மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 17 ஜூன், 2015இராசகேசரிப்பெருவழி
( The Rajakesari Highway)


முன்னுரை

இன்றைய நாளில் தமிழகத்தில் போக்குவரத்துக்குப் பயன்படுகின்ற சாலைகள் பல நெடுஞ்சாலைகள் என்னும் பேராலமைந்துள்ளன.  இவ்வகையான சாலைகள் சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன. கொங்கு நாட்டிலும் அவ்வாறான பெருஞ்சாலைகள் பல இருந்துள்ளன. இந்த நெடுஞ்சாலைகளைப் பண்டைய நாளில் பெருவழி என்னும் பெயரால் வழங்கிவந்தனர். தமிழகத்தின் மிகப்பழமையான பெருவழி என்று அறியப்படும் “இராசகேசரிப்பெருவழிகொங்கு நாட்டில் அமைந்திருந்தது கொங்கு நாட்டின் பழமைக்கும் பெருமைக்கும் சான்றாகும். இராசகேசரிப்பெருவழி இந்திய நாட்டிலேயே மிகப்பழமையான சாலை என்று தொல்லியலார் கருதுகின்றனர்.

தொல்லியல் பற்றியும், கல்வெட்டுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர்களும், தொல்லியல் ஆர்வலர்களும், தொல்லியல் வகுப்பில் படிப்போரும் இராசகேசரிப்பெருவழியைப் பற்றி அறியாமல் இருக்கமாட்டார். அந்தப்பெருவழியையும் அங்குள்ள கல்வெட்டையும் ஒருமுறையேனும் காணும் வாய்ப்பு கிட்டாதா என எண்ணாமலும் இரார். ஆனால் வரலாற்றுச்சிறப்புப்பெற்ற அப்பெருவழியையும் கல்வெட்டையும் கண்டவர் எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பர். காரணம் அது கொங்கு நாட்டில் கோவைக்கருகே பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதுதான். எளிதில் போய்வர இயலாது. Reserve Forest என்னும் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் அது அமைந்துள்ளது. வனத்துறையின் ஒப்புகையின்றிச் சென்றுவருதல் இயலாது. எனவே, தகுந்த முன்னேற்பாடும், பாதுகாப்பான வழித்துணையும் இன்றியமையாதவை. வனவிலங்குகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையும் நேரிடலாம். துணிவும் அச்சமும் இணைந்தே நம்மை அழைத்துச்செல்லும் பயணம் அது.

இராசகேசரிப்பெருவழி நோக்கி ஒரு பயணம்

நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர் தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால் இராசகேசரிப்பெருவழியைப் பார்க்கும் ஆவலும் விருப்பமும் கூடிக்கொண்டே சென்றதில் வியப்பேதுமில்லை. அத்தகைய பெருவழியைக் காண்பதற்கான ஒரு வாய்ப்பு அமைந்தது. கோவையில் இயங்கும் வாணவராயர் அறக்கட்டளை இராசகேசரிப்பெருவழியைக் காணச்செல்லும் ஒரு பயணத்தைச் சென்றமாதம் திட்டமிட்டது.  இப்பயணத்திட்டத்தை அறிவித்து, 14-06-2015 அன்று பயணம் மேற்கொள்வதென முடிவு செய்து  நடைமுறைப்படுத்தியது.

இவ்வரிய பயண அனுபவத்தை (அனுபவம் என்னும் வடசொல்லை நீக்கி அழகியதொரு தமிழ்ச்சொல்லைப் பயிலவேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா.  நுகர்வு என்னும் சொல் நினைவுக்கு வந்தாலும் அது ஏற்றதுதானா என ஓர் ஐயம்.  ஏற்றதொரு சொல்லை இங்கு யாரேனும் சுட்டினால் நன்றி சொல்வேன்.)

இராசகேசரிப்பெருவழித் தொல்லியல் பயணத்தில் கலந்துகொள்ள  நாற்பதுக்கும் மேற்பட்ட பேர் விருப்பம் தெரிவித்ததோடு பயண நாளன்று வாணவராயர் அறக்கட்டளையின் புரந்தரதாசர் கலையரங்கத்தில் கூடவும் செய்தனர். காலை பத்து மணியளவில் பயணம் தொடங்கியது. பயணத்திற்காக ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பயணத்தின் சிறப்பு என்னவெனில் இராசகேசரிப்பெருவழியைக் கண்டுபிடித்த தொல்லியல் அறிஞர் திரு பூங்குன்றன் அவர்களே இப்பயணத்தின் தலைமை ஏற்று, தொல்லியல் செய்திகளை வழங்கியமைதான்.  பயணவழியில் பேரூர் அமைந்துள்ளதால், பேரூர் பட்டீசுவரர் கோயிலுக்குள் நுழைந்து கல்வெட்டுகளை ஒரு முன்னோட்டப்பார்வையாகக் கண்டு செல்லலாம் என விழைந்தோம். அவ்வாறே, கோயிலுக்குள் சென்று நடராசர் பொன்னவையின் சுற்றாலையில் குழுமினோம். பூங்குன்றன் அவர்கள் பேரூர்க் கோயிலைப்பற்றிய சிறு முன்னுரை நல்கினார்.

பேரூர்க்கோயில்

பேரூர் தொன்மையான ஓர் ஊராகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் பேரூரைப்பற்றிய குறிப்பு உண்டு. இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலச் சின்னமான முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மற்ற இடங்களில் கிடைத்த தாழிகளினின்றும் இவை மாறுபட்டவை. அரிதானவை. இத்தாழிகள் உட்புறத்தில் கருமை வண்ணமும் வெளிப்புறத்தில் சிவப்பு வண்ணமும் கொண்டவை. இங்கே தாழி என்பது ஓர் உள்ளுறைப்பொருளின் உருவகமாக விளங்குகிறது. மனிதனின் தோற்றம் பெண்ணின் கருவறையில் அமைவது போன்று அவனது இறப்பும் ஓர் அறைக்குள் காணப்படவேண்டும் என்னும் குறிப்புத்தோன்ற இறந்த உடல் தாழிக்குள் இடப்பட்டுப் புதைக்கப்பட்டது.

பாசுபதம்

பேரூர்ப்பகுதியில் சைவ சமயத்தின் தீவிரவாதப்பிரிவுகளில் ஒன்றான பாசுபதம் பரவியிருந்துள்ளது. இதற்குச் சான்றாக, பேரூர் அகழாய்வில் இலகுலீசர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது அச்சிற்பம் கோவை அகழ்வைப்பகத்தில் காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.  கோயிலுக்குச் சற்றுத்தொலைவில் இருக்கும் அன்னையர் எழுவர் (சப்தமாதர்) சிற்பத்தொகுதி பாசுபதச் சைவத்தோடு தொடர்புடையது. கோயில் கி.பி. 11-ஆம் நூற்றண்டில் கட்டப்பட்டதாகும். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் மற்றும் சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தாலும், சங்க காலத்திலிருந்தே கொங்குப்பகுதி நேரடி மன்னராட்சியில் இல்லாது, வேளிர் தலைவர்களாலும் ஊர்ச்சபைகளாலும் ஆளப்பட்டுவந்துள்ளது.

கோயிலின் நடராசர் பொன்னவை கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் மதுரை அழகாத்திரி நாயக்கரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிற்பங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை.

காஞ்சி ஆறும் தேவி சிறை அணையும்

பேரூர்க் கோயில் நொய்யலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நொய்யலாறு சங்ககால நூலான பதிற்றுப்பத்தில் காஞ்சி ஆறு எனக்குறிப்பிடப்படுகிறது. காஞ்சிவாய்ப்பேரூரில் குன்றம் அனையதோர் விண்ணகரம் (வைணவக்கோயில்) எழுப்பப்பட்டதை பாண்டியர் செப்பேடு ஒன்று குறிப்பிடுகிறது. கோயிலின் வடபுறச்சுவர்ப்பகுதியில் இருக்கும் ஒரு கல்வெட்டினைக் காட்டிய முனைவர் பூங்குன்றன் அவர்கள் அதன் சிறப்புக் கூற்றினை விளக்கினார். கி.பி. 1224-ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு கொங்குச்சோழன் வீரராசேந்திரனின் பதினேழாம் ஆட்சியாண்டுக்காலத்தது. பண்டைய நாளில் நீர் மேலாண்மை எத்துணைச் சிறப்பாக நடைபெற்றது என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழ்கிறது. நொய்யலாற்றின் குறுக்கே தேவிசிறை என்ற அணை கட்டப்பெற்றதைக் குறிப்பிடும் கல்வெட்டு, தேவிசிறையில் நீரைத் தேக்கும்போது ஏற்கெனவே இவ்வணைக்குக் கீழே அமைந்துள்ள கோளூர் அணை நிரம்பிய பின்னரே தேக்கவேண்டும் என்று அரசன் ஆணையிட்டதைச் சொல்லுகிறது. இதுபோன்ற நீர் மேலாண்மையை இன்றைய அரசுகள் கடைப்பிடித்தால் வேளாண்மை மேம்படுவதோடு நீரால் நிகழும் பூசல்கள் ஒடுங்கும். 

காட்டுக்குள் பயணம்

பேரூர்க்கோயிலிலிருந்து பயணம் தொடர்ந்தது. கோவைப்புதூரைக் கடந்து அறிவொளி நகர் என்னும் பகுதிவரை சென்று பேருந்தை நிறுத்திவிட்டு மேலே வனப்பகுதியை நோக்கி நடைப்பயணத்தை மேற்கொண்டோம். அறிவொளி நகரிலிருந்தே மலைப்பாங்கான மேட்டு நிலம் காணப்பட்டது.  வனத்துறை அலுவலர் ஒருவர் உடன் வந்திருந்தார். வனம் பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். வனப்பகுதியில் என்னென்ன பொருள்களை எடுத்துப்போகக்கூடாது என்னும் குறிப்பைத் தந்ததோடு காட்டுப்பாதையில் ஓசை எழுப்பாமல் அமைதி காத்துச் செல்லவேண்டும் என அறிவுறுத்தினார். வனத்துள் யானையை எதிர்கொள்ளும் சூழல் எக்கணமும் நிகழக்கூடும் என்னும் இடர்ப்பாடு பற்றிய விழிப்புணர்வோடு முன்னே நடக்கலாம்; அச்சம் கொண்டவர் மேலே பயணத்தைத் தொடரவேண்டுவதில்லை என்று அவர் அறிவுறுத்தியும் அனைவரும் ஒருமித்துச் செல்ல முடிவெடுத்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் யானையால் இடர்ப்பாடு நேர்ந்துவிடுமோ என்னும் அச்சம் மேலோங்கி நின்றாலும்  வரலாற்றுக்காலப் பெருவழியையும் அரியதொரு கல்வெட்டையும் காணப்போகும் ஆவல் தந்த துணிவு எங்களை முன்னே நடத்திச்சென்றது.  அதனாலேயே கட்டுரையின் தொடக்கத்தில் “துணிவும் அச்சமும் இணைந்தே நம்மை அழைத்துச்செல்லும் பயணம் அது.  எனக் குறிப்பிட்டேன்.

பயணத்தின் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இல்லை. சிறிது தொலைவு பாதை புதர்களும் காட்டுச்செடிகொடிகளும் அடர்ந்திராமல் சற்றே வெளி நிலத்தோடு சென்றது. போகப்போக, பாதை ஒற்றையடிப்பாதையாகக் குறுக்கம் பெற்றுச் செடிகொடிகளும் புதர்களும் இனம்தெரியாச் சிறுமரங்களும் கள்ளிச்செடிகளும் முள்செடிகளும் நெருங்கி, வனம் என்றால் எப்படியிருக்கும் என்பதை நமக்குணர்த்தியது. நமக்கு முன்னேயும், பக்கவாட்டிலும் ஆளுயரத்துக்கு நெருங்கி நிற்கும் மரப்புதர்களுக்கிடையில் விலங்குகள் எவையேனும் இருந்தால்கூடப் பார்வைக்குப்புலப்படா. இடையிடையே முள்செடிகளையும் முள் மரங்களின் கிளைகளையும் ஒதுக்கி ஒதுக்கிச் செல்லவேண்டிய சூழ்நிலை. அப்படியும் முள் நிறைந்த சிறு கிளைகள் நம்மைத் தீண்டிக் கீறல்களை விளைத்தன. பெண்டிர் சிலருக்குத் தம் சீலைகளை முள்ளிலிருந்து  கிழியாவண்ணம் விலக்கி எடுத்துக்கொண்டே பயணப்படவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. வெயிலும் சிறிது சிறிதாக எரிக்கத்தொடங்கியது.  

பயணத்தின் தொடக்கத்தில் சிறிது தொலைவு சென்றதும் அகன்ற பாறைப்பகுதி தென்பட்டது. அதில் சிறிய குளம் போன்ற சுனை நீர்த் தேக்கம் இருந்தது. அல்லியை ஒத்த இலைகள் படர்ந்திருந்தன. பாறைப்பரப்பில் ஓரிடத்தில் ஆட்டுரல்போலக் கற்குழி   வெட்டப்பட்டிருந்தது. பண்டைய நாளில் பெருவழி பயன்பாட்டில் இருந்தபோது அரசகுலப்பயணிகளும் வணிக குலப்பயணிகளும் நீர்த்தேவைக்காக இங்கே ஓய்வெடுத்திருக்கலாம் என்றும் நெல் குத்தவோ மாவிடிக்கவோ கற்குழி பயன்பட்டிருக்கவேண்டும் என்றும் கருத்துகள் பரிமாறிக்கொண்டோம். அருகிலேயே சுமைதாங்கிக் கற்கள் சிதறிக்கிடந்தன. சில ஆண்டுகள் முன்புவரை இச்சுமைதாங்கிகற்கள் அவற்றின் முழுத்தோற்றத்துடன் அமைந்திருந்தன எனக்கூறினர். அடுத்து நாங்கள் எதிர்கொண்டது ஒரு சிறிய தடுப்பணை போன்ற தோற்றத்தில் ஒரு நீர் நிலை. செம்மண் கலந்து குழம்பிய நிலையில் காணப்பட்டது. விலங்குகள் நீர் பருக வரும் இடம் என்று சொன்னார்கள். யானையின் கால் தடங்களும் காணப்பட்டன. (ஒளிப்படத்தைப்பார்க்க) ஒரு வரலாற்று ஆய்வாளர் சிறுத்தையின் கால் தடத்தை ஒளிப்படம் எடுத்திருந்தார். சிறுத்தையின் கால் நகப்பகுதி கூர்மையாக மண்ணில் பதிந்திருந்தது நன்கு புலப்பட்டது. எங்கள் அச்சம் இதனால் கூடியது. மேலே தொடர்ந்த பயணத்தின்போது வெயிலும் கூடியது.

அண்மையில், கோடைக்காலமாயினும் கோவைப்பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருந்த காரணத்தால் மலைச்சரிவுகள் பசுமையான தோற்றம் பெற்றிருந்தன. நாங்கள் நடந்து சென்ற பாதை முழுதும் பசுமையான செடிகளும் புதர்களும் அடர்ந்து பாதையை மறைத்தன. பல இடங்களில் செடிகளுக்கிடையில் குனிந்து நடக்கவேண்டியிருந்தது. முன்பே கூறியவாறு முட்களால் இன்னல். ஒருவாறு ஓரிரு மணி நேரம் நடந்து பெருவழி அமைந்திருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

பெருவழிக்கருகில்

இருபுறமும் மலைகள். சற்றே கரிய மேகங்கள் படர்ந்த வானம். அழகும் அமைதியும் ஒருசேர ஏற்படுத்திய தாக்கம். நேரில் மட்டுமே உணரலாம். எதிரே பெரும் பசுமைப்பரப்புக் கொண்ட பள்ளத்தாக்கு. அப்பள்ளத்தாக்கில் எட்டிமடை என்னும் ஊர்ப்பகுதி புலப்பட்டது.

நாங்கள் நின்றிருந்த இடம் பள்ளமாக ஓடிக்கொண்டிருந்த ஓடைப்பகுதியை ஒட்டிய ஒரு பரப்பு. சில இடங்களில் பாறைப்பரப்புடன் கூடிய நிலம். கடந்த காலங்களில் பெருவழிப்பாதை ஏறத்தாழ முப்பது அடி அகலத்தில் நன்கு புலப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பாதையின் இருபுறமும் கரை போல் பெருங்கற்கள் அடுக்கப்பெற்றிருந்ததாகவும் கூறினர். இப்பொழுதும் ஓரிரு இடங்களில் கற்கள் அடுக்கப்பட்ட தோற்றம் தெரிந்தது.  
     
அடுத்து, பெரிய பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் தேடும் படலம் தொடங்கியது. நாங்கள் நின்றிருந்த பகுதிக்கு எதிரே ஓடைப்பள்ளத்தின் மறுபுற மலைச்சரிவின் ஏற்றப்பகுதியில் கல்வெட்டுப்பாறை புலப்பட்டிருக்கவேண்டும். ஆனால், எவ்வளவு தேடியும் பாறை புலப்படவில்லை. மழையால் முளைத்த பசுமை பாறையின் தோற்றத்தை மூடிவிட்டதுதான் காரணம். வெயிலும், நடைச்சோர்வும், பசியும் அனைவரையும் தளரவைத்த நிலையில் பகல் பொழுதும் கடந்துகொண்டே போனதால் திரும்பிப்போகும் முடிவெடுக்கப்பட்டது. பூங்குன்றன் அவர்கள் பெருவழியைப்பற்றியும், பெருவழிக்கல்வெட்டைப்பற்றியும் பல செய்திகளை எடுத்துக்கூறினார்.

பெருவழிச் செய்திகள்

கொங்குப்பகுதியில் பல பெருவழிகள் இருந்துள்ளன எனப்பார்த்தோம். அசுரர் மலைப்பெருவழி, சோழமாதேவிப்பெருவழி, பிடாரிகோயில் பெருவழி, வீர நாராயணப்பெருவழி முதலிய பெருவழிகள் அவற்றில் சில. கொழுமத்திலிருந்து பழநி வரை சென்றது அசுரர் மலைப்பெருவழி. சோழமாதேவிப்பெருவழி கொழுமத்திலிருந்து சோழமாதேவி வரை சென்றது.  வீரநாராயணப்பெருவழி ஆனைமலையிலிருந்து கொழுமம் வரை சென்றது. கருவூரிலிருந்து புகார் வரை சென்ற பெருவழி கொங்கப்பெருவழியாகும். இப்பெருவழியின் தொடர்ச்சியாக இராசகேசரிப்பெருவழி அமைந்திருக்கக்கூடும். பேரூரிலிருந்து பாலக்காட்டுக்கணவாய் வழியே மேற்குக்கடற்கரை வரை இப்பெருவழி சென்றதாகக் கொள்ளலாம். கருநாடகப்பகுதியில் கஜ்ஜல் ஹட்டிக் கணவாய் வழியே தாளவாடி என்னும் ஊரிலிருந்து தணாயக்கன் கோட்டை (தற்போதைய பவானிசாகர்) வரை ஒரு பெருவழி இருந்துள்ளது. பெருவழிகளில் எறிவீரர் என்னும் படைப்பிரிவினர் இருந்துள்ளனர். அவர்களுடைய பாதுகாப்பில் வணிகர்களும் மக்களும் சென்றுவந்தனர்.

இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு எதிர்பாராது நிகழ்ந்த ஒன்று. 1976 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்துக் கல்வெட்டினைப் படித்து வெளிக்கொணர்ந்தவர் முனைவர் பூங்குன்றன் ஆவார். இவரோடு பயணம் சென்றவர் கல்வெட்டு அறிஞர் புலவர் இராசு ஆவார். புலவர் அவர்கள் அந்நாளில் தமிழாசிரியர். கோவை, சுண்டக்காமுத்தூரில் பட்டிமன்றம் ஒன்றில் கல்ந்துகொள்ள வந்த அவரிடம் அவ்வூரைச்சேர்ந்த இராமசாமி என்பவரும் அவரது உறவினர் கலைச்செல்வன் என்பவரும் புலவரைச்சந்தித்து கல்வெட்டு பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். புலவர் தொல்லியல் துறையில் இருந்த பூங்குன்றன் அவர்களை அழைத்துச் சென்று காட்டியுள்ளார். நாட்டிலேயே பழமை வாய்ந்த ஒரு பெருவழி பற்றிய கல்வெட்டினை அடையாளம் காட்டிய பெருமை இவர்களைச்சாரும்.  பெருவழியும் கல்வெட்டும் அமைந்த பகுதி சொரிமலை, அட்டமலை, திமில்மலை ஆகிய மூன்று மலைகளுக்கிடையே உள்ளது. கல்வெட்டு இருக்கும் இடம் தெக்கன் திட்டு எனவும் காற்றாடும் பாறை எனவும் வழங்கப்படுகிறது. இனி கல்வெட்டின் பாடத்தையும் அது வெளிப்படுத்தும் வரலாற்றுச் செய்திகளையும் காண்போம். கல்வெட்டின் ஒளிப்படத்தையும் பார்க்க.


கல்வெட்டுப்பாடம்:

திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப
ஒரு நிழல் வெண்டிங்கள் போலோங்கி ஒரு நிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன்
கோழியர் கோக்கண்டன் குலவு.

கல்வெட்டு இயற்கையாக அமைந்த ஒரு பெரிய பாறையின் மேற்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் எழுத்துகள் நன்கு புலப்பட்டதாகவும் காலப்போக்கில் எழுத்துகள் தேய்வுற்றதாகவும் காண்கிறோம். கல்வெட்டு இரண்டு பிரிவாகப்பிரிக்கப்பட்டு முதல் பிரிவில் பாடல் வடிவில் நான்கு வரிகளும் அடுத்த பிரிவில் இராசகேசரிப்பெருவழிஎன்னும் ஒற்றைச் சொல்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. வரிகள் யாவும் கோடுகளுக்கிடையில் அமைந்துள்ளன. பாடல் வரிகள் வட்டெழுத்திலும் “இராசகேசரிப்பெருவழி என்னும் ஒற்றைச்சொல் தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில், பாண்டிய நாட்டைப்போன்றே பொதுப்பயன்பாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்துள்ளது. சோழ அரசின் ஆட்சியெழுத்தாகத் தமிழ் எழுத்து வழக்கில் இருந்தது. எனவே இரு எழுத்துகளும் ஒரு கல்வெட்டில் இடம்பெற்றன. ஒரு இராசகேசரி அரசன் ஏற்கெனவே இருந்த பெருவழியைப்புதுப்பித்துத் தன்புகழ் நிலைக்கவேண்டி “இராசகேசரிப்பெருவழிஎன்று தன் பெயரை இட்டுத் தன்னைப்பற்றிய பாடலையும் பொறித்து வைத்துள்ளான். இந்த இராசகேசரிச் சோழன் யார் என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது கண்டராதித்தன், முதலாம் இராசராசன் என இரு பெயர்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால், கோக்கண்டன் என்னும் அடைமொழிச் சொல்லைக்கொண்டு சோழ அரசன் முதலாம் ஆதித்தன் என நிறுவப்பட்டுள்ளது. முதலாம் ஆதித்தனின் ஆட்சிக்காலம் கி.பி. 871-907 ஆகும். எனவே, கல்வெட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியலாம்.  1976-ஆம் ஆண்டில் இக்கல்வெட்டைப்படித்த பூங்குன்றன் அவர்கள் இறுதி வரியில் இறுதிச்சொல்லை “கோ எனப்படித்தார். பின்னர் 1998-ஆம் ஆண்டில் மீளாய்வு செய்து “குலவு  எனப்படித்தார். “குலவுஎன்பது “புகழ்என்று பொருள்தரும் சொல்லாகும். “இக்கல்வெட்டில் மூன்று முறை நிழல் என்ற சொல் பயின்றுவருகிறது. இங்கு பயன்படுத்தப்பெறும் நிழல் என்ற சொல்லின் பொருளை விளங்கிக்கொள்ள கேரள மாநிலச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளை அணுகவேண்டும். அந்த ஆவணங்களில் நிழல் என்ற சொல் நிழற்படை (Shadow Army) என்ற பொருளில் கூறப்பெறுகின்றது. அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழிக் கல்வெட்டிலும் “நிழல் என்ற சொல் (Shadow Army) என்ற பொருளில் வழங்கப்பெற்றிருக்கவேண்டும்.  நிழற்படை அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர் என்பதாகப் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

2002-ஆம் ஆண்டில் முனைவர் கருணானந்தம் (கோவைத் தொல்லியல் துறை அலுவலர்) கோவையிலிருந்து வெளிவந்த “கலைக்கதிர்இதழில் இராசகேசரிப் பெருவழியைப்பற்றிய எழிலார்ந்த கட்டுரை ஒன்றை வழங்கியுள்ளார். வாய்ப்புக் கிடைத்தால் அக்கட்டுரையைப் படித்து மகிழலாம்.

இராசகேசரிப்பயணத்தின் இறுதிக்கட்டதில் உள்ளோம். பிற்பகல் மூன்று மணிக்கு மீண்டும் வனப்பாதையில் பயணம், ஊரை நோக்கி. இத்தொல்லியல் பயணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறாவிடினும், பெருவழிக்கருகுவரை சென்றதும், வனச்சூழலினூடே பயணம் செய்ததும் மறக்கவொண்ணா நிகழ்வு. நிறைவும் கூட. இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டுப் பயணம் தொடரும், கல்வெட்டைக்காணும் வரை.

பின்குறிப்பு:   பயணத்தின்போது, கருப்பும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒரு காட்டுப்பூச்சியும், குன்றிமணிச்செடியும், சிவப்பு வண்ணத்தில் ஒரு காட்டுப்பழமும், பச்சை நிறத்தில் கடுக்காய்கள், மஞ்சள் நிறத்தில் ஒரு காட்டுப்பூங்கொத்து, முள்ளம்பன்றியின் உடலிலிருந்து விழுந்த ஒரு முள்ளும் காணக்கிடைத்தன. அவற்றின் ஒளிப்படங்களையும் இணைத்துள்ளேன்.

நன்றி : முனைவர் பூங்குன்றன்
       வாணவராயர் அறக்கட்டளையினர்
       துணை வந்த வனத்துறை அலுவலர் ஆகியோருக்கு.
துணை நின்ற நூல் மற்றும் கட்டுரை :
       கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் (தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை)
           Meenakshisundaramwriter.blogspot.in

ஒளிப்படங்கள்:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,கோவை.
அலைபேசி : 9444939156.