மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 31 டிசம்பர், 2016

தேவனூர் புதூர் நரிகடிச்சான் கோயில்

         கொங்கு நாடு பழங்காலத்தில் காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தைப் பெருமளவில் கொண்டிருந்தது. எனவே, கொங்குச்சமுதாயமும் நீண்ட காலம் கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகவே அமைந்திருந்தது. வேளாண்மை பெருமளவில் இல்லை. பத்து-பதினொன்றாம் நூற்றாண்டில் சோழர் கொங்குநாட்டைக் கைப்பற்றிக் கொங்குச்சோழரைக்கொண்டு ஆட்சி நடத்தியபின்னரே வேளாண்மை பெருகியது.  கால்நடை வளர்ப்பில் அவற்றைப் பேணுதல் என்பது தலையாய பணி. அவற்றை அடைத்து வைக்கப் பட்டிகள் இருந்தன. ஆனால், ஊரைச் சூழ்ந்துள்ள காடுகளிலிருக்கும் புலிகளால் கால்நடைகளுக்கு மிகுந்த ஆபத்தும் இருந்தது. புலிகளால் வேட்டையாடப்படுவதனின்றும் கால்நடைகளைப் பாதுகாக்க வீரர்கள் காவலிருந்தனர். அவ்வீரர்கள் காவல் பணியின்போது புலிகளை எதிர்கொண்டு அவற்றுடன் சண்டையிட்டுக் கால்நடைகளைக் காத்தனர். சிலபோது, வீரர்கள் இறந்துபடுதலும் நிகழும். அவ்வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஊர்மக்கள் அவர்க்குக் கல் நாட்டி வழிபாடு செய்தனர். அவ்வகைக் கற்கள் நடுகற்கள் எனப்பட்டன. அவற்றில், புலியுடன் போரிடும் தோற்றத்தில் வீரனின் சிற்பங்களை வடித்தனர். கோவைப்பகுதியில், இவ்வாறான நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. சில ஊர்களில், இவற்றை நரிகடிச்சான் கல் எனவும் அழைக்கின்றனர்.

         அது போன்ற நரிகடிச்சான் கல் ஒன்று, திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தேவனூர்புதூரில் இருக்கின்றது. கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து. சுந்தரம், அவிநாசியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது இராவணாபுரத்தைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரும் உடனிருந்தார். இந்தப்பகுதி மக்கள் இக்கோயிலை நரிகடிச்சான்கோயில் என அழைக்கின்றனர் என்னும் தகவலை அவர் தெரிவித்தார். ஆய்வு விவரங்களாவன.

                                                               கோவிலின் முன்புறத் தோற்றம்                


                       தேவனூர் புதூரில், நவக்கரை பாலத்தருகில் மேற்சொன்ன நரிகடிச்சான் கோயில் அமைந்துள்ளது. சாலையோரத்தில் ஒரு வேப்பமரத்தின் அருகில் அமைந்துள்ள இக்கோயில் ஆறடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்ட ஒரு சிறிய  கருவறை அமைப்பைக்கொண்டுள்ளது. கருவறைபோன்ற இந்தக்கட்டுமானம் முழுதும் கற்களால் அமைக்கப்பெற்றது. கருவறையின் வாயில் போன்ற முன்புறத்தில், ஐந்தடி உயரமுள்ள இருகற்கள் இருபுறம் நிற்கவைக்கப்பட்டு, நடுவில் ஒருவர் உள்ளே நுழையுமளவு வாயில் திறப்பு அமைக்கப்பட்டிருந்தது. கருவறையின் இரு பக்கவாட்டுப்பகுதிகளிலும் பின்புறத்திலும் ஐந்தடி உயரமுள்ள மூன்று மூன்று கற்கள் இணைக்கப்பட்டிருந்தன. கருவறையின் கூரைப்பகுதி சற்றே பெரிய அளவிலான ஐந்தரை அடி உயரமுள்ள மூடுகற்கள் மூன்றைக்கொண்டு அடுக்கப்பட்டிருந்தது. எல்லாக்கற்களும் சுண்ணாம்புக் காரைப்பூச்சு கொண்டு நன்கு இணக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் புலிகுத்திக்கற்கள் திறந்த வெளி நிலத்தில் ஒரு பலகைகல்லில் புடைப்புச் சிற்பமாகவே காணப்படும். ஆனால், இங்கே பெரிய கற்களாலான ஒரு கட்டுமானத்துக்குள் சிற்பம் காணப்படுவது சிறப்பானது. கருவறையைச் சுற்றிலும் திறந்த வெளியும் அதை அடைத்தவாறு கற்களை அடுக்கிச் சுற்றுச்சுவரும் அமைத்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டுமானத்திலும் முன்புறத்தில் இரு கல் தூண்களைக்கொண்டு ஒரு வாயிலை அமைத்திருக்கிறார்கள்.

                         கோயிலின் தோற்றங்கள்


         கற்களால் அமைந்த மேற்கண்ட அறைக்குள் மூன்று அடி நீளமும் இரண்டரை அடி உயரமும் கொண்ட புடைப்புச்சிற்பத்தில், வீரன் ஒருவன் தன் இடது கையால் புலியின் வாய்க்குள் சிறிய வாளைப் பாய்ச்சியவாறும், தன் வலது கையால் நீண்டதொரு வாளைப்புலியின் வயிற்றுப்பகுதியில் பாய்ச்சியவாறும் காணப்படுகிறான். இரண்டு வாள்களுமே புலியின் உடலைத்துளைத்து உடலுக்கு மறுபுறம் வெளிவந்துள்ளவாறு உள்ளன. புலி தன் பின்னங்கால்களால் நின்றவாறு முன்கால்களைத் தூக்கி வீரனின் வலது கையைப்பற்றிக்கொண்டு தாக்கும் நிலையில் காணப்படுகிறது. வீரனின் கால்களும், புலியின் பின்னங்கால்களும் நாம் பார்க்க இயலாதவாறு பலகைச் சிற்பம் சற்றே நிலத்தில் புதைந்துபோய்விட்டது. வீரன் தலையில் தலைப்பாகை இருப்பதுபோல் தோன்றுகிறது. தலையின் வலப்பக்கம் கொண்டை காணப்படுகிறது. கழுத்திலும் காதிலும் அணிகள் உள்ளன. இடையில் ஆடைக்கச்சு காணப்படுகிறது. இடைக்கச்சில் குறுவாள் ஒன்று இருப்பதுபோல் புலப்படுகிறது. நீண்ட நாள்களாகச் சிற்பத்துக்கு எண்ணை பூசப்பட்டுவருவதன் காரணமாகச் சிற்பநுணுக்கங்களை அறிய முடியவில்லை. வீரனுக்கும் புலிக்கும் இடையில் ஒரு நீண்ட தண்டு காணப்படுகின்றது. புலிக்கெனத் தனிச் சிற்பம் அமைத்து வெளியே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

                         வீரன் புலியைக் குத்தும் சிற்பம்


                                                     தனியே புலிக்கொரு சிற்பம்


         மொத்தத்தில், ஒரு கோயிலின் தோற்றத்தைக் கற்களைக்கொண்டே அமைத்திருப்பதை நோக்கும்போது புலியைக் கொன்ற வீரன் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒரு குறுந்தலைவனாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. மக்கள் இந்த நடுகல் சின்னத்தைக் கோயிலாக வழிபடுவதனால் பல நூற்றாண்டுகளைக் கடந்த தொல்லியல் தடயமான நடுகல் அழிவினின்றும் காக்கப்பட்டு வருதல் மகிழ்வையே அளிக்கிறது. இப்பகுதி மக்கள், வழிபாட்டோடு நின்றுவிடாமல், ஒரு தொல்லியல் சின்னம் நம் பகுதியில் உள்ளது என்னும் பெருமையை உணர்ந்து இந்த நடுகல் கோயிலைப் பாதுகாப்பார்களாக.
து.சுந்தரம், கல்வெட்டு அராய்ச்சியாளர், கோவை.

அலை பேசி : 9444939156.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

கங்கப்பெருவழியில் சில வரலாற்றுத் தடயங்கள்

வரலாற்று உலா
       கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் வரலாற்று உலாவாகக் கொங்குப்பகுதியின் வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.  நோக்கம் நம் பகுதியின் வரலாறு தெரிந்துகொள்ளுதல். அவ்வகையில் 2016, நவம்பர் மாதம் நாங்கள் சென்ற பயணம் பற்றிய பதிவு இங்கே தரப்படுகிறது.

 கவையன்புத்தூர் என்னும் கோயில்பாளையம்
       கோவையிலிருந்து பயணப்பட்ட நாங்கள் முதலில் சென்ற இடம் கோயில்பாளையம். கோவை-சத்தியமங்கலம் வழித்தடத்தில் அமைந்த ஊர். கோவையிலிருந்து சத்தியமங்கலம் வழியாகக் கங்கநாடு சென்ற பெரு வழியே கங்கப்பெருவழி என அழைக்கப்பெற்றது. கங்க நாடு என்பது தற்போதைய கருநாடகத்தின் மைசூர்ப்பகுதியாகும். கங்கப்பெருவழியில் அமைந்த கோயில்பாளையம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சர்க்கார் சாமக்குளம் என்னும் பெயர் பெற்றிருந்தது. இவ்வூரின் அருகிலேயே அக்கிரகார சாமக்குளம் என்னும் சிற்றூரும் அமைந்திருந்தது. இன்றும் அக்கிரகார சாமக்குளம் சிற்றூர் இருக்கிறது. கொங்குச் சோழர் ஆட்சிக்காலத்தில்-12,13-ஆம் நூற்றாண்டில் இச் சிற்றூர் ஒரு பிராமணக் குடியிருப்பாகப் புதிய ஊர் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் கூட இங்கு பிராமணர் நிறைந்திருந்தனர் என்பது இவ்வூர் மக்கள் சொல்லும் செய்தி. இந்த சாமக்குளம் என்னும் பெயரையே கோயில்பாளையம் பகுதிக்கும் இணைத்து ஆங்கிலேயர் சர்க்கார் சாமக்குளம் என்று பெயரிட்டிருக்கக் கூடும்.

சர்க்கார் சாமக்குளம்
      ஆங்கிலேயர் காலத்தில், வரி வருவாயை அடிப்படையாகக் கொண்டு சில ஊர்களை சர்க்கார் என்றும், இனாம் என்றும் அடைமொழியிட்டு அழைத்தனர். வரி இருப்பது, வரி இல்லாமலிருப்பது ஆகிய்வற்றை இவை குறிக்கும். இங்கு கொங்குச் சோழர் காலத்தில் கட்டப்பெற்ற பெரிய கோயில்களில் ஒன்று உள்ளது. காலகாலீசுவரர் கோயில் எனப்பெயர் பெற்ற இக்கோயிலைச் சார்ந்து இவ்வூர் பிற்காலத்தில் கோயில்பாளையம் என்னும் பெயர் பெற்றிருக்கக் கூடும். கல்வெட்டுகளில் இவ்வூர் கவையன் புத்தூர் எனக் குறிக்கப்பெறுகிறது. கொங்கு நாட்டின் நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றான வடபரிசார நாட்டில் இவ்வூர் இருந்தது. இவ்வூரைச் சேர்ந்த மசக்காளி வேலன் மன்றாடி என்பவர் தமிழ்ச்சங்கம் வைத்தவர் என்றும், கம்பரின் பல்லக்குச் சுமந்தவர் என்றும் கொங்குமண்டல சதகம் நூல் குறிப்பிடுகிறது. இவர் மன்றாடி பட்டம் பெற்ற, பால வேளாளர் குலத்தலைவர் ஆவார். கொங்கு மண்டல சதகத்தில், கோயில்பாளையம் ஊர், கவசை என்று குறிப்பிடப்படுகிறது.

                       காலகாலீசுவரர் கோயில்      


காலகாலீசுவரர் கோயிலில் 12, 13 ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுகள் இருந்துள்ளன. கொங்குச்சோழரில் வீரநாராயணன், வீரராசேந்திரன், மூன்றாம் விக்கிரம சோழன், கொங்குப்பாண்டியரில் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், போசளரில் (ஹொய்சளர்) மூன்றாம் வீரவல்லாளன் ஆகிய பல அரசர்களின் கல்வெட்டுகள் மொத்தம் பத்தொன்பது உள்ளன. கி.பி. 1145-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1327-ஆம் ஆண்டுவரையிலான இருநூறுஆண்டுக் காலஅளவில் இக்கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை 1922-ஆம் ஆண்டு படியெடுக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு கல்வெட்டுகூட இல்லை. கல்வெட்டுகளில் வெள்ளாளர், பூலுவர், வேட்கோவர், வாணியர் ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள். கோயில் எழுநூறு ஆண்டுப்பழமை வாய்ந்தது என்பது பெறப்படுகிறது.

கல்வெட்டுச் செய்திகள்
      இங்குள்ள சில கல்வெட்டுகள், வழக்கமான கோயில் கொடைகள் பற்றியன என்றில்லாமல் மாறுபட்ட செய்திகளைக் கொண்டவையாக விளங்குகின்றன. ஒரு கல்வெட்டுச் செய்தியைப் பார்ப்போம். பிராமணர்க்கு நிலம் கொடையாக வழங்குவது மரபு. இக்கொடை நிலம், பிரமதேயம் என அழைக்கப்பெற்றது. அவ்வாறு கொடை பெற்ற பிராமணர் யாருக்கேனும் குழந்தைகள் இல்லை என்னும் சூழ்நிலையில், கொடை நிலம் அரசுக்கே உரிமையாகிவிடும். அதாவது அரசே நிலத்தை எடுத்துக்கொள்ளும். மீண்டும் வேறொருவருக்கு அரசு அதை விற்பதும் உண்டு. இச் செய்தியைச் சொல்லும் கல்வெட்டில் “கால்”  என்னும் சொல் பயிலுகிறது. கால் என்பது வழி என்னும் பொருள் கொண்டது. அதாவது, குடிவழியைக்குறிக்கும். அதன்வழி, குழந்தையையும், பரம்பரையையும் குறிக்கும். கல்வெட்டின் சில வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

                        கல்வெட்டு வரிகள்

1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவந சக்கரவத்தி கோநேரின்மைகொண்டாந்....................
  நம்மோலை குடுத்தபடியாவது வடபரிசார நாட்டு கவையந்புத்தூரும் இவூர் 
  உள்ளிட்ட ஊர்களில்
2 சிவஸ்தநங்களில்காணியுடை சிவப்பிராமணன் காலற்று இது நம்முதாநமையில் ..
          மற்றொரு கல்வெட்டு, அரசு நிருவாகம் எவ்வாறிருந்தது, உள்ளாட்சி நிருவாகம் எவ்வாறு ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது என்னும் நிலையினைக் கூறுவதாக அமைகிறது. உள்ளாட்சி என்பது ஊர், ஊரார் என்னும் ஊர்ச் சபை நிருவாகத்தைக் குறிக்கும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் செப்பனிடப்படுகிறது. அப்போது, கோயிலில் இருக்கும் கல்வெட்டுகள் அனைத்தையும் படியெடுத்து மீண்டும் பதிப்பிககப்படவேண்டும் என்று ஆணையிடும் அரசன், இந்தப்பணியை  நகரத்தார்(வணிகர்கள்) ஏற்றுச் செய்யவேண்டும் என்று விரும்புகிறான். ஆனால், அதை நேரடியாக நகரத்தார்க்கு ஆணையாகத் தெரிவிக்காமல் ஊர்ச்சபைக்கு ஆணை ஓலை அனுப்புகிறான். ஊர்ச்சபை, பணியை நகரத்தாரிடம் ஒப்படைக்கிறது. நிருவாகம் படிநிலை மாறாமல் நடைபெற்றது என இக்கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம். 

          இன்னொரு கல்வெட்டு தரும் செய்தி. 13-ஆம் நூற்றாண்டில், கோனேரிமேல்கொண்டான் என்னும் அரசனின் கல்வெட்டு. கொங்குப்பகுதியில் இடிகரை, துடியலூர், கூடலூர், கவையன்புத்தூர், சூரலூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவப்பிராமணர்கள் தங்கள் கோயில் காணியை (பூசை உரிமை) விற்றனர். இவ்வூர்க் கோயில்களில் பூசை நின்றுபோனது.  அரசனும் முதல் இழந்ததாகக் கல்வெட்டு குறிக்கிறது. எனவே மீண்டும் பூசை நடைபெறவேண்டும் என்று அரசன் ஆணை வெளியிட்டு வரிக்கொடை அளிக்கிறான். சிவப்பிராமணர் தங்கள் காணியை (பூசை உரிமை அல்லது காணி நிலத்தை) விற்கும் நிலை ஏற்பட்டதன் காரணம் தெளிவாகவில்லை. ஒரு சில கல்வெட்டுகளில் பஞ்சம், படையெடுப்பு ஆகியவை காரணமாகப் பூசை நின்றுபோனதாகச் செய்திகள் இருந்துள்ளன. ஆனால், இக்கல்வெட்டில் சரியான பின்னணி தெரியவில்லை. பூசை நின்றுபோதலைப் “பூசை முட்டுகையில்”  என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டின் வரிகள் சில கீழே காண்க.

                          கல்வெட்டு வரிகள்

1 ஸ்வஸ்திஸ்ரீ
2 திரிபுவன சக்கரவர்த்தி கோ
3 னேரிமேல்கொண்டாந்....................
4
5 .................இடிகரை துடியலூர்
6 கூடலூர் கவையன்புத்தூர் சூரலூரான அரி
7 ய பிராட்டி நல்லூர் இவ்வூர்களில் சி
8 வப்பிராமணக் காணியாளற்கும் நம்
9 ஓலை குடுத்தபடியாவது ..........


15 .... இன்னாட்டு நாயன்மார் சீபண்டாரத்
16 திலே விற்றுக்குடுத்து ஆற்றாமை
17 யால் இக்கோயில்கள் பூஜை முட்டு
18 கையில் நமக்கு நன்றாக மூன்றாவது முதல் இம்
19 முதல்கள் இழந்தோம் இப்படிக்கு நாயன்
20 மார் கோயில்கள் பூஜை முட்டாமல் செ
21 ய்து போதுவார்களாகவும்
22 இப்படிக்கு செம்பிலுஞ் சிலையிலு
23 ம் வெட்டிக்கொள்வார்களாக.

அரசனுடைய நன்மைக்கு வேண்டியும் பூசை தொடரவேண்டும் என்னும் குறிப்பும் கல்வெட்டில் உள்ளது. இதை “நமக்கு நன்றாக”  என்னும் தொடர் சுட்டுகின்றது.

