மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2019



ஜபல்பூர்க் கல்லறையில் தமிழ்க்கல்வெட்டுகள் -  TAMIL INSCRIPTIONS AT JABALPUR GRAVEYARD



இந்தியக் கல்வெட்டியல் ஆண்டறிக்கை 1950-51.

1945 – 1952 ஆண்டுகளுக்கான கல்வெட்டியல் அறிக்கைகள் அடங்கிய தொகுதி நூலைப்படித்துக் கொண்டிருக்கையில், 1950-51 ஆண்டுக்குரிய பகுதியில் ஒரு செய்தி கருத்தை ஈர்த்தது. இப்பகுதியின் பதிப்பாசிரியரான என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள், 1857-ஆம் ஆண்டில் இந்திய நாட்டில் எழுச்சியுற்ற சிப்பாய்க் கலகத்துடன் தொடர்புள்ள இராணுவ நடவடிக்கைகளுக்குச் சான்று பகரும் வகையில் அமைந்த இரு கல்வெட்டுகளைக் குறித்துச் செல்கிறார்.  மத்தியப் பிரதேசத்து மாநில ஜபல்பூர் (JABALPUR) மாவட்டத்தில் ஸ்லீமனாபாத் (SLEEMANABAD) நகரில் இருக்கும் இரண்டு கல்லறைகளில் தமிழ்க் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன எனப்பதிவு செய்கிறார். தமிழ்ச் சிப்பாய்கள் இருவர் இறந்துவிட்ட நிகழ்வைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கல்லறைகள் அவை. அவை பற்றிய விரிவான செய்தியை அறிந்துகொள்ளத் துணையாக, இவ்விரண்டு கல்வெட்டுகளும் INDIAN HISTORICAL QUARTERLY  என்னும் இந்திய வரலாற்றைக் கூறும் காலாண்டு இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் இந்தியா முழுமைக்குமான தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வாளராக (GOVERNMENT EPIGRAPHIST FOR INDIA) இந்தக் காலகட்டத்தில் (1947-1951) பணியாற்றியுள்ளார். மேற்படிக் குறிப்பை வைத்து வரலாற்றுக் காலாண்டிதழை இணையத்தில் தேடிப் படித்ததில் அறியவரும் செய்திகளின் பதிவு இங்கே.  

கல்லறைக் கல்வெட்டுகள்

இந்தியக் கல்வெட்டு ஆய்வாளரான மேற்குறித்த என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள், தம் பணிப் பொறுப்பில், 1951-ஆம் ஆண்டு துறையின் களப்பணிப் பயணத்தின்போது ஸ்லீமனாபாத் (SLEEMANABAD) நகரில் இவ்விரு கல்வெட்டுகளையும் படியெடுத்துள்ளார். அது பற்றி இந்திய வரலாற்றுக் காலாண்டிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கல்லறைக் கல்வெட்டுகள் இரண்டையும் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார்.

ஸ்லீமனாபாத் (SLEEMANABAD)

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் (JABALPUR) மாவட்டம்  சிஹோரா (SIHORA)  வட்டத்தில் அமைந்துள்ள ஊரே ஸ்லீமனாபாத் (SLEEMANABAD). லக்னோவில் (LUCKNOW)  பிரிட்டிஷாரின் சார்பில் 1849-1856 காலப்பகுதியில் இருந்து வாழ்ந்த SIR WILLIAM SLEEMAN என்பவரின் பெயரால் அமைந்த ஊர் ஸ்லீமனாபாத் (SLEEMANABAD). இந்த ஊரில்,  ஜபல்பூர் (JABALPUR) -  கத்னி (KATNI)  சாலையில் 39/5  எண்ணிட்ட மைல் கல்லின் அமைவிடப்பகுதியில் இவ்விரு கல்லறைக் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளைப் பற்றித் தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தியவர் முனி காந்தி சாகர் (MUNI KANTI SAGAR) என்னும் பெயருடைய ஒரு ஜைனத் துறவியர்.  பனாரஸ் (BANARAS)  என்னும் காசியிலிருந்து ”ஞானோதயா”  என்னும் பெயரில் இந்தி மொழியில் ஓர் இதழை வெளியிட்டுவந்தவர். இந்தியத் தொல் பொருள்களைத் (ANTIQUITIES) தேடிக்கண்டுபிடிப்பதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்.

1857-ஆம் ஆண்டுச் சிப்பாய்க்கலகம்

கல்வெட்டுகள் அமைந்துள்ள இப்பகுதி இந்திய நாட்டின் “மஹாகோஷல்”  (MAHAKOSHAL)  என்றழைக்கப்பட்ட பகுதி.  நாடு முழுதும் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்தோடு தொடர்புள்ள, இப்பகுதிக்கான இராணுவச் செயல்பாடுகளுக்குச் சான்றாக இக்கல்வெட்டுகள் திகழ்கின்றன என்கிறார் என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள்.  இரு கல்வெட்டுகளும் கல்லறைகளில் காணப்படுபவை எனினும், முதல் கல்வெட்டு, கல்லறைக் கட்டுமானத்தின் மீது  எழுதப்பட்டுள்ளது. மற்றது கல்லறையின் சிலுவைப்பகுதியின் மீது எழுதப்பட்டுள்ளது. இறந்துபோன இரு சிப்பாய்களும் தமிழர்கள்; இரு கல்வெட்டுகளும் தமிழில் எழுதப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டு

முதல் கல்வெட்டு எழுதப்பட்டது 1857-ஆம் ஆண்டு, நவம்பர் 6-ஆம் தேதி. இராமசாமி என்னும் சிப்பாயின் இறப்பைக் குறிப்பது. இவர், மதராஸ் பீரங்கிப்படையின் (MADRAS ARTILLERY) மூன்றாவது படைப்பிரிவில் பணியாற்றியவர்;   பீரங்கியை இயக்கும் சிப்பாய்ப் பணியாளருள் (GUN LASCAR) ஒருவர்.  முருவாடா என்னுமிடத்தில் நிகழ்ந்த போரில், நெற்றியில் குண்டடி பட்டு இறந்தவர்.  

கல்வெட்டின் பாடம்    (ஆங்கில எழுத்துகளில் தமிழ் ஒலிப்பில்)

1      1857 வரு. நவ
2      ம்பற் மீ 6 தி  மதறாஸ்
3      ஆட்டில்லெறி 3 ணா(ம்)
4      பட்டாளம் டி கம்ப[னி]
5      கன் லஸ்கற் ராமசாமி
6      முருவாடா சண்ட
7      யில் குண்டு நெத்தி
8      யில் பட்டு வெள்ளி
9      கிழமை காலம்பர
10    6 1/2 மணிக்கி மறண
11    ம் அடந்தார் சிலமான்
12    பாதையில் கொண்டுவந்
13    து  அடக்கிலம் செய்தா
14    [ர்]கள் யிது அறியவும்
15    யிவருடைய தம்பி வேம்பிலி செய்[தார்]


கல்வெட்டு, எழுத்து நடைத் தமிழில் எழுதப்படாமல் பேச்சு வழக்குத் தமிழில் எழுதப்பட்டமையால் சில பிழைகளைக் கொண்டுள்ளது.  இராணுவத்தின்  பீரங்கிப்படையைக் குறிக்கும் ARTILLERY என்னும் சொல், ஆட்டில்லெறி என்றும்,  ஸ்லீமனாபாத் (SLEEMANABAD)  என்னும் ஊர்ப்பெயர்  சிலமான்பாதை என்றும் தமிழ்ச் சாயலில் எழுதப்பட்டுள்ளன.  கல்வெட்டின் இறுதி வரி (வரி 15), இடப்பற்றாக்குறையின் காரணமாகக் கல்லறையின்  பக்கவாட்டுப் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.  கல்லறையைக் கட்டி அமைத்தவர், இறந்துபோன வீரரின் தம்பி வேம்பிலி என்பவர் ஆவார்.  தமிழகத்திலிருந்து நீண்ட தொலைவில் இருக்கும் வடநாட்டு ஊர் ஒன்றில் போரில் இறந்துபட்ட தம் அண்ணனுக்கு நினைவுக் கல்லறை எழுப்ப அவருடைய தம்பி முனைந்து செயல்பட்டமை ஒரு பெருஞ்செயல் எனில், கல்லறையில் தமிழ் மொழியில் எழுதிவைத்தமை தமிழ் மொழியின்பால் அவரும் அவருடைய தமையனும் கொண்டிருந்த பற்றுக்குச் சான்று.

இரண்டாம் கல்வெட்டு

இரண்டாம் கல்வெட்டு குறிப்பிடும் தேதி 1858 நவம்பர் 29.  முதல் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்லறைக்கு அருகிலேயே இருக்கும் இன்னொரு கல்லறையின் சிலுவையில் எழுதப்பட்ட கல்வெட்டு.  28-ஆம் படைப்பிரிவைச் சேர்ந்த FIRST MARTIN MADRAS NATIVE INFANTRY  என்றழைக்கப்பட்ட தரைப்படையின் மூன்றாவது ’கம்பெனி’யில் பணியாற்றிய டேனியல் (DANIEL)  என்னும் சிப்பாய் இறந்துபோன நினைவுக்கு எழுப்பப்பட்ட கல்லறையின் கல்வெட்டு. இவர் இறந்தது போரில் அல்ல; படை முகாமில் இருந்தபோது காய்ச்சல் கண்டு ஜன்னியால் இறந்துபோனதாகக் கல்வெட்டு குறிக்கிறது.


கல்வெட்டின் பாடம்       (ஆங்கில எழுத்துகளில் தமிழ் ஒலிப்பில்)

1      1858
2      வரு. 28 வ
3      து றிசிமெண்
4      று மதறாஸ் நே
5      ற்றிவ் இன்பெ
6      ற்றி பஸ்ட்டு மாட்டின் 3 கம்
7      பனி சிலமான்பாத்துக்கு தவு
8      டு வந்து யிருக்கும்போது 3 கம்ப்
9      பனி சிப்பாயி டேனியலுக்கு காச்
10     சல் கண்டு ஜன்னி புறந்து மே மீ
11     29 தேதி சனிக்கிழமைக் கால
12     மே 5 1/2 மணிக்கி ஆ
13     ண்டவருடைய பர
14     கதி அடைந்தார்
15     அதே 3 கம்ப்ப
16     னியில் யிருந்த கி
17     றிஸ்த்தவர்களு
18     ம் டென்ற்று லாஸ்
19     க்கர் கிறாம்ம் மெக்க
20     ஏல் என்பவ
21     ரும் எல்லாரும் யே
22     கோப்பித்துக் கூ
23     [டி] யிந்தக் கல்ல
24     ரை கட்டி வை
25     த்தோம்

இக்கல்வெட்டும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. இவர் கிறித்தவர் என்பதால் முகாமில் உடனிருந்த கிறித்தவச் சிப்பாய்களும், ‘டெண்ட்’  லஸ்கர் கிரஹாம் மைக்கேல் என்பவரும் ஒன்று கூடிக் கலந்து பேசிக் கல்லறை எழுப்பியுள்ளனர். இக்கல்வெட்டில் டேனியலின் உறவினர் யாரும் தமிழகத்திலிருந்து வந்த செய்தி குறிக்கப்படவில்லை. கிறித்தவர் அனைவரும் ஒன்றுகூடிக் கல்லறை எழுப்பியது பற்றிக் கல்வெட்டில் குறிப்பிட்டாலும், தனியே ஒரு கிறித்தவர், கிரஹாம் மைக்கேல் என்பவர் சுட்டப்படுவதால், அவரை இறந்துபட்ட  டேனியலுக்கு நெருங்கியவராகவோ  ஊர்க்காரராகவோ கருத வாய்ப்புண்டு.  இரண்டு கல்வெட்டுகளிலும், சொல்லின் முதலில் வருகின்ற  “இ”கர உயிர் எழுத்து, “யி” என்னும் எழுத்தால் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.  

முதல் கல்வெட்டில்:

வந்து யிருக்கும்போது 3 கம்ப்
[ர்]கள் யிது அறியவும்
யிவருடைய தம்பி வேம்பிலி செய்[தார்]

இரண்டாம் கல்வெட்டில்

னியில் யிருந்த கி
[டி] யிந்தக் கல்ல

இது போல் எழுதும் மரபு 16-17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகரர் காலத்துக் கல்வெட்டுகளில் தொடங்கிப் பிற்காலக் கல்வெட்டிகளிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.  எடுத்துக்காட்டாகச் சென்னை பார்த்தசாரதிக் கோயில் கல்வெட்டு ஒன்றில் (க.வெ.எண் : 535, தெ.இ.க. தொகுதி-8  காலம் கி.பி. 1603 – விஜய நகர அரசர் வீர வெங்கடபதி தேவ மகாராயர்),

“. . . . . . . .    தளிகை அமுது செயிறத்துக்காக . . . . சமைப்பித்த கெட்டி வராகன்
20  யிந்த வராகன் இருவதும்  . . . .    

“ . . . . .   தான சமையமும் யிப்படி  யிவர்கள்  சொன்னபடி  . . . “

என எழுதப்பட்டுள்ளதைக் காண்க.

இரண்டாம் கல்வெட்டில், ஏழாம் வரியில், “சிலமான்பாத்துக்கு தவுடு வந்து யிருக்கும்போது”  என்னும் தொடரில் உள்ள ”தவுடு”  என்னும் சொல் தமிழ்ச் சொல்லா இல்லையா என்னும் ஐயம் எழுகிறது.  ”தவுடு” என்னும் சொல், படை முகாமைக் குறிக்கும் ”தண்டு”  என்னும் சொல்லுடன் தொடர்புள்ளதாக இருக்குமோ? அன்றி , “தவுடு”  என்னும் இந்திச் சொல்லுடன் தொடர்புள்ளதாக இருக்குமோ? மொத்தக் கல்வெட்டு எழுத்துகளையும், மேற்படி நூலில், என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள் தமிழ் எழுத்தின் அச்சு வடிவத்தில் காண்பிக்கவில்லை;  ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழ் ஒலி பெயர்ப்பில் (TRANSLITERATION) காட்டியுள்ளார்.  கல்வெட்டின் படத்தை நூலில் பதிவு செய்யாததால் தமிழ்க் கல்வெட்டின் மூலப்பாடம் அறியப்படவில்லை.



செய்தியின் நம்பகத்தன்மை

கல்வெட்டுகளில் உள்ள செய்திகளின் உண்மைத்தன்மை அல்லது நம்பகத்தன்மைக்கு லெப். கர்னல் இ. ஜி. பிதியன் ஆடம்ஸ்  (Lt. COLONEL E.G. PHYTHIAN ADAMS) என்பவரின் கூற்று உறுதி பகர்கிறது. இவர், “THE MADRAS SOLDIER 1746-1946”  என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நுலினை எழுதுவதற்காக இவர், இராணுவத் துறையின் ஆவணங்களை முழுதும் ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேற்குறித்த கல்வெட்டுகளைக் குறித்து இவரிடம் என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள் தொடர்புகொண்டதையும், ஆடம்ஸ் அவர்கள் கடிதம் மூலம் சில விளக்கக்கள் அளித்ததையும் என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள் குறிப்பிடுகிறார்.  ஆடம்ஸ் அவர்களின் குறிப்பிலிருந்து :

“மதராசைச் சேர்ந்த “FOOT ARTILLERY”  பீரங்கிப் படைப்பிரிவுகள் மொத்தம் நான்கில் மூன்று ஆங்கிலேயர் பிரிவுகள்; ஒன்று இந்தியப் பிரிவு. முன்னதில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கம்பனிகள் என்னும் கணக்கில் பன்னிரண்டு கம்பனிகளும் பின்னதில் (இந்தியப் பிரிவு) பத்துக் கம்பனிகளும் ஆக மொத்தம் இருபத்திரண்டு கம்பனிகள்.  இப் பீரங்கிப்படைப்பிரிவுகள் ஜெனரல் விட்லாக் (GENL. WHITLOCK) தலைமையில் “மஹாகோஷல்”  பகுதியில் இயங்கின. ”கன் லஸ்கர்”  இராமசாமி  இக்கம்பனிகளுள் ஒன்றில் பணியாற்றியவர் என்பதில் ஐயமில்லை. A முதலான ஆங்கில எழுத்துகளின் வரிசையால் பெயர் சூட்டப்பெற்ற கம்பனிகள் மொத்தம் இருபத்திரண்டும் T என்னும் எழுத்துகளுக்குள் அடங்கும்.  இராமசாமி “டி”  கம்பனியில் பணியாற்றியதாகக் கல்வெட்டு குறிப்பதால், அவர் “D”  கம்பனியிலோ “T” கம்பனியிலோ பணியாற்றினார் என்பது தெளிவு. கன் லஸ்கர் பதவியில் இருப்போர் ஐரோப்பியராயினும் இந்தியராயினும் பீரங்கிப் படைப்பிரிவைச் (ARTILLERY) சேர்ந்தவர் கணக்கிலேயே அமைவர்.

THE 28th MADRAS NATIVE INFANTRY என்னும் படைப்பிரிவானது MARTIN-KE-PALTAN என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது. கல்வெட்டில் 2-6 வரிகளில் குறிக்கப்பட்ட ‘28 வது றிஜிமெண்று மதறாஸ் நேற்றிவ் இன்பெற்றி பஸ்ட்டு மாட்டின்’ என்பது மேற்குறித்த  THE 28th MADRAS NATIVE INFANTRY - MARTIN-KE-PALTAN  என்பதையே சுட்டுகிறது என்பது தெளிவு.”

முடிவுரை

மேற்படிக் கல்வெட்டுகள் மூலம் இறந்துபட்ட இரு வீரர்களும் தாம் பணியாற்றிய படையின் நம்பிக்கைக்குரிய வீரர்களாகத் திகழ்ந்தனர் என்றோ, அல்லது, தாம் சார்ந்த நாட்டின் மேல் பற்றுக்கொண்டவராய்த் திகழவில்லை என்றோ இரு வேறு கோணங்களில் பேசப்படலாம். ஆனால், கல்வெட்டுகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டமை,  சொந்த மண்ணை விட்டு எவ்வளவு தொலைவைக் கடந்து சென்றாலும் ஒரு தமிழ்ச் சிப்பாயின் உள்ளத்தில் தாய்த்தமிழின்பால் தீயாய்க் கனன்று நிற்கும் காதலை மெய்ப்பிக்கும் செயலெனவே நிலைத்து நிற்கும்.



துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019



பெங்களூர்ப் பகுதியின் கல்வெட்டுகள் - INSCRIPTION STONES OF BANGALORE

முன்னுரை

அண்மையில் TAMIL HERITAGE TRUST என்னும் அறக்கட்டளையின் சார்பாகப் பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் பி.எல். உதயகுமார் என்பவர், பெங்களூர் மாநகரின் சுற்றுப்பகுதிகளில் இருக்கும் கல்வெட்டுகளைப் பற்றி உரையாற்றிய காணொளி ஒன்றை “மின் தமிழ்”  அன்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.  பெங்களூரின் பழமை, அங்கு கண்டறிந்த கல்வெட்டுகள் பற்றிய பல செய்திகளைத் தொல்லியல் பிண்னணியில்  அந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிந்தது.  உரை ஆங்கில மொழியில் அமைந்ததால், தமிழ் வழி அதனைப் பகிர்ந்து கொள்ளும் விழைவு இப்பதிவு.

பெந்தகாளூர்

பெங்களூரைப் பற்றிய, புனைவு மரபாக வழங்கும் ஒரு பழங்கதை உண்டு. போசள (ஹொய்சள) மன்னன் ஒருவன் வழி தவறிப்போய்ப் பசியோடு அலைந்த வேளையில் ஒரு கிராமத்துக் கிழவி அவனுக்கு வேகவைத்த அவரைப் பயற்றினை உண்ணக் கொடுத்தாள்; “பெந்த  என்னும் சொல் தமிழை ஒத்தது. “வெந்த  என்பதன் திரிபாகலாம். வேகவைத்தஎன்னும் பொருளைத் தருதல் தெளிவு.   கரம் கரம் ஆதல் கன்னட மொழியில் இயல்பானதொன்று.  காளு  என்பது பருப்பு வகைகளையும் குறிப்பாக அவரை வகையைச் சேர்ந்த “பீன்ஸ்” (whole beans) பயற்றினையும் குறிக்கிறது. அதன் காரணமாகப் “பெந்தகாளூர்   என்னும் பெயர் பெங்களூருக்கு அமைந்தது.

பெங்களூரின் சுற்றுப்புறத்தில் பழங்கல்வெட்டுகள்

பெங்களூர் நகரின் சுற்றுப்பகுதி முழுவதிலும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருந்துள்ளன.  உதயகுமார் தலைமையிலான குழுவினரின் தேடுதலில் தற்போது முப்பத்திரண்டு கல்வெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இக்குழுவினரால், அவற்றின் இருப்பிடம், தோற்றம், அவற்றின் பாடங்கள், அவை கூறும் செய்திகள், அவற்றின் படங்கள் எனப் பலவும் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில கல்வெட்டுகளின் செய்திகள் பற்றிய தொகுப்பினைக் கிழே காணலாம். உதயகுமர்ரும் அவரது நண்பர் வினயகுமாரும் இணைந்து இந்த வரலாற்றுத்தேடல்களில் ஈடுபட்டுவருகின்றனர். பி.எல்.ரைஸ் (BENJAMIN LEWIS RICE) கருநாடகப்பகுதியின் தொல்லியல் துறைத் தலைவராக இயக்குநர் பதவியில்  பணியாற்றியபோது (1885-1906) ஏறத்தாழ ஒன்பதாயிரம் கல்வெட்டுகளைப் படித்துப் பதிவு செய்துள்ளார். இவர்,  தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் புலமையுடையவர். முதன் முதலாக மைசூரில் ஆசிரியப்பணியில் சேர்ந்தாலும் பின்னர் தொல்லியலில் தடம் பதித்தவர். தாம் படித்த கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் பன்னிரண்டு தொகுதிகளாகப் பதிப்பித்தார். LONDON MISSIONARY SOCIETY  சங்கத்தைச் சேர்ந்த இவரது தந்தையார் பி.எச். ரைஸ் (BENJAMIN HOLT RICE)  ஒரு பாதிரியார். இப் பாதிரியார் நினைவாகப் பெங்களூரில் ஒரு தேவாலயம் கட்டப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அ) சர்ஜாபூர்-கனலி-நடுகல்

சர்ஜாபூர் என்பது பெங்களூர் மாவட்டத்தில் அமைந்த ஆனெ-(க்)-கல் வட்டத்தில் உள்ள ஊர்.  அவ்வூரிலிருந்து அடுத்துள்ள கனலி என்னும் பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் நடுகல் சிற்பம் ஒன்றுள்ளது. அதில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.  கனலியைச் சேர்ந்த வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதைக் கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 900 என்று அறியப்படுகிறது.

ஆ)  தாசரஹள்ளி – நடுகல்

தும்கூர் சாலையில் தாசரஹள்ளி என்னும் ஊரில் கல்வெட்டுடன் கூடிய நடுகல் சிற்பம் உள்ளது. நடுகல் எடுக்கப்பட்ட வீரனின் பெயர் மாறசிங்கன் என்பதாகும். வீரனின் ஊர் இம்பத்தூர் எனக் கல்வெட்டு குறிக்கிறது.  கல்வெட்டின் காலம் கி.பி. 750.


                                      தாசர ஹள்ளி நடுகற்கள் - சில தோற்றங்கள்






இ)  3னிக3ர ஹள்ளி – நடுகல்

பெங்களூர் வடக்கைச் சேர்ந்த ஓர் ஊர் க3னிக3ர ஹள்ளி.  இங்குள்ள நடுகல் போசளர் காலத்தது. காலம் கி.பி. 1342.





ஈ)   ஜக்கூர் – நடுகற்கள்

பெல்லாரி சாலை என்றழைக்கப்படும் பெங்களூர்-ஐதராபாத் நெடுஞ்சாலையில் அமைந்த நகர்ப்புறம் ஜக்கூர். இங்குள்ள விமான நிலையம் இவ்வூரை எளிதில் அடையாளப்படுத்துகிறது. இவ்வூரில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் நான்கு கல்வெட்டுகள் முறையான  பேணுதலின்றிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு கல்வெட்டு போசளர் (ஹொய்சளர்) காலத்தது. இக்கல்வெட்டு, சேனபோவா என்னும் பதவியில் இருந்த அல்லாள(ன்) என்பவருக்கு ஜக்கூர் கிராமம் கொடையாக அளிக்கப்பட்டது எனக் கூறுகிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 1342-

மற்றொரு கல்வெட்டு, கங்கர்-இராட்டிரகூடர் காலத்துக் கல்வெட்டு. இதன் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு. இக்கல்வெட்டு ஒரு போரைக் குறிப்பிடுகிறது. ஆனால் போரைப்பற்றிய விளக்கமான செய்தி எதுவும் இல்லை. கல்வெட்டில், இப்பகுதியின் குறுநில ஆட்சியாளரான பலவபதிராய(ன்) என்பவன் பெயர் காணப்படுகிறது.  

ஜக்கூர் நடுகல்


உ)   பே3கூ3ர் – நடுகல்-கல்வெட்டு




பேகூர்-நாகேசுவரர் கோயில்
பேகூர்-நாகேசுவரர் கோயில் - 1868-இல் தோற்றம்





பெங்களூர் – ஒசூர் நெடுஞ்சாலையில் அமைந்த ஊர் பே3கூ3ர்.  இங்குள்ள நாகேசுவரர் கோயிலில் காணப்படும் நடுகல் கல்வெட்டு ஒரு சிறப்பைக்கொண்டுள்ளது. முதன் முதலாக,  “பெங்களூர்   என்னும் பெயரைச் சுட்டுகின்ற கல்வெட்டு இதுதான். கல்வெட்டின் காலம் கி.பி. 890. கல்வெட்டு, பெங்களூர்ப் போர் பற்றிக் கூறுகிறது. கங்கருக்கும் நொளம்பருக்கும் நடைபெற்ற போர். போரில் கங்கர் வென்றபோதும், கங்கரின் படைத்தளபதி நாகத்தரா என்பவன் போரில் இறந்துபோகிறான். நாகத்தராவின் குடும்பத்தினர்க்குப் பன்னிரண்டு கிராமங்கள் கொடையாக அளிக்கப்படுகிறது. அவற்றுள் ஒரு கிராமம் பேகூர். கல்வெட்டு பழங்கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது.  பெங்களூர் பற்றிய குறிப்பை முதன் முதலாகக் கொண்ட கல்வெட்டுகளில் இதுவே பழமையானது.

பேகூர் நடுகற்கள்


இதே பேகூரில் பஞ்சலிங்கேசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் சோழரின் கீழிருந்த அக்தியார் என்னும் குறுநிலத்தலைவனால் கட்டப்பெற்றது என்பது இங்குள்ள கல்வெட்டு கூறும் செய்தி.


ஊ)  மடிவாள(ம்) கல்வெட்டு

பெங்களூர் மாநகரப்பகுதிகளுள் ஒன்று மடிவாள(ம்).  இங்குள்ள சோமேசுவரர் கோயிலில் உள்ள சோழர் காலத் தமிழ்க் கல்வெட்டில் காணப்படும் நிலக்கொடை பற்றிய செய்தியில் “வெங்களூர்க் குளத்தின் கீழ் இருக்கும் நிலம் என்னும் குறிப்பு வருகிறது. இக்குறிப்பும் பெங்களூரைப் பற்றிய பழமையான குறிப்பாகும். கல்வெட்டின் காலம் கி.பி. 1247.  வெங்களூர், பின்னர் பெங்களூர் எனத் திரிந்தது. தமிழ்ப் பெயர்களில் காணப்படும் கரம், கன்னட மொழியில் “பகரமாகத் திரிதல் இயல்பு. இக்கல்வெட்டில், தற்போது பெங்களூரின் பகுதியாக இருக்கும் பேகூர், வேப்பூர் எனக் குறிக்கப்படுகிறது. 


எ) பட்டந்தூர் ஏரிக்கல்வெட்டு

பெங்களூரின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள காடுகொடி என்னும் இடத்தில் இருக்கும் சுடுகாட்டில் கல்லறைகளுக்கிடையில் எழுத்துப் பொறிக்கப்பட்ட கல் ஒன்று நின்றுகொண்டிருப்பது வியப்புக்குரியதாகும். இதைக்கண்டறிந்த மேற்குறிப்பிட்ட இளைஞர்கள், இதனை ஆய்வு செய்து செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.  இக்கல்வெட்டு, முதலாம் இராசேந்திரனின் முப்பத்திரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு என்பது இதன் சிறப்பாகும். கல்வெட்டின் காலம் கி.பி. 1043 என அறியப்பட்டுள்ளது. கல்வெட்டு அமைந்துள்ள இடத்திலிருந்து ஏழு கல் (கி.மீ)  தொலைவில் உள்ள பட்டந்தூரில் சண்ணை நாட்டு நாட்டுக்காமுண்டன் பெர்மாடி காமுண்டன் மகனான இராசேந்திர வேளான் என்பவன் ஏரியைக் கட்டுவித்துத் தூம்புகள் (மதகு) அமைத்த செய்தியும், கொற்றவை, க்ஷேத்திரபாலர், கணபதி ஆகிய கடவுளரை எழுந்தருளுவித்த செய்தியும் கல்வெட்டில் உள்ளன.  தற்போது,  ஏரியைக் காப்போம் என்னும் விழிப்புணர்வு நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.



ஏ) விபூதிபுரம் கல்வெட்டு


விபூதிபுரம் கல்வெட்டு
விபூதிபுரத்தில் உள்ள தமிழ்க்கல்வெட்டு கி.பி. 1307-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. போசள அரசன் வீர வல்லாளனின் ஆட்சிக்காலத்தது. கொடையாளி, தன் ஊர் அருகில் உள்ள காட்டுப்பகுதியை அழித்து நிலத்தைச் செப்பனிட்டு ஊர் உருவாக்கிக் குளமும் வெட்டுவித்த செயலைக் கூறுகிறது. 





ஐ)   ஹெப்3பா3ள – நடுகல் கல்வெட்டு

பெங்களூர் மாநகரின் ஒரு பகுதியே ஹெப்3பா3ள.  இங்கு, சாலைப்பணியின்போது பாதுகாத்து எடுத்த ஒரு நடுகல் சிற்பத்தில், சிற்பத்தின் கீழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது, இக்கல்வெட்டு கி.பி. 750 – ஆம் ஆண்டைச் சேர்ந்தது என அறியப்பட்டது. கல்வெட்டு பழங்கன்னட எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. கங்க அரசன் ஸ்ரீபுருஷ(ன்) காலத்தது. இவனது ஆட்சிக்காலம் கி.பி. 730-770.  கருநாடகக் கல்வெட்டுகளைத் தொகுத்த பி. எல். ரைஸ் (B.L. RICE) அவர்களின் தொகுப்பில் இக்கல்வெட்டு இடம்பெறவில்லை. 


ஹெப்3பா3ள – நடுகல் கல்வெட்டு

கல்வெட்டில் பெர்போ3ளல் நாடு என்னும் பெயர் காணப்படுகிறது.  ஹெப்3பா3ளத்தின் பழம்பெயரே இவ்வாறு கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. பெரிய என்னும் பொருள் தருகின்ற தமிழ்ச் சொல், கன்னடத்திலும் பெர்  என்னும் வடிவத்தில் பயில்கிறது. பெர்க்33டி3 ,  பெர்மானடி ஆகிய சொற்கள் கன்னடக் கல்வெட்டில் உள்ளன.  கரம், “ஹஎன மாற்றம் பெறுவதும், “ஹ” ,“கரமாக மாற்றம் பெறுவதும் கன்னடத்தில் இயல்பு என முன்னரே பார்த்தோம். அது போலவே,   பெர்போ3ளல் என்பது  ஹெப்3பா3என மருவியுள்ளது. கல்வெட்டில், பெர்போ3ளல் நாடு-30  என உள்ளது. இது பெர்போ3ளல் நாடு, முப்பது ஊர்களைக் கொண்ட நாட்டுப்பகுதியைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது.

கல்வெட்டின் பாடம்

உதயகுமாரின் காணொளிப் படத்திலிருந்தும், சில நாளிதழ்ச் செய்திகளிலிருந்தும் தெரிய வந்த செய்திகளின் அடிப்படையில் பழங்கன்னட எழுத்துகளைப் படிக்க முயன்றதின் விளைவாகக் கீழ்வரும் பாடத்தைப் பெற முடிந்தது. பின்னர், பல தேடல்களுக்குப் பிறகு, பெங்களூர் கல்வெட்டு ஆய்வாளர்கள் படித்தறிந்த சரியான பாடம் கிடைத்தது.  அதையும் கீழே தந்துள்ளேன். பழங்கன்னட  எழுத்துகள், கி.பி. 4-5 நூற்றாண்டுகளில் வடநாட்டில் - அசோக பிராமியின் வளர்ச்சியுற்ற நிலையில் - வழக்கிலிருந்த குப்தர் கால எழுத்துகளின் வடிவத்தில் அமைந்துள்ளன. முற்காலப் பல்லவரும் இதே எழுத்தினைத் தம் செப்பேடுகளில் பயன்படுத்தியுள்ளதோடு, இவ்வெழுத்தின் அடிப்படையில் பல்லவ கிரந்த எழுத்துகளை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெப்பாள - கல்வெட்டுப்  பகுதி


ஹெப்3பா3ள – நடுகல் கல்வெட்டின் பாடம் (கட்டுரை ஆசிரியர் படித்தது)

1    ஸ்வஸ்திஸ்ரீ ஸிரிபுருஷ மஹாராஜ ப்ருதுவி ராஜ்ய(ம்) . . . . .
2    பெர்போளல்நாடு மூவத்து (மா) பெள்நாகத்தரஸ . . . .
3    . . . . றர . . துந ..  கோடந்தலெயர கித்தய . . . . . .
4    டி . . . .  ஊரளிவினொ ..  ளிதிந்து காபு கா (ன)
5    பெர்குந்தியு கிறுகுந்தி த  . . .
6    . . . . . . . . . . . . .   கல்லு ..


விளக்கக் குறிப்புகள்

கல்வெட்டின் தொடக்கம், மரபுப்படி   ஸ்வஸ்திஸ்ரீ  என்று அமைகிறது.  கங்க அரசனின் பெயரான “ஸ்ரீபுருஷ  என்பதில்,   “ஸ்ரீ  எழுதப்படவில்லை.  அதன் தலைமாறாக (பதிலாக)  “ஸிரி  என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு எழுதப்படுவதைத் தமிழ்க்கல்வெட்டுகளிலும் (தமிழில் “சிரி” ) காணலாம்.   தமிழ் எழுத்து வரிசையில், இடையின எழுத்துகளில் ‘ல”, “  ஆகிய இருவகை லகர எழுத்துகள் பயின்று வருவதைக் காண்கிறோம். இவற்றில் சற்று வல்லோசை மிகுந்த “ளகரம் தமிழ் எழுத்துகளில் மட்டுமல்லாது வடபுல எழுத்துகளிலும் காணப்படுகிறது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில், குஷானர், க்ஷத்ரபர், சாதவாஹனர்  ஆகியோர் காலத்திலிருந்து இந்த “ளகரம் வழக்கில் உள்ளது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் இவ்வெழுத்து உண்டு. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு மேலைச் சாளுக்கியர், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு இராஷ்ட்ரகூடர்  ஆகியோர் காலங்களில் கன்னடக் கல்வெட்டுகளில் இவ்வெழுத்து காணப்படுகிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் தெலுங்குக் கல்வெட்டுகளிலும் இவ்வெழுத்து உண்டு.

ஆய்வாளர்கள் படித்த கல்வெட்டின் பாடம் தற்போதைய கன்னட எழுத்தில் காட்டப்பட்ட படமும், கல்வெட்டின் பாடத்திற்கேற்றவாறு கணினி நுட்பத்தால் எழுத்துகளைத் தெளிவாகக் காட்டுகின்ற படமும் கீழே தரப்பட்டுள்ளன.  இவ்விரண்டு படங்களையும் நன்கு நோக்கும்போது, மேற்குறித்த “ளகர எழுத்தின் சரியான வடிவம் பற்றிய ஐயம் மிகுதியாக எழுகின்றது. கல்வெட்டின் இரண்டாம் வரியில்  பெர்போளல் நாடு  என்னும் தொடரிலும், பெள்நாகத்தரசராளேஎன்னும் தொடரிலும் இந்த “ளகரம் வருகின்றது. இத் தொடரில் காணப்படும் முதலிரண்டு கர எழுத்துகளும், மூன்றாவதாகக் காணப்படும் “ளகர எழுத்தும் (இங்கு “ளே”) மாறுபடுகின்றன. முதலிரண்டு எழுத்துகளின் வடிவம் வேறு கல்வெட்டுகளில் காணுவதில்லை. மாறாக,  இவ்வடிவம் “ழகர எழுத்து வடிவத்தை ஒத்துள்ளது. இது “ழகரமே ஆகலாம். ஏனெனில், கல்வெட்டின் நான்காம் வரியில் இருக்கும் “ஊரளிவு  என்னும் சொல்லில் “ழகரமே பொருந்தி வருதலைக் காணலாம். “ஊரழிவு  என்னும் தமிழ்ச் சொல் பழங்கன்னடத்தில் இயல்பாக (அல்லது பரவலாக?) வழங்கி வரும் சொல்லாகலாம். பழங்கன்னடத்தில் மிகுதியாகத் தமிழ்ச் சொற்கள் பயின்று வருகின்றன. ஆநிரை கொள்வதிலும் மீட்டலிலும் இறந்துபடுகின்ற வீரனுக்கு எடுக்கப்படும் நடுகற்களில் (கன்னடத்தில் “வீரகல்லு””) “துறு”, “துறு கொளல்” , “துறுவ கொண்டு”, ”கல் நிறிசிதர்”, “முடிசிதர்போன்ற தமிழ்ச் சொற்கள் இடம்  பெறுவதைக் காண்கிறோம். அவ்வகையில், ஹெப்3பா3ள – நடுகல் கல்வெட்டில் உள்ள  “ஊரழிவு  என்னும் சொல்லில் வருகின்ற “ழகரம் கரமே ஆகலாம். எனவே, இரண்டாம் வரியில் நாகத்தரசராளேஎன்னும் சொல்லில் உள்ள எழுத்தும், நான்காம் வரியில் “ஊரழிவினொளெறிஎன்னும் சொல்லில் உள்ள எழுத்தும் ( இவை இரண்டும் ஒரே வடிவில் எழுதப்பட்டுள்ளன) “ளகரத்தைக் குறிக்கும். இவ்வெழுத்துகளின் வடிவ மாறுபாடு கீழே காட்டப்பட்டுள்ளது.


ஹெப்பாள - கல்வெட்டு - மூலக் கல்வெட்டும் கணினி உருவாக்கமும்


Hebbal inscription


The exact text of the inscription reads:
ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ ಸಿರಿಪುರುಷ ಮಹಾರಾಜಾ ಪೃಥುವೀ ರಾಜ್ಯಂಗೆಯ್ಯೆ
ಪೆಬ್ರ್ಬೊಳಲ್ನಾಡು ಮೂವತ್ತುಮಾನ್ಪೆಲ್  ನಗತ್ತರಸರಾಳೆ ಆರ
ಕಮ್ಮೊರರ ಮೈಂದುನಂ ಕೊಡನ್ದಲೆಯರ ಕಿತ್ತಯನಾ ರಟ್ಟವಾ
ಡಿ ಕೂಚಿ ತನ್ದೊಡೆ ಊರಲಿವಿನೊಳೆರಿದಿನ್ದ್ರಕ ಪುಕಾನ್
ಪೆರ್ಗುನ್ದಿಯು ಕಿರುಗುನ್ದಿ ತಮ್ಮ ಕುಳ್ನಿರಿದೊದು ಕಲ್ಲುಂ
svasti śrī siripurua mahārājā pthuvī rājyageyye
perbboalnāu muvattumānpenāgattarasarāe āra
kammoara maindunam koandaleyara kittayyanā raṭṭavā
i kūci tanode ūraivinoeidindraka pukān
pergundiyu kiugundi tamma kurniidodu i kallum












”ள”   எழுத்தைப்போலவே,  “ழ” கரமும், வல்லின “ற’கரமும் வடபுலத்துக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.  விஷ்ணுகுந்தியர் காலத்திலும் (கி.பி. 6-ஆம் நூ.ஆ.), இராஷ்ட்ரகூடர் காலத்திலும் (கி.பி. 9-ஆம் நூ.ஆ.) மற்றும் பல்லவர் கிரந்தத்திலும் (கி.பி. 7-ஆம் நூ.ஆ.) “ழ” கரம் வழக்கில் உள்ளது. அது போலவே, கி.பி. 4-6 நூ.ஆ.  காலங்களில் கதம்பர், சாலங்காயனர், விஷ்ணுகுந்தியர் ஆகியோர் காலங்களில்  “ற”கர எழுத்து வழக்கில் இருந்துள்ளது.  இவற்றின் வடிவங்களும்,  ஹெப்பாள கல்வெட்டில் காணப்படும்  வடிவங்களும்  கீழே காட்டப்பட்டுள்ளன.




முடிவுரை

கல்வெட்டுகள் அழிந்துகொண்டே வருவதைக் கண்டுவருகிறோம். நாம் வாழ்ந்துவரும் பகுதிகளின் வரலாற்றை நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதது என்பதோடு நம் பகுதி வரலாற்றுக்குச் சான்றாய் எஞ்சியுள்ள  கல்வெட்டுகளைப் பாதுகாத்தலும் இன்றியமையாதது. பெங்களூர் அன்பர்களின் அமைப்பைப் போல ஒவ்வொரு ஊர்ப் பகுதியிலும் அமைப்புகள் மிகுதியும் தோன்றிப் பணிகள் நடைபெற வேண்டும்.   

பெங்களூரின் வரலாற்றுப் பழமையை அறிவதோடு கூடுதலாகப் பழங்கன்னடத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை  நாம் அறிய முடிகின்றது. கி.பி. 4-5  நூற்றாண்டின் காலப்பகுதியில்,  தமிழி என்னும் தமிழ் பிராமி எழுத்திலிருந்து தமிழுக்குத் தனி எழுத்து முறை (வட்டெழுத்து,  பல்லவ கிரந்தத் தமிழ்)  தோன்றி விட்டது. ஆனால், தக்காணப்பகுதியில் பழங்கன்னடத்துக்குத் தனியே எழுத்து முறை தோன்றியிருக்கவில்லை  வட புலத்துப் பிராமி எழுத்தின் வளர்ச்சியுற்ற எழுத்து முறையே  பயன்படுத்தப்பெற்றது.   கி.பி.  6-ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில்தான் கன்னட மொழிக்குத் தனி எழுத்து முறை  தோன்றியுள்ளது எனலாம்.  ஆயினும்,  8-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தமிழ் சார்ந்த பழங்கன்னட மொழியும், வடபுல எழுத்து முறையும் தொடர் பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதற்குச் சான்றாக ஹெப்பாளக் கல்வெட்டு  (கி.பி. 750)  அமைகிறது.  



துணை நின்ற நூல்கள் :

1 INDIAN EPIGRAPHY AND SOUTH INDIAN SCRIPTS - By C.SIVARAMAMURTI 



----------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி:  9444939156.
doraisundaram18@gmail.com