காணாமல் போன கடவுள் சிலைகள்
முகலாயர்களின் படையெடுப்பின்போது தென்னகத்தில் பல கோயில்கள்
தாக்குதல்களுக்கு உள்ளாயின. கட்டுமானப்பகுதிகளும் சிலைகளும் உடைக்கப்பட்டன.
மூலஸ்தானத்து விக்கிரகங்கள் பல காணாமல் போயின. ஒரு சில கோயில்களில் அவ்விக்கிரகங்களைக்
காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்ட நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில்
நடைபெற்றுள்ளது. முகலாயப்பேரரசன் ஔரங்கசீப் தென்னிந்தியாவில் கி.பி.1688-இல்
நடத்திய படையெடுப்பின்போது மராட்டர்களின் மீதும் காஞ்சியின் மீதும் தாக்குதல்
நடத்தினான். அதுசமயம் தென்னிந்தியாவின் வேறு சில பகுதிகளும்
தாக்குதல்களுக்குள்ளாயின. இத்தாக்குதல்களின்போது கோயில் சிலைகள் உடைக்கப்பட்டன.
காஞ்சித்தாக்குதலைத்தெரிந்து முன்னெச்சரிக்கையாக காஞ்சியிலிருந்த மூன்று பெரிய
கோயில்களின் நிர்வாகத்தினர் கோயில்களின் இறைவர் திருமேனிகளை அடையாளம் தெரியாதவாறு
தோற்றத்தை மாற்றி, திருச்சி மாவட்டம் உடையார்பாளையத்துக்காடுகளில் ரகசியமாக
ஒளித்து வைத்தனர். முகலாயரின் தாக்குதல் ஆபத்து நீங்கி, காஞ்சியின் பாதுகாப்பு
உறுதியானதும் மீண்டும் பெருமாளைக் காஞ்சிக்குக்கொண்டுவர முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. அப்போது உடையார்பாளையத்து ஆட்சித்தலைவனாக இருந்தவன், பெருமாள்
மீது கொண்ட பக்தியால் பெருமாள் திருமேனியைத்தர மறுக்கவே,காஞ்சியின் ஜீயரான
ஸ்ரீனிவாசர் என்னும் ஆத்தான் திருவேங்கட ராமானுஜர் குறுக்கிட்டார். அவரது சீடரான
ராஜா லாலா தோடர்மல் என்பவனின் உதவியை நாடினார். ராஜா தோடர்மல், கர்னாடக நவாபின்
படைத்தலைவனாக இருந்தவன். அவன், உடையார்பாளையத்துத் தலைவனைப் படைகொண்டு
தாக்கப்போவதாக வெருட்டிப்பணியவைத்து, பெருமாளின் சிலையை மீண்டும் காஞ்சியில்
பிரதிஷ்டை செய்துவைத்தான். இந்நிகழ்ச்சி, மிகச்சிறப்பான முறையில் கொண்டாட்டத்துடன்
நடந்தேறியது. இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் காஞ்சியில் உடையார்பாளையம்
திருவிழா என்ற பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்பெறுகிறது.
இச்செய்திக்கு ஆதாரமாக கல்வெட்டுச்செய்தி ஒன்று உண்டு. காஞ்சி
வரதராஜப்பெருமாள் கோயில் தாயார் சன்னதிக்கெதிரில் உள்ள பலகைக்கல்வெட்டில்
இச்செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஜீயர் திருவேங்கட ராமானுஜரின் வேண்டுகோளை ஏற்று
ராஜா லாலா தோடர்மல், பெருமாளின் திருமேனியைத் திரும்பக்கொண்டுவந்து மீண்டும்
பிரதிஷ்டை செய்து வைத்ததைக்குறிப்பிடுகிறது.
கல்வெட்டின் காலம் கி.பி. 1710(விரோதி வருடம்,பால்குன
மாதம்). கல்வெட்டின் முதல் பகுதியில், இரண்டு வடமொழிச்செய்யுள்களும், அவற்றுக்கான
தெலுங்கு மொழிபெயர்ப்பு வரிகளும், அவற்றையடுத்து நாகரி எழுத்துகளில் பன்னிரண்டு
வரிகளில் சிலை மீட்புச்செய்தியும் உள்ளன.
இங்கே
குறிப்பிட்ட ராஜா தோடர்மல், செஞ்சியின் மீது படையெடுத்து, புகழ்பெற்ற ராஜா
தேசிங்கைத்தோற்கடித்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: துணை நின்ற நூல் :- இந்தியத் தொல்லியல்
துறையின் 1919-20-ஆம் ஆண்டறிக்கை.
கல்வெட்டு
ஆராய்ச்சியாளர்,
கோவை-641004.
அலை
பேசி: 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக