காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்
முன்னுரை
வரலாற்று ஆர்வலரும் திருப்பூர் வீரராசேந்திரன் வரலாற்று மைய உறுப்பினருமான நண்பர் உடுமலை தென்கொங்கு சதாசிவம், தம்முடைய தொழிலில் ஈடுபடும் நேரம் போகக் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் வரலாற்றுத் தடயங்களைத் தேடிப் பயணப்பட்டுக்கொண்டே இருப்பவர். அவ்வாறான தேடல்களுள் ஒன்றில் தாராபுரம் அருகே, தாளக்கரை என்னும் ஊரில் வயல்வெளிகளுக்கிடையில் தனிக்கல் ஒன்றில் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார். அந்தக் கல்வெட்டைப் படித்துச் செய்திகளை அறிந்துகொள்ளும் ஆவலில் கல்வெட்டு பற்றிய தகவலைக் கட்டுரை ஆசிரியரிடம் (கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம், கோவை) பகிர்ந்துகொண்டதில் இருவரும் 17-12-2017 அன்று தாளக்கரை நோக்கிப் பயணப்பட்டோம். காங்கயம் கல்லூரியொன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வரலாற்று ஆர்வலர் ஆதிரை என்பவரும் காங்கயத்தில் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்டார். இப்பயணம், தாளக்கரைக் கல்வெட்டை ஆய்தல் என்ற நோக்கத்துடன் மட்டுமன்றி, வழியில் காங்கயத்திலிருந்து தாளக்கரை வரையிலுள்ள பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் தடயங்களைத் தேடும் ஒரு முயற்சியாகவும் அமைந்தது.
ஊதியூர் – சிவன் கோயில்
காங்கயத்திலிருந்து தாராபுரம் சாலையில் எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் ஊதியூர் என்னும் ஊரை அடைந்தோம். ஊதியூரில், மலைக்கோவில் ஒன்றுள்ளதை அறிந்திருந்தோம். எனவே, அதைப்பார்க்கும் எண்ணத்தில் ஊதியூரில் ஒரு நிறுத்தம். ஊருக்குள் ஒரு சிவன் கோயில். கைலாசநாதர் கோயில் என்னும் பெயருடையது. முகப்பில் கருட கம்பம் என்று வழங்கும் விளக்குத்தூண் உள்ளது. இந்த விளக்குத் தூணை நிறுவியவர் பெயரைக் கல்வெட்டாக ஒரு தூணின் சதுரப் பரப்பில் பொறித்து வைத்திருக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டுக் கட்டுமானம் (1851-ஆம் ஆண்டு) என்பதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
ஊதியூர் கைலாசநாதர் கோயில்
தூண் கல்வெட்டு
கல்வெட்டுப் பாடம் – தூணின் மேற்பகுதிச் சதுரம்:
1 கலியுக
2 சகார்த்
3 தம் 4
4 950
5 (ர்)
கல்வெட்டுப் பாடம் – தூணின் கீழ்ப்பகுதிச் சதுரம்:
1 விரோ
2 தி கிரிதி
3 வரு. உள்
4 ளூருக்க
5 வுண்டன்
6 மகன் ந
7 ல்ல குமா
8 ரக் கவுண்
9 ய
10 டன் உபம்
மேற்சதுரக் கல்வெட்டில், கலியுக ஆண்டு, தமிழ் எண்களுக்கான குறியீட்டெழுத்துகளால் குறிக்கப்பெற்றுள்ளது. கலியுக ஆண்டு 4950 என்பது வரை தெளிவான குறியீடுகள்; இறுதியில் ஒரு குறியீடு தெளிவாயில்லை. கலியாண்டு 4950-க்கு இணையான பொது ஆண்டு கி.பி. 1849 ஆகும். அடுத்து, கீழ்ச்சதுரத்தில், அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டுகளின் வியாழ வட்டத்தில் அமைந்த விரோதிகிருது ஆண்டு குறிக்கப்படுகிறது. கல்வெட்டில், சற்றுப்பிழையாக “விரோதிகிரிதி” என உள்ளது. (கல்வெட்டின் இறுதி வரியில், “உபயம்” என்பதைப் பிழையாக “உபம்” என்று எழுதிவிட்டுப் பின்னர் விடுபட்ட “ய” எழுத்தை “ம்” எழுத்துக்கு மேலே சேர்த்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க) விரோதிகிருது ஆண்டு, கி.பி. 1851-ஆம் ஆண்டில் ஏப்பிரல் மாதத்தில் பிறக்கிறது. கலியாண்டுக் குறிப்பில் இருக்கும் இறுதிக் குறியீட்டை “2” எனக்கொண்டால் கி.பி. 1851, விரோதிகிருது ஆகிய இரண்டும் பொருந்தி வருகின்றன. எனவே, உள்ளூரான ஊதியூரில் நல்ல குமாரக் கவுண்டன் இந்த விளக்குத் தூணை நூற்று அறுபத்தாறு (166) ஆண்டுகளுக்கு முன் கட்டுவித்தார் எனலாம். பயணத்தின் தொடக்கத்திலேயே நூறாண்டுகளுக்கு முந்தைய ஒரு கல்வெட்டு கிடைத்த மகிழ்ச்சி.
சிவன் கோயில், கல் கட்டுமானக் கோயிலாக இருந்தாலும் அதிட்டானத்தில் கல்வெட்டுகள் எவையும் காணப்படவில்லை. கருவறை, அர்த்தமண்டபச் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களும் கோட்டங்களும் அழகுற அமைந்துள்ளன. கருவறைச் சுவரில் கல் கட்டுமானத்தை மறைத்தவாறு தென்முகக் கடவுளுக்கு ஒரு கோட்டத்தைத் தற்காலம் எழுப்பிக் கோயிலின் தோற்றத்தை மாற்றியுள்ளனர். ஆனால், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்திச் சிற்பம் அழகாகவே அமைந்துள்ளது.
தட்சிணாமூர்த்திச் சிற்பம்
ஊதியூர் – முருகன் கோயில்
அடுத்து, மலைக்கோயிலுக்கு எங்கள் பயணம். மலையின்மீது ஏறப் படிக்கட்டுகள அமைத்திருக்கிறார்கள். படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில், மயிலுக்கு மேடையும் மண்டபமும் அமைத்திருக்கிறார்கள். ஒரு பத்து நிமிடக் காலத்தில் மலைக்கோயிலை அடைந்தோம்.
மலைக்கோயிலுக்கான படிகள்
மலைக்கோயில்
பிள்ளையார் பாறைச் சிற்பம்
மலை ஏறுகையில், பாறையில் ஒரு பிள்ளையார் சிற்பம் புடைப்புருவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அருகிலேயே, இடும்பனுக்குத் தனிக்கோயில் ஒன்றும் உள்ளது. மலைக்கோயிலில், மயிலுக்கு ஒரு மண்டபம் உண்டு. மலைக்கோயிலில் முருகன், உத்தண்ட வேலாயுதசாமி என்னும் பெயரில் எழுந்தருளியிருக்கிறார். கோயில், கல் கட்டுமானம் கொண்டது. ஆனால், இங்கும் கல்வெட்டுகள் காணப்படவில்லை. கோயிலின் சுவர்க் கோட்டங்களின் தலைப்பகுதியில் அமைந்துள்ள சிங்கமுகத் தோரணத்துடன் கூடிய பகுதியில் நடுவில் மனிதமுகம் அமைந்திருக்கிறது, இந்த மனித முக அமைப்பைப் பேரூர், அவிநாசி, இடிகரை, பரஞ்சேர்வழி ஆகிய பல கோயில்களில் காணலாம்..
கோட்டத்தில் தோரணம்-மனித முகத்துடன்
பரஞ்சேர்வழிக் கோயிலில் தோரணத்து முகம்
மயில் மண்டபத்தின் தூணில் கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் பாடம் கீழ்க்காணுமாறு:
தூண் கல்வெட்டு
ஒரு தூணின் மேற்சதுரம்
1 கலியுக சகா
2 ப்தம் 49
3 98
4 துன்முகி வரு. சித்தி
இரண்டாவது தூணின் மேற்சதுரம்
1 றை மாசம்
2 13 தேதி னா
3 கரச நல்லூ
4 ரு செம்பூற்றா
5 திபன் சிவன்
இரண்டாவது தூணின் மேற்சதுரம், கீழ்சதுரம் இரண்டனுக்கும் இடைப்பகுதி
1 மலை
2 க்கவு
3 ண்டர்
இரண்டாவது தூணின் கீழ்சதுரம்
1 குமார
2 ன் றா
3 ம சாமிக் கவுண்
4 டன் மயில்வா
5 கனக் குரடு
6 உபயம்
இந்தக் கல்வெட்டிலும், கலியுக ஆண்டு, தமிழ் எண்களுக்கான குறியீட்டெழுத்துகளால் குறிக்கப்பெற்றுள்ளது. கலியுக ஆண்டு 4998, பொது ஆண்டான கி.பி. 1897-ஆம் ஆண்டில் அமைகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் தமிழ் வட்ட ஆண்டான துன்முகி ஆண்டு, ஆங்கில ஆண்டுடன் பொருந்துகிறது. எனவே, 1897-ஆம் ஆண்டு துன்முகி, சித்திரை மாதம் 13-ஆம் நாள் நாகரச நல்லூரைச் சேர்ந்த செம்பூற்றுக் குலத்தலைவராகிய சிவன் மலைக்கவுண்டர் மகன் இராமசாமிக் கவுண்டர் மயில்வாகனக் குறடு கட்டுவித்தார் என்பது கல்வெட்டுச் செய்தி. கோயிலின் நுழைவாயிலில் இருக்கும் திண்ணை அமைப்பினைக் குறடு என்று குறிப்பிடுவர். இங்கே, மயில் வாகனத்துக்கு மேடையுடன் கூடிய மண்டபமும் குறடு என்னும் பெயர் பெற்றது. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நாகரச நல்லூர் என்னும் ஊர் ஊதியூரைச் சுற்றியுள்ள பகுதியில் எங்காவது இருக்கலாம். அல்லது, ஊதியூரின் பழம்பெயரே நாகரச நல்லூர் ஆக இருக்கலாம். சான்றுகள் தேவை. இணையத்தில் தேடுகையில் நாகரச நல்லூர் என்னும் பெயரில் ஊர்க் குறிப்பு கிட்டவில்லை.
செட்டித்தம்பிரான் சித்தர் கோயில்
மலைக்கோயிலிலிருந்து ஒரு பதினைந்து நிமிடப்பயணத்தில் அமைந்துள்ளது செட்டித்தம்பிரான் ஜீவ ஜோதி என்னும் பெயரமைந்த கோயில். இவர், கொங்கணச் சித்த்ரின் சீடர் என்று கருதப்படுகிறது. கொங்கணச் சித்தர், இந்த ஊதியூர் மலைக் குகைகளில் தங்கியிருந்துள்ளார் என்றும், செட்டித்தம்பிரானும் இவரது சீடராக இங்கே தங்கியிருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கொங்கணச் சித்தர் இங்கு, களிமண்ணைக் கொண்டு குழாய்கள் செய்து அவற்றின் மேல் மூலிகைச் சாற்றினைப் பூசித் தம் வாயால் ஊதி எடுக்கும்போது அக்குழாய்கள் பொன்னாக மாறிவிட்டிருக்கும் என்பது மக்களிடையே வழங்கும் தொன்மப் புனைவு. இதனாலேயே, இந்த மலைக்குப் பொன் ஊதி மலை என்று பெயர் வழங்குவதாயிற்று என்பர். செட்டித்தம்பிரான் கோயில், இயற்கையாய் அமைந்த ஒரு கோயில். மிகப்பெரிதாய் இரண்டு பாறைகள்-உருண்டை வடிவிலானவை- ஒன்றன்மேலொன்று சாய்ந்து நிற்கையில் இடையே உருவான இயற்கைத் தரைத்தளமே கோயிலாக மாறியுள்ளது. முன்புறத்தே பாறைகள் ஏற்படுத்திய நுழைவுப்பகுதியில் நுழைந்து உள்ளே சென்றால் பெரிய அறைபோல் விளங்குமாறு உட்புறப் பாறைப்பகுதியைச் சிறிய உயரமுள்ள சுவர் கொண்டு இணைத்திருக்கிறார்கள். பீடம் ஒன்று அமைத்து அதன்மேல் சித்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அவருக்கு முன்புறம், வாலாம்பிகை என்னும் பெயர் கொண்ட பெண் தெய்வச் சிற்பம் ஒன்று உள்ளது. மற்றொரு பீடத்தில் சிறியதொரு லிங்கச் சிற்பமும் உண்டு. அருகில் சீரடி சாய்பாபா உருவச் சிலையும் காணப்படுகிறது. ஒரு பெண்மணியின் கனவில் சொல்லப்பட்ட அடையாளங்களைக்கொண்டு, இந்த மலைப்பகுதியில் தேடிக் கண்டெடுத்து நிறுவப்பட்டதே இந்த வாலாம்பிகைப் பெண் தெய்வம் என்று ஒரு வழக்கு.
செட்டித் தம்பிரான் சித்தர் கோயில்
செட்டித் தம்பிரான் சித்தர் கோயில் உட்புறத்தோற்றம்
செட்டித்தம்பிரான் தியானக்குடில்
தம்பிரான் சிற்பம் வணங்கப்படும் பாறைக்கூட்டின் அருகில் இன்னொரு பாறைக்கூடு. அங்கு அமைந்த சிறிய குகைத் தளம், தம்பிரான் சித்தர் தியானம் செய்த இடமாகக் கூறப்ப்டுகிறது.
தியானக்குடில்
கொங்கணச் சித்தர் கோயிலும் உச்சிப்பிள்ளையார் கோயிலும்
செட்டித்தம்பிரான் கோயிலுக்கும் மேலே மலை உச்சிக்குச் சென்றால் அங்கே கொங்கணச் சித்தரின் கோயிலும், உச்சிப்பிள்ளையார் கோயிலும் உள்ளன. நேரக்குறைவு கருதி நாங்கள் மலை உச்சி ஏறவில்லை. ஆனால், அங்கு போகும் வழியில், சில சிற்பங்களும், நடுகற்களும் காணப்பட்டன என்று இணையப் பதிவு ஒன்று குறிப்பிடுகிறது (travel.bhusahvali.com).
ஊதிமலையும் ஆஞ்சனேயரும்
இராமயணக்கதையில், இராவணனால் தாக்குண்டு உயிர் போகின்ற நிலையில் இருந்த இலக்குவனைக் காப்பாற்ற ஆஞ்சனேயர் சஞ்சீவி மூலிகையுள்ள சஞ்சீவி மலையைக் கயிலாயத்திலிருந்து இலங்கைக்கு தூக்கிச் சென்ற பாதையில் ஓரிரு இடங்களில் சஞ்சீவி மலையின் துண்டுகள் கீழே விழுந்தன என்றும், அவ்வாறு விழுந்த இடங்களில் இந்த ஊதி மலையும் ஒன்று என்பதும், அதன் காரணமாகவே இம்மலை சஞ்சீவி என்னும் பெயரையும் பெற்றிருக்கிறது என்பதும் செவிவழிக்கதைகள்.
தாளக்கரை நோக்கி
அடுத்து நாங்கள் தாளக்கரை நோக்கிப் பயணமானோம். காங்கயம் – தாராபுரம் சாலையில் ஒரு பிரிவுச் சாலை வழி சென்றால் தாளக்கரை. வழியில் நல்லி மடம் என்று ஓர் ஊர். தாளக்கரையில், அமராவதி ஆறும், உப்பாறும் கூடுமிடத்தில் உப்பாற்றுப் பாலம் உள்ளது. பயணம் இங்கு முடிந்தது. பாலத்திற்கப்பால், வயல்வெளியில் வரப்புகளினூடே நடந்து சென்றோம்.
வயல்வரப்புகளினூடே பயணம்
வயல்வெளியில் ஒரு கல்வெட்டு
வயல்வெளியில் ஐந்து, ஐந்தரை அடி உயரமும், இரண்டு அடி அகலமும், ஓரடிப் பருமனும் உள்ள கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. கல்லின் அனைத்துப் பக்கங்களிலும் எழுத்துகள் இருந்தன. நண்பர் சதாசிவம் ஏற்கெனவே ஒரு பக்கத்துக் கல்வெட்டினை ஒளிப்படம் எடுத்து வைத்திருந்தார். இன்று நாங்கள் பார்க்கையில் கல் புரட்டப்பெற்ற நிலையில் படிக்கப்படாத மற்றொரு பக்கம் மேல் பகுதியாய் உள்ளவாறு கல், வயல் தரையில் கிட்த்தப்பட்டிருந்தது. இயல்பு நிலையில் எழுத்துகளைப்படிக்க இயலவில்லையாதலால், எழுத்துப்பரப்பின் மாவு பூசிப்படித்தோம்.
கல்வெட்டுச் செய்திகள்
இன்றுள்ள பவானிசாகர் அணைப்பகுதி முன்பு டணாயக்கன் கோட்டையாக இருந்தது. அங்கு, ஹொய்சள அரசன் மூன்றாம் வீர வல்லாளன் காலத்தில், அவன் சார்பாகக் கொங்குப்பகுதிக்கு ஆளுநராக இருந்த வீர சிக்கைய தண்டநாயக்கன், டணாயக்கன் கோட்டையில் அமைந்திருந்த மாதவப்பெருமாள் கோயிலுக்கு அரசன் சார்பாக அஞ்சாத நல்லூர் என்னும் ஊரைக் கொடையாக அளித்தான். இந்தக் கொடையை உறுதி செய்து நரையனூர் நாட்டவர் கல்லில் வெட்டிவைத்துள்ளனர். கல்வெட்டின் காலம், கல்வெட்டில் குறித்தபடி கி.பி. 1326-1327 ஆகும். ஏறக்குறைய எழுநூறு (700) ஆண்டுகள் பழமையான கல்வெட்டு. கல்வெட்டின் பாடம் மற்றும் கல்வெட்டு மூலம் தெரியவரும் வரலாற்றுச் செய்திகளை விரிவாகத் தனிக்கட்டுரையில் காணலாம். (கட்டுரையின் பெயர்: தாளக்கரை வயல் கல்வெட்டில் டணாயக்கன்கோட்டை)
கொளத்துப்பாளையம் ஏரியும் மதகும்
தாளக்கரைக் கல்வெட்டைப் பார்த்துப் படித்துத் திரும்பும் வழியில், கொளத்துப்பாளையம் என்னும் ஊரில் கல்லாலான ஒரு பழங்கால மதகினைக் கண்டோம். சாலையினின்றும் உள்ளடங்கிய நிலையில், வயல்களுக்கிடையே மதகு இருந்தது. மீண்டும் வயல் வரப்பினூடே நடந்து சென்று மதகை அடைந்தோம். மதகில் கல்வெட்டு எதுவுமில்லை. சற்று ஏமாற்றமே. இருப்பினும், களப்பணியில் பழங்கால மதகு ஒன்றைக் கண்டறிந்தது எங்களின் வரலாற்றுத் தேடலில் ஒரு வரவு என்று நிறைவுகொண்டோம். சாலையோரம் ஒரு சிறிய பழங்கோயில் இருந்தது. எளிமையாகத் தோற்றமளித்த அக்கோயிலைப் பற்றி அங்கிருந்த முதியவர் ஒருவரிடம் கேட்டபோது, அவர், அக்கோயில், ஏரிக்கருப்பன் கோயில் என்றார். ஒரு காலத்தில் இங்கு ஏரி இருந்தமைக்கு ஏரிக்கருப்பன் கோயிலும் மதகுமே சான்றுகள் என்பது உறுதியாயிற்று. கொளத்துப்பாளையம் ஊரின் பெயர்க்காரணமும் விளக்கமுற்றது. ஏரி காணாமல்போய் தற்போது வயல்கள் மட்டுமே காணப்படுகின்றன.
மதகு
ஏரிக்கருப்பன் கோயில்
பழங்காலச் சத்திரம்
கொளத்துப்பாளையத்திலிருந்து சற்றுத் தொலைவு பயணத்தில், சாலையின் ஒரு புறம் பழங்கால மண்டபம் ஒன்றைக் கண்ணுற்றோம். சாலையை அடுத்து ஒரு சோளக்காட்டுக்குள் காணப்பட்ட அந்த மண்டபம் பாழடைந்த நிலையில், அணுகவே அச்சம் தரும் நிலையில் இருந்தது. இருப்பினும் நண்பர் தந்த ஊக்கத்தில் சோளப்பயிர்களினூடே சிறு சிறு காட்டுச் செடிகளுக்கிடையில் தடம் பதித்து (காலுக்கடியில் பாம்புகள் கூடத் தட்டுப்படலாம் என்னும் அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன்) நடந்தோம். மண்டபத்தைச் சுற்றிலும் செடிகள் மண்டிக்கிடந்தன. மண்டபத்தின் உள்ளே தரைப் பகுதியில் புற்றும் வளர்ந்திருந்தது. பழங்காலப் பெருவழிகளில் ஒன்றாக இப்பகுதி இருந்திருக்கவேண்டும். இந்த மண்டபம் ஒரு சத்திரமாக இயங்கியிருக்கவேண்டும். நண்பர் மண்டபத்தைச் சுற்றியும் வந்து ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்துவிட்டார். மண்டபச் சுவரின் கட்டுமானத்தில் ஒரு கல்லில் எழுத்துப் பொறிப்பு இருந்தது. எழுத்தமைதியும் கல்வெட்டில் இருந்த சொற்றொடரும் கல்வெட்டு, 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை உணர்த்திற்று. வேறெங்கேயோ ஓரிடத்தில் கோயிலில் இருந்த கற்களை இங்கு கொணர்ந்து மண்டபத்தை எழுப்பியுள்ளனர் என்று கருதலாம். அவற்றில், கல்வெட்டுடன் கூடிய ஒரு கல் எங்களுக்குக் கிட்டியது தொல்லியல் தடயங்களின் எங்கள் தேடலுக்கு இன்னொரு வரவு என்பதில் ஐயமில்லை. மண்டபம் தற்போது சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் வசம் இருப்பதாகத் தெரிகிறது.
பாழடைந்த சத்திர மண்டபம்
கல்வெட்டுள்ள துண்டுக்கல்
(சிவப்பு வளையத்துள் கல்வெட்டு)
கல்வெட்டு
கல்வெட்டின் பாடம்
1 ற்கு யாண்டு மூன்
2 (உ)மைச்சியேந் ஆளு
3 ழுந்தரு(ளி)விச்ச (இ)வற்கு
4 நன்றாக வைச்ச விளக்கு
பெரும்பாலும் கொங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் மிகுதியாக உள்ள இப்பகுதியில், கல்வெட்டுகளில் அரசனையும் அரசனின் ஆட்சியாண்டையும் குறிக்கும் தொடர் “தேவற்கு யாண்டு ...ஆவது” என அமைவது வழக்கம். இந்தக் கல்வெட்டிலும் அவ்வகைத் தொடர் காணப்படுகிறது. அரசனின் ஆட்சியாண்டு மூன்று என்பது தெளிவு. ”ஆளு” என்னும் முழுமை பெறாத சொல் “ஆளுடையார்” என்பதன் குறைப்பகுதியாகும். இத்தொடர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் குறிக்கும் தொடராகும். எனவே, ஒரு கோயிலைப் பற்றிய குறிப்பு பெறப்படுகிறது. மூன்றாவது வரியில் உள்ள ”ழுந்தரு(ளி)விச்ச (இ)வற்கு” என்னும் தொடர் கோயிலில் ஒரு தெய்வத்துக்குச் சன்னதி ஏற்படுத்திய செய்தியைக் குறிக்கும். சிவன் கோயில் ஒன்றில் ஒரு பிள்ளையாரையோ, இளைய பிள்ளையாரையோ (முருகன்), க்ஷேத்திரபாலப் பிள்ளையாரையோ எழுந்தருளுவித்தல் வழக்கம். அவ்வாறான ஒரு கடவுளை எழுந்தருளுவித்ததை மேற்படி தொடர் குறிக்கிறது. நன்றாக என்னும் சொல் ஒருவர் நலனுக்காக என்று பொருள் தரும். வைச்ச விளக்கு என்னும் தொடர், கோயிலுக்கு நந்தாவிளக்கு கொடையாக அளிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. கொடையாளியின் பெயர் ‘உமை’ (உமைச்சி) என்பதாகலாம். எனவே, உமை என்பவர், தமக்கு உறவான வேறொருவரின் நலனுக்காகக் கோயிலின் ஒரு சன்னதிக்கு விளக்குக் கொடையை அளித்துள்ளார் என்பது கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.
நீலம்பூர் காளியம்மன் கோயில்
ஊர் திரும்பும் இறுதிக்கட்டத்தில் நீலம்பூர் காளியம்மன் கோயிலுக்குச் சென்றோம். பிற்காலக் கல்வெட்டு (நூறாண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் கல்வெட்டு) ஏதேனும் கிடைக்கலாம் என்று பார்வையிட்டோம். ஆனால், கல்வெட்டு கிடைக்கவில்லை. கோயில் கற்றளியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பலர் கொடையளித்த த்ற்காலக் கல்வெட்டுகள் காணப்பட்டன. அவற்றில், ஈஞ்ச குலம், நீல குலம், சேரன் குலம் ஆகிய குலங்களைச் சேர்ந்த வெள்ளாளக் கவுண்டர்கள் கொடை அளித்த செய்திகள் உள்ளன. கொங்குப்பகுதியில், 12-ஆம் நூஊற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழர் கல்வெட்டுகளில் வெள்ளாளர் கொடை பற்றிய செய்திகள் நிறையக் காணப்படுகின்றன. அவற்றில் குலப்பெயர்கள் தவறாது இடம்பெறுவதைக் காண்கிறோம். மேலும், அக்கல்வெட்டுகளில் “காணியுடைய” என்று பயில்வதைக் காணலாம். அது போன்ற, ”காணியாளர்” என்னும் ஒரு தொடரும் தற்போதைய கல்வெட்டொன்றில் காணப்பட்டது. பழைய மரபு த்ற்போதும் தொடர்கிறது எனலாம்.
உவச்சர்
சோழர் காலக் கல்வெட்டுகளில், உவச்சர் என்போர் பற்றி நிறையக் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மத்தளம், காளம் முதலிய இசைக்கருவிகளைக் கோயிலில் இசைக்கும் இசைக்கலைஞர்கள் உவச்சர் எனப்பட்டனர். கல்வெட்டுகளில் இசை என்பது கொட்டு என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இவர்களின் இசைப்பணியைக் கல்வெட்டுகள் “உவச்சு, உவச்சுப்பணி” என்று குறிப்பிடுகின்றன. உவச்சர்களுக்குக் கோயில் சார்பாக நிலம் மானியமாகக் கொடுக்கப்பட்டது. இதை “உவச்ச விருத்தி”, “உவச்சுப்புறம்” ஆகிய கல்வெட்டுச் சொற்கள் சுட்டுகின்றன. உவச்சர், பின்னாளில் பூசையாளராகவும் பணியாற்றியுள்ளனர். உவச்சர் என்னும் பழைய மரபுப் பெயர் இக்காலத்தும் தொடர்கிறது. இன்றும் உவச்சர் என்னும் சமுதாயப் பிரிவினர் உள்ளனர். அவ்வாறான உவச்சர் ஒருவர் இக்கோயிலில் பூசையாளராக இருப்பதை அறிந்தோம். பல தலைமுறைகளாகப் பூசைத் தொழிலை மரபாகக் கொண்டுள்ள உவச்சப்பூசையாளர்கள் இக்கோயிலில் பணி செய்கின்றனர். அவர்கள் இக்கோயிலில் அங்காள பரமேசுவரி திருக்கோயிலை எடுப்பித்தார்கள் என்னும் செய்தியை ஒரு கல்வெட்டு தாங்கி நிற்கிறது.
உவச்சர் பற்றிய கல்வெட்டு
முடிவுரை
வளமான ஆற்றங்கரைப் பகுதிகளில் நகரம், நாகரிகம், கோயில்கள், வேளாண்மை ஆகிய பல்வேறு பின்புலங்களில் வரலாற்றுத் தடயங்கள் நிறையக் காணப்படும். அவ்வகையில், அமராவதி ஆற்றினை ஒட்டித் தொல்லியல் தடயங்கள் இருப்பது மிக இயல்பு. கடந்த காலங்களில் இப்பகுதியில் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இன்றளவில், எங்கள் தேடுதலிலும் சில தடயங்கள் கிட்டியுள்ளன. ஒரு கோயிலுக்குத் தொலைவில் அமைந்துள்ள ஊரின் வளமான நிலம் அக்கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்பட்டது, ஏரிகளும் குளங்களும் அமைத்து வேளாண்மைக்கு முதன்மை இடம் அளித்தமை, அந்த ஏரி குளங்களைப் பாதுகாப்பதில் மக்கள் இறை நம்பிக்கையும் பங்குபெற்ற நாட்டார் மரபு, இடைக்காலச் சூழலில் நிலவிய சமுதாய மரபுகளான காணியுடைமை, உவச்சுப்பணி ஆகியன இன்றளவும் தொடரும் நிலை ஆகியன எமது தேடல் பயணத்தில் அறிய வந்தன. பழங்கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் ஆகியனவற்றைப் பாதுகாப்பதில் தொல்லியல் துறை முனைப்புக் காட்டவேண்டும். தாளக்கரையில் உள்ள போசளர் காலத்துக் கல்வெட்டினை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.
-------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.