மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017


                   தேன்கனிக்கோட்டை-சாலிவாரம் கல்வெட்டு


        அண்மையில்,தேன்கனிக்கோட்டை வட்டம் , சாலிவாரம் கிராமத்தில் கல்வெட்டு ஒன்று  கண்டறியப்பட்டது.  அது   பற்றி,  27.02.2017  தினகரன்    நாளிதழில்   வந்துள்ள   செய்தியும்,    கல்வெட்டுப்   படமும்    (இணையத்தில்   பதியப்பட்டவை)    பார்த்தேன். கல்வெட்டு    வரிகளை   ஓரளவு    தெளிவாகப் படிக்க இயன்றது. படித்ததில்   தெரிந்த செய்திகளை இங்கே  பகிர்ந்துகொள்கிறேன்.

                                                                நாளிதழ்ச் செய்தி-1


                                                             நாளிதழ்ச் செய்தி-2


                                                                  கல்வெட்டு

கல்வெட்டுப்பாடம்:


ஸ்வஸ்திஸ்ரீமது மஹாமண்டலேச்வரந் த்ரிபு
2 வந மல்ல தழைக்காடு கொங்கு நங்கி
3 லி கொயாற்றூர் உச்சங்கி பாநுங்கல் கொண்
4 ட புஜபல வீர கங்கப் பொய்சள தே(வர்)
5 ப்ருத்விராஜ்யம் பண்ணிச் செல்லா நி
6 (ன்ற) த்தாக்ஷி சம்மற்சரத்து முடிகொண்ட
7 (சோ)ழ மண்டலத்து ராஜேந்த்ர சோழ வளநாட்டுச் சி..
8 நாட்டுக் கட்டுக் காமுண்டர் பனையந் (கந்நர)

கல்வெட்டு,  ஹொய்சள அரசர்கள் காலத்தது. காரணம், கல்வெட்டில், “பொய்சள தேவர் பிருதிவிராச்சியம் பண்ணி”  என வருகிறது. முடிகொண்ட சோழ மண்டலம்,   முதலாம் இராசராசனின்    ஆட்சிக்காலத்தில்    ஏற்படுத்தப்பட்ட கருநாடகப்பகுதியான  கங்கநாட்டு நிலப்பகுதியாகும். அதன் உட்பிரிவுகளில் ஒன்றே இராசேந்திர சோழ வளநாடு. கல்வெட்டின்  முதல் நான்கு வரிகளில் போசளரின்  மெய்க்கீர்த்திவரிகள் காணப்படுகின்றன . தழைக்காடு போசளரின் தலைநகர். கொங்கு,  நங்கிலி,  கொயாற்றூர்,  உச்சங்கி,  பானுங்கல்  ஆகியன போசளரின்   ஆட்சிக்குட்பட்ட   (அவர்கள்   கைப்பற்றி ஆட்சி செய்த)  பகுதிகள்.   வீரகங்க போசளதேவர் என்னும் அடைமொழிப்பெயர், விஷ்ணுவர்த்தனன் என்னும் பிட்டிதேவனுடைய கல்வெட்டுகளிலும்,     இரண்டாம் வீர வல்லாளனின்  கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. எனவே, கல்வெட்டு இவ்விருவரின் ஆட்சிக் காலங்களுள் ஒன்றைச் சேர்ந்ததாக இருக்கலாம். விஷ்ணுவர்த்தனனின்   ஆட்சிக்காலம்   கி.பி. 1104  முதல்  கி.பி. 1141  வரை.   இரண்டாம் வீரவல்லாளனின் ஆட்சிக்காலம் கி.பி. 1171 முதல் கி.பி. 1219  வரை.    கல்வெட்டில், அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் சுழற்சியாண்டுகளில் ஒன்றான ”இரத்தாக்ஷி”  ஆண்டு குறிப்பிடப் பெறுகிறது.   (ஆண்டைக்  குறிக்கும்   வடசொல்லான    சம்வத்சரம்    என்பது  கல்வெட்டில்
சம்மற்சரம்   என்று    எழுதப்பட்டுள்ளது.)     இரத்தாக்ஷி    ஆண்டு,     விஷ்ணுவர்த்தனன் ஆட்சிக்காலத்தில் வருவதிலை. இரண்டாம் வீரவல்லாளனின் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1204-இல் இரத்தாக்ஷி ஆண்டு வருகிறது. எனவே, கல்வெட்டு, இரண்டாம் வீரவல்லாளனின் காலத்தது 
எனக் கொள்ளலாம். கல்வெட்டில்,  கட்டுக் காமுண்டர் பனையன் (கன்னர) என்பவர் குறிக்கப்பெறுகிறார். 

கல்வெட்டு தமிழ் மொழியில் தமிழ் எழுத்தும் கிரந்தமும் கலந்து எழுதப்பட்டுள்ளது.  தமிழ். எழுத்துகள் நீல வண்ணத்தில்   காட்டப்பட்டுள்ளன.   சிவப்பு வண்ண    எழுத்துகள்   கிரந்த எழுத்துகள். 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து. சுந்தரம்., கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

கொங்குநாட்டின் இரு மணிகள்


கோவை பாரதீய வித்தியா பவன்

      கோவை பாரதீய வித்தியா பவன் அரங்கத்தில் 17-02-2017 வெள்ளியன்று ஒரு விழா நடந்தது. அவ்விழாவில், இரண்டு தமிழ்ப்பெருமக்கள் பாராட்டப்பெற்றுத் தமிழ்ப்பணிச் செம்மல், தமிழ் மாமணி என விருதுகள் அளிக்கப்பெற்றனர். விருது வழங்கியவர்கள் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையில் இயங்கும் கோவை பாரதீய பவன் அமைப்பினர். அந்நிகழ்வை இங்கே பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.


      விருது அளிக்கப்பெற்றவரில் ஒருவர், கொங்கு நாட்டில் பிறந்து வடதமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய நடு நாட்டில் வாழ்கின்றவர். மற்றவர், வடதமிழ் நாட்டின் மற்றொரு பகுதியாகிய தொண்டை நாட்டில் பிறந்து கொங்கு நாட்டைத் தம் வாழ்வோடு பிணைத்துக்கொண்டவர். தமிழ்ப்பணிச்செம்மல் விருதுக்குரிய நடுநாட்டார், பல்லடம் திரு. சாமி. மாணிக்கம் அவர்கள். தமிழ் மாமணி விருதுக்குரிய கொங்குநாட்டார் முனைவர் அர. பூங்குன்றன் அவர்கள். விருதுக்குத் தகுதியாகும் வகையில் அவர்களிருவரும் பெற்றுள்ள சிறப்பு என்ன? விருது வழங்கிய அமைப்பினரின் கூற்றையே இங்கு காணலாம்.தமிழ் மாமணிவிருது 
முனைவர் அர.பூங்குன்றன், தொல்லியல் ஆய்வாளர்.

வளம், பண்பாடு, மரபு, தொன்மை இவற்றால் செறிவுடைய செம்மொழி தமிழ். தான் ஒளிர்ந்து தன்னைச் சார்ந்தாருக்கும் ஒளியூட்டுவது தமிழ். அத்தகைய தமிழ் என்னும் அளப்பரும் சுரங்கத்தில் மூழ்கி மணிகளை எடுத்துத் தாம் துய்த்துப் பிறருக்கும் அந்தத் துய்ப்பைப் புலப்படுத்தும் மாமணிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் திருமலைச் சிற்றூரில் 1947-இல் பிறந்த திரு. பூங்குன்றன் தமிழகம் அறிந்த தொல்லியலாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துத் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்ற பின்னர் தொல்லியல் துறையில் ஈர்க்கப்பட்டுத் தம் வாழ்வைத் தொல்பொருள் ஆய்வு, கல்வெட்டு ஆய்வு, நாட்டார் வழக்குகள் என்பனவாகப் பன்முகத்தில் தமிழகப் பண்டைய வரலாற்றுக்குத் திருப்பம் கொடுத்தவர். தமிழ் இலக்கியத்தில் காணப்படும் தொடர்கள், சொற்கள், செய்திகள் இவற்றைக் கொண்டு புதிய பரிமாணங்களில் வரலாற்றை ஆராய்ந்தவர்.

தொண்டை மண்டலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கொங்கு மண்டல மண்ணின் மகனாகப் பல ஆண்டுகள் கோவையில் பணிபுரிந்து கோயில்களிலும், சிற்றூர்களிலும் அவர் செய்த ஆய்வுகள் இளைஞர் பலரை ஈர்த்தன; அவற்றில் ஈடுபடவும் வைத்தன. பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அகழாய்வுக்கண்டுபிடிப்புகள் அவர் பெருமையை மெய்ப்பிக்கும். பல ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள், பதிப்புகள் எனத் தமிழுக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவராற்றிய சேவைகள் அவருடைய கூர்த்த மதியைக் காட்டும். எளிமை, அறிவுத்தேடல், ஓயாத உழைப்பு, நட்புவட்டம் எனத் தன்னை வடிவமைத்துக் கொண்ட முனைவர் அர. பூங்குன்றன் அவர்களுக்குத் “தமிழ் மாமணி”  விருது வ்ழங்குவதில், பாரதீய வித்தியா பவன் கோவை மையம் பெருமை கொள்கிறது.

தமிழ்ப்பணிச் செம்மல்”  விருது
பல்லடம் திரு.. சாமி. மாணிக்கம், நிறுவனர், தமிழ்நூல் காப்பகம், விருத்தாசலம்

பல்லடத்தில் 1936-இல் பிறந்த திரு. சாமி. மாணிக்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தந்த இன்னொரு முத்து. ஆசிரியராகப் பணியாற்றியபோது நூல்கள் மீது அவருக்கு ஏற்பட்ட விருப்பம், பேரவாவாக மாறியது. அப்போது பல பழைய நூல்கள் அழிந்துவிட்டதைக் கண்டு வேதனைப்பட்டதால், அவருள் ஏற்பட்ட ஓர் உந்துதல் காலப்போக்கில் “தமிழ்நூல் காப்பகம்”  எனும் அறிவுக் கோயிலாக உருவெடுத்தது.

விருத்தாசலத்தில், பழமலைநாதர் குடிகொண்டிருக்கும் மணிமுத்தாற்றின் கரையில், ஐம்பது செண்ட் நிலத்தில், எட்டாயிரம் சதுர அடிப்பரப்பில்இந்தப் பல்லடத்து மனிதர் ஒரு லட்சம் நூல்களைக் கொலு வைத்திருக்கின்றார். தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள், இதழ்கள், அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் என்பன இவர் தேடித்தேடித் தொகுத்த நூல்கள்; ஒவ்வொன்றும் பேசும் சொல்லோவியம். மாணவ ஆய்வாளர்கள், அறிஞர்கள் என இங்கு அறிவு நாடிவரும் கூட்டம் மிகப்பெரிது. இவை த்விர, குறுந்தகடுகள், பாடல் தொகுப்புகள் என இங்குள்ளவை தமிழ்ச் சமுதாயத்தின் பல நூறு ஆண்டு வரலாற்றைத் தெரிந்துகொள்ள வகை செய்கின்றன.

கவிஞர், கட்டுரையாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர் எனப் பல கோலம் காட்டும் பல்லடம் மாணிக்கம், தமிழ்நூல் காப்பகத்தின் மூலம் செய்துவரும் பெரும்பணியைப் பாராட்டிப் பாரதீய வித்தியா பவன் கோவை மையம் தமிழ்ப்பணிச் செம்மல்விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது.

தகுதியுரை, பாராட்டுரை ஆகியவற்றில் செவிமடுத்த சில செய்திகள்

      கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழறிஞர் ஐ.கே. சுப்பிரமணியம் ஆகியோர் தகுதியுரை, பாராட்டுரை வழங்கினர். 


முனைவர் பூங்குன்றன் பற்றி
தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்ட, பன்னாட்டு அறிஞரும் பாராட்டும் வண்ணம், ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். அறுநூறு புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளார். இந்தியாவிலேயே மிகப் பழமையான இராசகேசரிப் பெருவழியையும் பெருவழிக் கல்வெட்டையும் கண்டறிந்தவர். சேர நாட்டிலிருந்து கொங்கு நாட்டினூடே சோழ நாட்டுக்குச் சென்ற பெருவழியே இந்த இராசகேசரிப் பெருவழி. பழந்தமிழ் வட்டெழுத்தில் வெண்பா வடிவத்தில் அமைந்துள்ள இக்கல்வெட்டில் வாழிய கோக்கண்டன் குலவு   என்னும் தொடரில் வரும் கோக்கண்டன், சோழ அரசன் முதலாம் இராசராசன் என அறிஞர் பலர் கருதிய நிலையில், அச் சோழ அரசன் முதலாம் ஆதித்தன் எனச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். அடுத்துள்ள தொடர் “குலவு  என்பதற்குக் :குலம் என்று பலரும் பொருள் கொண்டபோது, பூங்குன்றன் அவர்கள், அச் சொல் “பெருமை என்னும் பொருள்தரும் சொல் என உறுதி செய்தார். அதேபோல, கல்வெட்டில் உள்ள இன்னொரு சொல்லான “நிழல் என்பதற்குத் தெளிவான பொருள் தெரியாதிருந்தபோது,  பல ஆண்டுகள் சிந்தனையின் விளைவாக “நிழல்  என்பது அப்பெருவழியில் பயணம் மேற்கொண்ட வணிகர்களின் பாதுகாப்புக்கு அரசனால் நியமிக்கப்பட்ட ஒரு நிழல் படையைக் குறிக்கும் என்று ஆய்வுச் சான்றுகளோடு நிறுவினார். 

      கல்வெட்டுகளில் பயிலும் பல சொற்களுக்குப் பல நேரங்களில் சரியான பொருள் தெரியாமல் போவதுண்டு. அது போன்ற ஒரு சொல், கொங்கு நாட்டுக் கல்வெட்டில் பயின்றுவரும் “பெற்ற நாச்சியார். நாச்சியார்என்னும் சொல் கோயிலில் உள்ள இறைவியைக் குறித்தது. ஆனால், இறைவி எதைப்பெற்றவள் என்ற ஐயமும், பொருள் விளங்கா மயக்கமும் நிலவின. கால்நடைச் சமுதாயத்தின் தாய்த்தெய்வமே “பெற்ற நாச்சியார் என்று நிறுவியவர் பூங்குன்றன் அவர்கள். அவருடைய விளக்கத்தையே இங்கு தந்துள்ளேன்.

           “ பெற்றம் என்பதற்கு வேர்ச்சொல் “பேறுஎன்பதாகும். இதற்குச் செல்வம் என்று பொருள். (M.A. Durai Rangaswamy, The Religion and Philosophy of  Tevaram). முல்லை நிலத்தில் செல்வம் என்பதே கால்நடை. ஆகையால் கால்நடையைக் குறிப்பதற்குப் “பெற்றம்”  என்ற சொல் வழக்குப் பெற்றது. (M.A. Durai Rangaswamy, The Religion and Philosophy of  Tevaram). தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் மாட்டினைப் பெற்றம் என்று கூறுவார். (தொல்காபியம், எழுத்ததிகாரம், நூற்பாக்கள், 278, 279). ஞானசம்பந்தர் தேவாரத்திலும் இச்சொல் பயின்றுவரக் காண்கிறோம். “

      கல்வெட்டுகளில் மன்றாடி என்றொரு சொல் பயில்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இக்கல்வெட்டுத் தொடர் கால்நடைகளைச் செல்வமாகப் பெற்றவர்களைக் குறிக்கும். ஆனால், கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் இத்தொடரின் பொருள் வேறு. வேளாண் நிலங்களை அரசனிடம் பெற்று அவற்றைக் குத்தகைக்குக் கொடுக்கும் உரிமையைக் கொண்டவர்கள் மன்றாடிகள். இந்த உரிமை மன்றாட்டு என வழங்கப்பட்ட்து. இந்த விளக்கத்தையும் பூங்குன்றன் அவர்கள் அளித்திருக்கிறார். இதுபோலவே, “கரை என்னும் சொல் கல்வெட்டில் காணப்படுகிறது. கரை ஓலை என்பதன் சுருக்கமாகவும் இச்சொல் கல்வெட்டில் வருகின்றது. வேளாண் நிலங்களைப் பகுத்து அப்பங்குகளை உழுகுடிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்துள்ளதைக் காண்கிறோம். அவ்வாறான பங்குத்  தொகுதி கரை எனப்பட்டது. இச்செயல்முறை கரையீடு எனப்பட்டது. இது ஊர்ப்பகுதியில் அரசு நிருவாகத்தில் நடைபெறுவது. ஆனால், பிராமணர்க்கென அரசன் கொடுத்த பிரமதேய ஊரில், சபை என்னும் நிருவாக அமைப்பே இவ்வகைப் பங்கீடுகளைச் செய்யும் உரிமை கொண்டிருந்தது. அப்போது ஓலைகளில் பெயரெழுதிக் குழந்தைகளை விட்டுத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள். இது, கரையோலை எனப்படும். இந்த வழக்கத்தின் எதிரொலியாக ஒரு கல்வெட்டுச் செய்தி உள்ளது. ஒரு பிரமதேய ஊரில் சில பதவிகளைப் பெறுவதில் போட்டி நிகழவே, குடவோலை முறையில் தேர்வு நடைபெற்றது. இது, கல்வெட்டில், “கரை பறித்துக் கொள்வார்களாக என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு, பல கல்வெட்டுச் சொற்களுக்கு ஆய்ந்தெடுத்துப் பொருள் கண்டவர் பூங்குன்றன் அவர்கள். செங்கம் பகுதியில் உள்ள நடுகற்கல்வெட்டுகளை விரிவாக ஆராய்ந்து சமுதாய அமைப்பில் முதலில் தொல்குடிகள், பின்பு வேளிர் என்னும் தலைவர்கள் உருவாதல், பின்னர் அரசியல்(அரசு உருவாக்கம்) ஆகிய பரிமாண மாற்றங்களைப் பற்றிய கருத்துகளை முன்வைத்தவர். எளிமையும், அடக்கமும் கொண்ட அறிவாளர். கோவைப்பகுதியில், பெரும்பாலான முனைவர் பட்ட ஆய்வாளர்களின் மூலதனமே பூங்குன்றன் அவர்களின் கருத்துகளும், எழுத்துகளும்தாம். கொங்கு நாட்டின் முழுமையான வரலாறு பற்றிய நூல் ஒன்றினை அவர் எழுதவேண்டும்.
திரு. சாமி. மாணிக்கம் பற்றி
திரு. சாமி. மாணிக்கம் அவர்கள் தனி மனிதராய்ச் செய்த சாதனை பெரிது. தமிழ் நூல்களைச் சேர்க்கத்தொடங்கிய அவர் தம் ஐந்து ஏக்கர் நிலத்தைவிற்று ஐம்பது இலட்சம் பணத்தொகையைக் கொண்டு ஒரு பெரிய மாளிகையை எழுப்பினார். அண்ணாமலைப் பலகலைக் கழகத்தின் வடிவமைப்பையும், நேபாள அர்ண்மனையின் வடிவமைப்பையும் இணைத்துக் கட்டப்பெற்ற அந்த மாளிகை நூலகத்தில் ஒரு இலட்சம் நூல்கள் உள்ளன. இத்தனை ஆண்டுகளில் அங்கிருக்கும் இலட்சம் நூல்களை அவர் படித்திருப்பார் என நம்பலாம். ஏனென்றால், அவர் நாள்தோறும் அவரது தனியறையில் இரவு தொடங்கி விடியற்போதில் நான்கு மணி வரையிலும் நூல்கள் படிப்பது வழக்கம். இயல்பாகவே அவர் ஒரு கவிஞர். ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டவரும் கூட. பின்னர் ஏனோ கவிதையின் பக்கம் அவர் திரும்பவில்லை. தமிழகம் ஒரு நல்ல கவிஞரை இழந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். “வள்ளுவம்”  என்னும் பெயரில் ஓர் ஆய்விதழைப் பல வருடகாலம் வெளியிட்டவர். இந்த நூலகத்தில், 1812-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற திருக்குறளின் முதற்பதிப்பு உண்டு. திருக்குறள் பற்றி மட்டும் 1500 நூல்கள் உண்டு. 1786-ஆம் ஆண்டு வெளிவந்த மிகப்பழமையான அகராதி இங்குண்டு. 55 ஆண்டுகளாக வெளிவந்த National Geography இதழ்கள் இங்கு தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. 500 எண்ணிக்கைக்கு  மேல் ஆய்வுக்கட்டுரைகளும், 1000 எண்ணிக்கைக்கு  மேல் கலைக்களஞ்சிய நூல்களும் இங்குள்ளன. திரு. நரசய்யா அவர்கள் சாமி. மாணிக்கனாரது நூலகத்தைக் கண்டு வியந்து குறிப்பிட்டுள்ளார். தம் நூலகத்துக்கென்றும், தம் நண்பர்களுக்குக் கொடுப்பதற்கென்றும் ஒவ்வொரு நூலையும் பத்துப்பத்துப் படிகளாகவே வாங்குவாராம். ஆய்வு மாணவர்க்கான அறிவுக்கோயிலாக விளங்குவது இந்நூலகம். நாம் ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டிய இடம். சாமி. மாணிக்கனார் நமக்குக் கிடைத்த இன்னொரு உ.வே.சா.

விருது பெற்றோரின் ஏற்புரைகளிலிருந்து சில செய்திகள்

முனைவர் பூங்குன்றன்
தொல்லியல் ஒரு கடல்; முழுதும் கற்றுக்கொள்ள வாழ்நாள் போதாது. வாழ்நாளில் தீராது. புதுப்புதுச் செய்திகள் கிடைத்தவண்ணமே உள்ளன. நான் கற்றதற்கெல்லாம் என் ஆசிரியரே காரணம். தொல்லியல் துறையின் தலைவராயிருந்த திரு. நாகசாமி அவர்களிடம் பணியையும், தமிழையும் கற்றேன். நிறைய உழைக்கக் கற்றதும் அவர்பால்தான். அடக்கமும், விடாமுயற்சியும் அவரிடமிருந்து கற்றவைதாம். கருத்துப்பிழை கண்டபோது அவரை விமரிசித்து எழுதினேன். கொங்கு நாட்டுப் பேராசிரியர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எனக்கு உதவிகள் செய்திருக்கிறார்கள். நம் கருவூலங்களான தொல்லியல் சின்னங்களை நாம் முறையாகப் பேணவேண்டும். உலகின் பல நாடுகள் தொல்லியலுக்கு முதன்மை அளிக்கின்றன. தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கின்றன. இங்கே, இஸ்ரேலியர் பற்றி ஒரு தொல்லியல் செய்தியைக் குறிப்பிடவேண்டும்.
இஸ்ரேல் பற்றி
கி.பி. முதலாம் நூற்றாண்டில் இஸ்ரேலில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு பற்றிய சில செய்திகள்.
கி.மு. முதலாம் நூற்றாண்டில் உரோமானியர்கள் இஸ்ரேலைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தினர். கி.பி. 28-ஆம் ஆண்டில் இஸ்ரேலியர் உரோமானியரை எதிர்த்துப்போரிடத் தொடங்கினர். பெரியதொரு போராக அது நிக்ழ்ந்தது.  இஸ்ரேலின் இரண்டு பழங்குடிகள், உரோமானியரை எதிர்த்துக் கொரில்லாப் போர் வடிவத்தில் மறைந்திருந்து தாக்கினர். இந்தப் போர் நிகழ்ந்த இடம் இஸ்ரேலில் அமைந்திருந்த மசாதா மலைப்பகுதியாகும். 

                              மசாதா மலை


                  இஸ்ரேல் போராளிகள் மறைந்திருந்த பகுதி

                                                        கற்களே ஆயுதம்

மசாதா மலையில் மறைந்து வாழ்ந்துகொண்டே, உரோமானியர் மீது தாக்குதல் நடத்தினர். வேண்டிய உணவுத் தானியங்கள் அவர்கள் வசம் இருந்தன. உரோமானியர் மலையை நெருங்காவண்ணம் வழியையும் மூடி வைத்தனர். இந்நிலையில், உரோமானியருக்கு வேறு வழியில்லாதுபோகவே, அந்த மசாதா மலையின் அளவுக்கு ஒரு செயற்கை மலையை உருவாக்கித் தொங்குபாலம் ஒன்றையும் அமைத்து இஸ்ரேலியரைத் தாக்கும் முயற்சியை மேற்கொண்டார்கள். மலையை உருவாக்க ஏழு ஆண்டுகள் ஆயின. இடையில், உரோமானியர் நெருங்கியபோதெல்லாம் இஸ்ரேலியர் மலையிலிருந்து கற்களை எறிந்து தாக்கினர். உரோமானியரும் இதை எதிர்கொள்வதற்காகத் தாம் சிறைப்பிடித்த இஸ்ரேல் கைதிகளை அங்கு நிறுத்தவே, இஸ்ரேலியர் கல்லெறிந்து தாக்குவதை நிறுத்தவேண்டியதாயிற்று. போரின் இறுதிக்கட்டம். மறுநாள் உரோமானியர் பாலங்கடந்து தாக்குதல் நிகழ்த்தவிருந்த நிலை. முதல் நாள் இரவில், இஸ்ரேலின் பழங்குடிகள் தலைவன் எலசார் தன் மக்களிடம் உணர்ச்சி மிக்கதொரு உரை நிகழ்த்துகிறான்: “மக்களே, இன்றிரவு உங்கள் மனைவி மக்களைக் குத்திக் கொன்றுவிட்டு நீங்களும் தற்கொலை செய்துகொள்ளுங்கள். பகைவரிடம் அடிமைகளாய் வாழ்வதினும் விடுதலையோடு சாவதே மேல். மசாதா ஒரு போதும் வீழ்ச்சியுறுவதில்லை.”  அதே போல் அனைவரும் தம் உடைமைகள் அனைத்தையும் தானியங்கள் நீங்கலாக எரித்துவிட்டுத் தம் உயிரை மாய்த்துக்கொண்டனர். நாங்கள் பட்டினியால் சாகவில்லை; நாட்டுக்காகவே உயிரை மாய்த்துக்கொண்டோம்என அவர்கள் எண்ணியதை உரோமானியருக்கு உணர்த்துவதற்காகவே உணவுத்தானியங்களை எரிக்கவில்லை.  ஒரு பத்துப்பேர், இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யவேண்டிச் சாகாது நின்றனர். மறுநாள், உரோமானியர் கண்டது பிணக்குவியலைத்தான். ஒரு மூதாட்டியும் ஒரு சிறுவனும் தப்பிப் பிழைத்திருந்தார்கள்.  அவர்கள் இருவரிடமிருந்தே உரோமானியர் நடந்த்து என்னவென்பதை அறிந்தனர். இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நிகழ்வைப்பற்றி இஸ்ரேலியர் எழுதிவைத்தனர். நீண்டதொரு காலம் இது வெறும் புராணக் கதையாகவே விளங்கியது. பின்னாளில், தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இப்புராணக்கதையின் பின்னணியைக் காண அகழாய்வு செய்தபோது, அங்கே 960 எலும்புக்கூடுகள் அகப்பட்டன. உடன், காசுகளும், தானியங்களும் இருந்தன. புராணக்கதை ஒன்று தொல்லியல் ஆய்வு வழி மெய்யானதைக் காண்கிறோம். இஸ்ரேலியர் தங்கள் நாட்டின்மீதும், வரலாற்றின் மீதும் வைத்திருக்கும் பற்றின் வெளிப்பாடாக இன்றுவரை, இஸ்ரேல் நாட்டின் படைத்தளபதி பதவியேற்பு நிகழ்வு மசாதா மலையில்தான் நடக்கும். அப்போது அவரது உரையில் தப்பாது காணப்படும் சொற்றொடர் இதுதான் : “இஸ்ரேல் என்றைக்கும் வீழ்வதில்லை. (Israel will never fall again). இஸ்ரேலியருக்குத் தொல்லியல் மீது பற்று மிகுதி. தொல்லியல் சின்னங்களைப் போற்றிப்பாதுகாக்கும் பண்பினர்.

திரு. சாமி. மாணிக்கம்
“ஊன்கலந்து, உயிர்கலந்து”  என்னுள்ளே இருக்கும் தமிழ்தான் என்னை இப்படி இயக்கிவந்துள்ளது. நான் பெருஞ்செல்வனல்லன். ஆனால், தமிழ்ச் செல்வத்துக்குச் செய்ய நினத்தபோது, தேடித்தேடிச் சேர்த்த நூல்களையெல்லாம் பாதுகாக்க  ஒரு கட்டிடம் தேவைப்பட்டபோது, கலை அழகுடன் பெரியதொரு கட்டிடம் கட்டவேண்டும் என்ற எண்ணத்தாலேயே, நிலத்தை விற்றுக் கிடைத்த ஐம்பது இலட்சம் பணத்தில் பெரிய மாளிகையைக் கட்டுவித்தேன். என் மனைவி மக்களும், சொந்தச் செல்வத்தை இவ்வாறு செலவிடத் துணை நின்றார்கள். அது பெரியது. தமிழைப் போற்றியே இவ்விருது வழங்கப்பட்டதாக நினக்கிறேன். தமிழ் நம் அனைவரையும் ஒன்று சேர்க்கும். அண்மையில் நடைபெற்ற “சல்லிக்கட்டுப் புரட்சியில் தமிழண்டாஎன்ற ஒரு சொல் தமிழர் அனைவரையும் ஒன்று சேர்த்ததைக் கண்டோம். கொங்கு நாட்டுத் தமிழ் சிறப்பு வாய்ந்தது. கொங்குத்தமிழில் இருக்கும் மரியாதை வேறெந்தத் தமிழுக்குண்டு? நான் இருக்கும் பகுதியில் “நீ”, “நீனுஎன்னும் வழக்கு மட்டுமே உள்ளது. மரியாதை தரும் தமிழ், மரியாதையுள்ள தமிழ் கொங்குத்தமிழே.

ஆசிரியர் குறிப்பு
விருது பெற்ற இருவருமே எளிமையானவர்கள். அடக்கமானவர்கள். நாங்கள் என்ன பெரிதாகச் செய்துவிட்டோம்? எங்களுக்கெதற்கு விருது? புகழுரைகளும், விருதுகளும் எங்களுக்குக் கூச்சத்தை அளிக்கின்றன என்பதாக அவரவர் ஏற்புரைகளில் சுட்டினார்கள். சாமி. மாணிக்கனார் குறிப்பிட்டார்: வாழ்க்கையில் சலிப்புத் தட்டும் வயதில் இருக்கிறேன். (எண்பது வயது). இப்பொழுது விருதா?
பூங்குன்றனாரும் விருது பெறத் தகுதி தனக்கில்லை என்பதாகவேகுறிப்பிட்டார். 
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத், தம் இளமைப் பருவத்தில் அவர்கள் உழைப்பைத் தொடங்கும்போது விருதை எண்ணியா உழைத்தார்கள்? அரிய தமிழ்த்தொண்டு அவர்களின் இயல்பானது. சான்றோர் என்றுமே சான்றோர்தாம்.
சாமி. மாணிக்கனார் கொங்குத்தமிழ் மரியாதைத் தமிழ் என்றார். கவிஞர் கண்ணதாசன் இது பற்றி ஒரு கவிதையே எழுதியுள்ளது அனைவர்க்கும் தெரியும். கொங்கு நாட்டில் குழந்தைகளுக்குச் சங்கில் பாலூட்டுவார்கள். சங்கு கிடைக்காதபோது சங்கு வடிவத்திலுள்ள கிண்ணியில் பாலூட்டுவார்கள். அப்போது குழந்தையின் வாயில், தொண்டையில் பால் இறங்கும்போது வருகின்ற ஒலி “ங்கு” , “ங்கு”  என்பதுதான். கொங்கு நாட்டுக் குடும்பங்களில், குழந்தைக்கு ஊட்டும் பாலையே “உங்கு”  என்று அழைப்பதுதானே வழக்கம்? அந்த ங்கு”  என்னும் மெல்லோசையோடு வளர்வதால் கொங்குத்தமிழும் “ங்கஎன்னும் மெல்லோசையை மரியாதைச் சொல்லாகத் தன்னுள் இழுத்துக்கொண்ட்து எனலாம்.. 

                  கொங்கு என்றால் தேனுங்க
      கொம்புத் தேன் போல இனிக்கும்- எங்கள்
      கொங்குத் தமிழ் தானுங்க
எனக் கவிதை எழுதத் தெரியாத என்னையும் எழுதத் தூண்டுவது கொங்குத் தமிழே.

முனைவர் பூங்குன்றன் அவர்களோடு நேரில் பழகும் வாய்ப்புப் பெற்றவன் நான். கல்வெட்டுக் கலையில் எனக்கு ஆசானான மறைந்த அவிநாசி கிழார், கல்வெட்டுக் காவலர் திரு. மா.கணேசன் அவர்கள்தாம் என்னைப் பூங்குன்றன் அவர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். இருவரும் உயிர் நண்பர்கள். கல்வெட்டுகளைப் படிக்க ஒன்றாகக் கோயில் கோயிலாகத் திரிந்தவர்கள். இவர்களே எனக்கு ஊக்கம் தந்தவர்கள். பூங்குன்றன் அவர்கள் மிக எளிமையானவர். “காட்சிக்கெளியன்”  என்ற சொல் அவருக்கே பொருந்தும்.
அன்போடு நட்புப் பாராட்டும் சால்பினர். அவரோடு பழகும் வாய்ப்பு ஒரு பேறு.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.  

வியாழன், 16 பிப்ரவரி, 2017

தளியில் பாளையக்காரர்காலக் கல்வெட்டு 

தளி-வரலாற்று நோக்கில்

      திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள தளி என்னும் ஊர், வரலாற்றுச் சிறப்புடைய ஓர் ஊராகும். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயருக்கு எதிராக அப்போதிருந்த பாளையக்காரர்கள் போரிட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த கட்டபொம்மன் வஞ்சனையால் ஆங்கிலேயரால் 16-10-1799 அன்று தூக்கிலிடப்பட்டான். அவர் தம்பி ஊமைத்துரை மற்ற பாளையக்காரர்களோடு சேர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டபோது தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரும் சேர்ந்துகொண்டார். 1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள் தொடங்கி நூற்று நான்கு நாள்கள் நடைபெற்ற போரில் ஊமைத்துரைக்கு ஆதரவாக 14 பாளையக்காரர்களை ஒன்றிணைத்து அதற்குத் தலைமையேற்றவர் இந்த எத்தலப்ப நாயக்கர், எத்தலப்ப நாயக்கரை அடக்குவதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு தந்திரமாக ஒரு தூதுக்குழுவை அவரை சந்திக்க அனுப்பிவைத்தது. கட்டபொம்மனின் நண்பரான எத்தலப்ப நாயக்கர், கட்டபொம்மனைச் சதியால் தூக்கிலிட்டதற்கு எதிர்வினையாகத் தனது படை வீரர்களை அனுப்பி ஆங்கிலத் தூதுக்குழுத் தலைவனை மட்டும் தனியே கைது செய்து அவனைத் தூக்கிலிட்டார்.

      வெள்ளையர் இந்தியரைத் தூக்கிலிடும் செயலுக்கிடையில், இந்தியர் ஒருவர் வெள்ளையனைத் தூக்கிலிட்ட துணிவான அருஞ்செயல புரிந்தவர் என்னும் பெருமை எத்தலப்ப நாயக்கருக்கு உண்டு. வெள்ளையனைத் தூக்கிலிட்ட இடம், இன்றும் ஜல்லிப்பட்டிக்கும் தளிக்கும் இடையில் தூக்குமரத்தோட்டம் என்னும் பெயரில் உள்ளது. திருமூர்த்தி அணைப்பகுதியில், தளி பாளையக்காரர் குடிவழியினரின் நினைவுச் சிலைகளை ஒரு மேடையில் அமைத்துக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

                  அணையின் தோற்றங்கள்


                         ஆய்வுக்களப் பணியாளர்கள்


                                               மேடையில் நினைவுச் சிற்பங்கள்


அணைக்கரைப் பாறை

      கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், இராவணாபுரம் குழந்தைவேலு, தமிழ்ப்பல்கலை-கல்வெட்டு ஆய்வு மாணவர் சமத்தூர் இரமேஷ் ஆகியோர் திருமூர்த்தி அணைப்பகுதியில் ஆய்வு நோக்கில் களப்பயணம் மேற்கொண்டபோது, அணைக்கருகில் இருக்கும் இராமன் என்பவர், அருகில் அணைக்கரை என்னும் இடத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாகத் தகவல் தரவே, அவரோடு சென்று பார்வையிட்டனர். திருமூர்த்தி அணைக்கருகில் சற்றுத் தொலைவில் தடுப்பணை ஒன்று உள்ளது. அப்பகுதி அணைக்கரை என்றும், அங்குள்ள பாறை அணைக்கரைப் பாறை என்றும் வழங்கப்படுகிறது. ஒரு சிறிய தடுப்பணை; அதை ஒட்டியுள்ள ஒரு பாறையில் கல்வெட்டு அமைந்துள்ளது. கல்வெட்டின் அருகிலேயே, அதன் வலப்புறத்தில் பாறையில், சூலத்தின் புடைப்புச் சிற்ப்மும் செதுக்கப்பட்டுள்ளது.


                                                                    அணைக்கரை


                                            அணைக்கரைப் பாறை-கல்வெட்டும்
                                             க்ளப்பணியாளர்களும்                                                     திரிசூலம்-புடைப்புச் சிற்பம்


பாறைக்கல்வெட்டும் செய்தியும்


                                          கல்வெட்டு-முதற்பார்வையில்


                                         கல்வெட்டு - சுண்ணப்பூச்சுக்குப் பின்னர்


       பாறையின் சரிவான பகுதியில், ஓரளவு சமதளமாக உள்ள பரப்பில், ஆறுவரிகளில் கல்வெட்டு வரிகள் காணப்படுகின்றன. பாறையின் மேலேயே கோடுகளால் நீள்சதுரம் ஒன்றை அமைத்து, அச்சதுரப் பரப்புக்குள் ஆறுவரிகளில் கல்வெட்டைச் செதுக்கியுள்ளனர். கல்வெட்டில் அணையைக் கட்டியவர் யார் என்னும் குறிப்பு உள்ளது. நாயக்கர் கால இராயர் மாயண நாயக்கர் என்பவரின் தளவாயாக இருந்த வாயண நாயக்கர் இந்த அணையைக் குரோதன ஆண்டு சித்திரை மாதம் பத்தாம் தேதி கட்டியதாகக் கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டின் பழங்கால எழுத்து வடிவத்தை நோக்கும்போது, கல்வெட்டு கி.பி. பதினாறாம் நூற்றாண்டு அல்லது பதினேழாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதலாம். தமிழகத்தில், மதுரையைத் தலைநகராகக்கொண்டு நாயக்கர் ஆட்சியைத் தொடங்கிய விசுவநாத நாயக்கர், அவரது தளவாயும்(படைத்தளபதி), பிரதானியும்(முதலமைச்சர்) ஆன அரியநாத முதலியுடன் இணைந்து ஆட்சி நிருவாகத்தைப் பாளையங்களாகப் பிரித்தார். பாளையங்கள் உருவாக்கத்தில் பெரும்பங்கு அரியநாத முதலியையே சாரும். விசுவநாத நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1529-1564. எனவே, பாளையக்காரர் அமைப்பு கி.பி. 1564-ஆம் ஆண்டுக்கு முன்பே நடைமுறையில் வந்துள்ளதால், கல்வெட்டின் காலத்தைக் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு என்று கொள்ளும் வாய்ப்பு மிகுதி. கல்வெட்டில் சக ஆண்டு, கலியாண்டு ஆகிய விவரங்கள் தரப்படவில்லையாதலாலும், அறுபதுவட்டத் தமிழ் ஆண்டான குரோதன ஆண்டு, தை மாதம் பத்தாம் நாள் என்னும் செய்தி தரப்பட்டுள்ளதாலும், கி.பி. பதினாறாம் ஆண்டில் வருகின்ற குரோதன ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1565 என்றோ, அல்லது அதை அடுத்து வருகின்ற கி.பி. 1625 என்றோ கொள்வது பொருத்தமாகலாம். எனவே, கல்வெட்டு ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை என்றும், தடுப்பணையும் நானூறு ஆண்டுகள் பழமையானது என்றும் கருதலாம். அணையைக் கட்டுவித்தவர் பெரும்பதவியில் (தளவாய்ப் பதவி) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுப்பாடம்

1    குறோதந வருஷம் சித்திரை
2     மாத்ம்  10 உ  இந்த அணை
3     இராயதருவுக்க(ள்)
4     மாயண நாயக்கர்
5     தளவாய் வாயண நா
6     யக்கர் தன்மம்துணை நின்ற நூல்கள் :

1. The Poligar System in the Tamil Country : Its Origin and Growth.
By C. S. Srinivasachari, M.A. Professor of History, Pachaiyappa’s College , Madras [ A paper read at the Eleventh Public Meeting of the Indian Historical Records Commission, held at Nagpur in December 1928]
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.