மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  

படிக்கும் பயிற்சி தொடர்கிறது.
இப்பகுதியில் நான்கு ஒளிப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நான்கு படங்களையும் ஒருசேரப்படிக்கவேண்டும். அதாவது முதல் படத்தின் 
முதல் வரி, அடுத்து இரண்டாவது படத்தின் முதல் வரி என வரிசைப்
படுத்திப்படித்தால் நீண்ட சொற்றொடர்  கிடைக்கும். பின்பு முதல் படத்தின் 
இரண்டாவது வரி, இரண்டாவது படத்தின் இரண்டாவது வரி எனப் படிக்க
வேண்டும். 
தமிழ் எழுத்தல்லாது கிரந்த எழுத்துகள் வரும் பகுதி அடுத்த பாடத்தில் 
விளக்கப்படும். 

படம் - 1படம் - 2


படம் - 3படம் - 4சுந்தரம்.

திங்கள், 27 ஏப்ரல், 2015

தொல்லியல்துறை அறிஞர் க.குழந்தைவேலன் அவர்களின் சொற்பொழிவிலிருந்து.


         அண்மையில் கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் தொல்லியல் துறையில் பணியாற்றிய கல்வெட்டு ஆய்வறிஞர் திரு.க.குழந்தைவேலன் அவர்கள் கல்வெட்டுகள் பற்றி உரையாற்றினார். பயனுள்ள பல செய்திகளை நாம் அறிய முடிந்தது. சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டே எடுத்த சிறு சிறு குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இக்கட்டுரையைப் பகிர்ந்துகொள்கிறேன்.

         சொற்பொழிவாளர், மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் “கொங்கு நாட்டுப் பெருவழிகள்என்னும் தலைப்பில் கட்டுரை படித்தவர். “கல்லும் சொல்லும்”, “பாளையப்பட்டு வம்சாவளிகள்ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

         இனி, அவருடைய சொற்பொழிவிலிருந்து:

வரலாற்றுக்கு அடிப்படையாய் கல்வெட்டுகள் அமைகின்றன. இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் தமிழகத்தில் கிடைத்தவையே எண்ணிக்கையில் மிகுதி. தமிழ் நாட்டு வரலாறு, மொழி மற்றும் பண்பாட்டை அறிய அவை பெரிதும் துணை செய்கின்றன. பழந்தமிழர், பல்வேறு தாக்கங்களுக்கிடையில் மொழியைக் காப்பாற்றியுள்ளனர். மொழியில் பெயர்ச்சொற்கள் முதன்மையானவை. தமிழர், ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கும்போது அப்பொருளின் வண்ணம், உருவம், பயன்பாடு ஆகியனவற்றின் அடிப்படையில் பெயர் அமைத்தனர். சங்க காலத்திற்குப் பின்னர் வந்த அரசர்கள் வடமொழிக்குத் துணை நின்றதாகத் தெரிகிறது. அரசர்களின் பெயரில் தமிழ் இல்லை என்பதைப் பாருங்கள். தமிழ் மொழியின் அடையாளம் இல்லை. கோயில்களே முதன்மையாய் இருந்த அக்கால கட்டத்தில், வடமொழிப்பூசையாளர் தம்மை நிலை நிறுத்திக்கொள்ளப் பல செயல்பாடுகளில் ஈடுபட்டனர். ஊர்ப்பெயர்களையும், கோயில்களின் இறைவர் பெயர்களையும் தமிழ் மொழியிலிருந்து  வடமொழியாக்கம் செய்தனர். ஆனால் மக்கள் வழக்கில் தமிழ் இருந்ததால் கல்வெட்டுகளில் மக்களின் வழக்காற்றுக்கேற்ப நல்ல தமிழ்ப்பெயர்கள் நிலை நின்றன. எடுத்துக்காட்டாக நடராசர் என்னும் வடமொழிச்சொல் தேவாரத்திலோ, கல்வெட்டுகளிலோ இல்லை. ஆடவல்லான், கூத்தன், கூத்தபிரான், நக்கன் ஆகிய பெயர்களே கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஆடவல்லான் வடமொழியாக்கம் பெற்று நடராசர் ஆயிற்று. இதே போல், சிற்றம்பலம் சிதம்பரம் ஆயிற்று. தஞ்சைக்கருகில் உள்ள ஊர் திருநெல்லிக்கா. நெல்லிக்கு வடமொழியில் அமலா என்று பெயர். திருநெல்லிக்கா அமலேசுவரம் ஆயிற்று.

         முன்னரே குறிப்பிட்டவாறு, தமிழர் வண்ணம், உருவம், பயன்பாடு ஆகிய உள்ளடக்கங்களின் அடிப்படையில் பெயர் வைத்தனர். வள்ளி என்று ஒரு கிழங்கு பண்டு தொட்டு உள்ளது. தற்காலத்து வரவாகிய மரவள்ளிக்கிழங்குக்கு அதன் தோற்றம் கருதி இப்பெயர் அமைந்தது. சில இடப்பகுதிகளில் (குறிப்பாகக் கொங்குப்பகுதியில்) இக்கிழங்கு குச்சிக்கிழங்கு என அழைக்கப்படுகிறது. இதுவும் உருவம் கருதித்தான். குழந்தைக்கண்ணன் வெண்ணெய்ப்பிரியன். வெண்ணெய் கிடைத்ததும் கூத்தாடுவான். எனவே, அவன் தமிழில் வெண்ணெய்க்கூத்தன் ஆகிறான். வடமொழியிலும் அதே வெண்ணெயை அடிப்படையாக வைத்து நவனீதகிருஷ்ணன் என்கின்றனர். நவனீதம் என்பது வெண்ணெயின் வடசொல். மக்களுக்கு எது எட்டும்? எது புரியும்? வாமன அவதாரம் நமக்குத்தெரியும். குறுகிய வடிவம் உடையவன். எனவே தமிழர் குறளப்பன் என்றனர். வேணுகோபாலன், தமிழர்க்குக் குழலூதும் பிள்ளை. கல்வெட்டுகளில் இறைவர் பெயர்களெல்லாம் தமிழில். வடவர் மொழிமாற்றம் செய்தாலும் தமிழர் இடங்கொடுத்ததால்தான் இம்மாற்றம் நிகழ்ந்தது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாதல்லவா?

         கி.பி. முதல் நூற்றாண்டில்தான் சமற்கிருதம் வந்தது. அதற்கு முன்னர் பிராகிருதம் இருந்தது. பல்லவர் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் வட்டெழுத்துகளே இருந்தன. எழுத்துகளில் மாற்றம் ஏற்படப் பல்லவர்களே காரணம். அவர்கள் வடபுலத்தவர். அங்கிருந்த எழுத்து வரிவடிவத்தின் தோற்றத்தைத் தமிழில் புகுத்தினார்கள். பல்லவக் கல்வெட்டு எழுத்துகள் மேலும் கீழுமாக நீண்டிருக்கும். வடவரின் வல்லாண்மை. நாட்டியக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் பிறப்பிடம் தமிழகம். ஆனால் இக்கலைகள் பற்றிய தமிழ் நூல்கள் மறைந்து வடமொழி நூல்கள் தோன்றினாலும் அவை தமிழகத்தில்தான் கிடைத்தன.

         வடமொழியில் இறைவன் இருப்பிடத்தைக் கர்ப்பக்கிருகம் என்றனர். நாமும் தற்போது அதனைத் தமிழ்ப்படுத்தி கர்ப்பம்=கரு கிருகம்=அறை -> கருவறை என மாற்றிகொண்டிருக்கிறோம். ஆங்கிலச் சொல்லான “வாட்டர் பால்ஸ்”  என்பதை நீர் வீழ்ச்சி என்பது போல. அருவி என்னும் தமிழ்ச் சொல் நமக்குள்ளதை மறந்தோம். கல்வெட்டுகளில், கருவறைக்கு அழகான இயல்பான தமிழ்ப்பெயர் உண்ணாழிகை என்பது காணப்படுகிறது.  உள்+ நாழிகை - > உண்ணாழிகை. அகநாழிகை எனவும் மற்றொரு சொல் உண்டு.  நிலவின் வளர்பிறையும் தேய்பிறையும் பதினான்கு நாள்கள். கல்வெட்டுகளில் இவற்றை “பக்கம்என்னும் சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அஷ்டமி, நவமி என்பனவற்றை எட்டாம் பக்கம், ஒன்பதாம் பக்கம் என்று எழுதியிருக்கிறார்கள். அமாவாசை “காருவா” (கார்+உவா) என்றாகிறது. தற்போது ஆங்கிலத்தில் Personal  Assistant  என நாம் சொல்லுவதைக் கல்வெட்டில் அணுக்கன் என்று குறித்திருக்கிறார்கள். அணுக்கி என்பது பெண்பாற்சொல். நெருங்கி இருத்தலால் இப்பெயர் வந்தது. இவ்வாறு நல்ல தமிழ்ச்சொற்கள் கல்வெட்டுகளில் உள்ளன. நாம் பயின்று வழக்கத்தில் கொண்டுவரவேண்டும். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: அள் என்பது வேர்ச்சொல்லாக இருக்கலாம். அள் -> அண் எனத்திரிகிறது. அண்மை, அணி, அணு, அணுகு ஆகிய சொற்களை நோக்குக. இப்போது பரவலாகக் கையாளும் “அள்ளக்கைஎன்னும் சொல்லும் “அள்”  வேரிலிருந்து பிறந்ததாய் இருக்கவேண்டும். “அள்” , பக்கத்தைக் குறிக்கும். கொங்குத் தமிழில் மக்கள் வழக்கில் “இந்தப்பக்கம்”, “அந்தப்பக்கம்என்பன “இந்தள்ளை” , “அந்தள்ளைஎன வழங்குவதையும் நோக்குக. (திரு. கணேசன் அவர்களைப்போல்  சொல்லாய்வு செய்யும் முயற்சி.)

         சாதிப்பெயர்கள் பழங்கல்வெட்டுகளில் இல்லை. தொழிலின் அடிப்படையில் பெயர்கள் வழங்கின. முதலி, பிள்ளை என்பன அரசு நிர்வாகத்தில் உயர்மட்டத்தில் இருந்த முதன்மையைச் சார்ந்து அமைந்த பெயர்கள். பதவிப்பெயர் என்றும் சொல்லலாம்.

         கல்வெட்டுகளில் பல்வேறு பெருவழிகளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதியமான் பெருவழி, இராசகேசரிப்பெருவழி ஆகியன குறிப்பிடத்தக்கவை. சேலம் ஆத்தூர் அருகேயுள்ள ஆறகழூரிலிருந்து காஞ்சி வரை சென்ற பெருவழி மகதேசன் பெருவழி என்னும் பெயர் பெற்றிருந்தது. அக்கல்வெட்டில் இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள தொலைவு 27 காதம் என்பதைக் குறிக்க காதம் என்றெழுதி அதன் பக்கத்தில் இரண்டு பெரிய புள்ளிகளையும், அவற்றைத்தொடர்ந்து ஏழு சிறு புள்ளிகளையும் செதுக்கியிருக்கிறார்கள். இரண்டு பெரிய புள்ளிகள் இருபது என்னும் எண்ணிக்கையையும், சிறு புள்ளிகள் ஏழு என்னும் எண்ணிக்கையையும் குறிப்பன. ஒரு காதம், 11 கி.மீ. தொலைவு எனக் கருதப்படுகிறது.

-------------  உரை முடிவு  --------------------

         உரை முடிவில் பலரும் பல ஐய வினாக்களை எழுப்பினர். சில விளக்கங்கள் பறிமாறப்பட்டன. அவற்றிலிருந்து சில செய்திகள்:

  • தகடூர் (தர்மபுரிப்பகுதி) கொங்கு நாட்டைச் சேர்ந்ததல்ல. தகடூர் நாடு என்னும் பெயரமைந்த தனி நாடு.
  • கொங்கு நாடு ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு பகுதி வரை அமைந்திருந்தது.
  • கிரந்த எழுத்து - பல்லவர்கள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு அளவில் வடமொழிச்சொற்களைப் பயன்படுத்த உருவாக்கினார்கள். ஆனாலும், கல்வெட்டுகளில் வடமொழிச்சொற்களைத் தமிழ்ப்படுத்தியே எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக செங்கம் நடுகற்களில் “ஸிம்ஹ விஷ்ணு”  என்பதைச் “சிங்கவிண்ண”  என்று எழுதியிருக்கிறார்கள். (இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பு: விஷ்ணு, விண்ண என மாற்றம் பெற்றதுபோல் விஷ்ணு கோவிலும் (பெருமாள் கோவில்) “விண்ணகரம்”  எனக் கல்வெட்டில் பயில்கிறது.)
  • அசோகர் காலத்தில் பிராமியைப் பொதுமக்கள் பயன்படுத்தவில்லை எனத்தெரிகிறது. ஆனால், தமிழகத்தில் பொதுமக்களும் பயன்படுத்தினர். சான்று: சமணக் குகைத்தளங்களில் உள்ள பிராமிக்கல்வெட்டுகளைப் பொதுமக்களில் பலர் வெட்டுவித்திருக்கிறார்கள். பெருங்கற்கால வாழ்விடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • கொங்கு நாட்டுக்கல்வெட்டுகள் இருபதில் பெருவழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • கோயில் திருப்பணி, குறிப்பாகக் “கும்பாபிஷேகம்”  தமிழில் நடைபெற்றதா எனபதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால், கும்பாபிஷேகம் தமிழ்ச் சொல்லால் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆனைமலைக் குடைவரைக் கோயிலான நரசிங்கப்பெருமாள் கோயில் கல்வெட்டில் (வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு) பராந்தக பாண்டியனின் உத்தரமந்திரியான மாறங்காரி என்பவன் இக்கோயிலைக் கட்டுவித்தபோது, பணிகள் முடியுமுன்னே இறந்து போகிறான். அவனுடைய தம்பி, மாறன் எயினன் என்பவன் உத்தரமந்திரி பொறுப்பேற்றதும் பணிகளை முடித்துக் கும்பாபிஷேகம் செய்கிறான். கும்பாபிஷேகம் செய்தான் என்பது கல்வெட்டில் நீர்த்தெளித்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இராசகேசரிப் பெருவழி (கோவைக்கருகே உள்ளது), இந்தியாவிலேயே உள்ள பழைய பெருவழியாகும். இன்றும், அப்பெருவழியின் மூலவழி மூன்று கி.மீ. தொலைவு உள்ளது.
  • கல்வெட்டுகளில் பறையன் என்னும் சொல் வேளாளர் பெயரோடு சேர்ந்து காணப்படுகிறதே? திரு. பூங்குன்றன் அவர்களின் விளக்கம்: பறையன், பாணன், கடம்பன், துடியன் என்பன முல்லைத்திணைக்குரிய பெயர்கள். முல்லைநிலப் பறையர் குடிகள் வேளாளர்களாக மாறியபின் பறையன் என்னும் பெயரை அடைமொழியாகக் கொண்டனர்.
  • சமணக் குகைத்தளங்கள் பள்ளி, பாழி என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. பள்ளி என்னும் இந்தச்சொல் கல்விகற்கும் இடம் என்பதைக்குறிக்கிறதா ?  - இல்லை. பள்ளி என்பது படுக்குமிடத்தை அல்லது தங்குமிடத்தை மட்டுமே குறிக்கும். அங்கே கல்வி கற்க மக்கள் வந்தார்கள். அவர்கள் “மாணாக்கன்” , “மாணாக்கிஎனக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்கள்.
  • கல்வெட்டு எப்படி எழுதியிருப்பார்கள் ? முதலில் கல்லில் செம்மண் குழம்பு கொண்டு எழுதிப் பின்னர், கல்தச்சர் என்னும் சிற்பாச்சாரிகள் உளி கொண்டு வெட்டினர்.


கட்டுரை ஆசிரியர் குறிப்பு : பல்லவர்களின் கிரந்தக் கல்வெட்டு, பல்லவர்களின் தமிழ்க்கல்வெட்டு, “மாணாக்கிஎன்னும் சொல் வந்துள்ள வட்டெழுத்துக்கல்வெட்டு, கும்பாபிஷேகம் பற்றிய ஆனைமலைக் கல்வெட்டு ஆகியவற்றின் ஒளிப்படங்களை இங்கே பார்வைக்குத் தந்துள்ளேன்.

 பல்லவர் கிரந்தக்கல்வெட்டு :


கல்வெட்டுப்பாடம் :

                                                                       அமேயமாய :
                                                                       அப்ரதிஹதசாஸந
                                                                       அத்யந்தகாம
                                                                      அவநபாஜந :
பல்லவர் தமிழ்க்கல்வெட்டு : 


 கல்வெட்டுப்பாடம் :

                                                 ஸ்ரீதிருக்கழுக்குன்றத்து பெருமான்
                                                னடிகளுக்கு களத்தூர் கோட்டத்
                                                து ....................   திருக்கழுக்குன்ற
                                                த்து ஸ்ரீமலை மேல்
                                                (மூ)லட்டானத்து பெருமான்
                                                னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா
                                                க வாதாபிகொண்ட நரசிங்கப்
                                                போத்த(ர)சர் (வை)த்தது


ஆனைமலைக் கல்வெட்டு : கல்வெட்டுப்பாடம் :

                                                                கோமாறஞ்சடையற்கு உ
                                                                த்தரமந்த்ரி களக்குடி வை
                                                                த்யந் மூவேந்தமங்கலப்
                                                                பேரரையன் ஆகிய மாறங்
                                                                காரி இக்கற்றளிசெய்து
                                                                நீர்த்தெளியாதேய் ஸ்வர்க்காரோ
                                                                ஹணஞ்செய்தபின்னை அவ
                                                                னுக்கு அநுஜந் உத்தர
                                                                மந்த்ரி பதமெய்தின பாண்டி
                                                                மங்கலவிசைஅரையன்
                                                               ஆகிய மாறன்னெஇ
                                                               னன்முகமண்டமஞ்செ
                                                               ய்து நீர்த்தெளித்தான்


 ஐவர்மலை வட்டெழுத்துக்கல்வெட்டு - மாணாக்கி குறித்தது :கல்வெட்டுப்பாடம் :

                                                           ஸ்ரீபெரும்பத்தி
                                                           ஊர் பட்டிநிக்குர
                                                           த்தியர் மாணாக்கிய
                                                           ர் அவ்வணந்திக்
                                                           குரத்தியர் செய்
                                                           வித்த தேவர்கட்டுரையாக்கம் : து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி: 9444939156. 

புதன், 8 ஏப்ரல், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் பகுதி 6

து.சுந்தரம், கோவை.


         தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளிலிருந்து சில கல்வெட்டுகளை இங்கே படித்துக்கொண்டிருக்கிறோம்.  மேலும் இரு கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. எழுத்துகளில் பயிற்சி முடித்தவர்கள் இவற்றையும் படியுங்கள்.

கல்வெட்டு 1
கல்வெட்டின் பாடம் கீழே தரப்பட்டுள்ளது. உங்கள் பாடத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

கல்வெட்டின் பாடம்:

ங்குன்றி வயிர சாயலம் ஒன்று பொன் நூற்று இ
பொட்டு ஓரணை பொன் தொண்ணூற்றுக்கழஞ்
பத்து அறுகழஞ்சேய் இரண்டு மஞ்சாடியுங்
ரணை பொன் நூற்றுஐம்பதன் கழஞ்ச
ற்று நாற்பத்துநாற் கழஞ்சு திருவடிக்காரை உ
தின்கழஞ்சேகால்-பாதசாயலம் ஓரணை 
கால்மோதிரம் பத்தினால் பொன் பதினாற்க
குன்றி-தைஞ்சை விடங்கர் நம்பிராட்டியார்
..க ஒன்று பொன் நானூற்று நாற்பத்து

குறிப்பு: பாதசாயலம் கிரந்த எழுத்துகள்

கல்வெட்டு 2
கல்வெட்டின் பாடம்:

த்து ஐங்கலனே ஒருதூணிப்பதக்கு முன்னாழி-இன்னாட்டு
அரையேமூன்றுமாமுக்காணி அரைக்காணிக்கீழ் எட்டுமாவி
நிலம் இரண்டேஒருமாவரை அரைக்காணிமுந்திரிகைக்கீழ்
காணிக்கீழ் ஒன்பதுமா முக்காணிக்கீழ் முக்காலே ஒரு மாவி
நாலாயிரத்து எழுபதின் கலனே ஐங்குறுணி ஐஞ்ஞாழி
ரை அரைக்காணிக்கீழ் எட்டுமாவிலும் ஊரிருக்கையுங் கு
ல்களாலும் சுடுகாட்டாலும் இறைஇலிநிலம் முக்கா
அரைக்காணிமுந்திரிகைக்கீழ் அரைக்காணிக்கீழ் எட்டு ம
ண்டாயிரத்து ஒருநூற்றுஎண்பத்து முக்கலனே ஐங்கு


து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.


  புதன், 1 ஏப்ரல், 2015

உடுமலை-கல்லாபுரம் தூண் கல்வெட்டு
                                                       து.சுந்தரம், கோவை.         உடுமலை அமராவதி அணைக்கு வெகு அண்மையில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கல்லாபுரம். சூழலில் பசுமை எழில்.  கல்லாபுரம், தென் கொங்குப்பகுதியான  உடுமலை வட்டாரத்தில் அமைந்துள்ள ஊர். பண்டை நாளில் கொங்கு நாடு என்னும் பெரு நிலம் இருபத்து நான்கு சிறு நாட்டுபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நாட்டுச் சபையினரால் நிருவாகம் செய்யப்பட்டு வந்தது. அவற்றில் ஒன்றான கரைவழி நாட்டில் உடுமலை வட்டாரம் அமைந்திருந்தது. (உடுமலையை அடுத்துள்ள பழனி வைகாவி நாட்டைச் சார்ந்தது) . அக் கரைவழி நாட்டைச் சேர்ந்ததாகக் கல்லாபுரம் விளங்கியது. ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு, கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் ஆட்சிக்காலத்திலேயே (கி.பி. 1224) கல்லாபுரம், அதன் இயற்பெயரான கல்லாபுரம் என்ற பெயரோடு விளங்கியது மட்டுமல்லாமல், கொழுமத்தில் அமைந்துள்ள வீரசோழீச்சுரம் என்னும் சிவன் கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட தேவதான ஊராகவும் விளங்கியது. தேவதான ஊர் என்னும் தகுதி ஏற்பட்டதும் அதற்கு “வீரசோழ நல்லூர்என்ற சிறப்புப் பெயர் அமைந்தது. சான்று: கல்வெட்டு எண்-157, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-26. கல்வெட்டு வரிகள் வருமாறு:

              ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்தி கோனேரின்
       மை கொண்டான் கண்டன் அதியனான வளவினா
       ன் உடையாநுக்கு நம் ஓலை குடுத்தபடியாவது ஆ
       ளுடையார் வீரசோழீஸ்வரமுடையார் தேவதா
       நம் கல்லாபுரமான வீரசோழநல்லூரில் ........
  
     
மற்றொரு கொங்குச்சோழனான விக்கிரமச்சோழனின் ஆட்சியில் (கி.பி.1256) அவனது பெயரிலேயே விக்கிரமசோழநல்லூர்என வழங்கியது. சான்று: கல்வெட்டு எண்-153, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-26. கல்வெட்டு வரிகள் வருமாறு:

            ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்தி கோனேரின்
            மை கொண்டாந் கண்டன் காவநாந சிவபத்த
            னுக்கு நம் ஓலை குடுத்தபடியாவது கரைவழி
            நாட்டுக் கல்லாபுரமான விக்கிரமசோழநல்லூ
            ரில் நாம் இவனுக்கு இட்ட ....


இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடைய கல்லாபுரத்துக்கு 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  கல்லாபுரத்தைச் சேர்ந்த நண்பரும் வரலாற்று ஆர்வலருமான ஜான்சன் தம் ஊரில் ஒரு தூணில் கல்வெட்டு எழுத்துகள் காணப்படுவதாகவும், அதை நேரில் கண்டு ஆய்வு செய்யுங்கள் எனவும் அழைத்தார். கல்லாபுரம் சென்றதும், அவர் ஊருக்குள் உள்ள ஒரு தெருவில், நிறுத்தப்பட்ட நிலையில் இருந்த ஒரு தூணைக் காட்டினார். கான்கிரீட்”  போடப்பட்ட அந்தச் சிறிய தெருவில், மிகப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட தூண். ஏறத்தாழ, நாலரை அடி உயரத்தில் இருந்த அத்தூணின் அடிப்பகுதி நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்தது. மேலே, அதன் கால்என்னும் பகுதி, எண் பட்டை மற்றும் பதினாறு பட்டை அமைப்போடும் அதன் உச்சிப்பகுதி சதுர அமைப்போடும் காணப்பட்டன. நான்கு சதுரப்பரப்புகள். இரண்டு சதுரப்பரப்புகளில் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. முன்புறச் சதுரப்பரப்பில் ஐந்து வரிகளும், அதைத் தொடர்ந்த பக்கச் சதுரத்தில் நான்கு வரிகளும் இருந்தன. வழக்கம்போல, வெள்ளைச் சுண்ணப்பொடியை ஈரமாகப் பூசிக் காயவைத்தபின் எழுத்துகளைப் படிக்க முடிந்தது. கல்வெட்டு வரிகள் வருமாறு:


முன் பக்கச் சதுரம்           அடுத்துள்ள பக்கச் சதுரம்

ஸ்வஸ்திஸ்ரீ வீரரா      சேந்திரதேவ

ற்கு யாண்டு           யக வது கடற்       (யக=11 தமிழ் எண்கள்)

றூர் இருக்குந்          தேவரடியா

ரில் சொக்கந்          வெம்பி இட் 

ட தூண் நாலைந்து வரிகளே அமைந்த கல்வெட்டாயினும், முழுமையான ஒன்றாகவும் காலத்தைக் கணிக்க உதவும் வகையிலும் கல்வெட்டு அமைந்தது சிறப்பானது. ஒரு ஆய்வாளருக்கு இதைவிட மகிழ்ச்சி வேறில்லை. கொங்குச்சோழன் வீரராசேந்திரனின் பதினோராம் ஆட்சியாண்டில் கடற்றூரில் இருக்கும் தேவரடியாரான சொக்கன் வெம்பி என்பவள் இத்தூண் கொடை அளித்திருக்கிறாள் என்பது செய்தி. கடற்றூர் என்பது உடுமலை அருகே தற்போதுள்ள கடத்தூர் ஆகும். கோயிற்பணிக்குத் தம்மை ஒப்புக்கொண்ட ஆடல் மகளிரில் ஒருத்தி தூண் கொடை அளித்துள்ளாள். அவள் பெயரில் உள்ள வெம்பி என்பதை “வேம்பிஎனவும் படிக்கலாம். கல்வெட்டுப் பொறித்த காலத்தில், எகரம், ஏகாரம் ஆகிய இரண்டையும் குறிக்க ஒரே எழுத்துக்குறியீடுதான் வழக்கில் இருந்தது. வீரராசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207 கி.பி. 1256 எனத் தொல்லியல் அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். அதன் அடிப்படையில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலம் கி.பி. 1218 ஆகும்.  கல்லாபுரத்தில் பழங்கோயில் எதுவும் காணப்படாத நிலையில், கல்வெட்டுள்ள இத்தூண் எக்கோயிலைச் சேர்ந்ததாக இருக்கும் என்பது புலப்படவில்லை. கல்வெட்டுகள் உள்ள வேறு தூண்களோ தனிக்கற்களோ கல்லாபுரத்தில் காணப்படாமையால் மேற்படி தூண் கல்வெட்டின் மூலம் பற்றி அறியக்கூடவில்லை. மேற்படி கல்வெட்டில் கடத்தூர் குறிக்கப்பெறுவதால், கடத்தூர் கோயிற்கல்வெட்டுகளில் ஏதேனும் குறிப்புகள் கிடைக்குமா என ஆராய்ந்ததில் கல்லாபுரம் கல்வெட்டோடு தொடர்புடைய செய்தி ஒன்று தெரியவந்தது. கடத்தூரில் மருதீசர் கோயிலும், கொங்கவிடங்கீசுவரர் கோயிலும் உள்ளன. கொங்கவிடங்கீசுவரர் கோயில் சிதைந்த நிலையில் உள்ளது. அதைப்பற்றிய தனிக்கட்டுரையை இதே வலையகத்தில் காணலாம். மருதீசர் கோயிலில் உள்ள எழுபது கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் “கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அக்கல்வெட்டுகளைப் பார்வையிட்டதில், கல்வெட்டு எண் 59ஆ/2004 குறிக்கும் கல்வெட்டில், கல்லாபுரக் கல்வெட்டில் சுட்டப்பெறும் தேவரடியார் சொக்கன் வெம்பியின் பெயர் காணப்பட்டது. அக்கல்வெட்டின் பாடம் வருமாறு:


              ஸ்வஸ்திஸ்ரீ வீ
       ர நாராயண தே
       வற்கு யாண்
       டு மூந்றாவது திரு
       மருதுடையார்
       தேவரடியா
       ரில் சொக்கந்
       வெம்பியேந்
       இத்தூணும் போ
       திகையும்

இக்கல்வெட்டு, கடத்தூர் மருதீசர் கோயில் கோபுரத்தின் உள்மண்டபத்தின் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கல்வெட்டுகளையும் ஒப்பிடும்போது, இரண்டிலும் மருதீசர் கோயிற்பணியில் இருந்த தேவரடியாரான சொக்கன் வெம்பி பெயர் காணப்படுவதினின்றும், கல்லாபுரம் தூண் கல்வெட்டு, கடத்தூர் கோயில் கோபுர உள்மண்டபத்தைச் சார்ந்ததாக இருப்பது பெறப்படுகிறது. ஆனால், தூண் இடம்பெயர்ந்து கல்லாபுரம் வந்தது எவ்வாறு என்பது புலப்படவில்லை.  மேற்படி கல்லாபுரம் தூண் கல்வெட்டிலும், கடத்தூர் தூண் கல்வெட்டிலும் குறிப்பிடப்பெறும் அரசர்கள் ஒருவரே அல்லர் என்பதை இங்கே நோக்கவேண்டும். கல்வெட்டின் தொடக்கத்தில், அக்கல்வெட்டைப் பொறிக்கும்போது ஆட்சியில் இருக்கும் அரசன் பெயரையும் ஆட்சியாண்டையும் குறிப்பது கல்வெட்டு மரபு. அந்த மரபின்வழி, சொக்கன் வெம்பி என்னும் தேவரடியார் தான் அளித்த கொடையைப்பற்றிய கல்வெட்டை வெட்டுவித்தபோது, ஒன்றில் வீரராசேந்திரனையும், மற்றொன்றில் வீரநாராயணனையும் சுட்டியிருப்பதினின்றும் இவ்விரு அரசர்களும் ஒரே காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தனர் என்பது பெறப்படுகிறது. இது எவ்வாறு நிகழக்கூடும் என ஆய்வோம்.

         மேற்குறித்த இரு கல்வெட்டுகளும்  கரைவழிநாடு என்ற தென்கொங்கைச் சார்ந்தவை. கோவை மாவட்டக்கல்வெட்டுகள்நூல், தென்கொங்கு வீரகேரளர்கள் ஆட்சியிலும் வடகொங்கு கொங்குச்சோழர்(கோநாட்டார்) ஆட்சியிலும்  இருந்தன; வீரகேரளர் சுயாட்சி பெற்றுச் சோழர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆண்டனர் எனக் குறிப்பிடுகிறது. இக்குறிப்பின் அடிப்படையில் கொங்குச்சோழன் வீரராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் மேற்குறித்த (வீரகேரள அரசன்) வீர நாராயணனும் ஆட்சியில் இருந்துள்ளான் எனலாம். ஆனால், இந்த வீரகேரளரின் அரச வரிசையில் இறுதி அரசன் ராஜராஜன் கரிகாலன் என்றும் இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1129 - 1149 என்றும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி வீரராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1207-1256) வீரகேரளன் யாரும் ஆட்சியில் இல்லை என்றாகிறது. நமது கல்லாபுரம் தூண் கல்வெட்டு இக்கருத்தை மாற்றி, வீரராசேந்திரன் காலத்தில் வீரகேரளன் வீர நாராயணன் ஆட்சியில் இருந்துள்ளான் என உறுதிப்படுத்துகிறது. கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டுகள் பன்னிரண்டில் (அனைத்தும் மண்டபத்தூண்கள்) வீரநாராயணன் என்னும் வீரகேரள அரசனினின் மூன்றாவது ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறுகிறது. இக்கல்வெட்டுகள் அனைத்தும் மண்டபத்திருப்பணி தொடர்பான கல்வெட்டுகள். வேறு ஆட்சியாண்டுகள் குறிப்பிடும் கல்வெட்டுகள் இல்லையாதலால், வீர நாராயணன் குறுகிய காலமே ஆட்சிசெய்தான் எனகருதவேண்டியுள்ளது.

         பின்னாளில், கொங்குச்சோழன் வீரராசேந்திரன், தென்கொங்கில் வீரகேரளர் ஆட்சியை முற்றிலும் ஒழித்து, தென்கொங்கு வடகொங்கு ஆகிய இரு கொங்கையும் ஆண்டான் எனத்தெரிகிறது. இதை, குமரலிங்கம் காசி-விசுவநாதர் கோயிலில் காணப்படும் கல்வெட்டு (தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் க.வெ. எண் 109 மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் 1909-ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை) சுட்டுகிறது. வீரராசேந்திரன் தன் இருபதாவது ஆட்சியாண்டில் இருகொங்கையும் இணைத்து ஆண்டிருக்கலாம் என இக்கல்வெட்டின் வாயிலாகக் கருத இயலுகிறது. ஆட்சியாண்டு இருபது கி.பி. 1227 என அமைகிறது. இக்குறிப்பு வீரகேரள அரசன் வீர நாராயணனின் ஆட்சிக்காலம் கி.பி. 1215 கி.பி. 1226 என வரையறை செய்ய இடமளிக்கிறது.

குமரலிங்கம் கல்வெட்டுப்பாடம்:


1.            திரிபுவனச்சக்கரவத்திகள் இரண்டு கொங்குமொன்றாக ஆண்டருளின   ஸ்ரீவீரராசேந்திரதேவற்கு யாண்டு 20
2.            கில் சோழன் இலன்கேச்வரதேவனேன் கரைவழிநாட்டு திருவாலந்துறை உடையார் திருவாலந்துறையுடை
3.            இக்கோயிலில் பூசிக்கும் நம்பியார் தலையாக கழுநீர் போகட்டுவான் கடையாக தேவரடியார் உள்பட ஆணைமாறுமா
4.            றும் பூசிக்கும் நம்பியார் தலையாக (கழுநீர்)போகட்டுவாந் கடையாக இவர் ........ யிலே ஓரைச்சு ஒடுக்குவாராகவும்
5.            .......  குவாராகவும் இம்முதல்கொண்டு உடையார்க்கு திருமேல்பூச்சு செல்வதாக நாயநார் திருமேனியும்
6.            ............  ல்லியாண திருமேநியாக கல்வெட்டிக் குடுத்தேந் இலங்கேச்வரதேவநேந் இத்தந்மம் நிலைநிறுத்துவாந் காலிரண்டுது.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி: 9444939156.