மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 26 பிப்ரவரி, 2020


பவானி – பிரம்மதேசம் ஏரிக்கல்வெட்டு

முன்னுரை

23-02-2020 அன்று, தமிழ் நாளிதழ்களான ‘தினமலர்’,  ‘தினமணி’  ஆகியவற்றிலும் பிறிதொரு ஆங்கில நாளிதழிலும் வெளியாகியிருக்கும் ஏரிக்கல்வெட்டு பற்றிய செய்தி, கொங்கு நாட்டில்  ஏரிகள் வெட்டப்பட்டமை கருதியும், அக்கல்வெட்டின் எழுத்தமைதியின் பழமை கருதியும் சிறப்புப் பெறுகிறது. கல்வெட்டு,  ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள பிரம்மதேசம் என்னும் கிராமத்தில் கண்டறியப்பட்டது. தமிழ் நாட்டில் பிரம்மதேசம் என்னும் பெயரில் நிறைய ஊர்கள் காணப்படுகின்றன.  இவை அனைத்தும்,  ’பிரமதேயம்’  என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் பிராமணர் (கொடை) ஊர்களாகும். பவானி-பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை என்று ஊர் மக்கள் வழங்கும் ஓர் ஓடையின் அருகில் பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டே மேற்படி கல்வெட்டு.’வடகொங்கு வரலாற்றுத்தேடல் குழு’  என்னும் அமைப்பைச் சேர்ந்த தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்களான வேலுதரன், சக்தி பிரகாஷ் ஆகிய இருவரும் தம் களப்பணியில் இந்த ஏரிக்கல்வெட்டைக் கண்டறிந்தனர் என்பதாகக் கருதுகிறேன். இக்களப்பணியில் தொல்லியல் அறிஞர் புலவர் செ. இராசு ஐயா அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும், கல்வெட்டைக் கண்டறிந்த ஆர்வலர்கள் புலவர் ஐயாவைச் சந்தித்துக் கல்வெட்டுப்படியைக் காட்டி, அவர் படித்தறிந்த செய்திகளை அவர் கூறிய விளக்கங்களை ஒட்டி நாளிதழில் வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் கருதுகிறேன். கல்வெட்டின் படி (COPY) துல்லியமாக எடுக்கப்படவில்லை. (இது குறையன்று. களப்பணியில் ஈடுபடுகின்ற ஆர்வலர்க்குக் கல்வெட்டின்  மீது சுண்ணமோ, மாவோ பூசி ஒளிப்படம் எடுக்க மட்டுமே வாய்ப்புகளும் தேர்வுகளும் உள்ளன. ஆனால் இங்கு, ஆர்வலர்கள், கல்லெழுத்துகளின் மீது பொடியைத் தூவிப் படி எடுக்காமல் பொடியால்/சாக்கட்டியால்  விளம்பிப் படி எடுத்துள்ளனர் என்று தோன்றுகிறது. எனவே, கல்லெழுத்துகளின் துல்லியம் குறைவு படுகிறது)  

தம் கைக்குக் கிடைத்த கல்வெட்டுப்படியைக் கொண்டு புலவர் ஐயா கல்வெட்டின் பாடத்தைத் துல்லியமாகப் படித்தறிந்து அதன் செய்திகளையும், தனிச்சிறப்புகளையும் அழகாக எடுத்துச் சொல்லியிருகிறார். இக்கல்வெட்டு, கல்வெட்டு ஆய்வாளர்கள் கல்வெட்டுகளைப் படிப்பதில் பாடநூலின் ஒரு பகுதியாகவே கருதித் தம் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் சிறப்புடையது.

செருக்கலி

பழங் கொங்கு நாட்டில் இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகள் இருந்துள்ளன.  ஈரோட்டுப்பகுதி பூந்துறை நாட்டிலும், அந்தியூர், பவானி ஆகியன வடகரை நாட்டிலும் இருந்தன எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. பிரம்மதேசம் ஏரிக்கல்வெட்டின் மூலம், செருக்கலி நாடு என்பதாக ஒரு நாட்டுப்பிரிவு இருந்துள்ளமை அறியவருகிறது.  செருக்கலி நாடே பின்னர் வடகரை நாடு எனப்பெயர் பெற்றது எனப் புலவர் ஐயா கூறுகிறார்.

நாடாளர்

தமிழகம் முழுவதிலும் நாட்டுப்பிரிவுகள் இருந்துள்ளன. அவற்றின் தலைவர்கள் நாடாள்வார், நாட்டுக் கிழார் என்ற பெயரில் அழைக்கப்பெற்றனர். நாடுகளின் நிருவாகச் சபையினரும்  நாட்டார் என்று அழைக்கப்பட்டனர். ஆனால், இந்த ஏரிக்கல்வெட்டு, “நாடாளர்”  என்றொரு புதிய சொல்லாட்சியைக் கொண்டுள்ளது. இச்சொல்லே பிற்காலத்தில் “நாட்டார்”  என மாற்றம் பெற்றது என்பது புலவர் ஐயாவின் கருத்து.

சிறையும் சிறைவாயும்

சிறை என்பது அடைத்தல் என்னும் பொருளுடையது. நீரை அடைத்தலால் இச்சொல் அணையைக் குறிப்பதாகவும் அமைகிறது.  பேரூர் ஆன்பட்டீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்றில் (கொங்குச்சோழன் வீரராசேந்திரன் காலத்தது-கி.பி. 1224),

“. . . . தேவி சிறை யென்கிற அணையடைத்து  வாய்க்காலும் வெட்டி”

என வரும் வரி, சிறை என்னும் சொல் அணையைக் குறிப்பதையும், அடைத்தல் பொருள் தோன்றுதலையும் காட்டுகிறது. எனவே, ஏரிக்கல்வெட்டில் வருகின்ற “சிறை” என்பதை ஏரியின் கரை என்று புலவர் ஐயா விளக்கம் கொடுத்துள்ளார். நீர் வெளியேறும் இடம் ”வாய்”  எனப்படுகிறது. இங்கு, நீர் வெளியேறும் இடம் ஏரியாதலால் “வாய்”, ஏரியின் மதகைக் குறித்தது.

நட்டன்

நக்கன் என்னும் சொல் சிவனைக்குறிப்பது போலவே, நட்டன் என்னும் சொல்லும் சிவனைக் குறிக்கும். “நட்டப்பெருமான்”  என்னும் சொல்லைக் கல்வெட்டுச் சொல்லகராதி ‘சிவன்’ என்றே குறிக்கிறது. பவானி ஏரிக்கல்வெட்டு, ஏரிக்கு ‘நட்டன் ஏரி’  எனப்பெயர் சூட்டியுள்ளனர் எனத்தெரிவிக்கிறது. ஏரியின் பெயரே ‘நட்டன்’ என்றானதால், அதன் கரை ”நட்டன் சிறை” எனவும், அதன் மதகு “நட்டன் வாய்” எனவும் அழைக்கப்பட்டன.


மக்கள் மக்கள் -  பேர் பேர்

செருக்கலி நாடாளரால் உருவாக்கப்பட்ட ஏரியின் பொறுப்பு மற்றும் பயன்பாட்டு மேலாண்மை நாடாளரின் மக்கள், மக்களின் மக்கள், அவர்தம் பேர் (பெயரன்)  ஆகியோர் கையில் என்பதைக் கல்வெட்டு குறிப்பதாகப் பொருள் கொள்ளவேண்டும். நாளிதழ்ச் செய்தியில் இருப்பதுபோல், ஏரியின் பயனை நாடாளரின் வழி வந்தோர் மட்டுமே ‘அனுபவி’க்கவேண்டும் என்பதல்ல; இவர்களன்றி வேறு யாராவது ‘அனுபவி’த்தால் அவர்கள் ’வம்சம்’ அற்றுப்போவார்கள் என்பதும் நேர்மையாகாது.  ஊர்த்தலைவன் ஏரி அமைத்துக் கொடுத்தால் அது ஊருக்குத்தானே பயன்படவேண்டும்?  ஆனால்,

4  . .   இவை மக்கள் மக்கள்
5  பேர் பேர் அல்லாதார் நச்சு
6  வார் வழி அறுவார் . . . . .

என்பதாகக் கல்வெட்டு கூறுவது பெரும் ஐயத்தை எழுப்புகிறது. (நச்சுவார்=விரும்புவார்).  இங்கு, காளிங்கராயன், நீண்டதொரு வாய்க்காலை வெட்டுவித்துத் தன் வழி வந்தவர் அவ் வாய்க்காலின் நீரைப் பயன்பாட்டுக்குக் கொள்ளலாகாது எனக்குறிப்பிட்டுக் கல்வெட்டுப் பொறித்தான் என்பது நினைவுக்கு வருகிறது. ஏரிக்கல்வெட்டின் இறுதியில், “காத்தான் அடி என் தலை மேல்” என்பதாக, இத்தன்மம் காக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறது. கட்டுரை ஆசிரியர், நாளிதழில் வெளியாகியுள்ள கல்வெட்டுப் படங்களின் அடிப்படையில் படித்தறிந்த பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

கல்வெட்டுப்பாடம்

1    ஸ்ரீ  செருக்கலி நாடாள{ரா}ல் பணி
2    க்கப்பட்டது நட்டன் ஏரியும்
3    நட்டன் சிறையும் நட்டன் வா
4    யும் வை மக்கள் மக்கள்
5    பேர் பேர் அல்லாதார் நச்சு
6    வார் வழி அறுவார் கா[த்]தான்
7    அடி என் தலைய் மேலு
8    து


குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்

கல்வெட்டின் எழுத்தமைதி

கிரந்தம்

கல்வெட்டுச்செய்தியில் “ஸ்ரீ”  என்னும் கிரந்த எழுத்து மட்டுமே சுட்டப்பெற்றுள்ளது. ஆனால், கல்வெட்டுப் படத்தை ஊன்றிப் படித்த கட்டுரையாசிரியர் கண்டறிந்த மற்றொரு கிரந்த எழுத்து ”இ”  என்பதாகும். இது நான்காம் வரியின் மூன்றாவது எழுத்தாகும். இந்த எழுத்தின் வரி வடிவம் கி.பி. 4-6  நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்துள்ளது. (பார்வை : தி.நா. சுப்பிரமணியம் அவர்களின் ‘கோயிற் சாசனங்கள்’ நூல்- பக்கம் 1532)


கிரந்த எழுத்தில்  “இ”தமிழ்

கல்வெட்டில் காணப்படும் சில தமிழ் எழுத்துகள் ’தமிழி’ என்னும் தமிழ் பிராமியின் தாக்கமும், சிலவற்றில் வட்டெழுத்தின் சாயலும் இருப்பதாகச் செய்திக்குறிப்பு கூறுகிறது.  பிராமி எழுத்துப் பயன்பாடு அதன் செம்மையான வடிவத்தை இழந்து பின்னர் நிகழ்ந்த மாறுதலில் தமிழ் எழுத்தும், வட்டெழுத்தும் தோன்றத்தொடங்கின.  மாற்றத்தின் பின்னரும், சில காலம், ‘க’ எழுத்தும், ‘ச’ எழுத்தும் பிராமியை ஒத்திருந்தன. அவற்றை இக்கல்வெட்டில் காணலாம். வட்டெழுத்தின் சாயலாக இக்கல்வெட்டில், ”லி”  (வரி-1),  ”சி” (வரி-3),  “ழி” (வரி-6) ஆகியவை காணப்படுகின்றன.                             தமிழ் எழுத்து              கல்வெட்டில் வட்டெழுத்து சாயல்                         தமிழ் எழுத்து              கல்வெட்டில் வட்டெழுத்து சாயல்                       தமிழ் எழுத்து              கல்வெட்டில் வட்டெழுத்து சாயல்முடிவுரை

மொத்தத்தில், அருமையானதொரு கல்வெட்டினைக் கண்டறிந்து வெளிப்படுத்திய கல்வெட்டு ஆர்வலர்களுக்கும், கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு ஐயா அவர்களுக்கும் நன்றி.
துரை சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.
திங்கள், 17 பிப்ரவரி, 2020


கல்லாபுரத்தில் 900 ஆண்டுகள் பழமையான புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

கல்லாபுரம்
கல்லாபுரம், உடுமலைக்கருகில் அமராவதி ஆற்றை ஒட்டி அமைந்துள்ள ஊராகும். இவ்வூர் பழமையான ஊர்களில் ஒன்றாகும். கொங்குச் சோழனான வீரராசேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்றில், இவ்வூர், கல்லாபுரமான வீரசோழ நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவனை அடுத்து ஆட்சி செய்த விக்கிரம சோழனின் கல்வெட்டில், கல்லாபுரமான விக்கிரமசோழ நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு அரசர்களும்  கி.பி. 1207 -  1265   இடையிலான காலத்தில் ஆட்சி செய்தவர்கள், எனவே, கல்லாபுரம் என்னும் இவ்வூர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை கல்லாபுரம் என்னும் தன் இயற்பெயரைக் கொண்டுள்ளதை அறியலாம்.  கல்வெட்டில், இவ்வூர் கரைவழி நாடு என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது என்று ஒரு குறிப்புள்ளது.
கல்லாபுரத்துக்கருகில் உள்ள மதகடிப்புதூரில் இருக்கும் ஜயசிங் என்பவர் தம்முடைய தோட்டத்தில் இரண்டு மூன்று துண்டுக்கற்கள் இருப்பதாகவும் அந்தத் துண்டுக்கற்களில் எழுத்துகள் காணப்படுவதாகவும் கூறிக் கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் அவர்களை அழைத்துக்காட்டினார். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், இந்தக் கல்வெட்டுத் துண்டுகளை ஆய்வு செய்து எழுத்துகளைப் படித்துக் கூறிய செய்திகளாவன.

கல்வெட்டுச் செய்திகள்
முதல் இரண்டு துண்டுக் கற்களில் காணப்படும் எழுத்துகளிலேயே முக்கியமான செய்தி  கிடைத்துள்ளது வியப்புக்குரியது.  வழக்கமாகக் கல்வெட்டுகள் “ஸ்வஸ்திஸ்ரீ”  என்னும் மங்கலச் சொல்லுடன் தொடங்கும். அடுத்து வரும் பகுதியில் ஆட்சியிலிருக்கும் அரசனின் பெயர், அவனுடைய ஆட்சியாண்டு ஆகிய செய்திகள் எழுதப்படும். கண்டறிந்த ஒரு துண்டுக்கல்லில் இவ்வாறான முதல் பகுதி காணப்படுகிறது. கொங்குநாட்டை ஆண்ட கொங்குச்சோழன் வீரராசேந்திரன் என்னும் அரசனின் பெயர் இந்தத் துண்டுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அவனுடைய ஆட்சியாண்டு “பத்தொன்பது”   என்னும் குறிப்பும் இந்தக்கல்லில் உள்ளது.   எனவே, கல்வெட்டு எழுதப்பெற்ற காலம் எது என்னும் செய்தி நமக்குக் கிடைதுள்ளது.   வீரராசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரை என வரையறை செய்யப்பட்டதால் கல்வெட்டின் காலம் அவனுடைய 19-ஆம் ஆண்டில் அமைந்த கி.பி. 1226 எனக் கணிக்கப்படுகிறது.

                         துண்டுக் கல்வெட்டுகள்


துண்டுக்கல்வெட்டு-1


துண்டுக்கல்வெட்டு-2


துண்டுக்கல்வெட்டுகள் 1 மற்றும் 2   - இணைத்த நிலையில் கிடைக்கும் 
வரிகள் :

               கல்-1                                   கல்-2
1    (வீ)ரராசேந்திர                    (தேவ)ற்கு யா

2     ண்டு  பத்தொ                     (வ)து கடற்

3     றூரில் யிருக்கு                  ல்  மகள்

4      யிரமந் பூமி                         (யி)ட்ட தூ

5       ண் மலையாட


(க)ளில்
இன்னொரு துண்டுக்கல்லில் உள்ள எழுத்துகள் கடற்றூர்  என்னும் ஊர்ப்பெயரையும், ஒரு பெண்ணைக் குறிக்கும் ‘மகள்’  என்னும் சொல்லையும் தாங்கியுள்ளன.  இரண்டு கற்களையும் இணைத்து  கல்வெட்டு கூறும் செய்தியை ஒருவாறு அறிந்துகொள்ள முடிகின்றது.  இரண்டு கற்களிலும் உள்ள இரண்டு எழுத்துகள் “யிட்ட தூண்”  என்னும் சொல்லைக் குறிப்பதால்,  கடற்றூரில் இருக்கும் பெண்மணி ஒருவரின் மகள்  தூண் ஒன்றைக்கொடையாகச் செய்து தந்திருக்கிறாள் என்னும் செய்தியைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம்.  கடற்றூர் என்று கல்வெட்டில் வரும் ஊர், தற்போதுள்ள கடத்தூராகும்.  ஒரு கோவில் புதுப்பிக்கப்படும் போது அல்லது  புதிதாக ஒரு மண்டபம் கட்டப்படும்போது தூண்கள் செப்பனிடப்பட்டுப் புதிய தூண்கள் அமைக்கப்படும்.  கடத்தூர் மருதீசர் கோயிலில் இவ்வாறான திருப்பணிகள் நடைபெற்றதற்கும், தூண்களை அமைத்துக் கொடுத்ததற்கும் கல்வெட்டுகள் உள்ளன. அந்த வகையில்,  மண்டபம் ஒன்றுக்குத் தூண் கொடையளிக்கப்பட்டுள்ளதைத் துண்டுக்கல்வெட்டு எழுத்துகள் தெரிவிக்கின்றன. இச்செய்திக்குத் துணைசெய்வது போல், இப்பகுதியில் ஒரு மண்டம் இருந்துள்ளதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மண்டபம் இடிந்துபோனதாகவும் இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.
மேலும் இரண்டு கற்களில் ஒன்றில், ”மலையாட”   என்னும் எழுத்துகளும், மற்றொன்றில், “ ளில்”   என்னும் எழுத்துகளும் காணப்படுகின்றன. ஆனால், இதன் மூலம் எந்தச் செய்தியையும் யூகிக்க முடியவில்லை. 
முடிவாக, ஏறக்குறைய 900 ஆண்டுகள் பழமையான கொங்குச் சோழர் காலக் கல்வெட்டு கிடைத்துள்ளது  மிகவும் சிறப்புக்குரியது.  கல்லாபுரத்தின் பழமைக்குச் சான்றாகவும் இந்தத் துண்டுக்கற்கள் அமைவதும் குறிப்பிடத்தக்கது.துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020பல்லவர் காலச் சிற்பக்கலை

முன்னுரை

கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சார்பாக மாதந்தோறும் வரலாறு, பண்பாடு, தொல்லியல், கலை ஆகிய பல்வேறு தலைப்புகளில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தப்படுகிறது. அவ்வரிசையில், 19-07-2019 அன்று திரு. அர.கோபு அவர்கள் பல்லவச் சிற்பங்கள் பற்றி ஓர் உரையினை நிகழ்த்தினார். கணினி மென்பொருள் பொறியாளராய்த் தொழில் அமைந்தாலும் கோயில் சிற்பங்கள் – குறிப்பாகப் பல்லவர் சிற்பங்கள் -  பற்றிய பெருவிருப்புக் காரணமாக அவற்றை நுணுகப் பார்த்து அவற்றின் சிறப்பு நயங்களை எடுத்துரைத்து வருகிறார் என்பது பாராட்டுதலுக்குரியது. அவரை அறிமுகப்படுத்தியவர் கூறியதுபோல, தற்காலத்தே வரலாறு, கலை போன்ற பாடங்களை எடுத்துப் படித்தவர்களைக் காட்டிலும் வேறு துறையில் இருப்பவர் பலர் கலை, வரலாறு ஆகியவற்றில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு அவற்றின் சிறப்புகளைப் பொதுத் தளத்தில் மக்கள் அறியச் செய்கிறார்கள் என்பது உண்மை.  தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் புலமை இருப்பது கோபு அவர்களுக்கு ஒரு கூடுதல் கருவி.  மேலும் கிரந்த எழுத்துகளின் பயிற்சி அவருக்கு இருப்பது, கல்வெட்டுகளில் காணப்படும் சமற்கிருத-கிரந்தப் பகுதிகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கும், சிற்பங்களை விளக்கவும் துணையாக அமைகிறது. பல்லவர் சிற்பங்களை அவர்தம் கண்கொண்டு பார்த்துச் சுவைத்த காட்சிகள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

மாமல்லையும் காஞ்சியும்

பல்லவர் படைப்புகள் என்னும்போது உடன் நினைவுக்கு வருவது மாமல்லையும் காஞ்சியுமே ஆகும்.

மகேந்திர வர்மன்

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனே பல்லவர் கலைப்படைப்புகளில் முதன்மையானவனாகச் சுட்டப்படுகிறான். விசித்திர சித்தன் என்றொரு சிறப்புப் பெயர் அவனுக்கு மிகவும் பொருந்துகிறது. இத்தொடருக்கு, வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் புதுமையாய்ச் சிந்திப்பவன் என்று பொருள். கலையை அவ்வாறுதான் அவன் வெளிப்படுத்தியுள்ளான்.


மண்டகப்பட்டு

                                                        மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
படம் உதவி :  கி.ஸ்ரீதரன்


மண்டகப்பட்டுக் குடைவரைக் கோயிலில் மகேந்திரவர்மன் வெட்டுவித்த கிரந்த எழுத்துகளால் அமைந்த சமற்கிருதக் கல்வெட்டு, விசித்திர சித்தனைக் காட்டுகிறது. கல்வெட்டுப் பாடம் வருமாறு:

                                                     மண்டகப்பட்டு -  புகழ் பெற்ற கல்வெட்டு
படம் :  அர. கோபு


ஏதத் அநிஷ்டகம் அத்ருமம் அலோஹம் அசுதம்
விசித்ரசித்தந் நிர்மாபித க்ருஹேண
ப்ரஹ்மேஷ்வரவிஷ்ணு லக்ஷிதாயதநம்

இதன் பொருள், செங்கல், மரம், உலோகம், சுதை ஆகியவை இல்லாமல் விசித்திர சித்தனாகிய நான் பிரம்மா, ஈசுவரன், விஷ்ணு  ஆகிய மூவருக்கும் எடுப்பித்த கோயில் என்பதாகும். 

இஷ்டகம்=செங்கல்; சமற்கிருதத்தில் ஒரு சொல்லை எதிர்மறைப் பொருளாக்குவதற்கு அச்சொல்லுடன் ‘அ’, ‘அந்என்னும் முன்னொட்டுகள் சேர்க்கப்படும். எனவே, செங்கல் இல்லாமல் என்பதற்கு, அந்+இஷ்டகம்=அநிஷ்டகம்.  தமிழில் செங்கல்லுக்கு ‘இட்டிகை  என்னும் ஒரு சொல்லும் வழங்குவதை ஒப்பு நோக்குக. தெலுங்கு மொழியிலும் ’இட்டுக’ என்ரு வழக்குகிறது.

த்ருமம்=மரம்;  ‘அ’+த்ருமம்=அத்ருமம்; மரமில்லாதது.   

லோஹம்=உலோகம்; ‘அ’+லோஹம்=அலோஹம். உலோகமில்லாமல்.

சுதம்=சுதை (சுண்ணம் அல்லது காரை);  ’+சுதம்=அசுதம். சுதை இல்லாமல்.

விசித்திர சித்தன், மேற்சொன்ன செங்கல், மரம், உலோகம், சுதை ஆகிய பொருள்களின்றிக் கல்லாலேயே கட்டுவித்த கோயில் என்பது கட்டடக் கலையில் புதுமை. அதுவும் கல்லைக் குடைந்து கட்டியமை மேலும் புதுமை. மண்டகப்பட்டுக் குடைவரையில், வாயிற்காவலர் (துவாரபாலகர்) சிற்பங்களுக்கு மறுதலையாக (பதிலாக) கருடன், மகாகாலன் ஆகியோர் சிற்பங்கள் உள்ளன.

மகேந்திரவர்மனுக்கு முன்னர், கோயில்கள் செங்கல், மரம், உலோகம், சுதை கொண்டே கட்டப்பெற்றன. மகேந்திரன் முதலில் குடைவரைக் கோயிலக் கட்டுவித்தான். பின்னர் வந்தவர்கள் கல்லைக்கொண்டு கட்டுமானக் கோயில்கள் எழுப்பினார்கள். அவை, கற்றளிகள் எனப்பட்டன. ஊரகம் கோயிலில் உலகளந்த பெருமாள் (நின்ற கோலம்),  பாடகம் கோயிலில் பாண்டவ தூதப் பெருமாள் (இருந்த கோலம்), வெஃகா கோயிலில் (கிடந்த கோலம்) ஆகிய  இறைத்திருமேனிகள் சுதைச் சிற்பங்களே. இம்மூன்று கோயில்களையும் இணைத்துத் திருமழிசை ஆழ்வார், “நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளேஎன்று பாடியுள்ளார். காஞ்சியில் உள்ள திரிபுராந்தகேசுவரர் கோயிலும், சிற்பங்களும் செங்கல்லால் அமைந்தன.


மாமண்டூர்

                                                                 மாமண்டூர் குடைவரை
படம் உதவி : விக்கிபீடியா


காஞ்சிக்கருகில் இருக்கும் மாமண்டூர் குடைவரைக் கோயிலில் மகேந்திரனின் நீண்டதொரு கல்வெட்டு உள்ளது. இதில் மகேந்திரனின் சத்துரு மல்லன், நித்திய விநீதன், சத்திய சந்தன் ஆகிய சிறப்புப் பெயர்கள், அவன் இயற்றிய மத்த விலாசம், பகவத் அஜுகம் ஆகிய நாடக நூல்கள், அவனுடைய அரசி கற்ற இசை நாடகம் ஆகியன குறிப்பிடப்படுகின்றன. 

குரங்கணில் முட்டம் - குடைவரைக் கோயில்

மாமண்டூருக்கருகிலேயே அமைந்த இன்னொரு குடைவரை – மகேந்திரன் எழுப்பியது -  முற்றுப்பெறாமல் நிற்கிறது.


                                             குரங்கணில் முட்டம் - குடைவரை - முன்புறத்தோற்றம்
படம் உதவி : சரவணமணியன்(முக நூல்)                                              குரங்கணில் முட்டம் - குடைவரைக் கோயில்
படம் உதவி : அபினேஷ் சேகர் (முக நூல்)


தளவானூர் - குடைவரைக் கோயில்

                                     தளவானூர் குடைவரைக் கோயில் -  தோற்றங்கள்


படங்கள் உதவி :  கவி தளம் (முக நூல்)


விழுப்புரம் அருகில் உள்ள தளவானூரில் மகேந்திரனின் குடைவரைக் கோயில் சிவனுக்கு எழுப்பப்பட்ட ஒன்று.  இதில் ஐந்து நாசிகள் அமைந்துள்ளமை சிறப்பானது. நாசிகளின் நடுவில் மனித முகங்கள். இந்த நாசிகளின் கீழே, வாயில் தூண்களின் போதிகைப் பகுதியில் இருக்கும் மகர தோரணம் மிக அழகானது.   (இத்தோரண அமைப்பு தற்கால வளைவு (ARCH)  என்னும் கட்டிட அமைப்புக்கு முன்னோடி எனலாம்.) இதில் உள்ள மகர உருவம், முதலை (மகரம்)யும் சிங்கப்பிடரியும் கொண்ட ஒரு கற்பனை உருவம். மகரம், யாழி போன்றவை சிற்பக்கலையின் உறுப்புகள். 

                                                                                 மகர தோரணம்
படம் : அர. கோபு

இங்குள்ள கல்வெட்டு இதைச் சத்துருமல்லேசுவர ஆலயம்”  என்று குறிப்பிடுகிறது. சத்துரு மல்லன் என்பது மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயராகும். உள்புறத்தில் இருக்கும் இரு வாயிற்காவலர் (துவார பாலகர்) சிற்பங்கள் அழகானவை. நின்ற தோற்றத்தில் அவை அமைந்திருப்பினும், உடல் அமைப்பில் ஒரு வளைவு காணப்படுதல் சிறப்புக்குரியது.  இருவரின் உடலிலும் இருக்கும் முப்புரி நூல், நூல் அமைப்பில் இல்லாது துணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளே இருக்கும் இறைவனைச் சென்று பாருங்கள் என ஆற்றுப்படுத்துவது போல இச்சிற்பங்களில் ஓர் உணர்ச்சி வெளிப்படுவதைக் காணலாம்.  இங்குள்ள கல்வெட்டுகளைப் பற்றித் தொல்லியல் துறையில் பணியாற்றிய ஆய்வாளர் கி.ஸ்ரீதரன் அவர்கள் கூறும் செய்தி கீழே: (நன்றி :   தினமணி 17-09-2019)

 கல்வெட்டுகள் : 
இக்குடைவரைக் கோயிலில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேற்கு அரைத்தூண் அருகில் காணப்படும் பல்லவ கிரந்த எழுத்தில் அமைந்த கல்வெட்டில் இக்குடைவரைக் கோயிலை "நரேந்திரன்" என்னும் சத்ருமல்லன்" என்னும் அரசனால் இம்மலையின் மேலே சத்ருமல்லேசுவராலயம் என்னும் இக்கோயில் அமைக்கப்பட்டதாக கூறுகிறது. 
தண்டாநத நரேந்த்ரேண நரேந்த்ரனைஷ காரித :
ஸத்ருமல்லேண ஸைலேஸ்மின் ஸத்ருமல்லேஸ்வ ராலய:
இரண்டாவது கல்வெட்டு இதே செய்தியை தமிழில் கூறுகிறது:
ஸ்ரீ தொண்டைநய் தார்வேந்தன்
நரேந்திரப் போத்தரையன்
வெண்பேட்டின் றென்பால் மிக 
மகிழ்ந்து கண்டான்
சரமிக்க வெஞ்சிலையான் சத்துரு 
மல்லேஸ்வராலய மென்
நரனுக்கிடமாக வாங்கு"


                                            தளவானூர் குடைவரைக் கல்வெட்டு 
படம் உதவி :  கி.ஸ்ரீதரன்


பல்லவர் சிற்பங்களின் தனிச் சிறப்பு என்ன?

குப்தர்களின் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள் ஆகியன தனிச் சிறப்பு வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கதை சொல்லுகின்ற ஒரு பாங்கு பல்லவர் சிற்பங்களில் அமைந்திருப்பதைக் காணலாம்.  

சிற்பம் கற்க விருப்பமா?
ஓவியம் கற்று வா
ஓவியம் கற்க விருப்பமா?
நாட்டியம் கற்று வா
நாட்டியம் கற்க விருப்பமா?
இசை கற்று வா
இசை கற்க விருப்பமா?
பாடல் கற்று வா

என்று ஒருவருக்குக் கூறுவதுபோலப் பல்லவர் சிற்பக் கலை அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பு.  ஆம். பல்லவர் சிற்பங்களில், நாம் ஒரு சேர பாடல், இசை, நாட்டியம், ஓவியம் ஆகியவற்றை உணர இயலும்.

சீயமங்கலம்சீயமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள, மகேந்திரவர்மன் எழுப்பிய குடைவரைக் கோயிலின் ஒரு சிறப்பு இங்குள்ள ஆடவல்லான் சிற்பம். தமிழகத்தின் முதல் ஆடவல்லான் கற்சிற்பம் இதுதான். ‘புஜங்க த்ரஸ்ஸ  என்னும் நாட்டியச் சாயலில் இச்சிற்பம் அமைந்துள்ளதாகக் கூறுவர். இங்கு, ரிஷபாந்திகர், ஆடவல்லான் ஆகிய இரு இறைத்திருமேனிகளும் தூண்களில் வடிக்கப்பட்டதால் இறைவன் தூணாண்டார் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள வாயிற்காவலர் (துவாரபாலகர்)  சிற்பங்களும் அழகானவை.


ஆடவல்லான் - முதல் கற்சிற்பம்

வாயிற்காவலர் சிற்பங்கள்

இங்குள்ள கல்வெட்டு மகேந்திரனின் சிறப்புப் பெயர்களான லலிதாங்குரன், அவனிபாஜன் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. கோயிலின் பெயரும் அவனிபாஜன பல்லவேசுவரம் என்பதாகும்.

அவனிபாஜன் கல்வெட்டு


மகேந்திரவாடி

காஞ்சிபுரம் அருகில் உள்ள இன்னொரு குடைவரைக்கோயில். மகேந்திரவர்மனுடையது. மகேந்திர விஷ்ணுகிருஹம் என்னும் முராரி கிருஹம் என்று இக்கோயிலை இங்குள்ள கல்வெட்டு குறிக்கிறது. மாமல்லபுரத்து ரதங்களுக்கு இதை முன்னோடியாகக் கொள்ளலாம்.


வல்லம்

வல்லம் குடைவரைக் கோயில் மகேந்திரவர்மன் எடுப்பித்தது அல்ல; ஆனால், அவன் காலத்தது. அவனுடைய மேலாண்மையின் கீழ் இருந்த ஒரு சிற்றரசனின் மகன் எடுப்பித்தது. கல்வெட்டின் பாடம் :

சத்துரும் மல்லன் குணபரன்
மயேந்திரப்போத்தரெசரு அடியான்
வயந்தப்பிரி அரெசரு மகன் கந்தசேன
ந் செயிவித்த தேவகுலம்

கல்வெட்டு மகேந்திரவர்மனைச் சத்துரு மல்லன் எனவும், குணபரன் எனவும் குறிப்பிடுகிறது. இங்குள்ள மற்றொரு கல்வெட்டு, மகேந்திரனைப் பகாப்பிடுகு என்றும், லளிதாங்குரன் என்றும் குறிப்பிடுகின்றன. 

திருச்சி தாயுமானவர் கோயில் – லளிதாங்குர பல்லவ கிருஹம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் வாயில் அருகே லளிதாங்குர பல்லவ கிருகம் என்னும் குகைக் கோயில் உள்ளது. இக்கோயில், மகேந்திரனின் ஒரு சிறப்புப் பெயரான லளிதாங்குரன் பெயரில் வழங்குகிறது. இங்குள்ள தூண் கல்வெட்டுகளில், மகேந்திரனின் கீழ்க்கண்ட சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அபிமுக
அகருண
அநித்யராக
அநுமாந

கங்காதரர் சிற்பம்

லளிதாங்குர பல்லவ கிருகத்தில் பாடல் பெற்ற கங்காதரர் சிற்பம் உள்ளது. இச்சிற்பத்தில்,  சிவன் ஏன் வழக்கமான ஒரு பிச்சாண்டி உருவத்தில் வடிக்கப்படவில்லை? உடுத்த சிறப்பான ஆடையின்றிப் புலித்தோலை அணிதிருப்பானே; முடியெல்லாம் சடை சடையாய் இருக்குமே; உடலைச் சுற்றியும் பாம்புகள் சூடியிருப்பானே. இச்சிற்பத்தில், ஏன் நல்ல பருத்தி ஆடை-அரசர் அணிகின்ற நல்ல ஆடை? ஏன் தலையில் கிரீடம்? ஏன் உடலில் அரசரணியும் பொன் அணிகலன்கள்? ஏன் முப்புரி நூல்? மொத்தத்தில் அரசனுக்குரிய ஒரு பெருந்தோற்றம். மகேந்திரன் தன்னையே சிவனாக வடித்ததால் சிவனுக்கு அரசவடிவம் தந்து சிற்பமாக்கியுள்ளான். இதை, இங்குள்ள கல்வெட்டிலும் பொறித்துவைத்துள்ளான். இச்சிற்பத்தில் இன்னொரு அழகு. முடியில் கிரீடம் உள்ளதால், கங்கையைத் தன் ஒற்றை முடியில் தாங்கியுள்ள நிலை. கல்வெட்டுப் பாடலின் பொருள் வருமாறு;


சிங்கவரம் குடைவரைக் கோயில்

செஞ்சிக்கருகில் இருக்கும் சிங்கவரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கிடந்த கோலத்தில் சிங்கப்பெருமாளுக்கு எடுப்பித்த கோயில். மகேந்திரனின் காலத்தைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. கருவறைச் சுவரில் பெரும் வடிவத்தில் பள்ளிகொண்ட பெருமாள். இங்குள்ள துர்க்கைச் சிற்பம் அழகானது. எளிமையான, அணிகள் எவையுமின்றித் திரிபங்க நிலையில் நிற்கும் துர்க்கையின் கைகளில் சங்கும் ஏவுதற்கு அணியமாயுள்ள நிலையில் சக்கரமும் (பிரயோகச் சக்கரம்) காணப்படுகின்றன.

மாமல்லபுரம்

மாமல்லை, பல்லவச் சிற்பக்கலைப் பல்கலைக் கழகமாக விளங்குகிறது எனக் கூறுதல் தகும். தொடக்க எளிமைக்குச் சான்றாய் கொடிக்கல் மண்டபம் முதலாகக் கலைப்பொலிவின் உச்சி நிலையாக வராக மண்டபம் வரை கணக்கற்ற சிற்பத் தொகுதிகள். 

வராக மண்டபம்-வராகச் சிற்பம்வராக மண்டபம் -  முன்புறத்தோற்றம்


இது மகேந்திரவர்மனின் படைப்பு. அத்யந்தகாம பல்லவ ஈசுவர கிருகம் என்று வழங்கும் இக்குடைவரை மண்டபத்தில் உள்ள கல்வெட்டு மகேந்திரனின் 244 சிறப்புப் பெயர்களைக் குறிக்கின்றது. வராகத் திருமேனிச் சிற்பத்தொகுதியில் அழகான கலைக்கூறுகளைக் காணலாம். மனித வடிவத்துக்கு வராகத் தலை. கற்பனையில் நமக்கு அழகு புலப்படாது. ஆனால், சிற்பி இவ்வடிவத்துக்கு அழகைத் தந்துள்ளான். திருமகளைக் கடலரக்கனிடமிருந்து மீட்டு அவளை இரு கைகளில் ஏந்தி நிற்கும் பாங்கு. கால்களில் ஒன்று அரக்கனின் தலைமேல். அரக்கன் கடலரக்கன் எனக் குறிக்க அவன் தலை மேல் நாகத்தலைகள் ஐந்து. 


வராகச் சிற்பம்


நீரைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் நாகத்தையோ, (தாமரை) மலரையோ காட்டுதல் சிற்பம் வடித்தலில் உள்ள மரபு. அரக்கனின் மனைவியும் அரக்கனைப்போலவே கை தொழுது இறைஞ்சுகிறாள். அவள் அருகில் இராஜ குரு. வராக இறைவனின் கைகளில் ஒன்றில் சங்கும் மற்றதில் ஏவுநிலைச் சக்கரமும் (பிரயோகச் சக்கரம்).  இந்த ஏவுநிலச் சக்கரம் பல்லவச் சிற்பங்களின் சிறப்புக் கூறுகளுள் ஒன்று.  வராகருக்கு அருகில் திருமகளை அடுத்துச் சூரியன். வராகருக்கு இடப்புறம் பிரம்மா; அவரருகில் நாரதர். வராக முகத்தின் தலைக்கு நேராகத் தலைக்கிரீடத்தைக் காட்டாமல், வராகத்தின் மூக்குச் சாய்மானத்துக்கேற்பச் சமன் செய்யும் (BALANCING) நிலையில் சாய்ந்தநிலையில் காட்டியுள்ள சிற்பத்திறன் குறிப்பிடத்தக்கது.

வராக மண்டபம்-கஜலட்சுமி சிற்பம்


யானை நீராட்டும் திருமகள்


திருமகளைக் குளிப்பாட்டும் காட்சியில் அமைந்த சிற்பம். பணிப்பெண்கள் அப்பணியில் ஈடுபட்டிருந்தாலும்,  யானைகளைக் காட்சிப்படுத்தியிருப்பது இங்கு அழகு. ஒரு யானை, தன் துதிக்கையைத் தூக்கி நீர் தெளிக்கும்போது, மற்ற யானை நீர் மொள்ளுதல் அழகான காட்சி.

வராக மண்டபம்-மகிஷாசுர மர்த்தனி சிற்பம்

மகிஷாசுரமர்த்தனி – கொற்றவை – இங்கு சமபங்கநிலையில் காணப்படுகிறாள். சிங்கவரம் குடைவரையில் நாம் கண்ட கொற்றவைச் சிற்பம், திரிபங்க நிலையில் உள்ளது.  உடல் வளைவுகளோடு கூடிய நிலை திரிபங்கம்.  வளைவுகளின்றி உடல் நேராக இருக்கும் நிலை சமபங்கம். கொற்றவையின் வலப்பக்கம் அடியவன் ஒருவன் நவகண்டம் கொடுக்கும் நிலையில் தலையை அரிந்துகொள்ளும் தோற்றத்தில் காணப்படுகிறான்.  கொற்றவையின் கையில் இருக்கும் சக்கரம் ஏவுநிலைச் சக்கரம் (பிரயோகச் சக்கரம்) என்பது குறிப்பிடத்தக்கது. கொற்றவையின் தலைக்கு இருபுறமும் சிங்கமும், மானும் பெரிதாக வடிக்கப்பட்டுள்ளதைக் காண்க.


மகிஷாசுர மர்த்தனி 


வராக மண்டபம்-உலகளந்தான் சிற்பம்


உலகளந்தான் சிற்பம்குறுவடிவத்தில் வந்த பிராமணன் நெடிதுயர்ந்த வடிவம் தாங்கி உலகளந்த நிகழ்ச்சியைக் காட்டும் சிற்பம் இது.  உலகளந்த பெருமாள் காலைத் தூக்கும்போது தடுத்த ஒருவன் தூக்கி எறியப்படுகிறான் என்பதைச் சிற்பி அழகுறக் காட்டியுள்ளான். எறியப்பட்டவன் உயரே இருந்து கீழே விழுகிறான். உலகளந்தானின் கால் எட்டிப்போக அதைப் பார்த்த பிரம்மா வியந்துபோகும் காட்சி.

திரிமூர்த்தி மண்டபம்

திரிமூர்த்தி மண்டபம் - முன்புறத்தோற்றம்


திரிமூர்த்தி மண்டபம், அதன் பெயருக்கேற்ப மூன்று இறைக்கோட்டங்களைக் (கருவறைகளை) கொண்டுள்ளது. முன்மண்டபம் என்னும் அமைப்பு இதில் இல்லை. நடுவில் இருக்கும் இறைக்கோட்டம் அதன் முதன்மைத் தகுதிகொண்டு, சற்று முன்புறம் நீட்டப்பெற்றுள்ளதைக் காணலாம்.  மூன்று கோட்டங்களுக்கும் ஏறிச் செல்வதற்குப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடுக்கோட்டத்தில் சிவன்; பக்கக் கோட்டம் ஒன்றில் விஷ்ணு; மற்றொரு பக்கக் கோட்டத்தில் வழக்கமாக இருக்கும் பிரம்மன் இல்லை. இங்கு, பிரம்ம சாஸ்தா என்னும் முருகன் இடம்பெற்றுள்ளார். எனவே, திரிமூர்த்தி மண்டபக் குகை, அதனுள் அமைந்திருக்கும் முருகன் கோட்டத்தால் சிறப்புப் பெறுகிறது. முருகன் இங்கு “பிரம்ம சாஸ்தா  என்னும் பெயரில் அழைக்கப்பெறுகிறார். இச் சிற்பம் முருகனின் போர்க்கோலம் எனக் கூறப்படுகிறது. சிற்பத்தின் மார்புப் பகுதியில் பெருக்கல் குறியைப்போல் அமைந்த சன்னவீரம் என்னும் அணிகலன்தான் இது முருகனின் போர்க்கோலத்தைக் குறிக்கிறது என்பது ஆய்வாளர் கருத்து. வாயிலில் இருக்கும் காவலர் (துவார பாலகர்) சிற்பங்களில் உள்ள உருவங்கள் வழக்கமானவை அல்ல. வாயிற்காவலராக இங்கு நிற்கும் இருவர் இரு முனிவர்களாவர். மண்டபத்தின் மேற்புறம் நாசிக் கூடுகளும் அவற்றுக்கும் மேற்புறத்தில் சிறு கோயில் வடிவத்தைச் சுட்டுகின்றவகையில் சாலை அமைப்போடு கூடிய விமானங்கள் வடிக்கப்பட்டுள்ளன.


முதற் கோட்டம் - பிரம்ம சாஸ்தா என்னும் முருகன்


நடுக்கோட்டம் - சிவன் 


மூன்றாம் கோட்டம் - விஷ்ணு

இதே மண்டபத்தில், விஷ்ணுவின் சிற்பத்துக்கருகில் சிறிய கோட்டத்தில் கொற்றவைச் (துர்க்கை) சிற்பம் காணப்படுகிறது. எட்டுக்கைகளுடன் கூடிய கொற்றவை. சங்கு, சக்கரம், வாள், கேடயம், வில், அம்பு ஆகிய படைக்கலன்களைக் கைகளில் வைத்திருக்கிறாள். மற்ற இரு கைகளில் ஒன்று ‘அபயமுத்திரையிலும், மற்றொன்று தொடையில் இருத்திய நிலையிலும் அமைந்துள்ளன. கால்கள் எருமை அரக்கனின் தலையில் பதிந்துள்ளன. எருமை அரக்கனோடு நடந்த போர் முடியும் தருணத்தில்  அமைந்தது எனக்கருதப்படுகிறது.

மகிஷாசுர மர்த்தனி


நிலத்தின் மீது பாறையில் தலசயனர்

மாமல்லையில் காணத்தகும் சிற்பங்களுள் ஒன்று, நிலத்தில் கிடக்கும் பாறையில் விஷ்ணுவின் கிடந்த கோலத்தை வடித்திருக்கும் சிற்பம். தலம், நிலத்தைக் குறிக்கும்; சயனம் (அறி)துயிலைக் குறிக்கும்.

ஆதிவராக மண்டபம்     

திருவிடவந்தைக் கோயிலில் ஆதிவராக மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில், வாயிற்காவலராக ஆதிசேடன் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பிரம்மன் சிற்பம் குறிப்பிடத்தக்கது. அவர் தம் இடது கையால் ‘அபயமுத்திரை காட்டுகிறார். கருடனுக்கு அருள் காட்டும் கருட அநுக்கிரகர் சிற்பம் இங்குள்ளது. அருகில் சிவனும் நந்தியும் காட்டப்பெற்றுள்ளனர். தண்டு முனிவருக்கு நாட்டியம் கற்பிக்கும் காட்சிச் சிற்பமும் இங்குள்ளது.


திருச்சி மலைக்கோட்டை

இங்குள்ள சிவனின் சிற்பத்தில் ஆடையில்  புலித்தோல் இல்லை. ராஜ வடிவத்தில் ஆடை, மணிமுடி (கிரீடம்), பூணூல், அணிகலன்கள் ஆகியவற்றோடு  சிவன் வடிக்கப்பட்டுள்ளார். மகேந்திர வர்மன் தன்னையே சிவனாக வடித்துள்ளான் எனலாம்.  இச்சிற்பத்தில் ஒற்றைத் தலைமுடியைச் செதுக்கியுள்ளதைக் காணலாம். 

மாமல்லபுரம்

மாமல்லபுரம் அர்ச்சுனன் தவம் சிற்பத்தில்,  நீரைக் குறிப்பால் காட்ட நாகம், தாமரை ஆகியவற்றைச் செதுக்கியுள்ளனர்.துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.