மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 25 அக்டோபர், 2016

கூத்தம்பூண்டி 
 கொங்குப்பாண்டியர் கோயிலும், அதியன் குடைவரைக்கோயிலும்


முன்னுரை.
    கூத்தம்பூண்டி என்னும் ஒரு சிற்றூர். திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ளது. வரலாற்றுப் பின்னணியுள்ள இவ்வூர் பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.. கோவையில் இருக்கும் என்போன்றவர்க்கு மட்டும் எப்படித்தெரியும்?.
கோவை வாணவராயர் அறக்கட்டளை சார்பாகத் திங்களொருமுறை வரலாற்று உலா செல்லும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. சென்ற ஞாயிறன்று (23-10-2016) நிகழ்ந்த உலாவின்போது, கூத்தம்பூண்டியின் வரலாற்றுப் பின்னணியை நன்கறிந்த முனைவர் திரு. ஜெகதீசன் அவர்கள் (இவரே சுற்றுலாப் பொறுப்பாளர்), எங்களைக் கூத்தம்பூண்டிக்கு அழைத்துச்சென்றபோதுதான் கூத்தம்பூண்டி பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

மார்க்கண்டீசுவரர் கோயில்

கூத்தம்பூண்டியில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மார்க்கண்டீசுவரர் கோயில் உள்ளது. ஊருக்கு ஒதுங்கிய நிலையில் தனித்து நின்றது கோயில். சற்றுத் தொலைவிலிருந்து காணும்போதே அதன் பழமையும் அழகும் கண்களில் நின்றன. எந்த வண்ணப்பூச்சும் இல்லாத பழமைப் போர்வை. கருவறை, அதனை அடுத்து அர்த்தமண்டபம். தரையோடு தரையாக “ஜகதிஎன்னும் அதிட்டானப்பகுதி. கற்றளிப் பகுதியின் இறுதியில் உள்ள பிரஸ்தரம்என்னும் கூரையிலும், விமானத்திலும் செங்கற்கள் வெளியே தெரியும்படியான சிதைவுகள் புலப்பட்டன. விமானத்தில் சுதைச் சிற்பங்கள் காணப்படவில்லை. விமானத்தின் கலசப்பகுதியிலும் சுதைக் கட்டுமானமே எஞ்சி நின்றது. உலோகக் கலசம் இல்லை. விமானத்தின் சிகரம் நாகர (சதுரம்) அமைப்பைக் கொண்டுள்ளது. இறைவர் மார்க்கண்டீசுவரர் கருவறையையடுத்து இறைவி ஆனந்தவல்லியின் கருவறை. அதிட்டானத்தில், ஜகதி, குமுதம் ஆகிய இரண்டு உறுப்புகளுக்கு மேல் சுவர்ப்பகுதி முழுதும் செங்கற்கட்டுமானத்தைப் பெற்றுள்ளது. எளிமையான் தோற்றம். பிற்காலத்தில் இணைக்கப்பெற்றதாக இருக்கலாம்.   
  
                                          கோயிலின் பல்வேறு தோற்றங்கள்

      மார்க்கண்டீசர் கருவறை விமானம்

                                    இறைவி ஆனந்தவல்லி கருவறை விமானம்

                                                 கருவறைச்சுவரில் கோட்டம்

                                                              கல்வெட்டு                    

கல்வெட்டும் சண்டீசர் சிற்பமும்

கொங்கு நாட்டின் எல்லைப்பகுதியில் இருக்கும் பொங்கலூர்க்கா நாட்டில் கூத்தம்பூண்டி அமைந்திருந்தது. இதனை இக்கோயிலில் இருக்கும் ஒரே ஒரு கல்வெட்டு உறுதி செய்கின்றது. கல்வெட்டு, கொங்குப்பாண்டியனான இராசகேசரி வீரபாண்டியனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. கல்வெட்டில், இந்த ஊரின் பெயர் ஆன்பரமான கூத்தம்பூண்டி என்று குறிப்பிடப்பெறுகிறது. பூண்டி என்பது ஊர்க்குடியிருப்பைக் (settlement) குறிப்பதாகலாம். வீரபாண்டியனின் ஆட்சிக்காலம் கி.பி. 1265-1285 என வரலாற்று அறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளதால், கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோயில் பாண்டியர் கட்டிடக்கலைப்பாணியில் அமைந்த அருமையான கோயில். ஆனால்,  கோயிலில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு சிலைகள் உள்ளன. ஒன்று, கோயிலின் தெற்குக் கோட்டத்தில் இருக்கும் சண்டிகேசுவரர் சிற்பம். சோழர் கலைப்பாணியில் அமைந்த அழகான சிற்பம். “ஜடாபாரம்”  என்னும் தலை அலங்காரத்துடனும், செவிகளில் “கர்ணகுண்டலங்களுடனும், வலக்கை  மழுவேந்திய நிலையிலும், இடக்கை தொடையில் இருத்தப்பட்ட நிலையிலுமாக சண்டேசுவரர் சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார். புன்னகை இதழ்களோடு கூடிய அழகான முகம். கழுத்தில், கைகளில், கால்களில் அணிகள். தடித்த முப்புரி நூல். வயிற்றுப்பகுதியில் உதரபந்தம் என்னும் ஓர் அணிகலன்.

                          சண்டேசர் சிற்பம்

                          சண்டேசர் சிற்பம்


                                                         கண்ணப்ப நாயனார்


மற்றொரு சிற்பம், வடக்குச் சுவர்ப்பகுதியில் இருக்கும் வில்லேந்திய சிற்பம். இச்சிற்பம், தனிச்சிற்பம். கோட்டத்தில் வைக்கப்படவில்லை. சுவரில் சாத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை இராமர் என்று கோயிலார் குறிப்பிட்டாலும், இது வேடரான கண்ணப்ப நாயனாருடையது.

கோயிலின் இன்னொரு சிறப்பு இதன் சுற்றுச் சுவர். செங்கற்களாலான சுற்றுச்சுவரின் மேற்பகுதி அழகான வேலைப்பாடு கொண்டது. சிறிய மாடம் போன்றும் சன்னல் போன்றும் தோற்றம் தருகின்ற ஓர் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கரை கட்டியதுபோல இரண்டு செங்கல் வரிசைகள்; அதன் இடைப்பகுதியில், கோட்டம் (Niche) போன்ற உள் வெளி. இந்த உள்வெளி முழுதும் இடைவெளி விட்டுவிட்டு முன்புறத்தில் எட்டிப்பார்க்கும் சிறு சிறு புடைப்புகள். ஒரு செங்கல்லை அதன் நீளமும் அகலமும் ஒருசேரக்காணும் முகப்பகுதியை முன்புறம் இருத்தி, அதன்மேல் மூன்று செங்கற்களை அவற்றின் அகலப்பருமையை முன்புறம் இருத்தி அடுக்கியிருக்கிறார்கள். செங்கற்களை நுண்மையாய் அடுக்கிய இந்த வேலைப்பாடு சிறப்பான வேலைப்பாடு.

                 வேலைப்பாடு நிறைந்த சுற்றுச்சுவர் 


பெருங்கற்காலச் சின்னங்கள்

    கோயிலை ஒட்டியுள்ள விளைநிலத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த புதையிடம் உள்ளது. இங்கு, பெருங்கற்காலச் சின்னங்களில் ஒன்றான கல்திட்டைகள் மூன்று காணப்படுகின்றன. எழுத்துச் சான்றுகள் கிடைதுள்ள சங்ககாலத்தை வரலாற்றுக் காலத்துடன் இணைப்பார்கள். எழுத்துக்காலத்துக்கு முன்புள்ள காலம் பெருங்கற்காலம் ஆகும். எனவே, இங்குக் காணப்படும் கல்திட்டைகள் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை. கூத்தம்பூண்டி, 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்த ஒரு வரலாற்று இடமாக இருந்துள்ளது என்பது அறியப்படுகிறது. இறந்தோருக்கு நினைவிடம் எழுப்பி வழிபாடு செய்யும் பெருங்கற்கால மரபில் நடுகல், கல்பதுக்கை, கல்வட்டம், கல்திட்டை, முதுமக்கள் தாழி எனப் பல்வேறு அமைப்புகளின் பயன்பாடு இருந்தது. பெருங்கற்காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு குடியினரும் ஒவ்வொரு வகையான அமைப்பைப் பயன்படுத்தினர் என்று ஓர் ஆய்வுக்கருத்து உள்ளது. அவ்வகையில், இங்கு வாழ்ந்த மக்கள், கல்திட்டைகளை அமைத்துள்ளனர் எனலாம். கல்திட்டைகள் கொங்குப்பகுதியில் சற்று அரிதாகவே காணப்படுகின்றன. கல்திட்டைகள் என்பன நிலத்துக்கு மேற்பகுதியில் எழுப்பப்படுவன; கல் பதுக்கைகள் என்பன நிலத்துக்கடியில் அமைக்கப்படுவன. தாழிகளை நிலத்தில் புதைத்து அமைப்பது    முதுமக்கள் தாழி எனப்படும். அவை இருக்கும் இடத்தைச் சுட்டும்வகையில், தாழிகளைப் புதைத்த நிலத்தின் மேற்பரப்பில் சுற்றிலும் பெருங்கற்களை வட்டமாக அடுக்கியிருப்பர். இவ்வகைச் சின்னம் கல்வட்டம் எனப்படும். நடுகல் வழிபாட்டிலும், சிறிய அளவில் கற்களும், பெரிய அளவில் நெடிதுயர்ந்த கற்களும் பயன்பட்டன. பெரிய அளவிலானவை நெடுநிலை நடுகற்கள் எனப்படும். அதுபோன்ற ஒரு நெடுநிலை நடுகல்லும் இப்பகுதியில் இருப்பதாகச் சொன்னார்கள்.

                         கல்திட்டைகள்


இங்குள்ள கால்திட்டைகள், “ப”  வடிவில் மூன்றுபுறங்களில் பலகைக்கற்களை அடைத்தவாறு நிறுத்திச் சுவர்போல அமைத்து, முன்புறம் அடைக்காமல் விட்டு, மேற்புறத்தில் கூரைபோல இரண்டு பலகைக்கற்களைக்கொண்டு மூடிய நிலையில் எழுப்பப்பட்டுள்ளன. சுவர்ப்பகுதியிலும் இரண்டிரண்டு கற்கள். மூன்று திட்டைகளில் ஒன்றில் மட்டுமெ இவ்வாறான முழு அமைப்பு காணப்படுகிறது. மற்ற இரண்டில் ஒன்றில் மூடுகற்கள் இல்லை. மற்றொன்றில் சுவர்ப்பகுதிக்கல் ஒன்றும், மூடுகல் ஒன்றும் இல்லை. வேளாண்மைக்கு நடுவில் இந்த எச்சங்களாயினும் மிகுந்துள்ளதே என ஆறுதல் அடையலாம். இங்குள்ள மக்கள், இவற்றைப் பாண்டியன் வீடு என அழைக்கிறார்கள். பெரும்பாலான ஊர்களில் பெருங்கற்காலச் சின்னங்கள் உள்ள இடங்களை  ஒன்றுபோல, பாண்டியன் குழி, பாண்டியன் வீடு, குள்ள மனிதர் வாழும் இடம், பாண்டவர் குழி/வீடு  என அழைப்பதைக் காணலாம்.

இந்தக் கல்திட்டைகளை அடுத்துள்ள நிலங்களின் மேற்பரப்பில், பெருங்கற்கால வாழ்விடங்களில் கிடைக்கும் கருப்பு சிவப்புப் பானைச் சில்லுகள், இரும்புத் தாது கலந்த மூலப்பொருள்கள் ஆகியன கிடைப்பது, இபகுதியின் பழமைக்குத் தக்க சான்று.

கூத்தம்பூண்டி வலசு-குடைவரைக்கோயில்

அடுத்து நாங்கள் சென்ற இடம் கூத்தம்பூண்டிக்கருகில் உள்ள கூத்தம்பூண்டி வலசு. கள்ளிமந்தையம் ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்ப்பகுதி. கரட்டு வலசு என்றும் அழைக்கப்படும் இப்பகுதியை நெருங்கும்போது மலைக்கரட்டுகள் தென்பட்டன. மலைக்கரட்டை நோக்கி நடக்கையில் ஒரு மாட்டுப்பண்ணையும், அதனையடுத்து கத்தரிச் செடி பயிரிடப்பட்ட பசுமையான விளைநிலமும் இருந்தன. விளைநிலத்தையொட்டி, மலைப்பாறை எழும்பி நின்றது. ஒரு பெரும் சுவர் போலப் படர்ந்து நின்ற அப்பாறையை நெருங்கியதும் குடைவரைக்கோயிலின் தோற்றம் புலப்பட்டது. யானையின் முதுகிலிருந்து சரியும் உடல் பரப்பை மிகப்பெரிய அளவில் கற்பனை செய்தால் கிடைக்கும் தோற்றம். அந்தப் பாறைப்பரப்பு, முதலில் சற்றேறக்குறைய இரண்டு அடி அகலத்துக்குச் சட்டமிட்டாற்போலச் சதுரமாக உட்புறம் குடைந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பு. அதில், ஐந்து கருவறைக்கான வெளிப்புற வடிவம் குடையப்பட்டுள்ளது. கோயில்களில் காணப்படும் கோட்டத்தை நினைவூட்டியது. ஒவ்வொன்றிலும் இறைத்திருமேனியை வைப்பதற்கான ஒரு பரப்பு. அருமையான ஒரு குடைவரைக்கோயில் முழுமையடையாமல் நின்றுவிட்டது. கொங்குநாட்டில், ஏற்கெனவே அதியன் மரபைச் சேர்ந்த அரசன் ஒருவன் 8-ஆம் நூற்றாண்டளவில் நாமக்கல்லில் குடைவரைக்கோயிலை எடுப்பித்து அதற்கு “அதியேந்திர விஷ்ணு கிருகம்என்று பெயரிட்டுள்ளான்.  இது முழுமையான  கோயிலாகக் கட்டப்பட்ட ஒன்று. இதே போலக் கரூரையடுத்துள்ள தான்தோன்றிமலையில் அதியன் ஒரு குடைவரைக் கோயிலைக் கட்டத்தொடங்கி, அது  இடையில் நின்றுபோனதாகக் கூறப்படுகிறது. இதில், கோட்டமும் கோட்டத்தில் சிலைகளும் இருக்கும். தான்தோன்றிமலையில் கட்டப்பட்ட குடைவரைக்கோயிலும் பெருமாள் கோயிலே. இங்கே, கூத்தம்பூண்டியில் சிலைகள் இல்லை. இதுவும் அதிய அரசன் கட்டியதாகக் கருதப்படுகிறது. கோயிலின் உருவம் மட்டும் வெட்டப்பட்டு, சிலைகள் இல்லாமல் விட்டுச் சென்றதுபற்றிக் குறிப்புகள் இல்லை. திருச்சியில் உள்ள குடைவரைக்கோயில் அறுவகைச் சமயத்தார்க்குமாக எடுக்கப்பட்டதுபோல, இங்கு ஐந்து சமயத்தார்க்காக ஐந்து கருவறைகள் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.  விடுபட்ட ஆறாவது சமயம் எது என்பது தெரியாது. இக்குடைவரைக் கோயிலின் அமைப்பு மதுரை ஆனைமலையில் உள்ள இலாடன் கோயில் அமைப்பை ஒத்துள்ளது. இக்குடைவரைக் கோயிலைக் கட்டிய அதிய அரசனின் பெயர் குணசீலன் எனக்கருதப்படுகிறது. இக்குடைவரைக்கருகிலேயே, மற்றொரு குடைவரை தொடக்கநிலையில் செதுக்கல்களோடு காணப்படுகிறது. மலையின் அடுத்த பக்கத்திலும் கோட்டுக் கீறல்களோடு செதுக்கல்கள் உள்ளன என்கிறார்கள். மலையின் இருபுறங்களிலும் குடைவரைகள் உள்ள அமைப்பை மதுரை-வரிச்சியூர் குடைவரையில் காணலாம்.  அங்கே, உதயகிரி, அஸ்தமனகிரி என மலையின் இருபக்கங்களிலும் இரண்டு கருவறைகள் உண்டு. ஒன்று உதயகிரீசுவரர், மற்றது அஸ்தமனீசுவரர். அந்த அமைப்பில் இங்கு கூத்தம்பூண்டியிலும் கட்ட எண்ணியிருக்கலாம். ஆனால், பணி முற்றுப்பெறவில்லை எனலாம். உள்ளூர் மக்கள் இவ்விடத்தைப் பெருமாள்மலை என அழைக்கிறார்கள்.

                   குடைவரை இருக்கும் மலைக்கரடு

                                                                            குடைவரைக்கோயில்


                                                 


கொங்கு நாட்டு எல்லை-நீட்சி

    கொங்குநாட்டின் எல்லை பழநி வரையில் இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தற்போது, அகழாய்வுப்பேராசிரியர் கா. ராஜன் அவர்களின் மாணாக்கரான யதீஸ்குமார் என்பவர், முனைவர் பட்டத்துக்கான ஆய்வின்போது (அமராவதி நதிக்கரை நாகரிகம் என்னும் ஆய்வு) மாந்தரன் என்னும் இடத்தில் கோக்கண்டன் மாந்தரன் என்னும் அரசனின் கல்வெட்டைக் கண்டறிந்தபின்னர், ஒட்டன்சத்திரம் வட்டத்தின் பாதியளவு வரை கொங்குப்பகுதி நீண்டிருந்தது என்று அறியப்பட்டுள்ளது. எனவே, கூத்தம்பூண்டியைச் சேர்த்து மூன்று குடைவரைக் கோயில்களைத் தனக்குள் கொண்டுள்ளது என்னும் பெருமையைக் கொங்குநாடு பெறுகிறது.

முடிவுரை

    கூத்தம்பூண்டி. கொங்குநாட்டில் எங்கோ ஒரு எல்லைப்பகுதியில் அமைந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுத் தடயங்களைத் தன்னகத்தே கொண்டு  அதன் பெருமையும் வரலாற்றுப்பின்னணியும் சற்றும் வெளியுலகுக்குத் தெரியாவண்ணம் அடக்கத்தோடு நிற்கும் பேரூர். அதன் உண்மை வரலாற்றுப்பின்னணியை வெளிக்கொணர்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். இது போன்ற பல வரலாற்றுத் தடயங்களை வெளிக்கொணர்வது ஆங்காங்கே  உள்ள வரலாற்று ஆர்வலர்களின் கடமையாகும்.

செய்திகள் - துணை நின்றவர் :  முனைவர் திரு. ஜெகதீசன் அவர்கள்.து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
வெள்ளி, 14 அக்டோபர், 2016

புதுக்கோட்டை-கீரனூர் கோவில் கல்வெட்டு


காரைக்குடி நண்பர் கல்வெட்டுப்படம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதைப்படித்துப்பார்த்ததில் கிடைத்த செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
கல்வெட்டுப்பாடம்

 1. ஸ்ரீமண் சோளர்வீமன் சோழற்யாண்
 2. அக்கலதேவ சோழமகாராசாவும் நாட்(டாரும்)
 3. ஏவிளம்பி வரு தை மாதம் .... கீரனூர் உள்ள
 4. ..... இசை(ந்)த ஊரவரும் உப்பலி குடி ஊராயினார்
 5. ந்த ஊரவரும் மேலை புதுவயல் கீழை புதுவயல்
 6. .... பள்ளத்தூ(ர்) மதியத்தூ(ர்) விருதூர் யாகு(வ)
 7. ச்சி ஊர்க்கு இசைன்த ஊரவரும்
 8. அக்கால சோழ மா
 9. த்தலைவரும் நகராற்றுமலை
 10. சில்மருதூ(ர்) பெருநசை ஊர்
 11. யாகுடி ஊரவரும் உடையவர் உத்தமசோழரீசு
 12. ரமுடைய தம்பிரானாக்கு அய்யன் (வ)சவாசய்
 13. யன் தன்மம் ஆக யிரஞ் குடி தேவமண்
 14. டலம் ஆக திருவிளம் பற்றுகையில் அந்த
 15. நின்றையற்றிலே தேவமண்டலம் ஆக வி
 16. ட்டபடியிதுக்கு அகுதம் சொல்லி யாதாம்
 17. ஒருவன் தேவமண்டலம் அகக்காரியம் என
 18. (என்று) ஆவது ... ஊ குடுற்ற தேவண்டா
 19. னால் யிரசதெண்டமதுற்று யிருபற்று
 20. நலு பொன்னும் குடுற்று அவன் அவன் மண்
 21. று மனை கணியாஷியும் தேவமண்டல அக
 22. க்கடவோம் ஆகவும் யிதுக்கு யிராண்(டு) நினை
 23. ற்றவன் கெங்கைரையில் கரா பசுவை கொண்
 24. றப் (பறதெவோச) கடவன் அகவும் யிதுக்கு யிண்
 25. டு நினைற்றவன்
விளக்கங்கள்:

·         கல்வெட்டின் காலம் நாயக்கர் காலம் எனக் கருதத்தக்கவகையில் சில அகச்சான்றுகள் கல்வெட்டுப்பாடத்தில் காணப்படுகின்றன.  ஒன்று கல்வெட்டு தொடங்கும்போது ஸ்ரீமன் என்று தொடங்குகிறது. (கல்வெட்டில் மிகுதியாகப் பிழைகள் உள்ளன; அவற்றில் “ஸ்ரீமன் என்பது “ஸ்ரீமண்என எழுதப்பட்டுள்ளது.) ஸ்ரீமன்என்னும் தொடக்கம் நாயக்கர் காலக்கல்வெட்டுகளில் மிகுதியும் காணப்படுகிறது. இரண்டாவது,  அக்கல தேவ மகாராசா”  என்னும் பெயர். நாயக்கர் ஆட்சிக்காலங்களில், நாயக்கர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நிருவாகம் செய்துகொண்டிருந்தவர்கள் மண்டலத்தலைவர் ஆவர். அவர்கள் மகாமண்டலேசுவரர், மகாராசா என்ற பெயர்களைக்கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, (கொங்கு மண்டலத்தில்) கோவைப்பகுதியில், வாலையதேவ மகாராசா என்ற நாயக்கர் பிரதிநிதியான மண்டலதலைவர் பெயர் குடிமங்கலக் கல்வெட்டில் வருகிறது. அதுபோல், புதுக்கோட்டைப்பகுதியில் ஒரு அக்கல/அக்கால தேவமகாராசா இருந்திருக்கலாம். புதுக்கோட்டைப்பகுதியில் வேறு ஊர்களின் கல்வெட்டுகளில் இப்பெயர் வரக்கூடும்.
·         கல்வெட்டில் ஏவிளம்பி என்னும் ஆண்டு குறிப்பிடப்பெறுகிறது. மேற்சொன்ன நாயக்கர் காலத்தை ஒட்டி இந்த ஏவிளம்பி வருடத்தை கி.பி. 1537-38 –ஆம் ஆண்டுடன் இணைக்கலாம். கி.பி. 1597-98 ஆம் ஆண்டுக்கும் ஏவிளம்பி வருடம் பொருந்தும்.
·         கீரனூரில் உள்ள உத்தமசோழரீசுவரர் கோயிலுக்கு ஒர் ஊர் கொடையாகச் சேர்க்கப்படுகிறது. முதலாம் இராசராசனுக்கு முன் ஆட்சி செய்த உத்தம சோழன் (கி.பி. 970-985) பெயரால் அமைந்த கோயில். கொடையாகச் சேர்க்கப்பட்ட ஊரின் பெயர் தெளிவாக இல்லை. “யிரஞ் குடி’ (இரஞ்சிக்குடி?) என்னும் பெயர் கல்வெட்டில் உள்ளது. கோயிலைச் சேர்ந்த ஊர்கள் தேவமண்டலங்கள் என அழைக்கப்பெற்றன. எனவே தேவமண்டலமாக மேற்படி ஊர் திருவுளம் பற்றப்படுகிறது. கொடையாளி அய்யன் வசவாசய்யன் எனக்குறிக்கப்படுகிறார். (பெயர், விசுவாசய்யன் என்பதாகவும் இருக்கலாம்)
·         கீரனூர்ப்பகுதியின் நாட்டாரும், அப்பகுதியில் இருந்த ஊர்களின் தலைவர்களும் (ஊரவர்) கூடி ஒப்புதலளித்து (கல்வெட்டில், “இசைந்துஎன்று வரும் தொடர் ஒப்புதலைக்குறிக்கும்.) கொடை தீர்மானிக்கப்படுகிறது. வரி 15-இல், நின்றையற்றிலே தேவமண்டலம் ஆக விட்டபடி என வருகிரது. இதில், “நின்றைஎன்பது “நின்றிறை என்னும் கல்வெட்டுச் சொல்லாக இருக்கக்கூடும்.
·         வரி 15-இல், நின்றையற்றிலே தேவமண்டலம் ஆக விட்டபடி  என்றொரு தொடர் அமைகிறது. இது, தேவமண்டலமாக விட்ட ஊரானது, நின்றையத்தில் விடப்பட்டது என்னும் பொருளைத் தருகிறது. முன்பே கூறியதுபோல், கல்வெட்டில் மிகுதியும் பிழைகள் காணப்படுகின்றன. ற்ற, “ற்று”  என்னும் எழுத்துச் சேர்க்கை கல்வெட்டில் “த்த”,  “த்து” ,  “க்கு”  என்னும் சேர்க்கைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வரி 15 :  நின்றயத்திலே -> நின்றையற்றிலே
         வரி 18 :  குடுத்த -> குடுற்ற
   வரி 19 :  யிரசதெண்டமதுற்று -> யிரசதெண்டமதுக்கு
   யிரசதெண்டமதுக்கு -> யிரச தெண்டம் + அதுக்கு= யிராச தெண்டம்   
  அதுக்கு.
 
  வரி : 19-20  யிருபற்று நலு -> யிருபத்து நலு = யிருபத்து நாலு
   இப்பிழைகளை நீக்கிப்படிக்கையில், நின்றையத்திலே, குடுத்த,  
        யிருபத்து நாலு, யிராச தெண்டம் அதுக்கு ஆகிய சரியான பொருள்
        தருகின்ற சொற்கள் கிடைக்கின்றன. மேலும், “இஎன்னும் எழுத்தில்
        தொடங்கும் சொற்கள் “யி என்னும் எழுத்தில் தொடங்குவதையும்
        காணலாம். எனவே, இராச தெண்டம், இருபத்துநாலு ஆகியன
        சரியானவை என்பது பெறப்படுகிறது. “நின்றைஎன்பதும், “நின்றிறை
        என்பதன் பிழையான வடிவம் எனக் கருதவேண்டியுள்ளது. காரணம்,
        கல்வெட்டு அகராதிப்படி, “நின்றிறை”  என்பது “மாறாத வரி
        யைக்குறிக்கும் சொல்லாகும்.
இவை அனைத்தையும் ஒன்றுகூட்டிப்பொருள் கொள்ளும்போது,    தேவமண்டலமாகச் சேர்க்கப்பட்ட ஊர், மாறாத வரி வருவாயைக்கொண்டதாக அமைக்கப்பட்டது எனவும், இந்த தன்மத்துக்கு அகுதம் (தீமை) சொன்னவர்கள் இராசதெண்டம் (அரசக்குற்றம்) செய்தவராகக் கருதப்படுவார்கள் எனவும், அவ் இராசதெண்டத்துக்கு இருபத்துநாலு பொன் அபராதம் விதிப்பதோடு, அவர்களுடைய மன்று, மனை, காணியாட்சி நிலம் ஆகியன பறிக்கப்பட்டுத் தேவமண்டலமாக இணைக்கப்படும் எனவும் விளக்கம் அமைகிறது. ( காணியாட்சி என்பது கணியாஷி எனப் பிழையாக எழுத்தப்பட்டுள்ளதை நோக்குக.)

 •  இந்த தன்மத்துக்கு “இரண்டு நினத்தவன்”  (கல்வெட்டில் யிராண்டு நினைற்றவன்)  கங்கைக்கரையில் காராம்பசுவைக்கொன்ற பாவத்தை அடைவான் எனக்கல்வெட்டு  முடிகிறது.
இரண்டு நினைத்தவன் = தீங்கு செய்ய நினைத்தவன். 
இரண்டு நினைத்தல் என்பது இரண்டகம் செய்தல் என்று நாம் தற்போதும்
கூறுகின்ற வழக்கை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சின்ன நெகமத்தில் பாளையக்காரர்  கல்வெட்டு 

பாளையக்காரர்கள் – ஒரு முன்னுரை
         விசயநகரப்பேரரசின் தோற்றம்
        கி.பி. 1336-ஆம் ஆண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விசயநகரப் பேரரசு உருவானது. பின்னர் கி.பி. 1378-இல், விசயநகர அரசின் இளவரசரான குமார கம்பணன் மதுரையை வெற்றிகொண்டார். தொடர்ந்து தமிழகம், கேரளம் ஆகிய இரண்டும் விசயநகர ஆட்சியின்கீழ் வந்தன. விசயநகர அரசு பல நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் இந்த ஆட்சிப்பிரிவுகளுக்குத் தலைவர்களாக மண்டலாதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்குத் தனியே படையும் உண்டு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் “நாயக்கர்கள்”  என்னும் படைதலைவர்களின் உருவாக்கம் நிகழ்ந்தது.

       கிருஷ்ணதேவராயரின் நாயக்கத்தனம்
       எனினும், நாயக்கர் உருவாக்கம் முழுமையான வடிவமும் சிறப்பான நிலையும் பெற்றது கிருஷ்ணதேவராயரின் காலத்தில்தான். அரசின் ஆட்சிப்பரப்பில் ஆங்காங்கே இருக்கும் உள்ளூர்ப்படைதலைவர்கள் நாயக்கர்என்னும் பதவிநிலையில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு சிறிதும் பெரிதுமாக ஆட்சிப்பரப்பு (நிலப்பரப்பு) தரப்பட்டு அதை ஆளும் உரிமையும் தரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுகொண்ட படையை இந்த நாயக்கர்கள் வைத்துக்கொள்ளலாம். இந்தப்படையில், குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை ஆகிய மூன்றும் உண்டு. இப்படையைக் கட்டிக்காக்க ஒரு குறிப்பிட்ட வருவாயை அரசுக்கு அளிக்கவேண்டும். அரசர் (கிருஷ்ணதேவராயர்), இந்த நாயக்கர்களைத் தம் முழுக் கட்டுக்குள் வைத்திருந்தார். நாயக்கர்கள் தம் ஆட்சியின் வரிவருவாய்களில் மூன்றில் ஒரு பங்கை அரசுக்குச் செலுத்தவேண்டும். மிகுதியுள்ள மூன்றில் இரு பங்கு நாயக்கர்களின் படையைப் பேணுவதற்குச் செலவிட. இப்படை, அரசருக்காகப் பேணப்படும் ஒன்று. அரசர் எப்போதெல்லாம் அழைக்கிறாரோ அப்போதெல்லாம் அவர் பணிக்காகச் செல்லவேண்டும். இந்த நடைமுறை “நாயக்கத்தனம்என்று அழைக்கப்படுகிறது. இராயர் இந்த நடைமுறையை ஒரு அரசியல் தந்திரமாகவே கையாண்டார் எனக்கூறப்படுகிறது. ஏனெனில், முகம்மதியரின் தாக்குதல்களை எப்போதும் சந்திக்கவேண்டிய சூழ்நிலையில் அரசு இருந்தது. அதற்குத் தேவைப்படும் படையனைத்தையும் அரசே நிர்வகிக்க இயலாது. நாயக்கத் தனம் இங்கேதான் பயன்பட்டது.  
        இராயரின் முதல் நாயக்கன் – சாளுவ நாயக்கன் (வீரநரசிங்க நாயக்கன்) என்பான். சோழமண்டலம்(தமிழகம்) மற்றும் கொல்லம்(கேரளம்) ஆகியன இவனது ஆட்சியின்கீழ். பெரியதொரு நிலப்பரப்பு. மிகப்பெரிய அளவில் வருவாய். இவனது வருவாய் பதினொரு இலட்சம் பொன் (Pardaos) என்று வெளிநாட்டு வரலாற்றுப்பயணியான நூனிஸ் என்பார் குறிப்பிடுகிறார்.  

               இராயரின் ஆட்சியின்கீழ் கொங்கு
        கி.பி. 1518 வாக்கில் இராயர் உம்மத்தூர் அரசரை வென்று, கொங்குப்பகுதியைக் கைப்பற்றினார்.  
       பாளையக்காரர் தோற்றம்
      கி.பி. 1529-இல், மதுரை நாயக்கராகப் பதவியேற்ற விசுவநாத நாயக்கர், பின்னர் விசயநகர ஆட்சியின்கீழிருந்து விடுபட்டு, தன்னாட்சி செய்யும் அரசரானார். அவருடைய அமைச்சரும் படைத்தலைவருமான தளவாய் அரியநாத முதலியார் எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி அவற்றின் தலைவர்களைப் பாளையக்காரர் என்ற பதவியில் அமர்த்தினார். மதுரைப்பகுதியில் தெலுங்கு நாயக்கர்கள் பாளையக்காரர்களாக இருந்தனர். ஆனால், கொங்குப்பகுதியில் பெரும்பாலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பாளையக்காரர்களாக இருந்தனர். தெலுங்கு நாயக்கப் பாளையக்கார்ரும் இருந்துள்ளனர்.

சின்ன நெகமம்
         சின்ன நெகமம், பெரிய நெகமத்தை அடுதுள்ள ஒரு சிறிய ஊர். அண்மையில், கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் நெகமம் பகுதியில் ஆய்வுக்குச் சென்றிருந்தபோது, சின்ன நிகமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர், சின்ன நெகமத்தில் அமைந்துள்ள  செல்வ சென்ராயப்பெருமாள் கோவிலில் பூசை செய்துவருவதாகவும், அக்கோவில் சுவரில் கல்வெட்டு ஒன்று இருப்பதாகவும் தெரிவித்தார். அவருடன் அக்கோயிலுக்கு நேரில் சென்று கல்வெட்டை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

குறிப்பு (இன்று -  14-10-2016 சேர்க்கப்பட்டது.)
திருப்பூரிலிருந்து இயங்கிவருகின்ற வீரராசேந்திரன் வரலாற்று ஆய்வுமையத்தினர்   சென்ற ஆண்டே இக்கோயில் கல்வெட்டினைக் கண்டறிந்து, கல்வெட்டின் முதன்மைச் செய்திகளை நாளிதழில் வெளியிட்டுள்ளனர். கல்வெட்டை அவர்கள் பார்த்தபோது சுண்ணம் பூசப்பட்டிருந்ததால் சுண்ணத்தைச் சுரண்டியெடுத்துக் காவி வண்ணத்தை அதன் மீது பூசி, கல்வெட்டினைப் படிக்கும் நிலைக்குக் கொணர்ந்தனர். எனவேதான் இப்போது கல்வெட்டினை எளிதாகப் படிக்க இயன்றது. கல்வெட்டைக்கண்டறிந்து செய்தி வெளியிட்ட முதல் கட்டக் கண்டுபிடிப்பு அவர்களைச் சார்ந்ததே. இங்கே பகிர்ந்து கொள்வது அக்கல்வெட்டின் செய்தியை உள்ளடக்கிய ஒரு கட்டுரை ஆக்கமே ஆகும். 

செல்வசென்ராயப்பெருமாள் கோயில்

      சின்ன நெகமத்தில் இருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், கருடகம்பம் என்றழைக்கப்படும் விளக்குத்தூண் ஆகிய அமைப்புடன் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தின் தெற்குச் சுவரின் இடப்பக்கமாக அதன் கீழ்ப்பகுதியில் பதின்மூன்று வரிகளைக்கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கோயில் சுவர் முழுதும் வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்டிருப்பினும், கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி மட்டும் சுண்ணாம்புப் பூச்சு இல்லாமல் செங்காவி வண்ணம் பூசப்பட்டிருப்பதால் எழுத்துகள் தெளிவாகப் புலப்படும் நிலையில் இருந்தது.கல்வெட்டு தெரிவிக்கும் செய்திகள்

1         கல்வெட்டின் காலம்
கல்வெட்டு “ஸ்ரீ றாம செயம் எனத்தொடங்குகிறது. அதனை அடுத்து கலியுக சகாப்தம் 4941-ஆம் ஆண்டும், சாலிவாகன சகாப்தம் 1762-ஆம் ஆண்டும், தமிழ் ஆண்டுகளில் ஒன்றான சார்வரி ஆண்டின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளைக்கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1840 என்று உறுதியாகின்றது. கல்வெட்டில் ஆவணி மாதம் குறிக்கப்பட்டுள்ளதால், 1840-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

                          கல்வெட்டு

                     கல்வெட்டு-மூன்று பகுதிகளாக
2         நெகமம் பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
கல்வெட்டில் நெகமம் ஊரானது நிகமம் என்று குறிக்கப்பெறுகிறது. நிகமம் என்பது வணிக நகரைக் குறிக்கும் பெயராகும். எனவே, பழங்காலத்தில் நெகமம்  ஒரு வணிக நகரமாக இருந்தது என்று அறிகிறோம். அதோடுமட்டுமல்லாமல், நெகமம் நாயக்கர் காலத்திலிருந்த ஒரு பாளையம் என்றும் அறிகிறோம். நிகமம் பாளையக்கார்ரின் பெயர் கொண்டம நாயக்கர் என்றும், அவர் பாலமவார் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.
3         முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர்
மேற்படி பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மகன் பெயர் சுப்பராய தேவய நாயக்கர் என்றும் அவருடைய மகனின் பெயர், அதாவது கொண்டம நாயக்கரின் பேரன் பெயர் முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர் என்பதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இந்த முத்துவல்லக்கொண்டம் நாயக்கரின் மாமனார் பெயர் ஆவலச்சோத்தய நாயக்கர் என்றும், இவர் ஆவலப்பம்பட்டியின் அதிகாரர்  (தலைவர்) என்றும், அவரது குலம் சேனை சல்லிவார் குலம் என்றும் கல்வெட்டு கூறுகிறது.
4         வெள்ளையம்மாள்-கோயில் திருப்பணி
ஆவலச்சோத்தய நாயக்கரின் மகளான வெள்ளையம்மாள் என்பவரை மேற்படி முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர் மணந்ததாகவும், இந்த வெள்ளையம்மாள் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. கருவறை (கல்வெட்டில் கெற்பகிரி என்பது பெயர்), அர்த்தமண்டபம் (கல்வெட்டில் அஷ்த்தகிரி என்பது பெயர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானமாக வெள்ளையம்மாள் கட்டுவித்துள்ளார். மகாமண்டபம், திருமதிள் (மதில் சுவர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானமாகக் கட்டியுள்ளார். இவை தவிர கல்லாலான கருடகம்பம், தீர்த்தக்கிணறு, துளசி மண்டபம், மடப்பள்ளி ஆகியனவும் வெள்ளையம்மாளால் கட்டுவிக்கப்பட்டன என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆக கோவில் முழுமையும் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளார்.
5         பாளையக்காரர், வெள்ளையம்மாள் ஆகியோரின் சிற்பங்கள்
கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நால்வரின் உருவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். முன்மண்டபம் நான்கு கல் தூண்களைக்கொண்டுள்ளது. அவற்றில் மூன்று தூண்களில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும்

1.       பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
2  அவரது பேரன் முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர்
3 முத்துவல்லக்கொண்டம நாயக்கரின் மனைவியான வெள்ளையம்மாள்

ஆகியோரின் கற்சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் மேற்பகுதியில் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல கோயில்களில் மண்டபத்தூண்களிலோ, விளக்குத்தூண்களிலோ அவற்றைக் செய்வித்த ஆண் மற்றும் அவர் மனைவி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பெயர் பொறித்துள்லதைப் பெரும்பாலும் அரிதாகவே காண இயலும். இங்கே, பெயர் பொறித்த உருவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக உள்ள தூணில் முத்தம்மாள் என்பவருடைய சிற்பம் உள்ளது. இவர் பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மனைவி என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இரு தூண்களில் இரு ஆண்களின் சிற்பங்களூம், அவர்களுக்கு நேர் எதிரே இரு பெண்களின் சிற்பங்களும் காணப்படுவதால் இதை யூகிக்கலாம்.6         கோயிலின் பழமை
திருப்பணி செய்யப்பட்ட காலம் கி.பி. 1840 என்பதால், கோயில் அதற்கு முன்பே செங்கல் கட்டுமானத்தோடு இருந்திருக்கும் என்பது கண்கூடு. எனவே, ஏறத்தாழ கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என அறிகிறோம். கோயில், போயர் குலத்தவரின் குலக்கோயில் என்பதைத் தற்போதுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
7 சில செய்திகள்
·         கி..பி. 1798-1805 காலகட்டத்தில், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்டனர். இறுதியாக, ஆங்கிலேயர் பாளையக்காரரை ஒழித்தனர். எதிர்ப்புக்காட்டாத எஞ்சிய பாளையக்காரர்களுக்கு ஜமீந்தார் பதவியை ஆங்கிலேயர் அளித்து ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இணைத்துக்கொண்டனர். வரி வசூல் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளித்து, படை வைத்திருக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டனர்.
·         இவ்வாறு, ஜமீந்தார் பதவி நிலவியிருந்த ஆங்கிலேயர் காலத்திலும், தங்களின் பாளையக்காரர் பெயர் மரபை மறவாது காட்டும் எண்ணம் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோயிலின் கல்வெட்டில் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
·         கல்வெட்டின் காலம் கி.பி. 1840. இந்த ஆண்டு கி.பி. 1840-ஆம் ஆண்டை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த ஆண்டில்தான் ஆங்கிலேய ஆட்சியர் பிளாக் பர்ன்”  (Black Burn)  மதுரைக்கோட்டையை அழித்து நகரை விரிவாக்கம் செய்தார்.
·         சின்ன நெகமம் கல்வெட்டில், காலக்கணிப்புக்குத் தேவையான பல குறிப்புகள் உள்ளன. கலி ஆண்டு(4941), சக ஆண்டு(1762), தமிழ் வியாழ வட்ட ஆண்டு(சார்வரி), ஆவணி மாதம் முதல் தேதி என்னும் குறிப்புகளுடன் பஞ்சாங்க்க் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:

திதி -  சப்தமி (கல்வெட்டில் - சத்தமி )
நட்சத்திரம் – அனுஷம் (கல்வெட்டில் – அனுசம்)
             (கல்வெட்டில் – நச்சேத்திரம்)
யோகம் – வைதிருதி (கல்வெட்டில் – வைதிரிதி)
கரணம் – வணசை (கல்வெட்டில் – வணிசவா)
          (கல்வெட்டில் – கறணம்)
ஓரை – குரு (கல்வெட்டில் – வியாளன்)
        (கல்வெட்டில் – ஓறை)
முக்குண வேளை – சாத்வீகம் (கல்வெட்டில் – சாற்றுமீக)
இலக்கினம் – கன்னி (கல்வெட்டில் – கன்னிகா)
·         கல்வெட்டில் காணப்படும் சில சொற்கள்
கெற்பகிரி – கர்ப்ப கிருஹம் என்பதன் திரிபு
அஷ்த்தகிரி – அர்த்தமண்டபத்தைக் குறிப்பது.
சுதிறி – சகோதரி என்பதன் திரிபு.
பெண்சாதி – மனைவியைக் குறிப்பது.
சீறணம் -  அழிவு, சிதைவு
சீறண உத்தாற(ம்) -  அழிவுபட்டதைப் புதுப்பித்தல் (திருப்பணி).
(ஜீர்ணோத்தாரணம் என்று தற்போது குறிப்பிடுகின்றனர்).

·         கல்வெட்டில் காணப்படும் பிழைச் சொற்கள்
றாம – ராம
கிளமை – கிழமை
கறணம் – கரணம்
பாழையகாரர் - பாளையக்காரர்
சுப்பறாய – சுப்பராய
னாயக்கறவறுடைய – நாயக்கரவருடைய
மாமனாறாகிய – மாமனாராகிய
அதிகாரறாகிய – அதிகாரராகிய
றாயமானிய – ராயமானிய
துழசி – துளசி
றாம செயம் -  ராம செயம்


 குறிப்பு : விளக்குத்தூணுக்கருகில், நடுகல் சிற்பத்தை ஒத்த ஒரு சிற்பம் காணப்படுகிறது.
                     கோயிலுக்குப்பணி செய்த வேறு கொடையாளர் (கணவன்-மனைவியர்) ஆக 
                      இருக்கக்கூடும்.

                                                                             நடுகல் சிற்பம்

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.