மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 12 மே, 2014

குருநல்லிபாளையம் சூலக்கல் கல்வெட்டு
                                              து.சுந்தரம், கோவை

       நெகமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொல்லியல் தொடர்பான நடுகல் சிற்பங்களும், கல்வெட்டுகளும் அண்மைக் காலத்தில் கிடைத்து வந்துள்ளன. அந்த வகையில், நெகமத்துக்கருகில் அமைந்துள்ள குருநல்லிபாளையம் கிராமத்தில் சூலக்கல் என அழைக்கப்படும் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த, வரலாற்று ஆர்வலர் ருத்திரன் என்பவர்  தெரிவித்த தகவலின் அடிப்படையில் கோவை, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் நேரில் பார்வையிடச்சென்றார். ஊர்க்கவுண்டர் வேலுச்சாமி அவர்களும், அவரது நண்பரான அருணாசலம் என்பவரும் சூலக்கல் இருந்த இடத்துக்கு அழைத்துச்சென்றனர். ருத்திரனும் உடன் இருந்தார்.

           குருநல்லிபாளையத்தில்  தற்போது  பைரவர் கோயில்  அமைந்துள்ளது.
அதற்கு எதிர்ப்புறத்தில் சற்றே மேட்டுப்பாங்கான இடத்தில் விவசாய நிலத்தில்,
ஒரு சிறிய வேப்பமரத்தை ஒட்டிச்சாய்ந்த நிலையில், செடி புதர்களுக்கிடையில் உயரமாக குத்துப்பாறைக்கல் காணப்பட்டது. வெளியே தெரிந்த பக்கத்தில் ஒரு திரிசூல உருவம் செதுக்கப்பட்டிருந்தது. மறுபுறம் சரியாகப் பார்க்க இயலாததால், ஊர்க்கவுண்டரின் உதவிபெற்று ஆட்களைக்கொண்டு செடி,கொடிகளை அகற்றிவிட்டு, மண்ணைத்தோண்டிக் கற்பாறையை நிமிர்த்துச் சாய்த்துப்பார்த்ததில் எழுத்துகள் காணப்பட்டன. பாறையை நீரால் கழுவித்தூய்மைப்படுத்தி, கருப்பு மசியால் படியெடுத்து, கல்வெட்டு வாசகத்தைப் படித்ததில் பின் வரும் செய்திகள் புலனாயின.

         குறுநீலி என்னும் கிராமம், கோயில் ஒன்றுக்குத் தேவதானமாகச் சர்வமானியமாகத் தானம் அளிக்கப்பட்டது என்பது செய்தி. குறுநீலி கிராமம் தேவதானமாகக் கொடுக்கப்பட்டதால், குடி மக்கள் செலுத்தும் கடமை போன்ற அரசு வருமானம் கோவிலுக்கே பயன்படக்கூடியது என்னும் கருத்தை உள்ளடக்கி, கல்வெட்டு வாசகம் அமைந்துள்ளது. இந்தத் தானம் அளிக்கப்பட்ட காலம் சர்வதாரி என்னும் வருடத்தில் தை மாதம் ஆகும். கல்வெட்டின் முதல் ஆறு வரிகள் மிகவும் சிதைந்து போயிருந்த நிலையில், அந்த ஆறு வரிகள் படிக்க இயலவில்லை. எனவே, தானம் எந்த அரசர் காலத்தில் அளிக்கப்பட்டது என்னும் செய்தியும், எந்தக்கோயிலுக்குத் தானம் அளிக்கப்பட்டது என்னும் செய்தியும் உறுதிபடத்தெரியவில்லை. ஆனால், கல்வெட்டுகளில் காணப்படும் “ தேவதானம்  என்னும் சொல், சிவன் கோவிலுக்கு அளிக்கப்பட்ட தானத்தையே குறிப்பதால், இந்த தேவதானக்கொடையும் ஒரு சிவன் கோவிலுக்குரியது என்பதில் ஐயமில்லை. குருநல்லிபாளையத்தில் எந்த ஒரு சிவன் கோவிலும் இல்லை என்பதாலும், இவ்வூருக்கருகில் அமைந்துள்ள தேவனாம்பாளையத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் என்னும் பெயரில் சிவன் கோவில் இருப்பதாலும், இங்குக் குறிப்பிட்ட கொடையானது தேவனாம்பாளையம் சிவன் கோவிலைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக்கருத நிறைய வாய்ப்புண்டு.

         மேற்படிக் கருத்தை உறுதிப்படுத்துவது போன்று, சில சான்றுகள் தென்படுகின்றன. குருநல்லிபாளையம் எனத் தற்போது அழைக்கப்படும் இந்த ஊர், கல்வெட்டில் “ குறு நீலி “  என்ற பழம்பெயரால் வழங்கப்பட்டு வந்துள்ளது. தேவனாம்பாளையம் சிவன் கோவிலில், மொத்தம் எட்டு பழங்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் கொங்குச்சோழர்களில் ஒருவனான மூன்றாம் விக்கிரம சோழன் காலத்துக்கல்வெட்டுகள் ஆகும். இவனுடைய ஆட்சிக்காலம், கி.பி. 1273 முதல் கி.பி. 1305 வரையிலானது. இவ்வரசனுடைய இருபத்தொன்பது, முப்பது ஆகிய ஆட்சியாண்டுகளில் (அதாவது கி.பி. 1302-1303), இக்கோவிலில் பெரியதொரு திருப்பணி நடைபெற்றிருக்க வேண்டும் எனக்கல்வெட்டுச் செய்திகளால் அறிகிறோம். அது சமயம், குறுநீலியைச்சேர்ந்த வெள்ளாளர்கள் பலர் கோவிலுக்குக் கொடை அளித்துள்ள செய்தி தேவனாம்பாளையத்து சிவன் கோவில் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. எனவே, குறுநீலி கிராமத்தவர்க்கும் தேவனாம்பாளையம் சிவன் கோவிலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு  தெளிவாகிறது. இதிலிருந்து, குறுநீலி என்னும் குரு நல்லிபாளையத்து சூலக்கல்லில் குறிப்பிடப்படுகின்ற தேவதானக்கொடை தேவனாம்பாளையம் சிவன் கோவிலுக்கு அளிக்கப்பட்டது எனக்கொள்வதில் தவறில்லை.

         மேலும், கல்வெட்டில் வரும் ஒரு வரியானது,

“ ............................................ப் பிள்ளையா
 ற்குப் பூசைக்கு ....

என்று காணப்படுவதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், தானம் எந்த இறைவர்க்கு அளிக்கப்பட்டிருக்கக்கூடும் என யூகிக்கலாம். “பிள்ளையார்(ற்)  என்னும் தொடர் கல்வெட்டில் பொதுவாக மூன்று கடவுளர்களைக் குறிப்பதாக அமையும். “மூத்த பிள்ளையார் என்னும் தொடர் வினாயகரையும், “இளைய பிள்ளையார்“ என்னும் தொடர் முருகனையும், “க்‌ஷேத்திரப்பால பிள்ளையார் என்னும் தொடர் கால பைரவரையும் குறிக்கும். மேற்படி கல்வெட்டு வரியையும், இக்குறிப்புகளையும் கொண்டு, தேவனாம்பாளையம் சிவன் கோவிலில் எழுந்தருளியிருந்த முருகன் திருச்சன்னதியின் பூசைக்கோ, அல்லது காலபைரவர் திருச்சன்னதியின் பூசைக்கோ தானம் அளிக்கப்பட்டது எனக்கருதலாம்.

         தற்போது, குறுநீலியில் பைரவர் கோவில் இருப்பதைப்பார்க்கும்போது, கொடை காலபைரவர்க்காகத் தரப்பட்டது என்றும், காலபைரவர், தேவனாம்பாளையத்திலிருந்து கொணரப்பட்டு ஏதோ ஒரு காரணத்துக்காகக் குறு நீலியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருத வாய்ப்புள்ளது. இவ்வாறு, பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ள- கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சூலக்கல், இப்பகுதி வரலாற்றுத் தொடர்புடைய ஒன்று என்பதை உறுதி செய்கிறது. இச்சூலக்கல், மீளாய்வுக்கு உட்படுத்தப்படும்போது மேலும் பல புதிய செய்திகளைத் தரக்கூடும்.

கல்வெட்டின் பாடம் வருமாறு :

1.  -   6. வரிகளில் எழுத்துகள் தேய்ந்துள்ளன.
7.   . . . ப்பிள்ளையா
8.   ற்குப்பூசைக்கு சறு
9.   வதாரி வருஷத்து தை
10.  மாதம் முதலிந்த நா
11.   ட்டில் குறுநீலி தேவதா
12.   நமாகச்சறுவமானிய
13.   மாகக்குடுத்தோம் சந்
14.   திராதித்தவரைக்கு இக்
15.   கோயிலி(ல்) .. .. ..  னுகு
16.   ..  ..   ..  ..  பட்ட குடி
17.   மைப்பாடுந்தாழ்வற நட
18.   த்தபெ(று)வார்களாக
19.   இப்படிக்கு இது பந்மாஹே
20.   ஸ்வர இர‌ஷை




கல்வெட்டு காணப்பட்ட இடம்-அரசாணிக்காய்த்தோட்டம்








து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
9444939156.

  

         

2 கருத்துகள்:

  1. மிக நல்ல தகவல் சார் எங்க ஊரிலும் 2 சூலம் பொறிக்கப்பட்ட கற்கள் உள்ளது..அவை இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை..
    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ளது..செல் பேசி 9047514844

    பதிலளிநீக்கு