மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 19 பிப்ரவரி, 2014

கானூர் பாறைக்கல்வெட்டு
                                                       து.சுந்தரம், கோவை.


         தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் கல்வெட்டுகள் அவ்வவ்வூர்களில் அமைந்துள்ள கோவில்களின் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றின் சுவர்ப்பகுதிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மைக் கல்வெட்டுகள் சில, ஊர்ப்பகுதியில் கோவில்களின் முன்புறத்திலோ, எல்லைப்புறத்திலோ அல்லது ஏதேனும் வேளாண் நிலத்திலோ ஒரு தனிப்பாறைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. மற்றும் சில கல்வெட்டுகள், கோவில் மண்டபத்தூண்கள், கருடகம்பம் எனக் கொங்குப்பகுதியில் அழைக்கப்படும் விளக்குத்தூணின் மண்டபப்பகுதிகள், கோவில் படிக்கட்டுகள், ஏரி குளங்களின் மதகுகள் போன்றவற்றிலும் பொறிக்கப்படுகின்றன.

         இக்கட்டுரை ஆசிரியரான கல்வெட்டு ஆராய்ச்சியாளர், அவிநாசி  அருகில் இருக்கும் கருவலூர்ப்பகுதியில் ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது, மேலே குறிப்பிட்ட தனிப்பாறைக் கல்வெட்டு ஒன்றைக்காண நேரிட்டது. கருவலூருக்கு மிக அருகில் மூன்று அல்லது நான்கு கி.மீ. தொலைவில் உள்ள கஸ்பா கானூர் என்னும் சிற்றூரில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் மண் படிந்த நிலையில் ஒரு பாறைக்கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அண்மையில் இருக்கும் கருவலூர் பெருமாள் கோவிலில் ஒரே ஒரு கல்வெட்டு, தொல்லியல் துறையினரால் 2003-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்பகுதியில் இந்தத் தனிப்பாறைக் கல்வெட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 2006-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டிருக்கும் “கோவை மாவட்டக்கல்வெட்டுகள்”  நூலில் இந்தத் தனிக்கல்வெட்டுப்பதிப்பு காணப்படவில்லை. அவிநாசியைச்சேர்ந்த கல்வெட்டு அறிஞர் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள் இந்தக்கல்வெட்டைப் படித்திருக்கிறார். ஆனாலும், இந்தக் கல்வெட்டைப்பற்றிய விவரங்கள், கல்வெட்டில் இருக்கும் செய்திகள், வரலாற்றுச் சின்னமாகத் தங்கள் ஊரில் இக்கல்வெட்டு அமைந்திருக்கும் சிறப்பு ஆகியவை பற்றி இச் சிற்றூர் மக்களுக்குத் தெரியவரவில்லை. எனவே, இப்போது கல்வெட்டு விவரங்கள் இவ்வூர் மக்களைச் சென்றடைந்தால், ஊரார் வரலாற்றை அறிந்துகொள்வதோடு, தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வும் பெறுவர் என்னும் காரணத்தால் இக்கட்டுரை எழுதப்படுகிறது. கல்வெட்டு வாசகங்களை ஆய்வு செய்ததில் கீழ்வரும் செய்திகள் அறியப்படுகின்றன.



         கல்வெட்டு மொத்தம் பதினெட்டு வரிகளைக் கொண்டுள்ளது. எல்லா வரிகளும் குறைந்த சிதைவுகளோடு, படிக்கக்கூடிய நிலையில் அமைந்துள்ளது. கல்வெட்டு, கொங்குச்சோழ அரசனான வீரராசேந்திரனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. எனவே, கல்வெட்டு, கி.பி. 1233-ஆம் ஆண்டைச்சேர்ந்தது. 780 ஆண்டுகள் பழமையுடையது. கருவலூரில் இருந்த  வீரராசேந்திர ஈசுவரம்”  என்னும் பெயரமைந்த சிவன் கோவிலுக்கு, கோவிலைச்சேர்ந்த சிவனடியார் துறவிகளில் ஒருவரான ஈசுவர தேவன் என்பவர், கோவிலின் உச்சிச் சந்தி வழிபாட்டுக்கு வேண்டிய தினை அரிசி நாள்தோறும் ஒரு சோழிய நாழி  அளவு கிடைக்குமாறு முதலீடாக நான்கு அச்சுக்காசுகள் கொடையாக அளித்துள்ளார். இந்த நான்கு அச்சுக்காசுகளைப் பெற்றுக்கொண்ட கோவில் சிவப்பிராமணர் திருநட்டன் என்னும் சித்திரமேழிப்பட்டன் என்பவர் இந்த தன்மத்தைச் சூரியனும் சந்திரனும் உள்ளவரை தொடர்ந்து நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறார். இந்தத் தன்மம் நடைபெறுவதைக் கோவிலின் நிர்வாகத்தைச் சேர்ந்த பன்மாகேசுவரர் என்பார் கண்காணித்து வருவர்.
          
        கல்வெட்டு, “ கருவலூர் ஆளுடையார் வீரராசேந்திர ஈசுவரமுடையார்
கோயில் “ என்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து, கருவலூரில், அரசனின் பெயரால் சிவன் கோவில் கட்டப்பட்டிருந்தது தெரியவருகிறது. கருவலூரில் உள்ள பெருமாள் கோவில் கல்வெட்டு பெருமாள் கோவிலை “ வீரராசேந்திர விண்ணகரம் “ எனக்குறிப்பிடுவதால் அரசன் வீரராசேந்திரன் தன் பெயரால் சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும்  ஆக இரண்டு கோவில்களைக் கட்டியுள்ளான் என அறிகிறோம். தற்போது, கருவலூரில் உள்ள சிவன் கோவிலில் கல்வெட்டு எதுவும் இல்லாத காரணத்தால் கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் சிவன் கோவிலும் தற்போதுள்ள சிவன் கோவிலும் ஒன்றுதானா என்பது ஆய்வுக்குரியது. கோவில்களில் தங்கி, இறைத்தொண்டு செய்யும் சிவனடியார்களான துறவிகளைக் கல்வெட்டு, கும்பிட்டிருக்கும் தவசியர் எனக்கூறுகிறது. கோவில் பூசைகள், ஆறு சந்திக்காலங்களில் நடைபெற்று வந்தன. கல்வெட்டுகள் அவற்றை, சிறுகாலைச் சந்தி (சூரிய உதய காலத்தில் செய்யும் பூசை), காலைச்சந்தி, உச்சிச்சந்தி, அந்தி (மாலைச்சந்தி), இராக்காலம், அர்த்தயாமம் (நள்ளிரவு) எனக்குறிப்பிடுகின்றன. கோவில் வழிபாடுகளுக்கு, அரிசி, கண்பு(கம்பு), தினை ஆகிய தானியங்களும், காய்கறிகள், அடைக்காய்(பாக்கு), இலை(வெற்றிலை) ஆகியவையும், மற்றும் எண்ணை ஆகியனவும் கொடையாக அளிக்கும் வழக்கம் இருந்தது.



இங்கே, கோவில் தவசி, தினை அரிசியைக் கொடையாக அளித்துள்ளார். கொடை நிவந்தத்தை நடத்த ஒப்புக்கொண்ட கோவில் பிராமணர் கோவிலில் பணி செய்யும் உரிமை பெற்றவர் என்பது “ காணி உடைய சிவப்பிராமணன் “ என்னும் கல்வெட்டுத் தொடர் வாயிலாக அறிகிறோம். மேலும் சிவப்பிராமணர்
“காசுவ கோத்திரத்தைச்சேர்ந்தவர் எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. கல்வெட்டுகளில் பெரும்பாலும் சிவப்பிராமணர்களின் கோத்திரத்தைக் குறிப்பிடுவது  வழக்கம். இங்கு, “காசுவ கோத்திரம் என்பது “காஸ்யப  கோத்திரத்தைக்குறிக்கும். கொடையாக அளிக்கப்படும் தினைத் தானியத்தின் அளவு கல்வெட்டில் “சோழிய நாழி”  எனச் சுட்டப்படுகிறது. நாழி என்பது அக்காலத்தே இருந்த முகத்தல் அளவைக்குறிக்கும் சொல்லாகும். சோழிய நாழி என்பது அப்போது வழக்கில் இருந்த அளவுக்கருவியின் பெயரைக்குறிக்கும்.   நாராய நாழி, காண நாழி, பரகேசரி நாழி “ என்பன போன்ற பலவகை நாழிக்கருவிகள் அக்காலத்தே வழக்கில் இருந்தன. “அச்சுஎன்பது ஒருவகை நாணய வகையாகும்.

         இறுதியாக, கொடை நிவந்தமானது தடையின்றி நெடுங்காலம் நடைபெறவேண்டும் என்பதற்காகக் கோவில்களுக்கு அளிக்கப்படும் நிவந்தங்களைக் கண்காணிப்பதற்காகப் “பன்மாகேச்வரர்கள்”  என்னும் சிவனடியார்கள் நியமிக்கப்பெற்றிருந்தனர்.

         ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த, கோவில் சார்ந்த வாழ்க்கை நிலையைச் சொல்லுகின்ற ஒரு கல்வெட்டு தம் ஊரில் இருப்பதற்காகக் கானூர் மக்கள் பெருமை கொள்ளும் அதே வேளையில், அக்கல்வெட்டை முறையாகப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் எண்ணத்தில் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.



 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக