தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகள்-2
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில், தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தன. கல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும், தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தன. கல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும். ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:
குறிப்பு: அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படாவிட்டாலும், கல்வெட்டில் உள்ளவையே. பொருள் எளிதில் விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.
கல்வெட்டின் பாடம்:
1 (த)னக்கேய் உரிமை பூண்டமை மநக்கொளக் காந்த(ளூர்)
2 ம் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும் இ
3 (எ)ல்லாயாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேய்
4 திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்0வரம் உடைய பரம(ச்0வாமி)
5 (நத்)தமும் ஸ்ரீகோயில்களுங் குளங்களும் ஊடறுத்துப் போன வ
6 (ராஜகேஸரியோ)டொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்க க(டவ)
7 பள்ளியுங் கணிமுற்றூட்டும் உட்பட அளந்தபடி
8 ங் கம்மாணசேரியும் பறைச்சேரியும் சுடுகாடு
9 (க)லம் நூற்று ஒருபத்து ஐஞ்சேய் எழு மாவரை முந்
சிறு விளக்கங்கள்:
முதல் மூன்று வரிகள் இராசராசனின் மெய்க்கீர்த்தி வரிகள். அரசனை அறிமுகப்படுத்தும் புகழுரை. தமிழகம் முழுதும் ஆண்ட பெருநிலத்துக்குரிய கோ. இவனுடைய ஆட்சி நிலம் திருமகளுக்கு ஒப்பிடப்படுகிறது. மெய்க்கீர்த்தி வரியில்,
“திருமகள் போலப் பெருநிலச்செல்வியுந் தனக்கே உரிமை பூண்டமை” என வரும்.
முதல் வரியில் காணப்படும் “காந்தளூர்” என்பது “காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தறுளி” என்னும் மெய்க்கீர்த்தி வரியின் ஒரு பகுதி. இராசராசன் முதலில் ஆற்றிய வீரச் செயல் காந்தளூர் சாலையைப் படைகொண்டு சீரமைத்ததுதான். பெரியகோயில், ஸ்ரீராஜராஜீச்0வரம் என்று, இராஜராஜனின் பெயரில் குறிக்கப்படுகிறது. கோயில் கல்லால் எழுப்பப்பட்ட கோயில்; எனவே, திருக்கற்றளி (கல்+தளி -> கற்றளி. தளி=கோயில்). இறைவன், பரமச்0வாமி என்று குறிக்கப்படுகிறார். இராசராசன், பெரிய கோயிலுக்குக் கொடையாகச் சில தேவதான ஊர்களைத் தருகிறான். அவற்றின் வருவாய், கோயிலுக்குரியவை. இக்கொடை ஊர்களில், வரி நீக்கம் செய்யப்பட்ட பகுதிகள் வருவாய்க்குள் அடங்கா. எனவே, அவை கோயில் கணக்கில் சேரா. அத்தகைய பகுதிகள் யாவை எனக் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன. அவற்றைக் கல்வெட்டில் “இறையிலி” எனக்குறிப்பர். இக்கல்வெட்டில் அவ்வாறு குறிக்கப்பெறும் பகுதிகளாவன: நத்தம் (குடியிருப்புக்கான நிலம்), ஸ்ரீகோயில்கள் (ஊரிலுள்ள மற்ற கோயில்கள்-சேட்டையார் கோயில், பிடாரியார் கோயில், ஐயனார் கோயில் போன்றவை), குளங்கள், வாய்க்கால்கள். அதுபோலவே, ஊர் வருவாய்க் கணக்கில் சேராதவை, பள்ளி (சமண, பௌத்தப் பள்ளிகள்), கம்மாணசேரி (கம்மாளர் குடியிருப்பு), பறைச்சேரி (பறையர் குடியிருப்பு), கணிமுற்றூட்டு (பஞ்சாங்கம் சொல்பவர்க்குக் கொடுக்கப்பட்ட மானிய நிலம்), சுடுகாடு ஆகியன.
கோயிலுக்கு இவ்வளவு கலம் நெல் அளக்கவேண்டும் என்னும் குறிப்பும் கல்வெட்டில் கூறப்படுகிறது. நெல் அளக்க ”ராஜகேஸரி”, “ஆடவல்லான்” என்னும் பெயரில் இரண்டு வகை மரக்கால்கள் (அளவைக் கருவிகள்) வழக்கில் இருந்தன. ஒன்று இராசராசனின் பெயரிலும், மற்றது இறைவன் பெயரிலும் வழங்கியமை கருதத்தக்கது. சிதம்பரம் நடராசர் மேல் மிகுந்த பற்றுடைய இராசராசன், “ஆடவல்லான்” என்னும் பெயரை மரக்காலுக்கு இட்டது குறிப்பிடத்தக்கது. ஆடவல்லானின் செப்புத்திருமேனிகளை மிகுதியாகச் செய்தமை சோழர் காலத்தில்தான்.
----------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
பள்ளியில் வகுப்பில் ஆசிரியர் கூறுவதுபோல உள்ளது. தொடர்ந்து வாசிக்கிறேன்.
பதிலளிநீக்கு