கற்காலத் தொடர்பு
       கவையன்புத்தூர் பழமையானதோர் ஊர். பெருங்கற்காலம் என வரலாற்றாளர் வகுத்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஊர் இது என்பதற்கான தடயங்கள் இங்கு கிடைத்துள்ளன. கோயிலுக்குப் பின்புறம் சாம்பல் மேடு என்னும் பகுதியில், பெருங்கற்கால எச்சங்களான, இரும்பு உருக்கியதால் ஏற்பட்ட இரும்புக்கசடுகள் இங்கு கிடைதுள்ளன. நிறைய மணிகள் கிடைத்துள்ளன. கோவை கிழார் இதைப்பற்றி எழுதியுள்ளார்.    

சாம்பல் மேடு
       சாம்பல் மேடு என்னும் பெயர் பல ஊர்களில் காணப்படுகிறது. அவ்வகைப்பகுதிகளில் பெரும்பாலிம் பழங்கால எச்சங்கள் கிடைக்கின்றன. புதிய கற்காலத்தில் மக்களின் முழுத் தொழிலாக அமைந்தது கால்நடை மேய்த்தலே. கால்நடை மேய்த்தலுக்கு ஒரு நிலையான இடம் இருந்ததில்லை. எங்கெங்கு மேய்ச்சல் நிலம் உள்ளதோ அங்கங்கு பட்டி போட்டு மக்கள் தங்குதல் வழக்கம். மேய்ச்சல் முடிந்ததும் வேறு மேய்ச்சல் நிலம் நோக்கிப் பயணப்படுவர். இதுபோன்ற இடப்பெயர்ச்சியின்போது இம்மக்கள் ஒரு மரபைப் பின்பற்றினர். கால்நடைகளின் சாணம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருக்கும். இடம் பெயரும்போது இச்சாணக்குவியலைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். வேறிடம் போகும் காலநடைகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தீயிடல். தீ நோய்களை அழிக்கும்; தூய்மைப்படுத்தும் என்பதான ஒரு நம்பிக்கை. அந்த அடிப்படையில், தீ வைத்த சாம்பல் பரப்பின்மீது கால்நடைகளை ஓட்டி இந்த இடத்தைக்கடந்து செல்வர். கால்நடைப் பட்டி அமைத்திருந்த இடங்களிலெல்லாம் இவ்வகைச் சாம்பல் மேடுகள் உருவாகின. (Ash mound என அழைக்கப்படும்). இந்தப் பண்பாடு உலகம் முழுதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரபின் எச்சம் இன்றும் காணப்படுகிறது. மதுரைப்பகுதியில், மாட்டுப்பூசையன்று, பட்டிக்கு முன்புறத்தில் வைக்கோலால் தீ மூட்டி அந்தச் சாம்பலின்மீது கால்நடைகளை ஓட்டும் வழக்கம் உண்டு. இந்த மரபின் திரிந்த வடிவமே, கொங்குப்பகுதியில் காணப்படும் குண்டம் என்று அழைக்கப்படும்- தீ மிதித் திருவிழாவாகும். இங்கே, பூக்குழி என்றழைக்கப்படும் தீக்குழியில் மக்கள் இறங்கிக் கடந்து போவார்கள்.

கல்வெட்டுகள் எங்கே?
       கவையன்புத்தூர் காலகாலீசுவரர் கோயிலில் இருந்த பத்தொன்பது கல்வெட்டுகள் எங்கு போயின? தெரியவில்லை. பல்வேறு காலங்களில் நடைபெற்ற, கோயில் புதுப்பிக்கப்படும் திருப்பணிகளின்போது என்ன நிகழ்ந்தது? சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற திருப்பணிகளின்போதுதான், கல்வெட்டுகளின் சிறப்பும் பெருமையும் உணரப்படாமல் அழிக்கப்பட்டன. வரலாற்று அறிவு இல்லாதவர் இந்தியர்; எனவே வரலாற்றைப் பேணததவறியவர் என்று கருதப்பட்டது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஏராளமான வரலாற்றுத் தடயங்களும் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டு மேற்படி கருத்து பொய்யாய்ப்போனது உண்மை. ஆனால், கல்வெட்டுகளைப் பேணிப்பாதுகாகும் கடமையுணர்வு தற்காலம் நம்மிடையே மறைந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் அதைத்தொடர்ந்த நம் சொந்த ஆட்சியிலும் படியெடுத்துப் பதிவு செய்த கல்வெட்டுகளை நேரில் காணலாம் என்றால், பலகோயில்களில் அது நிறைவேறாது.
      கோயில்பாளையம் கோயில் தற்பொழுது தன் பழமையின் சுவடு சிறிதும் இன்றி, இன்றைய கட்டுமானத்தில் பொலிவின்றித் தோற்றமளிக்கிறது. ஒரு கல்வெட்டைக் கூடக் கோயில் சுவரில் காண இயலவில்லை. நான்கு வரிகளைக் கொண்ட கல்வெட்டுத் துண்டு ஒன்று படிக்கல்லாகப் பதிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள எழுத்துகளைப்படிக்க இயலவில்லை. மற்றொரு சிறிய துண்டு (இரு வரிகளைக் கொண்டது) கோயிலின் வளாகத்து மண்ணில், இடுகாட்டில் சிதறுண்டு காணப்படும் எலும்புத்துண்டாகக் கிடந்தது. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோ  என்று மட்டுமே  படிக்க இயன்றது. கல்வெட்டுகள் மீது பாசம் கொண்டோர் மனம் கனத்துப்போவது உறுதி. “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை”  என்னும் நிலையாமைக் குறளுக்குத் தக்கதொரு சான்று. கோயிலுக்குள் ஓரிடத்தில் பழங்கோயிலின் எச்சமாக ஒரு துண்டுத் தூண் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மூன்று சதுரப்பகுதிகளையும், அவற்றின் இடையில் இரண்டு எண்பட்டைப் பகுதிகளையும் கொண்ட இத்தூண் கல்லில், முதலைவாய்ப் பிள்ளை உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

                 சிறிய துண்டுக்கல்லில்  ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோ

                                                      கல்வெட்டு  -  படிக்கல்லாய்


                             துண்டுத் தூண் - முதலைவாய்ப் பிள்ளைச் சிற்பத்துடன்

கவையகாளியம்மன் கோயில்
       கோயில்பாளையம் காலகாலீசுவரர் கோயிலுக்கருகில், ஓரிரு கல் தொலைவில் அமைந்துள்ள கோவில் கவையகாளியம்மன் கோயிலாகும். 12-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் கவையன்புத்தூர் என வழங்கியதாகக் கல்வெட்டுச் சான்றினைப் பார்த்தோம். கவையகாளியம்மன் என்னும் பெயர், இப்பகுதியில் பழங்காலத்து இருந்த தாய்த்தெய்வ வழிபாட்டு மரபினை உணர்த்துகிறது. சைவம், வைணவம் போன்ற பெருஞ்சமயங்களின் தாக்கம் நிகழும் வரை நாட்டார் வழக்கில் தாய்த்தெய்வ வழிபாடே ஓங்கியிருந்தது. சோழன் பூர்வபட்டயத்தில், உறையூர்ச் சோழன் கரிகால்ன் என்பவன் (கல்லணை கட்டிய கரிகாற் சோழன் அல்லன்) கொங்குப்பகுதியில் நிறையக் பெருஞ்சமயக் கோயில்களைக் கட்டுவித்தான் என்னும் செய்தி கூறப்படுகிறது.  அவ்வாறு கோயில் கட்ட முனையும்போது, காடழித்தல் நடைபெறுகிறது. காடழித்துக் கோயில் எழுப்பப் படுவதை ஊர்த்தெய்வமான அம்மன் எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பு தெய்வம் எதிர்ப்பதல்ல என்றும், உருவகமாக ஊர்மக்கள்  எதிர்க்கிறார்கள் என்றும் இங்கே கொள்ளவேண்டும். உடனே, அம்மனுக்குச் சிறப்பான வகையில் வழிபாடு, பலியிடுதல் பரிகாரம் ஆகிய செயல்கள் மூலம் அரசன் நாட்டார் சமுதாயத்துடன் இணக்கம் ஏற்படுத்திக்கொள்கிறான். இது மண்ணின் தெய்வத்தைப் பெருஞ்சமயத்தோடு இணைக்கும் வேலை. இது போன்ற நிகழ்கதை பேரூர் பட்டீசுவரம் கோயில் எழுப்புகையில் நடந்தது என்று தலபுராணச்செய்தி கூறுகிறது. இன்றும் பேரூர்க் கோயில் திருவிழாவின்போது, பேரூர் வனபத்ரகாளியம்மன் கோயிலிலிருந்தே விழாச் சடங்குகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

                               கவைய காளியம்மன் கோயில்


      கவையகாளிய்ம்மன் கோயில், பழங்காலக் கொற்றவை வழிபாட்டுடன் தொடர்புடையது. நாட்டார் வழிபாட்டுத் தாய்த்தெய்வக் கோயிலின் தொடர்ச்சி  எனலாம். இதை உறுதிப்படுத்துவது போல, இங்கு கோயிலுக்குள் நுழைந்ததுமே ஆதி அம்மன்”  என்னும் பெயரில் ஒரு கல் வழிபடப்படுவதைக் காணலாம். பழங்கோயிலாக இருப்பினும் இங்கு கோயில் கட்டுமானப்பகுதியில் கல்வெட்டுகள் இல்லை. கவையகாளியம்மன் கோவில் பற்றிய செய்திகள் கோயில்பாளையம் காலகாலீசுவர்ர் கோயிலில் கல்வெட்டுகளிலும் காணப்படவில்லை. ஆனால், கோயிலின் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் வடக்குபார்த்த நிலையில் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தூண் ஒன்றில் கல்வெட்டு ஒன்று காணப்பட்டது. இது ஒரு மண்டபத்தின் நிலைக்கால் தூணாகும். இந்த நிலைக்கால் கல்வெட்டு, நண்பர் ஒருவர் தெரிவித்த தகவலின்படி இக்கட்டுரை ஆசிரியர் 2015-ஆம் ஆண்டு சென்று பார்த்த கல்வெட்டாகும். இந்த நிலைக்கால் தூண், கோயிலின் வெளிப்புறவளாகத்தில்  அதன் எல்லையோரமாக மண்ணில் கேட்பாரற்றுக்கிடந்தது. கல்வெட்டு இக்கட்டுரை ஆசிரியரால் படிக்கப்பட்டுச் செய்தி நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது. தற்போது, இக்கல்வெட்டு பாதுகாப்பாகக் கோயிலுக்குள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கோயிலார் செய்த நற்செயல்.

கவையகாளியம்மன் கோயில்நிலைக்கால் கல்வெட்டு
             இது, ஒரு நிலைவாசல் கல்லாகும். ஆறடிக்கு மேல் உயரம் கொண்டது. மொத்தம் இருபத்திரண்டு வரிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் இறுதி ஆறுவரிகளில் எழுத்துகள் தேய்ந்துபோய்விட்டன. கல்வெட்டின் தொடக்கத்தில் இருந்த சில வரிகள் காணப்படவில்லை. கல்லின் தொடக்கப்பகுதி உடைந்துபோனதே காரணம்.
கல்வெட்டின் காலம்:
       கல்வெட்டுகளின் தொடக்கவரிகளில் பெரும்பாலும் அரசனின் பெயர் அல்லது கலியுக ஆண்டு, சாலிவாகன ஆண்டு ஆகிய செய்திகள் காணப்படும். இச்செய்திகளின் அடிப்படையில் கல்வெட்டின் காலத்தைக் கணிக்கலாம்.  கல்வெட்டின் முதல் வரிகள் கிடைகாததால் வேறு வழியில் காலம் கணிக்கப்படுகிறது. அவிநாசிக் கோவில் கொடிக்கம்ப மண்டபத்திலுள்ள ஒரு கல்வெட்டு கி.பி. 1648-ஆம் ஆண்டைச்சேர்ந்தது. இதில், “நாலூர்பற்று நாட்டு கவையம்புத்தூரில் இருக்கும் வெள்ளாளர் பிள்ளந்தைக் குலத்தில் பெரிய காழியப்ப கவுண்டர்....  என்னும் தொடர் வருகிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் கவையகாளியம்மன்கோவில் கல்வெட்டிலும் “நாலூற்பற்று நாட்டுக் கவையம்புத்தூரில் வெள்ளாளர் பிள்ளந்தைகளில் இராக்குதப்பெருமாள்..  என்று வருகிறது. இவ்விரண்டு தொடர்களையும் ஒப்பிடும்போது, அவிநாசிக்கல்வெட்டில் வெள்ளாளர் பிள்ளந்தைக் குலத்தோடு சேர்ந்து “கவுண்டர் என்னும் சொல் வந்துள்ளதையும், கவையகாளியம்மன் கோவில் கல்வெட்டில் “கவுண்டர் என்னும் சொல் வராததையும் கருத்தில் கொண்டால், கவையகாளியம்மன் கோவில் கல்வெட்டு கி.பி. 1648-ஆம் ஆண்டுக்கு முந்தையது என்னும் முடிவுக்கு வரலாம். எனவே, கவையகாளியம்மன் கோவில் கல்வெட்டு, கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது அல்லது கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாகிறது. மேலும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டுவரையுள்ள கல்வெட்டுகளில் கவையன்புத்தூர் வடபரிசார நாட்டில் இருந்துள்ளதாயும், அதன்பின்னர் கி.பி. 15-16 நூற்றாண்டுகளில் நாலூர் பற்று நாடு என்னும் நாட்டுப்பிரிவில் இருந்துள்ளதாயும் அறிகிறோம்.

          கோயில் வளாகத்தில் கல்வெட்டு - கவனிப்பாரின்றி

   கல்வெட்டின் அணுக்கத்தோற்றம் - எழுத்துகள் மீது சுண்ணம்

                         மற்றுமொரு அணுக்கத்தோற்றம்

                      தற்போது கோயிலினுள் - பாதுகாப்பாக

 கல்வெட்டு தெரிவிக்கும் செய்தி:

         கவையம்புத்தூரில் இருந்த வெள்ளாளரில் பிள்ளந்தைக் குலத்தைச் சேர்ந்த இராக்குதப்பெருமாள் என்னும் பிறவிக்கு நல்லார் என்பவர் கவையகாளியம்மை கோயிலுக்கு முன்மண்டபம் கட்டித்தந்துள்ளார்.

சிறப்புச்செய்தி:
காளியம்மன் என்று தற்போது வழங்கும் வழக்கு, கல்வெட்டின்  காலத்தில் (கி.பி. 16-17 நூற்றாண்டுகளில்) காளியம்மை என்றும் அமைந்ததைக் காண்கிறோம்.

கல்வெட்டின் பாடம்

1 ஷம் வைகாசி
2 மீ 20 உ நாலூ
3 ற் பற்று நா
4 ட்டுக்கவை
5 யம்புத்தூரி
6 ல் வெள்ளா
7 ழர் பிள்ளந்
8 தைகளில் இ
9 ராக்குதப்பெ
10 ருமாள் பிற
11 விக்கு நல்லா
12 ர் கவையகா
13 (ளி)யம்மை
14 கோயில் முன்
15 மண்டபம்
16 கட்...............

நவகண்டச் சிற்பங்கள்
      மேற்குறித்த கல்வெட்டுக்கருகில், தென்மேற்குப்பகுதியில் கிழக்கு நோக்கியவாறு ஒரு மேடையில் மூன்று நவகண்டச் சிற்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கொற்றவை வழிபாட்டு மரபில் நவகண்டம் என்னும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. கொற்ற்வைத் தெய்வத்துக்குத் தங்கள் தலையை அரிந்து கொடையாகக் கொடுக்கும் மரபு. மூன்று சிற்பங்களிலும் வீரர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரர்களின் தோற்றத்தில் காணப்படும் அணிகலன்கள், அவர்கள் மேம்பட்ட நிலையில் இருந்த வீரர்கள் என்பதைக் காட்டுகின்றன. வீரர்கள் தம் வலக்கையால் வாளைக் கழுத்தின் பின்புறம் வைத்துள்ளனர். முதல் இரு வீரர்கள், ஆயத்த நிலையில் இருப்பது போல் காணப்படுகையில், மூன்றாவது வீரனின் தலை சற்றே சாய்ந்து தோற்றமளிப்பது, அரியப்படுகின்ற நிலையில் தலை சரிவது போல் உள்ளதாக எண்ணவைக்கிறது.

                           நவகண்டச் சிற்பங்கள்

சமணத்தொடர்பு
       காலகாலீசுவரர் கோயிலுக்கு அருகிலேயே ஒரு பிள்ளையார் கோயில் காணப்படுகிறது. அந்த மேடையில், தியானத்தில் அமர்ந்த சமணத் துறவி  ஒருவரின் சிற்பம் உள்ளது. கங்கப்பெருவழியில் வணிகரின் போக்குவரத்து இருந்துள்ளது. வணிகரில் பலர் சமணத்தைச் சார்ந்தவராய் இருந்தனர். அவ்வணிகர்கள் நிறுவிய சமணச் சிற்பமாக இருக்கக் கூடும். இப்பெருவழியில் இது போன்ற பல சிற்பங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. எஞ்சியிருப்பது இது எனக் கருதலாம். இதே பெருவழியில் யானை வணிகர்கள் நிறுவிய அத்திகோசத்தார் கல்வெட்டு, சமணம் சார்ந்த வணிகரின் தடயங்களுக்குச் சான்றாய் அமைகிறது.

                                    சமணத்துறவியின் சிற்பம்


அத்திகோசத்தார் கல்வெட்டு - நல்லூர்
      கவையன்புத்தூர்ப் பகுதியில் மேற்குறித்த வரலாற்றுத் தடயங்களைத் தொடர்ந்து, அடுத்து நாங்கள் சென்றது புன்செய்ப்புளியம்பட்டிக்கருகில் இருக்கும் விண்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நல்லூர்.  பள்ளி என்பது சமணம் சார்ந்த சொல்லாக இருப்பினும், சமணப்பள்ளி எதுவும் இங்கிருந்தது என்பதற்கான தடயங்கள் இல்லை. ஆனால், நல்லூரில் அத்திகோசத்தார் என்பவர்களின் கல்வெட்டு ஒன்று உள்ளது. பெருவழியின் மேற்கு ஓரத்தில் ஒரு மரத்தடி மேடையில் பலகைக்கல் பதித்து வைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுள்ள இக்கல்லை ஊர்மக்கள் வழிபட்டுவருகின்றனர். பெரும்பாலான கல்வெட்டுகள், அவை வழிபடும் கற்களாக இருப்பதனாலேயே பாதுகாக்கப் படுகின்றன என்பது ஆறுதலான செய்தி. அதன் கீழ்ப்பகுதி புதைந்த நிலையில் கல்லின் முன்புறம் புடைப்புச் சிற்பமாகச் சில ஆயுதங்களின் வடிவங்கள் காணப்படுகின்றன. தடித்த கொடுவாள், அங்குசம், நீண்ட தண்டு, சுருள்வாள், வளைதடி, சூலம் போன்றதொரு ஆயுதம் ஆகியவை தென்படுகின்றன. கல்லின் பின்புறம், பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளில் பதினொரு வரிகள் காணப்படுகின்றன. கல்வெட்டின் நடுப்பகுதி சிதைந்துள்ளதால் வரிகள் முழுமையான பொருள் தரும் வகையில் அமையவில்லை. மேடையில் புதைந்துபோன பகுதியில் மீதமுள்ள நான்கு வரிகளையும் சேர்த்துக் கல்வெட்டின் பதினைந்து வரிகள் படிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டைக் கண்டறிந்தவர் கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள். கொங்கு நாடும் சமணமும்”  என்னும் அவருடைய நூலில் அவர் குறிப்பிடுவதாவது:
              மரத்தடி மேடையில் அத்திகோசத்தார் கல்வெட்டு


              அத்திகோசத்தார் கல்வெட்டு - முன்புறத்தோற்றம்   

                அத்திகோசத்தார் கல்வெட்டு - பின்புறத்தோற்றம் 
                           வட்டெழுத்துகளுடன்       


      இது கி.பி. 10-ஆம் நூற்றாண்ட்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு. இக்கல்வெட்டில், கோலார் நாடு, புந்நாடு ஆகிய நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. சேர மன்னன் இரவிகோதை காலத்தில் இவ்வூர்ச் சமணப்பள்ளிக்கு அளிக்கப்பட்ட கொடையைக் கல்வெட்டு குறிக்கிறது. இக்கல்வெட்டில் அத்திகோசம் என்ற தொடர் காணப்படுகிறது. அத்திகோசத்தார் என்பவர் பண்டைய தமிழகத்தில் இருந்த வணிகக் குழுவினரைக் காக்கும் யானைப்படையினர் ஆவர். கல்வெட்டின் பின்புறம் யானைப்படை, குதிரைப்படை உட்பட வணிகக் குழுவின் குறிகள் பல பொறிக்கப்பட்டுள்ளன. நல்லூரிலோ அல்லது அருகிலுள்ள விண்ணப்பள்ளியிலோ கி.பி. 10-ஆம் நூஊற்றாண்டில் சமணப்பள்ளி ஒன்று இருந்திருக்கவேண்டும். சேர மன்னர் கோ இரவிகோதை காலத்தில் வணிகக் குழுவினரும்  அவர்களின் காவல் படையினரான அத்திகோசத்தாரும் அதற்குக் கொடை வழங்கியிருக்கலாம் என்பது கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.
      அத்திகோசத்தார், யானை வணிகம் செய்பவர்கள் என்னும் ஒரு கருத்தும் உண்டு. எவ்வாறெனினும், இந்தப்பகுதியில் வணிகர் இருந்துள்ளமைக்கு இக்கல்வெட்டு சான்று அத்திகோசத்தாரின் கல்வெட்டு ஒன்று ஆனைமலையிலும் உள்ளது. இவற்றைதவிர இப்பகுதியில் அத்திகோசத்தார் குறிபுகள் எவையுமில்லை.

நல்லூர் பெயர்க்காரணம்
      ஏற்கெனவே இருந்த ஓர் ஊர், அழிந்துபோகும் நிலையில் (நோய், பஞ்சம் காரணமாய் இருக்கலாம்), அரசன் கொடைகள் வழங்கி ஊரைக் காப்பாற்றுகிறான். புதிய ஊர் உருவாகிறது. மக்கள் ஊரைவிட்டு இடம்பெயராவண்ணம் நல்லூராக ஆக்கம் பெறுகிறது. இவ்வாறு நல்லூர் உருவாகும்போது, அரசனுடைய அல்லது அரசியுடைய பெயரை இணைத்துப் பெயர அமையும். எடுத்துக்காட்டாக, கோவை, கோவன் புத்தூர் எனவும், வீரகேரள நல்லூர் எனவும் இரு பெயர்களைக் கொண்டிருந்தது. வீரகேரளன் அரசன். அவிநாசிக்கருகிலுள்ள சேவூர், செம்பியன் கிழானடி நல்லூர் எனப் பெயர் கொண்டிருந்தது. செம்பியன் கிழானடி என்பது அரசியின் பெயர். இங்கே நாம் குறிப்பிடும் நல்லூருக்கும் ஒரு அடைமொழி இருந்திருக்கவேண்டும்.

கல்வெட்டின் பாடம் (புலவர் செ.இராசு அவர்கள் படித்தவாறு)

1 ஸ்வஸ்திஸ்ரீ .... இரவிகோதைக்கி
2 விவ ... வு ஆன
3 அன .... தெவகி
4 ழமை பர ... ன்னதில
5 பநாளிற் ... ரதகோ
6 லார் நாட்டு ... சார்திப்
7 படர்ந்து ... சமணப
8 ள்ளிக்கு ... உள்பட்டா
9 லிதெவ்வெ ... மைலாஞ்சி
10 ளிழன் ... டவர ... புந்நாட
11 த நல்லோள உ கோலா ரவி
12 கோதையாலேய் பெய்யப்பட்
13 ட வலான் அத்திகோசமும்
14 ... பேதைப ... கோழந் ... த
15 ... தமை

கல்வெட்டில் வரும் புந்நாடு பற்றி மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் கொங்குநாடும் துளு நாடும் என்னும் தம் நூலில் குறிப்பிடுகிறார். இது வடகொங்கு நாட்டில் இருந்தது. இக்காலத்தில் இது மைசூர் மாவட்டத்தில் ஹெக்கட தேவன வட்டத்தில் உள்ளது. கபினி ஆற்றைச் சூழ்ந்த நாடு. புந்நாட்டில் அக்காலத்தில் Beryl என்னும் நீலக்கல் கிடைத்தது. யவன வணிகர் இந்த நீலக்கல்லை வாங்கிச் சென்றனர். தாலமி (Ptolemy)  என்னும் யவனர் தம் நூலில், இக்கல் புந்நாட்டில் கிடைத்தது என்று எழுதியுள்ளார். புந்நாட்டை, கிரேக்க மொழித் திரிபாக “பௌன்னாட”  (Pounnata) என்று குறிப்பிடுகிறார்.

கொடிவேரி
      பயணத்தின் இறுதியாக, நாங்கள் சென்றது கொடிவேரி அணை. இது சத்தியமங்கலத்துக்கு அருகில் உள்ள ப்வானி ஆற்றின் ஓர் அணை. இந்த அணையை, மைசூர்ப்பகுதியில் உம்மத்தூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த உம்மத்தூர் அரசர்களில் ஒருவரான வீரநஞ்சராயர் காலத்தில் கட்டப்பெற்றது. கொடிவேரியும் வடபரிசார நாட்டில் சேர்ந்திருந்தது. கொடிவேரிக்கோயிலில் கொங்குச் சோழர் வீர ராசேந்திரன், குலோத்துங்கன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில், இந்த ஊர், கொடுவேலி எனக் குறிப்பிடப்படுகிறது. கோயில் இறைவன் பெயர் முன்னையாண்டவர். கொடுவேலி என்பது ஒரு தாவரத்தின் பெயர். முன்னை என்பது ஒரு மரம். எனவே, இறைவன் பெயர் முன்னையாண்டவர் அல்லது முன்னைக்கீசுவரர் என்பதாகும். குலோத்துங்கன் காலத்தில், இங்கு வேட்டுவக் க்வுண்டர்கள் மிகுதியும் இருந்தனர். கோயிலுக்கு இவர்கள் கொடை கொடுத்துள்ளனர். பழங்குடிகளான வேட்டுவர்களை அவர்களின் தொழிலிலிருந்து விடுபடச் செய்து வேளாண்மையில் நுழைக்கிறார்கள். கோயிலுக்கு ஒரு பிராமணப்பெண் கொடை கொடுத்துள்ளார். அண்டநாட்டுப் பெண்ணான அவள், ஸ்ரீயக்கி புதுச் சலாகை என்னும் காசு கொடையாக அளிக்கப்பட்டது. கல்வெட்டு பிராமணப்பெண்ணை மனைக்கிழத்தி என்று குறிப்பிடுகிறது. அண்ட நாடு என்பது பழநிப்பகுதியாகும். ஸ்ரீயக்கி என்பது சமணப் பெண்தெய்வத்தைக் குறிப்பது. இப்பகுதியில் நிலவியிருந்த சமணத்தின் தாக்கமே ஸ்ரீயக்கி பெயரில் காசு வெளியிடக் காரணம். 

                                     கொடிவேரி அணை


கங்கநாட்டிலிருந்து சமணம்
       கங்கநாட்டில் தோன்றிய சமணம் அங்கிருந்து இந்தக் கங்கவழியினூடே வந்தது எனலாம். இப்பகுதியின் தொடர்ச்சியாக உள்ள விசயமங்கலம் சமணத்தின் மையமாக விளங்கியது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கங்க அரசன் சீய கங்கன் என்பான் கொங்குநாட்டை ஆட்சிசெய்தான். அவன் சமணத்தைத் தழுவியவன். அவனது ஆட்சிக்காலத்தில்,  அவன் வேண்டிக்கொள்ள பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார். பவணந்தி முனிவர், விசயமங்கலத்தருகில் உள்ள சனகாபுரத்தவர். அது தற்போது சீனாபுரம் என்று திரிந்து வழங்குகிறது. சனகை என்றும் அழைக்கப்பட்டது. கார்மேகக் கவிஞர் பாடிய கொங்கு மண்டலச் சதகத்தில் இக்குறிப்புகள் உள்ளன. சீயகங்கன் கொங்குநாட்டை ஆண்ட செய்தி மேல்பாடிக்கல்வெட்டில் காணப்படுகிறது. கங்கர் ஆட்சி, சமணத்தின் வீச்சு ஆகியவை காரணமாக இப்பகுதியில், கங்கநாட்டிலிருந்து மக்களின் பெயர்ச்சி நடைபெற்றது என்பதை அறியலாம். இப்பெயர்ச்சி கி.பி. 14,15 நூற்றாண்டுகளில் மிகுதியும் நிகழ்ந்திருக்கவேண்டும். இதை, ஒரே ஊரின் பெயர் இருவகையாக வழங்குவதனின்றும் அறியலாம். பவானி ஆற்றின் கரையில் கொடிவேரி, அக்கரைக் கொடிவேரி, இக்கரைக் கொடிவேரி எனவும், நெகமம் என்னும் ஊர் அக்கரை நெகமம், இக்கரை நெகமம் எனவும் வழங்குகிறது. கங்கநாட்டிலிருந்து பெயர்ந்து வந்தவர் பார்வையில் இக்கரை என்பது அவர் வந்த பாதையில் அமைவது; அக்கரை என்பது ஆற்றைக் கடந்த கொங்குப்பகுதி நோக்கிய பாதையில் அமைவது.
ஒரு முரண்
       கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் காலத்தில் கன்னட நாட்டைச் சேர்ந்த வீரநஞ்சராயர் தமிழகத்துக் கொடிவேரியில் அணை கட்டித் தந்துள்ளார். ஆனால், காலமாற்றத்தால், இன்று கன்னடத்து ஆட்சியாளர் நமக்குக் காவிரி நீர் கிடைக்கவொட்டாமல் அணை போடுகின்றனர். இது இலக்கிய முரண் அணியல்ல; அரசியல் முரண்.

குறிப்பு:
1.  கொடிவேரிக் கோயில் கல்வெட்டுகளின் பாடங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே,     கல்வெட்டுகள் இங்கு சுட்டப்படவில்லை.
2.  கோயிலின் பெயர்ப்பலகையில் ”கோவில்பாளையம் (கௌசிகாபுரி)”  எனக்   
   குறிப்பிட்டிருக்கிறார்கள்.  ஆனால், கல்வெட்டுகளில் ”கௌசிகாபுரி இல்லை”.
   வலிந்த சமற்கிருதத் திணிப்பு. இதற்கு மாறாகக் “கவையன்புத்தூர்” என
   எழுதலாமே.

நன்றி :  எங்களை இந்தப்பயணத்தில் அழைத்துச் சென்று, பார்வையிட்ட இடங்களின் செய்தி விளக்கம் அளித்த முனைவர் இரா.ஜெகதீசன் அவர்களுக்கு.
துணை நின்ற நூல்கள் : 1 கொங்கு நாடும் சமணமும் புலவர் செ.இராசு.
                        2 கொங்கு நாடும் துளு நாடும் மயிலை சீனி.
                                                       வேங்கடசாமிது.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.