மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 24 நவம்பர், 2016

சேவூர் அழகப்பெருமாள் கோயில்

        உலக மரபு வார விழாவையொட்டி கோவை “தினமலர் நாளிதழில் வெளியான செய்தியில்,

       தினமலர்-கோவைப்பதிப்பு-24-11-2016. 



“அவிநாசி-சேவூரில் 13-ஆம் நூற்றாண்டுக் காலத்துப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, இயந்திரம் கொண்டு பெயர்த்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதைப்பார்த்ததும், 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட்”  மாதம் இக்கோயிலைச் சென்று பார்த்த நினைவு வந்தது. அப்போது, பழைய கோயில் முழுதும் இடிக்கப்பட்டு, கருவறையும், அர்த்தமண்டபமும் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் பணி நின்றுபோயிருந்தது. கோயிலில் மொத்தம் பதினாறு கல்வெட்டுகள் இருந்துள்ளன. கி.பி. 1276-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி, கி.பி. 1342-ஆம் ஆண்டுவரையிலான கால இடைவெளியில், பதினாறு கல்வெட்டுகள்; கொங்குச் சோழன் மூன்றாம் விக்கிரமன் (1273-1305), கொங்குப்பாண்டியன் வீரபாண்டியன் (1265-1285), கொங்குப்பாண்டியன் சுந்தரபாண்டியன் (1285-1312), போசள அரசன் வீரவல்லாளன் (1292-1342) ஆகிய அரசர்கள் காலத்தவை.

      கொங்குநாட்டில் வடபரிசார நாட்டு சேவூரான செம்பியன் கிழானடி நல்லூர் என இவ்வூர் வழங்கியது. கோயில், திருமேற்கோயில் அழகப்பெருமாள் விண்ணகரம் என்ற பெயராலும், சுந்தரபாண்டிய விண்ணகரம் என்ற பெயராலும் வழங்கப்பட்டது.

      மேற்குறித்த பதினாறு கல்வெட்டுகளில் சில கல்வெட்டுகளை முன்பிருந்த பகுதிகளான கருவறை மேற்குச் சுவரும் வடக்குச்சுவரும் சந்திக்கும் இடத்தில் வைத்துக் கட்டியிருந்தார்கள். சில கல்வெட்டுகள் தெற்குப்பகுதி அதிட்டானத்தில் ஜகதிப்படையில் வைத்துக் கட்டியிருந்தார்கள். இருப்பினும், பல கல்வெட்டுத்துண்டுகளைக் கருவறையிலோ, அர்த்தமண்டபத்திலோ முறையாக வைத்துக் கட்டாமல் கோயில் வளாகத்தில், பிரித்தெறிந்த கற்களுக்கிடையில் வீணாகும்படி போட்டிருந்தார்கள். அர்த்தமண்டப முகப்புப் பகுதியும். கருவறையின் மேல் எழுப்பப்பட்ட விமானமும் கலை அழகின்றி மிக எளிமையான தோற்றத்தில் கட்டப்பெற்றிருந்தன. அவற்றிலிருந்து தொலைவில் முன்புறம் இருந்த பலிபீடமும், ஒரு மண்டபமும் (கருடாழ்வார் மண்டபம்?), ஆங்காங்கே இடிந்துவிட்ட தோற்றத்தில் காணப்பட்ட அழகிய சுற்றுச் சுவரும் மட்டுமே பழமையின் எச்சங்கள். கீழே தரப்பட்டுள்ள படங்கள், புனரமைப்பின் தன்மையை விளக்கும்.







அர்த்தமண்டபம், கருவறை விமானம் - எளிய தோற்றத்தில்




















-------------------------------------------------------------------------------
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கோயில் திருப்பணிகள்


     அண்மையில் தொல்லியல் துறையின், தென்னிந்திய ஆலய ஆய்வுப்பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரி அவர்கள் கூறியதாகத் தினமலர் நாளிதழில் ஒரு செய்தி
வெளியானது. அவருடைய கூற்று வருமாறு :

 கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள்,   ஆகிரமிப்புகள், நகரமயமாதல் போன்றவைகளால் நம் நாட்டுப் பொக்கிஷங்களின் பாரம்பரியத் தனமை மறைந்து வருகிறது.



மேற்கண்ட கூற்றில் சுட்டப்பெறும், திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள் காரணமாகப் பல கோயில்கள் அவற்றின் பழமையான தோற்றத்தை முற்றிலும் இழந்து (கல்வெட்டுகள் சிதைக்கப்படுமேயானால், கல்வெட்டுகளையும் இழந்து) பழங்கோயில் என்னும் வரலாற்று அடையாளமே தெரியாமல் போவது வேதனைக்குரியது.  அண்மையில், காங்கயம் வட்டத்தில் பயணம் மேற்கொண்டபோது, பார்ப்பினி என்னும் ஊரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியைப் பார்த்தேன்.

       பார்ப்பினி பெரியநாயகியம்மன் கோயில் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2007-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில், கி.பி. 1685-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு இக்கோயிலில் இருப்பது பதிவாகியுள்ளது. இக்கோயிலின் பழந்தோற்றம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. கோயில். முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுத் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. கோயில், கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய கூறுகளோடு 1685-க்கு முன்பே இருந்துள்ளது. 1685-இல் முன்மண்டபத்தைக் கண்ணந்தை, காடை குல கோத்திரத்தைச் சேர்ந்த காணியாளர்கள் மூவர் கட்டுவித்த செய்தியை மேற்சொன்ன கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் பார்ப்பினி என்னும் இந்த ஊர் வீரசோழபுரம் என்னும் பழம்பெயரால் குறிக்கப்படுவதினின்றும் கோயிலின் பழமையை அறிந்துகொள்ளலாம். ஆனால், இன்று தரை மட்டம். நூற்றுக்கணக்கான கற்கள் எறிந்து கிடக்கின்றன. கீழுள்ள படங்கள், கோயிலின் நிகழ்கால நிலையைச் சொல்லும். இருந்த ஒரே ஒரு கல்வெட்டும், இக் கற்குவியல்களுக்கிடையில் எங்கேயுள்ளதோ?

                                                          கோயில் தரைமட்டம்-திருப்பணி தொடக்கம்



                                                                               எறிந்து கிடக்கும் கற்கள்













       தொல்லியல் துறைக்கும் அறநிலயத்துறைக்கும் உள்ள தொடர்பு அல்லது உறவைப் பேணுகின்ற கடமை தொல்லியல் துறைக்கு இல்லையா? நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எந்தப்பொருளும் தொன்மையானது என வரையறை செய்கிறது தொல்லியல்துறை . மாவட்டம் தோறும் தொல்லியல் துறையின் அலுவலகம் ஒன்று இயங்கிவருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகையாக ஒரு முந்நூறு கோயில்கள் இருக்கக்கூடும். தொல்லியல் துறை, அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் துணையோடு, ஒரு கல்லூரி ஐம்பது கோயில்களுக்குப் பொறுப்பு எனக் கோயில்களை ஒதுக்கி, கல்லூரியில் பயிலும் இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்குவித்து, ஒவ்வொரு ஆறுமாத காலத்துக்குள் எல்லாக்கோயில்களும் கள ஆய்வுக்குட்படுமாறு செய்யலாம். அத்துணைக் கோயில்களைப்பற்றிய தரவுகளையும் கணினியில் பதிவு செய்து, கோயில் நிருவாகத்தினரோடு தொடர்பு (நல்லுறவு?) கொண்டு கோயிலின் அனைத்துப்பணிகள் பற்றிய செய்திகளும் தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும் என்னும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்யலாம். இளைய தலைமுறையினர்  வரலாற்று அறிவு பெறுவர். கோயில்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என நம்பலாம்.




து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.


புதன், 9 நவம்பர், 2016

நீரில் மூழ்கிய டணாயக்கன் கோட்டை
Danayakkan Kottai

முன்னுரை
            கடந்த 25-10-2016 அன்று, நாளிதழ் ஒன்றில் (தினமலர் அல்லது தமிழ் இந்து), பவானிசாகர் அணைப்பகுதியில் நீரில் மூழ்கியிருந்த டணாயக்கன் கோட்டை வெளியில் தெரிவதாக ஒரு செய்தி வந்தது. அதைப்பார்த்ததும், 8-6-2013 அன்று, இதுபோலவே அணையின் நீர் வற்றிய நிலையில் நீருக்குமேல் டணாயக்கன் கோட்டை வெளியில் தெரிந்தபோது சென்று பார்த்துவந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. நிகழ்வு தொடர்பான நினைவுகளை அப்போதே பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதெனினும் ஏனோ பதிவு செய்ய இயலாமல் போனது. இன்று, மீண்டும் நீருக்கு வெளியில் கோட்டை தெரியும் செய்தி அந்நிகழ்வைப் பதிவுசெய்யத் தூண்டியது. ஓர் அருமையான நிகழ்வு. அதனை இங்கு பதிவு செய்கிறேன்.

பவானிசாகர் அணை
          பவானிசாகர் அணை. தமிழகத்தில் அனைவர்க்கும் தெரிந்த அணைகளுள் ஒன்று. இந்நாள் திருப்பூர் மாவட்டத்தில் (முந்நாள் கோவை மாவட்டம்) அமைந்துள்ள அணை. நம் நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்களில் முதன்மையான ஒன்று. முழுதும் மண்ணால் கட்டப்பட்ட அணை என்னும் பெருமையும் கொண்டது. அணையின் நீளமும் பெரிது; நீர்த்தேக்கப் பரப்பும் பெரிது. அணை கட்டுவதற்காக மக்கள் வெளியேற்றப்பட்டு வேறிடங்களில் குடியேற்றப்பட்டார்கள். அவ்வாறு தம் வாழ்விடத்தை நல்கிய மக்கள் வாழ்ந்த ஊர்களாவன: கூடுவாய், குய்யனூர், வடவள்ளி, பீர்க்கடவு, ராஜன் நகர், சிக்கரசம்பாளையம், கொற்றமங்கலம், பற்றமங்கலம், பசுவபாளையம். அணை 1955-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, 1956-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அணைத்தேக்க நீரின் மட்டம் 100-120 அடிகள். அணைகட்டிய காலத்திலிருந்து கடந்துவிட்ட இத்தனை ஆண்டுகளில், பல போது நீர்மட்டம் குறைய நேரும்போதெல்லாம் நீரில் மூழ்கியிருக்கும் டணாயக்கன் கோட்டை வெளியில் தெரியும் நிகழ்வுகள் ஏற்படும்.

டணாயக்கன்கோட்டை
      பல ஆண்டுகளுக்கொருமுறை, அணை நீர் வற்றிக் கோட்டை தெரியும் நிகழ்வு வரலாற்று ஆர்வலர்களுக்கு அரியதொரு வாய்ப்பான விருந்து. பணி நிறைவு பெற்றுக்
கோவையில் குடியேறுகையில் தொல்லியலில், குறிப்பாகக் கல்வெட்டியலில் ஈடுபட்டு, வரலாற்றுத் தொடர்பான இடங்களைத் தேடிப்பார்க்கும் பணியை மேற்கொண்டநிலையில் டணாயக்கன் கோட்டையைக் காணும் பெருவிருப்பு எனக்கும் ஏற்பட்டதில் வியப்பில்லை.

பயணமுயற்சி
         ஏழு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், டணாயக்கன் கோட்டை நீருக்கு வெளியில் புலப்பட்டது பற்றிய செய்தி ஒரு நாளிதழில் வந்திருந்தது. செய்தியில், பத்து ஆண்டுகளுக்குப்பின்னர் கோட்டை வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அச்செய்தியைப் பார்த்தது முதற்கொண்டே அதைக்காணவேண்டும் என்ற ஆவல் ஆழப்பதிந்து, நேரில் கோட்டையைப்பார்க்கும் வழிமுறைகளைத் தேடுவதில் எண்ணம் வேகமெடுத்தது. ஏற்கெனவே, மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திம்மநாயக்கன்பாளையத்தில் இருக்கும் “பாடிகாவல்குடியைச் சேர்ந்த பழநிச்சாமி என்பவரின் அறிமுகம் ஏற்பட்டிருந்தது. அவரைத் தொடர்புகொண்டபோது, பவானிசாகரில் இருக்கும் அவருடைய உறவினர் ஒருவர் மூலம் பரிசல் ஓட்டும் படகோட்டிகளின் துணையுடன் கோட்டையைக் காண ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார். நாள்கள் சில கடந்தும் அவரால் முயன்றுமுடிக்க இயலவில்லை. அப்போதுதான், என் உறவினர் ஒருவர் மூலம், சத்தியமங்கலத்துக்கு அருகில் தூக்கநாயக்கன்பாளையத்தில் இருக்கும் வரலாற்று ஆய்வாளர் (அடிப்படையில் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிலக்கிழார்) திரு. தூ.நா.இராமசாமி அவர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அவரைத் தொடர்புகொண்டபோது, அவர் பல ஆண்டுகளுக்கு முன் கோட்டையைக் கண்டிருப்பதாகவும், தற்போது முயலலாம் எனவும் சொல்லவே, நாள் குறித்துப் பயணப்பட்டேன்.

பயணம் தொடங்கியது
       2013, ஜூன் 8. சத்தியமங்கலம் வழியாகத் தூக்கநாயக்கன்பாளையம் அடைந்து தூ.நா.இராமசாமி அவர்களைச் சந்தித்தேன். நல்லாசிரியர்போல, இவர் நல்லுழவர். வானொலிகளில் வேளாண்மை பற்றிப் பல ஆண்டுகள் உரையாற்றியுள்ளவர். அவர் பகுதியில் பல வரலாற்றுச் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர். ஆம்னி”  வண்டியொன்றை ஏற்பாடு செய்துகொண்டு நாங்கள் பவானிசாகர் நோக்கிப்பயணப்பட்டோம்.  சத்தியமங்கலக் காட்டுப்பகுதியினூடே தார்ச்சலையில் வண்டி சென்றது. ஆளரவமற்ற சாலை. யானைகள் நடமாடும் பகுதி. சித்தன்குட்டை, ஜே.ஜே.நகர் ஆகிய சிற்றூர்களைக் கடந்து       பவானி ஆற்றுப்படுகையை அடைந்தோம்.  

 
   






   ஆற்றுப்படுகை
          படுகை பச்சை போர்த்துப் படர்ந்து, தொலைவில் காணும் மலைப்பகுதியைக் கோடு போட்டாற்போலத் தொட்டது.  படுகையினூடே ஆற்றை நோக்கி நடந்தோம். படுகையில் ஒரு வகைக் கீரைச் செடிகள் ஏராளமாக விளைந்திருந்தன. படுகையின் ஒருபுறம், சற்றுத் தொலைவில் ஆற்று நீருக்கப்பால் கரையில் கரிய நிற நீர்ப்பறவைகளின் கூட்டம் காணப்பட்டது. அவற்றின் இடையே, வெண்மை நிறத்திலும் ஓரிரு பறவைகள். படுகையில் ஒருபுறம் மாடுகள் அணிவகுத்து மேய்ந்துகொண்டிருந்தன. அழகான காட்சி. ஆற்றை நெருங்கியபோது, ஓரிடத்தில் நீர் நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் சென்ற நாளன்று அப்பகுதியில் பரிசல் ஓட்டுபவர்கள் யாரும் இல்லை. எனவே, நீர் குறைவாக உள்ள பகுதிக்குச் சென்று நீரில் இறங்கி ஆற்றைக்கடந்து செல்வோம் என முடிவாயிற்று. வேறு பக்கமாகப் படுகையினூடே நடந்து நீர் குறைவாக இருந்த பகுதியை அடைந்தோம். ஏறத்தாழ முக்கால் மணி நேரம் நடந்திருப்போம். தொலைவில் நிழல் போலத் தோற்றமளித்தது கோட்டைக்கோயில். படுகைப்பகுதியும் யானைகள் நடமாடும்பகுதி. ஓரிடத்தில் யானையின் கால்தடத்தையும், இரண்டு இடங்களில் யானைச் சாணத்தையும் பார்த்தோம். யானை, முதல் நாளில் வந்து போயிருக்கவேண்டும். ஒருவாறு நீர் குறைந்த பகுதியை நெருங்கி, முழங்காலளவு  இருந்த நீரில் இறங்கி நடக்கத்தொடங்கினோம். ஆனால், கால் பதிந்த மண்பகுதி களிமண்சேறு. காலைக் கவ்வியதோடு பதித்த கால் மேலெழும்பாதவாறு உடலைச் சாய்த்து வேறு புறம் இழுத்தது. பின்வாங்க இயலாப்பயணம். ஒருவாறு,  முழுக்கக் கீழே விழாமல் நீரைக்கடந்து அக்கரை அடைந்தோம்.

   






மாடுகளின் அணிவகுப்பு





கீரைப்படுகை


                           
பறவைக்கூட்டம்
கோட்டைக்கோயில்
    அக்கரையிலும் மண்தரையில் சற்றுத்தொலைவு நடந்து சென்றபிறகே, கோட்டைக்கோயிலை நெருங்க முடிந்தது. கோட்டையை நெருங்கினோம் என்று சொல்லாமல் கோட்டைக்கோயிலை நெருங்கினோம் என்று சொல்லக் காரணம் உண்டு. உண்மையில் கோட்டை எப்போதோ இடிந்து கற்குவியல்களே ஆங்காங்கு சிதறிக்கிடந்த நிலையில், கோயிலின்  கட்டுமானப்பகுதி மட்டுமே இந்நாள்வரை பார்வைக்குத் தெரிந்திருந்தது. கோயிலை நெருங்கும் வழியில் கற்கள் சிதறிக்கிடந்தன. கோயிலின் முன்புறம், கற்களாலான சுற்றுச்சுவர் குட்டிச் சுவராகத் தோற்றமளித்தது. கோயிலும் இடிபாடுகள் நிறைந்து சிதைந்த நிலையில், நம் எண்ணத்தை அதன் பழந்தோற்றத்துக்கு இட்டுச்சென்றது. ஒரு நீள் சதுர அமைப்பிலிருந்த அக்கோயிலுக்கு இரு வாயில்கள் இருந்தன. பெரிய வாயிலே கோயிலின் முன்புற வாயில். முன்புற வாயிலில் நாம் நின்றால் நேரே கருவறை தெரிந்தது. வழக்கமாய் அமைந்திருக்கும் கோபுர வாயில் போல அல்லாது, இன்றைய மாளிகைகளில் காணப்படும் வாயில் முகப்பு. வண்டிகள் நிற்க அமைக்கப்படும்  முகப்புக் கூரையை ஒத்திருந்தது. முகப்புக்கூரையைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்கள். தூண்கள், மூன்று சதுரப்பகுதிகளையும்  அவற்றின் இடையில் இரண்டு எண்பட்டைப்பகுதிகளையும் கொண்டதாக விளங்கின. அதன் மேற்பகுதியில் ஒரு போதிகை. ஆங்கில “T”  எழுத்தின் ஒரு வடிவத்தைக்கொண்டுள்ள, சோழர் பாணியில் அமைந்த வெட்டுப்போதிகை. நான்கு தூண்களும் symmetry”   என்று சொல்லக்கூடிய சமச்சீர் உருவத்தில் இல்லை. மூன்று தூண்கள் ஒரே அமைப்பிலும், ஒரு தூண் மட்டும் வேறுபட்ட அமைப்பிலும் இருந்தன. இந்தத்தூணில் சதுரப் பகுதிகள் இரண்டில், கீழ்ச்சதுரத்தில் கொடி வேலைப்பாடும், இடைச்சதுரத்தில் பதும இதழ் வேலைப்பாடும் காணப்பட்டன. மற்ற தூண்களில் இத்தகைய வேலைப்பாடுகள் இல்லை. போதிகையின் முன்புறத்தில் நேர் கோடுகளாலான ஒரு அணி (அலங்கார) வேலைப்பாடு. தூண்களின் மேற்பகுதியில், கூரையின் கவிழ்ந்த கபோதப் பகுதி இடிந்து போய்விட்ட நிலையில், முதல் இரண்டு தூண்கள் வரை இரண்டு கூடுகளும், நான்காவது தூணுக்குமேல் ஒரு கூடும் எஞ்சியிருந்தன.


கோட்டைக்கோயில்

கோட்டையின் இடிபாட்டு எச்சம்


முன்புற வாயில்







           மேற்படி முகப்பை அடுத்து உள்ளே முன் மண்டபம். மண்டப வாயிலின் நிலைக்கால்களில் அழகு தரும் அணி வேலைப்பாடு. நிலையை ஒட்டி இருபுறமும் இரு அரைத்தூண்களும், அவற்றை அடுத்து இரு தூண்களும் கொண்ட சுவர் அமைப்பு. மண்டபத்தின் அடித்தளத்தில் (அதிட்டானப்பகுதியில்) பூவிதழ் வேலைப்படுள்ள சிறிய அளவிலான ஒரு குமுதப்படையும், அதன் கீழ் கண்டமும் ஜகதிப்படையும் இருந்தன. மண்டபத்தின் இரு கோடிகளும் இடிந்து பெரிய குகை வாயிலைப்போல் திறந்து கிடந்தன. அந்த இடிபாடுகள், சுவரின் கட்டுமான அமைப்பை நமக்கு எடுத்துக்காட்டுவனவாய் இருந்தன. சுவர், இருகற்களைக் கொண்டது. ஒன்று வெளிப்புறம் தெரியும் கல். மற்றது மண்டபத்தின் உட்புறச் சுவரில் காணப்படுவது.  இவ்விரு கற்களின் இடையே துண்டுக்கற்களும் செங்கற்களும் திணிக்கப்பட்டு சுவருக்கு வலு சேர்த்திருந்தன. மண்டபத்தின் கடைக்கோடியில் மட்டும் சுவரின் மேற்பகுதியில் கூடுகளும், கூடுகளுக்கு மேற்புறத்தில் அமைந்திருக்கும் யாளி வரிசையும் புலப்பட்டன.


சுற்றுச்சுவர், கூடுகள், யாளி வரிசை
            முன்புற வாயிலைப் பார்த்து முடித்திருக்கிறோம். இதே போல, பக்கவாட்டு வாயிலும் இருந்தது. இது, முன்புற வாயிலைக்காட்டிலும் சிறியது. இரு தூண்கள் மட்டுமே உள்ளன. தூண்களின் அடிப்புறம் ஒரு நீள் சதுரம்; அதையடுத்து, உருண்டைத்தூண். மேற்பகுதியில் கபோதகமும் அதன்மேல் யாளி வரிசையும் காணப்பட்டன. வாயிற்பகுதியிலிருந்து முன்மண்டபத்தினுள் நுழைகிறோம். இங்கும் எதிரே அர்த்தமண்டபத்தை நோக்கி நிற்கும் தூண்கள். இவையும் எளிமையாகத் தோற்றமளிக்கும் உருண்டைத்தூண்களே. அர்த்தமண்டபத்தைச் சுற்றிக் கோயிலின் திருச்சுற்று (பிராகாரம்). திருச்சுற்றுக்குள் நுழைந்து சுற்றிவரத் துணிவில்லை. திருச்சுற்றின் சுவரும் ஆங்காங்கே இடிந்து திருச்சுற்று முழுதும் இருள் சூழ்ந்திருந்தது. திருச்சுற்றிலிருந்து புறப்பட்டு முன்புற வாயில்வரை உள்ள வெளியிடத்தைத் தூண்கள் தாங்கியிருந்தன. அர்த்தமண்டப நுழைவு வாயிலின் நிலைக்கால்களிலும் முன்பு பார்த்தவாறே சிறிய அளவில் அணி வேலைப்பாடு காணப்பட்டது. திருச்சுற்றுப்பகுதியில் இடிபாடுகளின் இடைவெளியில் இருளைக் கிழித்தவண்ணம் ஒளி உள் நுழைந்தது.

பக்கவாட்டு வாயில்
முன் மண்டபம் 

      கோயிலின் சுற்றுச் சுவரின் வேறொரு பகுதியில், சுவர் முழுதும் சிதைந்து விழுந்து கிடந்தது. கோயிலின் இந்தப்பகுதியில் மட்டுமே சுற்றுச் சுவரில் அரைத் தூண்களுடன் கூடிய தேவகோட்டம் (கோஷ்டம்) என்னும் அமைப்பு இருந்தது. தேவகோட்டம் இருவகைப்படும். ஒன்று சாலை அமைப்பு; மற்றது தோரண அமைப்பு. இங்கு காணப்பட்டது தோரண அமைப்பு. அந்த இடிபாடுகளுக்கிடையில், கற்களின்மேலும் தேவகோட்டத்தின் மேலும் ஏறிக் கூரையை அடைந்து பார்த்தோம். கூரைத் தளம் செங்கற்களைக்கொண்டு உறுதியாக அமைக்கப்பட்டிருந்தது. இன்றைய நாளில் சுருக்கி”  என்று சொல்கிறோமே அது போல. கூரை, முதலில் நீண்ட பலகைக் கற்கள் கொண்டு மூடப்பட்டு அவற்றின்மேல் செங்கற்கள் பாவப்பட்டிருந்த அமைப்பு புலப்பட்டது.. ஏனெனில், பலகைக் கற்களால் மூடப்பட்ட பரப்புகளும், செங்கற்கள் நன்கு பாவிய பரப்புகளும்  சில இடங்களில் தெரிந்தன. செங்கற்களும் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்தன. கூரைத்தளம் கோயில் கற்கட்டுமானத்தின் இறுதி உறுப்பைத் தெளிவாக்கியது. கூரையில் காணப்படும் யாளி வரிசைதான் இறுதி. இந்த யாளி வரிசை முடியும்  முனைப்பகுதியில் இருமுனைகளில் யாளி உருவத்தினின்று முற்றிலும் மாறுபட்ட ஓர் உருவச்சிற்பம் கண்ணைக்கவர்ந்தது. எந்த விலங்கு என்று இனம் காண இயலாதவாறு ஒரு முகம். கோயில்களில் காணப்படும் பலி பீடக்கல்லை நினைவூட்டும் வண்ணம் தலைப்பகுதி. விலங்கின் வாய்ப்பகுதி பக்கவாட்டில் பார்க்கும்போது, அகலத்திறந்த ஒரு மீனின் வாயைப்போலக் காட்சியளித்தது. கூரையில் நின்று பார்க்கையில் தொலைவில் ஆற்றின் சிறிய நீரோட்டமும், சிதறிக்கிடக்கும் கோட்டைக்கற்களும்மலையடுக்கும் அழ்கான காட்சியாகத் தெரிந்தன. கோயிலின் பல்வேறு பகுதிகளிலும் நின்று ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.


தேவகோட்டத்துடன் உள்ள சுற்றுச்சுவர்
கூரைத்தளம்


கூரைத்தளம்
கூரையில் யாளிவரிசை
  
மீனின் வாய் போன்ற தோற்றமுள்ள ஒரு விலங்கு முகம்

இறுதியாகக் கோயிலில் கல்வெட்டுகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டோம். பக்கவாட்டு வாயிலின் அதிட்டானத்தில் ஜகதிப்படையில் வாயிலின் இடப்பக்கம் ஒரு கல்லில் சில எழுத்துகளும், வாயிலின் வலப்பக்க ஜகதியின் மூலையில் சில எழுத்துகளும் காணப்பட்டன. கோயிலின் சுற்று முழுதும் ஜகதிப்படையில் கல்வெட்டுகள் இருக்கவேண்டும். ஆனால், ஜகதிப்படை முழுக்க மண்ணுக்கடியில் புதைந்து விட்ட காரணத்தால், வாயிற்புறத்து ஜகதியில் காணப்படும் எழுத்துகளே தற்போது எஞ்சியிருக்கும் கல்வெட்டுத் தோற்ற்ங்கள். எழுத்துகள் சரியாகப் புலப்படாததால், நண்பர் உழவர் ஐயா அங்கிருந்த செடிகளின் பச்சை இலைகளைக் கல்லின்மீது தேய்த்தார். இடப்பக்கமிருந்த எழுத்துகள் படிக்க இயலவில்லை. வலப்பக்கமிருந்த எழுத்துகளில் வீரல”,  “கேத்தெய நாயக்கர் (உடுவக்கா)”   ஆகிய சொற்கள் புலப்பட்டன.  விளக்கம் கல்வெட்டுச் செய்திகள் பகுதியில் கூறப்படும்.

”கேத்தெய தண்ட”  என்னும் சொல் தெரியும் கல்வெட்டுப்பகுதி

”நாயக்கர்” என்னும் சொல் தெரியும் கல்வெட்டுப்பகுதி
பயணம் முடிவுறுதல்

     டணாயக்கன் கோட்டைபயணத்தை முடித்துத் திரும்பும் வேளை. நாங்கள் சென்றிருந்த போது, வேறு சில இளைஞர்களும் வந்திருந்தனர். எங்களுக்கு முன்னரே அவர்கள் வந்திருந்ததால், நாங்கள் கோயிலைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் சுற்றிலும் வேறு இடங்களிலும் உலவிவிட்டு வந்திருந்தனர். நேரமோ மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. இடையில் நேரம் போனது தெரியவில்லை; நேரத்தைப் பார்க்கவேயில்லை என்றும் சொல்லலாம். சிறிதளவே ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் இப்போது மெல்ல நீர் மட்டம் உயர்வது தெரிந்தது. நீரில் இறங்கி ஆற்றைக்கடக்கத் தொடங்கினோம். எனக்குச் சற்றே துன்பமாகவே இருந்தது. மண்ணுக்குள் கால்கள் புதைவதோடு நீரின் ஓட்டமும் என்னை இழுத்துச் சாய்த்தது. ஒருவாறு முயன்று ஆற்றைக் கடந்து நீரின் இக்கரையில் நின்றோம். இதுவரை நடந்து சுற்றித் திரிந்ததால் ஏற்பட்ட சோர்வும் களைப்பும் முன் நின்றன. சற்றுநேரம் ஓய்வாக இருந்துவிட்டுச் செல்லலாம் என்று நானும் நண்பரும் எண்ணியிருந்தபோது, அந்த இளைஞர்கள், இன்னும் சற்று நேரம் இருந்தால் மாலை மங்கும் வேளையில் அக்கரையில் தொலைவில் வனத்து ஓரத்தில் யானைகள் வந்து திரிவதைக்காணலாம் என்று ஆர்வமூட்டினர். அதுபோலவே, சற்று நேரம் காத்திருந்தோம். வெகுதொலைவில் யானைக்குழு ஒன்றின் சிற்றுருவம் புலப்பட்டது. ஒளிப்படக்கருவியில் உருப்பெருக்கம் செய்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டேன்.  இளைஞர்களுடனும் சேர்ந்து ஒளிப்படம் எடுத்தபின்னர் ஆற்றுப்படுகையில் மீண்டும் நடைப்பயணம். அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்து வண்டியை அடைந்ததும் வண்டிப்பயணம் தொடர்ந்தது. சத்தியமங்கலம் சேர்ந்ததும் சிற்றுண்டி முடித்து, நண்பரிடம் விடைபெற்றுக் கோவை அடைந்ததோடு டணாயக்கன்கோட்டைப் பயணம் நிறைவுற்றது.

இளைஞர் குழுவுடன் நாங்கள்


தொலைவில் தெரியும் யானைக்கூட்டம்
டணாயக்கன்கோட்டையை நோக்கி இரண்டாவது பயணம்.

      மீண்டும் கட்டுரையின் முதல் வரியைப்படிக்க வேண்டுகிறேன்.  25-10-2016 அன்று, மூன்று ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் அணை வெளியில் தெரிந்த செய்தியைக்கண்டதும், இம்முறையும் சென்று பார்க்கவேண்டும் என்னும் ஆவல் எழுந்தது. சென்றமுறை நான் மட்டுமே நண்பருடன் இணைந்துகொண்டேன். இம்முறை, வரலாறில் ஆர்வமுள்ள நண்பர்களோடு சென்று பார்க்கவேண்டும் என்னும் விருப்பம் ஏற்பட்டது. நண்பர்களுடன் செய்தியைப்பகிர்ந்துகொண்டு, பயணத்தைத் திட்டமிட்டேன். நல்லுழவர் இராமசாமி அவர்கள்தாம் எங்கள் பயணத்தலைவர். கோவையிலிருந்து என்னுடன் இணைந்த நண்பர்களுள் ஒருவர் மீனாட்சிசுந்தரம். ஆங்கில நாளிதழொன்றில் படைப்புக்கட்டுரை எழுதும் எழுத்தாளர். கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியராகப் பணியில் இருந்து தாம் விரும்பும் எழுத்துலகுக்கு வந்தவர். ஒருவர் கிருஷ்னகுமார். பள்ளி ஆசிரியர். பெருங்கற்காலச் சின்னங்களைத் தேடிப்பிடித்துச் சேகரம் செய்து பள்ளியில் அவற்றைக் காட்சியாக வைத்து மாணவர்களுக்கு வரலாற்று விழிப்புணர்ச்சி ஊட்டுபவர். ஒருவர் இரவிச்சந்திரன். நாணயவியலாளர். வரலாற்று ஆர்வலர். வரலாற்று ஆவணங்களைச் சேர்த்து வைத்து, நாணயவியல் கண்காட்சிகளில் காட்சிப்படுத்துபவர். ஒருவர் தங்கமோகன். தனித்தொழில் கொண்டவர். வரலாற்றுப் பயணங்களில் ஆர்வம் காட்டிக் கலந்துகொள்பவர். வண்டியொன்றை ஏற்பாடு செய்துகொண்டு காலை எட்டுமணியளவில் புறப்பட்டுச் சிறுமுகை என்னும் ஊரை அடைந்தோம். அங்கு நல்லுழவரும் அவருடைய நண்பரான  நாளிதழ் இதழியலாளர் தர்மராஜும் எங்களுடன் இணைந்தனர். சிற்றுண்டி முடித்து பவானிசாகர் சாலையில் பயணப்பட்டு (அணைக்குச் செல்லாமல் வேறு பாதையில் பிரிந்து), பெத்திக்குட்டை, அய்யம்பாளையம், சித்தன் குட்டை வழியாகக் கன்ராயன் மொக்கை என்னும் சிறு குடியிருப்புப் பகுதியை அடைந்தோம்.

பரிசல் பயணம்

கன்ராயன் மொக்கையில், பரிசல் மூலம் ஆற்றைக்கடப்பது என்று முடிவாயிற்று. காரணம், சென்ற பயணத்தைப்போல் இல்லாமல் இம்முறை ஆற்றின் நீர்ப்பரப்பு மிகுதியாயிருந்தது. இரண்டு பரிசல்கள் தேவையாயிருந்தது. ஆனால்,  சில பரிசல்கள் ஏற்கெனவே ஆற்றுக்குள் சென்றுவிட்டபடியால் இரண்டு பரிசல்கள் கிடைக்காத சூழ்நிலை. இராமன் என்னும் இளைஞரின் ஒரு பரிசலே இருந்தது. நாங்கள் எட்டுப்பேர். பரிசலோட்டி இராமனுடன் சேர்த்து ஒன்பது பேர். ஒன்பது பேர் ஒரே பரிசலில் என்பது சற்றே இன்னல் தரக்கூடியதுதான். ஆனால், இராமன் ஆற்றல் மிக்க இளைஞர். ஒற்றையாகவே துடுப்பு வலிக்க முனைந்தார். ஆற்றங்கரையில் பரிசல் இருந்தது. கரை வரை நடைப்பயணம்; கடந்த பயணம்போல் ஆற்றுப்படுகையில் பசுமை சற்றும் இல்லை. தரை ஈரம் மிகுந்திருந்தது. கரையில் பறவைக்கூட்டம் இல்லை. மாடுகளின் அணிவகுப்பு இல்லை. கார்சியில் வெறுமை. நாங்கள் பரிசலில் ஏறி அமர்ந்தோம். இராமன் வலிமையாகத் துடுப்பை இயக்கினார். பரிசலை அவர் இயக்கிய பாங்கு அருமை. பரிசல் நேர் கோட்டில் இலக்கை நோக்கி நகராமல், சில நிமிடங்கள் ஒரு பக்கமாகவும், சில நிமிடங்கள் அதற்கு எதிர்ப்பக்கமாகவும் வளைந்து வளைந்து சென்றது. காற்று, நீரின் அலை ஆகிய இரு காரணிகளின் அடிப்படையிலேயே பரிசலைச் செலுத்தவேண்டும். எனவேதான், துடுப்பின் பயன்பாடு இருபக்க வளைவுக்கேற்றவாறு அமையவேண்டும். காற்று மென்மையாக வீசியது; அலை மெல்ல வேகம் பெற்றது. பரிசலின் வேகம் குறைந்தது. கோட்டைக்கோயில் பார்வைக்கு வெகு தொலைவில் தெரிந்தது. இனி, ஒரே பரிசலில் ஒன்பது பேர் என்பது  இன்னல்தான்.


படுகையில் பசுமை இல்லை


பரிசலிலிருந்து சில காட்சிகள்
பரிசலிலிருந்து சில காட்சிகள்


பரிசலிலிருந்து சில காட்சிகள்

பரிசலிலிருந்து சில காட்சிகள்


பரிசலிலிருந்து சில காட்சிகள்
இராமன், அருகில் தெரிந்த கரையொன்றில் நான்கு பேரைத் தரையிறக்கிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். இப்போது பரிசலை இயக்குவது எளிதாயிருந்தது. எங்களைக் கோயில் இருக்கும் அக்கரையில் இறக்கிவிட்டு, மற்றவர்களையும் விட்ட இடத்திலிருந்து அழைத்துவந்தார். அண்மைக்காலத்தில், பரிசல் பயணம் எல்லாருக்குமே கிடைத்திராத ஒன்று. எனவே, பரிசல் பயணம் எங்கள் அனைவருக்கும் மிக இனிதாயிருந்தது.

மீண்டும் கோட்டைக்கோயில் (மாதவப்பெருமாள் கோயில்)

    கரையில் சற்றுத் தொலைவு நடந்ததுமே கோயில் நெருங்கியது. பல ஆண்டுகளாக நீரில் இதுபோல் ஒரு கோயில் இருந்துள்ளதா எனும் வியப்பை அனைவரும் பகிர்ந்துகொண்டோம். இப்படி ஒரு கோயிலைப்பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதில் அனைவர்க்கும் எதிர்பாரா வகையில் மகிழ்ச்சி. எப்போதும் கிடைக்காத வாய்ப்பாயிற்றே. கோயிலில், முன்பு பார்த்தபோதிருந்த நிலையைக்காட்டிலும் சிதைவு கூடுதலாகக் காணப்பட்டது. கோயில் முழுக்கச் சுற்றிப்பார்த்தோம். கூரையின் மேலே ஏறினோம். ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அணை பற்றிய செய்திகள், கோட்டை பற்றிய செய்திகள், கோயில் பற்றிய செய்திகள் எனப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டோம். பக்கவாட்டு வாயிலை ஒட்டி இருபுறமும் ஜகதிப்படையில் கானப்பட்ட கல்வெட்டு வரிகளைப் பார்த்தோம். சற்றே மண்ணைக் கிளறி மேலும் கல்வெட்டு வரிகள் நன்கு தெரியும் வண்ணம் செய்து, கல்வெட்டு வரிகளின் மேல், கொண்டுசென்ற சுண்ணப்பொடியை நீரில் கரைத்துப் பூசினோம். கல்வெட்டு வரிகள் நன்கு புலப்பட்டன. கல்வெட்டு வரிகள் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. மொழியும் தமிழ் அல்ல; சமக்கிருதம். ஸ்வஸ்திஸ்ரீ ஹரி -  ஜகத் -   தேவ  -  விச்வம்  -  ஸண்ட்யா  -   விபுத  -  மஹாராயஸ்ய   ஆகிய சொற்களை என்னால் இனம் காண முடிந்தது. இச்சொற்கள், கல்வெட்டுகளில் வரும் மெய்க்கீர்த்தியை ஒத்த பகுதிகளில் எழுதப்படும் சமக்கிருதச் சொற்கள் எனக் கருதலாம். ஆனால், இச் சொற்கள் நேரடியாக அரசனின் விருதுப்பெயர்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவு. ஏனெனில், மாதப்ப தண்டநாயக்கனின்  விருதுப்பெயர்களான சிதகரகண்டன், இம்மடி இராகுத்தராயன் ஆகிய பெயர்கள் இல்லை. ஆனால், வலப்புற ஜகதியில் கேத்தெய நாயக்கர் என்னும் பெயர் புலப்பட்டது. இப்பெயர் இக்கோயிலோடு தொடர்புடையது. ஏனெனில், இக்கோயில் கேத்தய தண்டநாயக்கரால் கட்டப்பட்டது. விளக்கமான செய்திகள் கல்வெட்டுச் செய்திகள் என்னும் தலைப்பில் பின்னர் சொல்லப்படும்.


கோட்டைக்கோயில்
கோயிலின் முன்மண்டபம்
திரும்புதல்
குழுவாக ஒளிப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் திரும்பும்போது மற்றொரு பரிசலும் கிடைத்தது. ஏற்கெனவே அங்கு வந்திருந்த பொங்கியண்ணன் என்பவரின் பரிசல். நான்கு நான்கு பேராக நாங்கள் இரு பரிசல்களில் அமர்ந்து திரும்பிக் கன்ராயன் மொக்கை அடைந்தோம். பொங்கியண்ணன் கன்ராயன் மொக்கையின் ஒரு வார்டுஉறுப்பினர். அவர், கோட்டையில் நாங்கள் பார்த்த கோயிலைத் தவிர்த்து மற்றும் இரு கோயில்கள் நீரில்  மூழ்கியிருப்பதாகச் சொன்னார். அவற்றுள் ஒன்றில் தனிக்கல்லில் கல்வெட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். ஒருவேளை நீர் மட்டம் இன்னும் குறையநேருமானால் அக்கோயில்கள் இரண்டுமோ அல்லது ஒன்றோ வெளியில் தெரிய வாய்ப்பு உள்ளது என அவர் சொன்னது எங்கள் ஆவலைத் தூண்டியது. அவ்வாறு கோயில் தெரிந்தால் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கூறினோம். இரு பரிசலோட்டிகளுக்கும் நன்றி சொல்லி விடைபெறுகையில், நம் ஆங்கில நாளிதழாளர் இராமனைப்பாராட்டி, தோளோடு தோள் சேர்த்து அன்பாக அணைத்து விடைபெற்றார். அப்போது இராமனின் கண்கள் சற்றே கலங்கி ஒரு நெகிழ்ச்சி வெளிப்பட்டது. ஓர் எளிய ஊரில், ஓர் எளிய குடியியைச் சேர்ந்த, படிப்பறிவில்லாத நம்மைச் சமமாக மதித்து ஒரு பேராசிரியர் தகுதியில் உள்ளவர் அன்பை வெளிப்படுத்தியது பெருமை அல்லவோ  என்னும் எண்ணம் அவர் உள்ளத்தில் ஓடியிருக்கக் கூடும்.

பரிசலோட்டி இராமனுடன் உலாக்குழு

பவானிசாகர் கோட்டைக்கோயில்

கன்ராயன் மொக்கையிலிருந்து நாங்கள் பவானிசாகர் அணைப்பகுதிக்கு வந்து அங்கிருந்த கோட்டைக்கோயிலைப் பார்த்தோம். அணை கட்டும்போது, டணாயக்கன்கோட்டைக் கோயில்களில் இருந்த சிற்பங்களை இங்கு கொண்டுவந்து தனிக்கோயில் கட்டி அதில் வைதுள்ளனர். தகவல் பலகையின்படி மாதவப்பெருமாள் கோயிலும், சோமேசுவரர் கோயிலும் டணாயக்கன் கோட்டையில் இருந்துள்ளன என அறிகிறோம். பயணத்தின் இறுதிக்கட்டமாகச் சத்தியமங்கலத்தில் நல்லுழவர் இராமசாமி அவர்களிடமும் நாளிதழ் நண்பர் தர்மராஜ் அவர்களிடமும் விடைபெற்றுக் கோவை திரும்பினோம்.

 வரலாற்றுச் செய்திகள்

தண்டநாயக்கர்கள்
டணாயக்கன் கோட்டை மாதப்ப தண்டநாயக்கன் என்பவரால் கட்டப்பட்டது. இந்த தண்டநாயக்கர்கள் யார்? கருநாடகப் போசள (ஹொய்சள) அரசர்களில் வீரசோமேசுவரன் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1234-1264 என்னும் குறிப்புள்ளது. இவனது மகன் மூன்றாம் நரசிம்மன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1263-1292. கருநாடகத்தில் மைசூரை அடுத்துள்ள இன்றைய குண்ட்லுப்பேட்டைப் பகுதி முன்னாளில் தெற்கணாம்பி என்னும் பெயரில் இருந்தது. அதன் உட்பிரிவான பதிநால்கு நாட்டின் தலைவர்களாக இந்தத் தண்டநாயக்கர்கள் ஆட்சிசெய்தனர். இவர்களில் பெருமாள் தண்ட நாயக்கன் என்பவர், மூன்றாம் நரசிம்மன், மூன்றாம் வீரவல்லாளன் ஆகியோரிடம் பிரதானி என்னும் முதன்மையான ஒரு பதவியில் பணியாற்றியவர். பெருமாள் நாயக்கனுக்கு இரு மகன்கள். ஒருவர் மாதப்ப தண்டநாயக்கன். மற்றவர் கேத்தய தண்டநாயக்கன். மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன். மூன்றாம் வீரவல்லாளனின் ஆட்சிக்காலம் கி.பி. 1293-1342. மாதப்ப தண்டநாயக்கனுக்கும் இரு மக்கள். ஒருவர் கேத்தய தண்டநாயக்கன்; சிற்றப்பனின் பெயர் கொண்டவர். மற்றவர் சிங்கய தண்டநாயக்கன்.

தண்டநாயக்கர்கள் முடிகுலய குலத்தைச் சேர்ந்தவர்கள். மோடகுலய குலம் என்றும் இக்குலத்தைச் சொல்வர். இவர்கள் தம் பெயருக்கு முன்னால் பல விருதுப்பெயர்களை வைத்துக்கொண்டனர். அவற்றுள் இம்மடி இராகுத்தராயன், சிதகரகண்டன் ஆகிய இரு பெயர்கள் முதன்மையானவை. ஒட்டைக்கு மிண்டான் என்னும் ஒரு விருதுப்பெயரும் கானப்படுகிறது. தண்டநாயக்கர்கள் தமிழகத்தின் நீலகிரியைக் கைப்பற்றியதாகப் பெருமை பேசுபவர்கள் என்னும் குறிப்பு உள்ளது. எனவே, நீலகிரிசாதார(ண)ன் என்னும் விருதுப்பெயரும் இவர்களுக்கு உண்டு.

மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான்.   மூன்றாம் நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன் கோவிலைக்கட்டினான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும்  ஒன்று எனக்கருதலாம். ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில் நீரில் மூழ்கிய செய்தி பவானி சாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் அடிப்படையில், டணாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது. எனவே, டணாயக்கன் கோட்டை கி.பி. 1292-ஆம் ஆண்டுக்குப் பின்னரே கட்டப்பட்டிருக்கவேண்டும். நாம் பார்த்த, நீரில் மூழ்கிய கோட்டைக்கோயில் மாதப்ப தண்டநாயக்கனின் மகனான கேத்தய நாயக்கன் என்பவன் கட்டிய கோயிலாகும். தன் தந்தையின் பெயரால் மாதவப்பெருமாள் கோயில் என்று பெயர் சூட்டினான்.

கல்வெட்டுச் செய்திகள்

1 டணாயக்கன் கோட்டைக்கோயில் கல்வெட்டுகள்
டணாயக்கன் கோட்டைக்கோயில் கல்வெட்டுகள் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22-இல் உள்ளன. எத்தனை கல்வெட்டுகள், அவற்றின் பாடங்கள் யாவை என்னும் செய்தி விளக்கங்கள் என்னிடம் இல்லை. நூலும் கிடைக்கவில்லை.தொல்லியல் துறையினர் வெளியிட்டுள்ள கோவை, திருப்பூர் மாவட்டக்கல்வெட்டுகள் நூலிலும் டணாயக்கன் கோட்டைக்கல்வெட்டுகள் இடம்பெறவில்லை. அவை கிடைத்தபின்னர் செய்திகளை இணைக்கலாம். தற்போது, நேரடியாகக் கோட்டைக்கோயிலில் நாம் பார்த்த கல்வெட்டுகளில், எனது முந்தைய பயணத்தின்போது பார்த்த கல்வெட்டில், “கேத்தெய நாயக்கர் என்னும் பெயர் காணப்படுகிறது. மாதப்ப தண்டநாயக்கனின் மகன் கேத்தய நாயக்கன் கட்டிய கோயில் இது என்பது இதனால் உறுதியாகின்றது. அடுத்து, இரண்டாம் முறை சென்றபோது பார்த்த கல்வெட்டு முற்றிலும் கிரந்த எழுத்துகளிலும் சமக்கிருத மொழியிலும் எழுதப்பட்டிருப்பதால், முழுச் செய்திகள், அதாவது கோயில் கட்டப்பட்ட பிறகு நடைபெற்ற பணிகள், அளிக்கப்பட்ட கொடைகள், கொடையாளிகள்  ஆகிய செய்திகள் நமக்குத் தெரியவரவில்லை.

”ஸ்வஸ்திஸ்ரீ ஹரி : ஆத்ய”  - கிரந்த எழுத்துகளில்



”மஹாராயஸ்ய”  - கிரந்த எழுத்துகளில்
2 வேறு கல்வெட்டுகள்
தண்டநாயக்கர்கள் பற்றிய பிற கல்வெட்டுகள் அவிநாசி, கொழுமம், பாப்பினி ஆகிய ஊர்களின் கோயில்களில் காணப்படுகின்றன.
அவிநாசிக் கல்வெட்டு- க.வெ.எண். 189.  AR 1909

அவிநாசிக்கோயிலில், மாதப்ப தண்டநாயக்கன் தன் பெயரால் இம்மடி இராகுத்தராயன் சந்தி என்னும் ஒரு சந்திப்பூசையையும், இம்மடி இராகுத்தராயன் திருநாள் என்னும் வைகாசி விசாகத் திருநாள் விழாவினையும் ஏற்படுத்தி அவை நடந்தேறக் கரைவழி நாட்டில் இருக்கும் தென்பள்ளி நத்தம் என்னும் சிதகரகண்ட நல்லூரைக் கொடையாக அளிக்கிறான். கரைவழி நாடு என்பது இன்றுள்ள உடுமலை, கொழுமம் பகுதிகளைக்குறிக்கும். தென்பள்ளி நத்தம் என்னும் இயற்பெயர் அமைந்த ஓர் ஊரைத் தன் பெயரால் சிதகரகண்டநல்லூர் எனப்பெயரிட்டுக் கொடையாக அளிக்கிறான். மேலும், அவிநாசியில் 2000 பணம் இட்டு புக்கொளியூர்க் குளம் வெடடுவித்து, குளத்தால் வந்த வருவாயை மேற்படி சந்திக்கும் திருநாளுக்கும் செலவிடுகிறான். அவிநாசியில் தாமரைக்குளம், சங்கமன் குளம் ஆகிய இரு குளங்கள் இன்றும் உண்டு. அவற்றில் சங்கமன் குளம் நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது என வேறொரு கல்வெட்டின்மூலம் அறியப்படுகிறது. எனவே, தாமரைக்குளம் என்பது மாதவப்பெருமாள் வெட்டுவித்த புக்கொளியூர்க் குளம் என்பதில் ஐயமில்லை. அதற்கேற்ப இக்குளத்துக்கருகில் இருக்கும் மடம் ஒன்று புக்கொளியூர் மடம் என்று இன்றுவரை அழைக்கப்பட்டுவருவதைச் சான்றாகக் கருதலாம். கல்வெட்டின் காலம் கி.பி. 1322. இக்கல்வெட்டில், மூன்றாம் வீரவல்லாளனின் மேலாண்மையின்கீழ் மாதப்ப தண்டநாயக்கன் இருப்பது புலப்படுகிறது. கல்வெட்டின் தொடக்கப்பகுதியிலேயே வீரவல்லாளன் பெயர் குறிப்பிடப்பெறுகிறது.
கல்வெட்டின் பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமந் ப்ரதாபச்சக்ரவத்தி போசள புஜபல வீரவல்லாள தேவற்கு
  செல்லாநின்ற சகரயா
2 ண்டு ஆயிரத்திருனூற்றுநாலில் ..............
3 ............................ஸ்வஸ்திமந் மடிகோலய குல கமள மார்த்தாண்ட  இம்மடி  
  இராகு
4 த்தராய சிதகரகண்ட ..............................ஸ்வஸ்திஸ்ரீமனு மஹாப்ரதாந  இம்மடி  
  இராகுத்தராயன்
5 பெருமாள் தண்ணாயக்கர் குமாரன் மாதப்ப தண்ணாயக்கன்  திருப்புக்கொளியூர்
  அவினாசியாளுடைய  நாயனாற்
6 கு நாம் விட்ட இம்மடி இராகுத்தராயன் சந்தி உதித்து பன்னிரண்டாநாழிகையில்
  சந்தி ஒன்றுக்கு கோயிற் கா
7 லால் பதக்கு அரிசி அமுதுபடி .....தனால் வந்த சாத்துப்படி பூச்சுப்படி பல
  விஞ்சனமும் கொண்டு ஸமாரா
8 தனை பண்ணவும் இம்மடி இரா(குத்த)ராயன் திருநாள் வைகாசி விசாகம்
  தித்தமாக் திருநாள் எழுந்தருளிப் ப்போதவும் இது
9 க்கு இன்னாயனார் தேவதானமா(ன நில)த்தில் நத்தமாய்க்கித் தென்பளி நத்தமான
  சிதகரகண்டநல்லூ(ர்) நாம் நா
10 யனார்க்கு விட்டு குடியேற்றிந .... இவ்வூர்..................
11 .....................
12 ....................................................இவ்வூரில் முதலுள்ள
13 தும் நாம் புக்கொளியூர்(க்)குளம் வெட்ட இரண்டாயிரம் பணம் இட்டு
  வெட்டிவிக்கையில்

அவிநாசிக் கல்வெட்டு- க.வெ.எண். 793/2003.  (கோவை மாவட்டக் கல்வெட்டுகள்)
மாதப்ப தண்ணாயக்கரின்  இளைய மகன் சிங்கய தண்ணாயக்கர் அவிநாசிக் கோயிலில் தன் தந்தை ஏற்படுத்திய சிதகரகண்டன் சந்திக்கும், திருநாளுக்கும், நித்த நிமந்தங்களுக்கும் கரைவழி நாட்டிலிருக்கும் ஓர் ஊரை இறையிலி தேவதானமாக அளிக்கிறான். கல்வெட்டின் காலம் தெரியவில்லை; போசள அரசனின் மேலாண்மைக் குறிப்பும் இல்லை.

கல்வெட்டுப்பாடம் :
1 ஸ்வஸ்திஸ்ரீ மகபிரதானி இம்மடி (இராகு)த்தராயன் சிங்கய தண்ணாயக்கர் அவிநாசி
  ஆளுடையார் கோயில் தானத்தார்க்கு நம் ஓலை குடுத்த தன்மமாவது நாயனார்
2 அவிநாசி யாளுடையார்க்கு சிதகரகண்டன் சந்திக்கும் (சி)தக(ர)கண்டன்
  திருநாளுக்கும் நித்த நிமந்தங்க(ளுக்கு)ம் உடலாக கரைவழி நாட்டு .................
3 ......................................இறையிலி (தே)வதானமாக குடுத்தோம் இவ்வூர் .................

கொழுமம் கல்வெட்டு- க.வெ.எண். 159.  AR 1909
கொழுமம் சோழீசுவரர் கோயிலில் உள்ள இக்கல்வெட்டு, மாதப்ப தண்டநாயக்கனின் மகன் கேத்தய தண்டநாயக்கன் கரைவழி நாட்டின் ஒட்டைக்குமிண்டான் என்னும் ஊரில் உள்ள நிலத்தைப் பிராமணர்க்குக் கொடைகொடுத்த செய்தியைக் கூறுகிறது. இவ்வூரின் இயற்பெயர் தென்மூர். தண்டநாயக்கர்களின் ஒரு விருதுப்பெயரான ஒட்டைக்குமிண்டான் என்னும் பெயரால் வழங்கியது. கல்வெட்டின் காலம் கி.பி. 1343.

கல்வெட்டுப்பாடம் :
1 சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் 1265 மேல் செல்லாநின்ற ஸுபாநு சம்வத்ஸரத்து
  ........................... ஸ்வஸ்திஸ்ரீ சிதகரகண்ட .....................................முடீகுலய
  கமலமார்த்தாண்ட நீலகிரி சாதாரணன் ஸ்ரீமனு மஹாப்ரதாந மாதப்ப
  தெண்ணாஆயக்கர் கேஷ்ட குமாரரான ஸ்ரீமனு மஹாப்ரதானந் கேத்தய .... ...
  யக்கற்கு விஜயாத்புதயங்களாகவும் நம்முடைய சகலாபீஷ்ட ... ப்ராமணற்க்கு
  பத்ரசாஸந ...............

கொழுமம் கல்வெட்டு- க.வெ.எண். 158.  AR 1909
கொழுமம் சோழீசுவரர் கோயிலில் உள்ள இக்கல்வெட்டு, மாதப்ப தண்டநாயக்கனின் மகன் கேத்தய தண்டநாயக்கன், மாதவச் சதுர்வேதிமங்கலம், தென்னவதரையச் சதுர்வேதிமங்கலம் ஆகிய இரு சபையினர்க்குக் கொடையாக நிலக்கொடை அளிக்கிறான். கொடை தன் நலத்துக்கும், தன் தம்பியான சிங்கயனின் வெற்றிக்கும் உயர்வுக்கும் வேண்டி அளிக்கப்படுகிறது. கொடை நிலம் கரைவழி நாட்டின் அகரம்புத்தூரைச் சேர்ந்தது. கல்வெட்டின் காலம் கி.பி. 1345. கல்வெட்டில் போசள அரசரின் மேலாண்மைக் குறிப்பில்லை.

கல்வெட்டுப்பாடம் :
1 ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் 1267 மேல் செல்லாநின்ற பார்த்திவ சம்வத்ஸரத்து ......
  .... மாதப்பதண்டநாயக்கர் ஜ்யேஷ்டகுமாரன் ஸ்ரீமனு மஹாப்ரதானந் கேத்தய
  தண்டநாயக்கன் னம்முடைய சகலாபிஷ்டஸித்யர்த்தம் ............... மாதவச் சதுர்வேதி
  மங்கலத்து மஹாஜநங்களுக்கும் தென்னவதரைய சதுர்வேதிமங்கலத்து மஹா
  ஜநங்களுக்கும் பத்ரசாஸநங் குடுத்தபடி ......................
2 கரைவழிநாட்டு ஒட்டைக்குமிண்டானில் ............... 

பாப்பினிக் கல்வெட்டு- க.வெ.எண். 293/2004.  (ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்)

காங்கயம் வட்டத்திலுள்ள பாப்பினியில் இருக்கு ஒரு தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, காங்கய நாட்டார் நீலகிரி சாதாரன் கோடையில் (இருக்கும்) நாயனார் மாதவப்பெருமாளுக்குப் பாப்பினி ஊரைக் கொடையாக அளிக்கிறார்கள். பாப்பினி ஊரின் பழம்பெயர் கொங்கரமாரி மாதவநல்லூர். கொங்கரமாரி என்பது தன்டணாயக்கர்களின் விருதுப்பெயர்களுள் ஒன்று என அறிகிறோம். இக்கல்வெட்டில் டணாயக்கன் கோட்டை பற்றிய நேரடிக்குறிப்பு காணப்படுகிறது. டணாயக்கன் கோட்டையின் வேறொரு பெயர் நீலகிரி சாதாரன் கோட்டை. கல்வெட்டில் அரசர் குறிப்பில்லை. காலக்குறிப்புமில்லை.

கல்வெட்டின் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ
2 நீலகிரி சா
3 தாரன் கோ
4 ட்டையில்
5 நாயனார் ஸ்ரீ
6 மாதவப்
7 பெருமாளுக்
8 குக் காங்
9 கய னாட்டா
10 ர் திருவி
11 டையாட்டமா
12 க விட்ட பா
13 ற்பனியான
14 கொங்கரமா
15 ரி மாத
16 வ நல்லூர்

முடிவுரை 

    டணாயக்கன் கோட்டை, வரலாற்று முதன்மை பெற்ற ஒன்று. போசளர் (ஹொய்சளர்) காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டையும், கோட்டைப்பகுதியில் இருந்த சோமேசுவரர் கோயிலும் கி.பி. 1310 ஆண்டளவில் முகம்மதியப் படைத்தாக்குதலுக்கு உள்ளாயின என்றும், முகமதியத் தாகுதல்களிலிருந்து மீண்ட போசளர் கோட்டையையும், கோயிலையும் புதுப்பித்தனர் என்றும் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டவன் பல்லய தண்டநாயக்கன் என்றும் கூறப்படுறது. இவனுக்கு வலிய தண்டநாயக்கன் என்னும் பெயரும் உண்டு. தொல்லியல் துறையின் 1920-ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில்,   கி.பி. 1310 ஆண்டளவில் முகம்மதியரின் தொடர்த் தாக்குதல்களால் கருநாடகத்தில் போசள அரசு சிதறுண்டபோது மூன்றாம் வீர வல்லாளன் (1292-1342), தமிழகத்தில் கொங்குமண்டலத்தின் ஒருமூலையில் தன் மேலாண்மையை நிலைநிறுத்தினான் என்னும் குறிப்பு உள்ளது. இவ்விரு தரவுகளையும் கொண்டு, டணாயக்கன் கோட்டை கி.பி. 1310 ஆண்டளவிலேயே இருந்துள்ளது என்று கருத வாய்ப்புள்ளது. எனில், கோட்டை எழுநூறு ஆண்டுகள் பழமைகொண்டது எனலாம்.   

         திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் இக்கோட்டை பெரும் பங்கு வகித்தது. ஆங்கிலேயர்கள், மைசூர் அரசுக்குள் மதுவைக் கொண்டுவராவண்ணம் தடுக்கும் ஒரு தடுப்புச் சாவடியாக இக்கோட்டை விளங்கியது.  மைசூர்ப் போர்கள் நடந்தபோது ஆங்கிலேயரும், திப்பு சுல்தானும் இப்பகுதியில் சந்தித்துள்ளனர் எனலாம். மைசூர் மண்ணின் மைந்தரான அரசு வழியின் தோன்றல் திப்பு சுல்தானின்  ஆட்சிக்காலத்தில் சிறுவனாயிருந்த காரணத்தால் மைசூர் அரசி, அவனை சீரங்கப்பட்டணத்தின் அரங்கநாதர் கோயிலின் கோபுர நிலை மாடத்தில் மறைத்து வைத்துப் பாதுகாத்து வந்ததையும், அரண்மனைக்குள்ளேயே சிறைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த அந்த அரசி தன் அறையில் இருந்தவாறே சிறுவன் இருந்த மாடத்தைக் கண்காணித்து வந்ததையும், திப்பு சுல்தானிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் அரசியின் திட்டத்துக்கு டணாயக்கன் கோட்டைத் தலைவர்கள் துணையாயிருந்தனர் என்பதையும் கோவை ஈ. பாலகிருஷ்ண நாயுடு அவர்கள் தாம் எழுதிய “டணாயக்கன் கோட்டை” என்னும் புதினத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். டணாயக்கன் கோட்டையைப் பற்றியும், அதைப் பின்னணியாக வைத்தும் எழுதப்பெற்ற புதினம் இது ஒன்றாகத்தான் இருக்கும். 

          தஞ்சைக்கோயிலோ, சிதம்பரம் கோயிலோ நாம் நினைத்தபோது செல்லலாம். ஆனால், வழிபட இறையுருவம் இல்லையெனினும், டணாயக்கன் கோட்டையை எண்ணியவுடன் சென்று பார்க்க இயலாது. பத்து ஆண்டுகளோ, மூன்று ஆண்டுகளோ பவானி ஆற்றில் நீர் வற்றினால் மட்டுமே இக்கோட்டையைப் பார்க்க இயலும். அவ்வாறான அரிய வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தி வரலாறு தருகின்ற மகிழ்ச்சியைப் பெற்றோம். பரிசலோட்டி இளைஞன் இராமன் கூறியது இங்கே நினைவுக்கு வருகிறது. டணாயக்கன் கோட்டைக்கோயில் முழுதாக நீரில் மூழ்கியிருக்கும் நாள்களில் கோயில் கூரையின் மேல் அவனுடைய படகு செல்வதை அவன் உணரந்து மகிழ்ந்திருக்கிறான்.  





நன்றி :  திப்பு சுல்தான்- ஆங்கிலேயர்  பற்றிய குறிப்புகள் உதவி
              திரு. மீனாட்சிசுந்தரம், இதழியலாளர்.

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.