மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 18 ஜூலை, 2017

ஊத்துக்குளிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

முன்னுரை
அண்மையில், கோவையைச் சேர்ந்த அசோக் என்னும் இளைஞர், ஊத்துக்குளியில் இருக்கும் பழங்காலக் கிணறு ஒன்றைப் பார்வையிட்டு அது பற்றிய கருத்துச் சொல்லவேண்டி ஊத்துக்குளிக்கு அழைத்துச் சென்றார். ஊத்துக்குளியில் கைத்தமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் சாலையோரத்திலேயே இந்தக் கிணறு அமைந்துள்ளது. கிணறு பல காலமாக நீரின்றிப், பொறுப்பறியா மக்களால் குப்பை கொட்டுமிடமாக மாற்றப்பட்டு வந்துள்ளது. அண்மையில், இப்பகுதியில், சுற்றுச் சூழல், இயற்கை உணவு, இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இளைஞர் குழுவொன்று, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பணிகளைச் செய்து வருகின்றது. அக்குழுவினர், மேற்படி கிணற்றைக் கண்ணுற்றுக் குப்பைகளை முழுதும் அகற்றியதோடு இதன் வரலாறு பற்றி அறிந்து வெளிப்படுத்தும் முயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கிணறு தூய்மையாகக் காணப்படுகிறது. மழை பெய்தபின் சிறிது நீரும் காணப்படுகிறது.

பழங்கிணறு-படிக்கிணறு
இக்கிணற்றின் ஒட்டுமொத்தத் தோற்றமே இதன் பழமையை எடுத்துக் காட்டுகிறது. கிணறு முழுதும் கல்கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. படிக்கிணறு (STEP-WELL)  என்னும் வகையைச் சேர்ந்தது.  வடநாட்டில் குஜராத், இராஜஸ்தான், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், கருநாடகத்தில் விஜய நகர அரசின் தலை நகராய் விளங்கிய ஹம்பியிலும் படிக்கிணறு வகைக் கிணறுகள் உள்ளன. மொத்த எண்ணிக்கை  பத்துக்கு மேல் இரா எனத்தெரிகிறது. இவை, எண்ணற்ற படிகளைக்கொண்ட வடிவமைப்புக்கும், அழகான கட்டிடக் கலைக்கும் பேர் பெற்றவை. தமிழகத்தில் இத்தகைய படிக்கிணறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தில் திருவெள்ளறை என்னும் ஊரில் உள்ள படிக்கிணறு “நாலுமூலைக் கிணறு  என்றும், “ஸ்வஸ்திகா கிணறு”  என்றும் அழைக்கபெறுகின்றது. கல்வெட்டில் இக்கிணறு “மாற்பிடுகு பெருங்கிணறு”  என்று குறிக்கப்படுகிறது. இது பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் கம்பன் அரையன் என்பான் வெட்டுவித்தது. மற்றொன்று மயிடாடுதுறையில் உள்ள குளம் ஒன்று படிக்கிணறு வடிவத்தை ஒத்துள்ளது. 

                                                                   ஹம்பி - படிக்கிணறு


               மயிலாடுதுறை - படிக்கிணறு வடிவமுள்ள குளம்

                  திருவெள்ளறை-மாற்பிடுகு பெருங்கிணறு


                திருவெள்ளறைக் கிணறு - உட்புறத்தோற்றம்


ஊத்துக்குளிப் படிக்கிணற்றின் சிறப்பு
தமிழகத்தில் உள்ள மேற்குறித்த திருவெள்ளறை மாற்பிடுகுப் பெருங்கிணற்றை (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு-பல்லவர் காலம்)  ஒத்த வடிவமைப்பில் ஊத்துக்குளிக் கிணறும் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. திருவெள்ளறைக் கிணற்றில் மையத்தில் சதுரமாக உள்ள கிணற்றுப்பகுதியைச் சுற்றிலும் நான்கு பக்கங்களில் படிகளோடு கூடிய நான்கு வழிகள் கீழிறங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளிக் கிணற்றுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. இந்த வேற்றுமை தவிர இரண்டுமே ஒத்த தோற்றத்தைக் கொண்டுள்ளன. இரண்டிலுமே, கிணற்றின் சுற்று வடிவ விளிம்பின் (எல்லைச் சுவர்) மேற்பகுதியில் சதுரப் பரப்பாயில்லாமல் உருள் வடிவம் கொண்டுள்ளது. இதைப் பார்க்கையில், தஞ்சைப் பெருங்கோயிலின் அதிட்டானப்பகுதியில் உள்ள உருள் குமுதப்படையின் தோற்றம் நினவுக்கு வரும். அழகான கட்டுமானம்.

ஊத்துக்குளிப் படிக்கிணறு-பல தோற்றங்கள்








                                            கிணற்றுக்குள் வேலைப்பாடுள்ள தூண்கள்


திருவெள்ளறைக் கிணற்றின் சுற்றுவடிவ விளிம்புகள் சிற்பங்கள் எவையுமின்றி வெற்று விளிம்புகளாயுள்ளன. ஆனால், ஊத்துக்குளிக் கிணற்றின் விளிம்புகள் சிற்பங்களைக்கொண்டிருக்கின்றன. சதுரப்பகுதியின் நான்கு விளிம்புகளிலும் நான்கு நந்திச் சிற்பங்களும், நுழைவு வாயிலின் விளிம்புகள் இரண்டில் இரண்டு யாளிச் சிற்பங்களும் உள்ளன. இவை தவிர, தரையிலிருந்து முதன்முதலாய்க் கீழிறங்கும் நுழைவுப்பகுதியில் இரண்டு யானைச் சிற்பங்கள் உள்ளன. கிணற்றின் உள்பகுதியில், வேலைப்பாடுகள் அமைந்த இரு தூண்களும் அவற்றின் குறுக்கே விட்டம்போல் கிடத்தப்பட்ட ஒரு கல்லும் சேர்ந்து ஒரு தோரணவாயில் போலத் தோற்றம் அளிக்கும் அமைப்பும் காணப்படுகிறது. இந்தத் தூண் தோரணம், கிணற்றின் மேல் பகுதியில் நீரை இறைப்பதற்காக அமைக்கப்பட்ட ஏற்றத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது. ஏற்றத்தின் கிடைமட்டக் கல்துண்டுகள் தூண்களையும் தாண்டி நீண்டுள்ளன. கிணற்றின் இரு பக்கங்களில், தரையிலிருந்து நேரடியாக இறங்கும் வண்ணம் ஆறு பெரிய கற்கள் செருகப்பட்டுள்ளன. தூண்கள், அடிப்பகுதியில் சதுரம், நாகபந்தம், பதினாறு பட்டைகள் கொண்ட சித்திரக் கண்டக் கால்கள், கலசம், தாடி, தாமரை, பலகை ஆகிய கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளன. தூணின் உச்சியில் யாளி முகம் காணப்படுகிறது. தூணின் சதுரப்பகுதியில் அன்னம், சிங்கம், சூலம் போன்ற புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இது போன்ற தூண் வேலைப்பாடு திருவெள்ளறைக் கிணற்றில் இல்லை.

கிணற்றின் உட்புறச் சுவர்கள் முழுதும் ஆங்காங்கே சிறு சிறு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மனித முகம், நின்ற நிலையில் மனித உருவம், வணங்கும் நிலையில் மனித உருவம், லிங்கம், பூதகணத்தின் முகம், பிள்ளையார், குட்டியை ஏந்திய குரங்கு, குத்துக்காலிட்ட நிலையில் சிங்க உருவம், மீன் உருவம், ஆமை உருவம், நாயும் பன்றியும் இணைந்த உருவம், யாளி, தனித்த ஒரு நாயின் உருவம், இரண்டு யானைகள் போரிடும் காட்சி ஆகியவை புடைப்புச் சிற்பங்களாய் உள்ளன.

புடைப்புச் சிற்பங்கள் சில






                                                                                     யாளிச் சிற்பம்


கிணற்றின் காலம்
ஊத்துக்குளிக் கிணறு கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே, நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இளைஞர்களின் நற்பணி
ஊத்துக்குளிக் கிணறு, முன்பே தொல்லியல் துறை சார்ந்த ஆய்வர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. ஆனால், நானூறு ஆண்டுப்பழமையுள்ள இக்கிணறு பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்திகள் வெளியாகவில்லை என்றே தோன்றுகிறது. கிணற்றின் வரலாற்றுச் சிறப்பு மக்களை எட்டவேண்டும். இதன் சிறப்புணர்ந்து ஊர் மக்கள் இக்கிணற்றை முறையாகப் பாதுகாத்து, எதிர்வரும் சந்ததியினர்க்குக் கொண்டு சேர்க்கவேண்டும்.

கிணறு, பராமரிப்பின்றிப் புறக்கணிக்கப்பட்டுக் குப்பை கொட்டுமிடமாகக் கிடந்த அவல நிலையில், இயல்வாகைஎன்னும் பெயரில் இயங்கும் இளைஞர் அணியினர், பெரும் முயற்சியெடுத்து நான்கைந்து முறை கிணற்றைத் தூய்மைப்படுத்தி இன்றைக்குள்ள நிலைக்குக் கொணர்ந்துள்ளனர். அவர்களோடு இணைந்து பணியாற்றியவர்கள் “பசுமை வனம் என்னும் மற்றொரு குழுவினர் ஆவர். பள்ளிக் குழந்தைகளும் இந்தப் பணீயில் சேர்ந்துகொண்டனர் என்பது சிறப்பு. வரலாற்றை வெளிப்படுத்த ஆர்வம் கொண்டுள்ள இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.

மேலும் சில தொல்லியல் தடயங்கள்
கோவை நண்பரும் வரலாற்று ஆர்வலருமான பாஸ்கரன் அவர்கள், தாம் ஊத்துக்குளிப் பகுதியில் பயணம் மேற்கொண்டபோது, கல்திட்டை, கல்வட்டம் ஆகிய பெருங்கற்காலச் சின்னங்கள் இருப்பதைக் கண்டதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் தொலைபேசியில் பேசி, அச்சின்னங்கள் இருக்குமிடத்தைப் பற்றி அறிந்துகொண்டபின், அவற்றைப்பார்க்க முடிவு செய்து, என்னை அழைத்துவந்த கோவை அசோக்குடனும் இயல்வாகைக் குழுவைச் சேர்ந்த அசோக், அழகேசுவரி, ஈரோட்டைச் சேர்ந்த, இயற்கை வேளாண்பொருள் அங்காடி நடத்தும்  ஜெகதீசன் ஆகியோருடனும் பயணப்பட்டோம். மாடுகட்டிப்பாளையம் என்னும் ஊர்ப்பகுதியில் மேலே குறிப்பிட்ட பெருங்கற்காலச் சின்னங்களைக் காணுவது நோக்கம். உடன் வந்த அனைவருக்கும் வரலாற்று எச்சங்களாக இன்றும் காணப்படும் பெருங்கற்காலச் சின்னங்கள் பற்றிய அறிமுகம் இல்லை. அவர்களுக்கு அவற்றைப் பற்றிய சில செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப் படுகின்றன.

பெருங்கற்காலச் சின்னங்கள்
இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சங்ககாலம் அல்லது வரலாற்றுக் காலம் என்று குறிப்பிடப்பெறும் காலத்துக்கு முன்னர் தமிழகத்தில் இரும்புப் பயன்பாடு விளங்கிய காலகட்டத்தில் மக்களின் வாழ்வியலில், இறந்தோர் நினைவாக ஈமச் சின்னங்களை அமைத்து வழிபடும் மரபு இருந்துள்ளது. இறந்தவர்களை நேரடியாக மண்ணில் புதைக்கும் வழக்கம் அப்போது இருக்கவில்லை. இறந்தவர்களின் உடலைக் குறிப்பிட்ட ஒரு வெளியில் இடுவதுதான் வழக்கமாக இருந்தது. இயற்கைச் சூழலில் விலங்குகளும், பறவைகளும் உடலைத் தின்று முடித்தபின்னர், எலும்புகளைக் கொணர்ந்து புதைவிடத்தில் புதைப்பர். இறந்தோர் பயன்படுத்திய சிறு பொருள்கள்களையும் அந்தப் புதைவிடத்திலேயே வைப்பர். புதைவிடத்தின் அடையாளம் தெரியவேண்டி அதைச் சுற்றிலும் பெரும் பலகைக் கற்பாறைகளை நான்கு பக்கங்களிலும் நிறுத்தி, அதன் மேற்பகுதியைப் பெரியதொரு பலகைக் கல்லைக் கொண்டு மூடிவிடுவர். முகப்புப் பகுதியில், முழுதும் மூடாமல் வாயில் போன்று திறப்பு இருக்கும்படி அமைத்திருப்பார்கள். இந்த அமைப்பு, கல்திட்டை எனப்படும். தரையின் மேல் பகுதியில் திட்டை போன்று இருப்பதால் இது கல்திட்டை. ஆங்கிலத்தில் “DOLMEN”  என்பார்கள். இறந்தவர்கள் ஆவி வடிவில் இருந்து நன்மையும் வளமும் சேர்ப்பார்கள் என்பதான ஒரு நம்பிக்கையின்பால் எழுந்த வழக்கம். அடுத்து இன்னொரு வகைச் சின்னங்களில், புதைவிடத்தைச் சுற்றிலும் பெரும் பெரும் உருண்டைக் கற்களை வட்டமாக அடுக்கி அடையாளப்படுத்துவர். இது கல்வட்டம் எனப்படும். ஆங்கிலத்தில் இதனை “CAIRN CIRCLE”  என்பார்கள். இந்த நினைவுச் சின்னங்களில் பெரிய பெரிய கற்கள் பயன்பட்டமை கருதி இவற்றைப் பெருங்கற்சின்னங்கள் அழைக்கிறார்கள்.

பனியம்பள்ளியில் கல்திட்டைகள்
மாடுகட்டிப்பாளையத்தை நோக்கி தொட்டம்பட்டி வழியாகப் பயணம் செய்யும்போது, மாடுகட்டிப்பாளையம் ஊரை நெருங்கும் முன்னரே ஒரு சாலைப்பிரிவு காணப்பட்டது. அங்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் பனியம்பள்ளி ஊராட்சி நீருந்து நிலையக் கட்டிடமும் அருகில் உயர்நிலை நீர்த்தொட்டியும் இருந்தன. அந்த இடத்தில் சாலையோரம் இரு கல்திட்டைகள் புலப்பட்டன.
முதல் கல்திட்டை
முதல் கல்திட்டையில், சாலையிலிருந்து பார்க்கும் நேர்ப்பர்வையில், சாய்ந்த நிலையில் சுவர்போல இணைந்த இரண்டு பலகைக் கற்களும், அதன் மேல் ஒரு மூடு கல்லும் புலப்பட்டன. சற்று அருகில் சென்று அடுத்த பக்கத்தைப் பார்வையிடுகையில் அது, கல்திட்டையின் திறப்பு வாயில் என்பது புலப்பட்டது. மூன்றாவது பக்கத்தைப் பார்க்கையில், அங்கு, சுவர்போல ஒழுங்கான பலகைக் கற்கள் காணப்படவில்லை. சற்று ஒழுங்கற்ற இரண்டு பாறைக்கற்கள் சாய்ந்த நிலையில் காணப்பட்டன. நான்காவது பக்கத்தைச் சரியாகப் பார்க்கவொண்ணா நிலையில் சிறு சிறு வேப்ப மரங்களும் புதர்ச் செடிகளும் மூடியவாறு காணப்பட்டது. கலைந்துபோன நிலையில் கற்கள் இருப்பதாகத் தெரிந்தது.
                முதல் கல்திட்டை

               முதல் கல்திட்டை-வேறு தோற்றங்கள்




கல்திட்டைக்குள் ஒரு நடுகல்
முகப்பிலுள்ள வாயிலுக்கருகில் சென்று பார்த்தால் ஒரு வியப்பான காட்சி. ஆண் உருவம் ஒன்றும், பெண் உருவம் ஒன்றும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஒரு நடுகல் சிற்பத்தின்  அழகான தோற்றம். ஆணின் உருவம், இடப்புறமாகக் கொண்டை முடிந்து, மீசையுடன் காணப்படுகிறது. செவிகளிலும், மார்பிலும் அணிகலன்கள் உள்ளன. கைகளிலும் தோளிலும் வளைகள் உள்ளன. இடையில் ஆடைக்கச்சு உள்ளது. வலது கையில் ஒரு நீண்ட வாளினைத் தரையில் ஊன்றியவாறு வீரன் நிற்கிறான். அவனது இடையிலும் ஒரு குறுவாள் காணப்படுகிறது. அவனது இடது கை தொங்கிய நிலையில் காணப்படுகிறது. விரல்களில் மோதிரங்கள் தெரிகின்றன. பெண்ணின் உருவம் வலப்புறமாகக் கொண்டை முடிந்து தலையில் அணிகலன்களோடு காணப்படுகிறது. கழுத்திலும் இடையிலும் அணிகலன்கள் உள்ளன. கைகளில் வளைகள் உள்ளன. கைகளில் எதையும் ஏந்தியிருப்பதாகத் தெரியவில்லை. வலது கையை மடக்கியவாறு உயர்த்தியும், இடதுகையை நேராகத் தொங்கவிட்டும் நிற்கிறாள். இடையாடை கீழே கால்வரை காணப்படுகிறது. கால்களில் கழல்கள் உள்ளன. வீரனுக்கு மட்டும் எடுக்கப்பட்ட நடுகல்லாக இருப்பின் பெண்ணின் கைகளில் மதுக்குடுவை ஒன்று காணப்படுவது வழக்கம். இங்கு அவ்வாறில்லாமல் ஆண், பெண் இருவர் சிற்பங்கள் ஒன்றாகக் காணப்படுவதால், இது ஒரு சதிக்கல்லாக இருக்கக்கூடும். அல்லது மனைவியோடு காட்டப்பெற்ற வீரனின் நடுகல்லாக இருக்கக்கூடும்.

              கல்திட்டைக்குள் ஒரு நடுகல் சிற்பம்


இரண்டாம் கல்திட்டை
இரண்டாம் கல்திட்டையிலும் நான்குபுறமும் பலகைக்கல் சுவர்களும், முன்புறம் திறப்பு வாயிலும் உள்ளன. இங்கும் ஒரு நடுகல் சிற்பம் உள்ளது. அது வெளிப்புறத்தில் சாய்க்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண், பெண் உருவங்கள் உள்ளன. உருவங்கள் தெளிவாக இல்லை. ஆடை, அணிகள் புலப்படுகின்றன. பெண்ணின் இடப்புறம் காலடியில் ஒரு சிறிய மனித உருவம்போல் தோன்றுகிறது. அது ஒரு குழந்தையின் உருவமாயிருக்குமோ என்னும் ஓர் ஐயத்தை ஏற்படுத்துகிறது. 

 இரண்டாம் கல்திட்டையின் சில தோற்றங்கள்



                 
இரண்டாம் கல்திட்டை அருகில் உள்ள நடுகல் சிற்பம்


மாடுகட்டிப்பாளையம் பெருங்கற்காலச் சின்னங்கள்
அடுத்து, பனியம்பள்ளியிலிருந்து மாடுகட்டிப்பாளையம் ஊரை நோக்கிப் பயணப்பட்டோம். ஓரிரு கி.மீ. தொலைவில் ஊர் இருந்தது. அங்கு சிலரிடம் கல்வட்ட அமைப்பை எடுத்துச் சொல்லி, அவ்வாறு ஏதேனும் கற்சின்னங்கள் உள்ளனவா எனக்கேட்டோம். சிலர் சாலையிலிருந்து சற்றுத்தள்ளியிருந்த இரயில் பாதைக்கருகில் பெருங்கற்கள் காணப்படுவதாகக் கூறவே அங்கு சென்று பார்த்தோம். கல்வட்டங்கள் இருந்ததற்கான தடயங்கள் அங்கு இருந்தன. இரயில் பாதை அமைக்கும் பணியில் நிறையக் கற்கள் கலைக்கப்பட்டுச் சிதறல்களாக இருந்தன. பெரும்பாலும் கல்வட்டங்களில் காணப்பெறும் கற்கள், ஓர் ஒழுங்கு முறையில் வடிக்கப்பட்ட உருண்டைக் கற்களாக அமையும்   இங்கு அவ்வாறான உருண்டைக் கற்கள் காணப்படவில்லை. ஒழுங்கற்ற வடிவில் பெருங்கற்கள் இருந்தன. கல்வட்டத்தின் ஒரு முழுத்தோற்றம் அங்கு எங்களுக்குக் கிட்டவில்லை.

இரயில் பாதைக்கருகில் பெருங்கற்களின் எச்சங்கள்









கல்வட்டங்கள்
அங்கிருந்து அகன்று, விஜயமங்கலம் சாலையில் சற்றுத் தொலைவு சென்றதுமே, சாலையோரம் வலது புறத்தில் ஒரு காட்சி எங்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியது. சாலையோர வேலிக்கப்பால், செடிகளோ புதர்களோ இன்றிச் செம்மண் நிலம் ஒன்று கண்முன்னால் பரந்துகிடந்தது. அந்த நிலத்தில் கல்வட்டங்கள் இரண்டு மூன்று, சிதையாமல் வட்ட வடிவத்துடன் அருமையாகத் தோற்றமளித்தன. அந்த நிலப்பரப்பிற்குள் செல்ல இயலாதவறு தார்ச்சாலைக் கருகில் நெடுகவும் நெருக்கமான வேலி இருந்தது. எனவே, நாங்கள் வேலியை ஒட்டி நடந்துசென்று ஒரு வீட்டை அடைந்தோம். வீட்டு உடைமையாளர்தாம் அந்த நிலத்துக்கு உடையவரும். அவரிடம் பேசி, அவருடைய ஒப்புதலோடு அவர் திறந்துவிட்ட வேலித்திறப்பினுள் நுழைந்துசென்று கல்வட்டங்களைப் பார்வையிட்டோம். 

                 கல்வட்டங்கள்



             ஆட்டுப்பட்டியின் அழகான தோற்றம்



மூன்று கல்வட்டங்கள் நல்ல நிலையிலும், ஒரு கல்வட்டம் அரைவட்டப்பகுதியாகச் சிதைவுற்றும், மற்றொன்று கற்கள் சிதறிய நிலையிலும் காணப்பட்டன. நிலத்தில், ஒரு  ஆட்டுப்பட்டி அழகாகக் காட்சியளித்தது. நிலத்து உடைமையாளர் பெயர் மகேசுவரன். அவருடைய பாட்டன் காலத்திலிருந்து அந்தக் கல்வட்டங்கள் இருந்துள்ளன என்றும், நிலத்தைப் பண்படுத்தும் ஒவ்வொரு முறையும் கல்வட்ட அமைப்புகளைச் சிதைக்காமல் விட்டுவைத்திருப்பதாகவும் அவர் கூறியது எங்களுக்கு மிக வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளித்தது. அத்தி பூத்தாற்போல் ஒரு சிலர் இதுபோன்ற நன்மையாளர்களாயிருக்கின்றனர். தொடர்ந்து இக்கல்வட்டங்களை இன்றுள்ளவாறே பேணவேண்டும் என்னும் கோரிக்கையோடு அவருக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி விடைபெற்றோம்.

                                          கல்வட்டங்கள்




----------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

சனி, 8 ஜூலை, 2017

கால்நடை மேய்ப்பர்களின் வாழ்க்கை- காடாறுமாசம் வீடாறு மாசம்

முன்னுரை
குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்”  போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம், ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கூடவில்லை.

“தி இந்து”  தமிழ் நாளிதழ் 
சென்ற 28-06-2017 அன்று “தி இந்து”  தமிழ் நாளிதழில் “காடாறு மாசம்...வீடாறு மாசம்”  என்னும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதில் மேய்ச்சல் நிலங்களை நோக்கி இடம் பெயர்தலையே வாழ்க்கையாகக் கொண்ட மேய்பாளர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. சொந்த ஊர்ப்பக்கம் செல்ல இயலாமல் நாடோடி வாழ்க்கை வாழும் இவர்களில் ஒருவர் தம் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அதில், அவர் கூறுகின்ற ஒரு பகுதி என்னை ஈர்த்தது.

மேய்ப்பாளரின் கூற்று
அவர் கூறுகிறார்:

மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு  கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.

இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில், விஜய நகர அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.


                                                   ஹம்பியில்



                                                 தாரமங்கலத்தில்



து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156. 

திங்கள், 3 ஜூலை, 2017

அந்தியூர்ப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

முன்னுரை

அண்மையில் ஜூன் 18-ஆம் நாள், திருப்பூர் மாவட்டம் அந்தியூர்ப் பகுதியில் தொல்லியல் தடயங்கள் சிலவற்றைக் காண ஒரு பயணம் மேற்கொண்டோம். நண்பர் தென்கொங்கு சதாசிவம் தாம் பார்த்திருந்த ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டைப் படிக்கும் முயற்சியாக என்னை அழைத்திருந்தார். கோவையிலிருந்து அவரும் நானும் புறப்பட்டு சத்தியமங்கலத்தில் வரலாற்று ஆய்வாளரான திரு. இராமசாமி அவர்களையும், வரலாற்று ஆர்வலர் ஃபவுசியா அவர்களையும் இணைத்துக்கொண்டு அந்தியூர் சென்றோம். அந்தியூரை அடுத்துள்ள தாமரைக்கரை என்னும் ஊரில் மேலும் ஒரு வரலாற்று ஆர்வலரான நந்தீசுவரனும் அவரது நண்பர் மாதேசுவரனும் எங்களுடன் இணைந்துகொண்டனர். அப்பயணத்தின் பகிர்வு இங்கே.

மலைப்பாதையில் பயணம்

அந்தியூர்-பர்கூர் சாலையில் தொடங்கிய பயணம் சிறிது நேரம் வரை மலைப்பாதையில் நீடித்தது. மலைப்பாதைக்கே உரிய வளைவுச் சாலையும், இருபுறமும் பசுமைக் காடும், சத்தியமங்கலம் பகுதியின் பச்சை மடிப்புகளுடன் தெரிந்த மலை அடுக்குகளும் கண்ணுக்கும் உள்ளத்துக்கும் அழகு சேர்த்தன. எந்நேரமும் எதிர்கொள்ள வேண்டிவரும் யானைகளின் உலா ஒரு புறம் அச்சம் சேர்த்தது. இருப்பினும் அப்பகுதி மக்கள், இந்த நாள்களில் பகலில் இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லை என உறுதியாகக் கூறவே அச்சம் ஒதுக்கிப் பயணம் தொடர்ந்தோம். அக்கூற்று மெய்யாயிற்று. போகும் வழியிலும் திரும்பும் வழியிலும் யானைகளை நாங்கள் சந்திக்கவேயில்லை.

                               வழியில் பசுமை


வறட்டுப்பளையம் அணை

போகும் வழியில், வறட்டுப்பாளையம் என்னும் பகுதியில் ஒரு சிறிய அழகான அணையினைக் காண நேர்ந்தது. இது போன்ற பயணங்களின்போதுதான் சிறு சிறு அணைகளின் இருப்பை அறியும் நிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள், நீர்க்கால்கள் போன்றவற்றைப் பேணும்-மேம்படுத்தும் வழிவகைகளை நீர்மேலாண்மையில் வல்ல அறிஞர்கள், பொறியாளர்கள் ஆகியோரின் துணைகொண்டு அரசு என்னவெல்லாம் செய்ய இயலும் எனவொரு சிந்தனையும் எழுந்தது. 

                 வறட்டுப்பாளையம் அணை சில காட்சிகள்





தாமரைக்கரை

வழியில் தாமரைக்கரை என்றொரு ஊர். பெயருக்கேற்றவாறு ஒரு தாமரைக் குளம் இருந்தது. இலைகளும் பூக்களும் நீர்ப்பரப்பில் படர்ந்து அழகாகக் காட்சியளித்தது.

                                                                             தாமரைக்குளம்


மூங்கில் மரங்கள்

தாமரைக்கரைக்கு அப்பால், பாதை முழுதும் இரு புறங்களிலும் ஓங்கி உயர்ந்த மூங்கில் மரங்கள் கண்கொள்ளாக் காட்சி.

                                                                        மூங்கில் மரங்கள் 




தேவர்மலை பந்தீசுவரர் கோயில்



தேவர் மலை என்னும் ஊரில் உள்ள பந்தீசுவரர் கோயிலில் இருக்கும் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டைக் காணும் இலக்கில், தேவர் மலையை அடைந்து கோயிலுக்குச் சென்றோம். ஊர், மலையின் மேல் அமைந்திருக்கவில்லை. சமவெளிப்பகுதிதான். கோயில், பெரியதொரு பரப்புடன் சுற்றுச் சுவருடன் பழமையானதொரு தோற்றத்துடன் கூடிய கற்றளியாகக் காட்சியளித்தது. திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. கருவறையும் அதனையடுத்து அர்த்தமண்டபமும் இருந்தன. அர்த்தமண்டபத்திலும் ஒரு வாயில் காணப்பட்டது. ஜகதி, முப்பட்டைக்குமுதம் ஆகிய உறுப்புகளுடன் எளிய அதிட்டானத்தைக் கொண்டிருந்தது. கருடகம்பம்”  என அழைக்கப்படும் ஒரு விளக்குக் கம்பமும், சிறியதொரு நந்தி மண்டபமும் உள்ளன. நந்தி மண்டபத்தில் இரு நந்திச் சிற்பங்கள் உள்ளன. அவ்ற்றில் ஒன்று பழமைத் தோற்றத்தில் இருந்தது. அர்த்தமண்டபச் சுவரில் தேவ கோட்டம் ஒன்றும் காணப்பட்டது. தேவகோட்டத்தின் இரு புறங்களிலும் பாம்புப் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மற்றொரு சுவரில் ஆமைச் சிற்பம் உள்ளது. மதிற்சுவரின் ஒரு பகுதியில் உச்சியில் பழமையான திருவாசி போன்ற அமைப்பில் காணப்படும் வட்டக் கட்டுமானம் புலப்பட்டது.



                                                              நந்திமண்டபத்தில் இரு நந்திகள்


                                                             சுவரில் பாம்புப் புடைப்புச் சிற்பம்

                     சுவரில் ஆமைச் சிற்பம்

                           கருவறைத் தோற்றம்



இறைவன்- பந்தீசுவரர்

கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் பந்தீசுவரர். இலிங்கத்திருமேனி. இப்பெயர் சற்றுப் புதுமையாக இருந்தது. இப்பகுதி தமிழகத்தின் பகுதியாக இருப்பினும் கருநாடகத்துடன் மிகுந்த தொடர்புடைய ஒரு பகுதி. கன்னட மொழி பேசும் மக்கள் போசளர் (ஹொய்சளர்), மைசூர் உடையார்  ஆகிய அரசர்களின் காலத்தில் புலம் பெயர்ந்தவர்களின் வழியினர் இருக்கும் பகுதியாகத் தெரிகிறது. கோயிலில் நாம் சந்தித்தவர்கள் தமிழ் கலந்த கன்னடம் பேசினர். கோயில், மேற்சொன்ன அரசர்கள் காலத்தில் கட்டப்பெற்றிருக்கக் கூடும். கல்வெட்டுச் சான்றுகளைத் தேடவேண்டும்.

வீரபத்திரர் வழிபாடு

இலிங்கத்திருமேனி இருக்கும் கருவறைக்கு வெளியே, அர்த்தமண்டபத்தில் வீரபத்திரரின் சிற்பம் வழிபாட்டில் உள்ளது. வீரபத்திரர் வழிபாடு, கருநாடகத்தில் விசயநகரப் பேரரசின் காலத்திலிருந்து சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருந்தது. வீரபத்திரருக்குத் தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அவ்வகையில் இக்கோயிலிலும் வீரபத்திரர் வழிபாடு இருப்பதால் கன்னட அரசர்கள் காலத்தில் இக்கோயில் கட்டப்பெற்றிருக்கலாம் என்னும் கருத்து வலுப்பெறுகிறது. சத்தியமங்கலம் பகுதி கருநாடகத் தாக்கம் உள்ள பகுதி என்பதில் ஐயமில்லை. இரு கைகளுடன் காணப்படும் வீரபத்திரரின் வலக்கையில் தடித்த பெரிய வாளும், இடக்கையில் பெரிய வில்லும் உள்ளன. தலையில் இருப்பது கரண்ட மகுடம் எனத் தோன்றுகிறது. மார்புப் பகுதி, கை,கால்கள் ஆகிய பகுதிகளில் நிறைய அணிகலன்கள் உள்ளன. சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ள அணிகளுக்குமேலே, மார்பில் ஆரங்களும், கால்களில் தண்டைகளும் அணிவித்திருக்கிறார்கள். கீழே பீடம், மேலே திருவாசி என முழு அளவில் வேலைப்பாட்டுடன் கற்சிற்பம் அழகாக அமைந்துள்ளது. அருகிலேயே, செப்புத்த்கட்டினால் புடைப்புருவமாகச் செய்ய்ப்பட்ட வீரபத்திரர் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வீரபத்திரருக்கு இரு கைகளுக்குமேல் காட்டப்பெற்றுள்ளன. இந்தச் செப்புருவங்களுக்கு அருகில் ஓர் ஆயுதத்தை வைத்திருக்கிறார்கள். ஒரு நீண்ட கோலுடன் ஒரு வளைதடியை (Boomerang) இணைத்ததுபோன்ற தோற்றத்தில் இந்த ஆயுதம் அமைந்துள்ளது.

                                                                                             வீரபத்திரர் 


                                                       வீரபத்திரர்-செப்புருவம்- வளைதடி ஆயுதத்துடன்


வீரபத்திரரும் “சதியும்

தட்சன் தான் நடத்திய அசுவமேத வேள்விக்குச் சிவனை அழையாதிருந்தும் சக்தி, வேள்விக்குச் சென்றதும், தட்சன் சக்தியை இழிவுபடுத்தியதும், அதன் விளைவாகச் சக்தி தன்னுள்ளிருக்கும் யோகாக்னிஎன்னும் நெருப்பில் தன்னை மாய்த்துக் கொண்டதும், சிவன் சீற்றமுற்று தட்சயாகத்தை அழிப்பதற்காக வீரபத்திரரை உருவாக்கியதும் பெரும்பாலும் அனைவரும் அறிந்த தொன்மக்கதை. இக்கதையில் தட்சனின் மகளான சக்தியைச் சதி என்னும் பெயரால் குறிப்பது கருதத்தக்கது. சதி தன்னைத் தீயில் மாய்த்துக்கொள்வதாலேயே உடன் கட்டையேறும் (தீப்பாய்ந்து மாயும்) சமுதாய வழக்கத்துக்குச் “சதி”  என்னும் பெயர் அமைந்தது போலும். வீரபத்திரர் முக்கண்ணுடைய சீற்றக்கடவுள். மீசையுடன் நிறைய அணிகலன்களுடன் காணப்படும் தோற்றமுள்ள்வர்.

                ஹம்பியில் அகழ்வைப்பகத்தில் - வீரபத்திரர் சிலை

                                              வீரபத்திரர் - மற்றுமொரு அழகான சிற்பம்


கல்வெட்டும் செய்தியும்   

கோயிலின் ஒரு பக்கச் சுவரின் தேவகோட்டத்துக்குக் கீழே தரையில் ஒரு பலகைக் கல்லில் கல்வெட்டு காணப்படுகிறது. தரைக்குமேல் ஆறு வரிகள் தெரியும்படியுள்ள ஒரு கல்வெட்டு. ஆறு வரிகளும் ஐந்து நேர்கோடுகளுக்கிடையில் எழுதப்பட்டுள்ளன. கோவையில் உள்ள இராசகேசரிக் கல்வெட்டிலும், ஆலத்தூர் சமணக்கோயிலில் இருக்கும் திருக்களிற்றுப்படிக் கல்வெட்டிலும் இது போலவே கோடுகளுக்கிடையில் எழுத்து வரிகள் பொறிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். தரைக்குக் கீழுள்ள கல்லின் பகுதியிலும் எழுத்துகள் இருக்கக் கூடும். கோயில் திருப்பணி நிறைவுற்றதும் முழுக்கல்லையே வெளியே எடுத்து வைப்பதாகக் கோயிலார் கூறினர். தரைக்கு மேலே இருக்கும் எழுத்துகளை முழுமையாகப் படிக்க இயலவில்லை. ஸ்ரீ”  என்னும் எழுத்தோடு  தொடங்கும் கல்வெட்டில் அருளவிட்டார்”,   “பட்டாரகனுக்கு”   என ஓரிரு தொடர்கள் மட்டுமே படிக்க இயன்றது. கல்வெட்டின் செய்தியும், கல்வெட்டின் காலமும் இன்னதெனத் தெரியவில்லை. முழுக் கல்லையும் தோண்டியெடுத்த பின்னர் கல்வெட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

                           வட்டெழுத்துக் கல்வெட்டு


தாமரைக்கரையில் நடுகற்சிற்பங்கள்

தாமரைக் கரை. வனச்சரக அலுவலகம் உள்ள ஊர். ஊருக்கு வெளியே, ஒரு காலத்தில் பசுமையான விளை நிலங்களாயிருந்த ஒரு பகுதி. தற்போது “பார்த்தீனியம் செடிகள் கண்ணுக்கெட்டிய தொலைவு புதர்க்காடாய் மண்டிக்கிடந்தன. அவற்றுக்கிடையில் ஒரு நடைப்பயணம். மூன்று நடுகற்சிற்பங்கள் ஒரே இடத்தில் காணப்பட்டன. மூன்றுமே அடுக்கு நிலை நடுகற்கள். இப்பகுதி கன்னட நாட்டின் சாயலைக்கொண்டுள்ளது என்பதற்கு இந்த நடுகற்களே சான்று. மூன்று அடுக்குகளில் புடைப்புச் சிற்பங்களைக்கொண்டுள்ள நடுகற்கள் கருநாடகப் பாணியைச் சேர்ந்தவை. தமிழகப்பாணியில் இவ்வாறு இல்லை. முதல் (கீழ்) அடுக்கில் நடுகல் யாருக்காக எடுக்கப்பட்டுள்ளதோ அந்த வீரனின் சிற்பமும்,  இரண்டாம் அடுக்கில் வீரன் மேலுலகம் செல்கின்ற காட்சியும், மூன்றாவது அடுக்கில் வீரன் மேலுலகம் சென்றுவிட்டதைக்குறிக்கும் வகையில் சிவலிங்கமும் நந்தியும் வடிக்கப்பட்டிருக்கும்.

முதல் நடுகல்

இங்கே, முதல் நடுகல் ஒரு புலிகுத்திக்கல். முதல் அடுக்கில் கால்நடைகளைக் காக்கும் பணியில் புலியுடன் போராடும் வீரனின் சிற்பம். இரண்டாம் அடுக்கில், தேவமகளிரின் உருவங்கள். வீரனை அவர்கள் மேலுலகத்துக்கு அழைத்துச் செல்வதன் குறியீடு. மூன்றாவது அடுக்கில் சிவலிங்கமும் நந்தியும்.



இரண்டாம் நடுகல்

இரண்டாம் நடுகல்லில் முதல் அடுக்கில் வீரன் ஒருவன் காளையின் கொம்பைப் பிடித்துள்ளதுபோல் சிற்பம். இது காளையுடன் போரிடுவதைக் குறிக்க வாய்ப்பில்லை. மாடுபிடிச் சண்டை என்னும் தொறுப்பூசலில் வீரன் ஈடுபட்டதைக் குறிக்கலாம். இரண்டாம் அடுக்கில் தேவமகளிர். மூன்றாம் அடுக்கில் மேலுலகம் சென்றுவிட்ட வீரனே சிவலிங்கத்தை வழிபடும் காட்சி. வீரனின் வலமும் இடமும், நிலவும் கதிரும் பொறிக்கப்பட்டுள்ளன. வழக்கமாகக் கல்வெட்டுகளில் காணப்பெறும் “சந்திராதித்தவரை”  என்னும் தொடரின் குறியீடு.




மூன்றாம் நடுகல்

மூன்றாம் நடுகல்லில் முதல் அடுக்கில் பெண் ஒருத்தி, புலியுடன் சண்டையிடும் காட்சி. பெண்ணுக்கு எடுத்த அரிதான புலிகுத்திக் கல். இரண்டாம் அடுக்கில் தேவ மகளிர். மூன்றாம் அடுக்கில் சிவலிங்கமும் நந்தியும்.



அந்தியூர்-சிவன் கோயில்


அந்தியூரில் உள்ள சிவன் கோயிலில் இறைவன் செல்லீசுவரர், இறைவி செல்லீசுவரி. கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் உள்ள கோயில். வேசர விமானம் (வட்ட வடிவில் உள்ளது). அதிட்டானப்பகுதியில் ஜகதி என்னும் உறுப்பு தரைக்குக் கீழ் மறைந்துள்ளது. அதனையடுத்து முப்பட்டைக் குமுதம் உள்ளது. குமுதத்தையடுத்து ஒரு கண்டம், ஒரு பட்டிகை, மீண்டும் ஒரு கண்டம், இறுதியில் தாமரை இதழ்முனை கொண்ட வேதி என்னும் உறுப்புகளோடு பாதபந்த அதிட்டானம் என்னும் வகையில் அதிட்டானம் அமைந்துள்ளது. சுவர்களில் அழகான தேவகோட்டமும், தேவகோட்டத்துக்கு இருபுறங்களிலும் அழகான தூண்களும் அமைந்துள்ளன. சுவர்ப்பகுதியின் இறுதியில் கர்ணகூடுகளும், அவற்றுக்கு மேலே யாளி வரிசையுடன் கற்றளியின் பிரஸ்தரம்”  என்னும் உறுப்பு முடிவுறுகிறது. அதற்குமேல் செங்கல், சுதை ஆகியவற்றாலான கிரீவம், சிகரம், கலசம் ஆகிய விமான உறுப்புகள் உள்ளன.

                           தேவகோட்டமும் சுவர்த்தூண்களும்

                        கர்ணகூடுகளும்-யாளிவரிசையும்


கல்வெட்டுகள்

இக்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. இரு கல்வெட்டுகள், கொங்குப்பாண்டியன் வீரபாண்டியனுடைய காலத்தைச் சேர்ந்தவை. மூன்றாவது உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலத்தது.



முதல் கல்வெட்டு-கண்மாளர்க்கு உரிமைகள்
இக்கல்வெட்டு கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. காலம் கி.பி. 1280. வழக்கமாகக் கொடைகளைப் பற்றிப் பேசும் கல்வெட்டாக அமையாமல், 13-ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டில், வட கொங்கில் நிலவிய சமுதாயச் சூழலை எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்திருப்பது இக்கல்வெட்டின் சிறப்பாகும். சில சமுதாயத்தினருக்குச் சில உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தினர்தாம் கண்மாளர்கள். கம்மாளர், பஞ்சகம்மாளர் என்று தற்போது அழைக்கப்படும் இச்சமுதாயத்தினர்க்குக் காலுக்குச் செருப்பு அணிந்துகொள்ளும் உரிமையில்லை. தம்முடைய வீடுகளுக்குக் காரை (சாந்து) பூசிக்கொள்ள உரிமையில்லை. தம் வீடுகளில் நடைபெறும் நன்மை தீமை நிகழ்வுகளின்போது சங்கு ஊதவும், பேரிகை கொட்டுவித்துக் கொள்ளவும் உரிமையில்லை. இந்த உரிமைகளை வழங்கி அரசன் நேரடியாக வாய்மொழி ஆணை பிறப்பிக்கிறான். உடன், ஆணை ஓலையில் எழுதப்படுகிறது. அரசன் நேரடியாக ஆணை பிறப்பித்தல் கல்வெட்டுகளில் காணப்பெறும் சில சொற்றொடர்கள் வாயிலாக உணர்த்தப்பெறும். “நாம்”,  “நம்மோலை”,  “சொன்னோம்”   போன்றவை அவை. இக்கல்வெட்டின் படிகள் ஒரே நேரத்தில் பேரூர், குடிமங்கலம், கரூர், கடத்தூர், மொடக்கூர், பாரியூர், அவிநாசி ஆகிய ஊர்களிலும் உள்ளன என்பது மேலும் ஒரு சிறப்பு. இவ்வாறு பல ஊர்களின் கோயில்களிலும் கல்வெட்டுகளில் இந்த ஆணை பொறிக்கப்பட்ட.தனின்றும், வடகொங்கைச் சேர்ந்த வடகரை நாட்டில் இருந்த கண்மாளர்கள், தங்கள் உரிமைக்காக அரசனிடம் போராடி முறையிட்டு உரிமையைப் பெற்றார்கள் எனக் கருதவேண்டியுள்ளது.  

                  கண்மாளர் உரிமை - “பேரிகையுள்ளிட்ட” சொற்றொடர்


கல்வெட்டின் பாடம்

1         ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான்
       வடகொங்கில் வடகரைனாட்டில் கண்மாளற்கு பதினஞ்சாவது
       தங்களுக்கு நன்மை தின்மைக்கு இரட்டைச் சங்கும் ஊதி     
       பேரிகையுள்ளிட்டனவுங் கொட்டுவித்துக் கொ

2          ள்ளவும் தாங்க(ள்) புறப்பட வேண்டுமிடங்களுக்கு (பா)தரக்ஷை
 கோத்துக்கொள்ளவும்  தங்கள் வீடுகள் சாந்திட்டுக்கொள்ளவும்
 சொன்னோம் இப்படிக்கு நம்மோலை பிடிபாடாகக்கொண்டு
 சந்த்ராதித்யவரை செல்வதாக தங்களுக்கு வேண்டும்மிடங்க

3          ளிலே கல்லிலும் செம்பிலும் பொறித்துக் கொள்ளுவாராகவும்

 

இரண்டாம் கல்வெட்டு-சந்தியா தீபம் கொடை
இக்கல்வெட்டு கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின் பதினொன்றாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. காலம் கி.பி. 1276.  சந்தியா தீபம் எரிப்பதற்காகப் பத்துப் பணம் கொடையாக அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டில் அந்தியூர் வடகரை நாட்டுப்பிரிவில் இருந்தது என்னும் குறிப்புள்ளது. மேலும், நரம்பர் என்னும் சமூகத்தினர் இருந்த செய்தியும் உள்ளது. இந்த நரம்பர்களில் நாட்டுக் காமிண்டன் மற்றும்  காமிண்டன் பதவியிலிருந்த இருவர் கொடையளித்துள்ளனர்.

மூன்றாம் கல்வெட்டு-சமாதிக்கு நிலம் கொடை
இக்கல்வெட்டு உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலத்தது. காலம் கி.பி. 1500 ரௌத்திரி வருடம். பொன்னாங்கட்டியார் வேங்கடநாதர் என்பவருக்குச் சமாதியிட நிலம் வாங்கிச் சமாதி எழுப்பி, அந்நிலத்தைச் செல்லீசுவரர் கோயிலுக்குக் கொடையாக அளித்த செய்தியைக் கல்வெட்டு சொல்கிறது. சமாதியானதைக் கல்வெட்டு “யோகம் ஆகையில்” எனக்குறிப்பிடுகிறது.

                                                                 “யோகம் ஆகையில்”   என்னும் தொடர் 
                                                


கல்வெட்டுகளின் நிலை
கல்வெட்டுகளின் இன்றைய நிலை நமக்கு அளிப்பது வருத்தமே. ஒரு கல்வெட்டுகூட முழுதும் படிக்கும் வகையில் இல்லை. எழுத்துகளின் மீது பல ஆண்டுகளாகக் காவி வண்ணம் பூசப்பட்டதால் எழுத்துகள் மறைந்துவிட்டன. சுதையும் செங்கல்லும் கொண்டுள்ள கட்டுமானத்தில் வெள்ளைச் சுண்ணமோ காவிச் சுண்ணமோ பூசுதல் வழக்கம். கல் கட்டுமானத்தின்மீது எவ்விதப்பூச்சும் பூசாமல் விட்டுவைத்தலே அதன் மெய்யான அழகையும், சிற்பச் சிறப்புகளையும், கல்வெட்டுகளின் முழுமையையும் எடுத்துக்காட்டவல்லது.. ஆனால், பல கோயில்களில் இந்த வழிமுறை பின்பற்றப்படுவதில்லை. கண்மாளர் கல்வெட்டினை நூலில் கண்டதோடு சரி. நேரில் படித்து மகிழ இயலவில்லை. ஓரிரு சொற்கள் பார்வையில் பட்டன. மகாபாரதக் கதையில், வனவாசத்தின்போது கண்ணனுக்குச் சோறு கிடைக்கவில்லை; சோற்றுப்பருக்கை மட்டுமே கிடைத்தது என்பதுபோல.

அந்தியூரில் ஒரு வீரபத்திரர் கோயில்
சிவன் கோயிலுக்கருகிலேயே ஒரு வீரபத்திரர் கோயில் காணப்பட்டது. வீரபத்திரர் வழிபாடு இப்பகுதியில் இருந்துள்ளமை பற்றிய சான்றினை  முன்னரே தேவர்மலைக் கோயிலில் கண்டிருக்கிறோம். அந்தியூரில் ஒரு தனிக்கோயிலே காணப்பட்டது. எளிமையான கற்றளி. கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றில் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. கருவறை விமானம் சற்றே மாறுபட்டிருந்தது. வட்ட வடிவிலான வேசர விமானத்துடன் சாலை அமைப்பும் கலந்த ஒரு கலவையான தோற்றம். அறநிலையத்துறையில் பணியாற்றும் திரு. தணிகாசலம் என்பவர்-கோயில்களின் பழமை, வரலாறு பற்றிய ஆர்வமுள்ளவர்- புறக்கணிக்கப்பட்ட இக்கோயிலை முயற்சியெடுத்துப் பேணிவருகிறார்.

                         வீரபத்திரர் கோயில் - அந்தியூர்

                  வீரபத்திரர் கோயில் -  மற்றொரு தோற்றம்

                                                                             வீரபத்திரர் -  மூலவர்


நடுகல் சிற்பம்
மாரியம்மன் கோயில் மண்டபம் ஒன்றை இடித்ததனால் கிடைத்த கற்றூண்களைச் சிவன் கோயிலின் முன்புறத்துள்ள திறந்த வெளியில் குவித்து வைத்திருக்கிறார்கள். இந்தக் குவியலுக்கிடையில் ஒரு வீரனின் நடுகல் சிற்பமும் காணப்பட்டது.

                      நடுகல் சிற்பம் -  கேட்பாரற்ற நிலையில்


தொல்பழங்காலக் கல்திட்டையும் இராஜகம்பளத்தாரின் மாலக்கோயிலும்
அந்தியூர்-சத்தி சாலையில், அந்தியூரை அடுத்துள்ள தோப்பூரில் சாலைக்கருகிலேயே ஒரு மாலக்கோயில் காணப்பட்டது. மாலக்கோயிலின் இந்தப்பதிவு நிகழாமலே போயிருக்கும். ஏனெனில், நாங்கள் பயணம் சென்ற “கார்இதைக்கடந்து சென்றுவிட்ட நிலையில், குவியலாக நின்ற கல் தூண்கள் நொடிப்பொழுதில் வரலாற்று ஆர்வலர் ஃபவுசியா அவர்களின் கண்களில்  பட்டுவிடவே நாங்கள் வண்டியைப் பின்னுக்குக் கொண்டுவந்து பார்க்க நேரிட்டது. ஈரோடு மாவட்டப்பகுதியில் நாயக்கர் இனத்தார், இறந்துபோன தம் உறவினர் நினைவைப் போற்றும் வகையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நினைவுக்கல எழுப்பி வழிபடுகிறார்கள். (இறந்தவர்களைப் புதைத்த அல்லது எரியூட்டிய இடம் வேறு; நினைவுக்கல் எழுப்புகின்ற இடம் வேறு). இந்த இடம் மாலக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. முன்னர் ஒருமுறை, பவானி வட்டத்தில் கள ஆய்வுக்குச் சென்றபோது, சின்னப்புலியூர் என்னும் சிற்றூரில் இத்தகைய மாலக்கோயிலைப் பார்த்த நினைவு வந்தது. (அதன் ஒளிப்படம் கீழே காண்க). தோப்பூரில், நாம் பார்த்த மாலக்கோயில் இராஜகம்பளத்தார் குலத்தவர்க்குரியது. மிகப்பெரியதொரு பரப்பில் நூற்றுக்கணக்கான நினைவுக்கற்கள். இதில் உள்ள சிறப்பு என்னவெனில், இந்த மாலக்கோயிலை, இங்கே முன்னரே இருந்த தொல்பழங்காலக் கல்திட்டையொன்றைச்(DOLMEN)சுற்றி அமைத்திருக்கிறார்கள். பெருங்கற்கால  நினைவுச் சின்னம் இருப்பது தெரியாமலேயே, அந்த மரபைப் பேணும் வகையில் மாலக்கோயிலை அமைத்திருப்பது தற்செயல் என்றாலும் பொருத்தமான ஒன்றே. பழங்காலத்து எளிய கருங்கற்களும், புதிய பளபளப்பூட்டிய தற்காலத்துக் கருங்கற்களும் கலந்து காணப்பட்ட நினைவுக்கற்களின் இடையில் எழுத்துப் பொறிக்கப்பட்ட ஒரு கல் பார்வையைக் கவர்ந்தது. உடன் கொண்டுசென்ற மைதா மாவினை அக்கல்மீது பூசியபின்னர் எழுத்துகள் தெளிவாகத் தெரிந்தன.

              மாலக்கோயில் - பின்புலத்தில் பெருங்கற்காலக் கல்திட்டை

                                                                                           மாலக்கோயில்


                       பவானி வட்டம் - சின்னப்புலியூரில் ஒரு மாலக்கோயில்


                                                            மாலக்கோயிலில் ஒரு கல்வெட்டு
                                                            எழுத்துகள் புலப்படா நிலையில்


                                                           கல்வெட்டு எழுத்துகள் காணும் நிலையில்


கல்வெட்டின் பாடம்

1  சாஷனம் க
2  ல் போட்டது
3  மல்லக்காள்
4  1904  வ
5  ருஷம் மா
6  ர்கழி மீ
7  27 உ மஞ்
8  ஞ்சள் நாயக்
9  கனூர் சூர
10 நாயக்கன்
11 மகன் பட்
12 டகார் கஞ்
13 ச நாயக்க
14 ன் கல்


முடிவுரை
அந்தியூரை மையப்புள்ளியாகக் கொண்டு சுற்றியுள்ள பகுதிகளில், நாங்கள் கேஏள்விப்பட்ட சில செய்திகளின் அடிப்படையில், நாங்கள் மேற்கொண்ட தொல்லியல் தடயங்களின் தேடல் பயணம் எக்களுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை. கொங்குப்பகுதியின் தொன்மைத் தடயங்களை இயன்றவரை வெளிக்கொணரும் எங்கள் விருப்பமும் முயற்சியும் தொடர்கின்றன.


து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி: 9444939156.