மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 24 பிப்ரவரி, 2014

மருதூர்-திம்மம்பாளையம் கல்வெட்டுகள்
                                                      து.சுந்தரம், கோவை
         கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் செந்தில் குமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் காரமடைப்பகுதியில் தொல்லியல் கள ஆய்வுப்பணியில் அண்மையில் ஈடுபட்டனர். அது சமயம், காரமடைக்கருகில் மருதூரில் உள்ள பசுவேசுவரர் கோவிலைக் காண நேரிட்டது. அக்கோவிலில், கருவறை அடித்தளப்பகுதியில் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. ஊர் மக்களிடம் இக்கோவிலைப்பற்றியும் கல்வெட்டுகள் பற்றியும் கேட்டறிந்ததில் கோவில் பழமையான ஒன்று என்றும், கல்வெட்டுகளைச் சிலர் வந்து பார்த்துப்போயுள்ளனர்; ஆனால், கல்வெட்டுகளில் என்ன செய்திகள் சொல்லப்பட்டன என்று இதுவரை ஊர் மக்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினர். கல்வெட்டின் ஒளிப்படங்கள்  எடுத்து ஆராய்ந்து பார்த்ததில், அவை தமிழகத்தொல்லியல் துறையினரால் 2003-ஆம் ஆண்டு படிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நான்கு கல்வெட்டுகள் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன.

         தொல்லியல் சின்னங்களையும், கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தல், அதன்வாயிலாகத்தெரியவரும் வரலாற்றுச் செய்திகளை வெளிக்கொணர்தல், மற்றும் அத்தகைய தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க ஒரு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகிய பணிமுயற்சிகளில்  நாங்கள் ஈடுபட்டுவருவதால் மருதூர் மக்களுக்குத் தம் ஊரில் அமைந்துள்ள கோவிலின் பழமை, கல்வெட்டுகள் சொல்லும் செய்திகளைத் தெரியப்படுத்தவே  இச்செய்திக்கட்டுரை.

         எங்கோ ஒரு மூலையில், ஒரு சிற்றூரில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கோவிலும் வரலாற்றுச்செய்திகளைத் தாங்கியிருப்பதைக்காண்கிறோம். அந்த வகையில், மருதூரும் இடம் பெற்றுள்ளது. தமிழகத் தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்ட கல்வெட்டுச் செய்திகளிலிருந்து பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன.

    அ) இக்கோவில் கல்வெட்டுகள், கொங்கு நாட்டை ஆட்சி செய்த                   கொங்குப்பாண்டியர்களில் ஒருவரான சடையவர்மன் சுந்தரபாண்டியன்             காலத்தைச் சேர்ந்தவை. சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலம் கி.பி. 1285            கி.பி. 1305 ஆகும். எனவே, இக்கோவில் எழுநூறு ஆண்டுப்பழமை             வாய்ந்தது என அறிகிறோம்.

    ஆ) தற்போது பசுவேசுவரர் என்று வழங்கும் இறைவனின் (சிவன்) பெயர் கல்வெட்டில் மருதவனப்பெருமாள் எனக்குறிக்கப்படுகிறது.
கட்டுரை ஆசிரியர் குறிப்பு: பழங்காலத்தில், இப்பகுதி மருதமரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாக இருந்திருக்கலாம். எனவே, இறைவன் பெயரும் மருதவனப்பெருமாள் என்று அமைந்திருக்கக்கூடும். இந்த ஊரின் பெயரும் “மருதூர் என அமைந்துள்ளதை நோக்குமிடத்து இக்கருத்து வலுப்பெறுகிறது.
    இ) இவ்வூரில் பானை வனையும் குயவர் மரபினர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) இக்கோவிலுக்கு சந்தியா தீப விளக்கு எரிப்பதற்காகப் பணம் பத்து கொடையாக அளித்துள்ளார். குயவர் மரபினர் அக்காலத்தே “வேட்கோவர்  என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர். மற்றொரு வேட்கோவர், செயபாலன் வயிரதேவர் என்பவர் நூறு பணம் கொடையாக அளித்துள்ளார். கொடை எந்த அறச்செயலுக்காக என்பது தெரியவில்லை. கல்வெட்டு, “காணியுடைய வேட்கோவரில்  எனக்குறிப்பிடுவதால், இவ்வூரில் இருந்த வேட்கோவர் நில உரிமையுடைவர்களாக இருந்திருக்கிறார்கள் எனத்தெரியவருகிறது.
கட்டுரை ஆசிரியர் குறிப்பு: அக்காலத்தே, ஊர் நிலங்கள் யாவும் அரசின் உடைமையாக இருந்தன. அரசு, ஒரு சிலருக்கு நிலம் காணியாக வழங்கி உரிமையாக்கும். நிலத்தின் விளைச்சலிலிருந்து அக்காணியாளர்கள் அரசுக்கு நிலவரி செலுத்துவர்.
    ஈ)  ஒரு துண்டுக்கல்வெட்டில் “கொம்மை காமிண்டர்களோம் என்னும் தொடர் வருகின்றது. “காமிண்டர்  என்பது  நிலக்கிழார் பட்டத்தைக்குறிக்கும். கொம்மை என்பது அந்த நிலக்கிழார்களின் (வேளாளர்கள்) ஒரு குலப்பிரிவைக்குறிப்பதாகலாம்.
    உ)  கல்வெட்டில் “குளிகை என்னும் தொடர் வருகின்றது. இது அக்காலத்தே வழங்கிய ஒரு வகை நாணயத்தைக்குறிக்கும்.
    ஊ)  சந்தியா தீப விளக்கு எரிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தைக் கோவிலின் பணியாளர்களான சிவப்பிராமணர்கள் பெற்றுக்கொண்டு ( கல்வெட்டு, “கைக்கொண்டோம்”  எனக்குறிப்பிடுகிறது.) விளக்கெரிக்கும் அறச்செயலின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். கல்வெட்டில், “திருநட்ட னான சித்திரமேழிப்பட்டன்”  மற்றும் “ விக்கிரமசோழ பட்டன் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.




புதிய கல்வெட்டு :-  தொல்லியல் துறை 2003_ஆம் ஆண்டு தொகுத்த கல்வெட்டுகளைத்தவிர ஒரு புதிய கல்வெட்டுப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் தெரிய வரும் செய்தி பின்வருமாறு.

அ) இக்கல்வெட்டும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச்சேர்ந்தது.
     ஆ) மூடுதுறை என்னும் ஊர்ப்பகுதி கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. மருதூரின் சுற்றுப்பகுதியில் மூடுதுறை அமைந்திருக்கக்கூடும்.

   இ) கோவிலுக்கு இரு கலம் நெல் கொடை அளிக்கப்பட்டிருக்கிறது. கொடை அளித்தவர் கைக்கோளர் பிரிவைச்சேர்ந்தவராக இருக்கக்கூடும்.


திம்மம்பாளையம் கல்வெட்டு: 

மேற்படி ஆய்வுக்குழுவினரால் திம்மம்பாளையம் மாகாளியம்மன் கோவிலின் வாயில்படி அருகே ஒரு துண்டுக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. கல்வெட்டு முழுமையாக இல்லை. உடைந்த கல்லில் பெரிய எழுத்துகளாலான ஆறுவரிகள் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளது. 1915-ஆம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு. ஏறத்தாழ நூறாண்டுப்பழமையான ஒன்று. கல்வெட்டின் பாடம் (வாசகம்) பின்வருமாறு:

           1915 வரு
           சூலை மீ
           2 தேதி
           ஊ . நஞ்
           சுண்ட
           கவுண்

தற்போது ஊர் மணியமாக இருப்பவர் புஜங்க கவுண்டர் என்பவர் ஆவார். அவருடைய பாட்டனார் நஞ்சுண்ட கவுண்டர் என்பவர் இங்கு அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலையும், அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவிலையும் புதுப்பித்துக்கட்டினார் என்பது ஊர்ச்செய்தி. கல்வெட்டு, இவ்விரு கோவிலகளின் திருப்பணி நடைபெற்ற காலம் 1915, ஜூலை 2-ஆம் தேதி என்பதைத்தெரிவிக்கிறது.


        

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

4 கருத்துகள்:

  1. காணியுடைய வேட்கோவர் என்பதற்கு அர்த்தம் தவறு.

    இதற்கு சரியான பொருள் அந்த காணியில் பயன்படுத்தப்படும் அனைத்துவிதமான மண்பாண்டங்களையும் விற்கும் உரிமை இவருக்கும் மட்டுமே உரியது.

    மாறாக காணியுடைய என்றால் நிலவுடமையாளர் என்று பொருள் அல்ல

    அதே ஒரு வெள்ளாளருக்கு காணியுடைய என்று வந்தால்தான் அது நிலவுடைமையை குறிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளாளர் சாதி வெள்ளைக்காரன் குடுத்தது நீங்க எப்படி கநில உடைமை ஆவீர்கள்

      நீக்கு
  2. சரியான கருத்து வேட்கோவர்கள் (குலாலர்கள்) நிலவுடமையாலராகவும் இருந்து உள்ளனர்.

    பதிலளிநீக்கு
  3. வேட்கோவர் குல குயவர் நிலவுடைமையாளர் என்று கல்வெட்டுகளில் சான்று இருக்கிறது குலாலர் குல வேளார்.

    பதிலளிநீக்கு