மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 28 ஜூன், 2016

களந்தை-கரைப்பாடி-ஆனைமலை-திருமூர்த்திமலை
ஒரு வரலாற்றுச் சுற்றுலா பகுதி ஒன்று.

கோவை- வாணவராயர் அறக்கட்டளை

         கோவையில் இயங்கும் வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் கொங்குப்பகுதியில் வரலாற்றுத் தொடர்புள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லும் உலாக்களில் ஒன்று 26-06-2016 ஞாயிறன்று நடைபெற்றது. அதுபோது, பொள்ளாச்சியை ஒட்டியுள்ள களந்தை, கரைப்பாடி, ஆனைமலை, திருமூர்த்திமலை ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்தோம். தமிழ்நாடு தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, தொல்லியலில் துறைபோகிய அறிஞர் திரு. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பயண உலா மிகுந்த இன்பத்தையும் பயனையும் நல்கியது எனில் மிகையல்ல. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே. இக்கட்டுரையில் வருகின்ற வரலாற்றுச் செய்திகள் அனைத்தும் திரு. பூங்குன்றன் அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை.

களந்தை




முதலாம் ஆதித்தசோழனும் இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டும்
முதலில் நாங்கள் சென்றது கிணத்துக்கடவுக்கு அருகில் அமைந்த ஒரு சிற்றூரான களந்தை இது ஒரு வரலாற்றுச் சிறப்புள்ள ஊர். இங்கு, தற்காலம்  ஆதீஸ்வரம் என்னும் பெயர் கொண்ட சிவன்கோயில் உள்ளது. ஆனால், கோயிலின் பழம்பெயர் “ஆதித்தேசுவரம்”  என்பதாகும். சோழ மன்னர்களில் இரண்டாவது அரசனான முதலாம் ஆதித்தசோழன் பெயரால் அமைந்த கோயில். இந்த ஆதித்தசோழன் கொங்குநாட்டைப்பிடித்தான்; ஆட்சி செய்தான் என்பதற்கு இரு சான்றுகள் உள்ளன. ஒன்று, கொங்குதேச ராஜாக்கள் என்னும் நூல். இரண்டாவது கோவைப்பகுதியில் பாலக்காட்டுக்கணவாய் காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் இராசகேசரிப்பெருவழிக்கல்வெட்டு. கொங்குதேச ராஜாக்கள் நூலில், ஆதித்தசோழன் கொங்குநாட்டு வேட்டுவராஜாக்களை வெற்றிகொண்டான் என்று குறிப்பிடப்பெறுகிறது. செய்தி பழைய காலத்துச் செய்தியாக இருப்பதாலும், இருநூறு ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட நூலாக இருப்பதாலும் இக்கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இராசகேசரிப் பெருவழி என்று ஒரு பெருவழியையும் அப்பெருவழியில் இருந்த கல்வெட்டையும் கண்டுபிடித்தார் பூங்குன்றன் அவர்கள். அக்கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு:
இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு
கல்வெட்டுப்பாடம் (வட்டெழுத்துப்பகுதி)

1         ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிப்
2         பெருவழி திருநிழலு மன்னு
3         யிருஞ் சிறந்த
4         மைப்ப ஒருநிழல் வெண்டி
5       ங்கள் போலோங்கி ஒரு நிழல்போ
6         ல் வாழியர் கோச்சோழன் வளங்
7         காவிரி நாடன் கோழியர் கோக்கண்ட
8         ன் குலவு.

கல்வெட்டுப்பாடம் (தமிழெழுத்துப்பகுதி)

1            ஸ்வஸ்திஸ்ரீ கோஇரா
2            சகேசரிப்
3            பெருவழி


இக்கல்வெட்டு முதலாம் இராசராசன் காலத்தது என்று தொல்லியல் அறிஞர்கள் கருதினார்கள். ஆனால், கல்வெட்டு முதலாம் ஆதித்தசோழன் காலத்தது என்று பின்னர் தெளிவாகியது. கல்வெட்டில் “கோக்கண்டன் என்ற ஒரு பெயர் வருகிறது. இதே பெயரோடு தில்லைத்தானம் என்ற ஊரில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில், பல்யானைக் கோக்கண்டனாயின தொண்டைநாடு பாவிய இராஜகேசரி என்று ஒரு தொடர் வருகிறது. தொண்டைநாடு பாவிய இராஜகேசரி என்பவன் முதலாம் ஆதித்த சோழன்தான். கோக்கண்டன் என்னும் பெயர் சோழர்களில் இருவருக்கு மட்டுமே வழங்கியது. ஒருவன் முதலாம் ஆதித்தன்; இரண்டாமவன் இரண்டாம் இராஜராஜன். இரண்டாம் இராஜராஜன்., கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அந்தக்காலத்தில் இராசகேசரிப்பெருவழிக்கல்வெட்டு சேராது. காரணம், இக்கல்வெட்டு வட்டெழுத்துக்கல்வெட்டு. எனவே, முதலாம் ஆதித்தன் கல்வெட்டு இங்கே கொங்கில் இருப்பதால், ஒருவேளை கொங்குநாட்டில் அவனது ஆட்சி நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது. அவ்வாறு, அவன் கொங்குநாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, அவன் பெயரால் யாரேனும் களந்தைக்கோயிலைக் கட்டுவித்திருக்கலாம். அவனே கட்டுவித்தான் எனச் சொல்வதற்கில்லை. அதுவும், ஆதித்தன் காலத்தில் கட்டப்படவில்லை. கோயில் பிற்காலத்தது.

கருவூர்த்தேவர் சுட்டும் இன்னொரு களந்தை
தஞ்சைப்பகுதியிலும் ஒரு களந்தை உண்டு. அந்தக்களந்தையைப்பற்றித் திருவிசைப்பாவில் கருவூர்த்தேவர் பாடியிருக்கிறார். அந்தப்பாட்டில், கோயில் இராஜராஜேச்சுரம் என்ற பெயரில் சுட்டப்பெறுகிறது. என்வே, அது இந்தக்களந்தை அல்ல என்பது தெளிவாகிறது.

கோயில் கல்வெட்டுகள்
இந்தக்கோயில் கல்வெட்டுகளில் சிறப்பானதாகக் கருதப்படும் ஒரு கல்வெட்டு, சேலம் நாட்டுச் சேலமான இராஜாச்ரயபுரத்திலிருக்கும் கைக்கோளன் ஒருவன் இங்கு வந்து தங்கியிருந்தபோது கொடுத்த தானத்தைப் பற்றிக்குறிப்பிடுகிறது. உள்ளூர் அல்லாது, பல வெளியூர்களிலிருந்து வந்து இந்தக்கோயிலுக்குக் கொடை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
                  கோயிலின் வளாகத்தில் ஒரு நடுகல் சிற்பம்

                தூண் கொடை பற்றிய கல்வெட்டு - 3 பகுதிகளாக
பகுதி-1
பாடம்
1 ஸ்வஸ்திஸ்ரீவி
2 க்கிரம சோழ
3 தேவற்கு யா
4 ண்டு பத்தாவ
5 து களந்தை
                               பகுதி-1

பகுதி-2
பாடம்
1 யிலிருக்கும்
2 வெள்ளாளரி
3 ல் மாப்புளி
4 களில் கோ
5 வந் தேவநா
                                                            பகுதி-2

பகுதி-3
பாடம்
1 ன உதைய
2 பாலந்
3 தரும
4 ம் இத்தூண்
5 பந்மாயேஸ்வ
6 ர ரக்ஷை
                                                                  பகுதி-3


வாயறைக்காநாடு
களந்தை, வாயறைக்காநாட்டைச் சேர்ந்தது. பல்லடம், பொள்ளாச்சி ஆகிய இரு வட்டங்கள் சந்திக்கும் பகுதி இந்த வாயறைக்காநாடு. வாயறைக்காநாடு, தென்கொங்கிலிருந்த ஏழு நாடுகளுள் ஒன்று. காவடிக்காநாடு, கரைவழிநாடு, வெண்டையூர்க்கால் வீரகேரளவளநாடு, நல்லூர்க்காநாடு முதலானவை இவ்வேழு நாடுகளுள் அமையும். கொழுமம் கோயில் கல்வெட்டில் ஏழு நாடுகள் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த ஏழு நாடுகளில் (அதாவது தென்கொங்கில்) இருந்த கம்மாளர்களுக்கு அரசனால் சில உரிமைகள் வழங்கப்பட்ட செய்தியை கொழுமம், பேரூர், கரைப்பாடி, குடிமங்கலம் போன்ற பல ஊர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் காண்கிறோம். (உரிமைகள் பற்றிய விளக்கம் “கரைப்பாடி”  என்னும் தலைப்பில் காண்க.)
பூலுவர்கள்-பழங்குடிகள்
                       பூலுவர்-குறிப்புள்ள கல்வெட்டு      
கல்வெட்டின் பாடம்:
1 ..
2 வது வாய
3 றைக்கா
4 நாட்டுக்க
5 ளந்தையி
6 ல் பூலுவ
7 ந் பெரும்
8 பற்றாரில்
9 வாணந்
10 நிலையு
11 டையாந்

வாயறைக்காநாடு பூலுவர்கள் இருந்த பகுதியாகும். பொள்ளாச்சியிலும் குள்ளிச்செட்டிபாளையத்திலும் பூலுவர்கள் இருந்தனர். (பொள்ளாச்சி, வெண்டையூர்க்கால் நாட்டைச்சேர்ந்தது). குள்ளிச்செட்டிபாளையம் தற்போது ஒரு சிற்றூர். தென்கொங்கின் வடபகுதி முழுதும் பூலுவர்கள் இருந்த செய்தியைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. காலப்போக்கில், வெள்ளாளர் வந்தபிறகு பூலுவர், வெள்ளாளர் இருவரையும் கல்வெட்டுகள் தனித்தனியே குறிப்பிடுகின்றன. ஒரே பகுதியில், வெள்ளானூர் என்றும் பூலுவனூர் என்றும் இருக்கும். இவ்விருவகையினருக்கும் தனித்தனியே நாட்டுச்சபைகள் இருந்தன. இருவகையினரும் சேர்ந்து கோயில்களுக்குக் கொடைகள் கொடுத்துள்ளனர். இதுபற்றிய குறிப்புகள் அவிநாசி, சேவூர் ஆகிய ஊர்க்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
பழங்குடிகள் வேளாண்குடிகளாக மாற்றம் பெறுதல்
மேலே குறிப்பிட்டபகுதிகளில் இருந்த பூலுவர்களைச் சோழர்கள் வேளாண்குடிகளாக மாற்றினர். அப்போது, பூலுவர்கள் தங்களை வேளாண்குடிகளாக உட்படுத்துவதற்காக, அவர்களுக்குச் சில சலுகைகள் அளிக்கப்பட்டன. இச்சலுகைகள், பூலுவர்களை வேளாண்குடிகளாக மாற்றும் ஒரு முயற்சியாக இந்தசலுகைகளைக் குறிப்பிடலாம்.
பழங்குடித்தெய்வம் பெற்றநாச்சியார்


பழங்குடிகளை வேளாண்குடிகளாக மாற்றும்போது பழங்குடிகளின் தெய்வங்களைச் சிவன்கோயில்களுக்குள் கொண்டுவருகின்றனர். அவ்வாறு கொண்டுவரும்போது, பழங்குடித்தெய்வங்கள் எப்படி இருந்தனவோ அப்படியில்லாமல் பிராமணமரபுக்குட்பட்டு மாற்றப்பட்டன. தமிழ்நாட்டிலேயே, இந்த ஊரில்தான் நந்தியின்மேல் அமர்ந்த நிலையில் அம்மனைப் பார்க்க இயலும். நந்திமேல் அமர்ந்த அம்மன் என்பதால் பெற்றநாச்சியார் என்று அழைத்தார்கள். பெற்றம் என்றால் எருது. பெற்றநாச்சியார் என்று கொழுமம்,ஆனைமலை ஆகிய ஊர்க்கல்வெட்டுகளில் குறிப்பு வருகிறது. ஆனைமலை ஆனைக்கீசுவரர் கோயிலில் பெற்றநாச்சியார் சிலையைப் பாண்டிமண்டலத்து இருஞ்சோனாட்டைச் சேர்ந்த சுந்தரப்பெருமாள் வாழ்வித்தாரான பல்லவராயர் என்பவர் திருக்காமக்கோட்டநாச்சியாராக ஏறியருளப்பண்ணினார் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. பாண்டிநாட்டிலிருந்து வந்த ஒருவர் இங்கு பெற்றநாச்சியார் சிலையைச் செய்துகொடுத்தார் என்னும் செய்தியைக்காணும்போது, பெற்றநாச்சியார் என்னும் தாய்த்தெய்வம் இப்பகுதியில் எத்துணை முதன்மையான தெய்வமாக இருந்திருக்கும் என்பதை அறியலாம். களந்தைக்கோயில் கருவறையில் இருப்பது பெற்றநாச்சியார் உருவமேயாகும். இந்தப்பகுதி அம்மன்வழிபாட்டுக்குரிய பகுதியாக விளங்கியுள்ளது. அம்மன் வழிபாடு, சோழர் ஆதிக்கம் செயல்பட்டமை போன்ற பல அடிப்படைகளால் இந்தக்கோயில் சிறப்பிடம் பெறுகிறது. இந்தக்கோயிலின் அருகில் இராசராசன் காசு கிடைத்துள்ளது.
களந்தையில் பெருங்கற்சின்னங்கள்
                       பெருங்கற்சின்னம்-கல்திட்டை                         

                                      கல்திட்டைக்குள் புலிகுத்திக்கல்


                                                  புலியின் உருவம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெருங்கற்சின்னங்கள் (ஈமச்சின்னங்கள்) இந்த ஊர்ப்பகுதியில் கிடைத்தன. பல வீடுகளில் இந்தத் தாழிகளை எடுத்து வீட்டுப்பயன்பாட்டுக்குப் புழங்கிவந்துள்ளனர். சாம்பல் மேடு (Ash mound)  இங்கே இருந்துள்ளது. மேலும், வேட்டுவர் நடுகற்களும் கிடைத்துள்ளன. இவையெல்லாம் ஊரின் பழமையைப் பறைசாற்றும் சான்றுகள். பூலுவவேட்டுவர் என்று இப்பகுதியில் குறிப்பிடப்பெறுகிறார்கள். பூலுவரும் வேட்டுவரும் ஒருவரே ஆகலாம். பழங்குடிகளை நாகரிகக்குடிகளாக மாற்றுவதற்குச் சோழர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி ஓரளவு வெற்றிபெற்றது எனலாம். காலம் செல்லச்செல்ல, அவர்கள் வேறுவேறு தொழில்களில் ஈடுபட்டனர். வாணிகமும் நிறைய நடைபெற்றது.
பாடிகாவல்
தமிழ்நாட்டின் வடபகுதியில் மட்டும் கிடைக்கும் ஒரு கல்வெட்டுச்சொல் இங்குள்ள கல்வெட்டில் கிடைத்துள்ளது. பாடிகாவல் என்பது அச்சொல். பாடி என்பது ஆடுமாடு ஆகிய கால்நடைகளைப் பாதுகாத்து வைக்கும் இடமாகும். நாளடைவில் நிலையான ஊராகும்போது பாடி என்னும் பெயர் ஊர்ப்பெயருடன் இணைந்தது. பாடிகாவல் என்பது ஊர்க்காவலையும், ஊர்க்காவலுக்காகப் பெறுகின்ற வரியையும் குறிக்கும். இந்தச்சொல் முதன்முதலில் தேவாரத்தில்தான் வந்தது. “பாடிகாவலில் பட்டு உழல்வீரே என்பது நாவுக்கரசர் தென்கோடிக்காவில் பாடிய பாட்டில் வரும் தொடர். பாடிகாவலைக் கீழானதாக அப்பர் நினைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. ஆனால், காரணம் தெரியவில்லை. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில்தான் கல்வெட்டுகளில் பாடிகாவல் சொல் கிடைக்கிறது. அதற்குமுன்னர், சோழர்கள் பாடிகாவலைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால், உள்ளூரில் இருக்கும் மக்கள் அந்த ஊர்க்காவலர்களுக்கு ஊதியமாகப் பாடிகாவல் வரியைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, அரசு நிர்வாகத்தில் வராத சிறிய நிலையிலான பாடிகாவல் வரிபற்றிக் கல்வெட்டில் வரவில்லை. முதல் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் காலத்திலிருந்துதான் பாடிகாவல், கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஒரு சிலர், தமக்கு வரவேண்டிய பாடிகாவல் வருமானத்தைக் கோயிலுக்குக் கொடையாக அளித்துள்ளனர். சிறிய நிலையிலான பாடிகாவல் சோழர் காலத்தில் பெரிய நிலைக்கு உயர்கிறது. பாடிகாவல் பற்றிய கல்வெட்டு இந்தக்கோயிலில் மட்டுமே உள்ளது. வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் பாடிகாவல், தமிழகத்தில் வேறெங்கும் இல்லை; இங்கு களந்தைக்கோயிலில் இருப்பது சிறப்பு.
கோயிலின் பெயர்க் காரணம்
தற்போது “ஆதீஸ்வரம்”  என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்பெயர், சமணத் தீர்த்தங்கரரில் முதல்வரான ஆதிநாதர் என்னும் ரிஷபதேவர் பெயரால் வந்தது என்று சில அறிஞர்களின் கருத்து. இப்பகுதியில், பல சமணக்கோயில்கள், சைவக்கோயில்களாக மாற்றப்பட்டதன் அடிப்படையிலும், இக்கோயிலில், பரியங்க ஆசனத்தில் அமர்ந்து தவம் செய்யும் தோற்றத்தில் உள்ள ஒரு முனிவரின் சிற்பத்தின் அடிப்படையிலும் மேற்படி கருத்து உருவாகியிருக்கலாம். ஆனால், முனிவரின் சிற்பம், சமண முனிவரின் தோற்றத்தில் இல்லை; அது, ஒரு சைவமரபைச்சேர்ந்த முனிவரின் தோற்றத்தில்தான் காட்சியளிக்கிறது. எனவே, சோழ அரசன் முதலாம் ஆதித்தன் பெயரால் இக்கோயிலின் பெயர் அமைந்தது என்றே கொள்ளவேண்டும். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 870-907. ஆனால், கோயில் பிற்காலத்தது.
களந்தையும் வச்சணந்தி முனிவரும்
வச்சணந்தி மாலை என்னும் இலக்கண நூலை இயற்றிய வச்சணந்தி முனிவர் இப்பகுதியைச் சேர்ந்தவர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதன் அடிப்படையில், வச்சணந்தி முனிவர் கொங்குநாட்டைச் சேர்ந்தவர் என்று கருதுவார் உளர். ஆனால், இக்கருத்துகளுக்குச் சான்றுகள் இல்லை.

முடிவுரை
இதுகாறும் நாம் அறிந்தவற்றால், பொள்ளாச்சி, ஆனைமலைப்பகுதிகளில் தாய்தெய்வ வழிபாடே பழங்குடி மக்களால் சிறப்பாகவும் முதன்மையாகவும் பின்பற்றப்பட்டது என்பதும், பழங்குடிகளை நாகரிகக் குடிகளாக  மாற்றிய சோழர்களின் செயல்பாடும், பழங்குடியினரின் தாய்த்தெய்வத்தைப் பெருஞ்சமயத்தில் சிவனின் மனைவியாக இணைத்துக்கொண்ட செயல்பாடும், மக்கள் சமுதாயத்தில் காலமும், ஆட்சி அதிகாரமும் எத்தைகைய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
குறிப்பு: கரைப்பாடி, ஆனைமலை, திருமூர்த்திமலை ஆகியவை பற்றிய செய்திகள்
அடுத்துவரும் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தொடரும்.










து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

வியாழன், 2 ஜூன், 2016

                 இராசகேசரிப்பெருவழி பகுதி  இரண்டு
                                                         THE RAJAKESARI HIGHWAY – PART-II
                             

தமிழகத்தில் கல்வெட்டுகள்

        தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய அளவில், தமிழகத்தில்தான் கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிகுதி. இக்கல்வெட்டுகளுள் குறிப்பிட்ட சில கல்வெட்டுகள் தனிச் சிறப்புப் பெற்றவையாக விளங்குகின்றன. தொல்லியல் துறையினரும் கல்வெட்டு அறிஞர்களும் இவற்றை மறவாது மிகச்சிறப்பான இடமளித்துப் போற்றுகின்றனர். காரணம், இவை அரிய வரலாற்றுப் பின்னணியைக்கொண்டுள்ளன என்பதுதான். வரலாற்று நிகழ்வுகளின் காலத்தைத் துல்லியமாகக் கணிக்கவோ அல்லது இதுவரை தெளிவாகாத வரலாற்றுச் செய்திகளைப் புலப்படுத்தவோ அல்லது அரிய வரலாற்றுண்மைகள் வெளிப்படவோ பயன்படுமாறு இவை அமைந்துள்ளன.

அரிய கல்வெட்டுகள் - சில எடுத்துக்காட்டுகள்
                                                         
1)  ஜம்பைக்கல்வெட்டு
    அசோகனின் கல்வெட்டுகளுள் ஒன்றில் தமிழ்நாட்டுப் பெருவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் பற்றிய குறிப்பு உள்ளது. அத்துடன், சதிய புத”  என்னும் பெயரில் ஓர் அரசன் பெயரும் காணப்படுகிறது. இவ்வரசன் யார் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், பல்லாண்டுகள் கழிந்து, தொண்டை நாட்டில் ஜம்பை என்னும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழிக்கல்வெட்டு (பிராமிக்கல்வெட்டு) “சதிய புதஎன்பவன் தகடூரை ஆண்ட அதியமான்என்னும் அரசனே என்று உறுதிப்படுத்தும் சான்றாக விளங்கியது.
2)  உத்திரமேரூர்க் கல்வெட்டு
     அகரம் என்னும் பிராமணர் ஊராகிய சதுர்வேதிமங்கலத்துப் பெருஞ்சபை ஊர் நிர்வாகம் செய்கின்றபோது குடவோலை மூலம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த செய்திகளை விரிவாக எடுத்துரைப்பது உத்திரமேரூர் கல்வெட்டு.
3)  பூலாங்குறிச்சிக் கல்வெட்டு
     புதுக்கோட்டைப்பகுதியில் உள்ள பூலாங்குறிச்சிக் கல்வெட்டு அரியதொரு கல்வெட்டாகும். இது, பாண்டியர் காலத்துக் கல்வெட்டாயினும், களப்பிரர் காலத்தில் ஊர் நிர்வாகம், அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டமுறை ஆகியவை எவ்வாறிருந்தன என்பதை விரித்துச் சொல்லும் கல்வெட்டாகும். தமிழின் தொன்மை எழுத்தான பிராமி எழுத்து, வடிவ மாற்றம் பெற்று, வட்டெழுத்தாக உருவான கட்டத்தைச் சொல்லும் சான்றுக்கல்வெட்டு.
4)       புகழியூர் (கரூர்) பிராமிக்கல்வெட்டு
    புகழியூரில் ஆறுநாட்டார் மலையில் அமைந்த இயற்கைக் குகைத்தளத்தில் சமணப்படுக்கைகளுக்கிடையில் இருக்கும் இக்கல்வெட்டு சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தின் 7,8,9 பத்துகளின் பாட்டுடைத்தலைவர்களான சேர மன்ன்ர்கள் செல்வக்கடுங்கோ ஆழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை ஆகிய மூவரை முறையே கோஆதன் செல்லிரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என அடையாளம் காட்டுகின்ற கல்வெட்டாகும்.
ஐவர்மலைக் கல்வெட்டு (உடுமலை)
     இங்குள்ள கல்வெட்டுகளில் பாண்டிய அரசன் இரண்டாம் வரகுணனின் எட்டாம் ஆட்சியாண்டில் கி.பி.870-இல் வெட்டப்பட்ட  கல்வெட்டைக்கொண்டு இவனது ஆட்சியின் தொடக்கம் கி.பி. 862 என்னும் காலக்கணிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டும் ஓர் அரிய கல்வெட்டே

கோவைக்கருகில் மேற்குத்தொடர்ச்சி மலையில் கணவாய்ப்பகுதியில் அமைந்துள்ள இராசகேசரிப்பெருவழிக்கல்வெட்டும் ஓர் அரிய கல்வெட்டாகும். நாட்டிலேயே பழமை வாய்ந்த ஒரு பெருவழி இந்த இராசகேசரிப்பெருவழியாகும். இதன் சிறப்புகளும், கல்வெட்டு சொல்லுகின்ற செய்தியும் இராசகேசரிப்பெருவழி பகுதி ஒன்றுகட்டுரையில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட தமிழகக் கல்வெட்டுகளை நேரில் காண்பது பெரும்பாலும் எளிதாகவே இருக்கக்கூடும். ஆனால், இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டை நேரில் சென்று பார்ப்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. மலைகள் சூழ்ந்த வனப்பகுதிக்குள் கல்வெட்டு இருப்பதுதான் காரணம். (17-06-2015 அன்று வெளியான கட்டுரையின் முதல் பகுதியைக்காண்க.)

இரண்டாவது முயற்சி

    முதல் முயற்சியில் கல்வெட்டைக் காண இயலவில்லையாதலால் மற்றுமொரு வாய்ப்பு எப்போது எப்படிக் கிடைக்கும் என எண்ணிக்கொண்டிருந்த வேளை. (முதல் முயற்சி மேற்கொண்டது 2015-ஆம் ஆண்டு, ஜூன் மாதம்.) முதல் முயற்சிக்குப்பின்னர் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டிருந்தன. காசிப்பயணத்தையும், “ஹஜ்பயணத்தையும் இலக்காகக்கொண்டு சிலர் வாழ்வதைப்பார்க்கிறோம். அதுபோல, ஒருமுறையேனும் இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டை நேரில் காணவேண்டும் என்ற பேரவா உள்ளத்தில் நீங்காமல் ஓடிக்கொண்டிருந்தது. எதிர்பாராமல் ஒரு நாள் இரண்டாவது முயற்சிக்கான வாய்ப்புக் கிட்டியது மிக மிக வியப்பான ஒரு நிகழ்வாகும். கல்வெட்டைக்காணும்வரை உறுதியில்லை. சென்ற முறை முயன்றபோது, கல்வெட்டைக்காணும் பயணம் கோவைப்புதூரை அடுத்துள்ள வனப்பகுதி வழியே நிகழ்ந்தது என எழுதியிருந்தேன். அப்பயணத்தில், பெருவழித்தடத்தின் ஒரு பகுதியை ஒருவாறு  அணுகியிருந்தோம். அப்போது, நாங்கள் நின்றிருந்த மலைப்பகுதியின் உயரத்திலிருந்து கீழே எட்டிமடை என்னும் சிற்றூர் பார்வைக்குத்தெரிந்தது. தற்போது, எட்டிமடை என்னும் அந்த ஊர்தான் வாய்ப்பை நல்கியது. அண்மையில், அந்த ஊரில் ஒரு நண்பரைக் காணப்போயிருந்தபோது, எட்டிமடையை ஒட்டியுள்ள மலைப்பகுதியை நன்கறிந்த, அன்பரசு என்னும் பெயர் கொண்ட ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவரைச் சந்தித்துப் பேசியபோது, மறுநாளே மலைப்பகுதிக்குப் போகலாம் என்று முடிவாயிற்று.  



மலைநிலம் அறிந்த நண்பர்

அன்பரசு, அப்பகுதியில் கால்நடை வளர்ப்பிலும், வேளாண்மையிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர். இளமைப்பருவத்தில், அவரும் அவர் நண்பர்களும் அம்மலைப்பகுதியில் சுற்றாத இடமில்லை என்று அவர் கூறியபோது ஏற்பட்ட மலைப்பையும், வியப்பையும் தவிர்க்க இயலவில்லை. ஏனெனில், அப்பகுதியில் மூன்று மலைகள் இருப்பதாகச் சொன்னார். அட்டமலை, திமில் மலை, தேக்கந்திட்டு ஆகிய மூன்று மலைகள் ஒன்றையொன்று நெருங்கிச் சூழ்ந்திருந்தன. அட்டமலை வடபுறத்திலும், திமில்மலை தென்புறத்திலும் இவற்றுக்கு நடுவே தேக்கந்திட்டும் உள்ளன. இவற்றில் திமில்மலை ஏன் அப்பெயர் பெற்றது என்பது அம்மலையைப் பார்த்தவுடனே ஒருவர் புரிந்துகொள்ளக்கூடும். அதன் உச்சி, ஒரு காளையின் திமிலைப்போலத் தோற்றமளித்தது. மூன்று மலைப்பகுதிகளிலும் வனத்துக்கிடையில் ஊடாடி உலவுதல் என்பது எளிதான செயலல்லவே. மண்ணின் மைந்தர்களாக, இயற்கையோடு ஒன்றி, இயற்கையைப்புரிந்து, இயல்பாகவே சுற்றுச்சூழல் பேணும் பழங்குடிகள் போல இவர்களும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டிருந்ததை உணர்ந்தோம். அன்பரசுவின் அந்த இரண்டு நண்பர்கள் இராமசாமி என்பவரும், குருவாயூரப்பன் என்பவரும் ஆவர். அவர்களுடைய உதவி இன்றி இந்தப்பயணம் வெற்றிபெற்றிருக்காது; கல்வெட்டைக்கண்டிருக்க வாய்ப்பே இல்லை.

    அடுப்பெரிக்க எரிவாயு எல்லாருக்கும் கிடைக்கின்ற காலகட்டம் வரும் வரைக்கும், இம்மலைப்பகுதியில் கிடைத்துவந்த விறகுதான் கோவைப்பகுதி முழுவதற்கும் எரிபொருள் தேவையைப் போக்கியது என அன்பரசு சொன்னார். விறகு தேடி ஆணும் பெண்ணுமாகப் பலர் இந்த வனப்பகுதிக்குள் திரிந்துள்ளனர். 1976-ஆம் ஆண்டில்தான் பெருவழிக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. எழுபதுகளில் இப்பகுதியில் பெருமளவில் புளியமரங்கள் இருந்தனவாம். இப்போதிருப்பதுபோல் முள்மரங்களும், முட்புதர்களும் அடர்ந்து காணப்படாமல் நிறைய வெளிப்பரப்பு இருந்துள்ளது. பாதையும், வண்டி போகுமளவு இருந்ததாம். விறகு தேடிச் சென்ற எளிய மக்கள் பெருவழிக்கல்வெட்டினை அன்றாடம் வெகு எளிதாக, அதன் சிறப்புத் தெரியாமல் பார்த்து வியந்துள்ளனர். அவர்களுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு, பின்னாளில் இல்லாமல் போனது. எட்டிமடையிலிருந்து சுண்டைக்காய்முத்தூரை இணைக்கும் இணைப்புச்சாலையாக இராசகேசரிப்பெருவழி ஒரு காலத்தில் இருந்துள்ளது. (தொல்லியல் துறையின் “கோவை மாவட்டக்கல்வெட்டுகள்நுலில் இக்கல்வெட்டு சுண்டைக்காய்முத்தூர் ஊரின்கீழ் பதிவிடப்பட்டுள்ளமை கருதத்தக்கது.) சிறு சிறு வணிகர்கள் தம் வண்டிகளோடு இச்சாலையைப் பயன்படுத்தியதாக நண்பர் சொன்னது நம்மை மேலும் வியப்படைய வைத்தது. ஆங்காங்கே, சிறிய அளவில் வேளாண்மையும் நடந்துள்ளது. “தர்பூசனிப்  பழங்கள் நிறைய விளைந்தன. மலையடிவாரத்தில் வாழ்ந்த மக்கள் குடிநீருக்காகக் காட்டுக்குள் இரவு நேரத்திலும் சிறிது தொலைவு நடந்து சென்றுவந்துள்ளனர் என்னும் செய்தி, அந்நாளைய மக்கள் எத்துணை இன்னல்களைச் சந்தித்துள்ளனர் என்பதை நமக்கு எடுத்துச் சொன்னது. நாளடைவில் இருபது இருபத்தைந்து ஆண்டுகள் கால இடைவெளியில் சூழ்நிலை முற்றிலும் மாறிப்போனது.

    நண்பர் அன்பரசு தம்முடைய கால்நடைகளைக் காட்டுக்கள் கொண்டு சென்று மேய விட்டிருந்த காலங்களில் ஒரு நாள், தாம் படித்துக்கொண்டிருந்த இதழ் ஒன்றில் இராசகேசரிப் பெருவழியைப்பற்றியும், பெருவழிக்கல்வெட்டைப்பற்றியும் வெளியாகியிருந்த செய்தியைப்பார்த்துப் பெருவியப்புற்றாராம். காரணம், அப்பெருவழியில், கல்வெட்டின் அருகிலேயே அமர்ந்துதான் அவர் செய்தியைப் படித்துக்கொண்டிருந்தார். கல்வெட்டைப் பலமுறை படிக்கமுயன்றும் படிக்க இயலவில்லையென்னும் வருத்தம் இருந்தது. நண்பர் சொன்ன செய்திகளையெல்லாம் கேட்டு வியந்திருந்தபோது, அச்சம் தருகின்ற செய்தி ஒன்றையும் அவர் சொன்னார். சில நாள்களுக்கு முன்னர்தான் நண்பரின் மலையடிவார வீட்டுத்தோட்டத்தில் யானை இரவுநேரத்தில் புகுந்து மாட்டுத்தீவன மூடைகளைப்புரட்டிக்கிழித்துத் தவிடுதின்று அந்த இடத்தைத் தவிடுபொடியாக்கியிருந்தது. யானைகளை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? நிலை என்ன? என்பதுபோன்ற இடர் எதிர்கொள்ளல் (RISK)  நினைவு, பயணத்தை மேற்கொள்ளவேண்டுமா என்னும் அச்சத்தையும், பயணம் பாதுகாப்பாக நடந்து கல்வெட்டைக் காணும் குறிக்கோள் நிறைவேறுமா என்னும் ஐயத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியது. யானை தவிர, வேறு எவையேனும் வன விலங்குகளை எதிர்கொள்ள நேருமோ என்னும் அச்சமும் கூடவே எழுந்தது. இருப்பினும், எவ்வாறேனும் பெருவழிக்கல்வெட்டைக்காணும் ஆவல் மேலோங்கி அதனால் ஏற்பட்ட கிளர்ச்சி அச்சத்தையும் ஐயத்தையும் ஒருவாறு போக்கியது. நண்பர்களும், கோடை-வெயில் காலமாதலால், விலங்குகளைச் சற்றுத் தொலைவிலேயே பார்த்துவிடமுடியும் என்றும், வேறு காலங்களில் (கோடை முடிந்து, மழை காரணமாக மீதிக் காலங்களில் காடு பசுமை போர்த்தியிருக்கும் வேளைகளில்) விலங்குகள் பார்வைக்குப்புலப்படா என்று கூறியதாலும் அச்சம் தவிர்த்தோம். . 

பயணம் தொடங்கியது

    அடிவாரத்திலிருந்து பயணம் தொடங்கியது. பயணம் தொடங்கியபோது நேரம் பிற்பகல் மூன்றரை மணி. இப்போது தொடங்கி இருள் படருமுன்னர் திரும்ப இயலுமா என்னும் கேள்வி எழுந்தபோது, நண்பரும் அவரது நண்பர்கள் இருவரும் “ போக இருபது நிமிடம், திரும்ப இருபது நிமிடம்; ஆக நாற்பது நிமிடங்கள் எங்களுக்குப் போதும்எனச் சொன்னதும், “இன்னும் எதெதற்குத்தான் வியப்புக்கொள்வது?”  என்ற எண்ணமேற்பட்டது. நாங்கள் காட்டுப்பயணத்துக்குப் புதியவர்களாதலால் இரண்டு மணி நேரத்தில் போய்த்திரும்பலாம் என்றனர். பயணம் தொடங்கியது. சிறிது தொலைவு சமதளத்தில் நடந்ததும் ஓரிடத்தில் இரண்டு மேடைகளில் இறைச்சிற்பங்களை எழுந்தருளிவித்துக் கோயில் எழுப்பியிருந்தனர். இது, பேச்சியம்மன் கோயில் என்றும், முன்பு இக்கோயில் சற்று மேல்பகுதியில் இருந்தது என்றும் தற்போது இங்கு மாற்றியுள்ளனர் என்றும் தெரிவித்தனர். அடுத்து, மலைப்பாதையை நேரடியாக அணுகமுடியாமல் தடை ஏற்பட்டது, காரணம் ஜே.சி.பி. எந்திரத்தைக்கொண்டு நிலம் கிளறப்பட்டிருந்தது. அகற்றப்பட்ட பெரும் முட்செடிகள் அரண்போல் குவிந்து காட்டுப்பாதையின் நுழைவுப்பகுதியை நெருங்கமுடியாமல் தடுத்தன. நண்பர்கள் தாம் கொண்டுவந்திருந்த அரிவாள்களைக்கொண்டு முட்செடிகளின் குவியலை வெட்டித்தள்ளி வழியமைத்தனர். வெயில் காலமாதலால் செடிகள் காய்ந்து கிடந்தன.
                           பேச்சியம்மன் கோயில்





   யணத்தின்போது

    வழியெங்கும் காய்ந்த முள்மரங்களும் காட்டுச்செடிகளுமே பெரிதும் காணப்பட்டன.  பெரிய மரங்கள் என்பவை ஆங்காங்கே காணப்பட்ட சில புளியமரங்களும் வாகைமரங்களும்தாம். பாதையெங்கும் ஆங்காங்கே கரியநிறக் கற்களும் கிடந்தன. சில இடங்களில், இக்கற்கள் சற்றுப்பெரிய அளவில், சரிவுகளில் நெருங்கியிருந்தன. அவற்றின்மேல் ஏறிச் செல்லவேண்டியிருந்தது. சிலபோது, அவ்வகைக்கற்களோடு மண்ணும் சேர்ந்து கால்களைச் சறுக்கின. சென்ற பயணத்தின்போது (ஜூன் மாதம்) மழை தந்த பசுமை காணப்பட்டது. இம்முறை வெறும் வறட்சி. மரங்களில் காணப்பட்ட முட்கள் சிறிய அளவினதாய் இருந்தாலும், தூண்டில் கொக்கிகள் போல் ஆடைகளில் சிக்குண்டு நம்மை எளிதாய் நகரவிடாமல் இழுத்தன. இந்த முட்கள், உடம்பிலும் ஆங்காங்கே கீறல்களை உண்டாக்கின. பாதம் மறைத்துக் காலணி அணியாததால் பாதப்பகுதியில் முட்களின் கீறல்கள் சிறிய காயங்களை ஏற்படுத்தின. விரல்களில் முள் குத்திய இடத்தில் பொட்டுப்போல் குருதி தோன்றியது. நம் உடலின் குருதியில் சர்க்கரையின் அளவைப் பார்க்கும் சோதனையின்போது, கையடக்கக் கருவி ஒன்றின் ஊசி நம் விரல்களில் வெளிப்படுத்தும் குருதிப்பொட்டை இந்நிகழ்ச்சி நினைவூட்டியது.  ஓரிடத்தில் நண்பர் அன்பரசு ஒரு மரத்தைக்காண்பித்தார். மரத்தின் மேற்பட்டை தேய்ந்து காணப்பட்டது. கடமான்கள் தம் கொம்புகளைத் தீட்டியதால் ஏற்பட்ட தடயம் அது என்றார் அவர். மேலும் ஓரிடத்தில், தரையில் மானின் உடைந்த கொம்பு ஒன்று கிடந்ததைப்பார்த்தோம். மூப்புக்காரணாக மானின் கொம்புகள், சுண்ணாம்புச் சத்துப்படிந்து கல்போல் இறுகிப்போய் உடைந்துவிடும் என்று அன்பரசு சொன்னது புதியதொரு செய்தியாகத் தெரிந்தது. மற்றோரிடத்தில், மைல் கல்லைப்போல் ஒரு கல் நிலத்தில் நடப்பட்டுச் சற்றே சாய்ந்திருந்ததைச் சுட்டிக்காட்டி, இந்தக்கல், ஆங்கிலேயர் காலத்தில் சர்வே செய்தபோது நடப்பட்ட சர்வே கல்லாகும்’  என்று சொன்னார். கல்லின் மேற்பகுதியில் செதுக்கப்பட்டிருந்த ஒரு குறியீடு அல்லது சின்னம், நமது ஊர்களில் விளையாடப்பயன்படும் தாயக்கட்டையில், “தாயம்”  என்று நாம் அழைக்கும் எண் ஒன்றைக் குறிக்கவந்த ஒற்றைப்புள்ளியோடு கூடிய இரு கோடுகளை நினைவூட்டியது. காட்டு வழிகளையெல்லாம் நன்கு நினைவில் பதித்து வைத்திருக்கும் அந்த மண்ணின் மைந்தர்களின் நினைவாற்றல் மிகப்பெரிது.
    














  
இப்படி நடந்துபோன பாதை, மக்களால் உருவாக்கப்பட்டதல்ல என்றொரு தகவலையும் நண்பர் சொன்னார். யானைகள் தம் உணவைத்தேடும் மேய்ச்சலின்போது, உண்ணும் தாவரங்களின் இருப்புக்கேற்ப வளைந்து வளைந்து நடந்து ஏற்படுத்திய தடங்கள்தாம் இவ்வகைப்பாதைகள். முட்புதர்கள் யானையின் உடம்பை என்ன செய்துவிடும்? புதர்கள் யானைகளால் அகற்றப்படுவதில்லை. பாதை மட்டுமே உருவாகியிருக்கும். எனவே, நாம் நடக்கையில், பக்கவாட்டிலும், தலைக்குமேலும் புதர்கள், முட்செடிகள் ஆகியவற்றின் கிளைகள் பெரிய தடைகளாய் நின்றன. முட்புதர்களினூடே, நாம் வலிந்து உடலை முன்னோக்கி நுழைத்தவண்ணம் முட்கிளைகளைக் கைகளால் விலக்கி மெல்ல மெல்ல நடக்கவேண்டிய சூழ்நிலை. சிலபோது தலையையும், சிலபோது உடம்பையும் குனிந்தும் வலிய முன்னோக்கித் தள்ளியவாறும் நடந்தோம். கல்வெட்டைக்காணும் ஆவல் உந்தித்தள்ளியதால் உடற்களைப்பைப் பொறுத்துக்கொண்டு நடந்தோம். ஏறத்தாழ இருபத்தைந்து நிமிடங்களுக்குப்பிறகு, எதிரே தென்பட்ட மலையைச் சுட்டிக்காட்டிய நண்பர், அங்கே மலையின் இடைப்பகுதியில் கோடு போலத்தோன்றிய ஓர் இடத்தைக் காண்பித்தார். நீலகிரி போன்ற மலைகளில் தொலைவிலிருந்து பார்ப்போருக்குப் பாதையின் வடிவம் ஒரு கோடுபோல் தோன்றும். இங்கும் அதேபோன்ற தோற்றம். அதுதான் இராசகேசரிபெருவழி. அந்த இடத்தை நோக்கிப் பயணம் தொடர்ந்தது. பெருவழியை நெருங்கும் பாதை இப்போது சற்றுக்கடினம் பெற்றது. சமதளமாயில்லாமல் நம்மைச் சரியச்செய்யும் மண்மேடுகளையும், கல்மேடுகளையும் பள்ளங்களையும் கடந்து பயணப்பட்டோம். சரியாக மணி நாலு நாற்பதுக்கு இராசகேசரிப்பெருவழிக் க்லவெட்டருகே நின்றோம்.
                                    ”சர்வே” கல்


கல்வெட்டருகே

    எவெரெஸ்ட்”  மலைச்சிகரத்தை முதன்முதலில் கண்டுபிடித்த பிறகும், பலர் இமயத்தில் பயணம் செய்து சிகரத்தில் ஏறி நின்று செயற்கரிய செயல் செய்ததாய்ப் பெருமிதம் கொள்வார்களே, அதே போன்ற ஒரு பெருமித உணர்வும் இன்பமும் எங்களுக்கு ஏற்பட்டன. பல நாள் உள்ளத்தில் ஊறிக்கிடந்த எண்ணம் செயலாய்க் கண்முன் நிறைவேறியது. இராசகேசரிக்கல்வெட்டைக் கண்டுபிடித்துக் காணல் அத்துணை எளிதல்ல எளிதல்ல என்று உணர்ந்தோம். இந்த உணர்வு உண்மை. புனைவுரையன்று. பயணத்தின் முடிவில் ஒவ்வொருவரும் தாமே பெறுகின்ற உணர்வு. சாதனையுணர்வும் எங்களை ஆட்கொண்டிருந்தது. கல்வெட்டு, கரிய நிறத்தில் பெரியதொரு பாறை வடிவில் எங்கள் முன் தோற்றமளித்தது. பாறையின் மேல்பகுதி உடையாமல் நல்ல நிலையில்காணப்பட்டது.. ஆனால், கீழ்ப்பகுதி, பாறையின் இடப்பக்கமாக உடைந்து காணப்பட்டது. உடைந்த பகுதியில் கல்வெட்டு எழுத்துகள் வெட்டப்படவில்லை. பாறையின் இடப்பக்கம் (நமது பார்வையில் வலப்பக்கம்) மேற்புறத்தில் மூன்று வரிகள் மட்டும் கல்வெட்டு வரிகள். எனவே கல்வெட்டுப் பாடத்துக்கு எந்தச்சேதமுமில்லை. கல்வெட்டைக் காணும் முயற்சி வெற்றியாய் முடிந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

கல்வெட்டும் அதன் செய்தியும்
    பெரிய கல்வெட்டுப்பாறை
    கல்வெட்டு மிக மிக நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தது. பாறையின் பரப்பில், ஒரு நீள்சதுர வடிவம் அமையுமாறு கோடு வெட்டப்பட்டு, அச்சதுரப்பரப்பின் இடையில் ஆறு நீண்ட நேர்கோடுகள், பள்ளிக்கூட நோட்டுப்புத்தகத்தில் உள்ளதுபோல் கீறப்பட்டிருந்தன. இடைக்கோடுகள் ஆறு ஆனதால், எழுதுவதற்கு மொத்தம் ஏழு பட்டிகள் அமைந்துவிட்டிருந்தன. ஏழு பட்டிகளில் ஏழு வரிகளே புலப்பட்டன. ஆனால், கோவைமாவட்டக் கல்வெட்டுகள்”  நூலில் மொத்தம் எட்டு கல்வெட்டுவரிகள் காட்டப்பட்டுள்ளன. இது எப்படி? நெருங்கி ஆய்வு செய்தபோது, இரண்டாம் பட்டியில் பாதித் தொலைவு வரை எழுத்துகள் பெரியவடிவத்தில் எழுதப்பட்டுப் பட்டிமுழுதும் நிரம்பியிருந்தது புலப்பட்டது. பாதியிலிருந்து எழுத்துகள் சிறிதாய்த் தொடங்கி முடிந்திருந்தன. இதனால் ஏற்பட்ட பாதி இடைவெளியில் ஆறு எழுத்துகள் செருகப்பட்டிருந்தன. இதையும் சேர்த்துப்படிக்கையில் மொத்தம் எட்டு வரிகள் கொண்டதாய்க் கல்வெட்டு விளங்கிற்று.













    வட்டெழுத்தில் எட்டுவரிகள்
    இந்த எட்டுவரிகளூம் வட்டெழுத்தால் பொறிக்கப்பட்டிருந்தன. கல்வெட்டின் இடப்பக்கத்தில் காணப்படும் மூன்று வரிகள் தமிழ் எழுத்துகள். தமிழ் எழுத்துகள் தேய்மானம் பெற்றிருந்ததால் படிக்க இயலவில்லை. ஓரிரு எழுத்துகளே புலப்பட்டன. வட்டெழுத்துப்பகுதியும் முழுமையாகப் படிக்க இயலவில்லை. இரண்டிலுமே, தொடக்கச் சொல்லாக வருகின்ற “ஸ்வஸ்திஸ்ரீ என்னும் சொல் கிரந்த எழுத்துகளால் எழுதப்பட்டவை. நான் கையோடு கொண்டுசென்ற சுண்ணப்பொடியை நீரில் குழைத்துக் குழம்பாக்கிக் கல்வெட்டில் ஒற்றியெடுத்ததில் வட்டெழுத்துகள் சற்றே புலப்பட்டன. ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டுப் பின்னர் அவை கணினியில் பதிவு செய்யப்பட்டன. எழுத்துகளை உருப்பெருக்கம் செய்து படித்ததில் கல்வெட்டின் பல எழுத்துகள் புலப்பட்டன. நன்கு புலனாகிய எழுத்துகளைக் கீழ்வரும் பகுதியில் விளக்கமாகத் தந்துள்ளேன்.





               கல்வெட்டுப்பாடம் (வட்டெழுத்துப்பகுதி)


1         ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிப்
2         பெருவழி திருநிழலு மன்னு
3         யிருஞ் சிறந்த
4         மைப்ப ஒருநிழல் வெண்டி
   ங்கள் போலோங்கி ஒரு நிழல்போ
6         ல் வாழியர் கோச்சோழன் வளங்
7         காவிரி நாடன் கோழியர் கோக்கண்ட
8         ன் குலவு.


               கல்வெட்டுப்பாடம் (தமிழெழுத்துப்பகுதி)

1            ஸ்வஸ்திஸ்ரீ கோஇரா
2            சகேசரிப்
3            பெருவழி


கல்வெட்டை நேரில் கண்டு, எடுத்த ஒளிப்படத்தைக் கணினியில் பெரிதாக்கிப் படிக்கையில், நூலில் காணும் பாடத்தில் ஒரு சிறு பிழை இருந்தது தெரியவந்தது. நான்காம் வரியின் இறுதியில் நுலில் காணப்படும் “ங்”  எழுத்து, கல்வெட்டில் காணப்படவில்லை. அவ்வெழுத்து, ஐந்தாம் வரியின் தொடக்கத்தில் இருக்கிறது.



                         கல்வெட்டு




கல்வெட்டின் வட்டெழுத்து வடிவம் (பார்வைப்படியில்)


பயணம் முடிவு

    திரும்பிச் செல்லும் பயணம் சற்றே எளிதாயிருந்தது. பாதையின் இறக்கமே காரணம். திரும்பும் வழியில், நண்பர் அன்பரசு, மரம் ஒன்றின் பட்டைப்பகுதி தேய்ந்திருந்ததைச் சுட்டிக்காட்டி, கடமான்கள் தம் கொம்புகளை மரக்கிளையில் தீட்டிக்கொண்டதன் அடையாளம் தான் அது எனச் சொன்னார். இன்னோரிடத்தில், மரங்களுக்கிடையில் சிறிது அகலமாய்ச் செடிகள் எவையுமின்றி மண்ணின் வெற்றுப்பரப்பு காணப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். அங்கே காலடித்தடங்கள் காணப்பட்டன. மான்கள் ஓய்வெடுக்கும் நேரம் அங்கு வந்துவிட்டுப்போகும் என்று அவ்ர் குறிப்பிட்டார். இவ்விரண்டு செய்திகளுமே எங்களுக்குப் புதியன.
    ஒரு மகத்தான சாதனை செய்த நிறைவோடு பயணம் நிறைவுற்றது. நண்பர் குழுவுக்கு நன்றி சொல்லி வீடு திரும்பும் பயணம் மேற்கொண்டோம்.
   


து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


அலைபேசி : 9444939156.