கோவை-பேரூர்
தமிழ்க்கல்லூரி
கீரணத்தம் தெய்வசிகாமணி கவுண்டர்-மருதம்மாள்
நினைவு அறக்கட்டளை
சிறப்புச்சொற்பொழிவு
– முனைவர் இரா.பூங்குன்றன், கல்வெட்டறிஞர்.
தலைப்பு : கொங்கு
நாட்டுக்கோயில்கள்
கட்டுரை வடிவம் : து.சுந்தரம்,கோவை
கோயில் கட்டும் மரபு
சங்ககாலம் தொடக்கம். ஆனைமலையில் கல்பதுக்கை ஒன்றில் கோயில் கருவறை போன்ற சதுர
அமைப்பு உள்ளது. மாமல்லபுரத்தில் அண்மையில் முருகன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இம்முருகன் கோயில் பற்றிப்பல்லவமன்னன் தந்திவர்மனின் கல்வெட்டில் குறிப்பு
காணப்படுகிறது. தமிழகக்கோவில்கள் கடவுள் வழிபாட்டிற்காக மட்டும் அமைந்தவை அல்ல.
மக்கள் சமுதாயத்துக்குப்பயன் தருகின்றவகையில் அவை இயங்கின. கோவில் பண்டாரங்கள்
மக்களுக்குக் கடன் வழங்கியுள்ளன. நாட்டில் பஞ்சம் நிலவிய காலங்களில் கோவில் நகைகள்
பயன்பட்டிருப்பதைச்செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அந்த நகைகளை மக்களே மீண்டும்
கோவிலுக்குத்திருப்பியளித்தனர். கோவில்கள் எத்துணை இன்றியமையாதன என்பதைப்
பட்டினப்பாலை வரிகள் உணர்த்தும். ”குளந்தொட்டு வளம் பெருக்கிக்கோயிலொடு குடி நிறீ“ என்பது அந்த வரி.
தமிழகத்தின் பிற
பகுதிக்கோயில்களுக்கும் கொங்கு நாட்டுக்கோயில்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. கொங்கு நாட்டில் கோயில் உருவாக்கும் மரபு
தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு முன்பே தோன்றிவிட்டது எனலாம். நாமக்கல்
குடைவரைக்கோயிலான அதியேந்திர விஷ்ணுகிருஹம் மற்றும் கரூர் தான்தோன்றி குடைவரைக்கோயில்
ஆகியன முக்கியமானவை. அதியேந்திர விஷ்ணுகிருஹத்தில் அனந்தசாயி
இறையுரு;தான்தோன்றியில் உயரமான விஷ்ணு இறை உருவம். தாராபுரம் அருகில் ஒரு குடைவரை
அமைப்பு, தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. கொங்கு நாட்டில் சைவம் அப்பகுதி
மக்களின் தேவைகளுக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் (Flexibility) தன்மையதாய் குடிக்கோயில்கள் மற்றும்
குலக்கோயில்களின் கூறுகளை ஏற்று நின்றது. கருவூர் வஞ்சியில் சமயக்கணக்கர்களின் சமயத்தத்துவ
வாதங்கள் நிகழும் பட்டிமன்றங்கள் இருந்துள்ளன.
பேரூர் பட்டீசுவரர்
கோயில் இறைவன் இயற்கையாய்த்தோன்றிய தூணாக இருந்து லிங்கமாக மாற்றம் பெற்றுள்ளது.
ஒரு பட்டயத்தில், பேரூர் கோயிலைக்கட்ட முற்பட்ட கரிகாலச்சோழனை வனதேவதை வனத்தை
அழிக்கக்கூடாது எனக்கேட்டதாகவும், கரிகாலனின் வேண்டுதலுக்குப்பின்னர்
அனுமதித்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொங்கு நாட்டில் பெண்
தெய்வ வழிபாடு முதன்மையானதாக இருந்துவந்துள்ளது. தாய்த்தெய்வம், கொற்றவை தெய்வம்
ஆகிய பெண்தெய்வ வழிபாடு மிகுதியாக உள்ளது. கொல்லிமலையில் கொற்றவைக்கோயில்
இருந்துள்ளது. அங்குள்ள அறப்பளீசுவரர் கோயில் கொற்றவைப்பழங்குடி வழிபாட்டின்
கூறுகளைக்கொண்டுள்ளது. கொல்லியில் இருபது
நவகண்டச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இது அங்குள்ள பழங்குடி வழிபாட்டின் ஒரு
பகுதியாகும். கொங்கில், ஒரு கொள்கைக்காகத் தலை வெட்டிக்கொள்ளும் மரபு அதிகம்
இருந்துள்ளது. சேவூர்,அவிநாசி ஆகிய கோயில்களில் தூண்களில் தலைவெட்டி வீரன்
சிற்பங்கள் காணப்படுகின்றன. கொற்றவை, அணங்கு எனப்படுகிறாள். ”அணங்குடை நெடுமுடி” என்பது சங்க
இலக்கிய வரி. ஆதாழியம்மன் சமணக்கோயிலில்
இருந்த தீர்த்தங்கரர் சிலை பெண்ணுருவமாக மாற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இது
பெண்தெய்வ பண்டைய வழிபாட்டின் எச்சம்.
கொங்கு நாட்டில் கி.பி.
8-ஆம் நூற்றாண்டிலிருந்து கட்டுமானக்கோயில்கள் கட்டப்பட்டன. தொடக்கத்தில்
குறிப்பிட்டதுபோல, கோயில்கள் வழிபாட்டிற்காகவும், மக்கள் நலனுக்காகவும்
கட்டப்பட்டன. சில சமயங்களில், அரசனின் பெருமையைக்காட்டவும் கட்டப்பட்டன. அரசன்
ஒருவனுடைய பிறந்த நாளும், சூரிய கிரகணமும் ஒன்றாக அமைந்த காரணத்தால் தீங்கு
விளையும் என நம்பப்பட்டது. தீங்கு நேராதிருக்க அவ்வரசன் கோயிலைக்கட்டினான். இது
கொங்கு நாட்டில் நடந்தது. இறந்துபட்ட அரசர் நினைவாகவும் கோயில்கள் எழுப்பப்பட்டன. அவை
பள்ளீப்படைக்கோயில்கள் என அழைக்கப்பட்டன. மேல்பாடியில் உள்ள அரிஞ்சிகையீசுவரம்
சுந்தரசோழரின் தந்தையான அரிஞ்சய சோழரின் நினைவாக எழுப்பப்பட்டது. பிரமதேசத்தில்
உள்ள ராஜேந்திர ஈசுவரம் முதலாம் இராசேந்திரன் மற்றும் அவன் மனைவி ஆகிய இருவரின்
நினைவாகக்கட்டப்பட்டது. தொண்டைமானாற்றூர் பள்ளிப்படை ஆதித்தசோழனுக்காக
எழுப்பப்பட்டது. ஆனால், பள்ளிப்படைக்கோயில்கள் மக்களால் போற்றப்படவில்லை. சில
அழிந்தே போயிருக்கவேண்டும். பள்ளிப்படைக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளின்
எண்ணிக்கையும் குறைவே. இருகூரில் உள்ள செப்பேடு, “மூத்த அப்பாட்டைப்பள்ளிப்படை” யைக் குறிப்பிடுகிறது.
இருகூர்ச்செப்பேடு,
தென்கொங்கை ஆண்ட வீரகேரளர்க்கும், வட கொங்கை ஆண்ட கொங்குச்சோழர்க்கும் இடையே நடந்த
போர் பற்றிக்குறிப்பிடுகிறது. உடுமலை அருகில் உள்ள காரைத்தொழுவில் வஞ்சகர் வஞ்சகன்
கோட்டை இருந்ததாகச்செப்பேடு குறிப்பிடுகிறது. இச்செப்பேட்டைப்பற்றிக் கோவை கிழார்
தம் நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இச்செப்பேடு இருகூர் நஞ்சுண்டேசுவரர் கோயில்
சிவப்பிராமணர் வீட்டில் இருந்தது. பூங்குன்றன் அவர்களால் படிக்கப்பட்டது.
கோயில்கள்மேல் அரசர்கள்
மிகுந்த அக்கறை காட்டினார்கள். கொங்குச்சோழன் வீரராசேந்திரன், வீரகேரளருடன்
போரிட்டு சில அழிவுகள் ஏற்பட்டதற்குப்பிராயச்சித்தமாகக்கோயிலுக்கு வைகாவி நாட்டு
(அதாவது பழனியைச்சேர்ந்த) இரட்டையம்பாடி ஊர் வரிகளை அளித்தான்.
கொங்கு நாட்டில் மடங்கள்
செல்வாக்கான நிலையில் இருந்துள்ளன. கொழுமத்தில் திருத்தொண்டத்தொகையான் மடம்,
அவிநாசியில் மாணிக்கவாசகர் மடம் ஆகியவை இருந்தன. மடங்கள், கோயில் நிர்வாகத்தை ஏற்ற
செய்திகளும் உண்டு.
லகுலீச பாசுபதம், சைவ
சமயத்தில் ஒரு பிரிவு. சைவத்தின் சில குறைபாடுகளைக்களைந்து, சற்றே
தீவிரத்தன்மையுடைய அமைப்பாக லகுலீசபாசுபதம் விளங்கியது. இதைத்தோற்றுவித்தவர்
குஜராத்தைச்சேர்ந்த லகுலீசர் ஆவார். குஜராத்தில் காயாரோஹணம் என்னும் இடத்தில்
தோற்றம். எனவே, தமிழகத்தில் ”காரோணம்” என்னும்
பெயர் எங்கெல்லாம் வழங்குகிறதோ அங்கெல்லாம் பாசுபதத்தின் தொடர்பு உள்ளதை
அறியலாம். பாசுபதம் தமிழகத்தில் காணப்பட்ட இடங்களில் புதுக்கோட்டை தேவர்மலையும்
ஒன்று. காளாமுகம் என்பதும் காபாலிகம் என்பதும் பாசுபதத்தைக்குறிக்க வந்த தொடர்களே.
கொங்கு நாட்டில் பாசுபதம் இருந்துள்ளது. பாசுபதம் பெரும்பாலும் நகரங்களிலேயே
காணப்பட்டது. சேவூர் கபாலீசுவரர் கோயிலும், ஈரோடு கபாலீசுவரர் கோயிலும்
காபாலிகர்கள் உருவாக்கியவையே. தர்மபுரியில் உள்ள காளாமுகக்கோயிலில் நுளம்ப
மன்னனின் கன்னடக்கல்வெட்டில் ராசி என்னும் பெயர் காணப்படுகிறது. ராசி என்று
முடியும் பெயர் காளாமுகத்தோடு தொடர்புடையது. லகுலீசர் சிற்பங்கள் தமிழகத்தில்
நான்கு இடங்களில் மட்டுமே காணப்பட்டன. மாமல்லபுரம் தர்மராஜர் ரதத்தில் லகுலீசர்
உருவம் உள்ளது. பேரூரில் ஒரு லகுலீசர் சிற்பம் கிடைத்துள்ளது. தற்போது அது கோவை
அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. லகுலீசர் சிற்பம் அமர்ந்த நிலையில் கையில்
தடி(லாங்கணம்)யுடன் காணப்படும்.
பாசுபதத்தின்
தொடர்ச்சியாக, வீர சைவம் தொன்ன்றியது. வீர சைவம் கருநாடகத்தில் தோன்றியது. கொங்கு
நாட்டில் வீர சைவ மடங்கள் நிறைய உள்ளன.
கொங்கு நாட்டில், சமணம்
செல்வாக்குடன் விளங்கியது. வணிகர்கள் பெரும்பாலும்
சமணத்தைச்சேர்ந்தவர்களாயிருந்தனர். கொங்கு நாட்டில் காணப்படும் அமணலிங்கேசுவரர்
கோயில்களனைத்தும் சமணப்பள்ளிகளாகும். திகம்பர சமணம், சுவேதம்பர சமணம் என இரு
பிரிவுகள் உள்ளன. திகம்பர சமணம், பெண்களுக்கு வீடுபேறு(மோட்சம்) இல்லை என்னும்
கொள்கையுடையது. மற்றுமொரு பிறப்பில் ஆணாகப்பிறந்த பின்னரே வீடுபேறு அடையலாம். துறவறத்தை
முதன்மையாகக்கொண்ட திகம்பர சமணத்தில் பேய் ஓட்டுதல், பில்லி சூனியம் ஆகியவற்றுக்கு
இடமில்லை. சுவேதம்பர சமணம் பெண்களுக்கும் வீடுபேறு, பெண் துறவறம் ஆகியனவற்றை
உள்ளடக்கியது. கொங்கின் இயக்கி வழிபாடு சமணத்தின்
தாய் வழிபாடாகும். தேசி சங்கம், கஸ்த சங்கம், திராவிட சங்கம், யாப்பணிய சங்கம்
ஆகியவை சமணத்தில் இருந்த நான்கு சங்கங்கள் ஆகும். இவற்றில், திராவிட சங்கம் பழனி
மானூரில் தோற்றுவிக்கப்பட்டது. ஐவர் மலை திராவிட சங்கத்தோடு தொடர்புடையது. இங்கு
9-ஆம் நூற்றாண்டுச்சிற்பத்தொகுதி உள்ளது. சமண வணிகர்கள், காசாயம் என்னும் ஒரு
வரியைக்கட்டியுள்ளனர். எனவே, இவர்கள், காசாயக்குடியினர் என் அழைக்கப்பட்டனர்.
கோவை முட்டம்-கோட்டைக்காடு
பகுதியில் பௌத்தம் இருந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொங்கு நாட்டில்
தாய்த்தெய்வ வழிபாடுதான் முதன்மையானது என முன்பே பார்த்தோம். கொற்றவை வழிபாடும்
தாய்த்தெய்வ வழிபாடேயாகும். அது போலவே கன்னி வழிபாடும் கொங்கு நாட்டில் நிலவியது.
கொற்றவையும் ஒரு கன்னித்தெய்வமே. உடுமலை அருகில் உள்ள மறையூர் குகையில் காணப்படும்
பெண் தெய்வ ஓவியம் கொற்றவையாகும். அருகில் மான்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன. சிங்கத்தைப்போலவே
மானும் கொற்றவையின் வாகனங்களில் ஒன்று. மான் வாகனத்துடன் கொற்றவை காணப்படுவது
தமிழகத்தில் மட்டும்தான். கன்னி வழிபாட்டில் ஏழு கன்னிகைகள் முன்னிலை
பெறுகிறார்கள். சப்தமாதர் (ஏழு கன்னிகையர்) சிற்பங்கள் கொங்கு நாட்டில்
பரவலாகக்காணப்படுகின்றன. ஏழு பிடாரி அம்மன் கோயில்களும் கொங்குப்பகுதியில் உள்ளன.
கன்னிமை கற்புடைமையைக்காட்டிலும் உயர்ந்தது என்றும், கன்னிமையின் சக்தி உயர்ந்தது
என்றும் நம்பப்பட்டது. கோவை கோட்டைக்காட்டிலும், ஈரோடு மகிமாலேசுவரர் கோயிலிலும்
சக்தி உருவங்கள் காணப்படுகின்றன.
உள்ளூர்த்தாய்த்தெய்வங்களை
(நாட்டார் வழக்கு) விட்டுக்கொடுக்காமல் பிராமணியமாக்கி- அதாவது சமஸ்கிருதமாக்கி – (பெருஞ்சமயக்கோயில்களில்
காமகோட்டம் என்னும் கோட்பாடு)- பெண் தெய்வத்துக்குத்தனியே கோட்டம் அல்லது கோயில்
அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
கி.பி.8-ஆம்
நூற்றாண்டிலேயே காம கோட்டம் பற்றிய குறிப்பு வருகிறது. காமகோட்டத்தை அழித்தவர்கள்
பாவம் கொள்வார்கள் எனக்கல்வெட்டில் செய்தி உள்ளது.(கல்வெட்டு இருக்குமிடம்:
வந்தவாசிக்கருகில் உள்ள சாத்தமங்கலம்) கொங்கு நாட்டில் சிவன் கோயில்கள்
எல்லாவற்றிலும் காமகோட்டம் உண்டு. பெண்தெய்வ வழிபாடுதான் முதலில்; பின்னரே சிவ
வழிபாடு. கொங்கு குலங்கள் வழிபட்டது பெண்தெய்வங்கள்தான்.
முதன்மைச்சோழர் தம்
மெய்க்கீர்த்திகளில், தாம் போர் செய்து பெற்ற வெற்றிகளைப்பொறித்துவைத்தார்கள்.
ஆனால், கொங்குச்சோழர் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி மெய்க்கீர்த்தி அமைத்தார்கள்
என்பதைப்பார்க்கிறோம். பிரம்மியம் வலஞ்சுழி நாதர் கோயிலில் செவ்வியல் எழுத்தில்
மெய்க்கீர்த்தி எழுதப்பட்டுள்ளது. அதில் மக்கள் நலம் முன்னிறுத்தப்படுகிறது.
“அல்லவை கடிந்து”, “குடிபுறங்காத்துப் பெற்ற குழவிக்குற்ற நற்றாய்போல”
அரசன் செங்கோலோச்சினான் என்று அதில் வருகிறது.
கொங்கு நாட்டுக்கோயில்
கட்டடக்கலை எளிதானது. கருவறையும், அதன்மேல் விமானமும் அடிப்படை. நாமக்கல் அருகில்
சீனிவாச நல்லூர், கருவூர் பெரிய சோமூர், கொல்லிமலைக்கோயில்கள் கொங்கு
நாட்டுக்கோயில் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகள். இராசராசனின் பாட்டியாரான செம்பியன் மாதேவி
கொல்லிமலையைச்சேர்ந்தவர். அவருக்கு மாதேவடிகள் என்றொரு பெயர் உண்டு. அவர் மேல்
கொண்ட மதிப்பால் அப்பெயரை இராசராசன் தன் மற்றொரு மகளுக்கு வைத்தான். (குந்தவை,
இராசராசனின் தமக்கையார் பெயர் கொண்ட ஒரு மகள் என்பது ஏற்கெனவே தெரிந்த ஒன்று.)
கொங்கு நாட்டுக்கட்டட மரபை மழபாடி வரை காணலாம்.
கால் நடை வளர்ப்பு
முதன்மையாயிருந்த கொங்கு நாட்டில், கால் நடை வளர்ப்போர் அமைத்துக்கொண்ட அமைப்பு
மன்றம் எனவும், மன்றத்தை ஆள்வதற்குள்ள உரிமை மன்றாட்டு எனவும் கூறப்பட்டன.
மன்றாட்டு பெற்றவர்கள் மன்றாடிகள். மன்றாடிகள் கோயில் நிர்வாகத்திலும் பங்கு
கொண்டிருந்தனர். பேரூர்க்கோயில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கும் செய்தியில் மன்றாடிகள்
குறிப்பிடப்படுகிறார்கள். கோயில் நிர்வாகத்திலிருக்கும் சிவாச்சாரியார்கள்,
மன்றாடிகள் ஆகியோர் அரசனிடம், கோயில் பண்டாரம் அழிந்துபோனதை அறிவித்து வேண்டுதல்
வைக்கிறார்கள். அரசன், ஓர் ஊரினைக்கொடையாக அளிக்கிறான்.
கொங்கு நாட்டில்தான்
கோயில் கருவறை “ ஸ்ரீ வயிறு “ என
அழைக்கப்பட்டதைக்காண்கிறோம். சேவூர்க்கோயில் கல்வெட்டில் இச்சொல் இடம் பெறுகிறது.
கொங்கு நாட்டுப்பகுதியின் சிறப்புகளை அங்குள்ள கோயில்கள் எடுத்துச்சொல்லும்
வகையாகக்கோயில் சிற்பங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலும், கோயிலின்
கொடுங்கைப்பகுதியில் அத்தகு சிற்பங்கள் உள்ளன. சேவூர்க்கோயில் ஜகதி, குமுதம் ஆகிய
பகுதிகளில் சிறு சிற்பங்கள் உள்ளன. சேரமான் பெருமாள் நாயனாருடன் சுந்தரர் போகின்ற காட்சி (யானையிலும்,
குதிரையிலும்) அன்னூர்க்கோயில் குமுதத்தில் உள்ளது. கீரனூரில் மூதேவியின்
தனிச்சிற்பம் உள்ளது.
கொங்கு நாட்டுக்கோயில்களில்
தேவகோட்டங்களில் சிற்பங்கள் வைக்கும் மரபு இல்லை. இது பாண்டிய மரபைத்தழுவியது.
(சோழ நாட்டுக்கோயில்களில் தேவகோட்டங்களில் சிற்பங்களைக்காணலாம்.)
கொங்கேழ் கோயில்கள்
என்று சொல்லக்கூடிய ஏழு கோயில்களைப்பற்றி அன்னூர்க்கோயில் கல்வெட்டு
தெரிவிக்கிறது.
கடத்தூர் கோயில்
கல்வெட்டொன்றில் ‘ஹிஜிரி’ ஆண்டு பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
கட்டுரையாக்கம் :
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக