பாடம் - நடுவில் உள்ளது:

நெக3
வசொ சகொ4
ஜதொ ஜபொ4 திஸொ
ரெதொ அசிநொ ஷபி4கொ
அக24 கெலொ கெஸொ மாஹொ
ஸெட்டா சதிகொ ஒக்2பூ4லொ
ஸொணுதரொ ஸமணொ
ஸமணதாஷொ ஸாமகொ
கமுகொ சீதகொ

கல்வெட்டின் பாடம் - வட்டச்சுற்றில் உள்ளது:

அரஹதி3நாநம் கோ3டி2யா  மஜூஸ் ச ஷமுகொ ச தேந கம் யேந குபி3ரகொ
ராஜா அகி

பிராகிருதம்           சமற்கிருதம்

வச                          வத்ஸ
ஜத                          ஜயந்த
ஜப4                                 ஜம்ப4
திஸ                       திஸ்ய
அக24                          அக்சக்3
ஸொணுதர         ஸொணத்தர
ஸமண                 ஸ்ரமண
ஸமணதாஷ      ஸ்ரமணதா3
ஸாமக                   ஸ்யாமக
அரஹதி3நா         அரஹத3த்தாகல்வெட்டில் வரும் மேற்படிப் பெயர்கள் யாவும்  ”நிக3ம”   என்னும்  குழுவைச்
சேர்ந்தவர்களின் பெயர்கள். இவர்களே கொடையாளிகள். கொடைப்பொருள்,
CASKET  AND BOX எனக்குறிக்கப்படுகிறது.  பேழை  எனக்கொள்ளலாம்.
குபி3ரகா  என்பது அரசனின் பெயர்.


--------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.காட்டூர் புதூரில் 188 ஆண்டுகள் பழமையான தூரிக்கல்வெட்டு கண்டுபிடிப்பு


முன்னுரை
      திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ளது காட்டூர் புதூர் என்னும் சிற்றூர். இங்கு, கருப்பராயன் கன்னிமார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலின் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் அவர்களைத் தொலைபேசியில் அழைத்துத் தம்முடைய குலதெய்வக்கோயிலில் கல்லால் அமைக்கப்பட்ட தூரியில் (ஊஞ்சலில்) கல்வெட்டு காணப்படுகிறது என்றும் அதைப் படித்துச் செய்தியைச் சொல்லவேண்டும் என்றும் கேட்டிருந்தார். அவ்வாறே ஒரு நாள் அவருடன் காட்டூர் புதூர் சென்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கல்வெட்டைப் படித்ததில் தெரியவரும் செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன:

நாட்டார் வழிபாடும் கருப்பராயன் கோயிலும்
      காட்டூர் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள கருப்பராயன் கன்னிமார் கோயில் கொங்கு குறவர்களில் ஒரு குலத்தவரான சீரங்குளி குலத்தவர்க்குரிய குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. தமிழகத்தில், நெடுங்காலமாகக் கருப்பராயன் கோயில்கள் வழிபாட்டில் உள்ளன. இக்கோயில்கள் பழங்குடிகளின் வழிபாட்டு எச்சமாக நாட்டார் வழக்காறுகளில் அமைந்தவை. பெருங்கோயில்கள் அரசர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் அரசர்களால் கட்டப்பெற்றவை. ஆனால், சிறு தெய்வ வழிபாடு அரசு ஆக்கம் உருவாவதற்கு முன்னரே நாட்டார் வழிபாட்டு மரபில் இருந்துள்ளது. எனவே, நாட்டார் கோயில்கள் மிகப் பழமையானவை என்றே கூறவேண்டும். அவ்வகையில், பல்வேறு குடியினர் தம் குலங்களுக்குரிய கோயில்களைத் தனியே அமைத்துக்கொண்டனர். கொங்குப்பகுதியில் பலவேறு அம்மன் கோயில்கள், கருப்பராயன் கோயில்கள், அண்ணமார் கோயில்கள், அப்பச்சிமார் கோயில்கள் எனப் பலப்பல கோயில்கள் எழுந்துள்ளன.

காட்டூர் புதூர் கருப்பராயன் கோயில்
        காட்டூர் புதூர், திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், கொடுவாய் ஆகிய இரண்டு ஊர்களுக்கும் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள கருப்பராயன் கன்னிமார் கோயில் எளிய அமைப்புடன் விளங்குகிறது. சுற்றுச் சுவருடன்  கூடிய ஒரு சிறிய வளாகத்தின் மையப்பகுதியில் இரண்டு கருவறைகளும் அவற்றுக்கு முன்புறம் ஒரு மண்டபமும் உள்ளன. இவற்றைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் (பிராகாரத்தில்) வலப்புறம் மரத்தடி மேடையும் மேடைமேல் சிறு சிறு பழிபாட்டுக் கற்களும் அதன் முன்பாக நட்டு வைத்த வேல்களும், சுற்றுச் சுவரை ஒட்டி ஆஸ்பெஸ்டாஸ்கூரையிட்ட திண்ணை அமைப்பில் ஒரு   தங்குமிடமும் உள்ளன. ஒரு கருவறை கருப்பராயனுக்கும் மற்றது கன்னிமார்களுக்கும் அமைந்தவை. கருப்பராயன் கருவறைக்கு முன்புறம் கல்லாலான தூரி (ஊஞ்சல்) உள்ளது. ஐந்து அடி உயரத்துக்கு இரண்டு கல் தூண்கள்; அவற்றை மேற்பகுதியில் இணைக்கும் ஒரு கிடைமட்டக் கல். இரும்புச் சங்கிலிகள் இரண்டில் பிணைக்கப்பட்ட ஊஞ்சல் மரப்பலகை. இந்த அமைப்பின் இரு தூண்களிலும் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. தூண்களின் மீது தொடர்ந்து பூசப்பட்ட எண்ணெய்ப்பூச்சின் காரணமாக எழுத்துகள் மறைந்திருந்தன. சௌந்தரராஜனும் அவரது தம்பி பொன்னுசாமி இருவரும் கூடிக் கம்பிப் புருசு கொண்டு தேய்த்துத் தேய்த்து எண்ணெய்ப் பிசுக்கை நீக்கிய பின்னர், எழுத்துகளின் மீது கடலை மாவைப் பூசித் துடைத்துப் பார்க்கையில் எழுத்துகள் புலப்பட்டன.

          கோயிலின் முகப்புத்தோற்றமும், உட்புறத்தோற்றமும்கல்வெட்டின் பாடமும் செய்திகளும்
      கல்வெட்டு, தூணின் அரை அடி அகலப்பரப்பில் எழுதப்பட்டிருந்தன. எனவே, இந்தப்பரப்பில் மூன்று அல்லது நான்கு எழுத்துகளே பெரும்பாலும் எழுதப்பட்டிருந்தன. முதல் தூணில் இருபத்தெட்டு வரிகளும் இரண்டாவது தூணில் இருபத்தெட்டு வரிகளும் எழுதப்பட்டிருந்தன. பிள்ளையார் சுழியுடன் தொடங்கப்பட்டிருக்கும் கல்வெட்டின் பாடம் (வாசகம்) கீழ்க்கண்டவாறு:

                                          தூரிக் கல்வெட்டின் தோற்றம்

முதல் தூண்
கலி
யுக சகா
ற்த்த
ம் 4
930
நலன
ந்தன
வருஷ
ம் பங்கி
நி மா
சம் 7
ந் தேதி
சோம
வாரம்
திரியே
தெசி
யும் அ
விட்டமு
ம் கூடி
ய சுப
தினத்
தில் கா
ட்டூர்
கிரா
மம் புரி
லேயி
ருக்கும்
கொர

இரண்டாம் தூண்
ப்பள
னி மக
ன் வை
ய்யான்
கருப்ப
ன் மக
ன் பள
னி செ
ய்த த
ர்மம் கரு
ப்பராய
ன் கன்
னி மா
ற் கல்
த்தூரி
யிது மு
தலா
ன மூ
ன்றும்
செய்து
பிறதி
ட்டையு
ம் செய்
(ய) தூன்
வெற்
றினது
லட்ஷ
க் கவு

  
 கல்வெட்டில் கலியுக ஆண்டு 4930 எனக் குறிக்கப்படுகிறது. இதற்கு ஈடான ஆங்கில ஆண்டு 1829. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 1829. இன்றைக்கு 188 ஆண்டுகள் பழமையானது. கல்வெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் ஆண்டான நந்தன ஆண்டு ஆங்கில ஆண்டுடன் பொருந்தவில்லை. பிழையாக உள்ளது. கோயிலில் உள்ள கருப்பராயன், கன்னிமார் தெய்வங்களின் சிற்பத் திருமேனிகளையும், கல் தூரியினையும் செய்து இம்மூன்றையும் நிறுவி (பிரதிஷ்டை செய்து) வைத்தவர் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த குறவர் பழனி என்பாரின் பேரனாகிய பழனி என்பவர் ஆவார். இடையில் தந்தையின் பெயர் வைய்யான் கருப்பன் எனக் குறிப்பிடப்படுகிறது.
     
      கொங்கு குறவர், பழங்குடியினரான வேடர்/வேட்டுவர் மரபில் வந்தவராவர். இவர்களது குலக்கோயிலாக இந்தக் கருப்பராயர் கன்னிமார் கோயில் அமைந்துள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி. 1829-இல் கடவுளர் சிற்பங்கள் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளதால், அதற்கு முன்னரே எளிமையான அமைப்பில் பழங்குடியினர் வழிபாட்டு மரபில் கோயில் இருந்துள்ளதை அறியலாம்.


                                கோயில் நிர்வாகிகளுடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர்

முன்னுரை

கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை ஒரு கவிஞராக அறியப்படுவதே நாம் பெரிதும் காணுகின்ற நிலை. ஆனால், அவர் சிறந்ததொரு வரலாற்று ஆராய்ச்சியாளராகவும், கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் விளங்கியுள்ளார் என்பது மிகுதியும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்றே கருதத்தோன்றுகிறது. பேராசிரியர் முனைவர் Y. சுப்பராயலு அவர்கள் கவிமணியப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

பொதுவாக, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையைக் கவிஞர் என்றுதான் தமிழுலகம் அறியும். வரலாறு தொடர்பான அவர் கட்டுரைகள் அவ்வளவாக அறியப்படவில்லை. இவர் தேர்ந்த கல்வெட்டாய்வாளராக இருந்தார். பல வரலாற்றுச் செய்திகளை ஆழமாக ஆராய்ந்து ஆங்கில நடையில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது வரலாறு/கல்வெட்டு ஆராய்ச்சிகள் பற்றிய ஒரு சிறிய பதிவு இங்கே.

                       கவிமணி மண்டபம் - தேரூர்

                கவிமணி மண்டபம் அருகில் - அழகிய மணவாள விநாயகர் கோயில்   
                         
                                           கோயிலின் மற்றொரு தோற்றம்
                             
                                               கவிமணியின் விநாயகர் வணக்கம்

மாணிக்கவாசகர் காலம்
மாணிக்கவாசகரின் காலத்தை அவரது கூற்றிலிருந்தே அறியலாம்.

மாணிக்கவாசகர் தமக்கு முன்பிருந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற தேவார ஆசிரியர் மூவரையும் முறையே குறிப்பிட்டுள்ளார் என்பது அறியப்படுகின்றதோடு, அவர் மூவருக்கும் பின்னிருந்தவர் என்பதும் தெளியப்படும்
இதற்காக அவர் காட்டும் மேற்கோள்கள் வருமாறு:

அப்பர் பற்றிய மேற்கோள்:

பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய அடியார்க்குன்
அணியார் பாதம் கொடுத்தி...
                         (திருவாசகம், திருச்சதகம், 89)
சூலை நோயைத் தீர்த்த (பணி தீர்த்தருளி) செய்தி, அடியார் முடியில் ஈசன் தம் பாதம் வைத்த செய்தி (அணியார் பாதம் கொடுத்தி) ஆகிய நிகழ்ச்சிகள் அப்பரையன்றி (பழைய அடியார்) வேறு யாரிடத்தும் நிகழவில்லை என்னும் கருத்தால் மாணிக்கவாசகர் காலத்தை நிறுவுகிறார்.

சம்பந்தர் பற்றிய மேற்கோள்:

    பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
    பெண் சுமந்த பாகத்தன்
                             (திருவாசகம், எண்ணப் பதிகம், 6)

பண்ணார் பாடலுக்கு இறைவன் பொற்றாளம், முத்துச்சிவிகை போன்ற பரிசளித்தமை சம்பந்தரையே குறிப்பன என்கிறார்.

சுந்தரர் பற்றிய மேற்கோள்:

    பாற்றிரு நீற்றெம் பரமனைப்
          பரங்கருணையோடு மெதிர்ந்து
    தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்கும்
          சோதியை................
மெய்யடியார்’,  ‘எதிர்ந்து’  என்பவை, சுந்தரரின் திருமணக் காலத்தில் அந்தணர் கோலத்தில் தோன்றி ஆளோலை காட்டி எதிர்வாதம் பேசித் தடுத்தாட்கொண்ட மெய்யடியார்  சுந்தரையன்றி வேறு யாரைக் குறிக்க முடியும் என்பது கவிமணியின் கேள்வி.

கல்வெட்டு ஆய்வு (சாசன ஆராய்ச்சி)-1
திருவிதாங்கூர் தொல்லியல் தலைவராய் இருந்தவர் கோபிநாதராவ் அவர்கள். அவர், திருநந்திக்கரை செப்பேடு ஒன்றினைப் படித்துப் பொருள் கொள்ளும்போது ஓரிடத்தில் தவறியதாகக் கவிமணி எடுத்துக் கூறுகிறார்.  கவிமணியார் கோபிநாதராவ் அவர்களை ‘திரு. கோபிநநாதராயர் என்று குறிப்பிட்டு, இராயரவர்களை “ஒரு சிறந்த அறிஞர்; ஆராய்ச்சி வல்லுநர்; அரிய காரியங்களைச் சாதித்தவர். எனினும், அவர் தவறிய இடங்கள் இல்லாமலில்லை. அவற்றுள் ஒன்றைக் கீழே எடுத்துக்காட்டுகின்றேன்.”  என்று குறிப்பிடுகிறார்.

செப்பேட்டு வரிகளில் முதல் மூன்று வரிகள் கீழ் வருமாறு: (கோபிநாதராவ் அவர்கள் படித்தவாறு). மீதமுள்ள வரிகள் விரிவஞ்சிக் காட்டப்பெறவில்லை.

1                     ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமாதித்ய வரகுணர்க்கு யாண்டு எட்டு பங்குனித் திங்கள்      திருநந்திக்கரை இருந்து அடிகள்......................
2                     ங்க நாடு கிழவன் மகள் ஆய்குலமாதேவியாயின முருகஞ்சேந்தியைத் திருவடி சார்த்த இவளுக்குக் குடியாக அட்டிக்குடுத்த பூ
3                     ள்ளுவ நாட்டு மேற்கோட்டுப் பழங்கோப்பற்று செங்கணர் வந்தடி பல விதை பதினைங்கல வித்துப்பாடும் சாண்டன் தடி பலவிதை

கவிமணி அவர்கள் செப்பேட்டின் பொதுப்பொருள் இன்னதென்று எழுதுகிறார். அதாவது, ‘தெங்க நாடு கிழவன் மகள் ஆய்குல மாதேவியாயின முருகஞ் சேந்தியைத் திருவடி சார்த்த அவளுக்கு விட்டுக்கொடுத்த 32 கலவித்துப்பாடு கொண்ட நிலத்தைப் பார்த்திப சேகர புரத்துப் பெருமக்கள் மேற்பார்வை செய்துகொள்வார்களாகஎன்பது. திருவடி சார்த்த”  என்பதன் பொருளைச் சரியாக உணர்ந்தால்தான் முருகஞ் சேந்திக்கும் வரகுணதேவர்க்குமுள்ள தொடர்பும், சாசனத்தின் நோக்கமும் தெளிவுபடும் என்கிறார் கவிமணி. திரு. கோபிநாதராயரவர்கள் ‘திருவடி சார்த்தல்என்பதற்குத் திருமணம் செய்துகொடுத்தல் எனக் கருத்துக்கொண்டு, ‘வரகுணனுக்கு முருகஞ் சேந்தி மணமுடிக்கப்பட்டாள்எனக் கூறுகின்றார். ஆனால், கவிமணி அவர்கள், வைணவர்கள் பயன்படுத்தும் ‘திருவடி சேர்தல்என்னும் தொடரைச் சுட்டி, ‘திருமாலின் திருவடிகளில் சேர்தல் (இவ்வுலக வாழ்வை நீத்தல்)எனப் பொருள்கொள்கிறார். எனவே, முருகஞ் சேந்தி என்பவள் மணவாழ்வை வெறுத்துக் கன்னிகையாகவே இருந்து கடவுள் வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முனைவதையே ‘திருவடி சார்த்த’  என்னும் தொடர் குறிக்கிறது என்றும், அரசன் அவ்வாறு அவளைக் கடவுளின் திருவடிகளில் காணிக்கை வைத்து அவளது நல்வாழ்வுக்காக (செலவுக்காக) நிலம் விட்டுக் கொடுத்திருக்கவேண்டும் என்று நிறுவுகிறார். தான் மணக்கப்போகும் பெண்ணுக்கு அரசன் நிலம் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை என்ன என்பதாகக் கேள்வி எழுப்புகிறார்.
மேலும், செப்பேட்டு வரிகளின் இறுதியில் இரண்டு எழுத்துகள் சிதைந்து போயுள்ளதைச் சுட்டிக்காட்டி, சிதைந்த இரு எழுத்துகளைச் சரியாக ஊகம் செய்து நிரப்புகிறார். திருத்தப்பட்ட பாடம் வருமாறு;

1  ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமாதித்ய வரகுணர்க்கு யாண்டு எட்டு பங்குனித் திங்கள்                திருநந்திக்கரை இருந்து அடிகள்....................(ர்தெ)
2   ங்க நாடு கிழவன் மகள் ஆய்குலமாதேவியாயின முருகஞ்சேந்தியைத் திருவடி சார்த்த இவளுக்குக் குடியாக அட்டிக்குடுத்த பூ(மிவ)
3            ள்ளுவ நாட்டு மேற்கோட்டுப் பழங்கோப்பற்று செங்கணர் வந்தடி பல விதை பதினைங்கல வித்துப்பாடும் சாண்டன் தடி பலவிதை (நா)


முதலியார் ஓலை ஆவணங்கள்-ஆய்வு
வேணாட்டுப்பகுதியில் வணிகத்தொழிலில் ஈடுபட்டிருந்த நகரத்தார், பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் நகரத்தார் நிலையிலிருந்து வேளாண் நாட்டார் தலைவர்களாய் உருவானார்கள். அப்போது அவர்களுக்கு “முதலியார்என்னும் பட்டம் வழங்கப்பட்டிருக்கக் கூடும். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: இடைக்காலத்தில் சோழர் ஆட்சியில் அரசு/நாட்டு நிருவாகத்தில் இருந்த தலைவர்கள் முதலி, பிள்ளை ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர் என்பது கல்வெட்டுகள் வாயிலாகத் தெரியவரும் வரலாற்றுச் செய்திகளாகும்.) நாஞ்சில் நாட்டின் வடக்கே அழகிய பாண்டிபுரத்தில் வாழ்ந்த முதலியார்கள் பாதுகாத்த 600 ஓலை ஆவணங்களில் வேணாட்டு அரசுடனான தொடர்பு காணப்படுகிறது. இவ்வோலை ஆவணங்கள் 17,18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில், நிலவரி, வேளாண் குத்தகை, மதுரை நாயக்கர் படையெடுப்பு, மடங்கள், கோயில்கள், கட்டாய உழைப்பு, சாதிச் சடங்குகள், அடிமை முறை ஆகியவை பற்றிய பல்வேறு வரலாற்றுச் செய்திகள் உள்ளன. முதலியார் ஓலை ஆவணங்களின் முதன்மையை உணர்ந்த கவிமணி அவர்கள், அவற்றைத் திருவனந்தபுரம் ஆவணக்காப்பகத்தில் சேர்த்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார். ஒரு நூறு ஓலைகளைப் பெயர்த்தெழுதி வைத்தார். அரசு தொடர்பான 19 ஓலைகளைக் கேரள ஆய்வுக்ககழகத்தின் கட்டுரைத் தொகுப்பில் (Kerala Society Papers) வெளியிட்டு வரலாற்றுலகுக்குத் தெரியப்படுத்தினார்.
மேற்ப்டி 600 ஓலை ஆவணங்களும் தற்போது திருவனந்தபுரம் ஆவணப்பாதுகாப்பு மையத்தில் உள்ளன. கவிமணி அவர்கள் தம் குறிப்புகளில் இவ்வோலைகளை அழகியபாண்டியபுரம் பெரியவீட்டு முதலியார் வீட்டு ஆவணங்கள் என்று குறிப்பிடுகிறார். இதில் சிறப்பான கூறு என்னவெனில், இவ்வோலை ஆவணங்கள் மூன்று வகையில் எழுதப்பட்டவை. தமிழ் மொழி, தமிழ் எழுத்து; மலையாள மொழி, தமிழ் எழுத்து; தமிழ் மொழி, மலையாள எழுத்து ஆகிய வடிவங்களில் எழுதப்பட்டவை. இம்மூன்று வகை ஆவணங்களையும் முறையாக ஆய்ந்து அனைத்தையும் தமிழ் எழுத்து வடிவில் பெயர்த்த திறனாளர் கவிமணி அவர்கள்.


                     கவிமணி மண்டபத்தில் கவிமணியின் படம்    
   துணை நின்ற நூல்கள்:
1                        கவிமணியின் உரைமணிகள்-பாரி நிலையம் (மூன்றாம் பதிப்பு, ஜூலை, 1977.)
2                    முதலியார் ஓலைகள்-அ.கா.பெருமாள்-காலச்சுவடு பதிப்பகம்.(முதல் பதிப்பு, டிசம்பர், 2016.)


---------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.