து.சுந்தரம், கோவை
நெகமத்துக்கு அருகில் அமைந்துள்ளது பட்டணம் என்னும் சிற்றூர். இவ்வூரில்
கிடைத்த ஒரே ஒரு கல்வெட்டு ஆதாரத்தைக்கொண்டு இவ்வூர் இருநூற்று அறுபது ஆண்டுப்பழமை
வாய்ந்தது என்றும், அது ஒரு வணிக நகரமாக விளங்கியது என்றும் அண்மையில் ஒரு செய்தி
வெளியிட்டிருந்தோம். தற்போது, அங்கு ஓர் அரிய தாய்த்தெய்வ நடுகல் சிற்பம்
கண்டறியப்பட்டுள்ளது. தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த, வரலாற்று ஆர்வலர் ருத்திரன் என்பவர்
தெரிவித்த தகவலின் அடிப்படையில், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்
நேரில் சென்று அந்தச் சிற்பத்தை ஆய்வு செய்தார்.
பட்டணத்தில், நல்லட்டிபாளையம் பிரிவுச் சாலையோரத்தில் செடிகளுக்கிடையில் காணப்படுகின்ற
அந்தச் சிற்பமானது, பெண்ணொருத்தி தன் வலக்கையில் குழந்தையை அணைத்துப்பிடித்தவாறு
அமைந்துள்ளது. பெண்ணின் இரு புறமும், இரு எருதுமாடுகள், தம் தலைகளைக் கீழ்நோக்கிச்
சாய்த்தபடி, கொம்புகளை உயர்த்தி அந்தப்பெண்ணின் இடைப்பகுதியில்
குத்துவதைப்போல் காணப்படுகின்றன. அப்பெண், தன் கூந்தலில் வலப்புறமாகக் கொண்டை
போட்டிருக்கும் தோற்றம். காதுகளில், காதணிகள் உள்ளன. ஆனால், கழுத்தில் அணிகள்
எவையும் காணப்படவில்லை. கைகளில் ஒன்றில் மட்டும் வளைகள் காணப்படுகின்றன. இடையிலிருந்து
கணுக்காலுக்குச் சற்று மேலே வரை ஆடை, மடிப்புகளோடு காணப்படுகிறது. சிற்பத்தின் பீடப்பகுதியில் எழுத்துகள்
தெரிந்ததால், சிலையை நன்கு தோண்டி நிற்கவைத்துப் பார்த்ததில் மூன்று வரிகளில்
கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. எழுத்துகளைப்படித்த வாசகம் பின்வருமாறு:
குறோதி வருசம் அற்ப்பிசை மீ (மாதம்) 9 உ (தேதி)
முத்திலிவாட செட்டி உபையம்
அதாவது, தமிழ் ஆண்டான குரோதி வருடத்தில், ஐப்பசி
மாதத்தில் ஒன்பதாம் தேதி, முத்திலிவாட செட்டி என்பவரால் இச்சிற்பம் உபையமாகச்
செய்து தரப்பட்டது எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. எழுத்தமைதியை வைத்துப்
பார்க்கும்போது குரோதி வருடம், கி.பி. 1724 அல்லது கி.பி. 1784 ஆண்டுகளோடு பொருந்தி
வருகிறது. ஐப்பசி மாதம், செப்டம்பர், 1724 அல்லது அக்டோபர், 1784
என்னும் காலக்கணக்கீட்டுடன் பொருந்தி வருகிறது.
ஏறத்தாழ, இருநூற்றைம்பது ஆண்டுகள் பழமை கொண்ட
இச்சிற்பம், நமது கோவைப்பகுதியில் கிடைத்துள்ள அரிய சிற்பமாகவே கருதப்படவேண்டும்.
ஏனெனில், எழுத்துப்பொறிப்புகளோடு உள்ள நடுகல் சிற்பங்கள் இப்பகுதியில்
காணக்கிடைப்பது மிகவும் அரிது. மேலும், இறந்துபட்ட வீரனோடு தானும் மாய்ந்துவிட்ட
பெண்ணுக்கு எடுக்கப்பட்ட “மாசதிக்கல்” என்னும் நடுகல் கோவைப்பகுதியில் காணப்பட்டாலும், குழந்தையோடு
உள்ள தாய்ப்பெண்ணுக்கு எடுக்கப்பட்ட நடுகல் இதுவரை கிடைக்கவில்லை என்றே
தோன்றுகிறது.
இவ்வூர்
மக்கள், இந்தச் சிற்பத்தைப்பற்றி ஒரு செய்தி சொல்கிறார்கள். கருவுற்ற ஒரு பெண்,
மாடு முட்டியதால் இறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது போன்ற, மக்களிடையே
வழங்கும் கதை மரபும் இச்சிற்பத்தின் உண்மைப் பின்னணியைத் தெரிந்துகொள்ள உதவும்
சான்றுகளில் ஒன்று. இந்தச் சிற்பத்தின் ஒளிப்படத்தைப் பார்த்த தொல்லியல் ஆய்வாளரான,
சென்னை சு.இராசகோபால் அவர்கள்,
இச்சிற்பம், தாய்த்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கலாம்
எனக்குறிப்பிடுகிறார்.
தாய்த்தெய்வ
வழிபாடு தமிழ்நாடெங்கும் வழக்கில் உள்ள ஒன்றுதான். தாய்த்தெய்வ வழிபாட்டின் தாயகம்
இந்தியா என்னும் கருத்து நிலவுகிறது. சிந்துவெளியில், கருத்தாங்கிய நிலையில் சில
தாய்த்தெய்வங்களின் வடிவங்கள் கிடைத்துள்ளதாக அறிகிறோம். கருவுற்ற நிலையில்
கொல்லப்பட்ட பெண் ஒருத்தி பொன்னரத்தா என்னும் அம்மன் வடிவில் தெய்வமாக,
திருநெல்வேலி அருகே கடையம் ஊரில் வழிபடப்பெறுகிறாள்.
குமரி,நெல்லை,தூத்துக்குடி,விருதுநகர்,சிவகாசி ஆகிய மாவட்டங்களில் கிராம தேவதையாக
பேச்சியம்மன்(பேய்ச்சியம்மன்), இசக்கியம்மன் ஆகிய தெய்வங்கள் வணங்கப்படுகின்றன. இவ்வகைக்
கோயில்கள் சிலவற்றில், இத்தெய்வங்கள் கைகளில் குழந்தை வைத்திருப்பதைக் காணலாம். மதுரை,
வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயிலில், பேச்சியம்மன் கையில் குழந்தையுடன் ஆறடி
உயரத்தில் இருப்பதைக் காணலாம். பேச்சியம்மனுக்கு மரத்தொட்டில், மரப்பாச்சி பொம்மை
ஆகியவற்றைக் காணிக்கையாகக்கொடுத்து, பிள்ளைப்பேற்றுக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
இசக்கி என்பது ‘இயக்கி’ என்பதன் திரிபு என்றும்,
சமணத் தீர்த்தங்கரர்களின் பரிவாரத்தெய்வங்களுள் ஒன்றான ‘யக்ஷி’ யான அம்பிகா என்னும் தெய்வத்தையே கிராமங்களில் இசக்கியாக
வழிபடுகிறார்கள் என்னும் கருத்து நிலவினாலும், கொலையுண்ட அல்லது தற்கொலை
புரிந்துகொண்ட பெண்கள் இசக்கி என்னும் தெய்வமாகிறார்கள் என்னும் கருத்தும் வலுவாக
உள்ளது. இசக்கியின் உறைவிடம் கள்ளிமரம் எனக்கூறப்படுகிறது. நீலி என்று கூறப்படும் பெண்தெய்வம் இந்த
இசக்கிதான் எனக்கூறப்படுகிறது.
செட்டி
நாட்டில், பூமணத்தாள், அக்கினியாத்தாள், டைக்கம்மையாத்தாள்,
மெய்யம்மையாத்தாள் ஆகிய தெய்வங்கள் வணங்கப்படுவதாகவும், அவற்றில் பல
தெய்வங்கள் கையில் குழந்தையுடன் காணப்படுவதாகவும் அறிகிறோம்.
இத்தெய்வங்களுக்குப் படையல் இட்டு
வழிபடுவதால், ஒவ்வொரு கோயிலையும் ”படப்பு” என்னும் பெயரிலேயே
குறிப்பிடுகிறார்கள். வழிபடப்படும் தாய்
பற்றிய கதைகள், அவளை அகால மரணமடைந்தவளாகச் சொல்கின்றன. கணவனால் ஒதுக்கப்பட்டு,
கர்ப்பிணியாகவோ, குழந்தையுடனோ தனித்துச் சென்றபோது நிகழ்ந்த மரணமாக இருக்கலாம்.
கள்ளர்களாலும், விலங்குகளாலும் மரணம் நிகழ்ந்திருக்கலாம். கருவுற்றபெண்,
கருக்குழந்தையோடு இறந்துபோகும் சூழ் நிலையில், வயிற்றைக்கிழித்துக் குழந்தையை
எடுத்து, இரண்டு உடல்களையும் ஒன்றாகப்புதைத்தபின் அப்பெண்ணைத் தெய்வமாக
வணங்குகிறார்கள் என்பது குமரி மாவட்டத்தில் நிலவும் கதை.
மேலே
கூறப்பட்ட நாட்டார் வழக்குகள் எல்லாம், கருவுற்ற நிலையில் அகால மரணம் எய்திய பெண்,
தெய்வமாக வழிபடப்பெறுகிறாள் என்பதை உறுதி செய்வதால், பட்டணத்தில் நாம் புதிதாகக்
கண்டறிந்த தாய்-குழந்தை சிற்பமும், ஊர் மக்கள் வழங்கும் கதை மரபோடு சேர்த்து ஆய்வு
செய்யும்போது, கருவுற்ற பெண் அகால மரணம் ( இங்கே விலங்கால் மரணம்) அடைந்ததால்
நினைவுக்கல் ( நடுகல் ) எடுக்கப்பட்டுள்ளது எனக்கருதலாம்.
கருவுற்ற
நிலையைச் சிற்பத்தில் குறிப்பாகக் காட்டவே, கையில் குழந்தையைச் செதுக்கியுள்ளார்கள்
எனக் கருதுவதில் தவறில்லை.
சிலையை ஒரு செட்டி
உபையமாக அளித்திருப்பதால், வணிக நகரமாக இருந்த பட்டணத்தில் வணிகரின் குலதெய்வ
வழிபாட்டின் எச்சமாக இச்சிற்பத்தைக் கருதவாய்ப்புண்டு. இது போன்ற பல வரலாற்று
யூகங்களுக்கு இடமளிக்கும் இச்சிற்பத்தைத் தொல்லியல் துறையினர் மேலும் ஆய்வு
செய்தால் இன்னும் புதிய செய்திகள் கிடைக்கக்கூடும்.
து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக