மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 4 மே, 2014

கொங்கவிடங்கீசுவரர் கோவில்
                                                         து.சுந்தரம்,கோவை



         உடுமலை அருகே ஒரு சிற்றூர். அங்கே ஒரு சிவன் கோவில். ஏறத்தாழ இன்றைக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பது உறுதி. ஏனெனில், கி.பி. 1221-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இக்கோவிலில் காணப்படுகிறது. கொங்கு நாட்டை ஆண்ட கொங்குச் சோழ அரச






ன் வீரராசேந்திரன், கொங்கு நாட்டில் வடகொங்கு, தென்கொங்கு ஆகிய இரு பகுதிகளையும் ஆண்ட அரசன் ஆவான். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரை என வரலாற்று அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். இவன் காலத்துக் கி.பி.1221-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இக்கோவிலில் இருப்பதனால், இக்கோவில் எண்ணூறு ஆண்டுப்பழமையானது என்பதை உறுதி செய்ய இயலுகிறது.

         முற்றிலும் கற்களால் ஆன கற்றளியாகக் கட்டப்பட்ட இக்கோவில், சோழர் காலத்துப்பாணியில் அமைந்த கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. கருவறையில் குடி கொண்டுள்ள இறைவர் லிங்கத்திருமேனியர். இந்த லிங்கத்திருமேனிக்கு ஒரு சிறப்புண்டு. தானாய்த் தோன்றிய இறைத்திருமேனி. உளி கொண்டு செதுக்கப்படாத லிங்கத்திருமேனியை “விடங்கர்  என அழைப்பது மரபு. அந்த மரபில் இவ் இறைவரும் விடங்கீசுவரர் “ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். கொங்கு நாட்டில் அமையப்பெற்ற சிவன் கோவில்களில் “ கொங்கு “ என்னும்  நிலத்தின் பெயரைத் தாங்கியுள்ள கோவிலைக்காண்பது அரிது. இந்தக் கோவில் அத்தகைய அருமையை உடையது. இறைவர், இந்த அருமையைத் தாங்கி, “ கொங்கவிடங்கீசுவரர் “  என்று அழைக்கப்படுகிறார்.

         பழங்காலத்தில் கோவில்களின் நிலை என்ன, சிறப்பும் பயன்பாடும் என்ன என்பதைச் சற்றுக் காண்போம். கோவில்கள் அரசர்களால் கட்டுவிக்கப்பட்டன. அரசர்கள், மக்களிடமிருந்து பெற்ற வரி வருமானங்களையும், போர் மூலம் கவர்ந்த பொன்னையும் பொருளையும் கோவில்களைப் பேணுவதில் செலவிட்டனர். அரசர்கள், கோவிலுக்கு நிலங்களைத் தானமாக அளித்ததோடல்லாமல் அந்நிலங்களின் வரிகளை நீக்கி னர். இவை இறையிலி நிலங்கள் எனப்பட்டன. அரசியரும் தனிப்பட்ட முறையில் கோவில்கள் எழுப்பினர்; கொடைகள் வழங்கினர்; திருப்பணிகள் செய்தனர்.




         குடிமக்களும் கோவில்களுக்குக் கொடைகள் பல அளித்தனர்.  குடிமக்களில் பலவகைப் பிரிவினரும் இதில் அடங்குவர். வேளாண்குடிகள், சிறு வியாபாரிகள், பெரு வணிகர்கள், தேவரடியார்கள் போன்ற பலரும் கோவில் பணிகளுக்காகக் கொடைகள் வழங்கியுள்ளனர். அரசு அதிகாரிகளும் பெருமளவில் தானங்கள் வழங்கியுள்ளனர். கோவில்களில் நாள்தோறும் நடைபெறும் வழிபாட்டுக்காகவும், சந்தியாதீபம் எனப்படும் விளக்கெரிக்கவும் மற்றும் பல்வேறு பணிகளுக்காகவும் இக்கொடைகள் பயன்பட்டன.

          வழக்கமாக ஒவ்வொரு கோவிலும் கருவறை, அர்த்தமண்டபம் என்னும் நடுமண்டபம், முன்மண்டபம் இவற்றைக் கொண்டிருக்கும். கோவிலைச் சுற்றிலும் ஒரு திருச்சுற்றும் (பிராகாரம்) மதிலும் இருக்கும். பெரிய கோவில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திருச்சுற்றுகள் அமைவதுண்டு. இத்திருச்சுற்றுகளில் அரசர், அரசரைச் சார்ந்தோர் முதலியோர் எடுப்பித்த சிறிய கோவில்கள் இடம்பெறும். பெரிய கோவில்களை நிருவாகம் செய்யத் தனிக்குழுவினர் இருந்தனர். ஸ்ரீ காரியம் செய்வார், கோவில் தானத்தார், ஊர்ச்சபையினர், மாகேசுவரர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். வழிபாட்டுப்பொறுப்பில் சிவப்பிராமணர்களும் கோவிலின் பிற பணிகளுக்குப் பணியாளர்களும் இருந்தனர். கோவிலுக்கென்று தனியே கருவூலம் இருந்தது. இது ஸ்ரீ பண்டாரம் என்று அழைக்கப்பட்டது. கோவிலின் வரவு செலவு கணக்குகள் கோவில் கணக்கர் பொறுப்பில் இருந்தன.

          கோவிலின் பல்வேறு பணிகளுக்குப் பணியாளர்கள் இருந்தனர் என்று மேலே குறிப்பிட்டோம். அப்பணியாளர்கள் திருஅலகிடுதல், திருமெழுக்கிடுதல், பூத்தொடுத்தல், மடைப்பள்ளிப்பணி ஆகிய பணிகளைச் செய்தனர். அலகிடுதல் என்பது துடைப்பம் கொண்டு கோவிலைத் தூய்மை செய்தலைக்குறிக்கும். மெழுகிடுதல் என்பது சாணத்தால் தரையை மெழுகித் தூய்மை செய்தலைக்குறிக்கும். இவ்வகைப்பணிகளுக்கும் பிற பணிகளுக்கும் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் பணியமர்த்தப்பட்டிருப்பினும், குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவரடியார் என்று அழைக்கப்பட்ட பெண்கள் இருந்தனர். அலகிடுதல், மெழுக்கிடுதல், பூத்தொடுத்தல் ஆகியவை தவிர தேவாரம், திருவாசகம் ஓதுதல்(திருப்பதியம் பாடுதல்), நடனம் ஆடுதல், அம்மனை எழுந்தருளுவிக்கும்போது அம்மனுக்குக் கவரி வீசுதல் ஆகியவற்றை இந்தத் தேவரடியார்கள் செய்தனர். இவர்கள் பதியிலார், தளிச்சேரிப்பெண்டுகள் என்று அழைக்கப்பட்டனர். ஏறக்குறைய எல்லாக்கோயில்களிலுமே தேவரடியார்கள் தொண்டு செய்து வந்தனர் எனத் தெரிகின்றது.

         கோயில்களில் நாள்தோறும் ஆறு சந்திப் பூசை வழிபாடு நிகழ்ந்தது.  விழாக்கள் பல கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு மாதத்திலும் மாத விழாக்களும், ஆண்டுக்கொருமுறை பெருவிழாவும் (பிரம்மோத்சவம்) நடைபெற்றன. சிவராத்திரி, சங்கராந்தி, உத்தராயணம், மற்றும் கிரகணங்கள் நிகழ்ந்த நாள்கள் ஆகிய சிறப்பு நாள்களிலும் விழாக்கள் எடுக்கப்பட்டன. மன்னர்கள் பிறந்த நட்சத்திரங்களிலும் விழா எடுக்கப்பட்டது. விழாக்களின்போது தேவரடியார்கள்  சாந்திக்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக்கூத்து ஆகிய கூத்துகள் நிகழ்த்தினர். (கூத்து நிகழ்த்தும் ஆண்களும் இருந்தனர்.) சமய நூல்கள் கோயில்களில் படிக்கப்பட்டன. அரசர்களும் கோயில் விழாக்களை நேரில் கண்டு களித்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.         

         கோயில்கள் இறைவழிபாட்டு இடங்களாக மட்டுமன்றி சமுதாயப்பணிகள் நடைபெற்ற இடங்களாகவும், பொருளாதார மையங்களாகவும் விளங்கின. இன்னலுற்ற மக்களுக்குப் புகலிடங்களாகவும் பயன்பட்டன. வறட்சியிலும், பஞ்சத்திலும் குடிமக்களுக்குக் கோயில்களிடமிருந்து பொருளுதவி கிடைத்தது. பஞ்சம் தீர்ந்தபிறகு கடன் திருப்பித் தரப்பட்டது. கோயில்களில் நந்தா விளக்கு, சந்தியா தீபம் ஆகிய நிவந்தங்களுக்காக விடப்படும் ஆடுகள் (ஒவ்வொரு விளக்குக்கும் தொண்ணூறு ஆடுகள் என்ற கணக்கில்) இடையர்களுக்குத் தரப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்களாக அமைந்தன. விளக்குகளுக்கான எண்ணையைக் கோயிலுக்கு வழங்கவேண்டியது அவர்கள் பொறுப்பு.

         மக்கள் பலர் தம் எண்ணங்கள் நிறைவேறவேண்டும் என்று இறைவன் முன்பு வேண்டுதல் (பிரார்த்தனை) செய்துகொண்டு காணிக்கை செலுத்திக்கொள்ளும் வழக்கம் பதின்மூன்றாம் நூற்றண்டிலேயே காணப்படுகிறது. மக்களில் ஒரு சிலர், கோயில் பணிகளுக்காகத் தம்மையே கோயிலுக்கு அடிமையாக விற்றுக்கொண்டமையும் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படுகிறது.

         கோயில்களைப்பற்றிய சிறப்புகளையும் செயல்பாடுகளையும் மேலே விளக்கமாக உரைத்ததன் நோக்கம் இச்செயல்பாடுகளில் ஒரு சிலவேனும்  கொங்கவிடங்கீசுவரர் கோயிலிலும் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நம் எண்ணத்தில் பதியவேண்டும் என்பதுதான். ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளாக எத்துணை ஆயிரம் மக்கள் இக்கோயிலினுள்ளே நடமாடி இறைவனை வழிபட்டிருப்பர். வழிபாடும் விழாவுமாக எத்துணை உயிர்ப்புடன் கோயில் விளங்கியிருக்கும். ஆனால், அந்த உயிர்ப்பு காணாமல் ஒழிந்து போய் கோயில் தற்போது சிதைந்து அதன் சீர்மை இழந்து, கருவறையும் அர்த்தமண்டபமும் மட்டிலுமே இடிந்துவிட்ட கட்டுமானங்களாய் எஞ்சியிருப்பதைக்காண்போர் நெஞ்சம்  கலக்கமுறும். திருச்சுற்று இல்லை; சுற்று மதில் இல்லை; திருச்சுற்றில் எழுந்தருளப்பெற்ற சிறு கோவில்கள் (சன்னதிகள்) இல்லை. வெற்றுப் பாழும் இடிந்த கூரையும் ஆங்காங்கே எறிந்து கிடக்கும் கட்டுமானக் கற்களும் அழிவுக் கோலம் காட்டுகின்றன. கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன் என்பார் கூறுவதை நோக்குங்கள்:


         “நான் ஒரு பழமைப்பித்தன். அருமையான ஆலயங்களைக் கண்டால் ஆனந்தக் கண்ணீர் விடுவேன். இடிந்த கோயில்களைக் கண்டால் நானும் இடிந்து போய்விடுவேன். பாழடைந்து இடிந்து கிடக்கும் ஆலயங்களுக்குச் சென்று அப்பிரகாரங்களில் சிறிதாவது படுத்துப்புரளுவதில் ஒரு ஆனந்தம். 


இத்தகைய அழிவின் விளிம்பிலும் கோயிலின் கருவறைச் சுவர்கள் மற்றும் அர்த்தமண்டபச் சுவர்கள் ஆகியன கல்வெட்டுகளின் கருவூலங்களாய்த் திகழ்கின்றன. தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமய வரலாற்றையும், சமுதாய வரலாற்றையும்  அறிய உதவும் மூலப்பொருள்களுள் ஒன்றாய் விளங்குவன கல்வெட்டுகளே. அத்தகு கல்வெட்டுகள் பத்து இங்குள்ளன. முதல் கல்வெட்டு, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து அஞ்சாதகண்ட பிரமாராயன் என்பவர் இக்கோயிலில் சுப்பிரமணியப் பிள்ளையாரை எழுந்தருளிவித்தார் என்னும் செய்தியைக் கூறுகிறது. பிரமாராயன் (பிரமமாராயன் எனவும் கூறப்படுவர்) என்பது அரசு அதிகாரிகளில் மிக உயர்ந்த பதவியைக் குறிக்கும் சொல். படைத்தளபதியாகவும் மந்திரியாகவும் பொறுப்புடையவர். இவர் வடுகக்கொத்து என்னும் படைப்பிரிவில் ஒரு படைத்தளபதியாக இருந்தார் என்று கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் தென்கொங்கு நாட்டில் உடுமலை அருகில் கடத்தூரில் அமைந்துள்ளது; ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்பது தொண்டை நாடு. முதன்மைச் சோழரின் (தஞ்சைச் சோழரின்) படைத்தளபதி ஒருவர் இக்கோயிலுக்குச் செய்திருக்கிறாரென்றால் கோயிலின் சிறப்பான நிலையை உணரலாம்.  

         அடுத்த கல்வெட்டு, தாராபுரத்துக் கீரனூர் ஊரைச்சேர்ந்த அரசு அதிகாரிகள் இருவர் கீரனூர் வாகீசுவரமுடையார் சிவன் கோயிலுக்கு நிலம் கொடையாக அளித்ததைக் குறிப்பிடுகிறது. கீரனூர் கோயிலுக்கு அளித்த கொடை கடத்தூர் கோயிலில் காணப்படுவது ஏன் என்னும் கேள்வி எழலாம். கொடையாகக் கொடுத்த நிலம் கடத்தூரில் அமைந்திருந்தது என்பதுதான் செய்தி. கோயிலுக்கு அளித்த நிவந்தங்களை அக்காலத்தே முறையாக ஆவணப்படுத்தியமைக்கு இக்கல்வெட்டும் ஒரு சான்று. கடத்தூர் கொங்கு நாட்டின் ஒரு பிரிவான கரைவழி நாட்டில் அமைந்திருந்தது எனக் கல்வெட்டு கூறுகிறது. மூன்றாம் கல்வெட்டு, கொங்கவிடங்கீசுவரர் கோயிலுக்கு சந்தியா தீபம் எரிப்பதற்காகக் காசு இரண்டு அச்சு ஒருவர் கொடையாக அளித்ததைக் கூறுகிறது. காசு கோயில் பண்டாரத்தில் ஒடுக்கப்பட்டது. அக்காசினைக்கொண்டு காரைத்தொழு என்னும் ஊரில் நிலம் வாங்கப்பட்டு அந்நிலதின் விளைச்சலில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஆண்டு முழுதும் சந்தியா தீபம் எரிக்கப்பட்டது.  கோயிலுக்கென்று தனியே கருவூலம் (பண்டாரம்) இருந்ததைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். அடுத்த கல்வெட்டிலும் இதுபோலவே சந்தியா தீபத்துக்காகக் காசு கொடுக்கப்பட்டு நிலம் வாங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. ஐந்தாவது கல்வெட்டு, சோழமாதேவி ஊரில் நிலம் கொடையாகத் தந்து, கொங்கவிடங்கீசுவரர் கோயிலில் அவிநாசிக்கூத்தரையும் நாச்சியாரையும் எழுந்தருளச்செய்துள்ளனர் என்னும் செய்தியைச் சொல்லுகிறது. கூத்தர் என்பது நடராசரையும், நாச்சியார் என்பது அம்மனையும் குறிப்பதாகும். எனவே, கொங்கவிடங்கர் கோயிலில், கோயில் நடைமுறைகளை நாம் மேலே விவரித்ததற்கிணங்க அம்மன் சன்னதி, முருகன் சன்னதி, நடராசர் சன்னதி ஆகிய சன்னதிகள் எழுப்பப்பட்ட செய்தியினை அறிகிறோம்.

         அடுத்து ஆறாம் கல்வெட்டு மிகவும் சிறப்புடைய ஒன்று. மக்கள் பலர் தம் எண்ணங்கள் நிறைவேறவேண்டும் என்று இறைவன் முன்பு வேண்டுதல் (பிரார்த்தனை) செய்துகொண்டு காணிக்கை செலுத்திக்கொள்ளும் வழக்கம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்துள்ளதை மேலே குறிப்பிட்டோம். அது போன்ற ஒரு நிகழ்வுக்குச் சான்றாக இக்கல்வெட்டு உள்ளது. கி.பி. 1233-ஆம் ஆண்டுக்குரிய இக்கல்வெட்டு, அரசன் வீரராசேந்திரனின் கிரகதோஷம் நீங்க வேணும் என்று அரசனின் அதிகாரிகளுள் ஒருவனான அணுத்திரப்பல்லவரையன் என்பான் இறைவர் அமுதுபடிக்கு அமுதுபடிப்புறமாகக் கண்ணாடிப்புத்தூரில் நிலம் கொடையாக வழங்கினான் என்று தெரிவிக்கிறது. அதனால் அரசன் வீரராசேந்திரனுக்குக் கிரக தோஷம் பிடித்திருந்தது என்பதும் அக்கால மக்கள் சோதிடத்தையும் வான சாத்திரத்தையும் அறிந்திருந்தார்கள் என்பதும் புலப்படும். அடுத்த கல்வெட்டு, கோட்டையில் சேனாபதிகளில் அவிமானராமப் பல்லவரையன் என்பான் விரதம் முடித்த வினாயகப் பிள்ளையாருக்கு அமுதுபடிக்காக அரசனின் சரக்கில் (கருவூலத்தில்) பொன் முதலாக வைக்கிறான். இப்பொன்னுக்கு அரசன் நிலம் ஒதுக்கி இந்த நிலத்துக்கு வரிவிலக்கும் அளிக்கிறான். இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் பிள்ளையார் கோயில் வழிபாட்டுக்குச் செலவிடப்படுகிறது. இந்தக் கல்வெட்டிலும் ஒரு சிறப்பான பகுதி உள்ளது. கோட்டையில் தெற்கில் அரசின் கீழ் நம் பேரால் விரதமுடித்த வினாயகப்பிள்ளையாற்கு அமுது படிக்கு என்று கல்வெட்டுவரி இருப்பதால் இந்தப்பகுதியில் “கோட்டை ஒன்று அமைந்திருந்தது என்பது அறியப்படுகிறது. தற்பொழுதும்கூட இவ்வூர் மக்கள் ஊரில் ஒரு பகுதியைக் கோட்டை என்று அழைக்கிறார்கள்.

         அடுத்துவரும் ஏழாவது கல்வெட்டு சமுதாய வரலாற்றைச் சொல்லும் சிறப்பான கல்வெட்டாகும். தென்கொங்கில் கம்மாளர்களுக்கு அரசன் வழங்கிய சிறப்புரிமைகளை இக்கல்வெட்டு கூறுகிறது. உழவுத்தொழிலை மேற்கொண்ட வெள்ளாளர்களுக்கும், தொழில் வினைக்கலைஞர்களுக்கும் இடையில் சமுதாய வேறுபாடும் பகைமையும்  கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் காலகட்டத்திலிருந்து தோற்றம் பெற்றுள்ளதாக தொல்லியல் வரலாறு கூறுகிறது. கம்மாளர்கள்  சமுதாயச் சூழ்நிலையில் உரிமைக்குறைபாடுகளைச் (Social disadvantages) சந்தித்தார்கள் எனத்தெரியவருகிறது. உழவருக்கு வேண்டிய தொழிற்கருவிகளைச் செய்து கொடுக்கும் நிலையில் கம்மாளர் இருந்ததால், கம்மாளர் என்போர் உழவர்களின் பணிமகன்களே என்று உழவர் எண்ணித் தம் மேலாதிக்கத்தைக் காட்டியிருக்கவேண்டும் எனலாம். வெள்ளாளர்களுக்கிருந்த உரிமைகள் கம்மாளர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் செருப்பணிந்து வெளியே செல்ல முடியாது. தங்கள் வீடுகளுக்குச் சாந்து (காரை) இட்டுக்கொள்ள இயலாது. தங்கள் வீடுகளில் நடைபெறும் நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதுவதற்கில்லை. பேரிகை (drums) என்னும் இசைக்கருவி கொட்டுவிக்க முடியாது. தம் வீடுகளுக்கு இரண்டு வாசல்கள் அமைத்துக்கொள்ள முடியாது. இவ்வகையான ஏற்றத் தாழ்வு உரிமைக்குறைகளைக் களைய கம்மாளர்களின் முறையீட்டின்மேல் அரசனுடைய சிறப்பு ஆணையால்தான் முடிந்தது. அத்தகைய சிறப்புரிமைகளைக் கம்மாளர்க்கு அரசன் வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

         மிகுதியுள்ள இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று, திருமடை வளாகத்தில் இருக்கும் தபசி சுந்தர நன்னெறி காட்டினான் என்பவர் கொங்கவிடங்கர் கோயிலுக்கு நந்தாவிளக்கு ஒன்றுக்காகப் பதினாறு காசு கொடை அளித்துள்ளான் என்றும், மற்றொன்று, கடத்தூரிலிருந்த மன்றாடிகளில் காவன் சோழன் என்பான் இறைவற்கு மகுடம் சாத்தினான் என்றும் கூறுகின்றன. திருமடை வளாகம் என்பது கோயிலைச் சுற்றியிருக்கும் வசிப்பிடத்தையும், மன்றாடி என்பது கால்நடை வளர்ப்போரையும், தபசி என்பது துறவிகளான சிவனடியார்களையும் குறிப்பன.

         இவ்வாறு, அரிய வரலாற்றுச் செய்திகளைத் தம்முள் கொண்டிருக்கும் கல்வெட்டுகள் இன்றும் நல்ல நிலையில் சிதைந்து போகாமல் படிக்கும் அளவுக்கு உள்ளன என்பது பெரிய பேறு. ஆனால், அழிவைத் தொட்டுக்கொண்டிருக்கும் கட்டுமானங்கள் சிதைந்து விழத்தொடங்குமானால் அரிய கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கும் கற்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போகும் அச்சமான சூழ்நிலை உள்ளது. மீண்டும் கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன் அவர்கள் கூறுவதை இங்கே தந்துள்ளேன்:

“ நான் ஒரு கல்வெட்டுப் பித்தன். கல்வெட்டுகளைப் படிக்கும்போதெல்லாம் என்னை மறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் அம்மன்னர்கள் வாழ்ந்த காலத்திற்கே சென்றுவிடுவேன். “



         கொங்கவிடங்கீசுவரர் கோவிலும் அதன் கல்வெட்டுகளும் நம்மைக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்றாலும் கோவில் அதன் உயிர்ப்பு இன்றிப் பாழ்பட்டு நிற்பதைக் காண்கையில் நாமும் இடிந்து போகாமல் கோயில் அதன் பழைய கட்டுமானத்துக்கு மீட்சி பெற என்ன செய்யலாம் என்பதில் எண்ணம், செயல் இரண்டினாலும் முயலவேண்டும். கோயில்களைப்பேணும்  அரசுத்துறை, தொல்லியல் துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஆவன செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.


        














துணை நின்ற நூல்கள் :
கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் டாக்டர் கே.கே.பிள்ளை.
தமிழக கலைகளும் கல்வெட்டுகளும் டாக்டர் மா. இராசமாணிக்கனார்.



து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
அலை பேசி : 9444939156.






























































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக