மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 நவம்பர், 2018


சங்கரன்கோயில் இலந்தைக்குளம் – மடைக்கல்வெட்டு









முன்னுரை
அண்மையில், இணைய அன்பர் சேஷாத்திரி அவர்கள் வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு ஒன்றின் ஒளிப்படத்தை அனுப்பிக், கல்வெட்டு என்ன கூறுகிறது எனக்கேட்டிருந்தார். அந்தப்படத்தில், பின்னணியாக ஏரி அல்லது குளம் ஒன்று காட்சியளித்தது. முன்னணியில், கல்லால் கட்டுவிக்கப்பட்ட ஒரு தூம்பு அல்லது மடையின் தோற்றம். இரு கல் தூண்களும் அவற்றின் இடையே கிடந்த நிலையில் ஒரு கல்லும் கொண்ட அமைப்பு.  மூன்று கற்களிலும் எழுத்துகள். வட்டெழுத்து வகை எழுத்து. பார்வைக்கு அழகு. கி.பி. 8-9 –ஆம் நூற்றாண்டுக் காலத்தை ஒட்டிய எழுத்து வடிவமாகத் தோன்றியது. படிக்கும் ஆர்வம் எழுந்தாலும், அக்கல்வெட்டுக் கிடைத்த பகுதியைத் தெரிந்துகொண்டால், கல்வெட்டைப் படிக்கும்போது பாடத்தின் சூழலைக்கொண்டு  (CONTEXT) கல்வெட்டுச் செய்தியை எளிதில் அறியமுடியும் என்னும் எண்ணத்தில் மேற்கொண்டு கல்வெட்டைப் பற்றிய பின்னணியை அறிந்து தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன், நண்பரும், தேடுதலில் இறங்கிக் கல்வெட்டு எங்குக் கிடைத்தது, அதில் கூறப்பட்ட செய்தி என்ன என்று சுட்டுகின்ற நாளிதழ்ச் செய்தியை அனுப்பிவைத்தார். கல்வெட்டு எழுத்துகள், மடைத்தூணின் கிடைமட்டக் கல் ஒன்று, நிலைக்கற்கள் இரண்டு என மூன்று பகுதிகளில் எழுதப்பட்டுள்ளன.  கல்வெட்டின் பாடம் – நான் படித்த அளவில் – கீழ்வருமாறு:

கல்வெட்டின் பாடம் :

கிடைமட்டக்கல்:

1 சோழன்றலைகொண்ட கோவீரபாண்டியற்கு யாண்டு பதினஞ்சு 
2 இதனெதிர் இரண்டு இவ்வாண்டு நெச்சுற நாட்டு பிரமதேயம் 
3 நீலி நல்லூர் நம்பிராட்டியார் செம்பியன் கிழாலடிகள் தி
4 (ரு)வடிக்கா(*) ( ஊர்)(**)ச்செல்கின்ற அள்ளூர்க் குளக்கீழ்க் (லா)
5 வகப்பாடி ஆலவாசீலத்துக்காய் இவ்வூர் தலைச்செல்கின்[ற]


இடப்புற நிலைக்கல்

ஸ்வஸ்திஸ்ரீ


சோலை திருப்
2 பாச்(சே)ற்றி
3 ( ன்) பொன்மறை
4 யோன் (தெ)ன் (க)
5 லவை ஆலவா
6 ய் சிலம்ப
7 ன் பியரால்
8 நீலிந[ல்]லூ
9 ர் ஏரிப்பெ
10 ருமடையைக்
11 கல்லால் நி
12 லை அமைத்தா
13 ன் சிரி றங்
14 (முவளா)ச்
15 செய்து

வலப்புற நிலைக்கல்

1 ஆண்மர் நா
2 ட்டு தேவதா
3 னப்பிர
4 மதேயம்
5 தேவியம்ம
6 ச்சருப்பே
7 தி மங்கல
8 த்து சிவ
9 ப்ராஹ்மண
10 ன் மாதேவ
11 ஞ்சோலை
12 ம்பலவ
13 னில் நிலை
14 கால் ஆல
15 வாய் சீல
16 த்தின் பேரா
17 ல் நிறுத்து
18 விச்ச நிலை

கல்வெட்டுச் செய்திகள்

மங்கலத்தொடக்கம்
கல்வெட்டின் மங்கலத் தொடக்கச் சொல்லான ஸ்வஸ்திஸ்ரீ  தனித்துப் பொறிக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு ஓலைச் சுவடிகளில் எழுதும் முறையை நினைவூட்டுகிறது. முதல் மூன்று வரிகளில், கல்வெட்டு எழுதப்பெற்ற அரசன் பெயர், அவனது ஆட்சியாண்டு, கல்வெட்டுத் தொடர்பான அமைவிடம் (நாட்டுப் பிரிவு, ஊர்ப்பெயர்) குறிக்கப்பெறுகிறது.

அரசன் பெயர்
அரசன் பெயர் “சோழன்றலைகொண்ட கோவீரபாண்டியன்  என உள்ளது.  இவன் சடையவர்மன் பராந்தக வீரநாராயணனின் பேரனும், இராசசிம்மனின் மகனுமான வீரபாண்டியன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 946-966. இவன் பாண்டி நாட்டுக்கு ஏற்றம் புரிந்தவர்களுள் ஒருவன்; பராந்தக சோழனின் ஆட்சியில் சோழப்பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பாண்டி நாட்டுப்பகுதிகளை மீட்டுக்கொண்டவன் என்றும், இவன் கொண்டது சோழ இளவரசருள் ஒருவனது தலையே போலும் என்றும் கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார். முதலாம் இராசராசனின் தமையனாகிய ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று அவன் முடியைக்கொண்டிருக்கவேண்டும் என்று சோழர் கல்வெட்டுகளிலிருந்து விளங்குகிறது.  தென்னிந்தியக் கல்வெட்டுகள் ஐந்தாம் தொகுதியில், நெல்லை, நெல்லையப்பர் கோயிலில் வீரபாண்டியனின் ஐந்து கல்வெட்டுகள் (க.வெ.எண்: 451-455)  காணப்படுகின்றன. இவை அனைத்திலும் சோழன்றலை கொண்ட வீரபாண்டியன்என்னும் சிறப்புப் பெயர் உள்ளது.

அரசனின் ஆட்சியாண்டு
அரசனின் ஆட்சியாண்டு, யாண்டு பதினஞ்சு இதனெதிர் இரண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது 15+2 ;  17-ஆம் ஆண்டு. கி.பி. 963.

நாட்டுப்பிரிவு.
கல்வெட்டில் நெச்சுற நாடு, ஆண்மர் நாடு ஆகிய இரண்டு நாட்டுப்பெயர்கள் குறிக்கப்பெறுகின்றன. “இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்என்னும் தலைப்பில் தொல்லியல் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தொகுத்த நூலில் நெச்சுற நாடும், ஆண்மர் நாடும் குறிக்கப்பட்டுள்ளன. நெச்சுற நாடு தற்போதைய சங்கரன்கோயில் பகுதியாகும். ஆண்மர் நாடு, தற்போதைய இராஜபாளையம் பகுதியாகலாம். மேற்படி நூலில்,  நெச்சுற நாட்டுப்பிரிவில் நெச்சுறம், ஊற்றத்தூர், நீலிநல்லூர் ஆகிய ஊர்கள் காட்டப்பெற்றுள்ளன. நமது கல்வெட்டிலும், நீலிநல்லூர் சுட்டப்பெறுகிறது. இவ்வூர் ஒரு பிரமதேயமாக -  பிராமண ஊராக – இருந்துள்ளது. கல்வெட்டில் நீலிநல்லூர் என்னும் ஊர்ப்பெயரை அடுத்து அரசியின் பெயர் சுட்டுகின்ற “நம்பிராட்டியார் செம்பியன் கிழானடிகள் திருவடிக்கா”  என்னும் தொடர்  அமைகின்றதால் அரசியின் பெயரால் ஒரு வாய்க்கால் நீலிநல்லூர் ஊர்வழி சென்றிருக்கக் கூடும் என்று கருத வாய்ப்புண்டு. இக்கருத்துக்கேற்ப, கல்வெட்டிலும் ”செல்கின்ற” என்னும் தொடர் உள்ளது. அரசன், அரசி ஆகியோர் பெயரில் வதி, வாய்க்கால், ஆறு ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் மிகுதியாகக் காணக்கிடைக்கின்றன. ”கிழானடிகள்” என்னும் சொல் பிழையாகக் கல்வெட்டில் “கிழாலடிகள்” என உள்ளது. கல்வெட்டில் அள்ளூர்க்குளம் பற்றிய குறிப்புள்ளது. கிடைமட்டக்கல்லின் ஐந்தாம் வரியில் ”ஆலவாசீலத்துக்காய் இவ்வூர் தலைச்செல்கின்[ற”   என்றிருப்பதால், நீலிநல்லூர் வழியே ஒரு வாய்க்கால் சென்றதாகவும்,  அது ஆலவா(ய்)சீலம் என்னும் ஊரில் முடிவதாகவும் கருத இடமளிக்கிறது.

அடுத்து, ஆண்மர் நாட்டுப்பிரிவில் சேற்றூர், தேவியம்மச் சதுர்வேதி மங்கலம், கொல்லம் கொண்டான், சோழகுலாந்தகபுரம், புனல் வேலி ஆகிய ஊர்கள் இருந்தன என மேற்படி நூல் குறிக்கிறது. நமது கல்வெட்டிலும் தேவியம்மச் சதுர்வேதி மங்கலம் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டில் “சருப்பேதி மங்கலம்” என்றுள்ளது. சதுர்வேதி, சருப்பேதி ஆகிய இருவகையான வழக்கும் கல்வெட்டுகளில் பயில்கிறது. இந்தத் தேவியம்மச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த பிராமணன் மாதேவன் சோலை அம்பலவன் என்பவன் மடையின் நிலையைச் செய்தளித்தான் என்று கல்வெட்டு கூறுகிறது.  ஆலவாய்சீலத்தின் பேரால் இந்தக் கொடை அளிக்கப்பட்டது என்னும் குறிப்பு, ஆலவாய் சீலம் என்பது ஊர்ப்பெயராகவும், ஆள் பெயராகவும் வந்துள்ளதை உணர்த்துகிறது.

கல்வெட்டின் இன்னொரு பகுதி, சோலை திருப்பாச்சேறு என்னும் ஊரைச் சேர்ந்த பொன்மறையோன் என்பவன், தென்கலவையைச் சேர்ந்த ஆலவாய் சிலம்பன் பெயரால் நீலிநல்லூர் ஏரிக்குப் பெரு மடையை அமைத்தான் என்று கூறுவதாகவும்,  மாறாகத் திருப்பாச்சேற்றுப் பொன்மறையோனான ஆலவாய் சிலம்பன் பெயரால் ஸ்ரீரங்க மூவேளான் என்பவன் பெருமடையை அமைத்தான் என்று கூறுவதாகவும் இரு வகையாகப் பொருள் கொள்ளுமாறு உள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படிக்கையில் எழுத்துகள் ஏற்படுத்தும் மயக்கம் பல்வேறு பாடபேதங்களைத் தருவது வழக்கம். ஸ்ரீரங்க(ம்)என்பது “சிரி றங்க(ம்)  எனக் கல்வெட்டில் உள்ளது.

முடிவுரை
தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்ட  கல்வெட்டின் மிகச் சரியான பாடமும், துறையினர் கொண்டுள்ள சரியான கல்வெட்டுச் செய்தியும் தெரியவந்தால்தான் நமது யூகங்கள்  தெளிவாகும். நாளிதழ்ச் செய்தியில் காணப்படும் “ஆன்மா நாட்டு”,  தேவியம் சதுர்வேதி மங்கலம்” ,  அம்பலவாணால்  ஆகிய சொற்றொடர்கள் பிழையானவை.


துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.




புதன், 7 நவம்பர், 2018



உத்தம சோழன் செப்பேடு

முன்னுரை
தொல்லியல் அறிஞர் ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழ்,  வரலாறு ஆகிய இரு துறைகளிலும் புலமையுடையவர். தொல்லியல் துறையில் அலுவலராகப் பணி நிறைவு செய்தவர். செப்பேடுகளை விரிவாக ஆய்ந்து எழுதுவதில் வல்லவர். அவருடைய சில நூல்கள் என்னிடம் உண்டு. அண்மையில், அவருடைய நூலொன்றினைப் படித்துக்கொண்டிருந்தேன். உத்தம சோழனின் செப்பேடுகள் பற்றிய நூல். ”காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் செப்பேடுகளும் கல்வெட்டுகளும்”  என்னும் தலைப்பிட்டது. மதுராந்தகன் என்னும் பெயர்கொண்ட உத்தம சோழன், காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் வழிபாட்டுக்கு வழங்கிய நிவந்தமே இச்செப்பேடு. இச்செப்பேட்டினையும், இச்செப்பேடு வாயிலாக அறியவரும் வரலாற்றுச் செய்திகளையும் விரிவாக எடுத்துரைக்கின்றார் ஆசிரியர். தமிழகத்தின் கோயில்கள்தாம் எத்துணை வரலாற்றுப் பெட்டகங்களைத் தம்முள் பொதித்து வைத்துள்ளன என்பதை நினைக்கையில் பெரும் வியப்பு எழுகிறது. எத்தனை கோயில்கள்! எத்தனை கல்வெட்டுகள்! அனைத்தையும் அறிந்துகொள்ள எவ்வளவு காலம் நமக்குத் தேவைப்படும்? இந்த இடத்தில், தொல்லியல் அறிஞர் ஹுல்ட்ஸ் அவர்கள் (Dr. E. HULTZSCH) கூறியது நினைவுக்கு வருகிறது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் 1891-ஆம் ஆண்டுக்குரிய ஆண்டறிக்கையில்,

“மதராஸ் பிரசிடென்சியின்கீழ் எண்ணற்ற பெருங்கோயில்கள் - இந்தியாவின் பிற பகுதிகளில் காணவியலாதன - உள்ளன; அவற்றின் கலை வடிவங்கள் பெருஞ்செல்வங்கள்.  டாக்டர். ஃபெர்குசன் (Dr. FERGUSSON) சிறப்பாகக் குறிப்பிடுகின்ற சீரங்கம், சிதம்பரம், நெல்லை, காஞ்சி, தஞ்சை, மதுரை போன்ற பல கோயில்கள் இன்னும் ஆய்வு செய்யப்படாமல் உள்ளவை. இப்பிரசிடென்சியின் விரிந்த நிலப்பரப்பில் பரவிக்கிடக்கும் கோயில்களைத் தற்போதுள்ள பணியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும் எனக் கூறவியலாது. ஒரு பத்தாண்டுக்காலம் ஆகலாம். மிகப்பெருங் கோயில்களில் ஒன்றான இராமேசுவரத்தை மட்டும் முற்றாக ஆய்வு செய்ய இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். கிருஷ்ணா மாவட்டத்தில், காலத்தால் முற்பட்ட பௌத்தச் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் கொண்டுள்ள மேடுகளை ஆய்வு செய்ய மட்டுமே பல்லாண்டுகள் ஆகக்கூடும்.

என்று குறிப்பிடுவது கருதத்தக்கது. அவர் இக்கருத்தைச் சொல்லுகையில், தஞ்சை, மதுரை, வேலூர், இராமேசுவரம் ஆகிய கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டுவிட்டன என்பதையும் குறிப்பிடுகிறார். செப்பேடுகள், கல்வெட்டுகள் வாயிலாகத் தெரிந்துகொள்ள, பல்வேறு அறிஞர்களின் பல்வேறு நூல்கள் துணை செய்கின்றன. இவற்றால்தாம், வரலாற்றுச் செய்திகள், வரலாற்றில் ஆர்வமுடையவர்க்குப் பரவலாகச் சென்றடைகின்றன. இவ்வாறு தெரிந்துகொண்டவற்றை இன்னும் பலருக்கு எட்டவைக்கும் முயற்சியாகவே என் கட்டுரைப் பணியைக் கருதுகிறேன். ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூலின் அட்டைப் பகுதியில் இரண்டு ஒளிப்படங்கள் தெளிவாக இருந்தன. இவை செப்பேட்டின் இரு பக்கங்களின் படங்கள். அவற்றில் உள்ள எழுத்துப் பொறிப்புகள், இராசராசனின் தஞ்சைக்கோயில் கல்வெட்டு எழுத்துகளின் வடிவ அழகுக்கும் நேர்த்திக்கும் முன்னோடியாக அமைந்துள்ளதைப் பார்க்கையில், அவற்றின் பாடத்தோடு நூலாசிரியரின் ஆய்வுக் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆவலைத் தடுக்க இயலவில்லை.  அதன் பகிர்வு இங்கே.

செப்பேட்டின் அமைப்பு
தற்போது, சென்னை எழுமூர் அருங்காட்சியகத்தில் உள்ள இச்செப்பேட்டுத் தொகுதியில் ஐந்து ஏடுகளே உள்ளன. ஏடுகளின் இடப்பக்க மையத்தில் உள்ள துளைகள் வழியே ஒரு வளையத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழர் இலச்சினை உள்ளது. மொத்தம் நூற்று இருபத்தொரு வரிகள்; முதல் பன்னிரண்டு வரிகள் கிரந்த எழுத்துகள்; வடமொழி.  மற்றவை தமிழ் எழுத்து; தமிழ் மொழி. தொடக்கத்தில் கிரந்தப்பகுதியில் சில ஏடுகளும், இறுதியில் ஒரு தமிழ் ஏடும் இல்லாததால் உத்தம சோழனின் மெய்க்கீர்த்தியை அறிய இயலவில்லை.

செப்பேட்டின் காலம்
உத்தம சோழனுடைய பதினாறாம் ஆட்சியாண்டில், கி.பி. 985-86 –ஆம் ஆண்டில் செப்பேடு வெளியிடப்பட்டது.

செப்பேடு வெளியிட்ட இடம்
காஞ்சியில் இராசராசனின் தமையன் கரிகாலன் ஓர் அரண்மனை கட்டுவித்ததும், அந்த அரண்மனையில் சுந்தர சோழன் இறந்துபோனதும் அறியப்பட்ட செய்திகள். அந்த அரண்மனையில், சித்திர மண்டபம் என்னும் ஒரு மண்டபத்தில் அரசன் அமர்ந்திருந்தபோது செப்பேட்டுக்கான நிவந்த ஆணை வெளியிடப்படுகிறது. இதே சித்திர மண்டபத்தில், முதலாம் இராசேந்திரன் எசாலம் செப்பேட்டினை வெளியிட்டான் என்பது குறிபிடத்தக்கது. காஞ்சி அரண்மனை, செப்பேட்டில், “கச்சிப்பேட்டு கோயில்  எனக் குறிப்பிடப்படுகிறது.  கோயில் என்பது அரச அரண்மனையைக் குறிக்கும். (இறைவனின் கோயில் ஸ்ரீகோயில் என வழங்கும்). காஞ்சி என்பது பண்டு கச்சிப்பேடு  என்றே வழங்கியதை நோக்குக. அப்பெயரையும் சுருக்கி “கச்சி  என்றழைப்பதும் வழக்கமாயுள்ளது. கச்சி என்னும் பெயர், காலப்போக்கில் கஞ்சி எனவும்,  பின்னர் காஞ்சி எனவும் மருவியிருக்கக் கூடும். கோட்டையோடு கூடிய நகரமாதலால், பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் என வழங்கியிருக்கலாம். கச்சிப்பேடுஎன்னும் ஊர்ப்பெயரில் பின்னொட்டாக வருகின்ற “பேடு  என்னும் சொல் கருதத்தக்கது. பேடு என்னும் இச்சொல், பல ஊர்களின் பெயர்களில் உள்ளதைக் காணலாம். கோயம்பேடு, மப்பேடு, தொழுப்பேடு என்று சில ஊர்ப்பெயர்களை எடுத்துக்காட்டலாம். எழுத்துப்பொறிப்புடன் கூடிய சங்க காலத்து  நடுகல்லான புலிமான் கோம்பைக் கல்லில் “கல்பேடு  என்னும் ஊர் குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுகிறது.

செப்பேட்டுத் தொகுதியில் இரண்டு ஏடுகளின் ஒளிப்படங்கள் முன்னரே குறிப்பிட்டவாறு நூலில் வெளியிடப்பட்டுள்ளன. படங்கள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.  அவற்றின் படங்களும், பாடங்களும் கீழே தரப்பட்டுள்ளன.


                                         முதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48. 



முதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48.

பாடம்:

37  ட்டை நாளைக்கிடக்கடவ பொலிசைப்பொன் கழஞ்சே நாலு மஞ்சாடியும் நி
38  வந்தஞ்செய்(த)படி திருவமிர்து மூன்று ஸந்திக்கு நெல் முக்குறுணி
    அறுநாழியு 
39  ம் கறியமுது இரண்டுக்கு மூன்று ஸந்திக்கு நெய் நானாழியும் நெய்யமுது
    நிசதம்
40  உழக்கினுக்கு நெல் ஐஞ்ஞாழியும் தயிரமுது போது உரியாக மூன்று
    ஸந்திக்கும் (த)
41  யிரமுது நாழி உரிக்கு நெல் முன்னாழியும் அடைக்காயமுது மூன்று
    ஸந்திக்கு
42  நெல் முன்னாழியும் விறகினுக்கு நெல் இரு நாழியும் ஆராதிக்கும்
43  வேதப்ராஹ்மணன் ஒருவனுக்கு நெல் பதக்கும் இவனுக்கு புடவை முதல்
44  ஓராட்டை நாளைக்கு பொன் ஐ(ஞ்)கழஞ்சும் பரிசாரகஞ் செய்யு மாணி
    ஒருவனுக்கு
45  நெல் அறுநாழியும் இவனுக்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொன்
46  கழஞ்சும் திருமெய்காப்பாளன் ஒருவனுக்கு நிசத நெல் குறுணியும் இவனு
47  க்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொனிருகழஜ்சும் நந்தனவனம்
    உ(ழ)ப்
48  பார் இருவர்க்கு நிசத நெல் குறுணி நானாழியும் இவர்களுக்கு புடவைக்கு
    பொன்


                                            இரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.



இரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.

பாடம்:

49  கழஞ்சும் சங்கிராந்தி ஒன்றினுக்கு ஆசார்ய பூசனை உட்பட பொன் கழஞ்சேய்
    காலா
50  க சங்கிராந்தி பன்னிரண்டினுக்கு பொன் பதினைங்கழஞ்சும் திருமெய்ப்பூச்சு
51  க்கும் திருபுகைக்கும் திங்கள் அரைக்கால் பொன்னாக ஓராட்டை நாளைக்கு
52  பொன் கழஞ்சரையும் திருநமனிகை மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொ
53  ன் முக்காலும் திருபரிசட்டம் மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொன் கழஞ்
54  சும் உகச்சகள் தலைப்பறை ஒன்றும் மத்தளி இரண்டும் கறடிகை ஒன்
55  றும் தாளம் ஒன்றும் சேகண்டிகை ஒன்றும் காளம் இரண்டும் கை
56  மணி ஒன்றுமாக ஆள் ஒன்பதினுக்கு புடவை முதலுட்பட உழை ஊர் பொலி
57  ஊட்டு நெல் னூற்றைம்பதின் காடியும் கச்சிப்பேட்டு நகரத்தார் பக்கல்
    விலை  கொ
58  ண்டுடைய நிலத்தில் சித்திரவல்லிப் பெருஞ்செறுவான பட்டியும் துண்டு
59  ணுக்கச் சேரியில் விலை கொண்டுடைய நிலத்தில் மேட்டு மதகாறு பாஞ்ச
60  சேந்தறைப்போத்தன் நிலத்துக்கு வடக்கில் தடி மூன்றும் காடாடி குண்



செப்பேடு கூறும் செய்திகள்

 உயர் அதிகாரியின் விண்ணப்பம்
முன்னரே குறிப்பிட்டவாறு, உத்தம சோழன் காஞ்சி அரண்மனையில் வீற்றிருந்தபோது, மூவேந்தவேளான் என்னும் ஒரு பதவி நிலையில் உள்ள பெரிய அதிகாரியான நக்கன் கணிச்சன் என்பான் அரசனிடம் ஒரு வேண்டுகோள் வைப்பதாகச் செப்பேடு தொடங்குகிறது. உலகளந்தான் கோயிலுக்கு, கச்சிப்பேட்டிலும், துண்டுணக்கச்சேரி என்னும் ஊரிலும் நிலங்கள் இருந்துள்ளன. இந்நிலங்கள் கோயிலுக்குரிய முதலீடாக இருந்தன. விளைச்சலின் மூலம் வட்டியாக வரும் நெல் வருவாய் (பொலிசை, பொலியூட்டு) கோயிலின் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. விளைச்சல், பூ என்றும் போகம் என்றும் வழக்கப்பட்டது. இந்த நிலங்களைக் கண்காணிக்க, கருவுளான்பாடி, அதிமானப்பாடி ஆகிய ஊர்களைச் சேர்ந்தோரை நியமிக்க வேண்டியே மேற்குறித்த மூவேந்தவேளான் அரசனிடம் விண்ணப்பம் செய்கிறான்.

கோயிலின் வருவாய்
கோயிலுக்கு வேறு வரவினங்களும் இருந்துள்ளன. முகந்து விற்கும் தானியம் முதலான பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி வருமானம் கோயிலைச் சாரும். இது (செப்பேட்டில்) “கால் அளவு கூலி  என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது.  முகத்தல் அளவைக்கு ‘கால்என்னும் கருவி பயன்பட்டது. ஊருக்குப் பொதுவாக இருக்கும் கால் ஊர்க்கால்; கோயிலுக்குத் தனியே கால் இருக்கும். அரசனின் பெயர் கொண்ட காலும் தனியே உண்டு. எடுத்துக்காட்டாக இராசகேசரிக் கால். இறைவனின் பெயர் கொண்ட காலுக்கு எடுத்துக்காட்டு ஆடவல்லான் கால். அதுபோலவே, நிறுத்து விற்கும் பொருள்கள் மீதான வரி வருமானமும் இக்கோயிலுக்கு இருந்தது. நிறுத்தலுக்குக் கோல் (துலாக்கோல்) பயன்பட்டது. இவ்வகை வருவாய் (செப்பேட்டில்) “கோல் நிறை கூலி  என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது.  கோயிலுக்கு அளிக்கப்பட்ட பொன், காசு, பணம் ஆகிய வைப்புத்தொகைகள் முதலீடுகளாகவும், அவற்றால் கிடைக்கப்பெறும் பொலிசை (வட்டி) வருவாயாகவும் கோயிலுக்குப் பயன்பட்டன. கோயிலின் வரவினங்கள் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தையும் கண்காணித்துக் கணக்கில் வைக்க கணக்கர்களையும் நியமிக்க அரசனிடம் வேண்டுகிறான் மேற்குறித்த மூவேந்தவேளான். “நீயேய் நிவந்தம் செய்வீய்என்று மன்னன், நிவந்தப்பொறுப்புகளை இந்த அதிகரியிடமே ஒப்படைக்கிறான்.  இந்தச் செய்திகள் எல்லாம் செப்பேடு குறிப்பிடும் பொது அல்லது முதன்மைச் செய்திகள். கோயிலில் நடைபெறும் வழிபாடு, (பூசனை, படையல் ஆகியன), நிர்வாகம், கோயிலின் பணியாளர்கள் ஆகியன பற்றியவை  சிறப்புச்செய்திகள்.

செப்பேடு கூறும் சிறப்புச் செய்திகள்

இறைவனின் பெயர்
கோயிலின் இறைவன் உலகளந்த பெருமாள், செப்பேட்டில் “ஊரகப் பெருமான்என்று குறிப்பிடப்படுகிறார்.

வழிபாடு (பூசனை, படையல்)
கோயிலில் மூன்று சந்தி வழிபாடு நடை பெற்றது. மூன்று சந்திக்கும் திருவமுது படைக்கப்பெற்றது. திருவமுதோடு சேர்ந்த பிற அமுதுகளாவன:
கறியமுது -  காய்கறிகளைக்கொண்ட உணவினைக் குறிக்கும். அதாவது பொறிக்கறி.
தயிரமுது.
அடைக்காயமுது - பாக்கினைக் குறிக்கும். இச்செப்பேட்டில் வெற்றிலை தனியே குறிக்கப்படவில்லையெனினும் வெற்றிலையையும் சேர்த்தே அடைக்காய் அமுது என்னும் சொல் நின்றது. (சில கல்வெட்டுகளில் இலை அமுது தனியே குறிக்கப்பெறும். அடைக்காய் என்னும் பழந்தமிழ்ச் சொல், தற்போது தமிழில் வழங்குவதில்லை என்றாலும், கன்னடத்தில் இந்த வழக்கு இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். கன்னடத்தில் இலை, எலெ என்றும் அடைக்காய், அடிக்கெ என்றும் திரிந்து வழங்குகின்றன. வெற்றிலை பாக்கு என நாம் குறிப்பதைக் கன்னடர்கள் எலெ-அடிக்கெ என்பார்கள். அடைக்காய் என்னும் தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் “ARECA”  என்று வழக்கும். “ட  தமிழ் ஒலிப்பு ஆங்கிலத்தில் “ர/ற  ஒலிப்பாக மாறியுள்ளது. ஒரு ஆங்கில அகராதி, “ARECA” –வின் மூலத்தை, மலையாளம் எனவும், மலையாளத்திலிருந்து போர்த்துகீசிய மொழிக்குச் சென்றது எனவும் குறித்திருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாயில்லை.)
நெய் அமுது.
சங்கிராந்தி – கோயில் வழிபாடுகளில் சங்கிராந்தி வழிபாடும் இருந்தது. ஞாயிறு(கதிரவன்) ஓர் இராசியில் புகும் காலம் சங்கிராந்தியாகும். அதுவே, புதிய  மாதப்பிறப்பாகும்.  கல்வெட்டுகளில் மாதங்களின் பெயர்கள் சித்திரை, வைகாசி, ஆனி   என்னும் பெயர்களில் குறிப்பிடப்படுவதில்லை.  ஞாயிறு புகும் இராசியின் பெயராலேயே குறிக்கப்படும். சித்திரை மாதத்தில், ஞாயிறு, மேழ(மேஷ) ராசியில் புகுவதால் மேழ(மேஷ) ஞாயிறு என்றும், இதே போன்று, வைகாசி, இடப(ரிஷப) ஞாயிறு என்றும், ஆனி, மிதுன ஞாயிறு என்றும் வரிசைப்படுத்திப் பன்னிரண்டு இராசிகளின் பெயரால் மாதங்கள் குறிக்கப்பட்டன. எனவே, ஆண்டின் இறுதி மாதமாகிய பங்குனி, மீன ஞாயிறு என அமையும். இவ்வாறு, பன்னிரண்டு சங்கிராந்திகள். பன்னிரண்டு சங்கிராந்தி பூசனைகள்.
ஆச்சாரிய பூசனை -  சங்கிராந்தி தோறும், ஆச்சாரிய பூசனை என்னும் ஒரு வழிபாடும் உடன் நடந்ததாகச் செப்பேட்டின் வாயிலாக அறிகிறோம். இது குருவை வணங்குதல் என்னும் நிகழ்ச்சியாகும். செப்பேட்டின்படி, இந்த ஆச்சாரிய பூசனை பன்னிரண்டு சங்கிராந்தியின்போதும் நடந்துள்ளது.

இறைவனை வழிபடும்போது, ‘சோடச உபசாரம்என்னும் பதினாறு வகையான வழிபடுதல் முறைகள் உண்டு.  அவற்றில் பலவற்றை இச்செப்பேட்டில் காண்கிறோம்.


திருமெய்ப்பூச்சு – இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குப் பூசும் சந்தனம்
                   முதலான நறுமணப்பூச்சு.
திருப்புகை – நறுமணப்புகை.
திருநமனிகை - இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குச் செய்யும் நீராட்டு.
திருப்பரிசட்டம் - இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குச் சார்த்தும் உடை.

கோயிலில் பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டவர்கள்
ஆராதிக்கும் வேத பிராமணன் – பூசைசெய்யும் வேதம் வல்ல பிராமணன்.
ஆச்சாரியர்- குரு
பரிசாரகம் செய்யும் மாணி – கோயிலில் ஏவல் தொழில் செய்யும் பிரம்மச்சாரி.
திருமெய்காப்பான் – திருமெய்காப்பு என்பது கோயில் காவலைக் குறிக்கும்.
எனவே, திருமெய்காப்பான் என்பவன் கோயில் காவல் பணி செய்பவன்.
திருமெழுக்கிடுவார் – கோயிலைப் பெருக்கி மெழுகித் தூய்மை செய்து வைப்பவர்.
நந்தவனம் உழப்பார் -  நந்தவனத்தில் பணியிலிருக்கும் உழவன். (இக்கோயிலில் உழப்பார் இருவர் இருந்துள்ளனர்)
உவச்சர்கள் – செப்பேடு, ஓரிடத்தில், உகச்சகள் என்றும், மற்றோரிடத்தில் உவச்சர்கள் என்றும் குறிப்பிடுகிறது.  இவர்கள், இசைக்கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்கள் ஆவர்.  கல்வெட்டுகளில், இசைத்தல் என்னும் சொல்லுக்குத் தலைமாற்றாகக் (பதிலாக) கொட்டுதல் என்னும் சொல்லே பயிலுவதைக் காண்கிறோம். ‘பறை முதலியன கொட்டுவித்து’,   மத்தளம் கொட்டுகிற’, ‘உவைச்சன் கொட்டுவிதாக’, ‘பஞ்சமா ஸப்தம் கொட்டுகின்ற  போன்றவை சில சான்றுகள். காளத்தைக் குறிக்கையில் மட்டும் ஊதுதல்என்னும் குறிப்பைக் காண்கிறோம்.  புழக்கத்திலிருந்த சில இசைக்கருவிகள் ஆவன:


பறை
தலைப்பறை
மத்தளம் அல்லது மத்தளி
கறடிகை
கைமணி
சேகண்டிகை
தாளம்
காளம் அல்லது எக்காளம்
திமிலை
பஞ்சமா சப்தம்
உடுக்கை
வீணை
சகடை (முரசு)


நிவந்தத்தின் விளக்கம்
கோயிலின் வருமானங்களாகிய நெல்லும், பொன்னும்(கழஞ்சும்) கீழ்க்கண்டவாறு நிவந்தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 
திருவமுது, கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய் அமுது ஆகியவற்றுக்கு நெல் வழங்கப்பட்டது. திருநொந்தாவிளக்கெரிக்கத் தேவையான நெய்க்காகவும் நெல் கொடுக்கப்பட்டது.
வேத பிராமணன், பரிசாரக மாணி, திருமெய்காப்பான், நந்தவனம் உழப்பார் ஆகியோர்க்கு நெல்லும், இவர்களுக்கான ஆடைகளுக்காகப் பொன்னும்(கழஞ்சும்) வழங்கப்பட்டன. ஆடை என்பதற்குச் செப்பேட்டில் ‘புடவைஎன்னும் சொல் பயன்படுத்தப்பெறுகிறது. திருமெழுக்கிடுவார்க்கு நெல் மட்டுமே அளிக்கப்பட்டது.
சங்கிராந்தி, ஆச்சாரிய பூசனை,  திருமெய்ப்பூச்சு, திருபுகை, திருநமனிகை, திருபரிசட்டம் ஆகியவற்றுக்குப் பொன்(கழஞ்சு) வழங்கப்பட்டது.

திருவிழாக்கள்
மகர சங்கராந்தி (செப்பேடு இதை உத்தரமயன சங்கராந்தி என்று குறிக்கிறது),  சித்திரை விஷு ஆகிய இரு திருவிழாக்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டன. சித்திரைத் திருநாள் ஏழு நாள் விழவாக நடைபெற்றது. திருவிழாவுக்கான செலவினங்களுக்குக் கழஞ்சு வழங்கப்பட்டது. திருவிழாக்களின்போது, எண்ணெய், பூ, சந்தனம் போன்றவைக்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் இருந்தன. தேவரடியார், இறைவனுக்குப் பள்ளிச் சிவிகை சுமப்பார், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கும் சிறப்பு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. செப்பேட்டில், சிவிகை சுமப்போரைக் குறிப்பிடுகையில்,

வரி 85 . . . . . . . . . . . . . . . . . தேவர் பள்ளிச் சிவிகை காவும் சிவி
வரி 86 கையார்க்கும் . . . . . . . . . . . . . . . . .

என்று எழுதப்பட்டுள்ளது. இதில் “காவும்  என்னும் சொல் ஆளப்பட்டுளது கருதத்தக்கது. சுமக்கும் என்பதற்கான நல்ல தமிழ்ச் சொல் இங்கு பயின்றுவந்துள்ளது. பரிமேலழகர் இச்சொல்லைக் கையாண்டிருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சிவிகையைத் (பல்லக்கு) தோளில் சுமப்பதுபோலவே, முருகக் கடவுளுக்கு எடுக்கும் காவடியும் தோளில் சுமக்கப்படுவதாலேயே, அதற்குக் காவடி என்னும் சொல்லால் பெயரிட்டிருப்பர் எனலாம். காவுதல் என்னும் சொல்லின் அடிப்படையில் ‘காவடிஉருவாகியிருக்கலாம்.

செப்பேடு குறிக்கும் சில மக்கள்

பட்டசாலிகள்
செப்பேட்டில், அதிமானப்பாடி, கருவுளான்பாடி ஆகிய இரு ஊர்களைச் சேர்ந்த நெசவாளர்களே வரவு செலவுகளைக் கண்காணிக்கும் ஸ்ரீகாரியம் செய்பவர்களாகக் குறிக்கப்படுகிறார்கள். செப்பேட்டின் வடமொழிப்பகுதி, இவர்களைப் பட்டசாலி என்று கூறுகிறது. வடமொழித் தொடரான ராஜ-வஸ்த்ர க்ருதாமேஷா(ம்)   என்ற தொடரும் இவர்களையே சுட்டும் எனலாம். அவ்வாறெனின், பட்டசாலிகள் என்னும் நெசவுக்குடிகள், அரசனுக்குரிய துணிகளை நெய்கின்றவர் எனப் பொருள் அமைகிறது.

சோழாநியமத்தார்
கச்சிப்பேட்டில் இருந்த வணிகர் குழுவினராக இவர்கள் குறிக்கப்பெறுகிறார்கள். இவர்களில் சிலரைச் செப்பேடு “தோளாச் செவியர்என்று கூறுகிறது. இத்தொடர், பொருள் பொதிந்த கவின் தொடர் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தோளாச் செவியர் என்னும் தொடர், தோட்கப்படாத செவி என்று பொருள் தரும். அதாவது துளைக்கப்படாத செவி; ”தொள்  என்பதே வேர்ச்சொல்லாக இருக்கவேண்டும். அவ்வாறெனில், தொளைத்தல், தொளை என்பதே சரியான வடிவங்களாயிருக்கவேண்டும்; ஆனால், நாம், ‘துளைத்தல்’, துளை என்று மருவிய வடிவத்தைப் பயன்படுத்துகிறோம் என்றாகிறது.






துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.


வியாழன், 1 நவம்பர், 2018


தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள்-6

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில், தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தன. கல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும், தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தன. கல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும். ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:

குறிப்பு:  அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படா விட்டாலும்கல்வெட்டில்  உள்ளவையேபொருள்   எளிதில்   விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.






கல்வெட்டுப்படத்தின் பாடம்:

1   ப்பத்து எண்கழஞ்சரையே மூன்று மாவும் கட்டி
2  (ப)து மஞ்சாடிக்கு விலை காசு ஐய்யாயிரம் - வாளி
3  ற்குன்றியும் தைய்த்த முத்து அம்புமுது பாட
4  பிரமும் உட்பட முத்துத் தொண்ணூற்று நாலினா(ல்)
5  (ஆ)க நிறை நூற்று நாற்க்கழஞ்சரையே நாலு
6  யிரத்து ஒரு நூற்றைம்பது ||-  ஸ்ரீ சந்தம் ஒன்று
7  .மூன்று மஞ்சாடியும் எட்டு மாவும் மாணிக்கம்
(ர)க்த பிந்துவும் காக பிந்துவும் வெந்தனவும் உட்பட
9  ஆக அறுபதினால் நிறை கழஞ்சரை(யே)

குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


விளக்கம் :     

கல்வெட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட அணிகலன்களின் (திருவாபரணங்கள்) கொடை பற்றிக்கூறுகிறது. குறிப்பாகப், பொன்னாலான அணிகலன்களில் பதிக்கப்பட்ட முத்துக்கள், வயிரம், மாணிக்கம் ஆகியவற்றைப்பற்றிக் கூறுகிறது. இவ்வரிசையில் வெளியிடப்பெற்ற மூன்றாம் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல்,  இக்கல்வெட்டிலும் மேன்மையான வயிரம் குறிக்கப்பெறுகிறது. பொறிவு என்பது புள்ளிகளையும், முறிவு என்பது விரிசல்களையும் குறிக்கும்.  அவ்வகையான புள்ளிகளோ, விரிசல்களோ இல்லாத மேன்மையான வயிரம் என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டு, சிவப்புப் புள்ளிகளோ, கருப்புப் புள்ளிகளோ இல்லாதன எனக் கூறுகிறது. சிவப்புப் புள்ளிகள்  ரக்த பிந்து என்றும், கருப்புப் புள்ளிகள்  காகபிந்து என்றும் கூறப்படுகின்றன (வரி : 8).  

தொண்ணூற்று நாலு முத்துக்கள் அளிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.  அம்புமுது என்பது ஒரு வகை முத்தாகும். மொத்த முத்துக்களின் நிறை நூற்று நான்கரை கழஞ்சு மதிப்புடையது. ஸ்ரீசந்தம் என்பது அணிகளின் ஒரு வகையாகலாம் (வரி : 6). அகராதியில் பொருள் கிடைக்கவில்லை. சில இடங்களில் ஸ்ரீ சந்த்ரம்  என்னும் சொல் அணிகலன்கள் பற்றிய குறிப்புகளில் காணப்படுவதை வைத்து,  நிலா உருவில் அமைந்த ஓர் அணிகலன் என யூகிக்கலாம். வெந்தன என்னும் சொல் (வரி : 8), ஒரு வயிர வகையைக் குறிக்கும். வாளி என்பது ஒரு காதணி (வரி ; 2).  இந்தக் காதணியில் முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில், தொடர்ந்து வருகின்ற  “தைய்த்த முத்து”  என்னும் சொல் அணிகலனில் வைத்துப் பதித்த முத்தினைக் குறிக்கும். முத்துக்கள் கோக்கப்பட்ட அணிகலன்களும், முத்துக்கள் பதிக்கப்பட்ட அணிகலன்களும்  என இருவகை அணிகலன்கள் நாமறிந்ததே. 





----------------------------------------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.