பாண்டியர் ஆட்சியில்
கொங்குநாடு
முன்னுரை
கோவை வாணவராயர் அறக்கட்டளை
சார்பாக மாதந்தோறும் நடைபெறும் சொற்பொழிவுகளின் வரிசையில் நவம்பர்,2017
மாதத்துக்கான சொற்பொழிவைத் தொல்லியல் அறிஞர் திரு சொ.சாந்தலிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். அது பற்றிய ஒரு பதிவு இங்கே.
பாண்டியர் வரலாறு
பாண்டியர் வரலாற்றைச்
சரியாகக் கணிக்க இயலாதவாறு குழப்பமே காணப்படுகிறது. பாண்டியர் பற்றிய வரலாற்றை
ஓரளவு 10-ஆம் நூற்றாண்டு வரையிலும் நிரல் படுத்தலாம். ஆனால், பிற்காலப் பாண்டியர்
வரலாற்றைத் தெளிவுற நிரல் படுத்துவது கடினம். காரணம், பாண்டிய அரசர்கள்
நாற்பத்தைந்து பேர். அவர்களின் பெயர்களோ ஆறு பெயர்களுக்குள் அடக்கம். வல்லப
பாண்டியன், விக்கிரம பாண்டியன், வீர பாண்டியன், பராக்கிரம பாண்டியன், குலசேகர
பாண்டியன், சுந்தர பாண்டியன் என்னும் இந்தப் பொதுப்பெயர்களிலேயே மேற்சொன்ன
நாற்பத்தைந்து பாண்டியர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த அரசர்களுக்குள்
இருக்கும் உறவு, ஆட்சியில் இருப்பவர் யார் என்பன பற்றித் தெரிந்துகொள்வது கடினம்.
கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகளிலிருந்து -குறிப்பாகக் கோள் நிலைக் குறிப்புகளின்
துணையோடு - கல்வெட்டு அறிஞரும் பொறியாளருமான திரு. குடந்தை சேதுராமன் அவர்கள்
பாண்டியரை ஓரளவு வரிசைப்படுத்தியுள்ளார்.
பாண்டியநாட்டுப் பழமை
பாண்டிய நாடே பழம்பதி என்னும்
தொடர் பாண்டிய நாட்டுப்பழமையைச் சொல்லும். வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே
பாண்டியர் வாழ்ந்திருப்பினும், அவர்களைப் பற்றிய குறிப்புகள் அசோகனின் பாறைக்கல்வெட்டிலிருந்துதான்
தொடங்குகின்றன. கி.மு. 300க்கு முன்னரே மதுரையில் பாண்டியர் ஆட்சி இருந்துள்ளது.
கி.மு. 300 தொடங்கி, கி.பி. 1700 வரை தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்
ஆட்சியில் இருந்த மரபு பாண்டியர் மரபு.
கொங்குநாட்டின் வணிக வளம்
கொங்குநாட்டின் வணிக வளமே,
பெரிய அரசர்கள் கொங்கு நாட்டைக் கைப்பற்றக் காரணம் ஆகும். உரோமானிய வணிகர்கள்
கொங்கு வழியே தமிழகத்தில் வணிகம் மேற்கொண்ட வரலாறு அனைவரும் அறிந்ததொன்று. கொங்கு
நாட்டில்,
கத்தாங்கண்ணி,
கரூர், கலயமுத்தூர் ஆகிய இடங்களில் கொல்லிப்புறை, மாக்கோதை, கொல்லிரும்பொறை ஆகிய
பெயர்களமைந்த உரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே
தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்பதைக் கொடுமணலில் கிடைக்கப்பெற்ற பானை
ஓட்டு எழுத்துகளிலிருந்து அறிகிறோம்.
கொங்கு நாடும் பாண்டியரும்
நாடு பிடிக்கும் பேராசை எல்லா
அரச மரபினர்க்கும் இருந்த ஒரு பொது இயல்பு. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய
தனி நாட்டரசர்கள் போல் கொங்குநாட்டுக்குரிய தனி அரசர்கள் இருந்ததில்லை. மூவேந்தர்களுமே, பல்வேறு
காலகட்டங்களில் கொங்குநாட்டை அடிப்படுத்த முயன்றார்கள். பின்னாளில், போசளர்களும்
முயன்றுள்ளனர். கொங்கு நாட்டை ஆட்சி செய்த கொங்குப்பாண்டியர் பற்றிய குறிப்பு பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் முதன்முதலாகக்
காணப்படுகிறது. பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் பாண்டியர் தொண்டைமான் பற்றிய
குறிப்புள்ளது. பொற்பனைக்கோட்டை என்னும் ஊரின் நடுகல் கல்வெட்டும், பிராமிக்கல்வெட்டும்
கொங்கர் பற்றிக் கூறுகின்றன. மேற்படி நடுகல் கல்வெட்டுக் குறிப்பே தமிழகத்தில்
பாண்டியர் பற்றிய முதற்குறிப்பு எனலாம்.
சங்ககாலப் பாண்டியர்கள்
கொங்குப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது பற்றியோ அல்லது கொங்கு நாட்டுடன்
சங்ககாலப் பாண்டியர் கொண்டிருந்த தொடர்பு பற்றியோ சான்றுகள் எவையுமில்லை. 7-ஆம்
நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையிலான பக்தி மறுமலர்ச்சிக் கால
இலக்கியங்களில் பாண்டியர் குறிப்புகள் உள்ளன. கூன்பாண்டியனின் மகன் கோச்சடையன்.
அவனது ஆட்சிக்காலத்தில் (கி.பி. 700-738) கொங்குப்பகுதியைக் கைப்பற்றியிருக்கவேண்டும்.
வேள்விக்குடிச் செப்பேட்டில் இவன் “கொங்கர் கோமான் கோச்சடையன்” என்று குறிப்பிடப்பெறுகிறான். இவனுடைய மகன் இராசசிம்மன்
மழகொங்கத்தை அடிப்படுத்தினான் என்னும் குறிப்புள்ளது. மழகொங்கம் என்பது
கொல்லிப்பகுதியின் கொல்லி மழவர் தொடர்பானது. கொல்லிப்பகுதி சேர மரபின் அதியமான்
ஆண்ட பகுதி. பல்லவர்களும், சேரர்களும் அதியரோடு சேர்ந்து பாண்டியனை (இராசசிம்மனை)
எதிர்த்துப் போரிட்டனர். அவர்களை வென்று பாண்டியன் மழகொங்கை ஆட்சி செய்தான்.
மழகொங்கில் பாண்டியர் ஆட்சி கி.பி. 730 முதல் கி.பி. 768 வரை நிலவியது.
அதன்பின்னர் தொடர்ந்து பாண்டியர் ஆட்சி நடைபெற்றதற்குச் சான்றுகள் இல்லை.
ஜடில பராந்தகன் என்னும்
பராந்தக நெடுஞ்சடையன் கி.பி. 768 முதல் கி.பி. 815 வரை ஆட்சி செய்த பாண்டிய அரசன்.
இவனுக்குத் தளபதியாகவும் அமைச்சனாகவும் திகழ்ந்தவன் மாறன் காரி என்பவன். இந்த
மாறன் காரி, கங்கரை வென்று கங்க இளவரசி பூசுந்தரியைப் பராந்தக நெடுஞ்சடையனுக்கு
மணமுடித்தான். பராந்தக நெடுஞ்சடையன், காஞ்சிவாய்ப் பேரூரில் குன்றமன்னதோர் கோயிலை
(விண்ணகரத்தை) எழுப்பினான் என்பது வரலாற்றுக் குறிப்பு. கி.பி. 1190 வரை பாண்டிய
நாடு சோழரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இக் காலகட்டத்தில், பாண்டியருக்கும்
கொங்குக்கும் தொடர்பில்லை. 1190 முதல் 1216 வரை முதலாம் சடையவர்மனின் ஆட்சி
பாண்டியநாட்டில் அமைந்தது. 1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த முதலாம் மாறவர்ம
சுந்தர பாண்டியன் கொங்குப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். இவன் “அடல் மன்னன்” என்று குறிப்பிடப்பெறுகிறான். இவன், கொங்குப்பகுதியில்
தென்கொங்கு, வடகொங்கு ஆகிய இரு பகுதிகளின் அரசர்கள் தமக்குள்
போரிட்டுக்கொண்டிருந்தபோது இருவரையும் பாண்டிநாட்டுக்கழைத்துப் பேசி அவர்களுக்குள்
இணக்கத்தை ஏற்படுத்தி இருவரையும் தனித்தனியே ஆட்சி செய்ய வைத்தான்.
முதலாம் சடையவர்மன்
வீரபாண்டியன் (கி.பி. 1253-1283) என்பவன், தெலுங்குச் சோழரையும், கொங்கையும்
ஈழத்தையும் வென்றதாக்க் குறிப்புள்ளது. அவனைத் தொடர்ந்து இரண்டாம் சடையவர்மன்
வீரபாண்டியன் கொங்கில் ஆட்சி செய்தான். இவன் இராசகேசரி என்னும் பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டவன்.
தொடர்ந்து கி.பி. 1283 முதல் கி.பி. 1296 வரை விக்கிரம பாண்டியன்
கொங்குப்பகுதியில் ஆட்சி செய்தான். இராசிபுரத்துக் கல்வெட்டொன்று இந்த விக்கிரம
பாண்டியனைக் குறிப்பிடுகிறது.
கொங்கில் பாண்டியர் பணிகள்
கல்வெட்டுகளில் பல்வேறு
செய்திகளில் பாண்டிய நாட்டவர் கொங்குப்பகுதியில் செய்த பணிகள் பற்றிக் கூறுகின்றன.
ஆனைமலை ஆனைக்கீசுவரர் கோயிலில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு, பாண்டிமண்டலத்தின்
இருஞ்சோணாடு (இருஞ் சோழ நாடு) என்னும் நாட்டுப்பிரிவைச் சேர்ந்த மண்ணையார் கோட்டையில்
இருக்கும் சேனாபதி சுந்தரப் பெருமாள் வாழ்வித்தாரான பல்லவராயர் என்பவர்
ஆனைக்கீசுவரர் கோயிலில் பெற்ற நாச்சியார் என்னும் அம்மன் கோயிலை அமைத்தார் என்று
கூறுகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் இருஞ்சோழ நாடு என்னும்
பாண்டியப்பகுதி தற்போதுள்ள சாத்தூர்ப் பகுதியாகும். அடுத்து, அவிநாசிக் கோயிலில்
உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு, பாண்டிமண்டலத்துத் திருக்கானப்பேற்றைச் சேர்ந்த
அதளையூர் நாடாள்வான் என்பவன் சந்தியா தீபம் திருவிளக்கொன்று எரிப்பிக்கக்
காசுக்கொடை அளித்துள்ளான் என்று கூறுகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும்
திருக்கானப்பேறு என்னும் பாண்டியப்பகுதி தற்போதுள்ள காளையார் கோயில் பகுதியாகும்.
பேரூர்க் கோயிலில் உள்ள வீரபாண்டியன் கல்வெட்டு, பாண்டிமண்டலத்து இரணிய முட்ட
நாட்டுச் சிறுபாலை என்னும் ஊரைச் சேர்ந்த பெரியான் சொக்கன் என்பவன் சந்திரசேகரர்
செப்புத்திருமேனியை எழுந்தருளுவித்து, இந்தத் திருமேனிக்கு அமுதுபடி செய்ய,
ஸ்ரீயக்கி பழஞ்சலாகை ஆனை அச்சு என்னும் காசு எட்டினைக் கொடையாக அளித்துள்ளான்
என்று கூறுகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் இரணியமுட்டநாடு என்னும்
பாண்டியப்பகுதி தற்போதுள்ள அழகர்கோயில் பகுதியாகும். இடிகரை வில்லீசுவரர் கோயிலில்
உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு, பாண்டிமண்டலத்து மிழலைக்கூற்றத்தில் ஓர் ஊரைச்
சேர்ந்த பெருமாள் என்பவர் அமுதுபடிக்காகப் பதினைந்து காசுகள் கொடையளித்துள்ளார்
என்று கூறுகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் மிழலைக்கூற்றம் என்னும்
பாண்டியப்பகுதி தற்போதுள்ள அறந்தாங்கிப் பகுதியாகும்.
பாண்டி நாட்டில் கல்வி
மேற்படிக் கல்வெட்டுச்
செய்திகளில் குறிப்பிடப்பெறுகின்ற கொடையாளர்கள் அனைவரும் பாண்டிய நாட்டில் பெரிய
பதவிகளில் அதிகாரிகளாகப் பணியில் இருந்தவர்களாக இருக்கவேண்டும். பாண்டிய நாட்டில்
குறிப்பிட்ட சில ஊர்களில் கல்வி மேம்பட்ட நிலையில் அமைந்திருக்கவேண்டும் என்பது
புலப்படுகிறது. இந்த ஊர்களில் கல்வி கற்று அரசியல் நிருவாகப் பயிற்சி பெற்றவர்கள்
பாண்டிய அரசில் அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்று அறியப்படுகிறது. பாண்டி நாட்டுக்
கல்வெட்டுகளில் காணப்படும் முத்தூற்றுக் கூற்றம், மிழலைக் கூற்றம், கரவந்தபுரம்,
திருத்தங்கல், அண்டநாடு ஆகிய பகுதிகள் இவ்வகை ஊர்களே. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:
ஆய் அரசன் கருநந்தடக்கன் ஆட்சியில், பார்த்திவசேகரபுரம் என்னும் ஊரில் காந்தளூர்ச்
சாலையை ஒத்த ஒரு கல்விச்சாலை இருந்தது என்று செப்பேட்டுச் செய்தி ஒன்று கூறுவது
இங்கு கருதத்தக்கது. இவ்வகைச் சாலைகளில் பயின்றவர்கள் மூவேந்த வேளான் போன்ற பெரும்
பட்டப்பெயர்களோடு அரசுப்பதவியில் இருந்தார்கள் என்பது கல்வெட்டுகள் சொல்லும்
செய்தியாகும்).
இடைக்காலச் சமூக நிலை
இடைக்காலத்தில் சில சமுதாய
மக்களுக்குச் சில உரிமைக் குறைபாடுகள் நிலவின. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்
கலத்தில் தொடங்கிப் பிராமணர்க்கு இருந்த உரிமைகள் மற்ற சமுதாயத்தினர்க்கு
இருந்ததில்லை. உரிமைக் குறையால் ஏற்பட்ட உயர்வு-தாழ்வு வேறுபாடுகள் காரணமாகக்
கி.பி. 1300-க்குப் பிறகு பல்வேறு சமூகக் குழுக்கள் எழுந்தன. சித்திரமேழியார்,
முத்தரையர், கம்மாளர் ஆகிய குழுவினர் தனித்து இயங்கித் தம் உரிமைக் குறைகளைக்
களையும் முயற்சியில் ஈடுபட்டனர். மாயூரம் அருகில் ஆலங்குடியில் கம்மாளர்கள் மாநாடு
நடத்தியுள்ளனர். கொங்கு நாட்டு உடுமலைப்பகுதியில் உள்ள கடத்தூர்க் கோயில்
கல்வெட்டில் பாண்டியர் ஆட்சியில் கம்மாளர்களின் முறையீட்டில், அரசன் அவர்களுக்குச்
சில உரிமைகளை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் குடும்பத்தில் நிகழும்
நன்மை தீமைகளின்போது இரட்டைச் சங்கு ஊதுதல், பேரிகை உள்ளிட்ட இசைக் கருவிகளைக்
கொட்டுதல், வீடுகளுக்குச் சாந்திட்டுக்கொள்ளுதல், காலில் செருப்பணிதல் ஆகியவை அந்த
உரிமைகள். (ஒரு குறிப்பிட்ட அளவு பொன்னை அரசனின் சரக்கில் – கருவூலத்தில் -
செலுத்திய பின்னரே அரசன் இந்த உரிமைகளை வழங்கினான் என்பர் தொல்லியல் அறிஞர் திரு.
பூங்குன்றன் அவர்கள்). மக்களிடையே அடிமை முறை இருந்தது. கோயிலுக்கு அடிமையராக
விளங்கிய தேவரடியார்கள் ஒரு குறிப்பிட்ட குலத்தவர் மட்டுமே அல்லர்.
கம்மாளர்களிலிருந்தும் தேவரடியார் வந்திருக்கிறார்கள்.
கொங்கு நாட்டில் பாண்டியர்
தடயங்கள்
கொங்கு நாட்டில் பாண்டியர்
காலக் கோயில்கள் கூத்தம்பூண்டி, கொளிஞ்சிவாடி, விஜயமங்கலம் (நாகேசுவரர் கோயில்)
சேவூர் (சுந்தர பாண்டிய விண்ணகரம்), பேரூர் (பெருமாள் கோயில்) ஆகியன. பாண்டியர்
கோயில் கலைப்பாணியில் குறிப்பிடத்தக்க கூறாக விளங்குவது அக்கோயில்களில் உள்ள தேவ
கோட்டங்கள். அவற்றில் கோட்டச் சிற்பங்கள் இரா. பாண்டியர் கலைப்பாணிச் சிற்பங்களில்
ஒற்றைக் கழுத்தணி மட்டுமே காணப்படும். கொங்கு நாட்டில் உள்ள கொடுமுடி, “பாண்டிக்
கொடுமுடி” என்றே வழங்குகிறது. இங்குள்ள கோயிலில், திரிபுராந்தகர்
செப்புத்திருமேனியும், சதுர தாண்டவ நடராசர் செப்புத்திருமேனியும் பாண்டியர் காலச்
செப்புத்திருமேனிகளாகும். காலிங்கராயன் கால்வாய் பாண்டியரின் தடயங்களில் ஒன்று.
அண்மையில், கோவை வேடபட்டிக் குளத்தில், நின்ற நிலை இரட்டை மீன்களும் செண்டும் உள்ள
பாண்டியர் சின்னம் கொண்ட மதகுக் கற்றூண்கள் கண்டறியப்பட்டன.
கொளிஞ்சிவாடிக்கோயில் - பாண்டியர் காலம்
கூத்தம்பூண்டிக் கோயில் - பாண்டியர் காலம்
சதுர தாண்டவ நடராசர் - செப்புத்திருமேனி - கொடுமுடி
சதுர தாண்டவ நடராசர் - அண்மைத் தோற்றம்
திரிபுராந்தகர் - செப்புத்திருமேனி - கொடுமுடி
கூத்தம்பூண்டிக் கோயில் - பாண்டியர் காலம்
சதுர தாண்டவ நடராசர் - செப்புத்திருமேனி - கொடுமுடி
சதுர தாண்டவ நடராசர் - அண்மைத் தோற்றம்
திரிபுராந்தகர் - செப்புத்திருமேனி - கொடுமுடி
பாண்டியர் ஆட்சியின் இறுதி
தமிழகத்தில் நெடியதொரு காலம் தம் மரபைக் காட்டிய ஓர்
அரசு எனில் அது பாண்டிய அரசமரபேயாகும். 13-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி அல்லது
இறுதிப்பகுதியே பாண்டியர் ஆட்சியின் முடிவு.
---------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :
9444939156.
வலைப்பூ : kongukalvettuaayvu.blogspot.in
இன்றுதான் தங்களின் தளத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான பதிவுகள். என் வலைப்பூவில் உங்களது தளத்தினை தற்போது இணைத்துள்ளேன். தொடர்ந்து பதிவுகள் வழியாகச் சந்திப்போம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு