மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 27 ஜனவரி, 2014

ஜார்ஜ் மன்னர் பெயரில் ஒரு விநாயகர்
                                                                    து.சுந்தரம், கோவை.


         விழுப்புரம் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சி.வீரராகவன், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் ஆகியோர், அண்மையில் தாராபுரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது அலங்கியம் ஊரில் பேருந்து நிறுத்தம் மற்றும் காவல் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த  ஒரு சிறிய பிள்ளையார் கோவில் மேடையில் ஒரு கல்வெட்டைப்பார்த்தனர். நெடுஞ்சாலைகளில் காணப்படும் மைல்கல்லின் வடிவத்தில் அக்கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது. அகலமான அதன் முன்பக்கத்துப்பரப்பில் ஆங்கிலத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகலம் குறைவாயுள்ள அதனுடைய பக்கவாட்டு முகங்கள் இரண்டிலும் தமிழில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.

    ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் பெரிய அளவில் தெளிவாகக் காணப்படுகின்றன. கல்லின் மேற்புற வளைவுப்பகுதியில் “ சக்கரவர்த்தி வி நாயகர் “  என்னும் தலைப்பு உள்ளது. தலைப்பில் இருக்கும் நாயகர் என்னும் பகுதி, வளைவை அடுத்துக்கீழே எழுதப்பட்டுள்ள முதல் வரியில் அமைகின்றது. இதனைத்தொடர்ந்து அமைந்துள்ள எட்டு வரிகளில், 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதியன்று (இவ்வூர்) இந்துக்கள், நமது சக்கரவர்த்தி ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் முடிசூட்டு விழாவின் நினைவாக இந்த விநாயகரை  நிறுவியுள்ளனர் என்னும் செய்தி எழுதப்பட்டுள்ளது.

   தமிழில் பொறிக்கப்பட்டிருக்கும் இரண்டு பக்கங்களில் ஒன்றில்,

கலியுகாதி 5013 வரு. காத்திகை மீ 27 தேதி
                 சார்சு சக்கரவர்த்திக்கி டில்
என்றும், மற்றொரு பக்கத்தில்,

                “பிசேகஞ்செய்த ஞாபகத்திற்கு இந்தவூர்
                 இந்துக்கள் செய்து வைத்த பிரஸ்டை
                 சக்கிரவர்த்தி வினாயகன்

என்றும் எழுதப்பட்டுள்ளது. அதாவது, கலியுக ஆண்டு 5013-இல் கார்த்திகை மாதம், (இங்கிலாந்து) ஜர்ர்ஜ் சக்கரவர்த்தியவர்களின் முடிசூட்டு விழா (பட்டாபிஷேகம்) தில்லியில் நடைபெற்றதன் நினைவாக அலங்கியம் ஊர் இந்துக்கள் விநாயகரை எழுந்தருளிவித்து (பிரதிஷ்டை செய்து)) அந்த விநாயகருக்கு சக்கரவர்த்தி விநாயகன் என்று பெயர் சூட்டியிருந்திருக்கிறார்கள்.  

   ஆங்கிலமொழியில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டின் பாடத்தின்படி, விநாயகரைப் பிரதிஷ்டை செய்தது டிசம்பர், 12, 1911. இந்தத் தேதியோடு, கல்வெட்டின் தமிழ்ப்பகுதியில் குறிப்பிடப்பெறும் கலியுக ஆண்டு கார்த்திகை இருபத்தேழாம் தேதி சரியாகப் பொருந்திவருகிறது. ஆங்கிலப்பகுதியில், முடிசூட்டு விழா எங்கு நடைபெற்றது என்னும் குறிப்பு இல்லை. ஆனால், தமிழ்ப்பகுதியில், விழா டில்லியில் நடைபெற்றது என்னும் குறிப்பு காணப்படுகிறது. “ஜார்ஜ்”  என்னும் வடமொழி உச்சரிப்பு “ சார்சு “ என்றும், “பிரதிஷ்டை”  என்னும் வடமொழி உச்சரிப்பு “ பிரஸ்டை “ என்றும், பட்டாபிஷேகம்”  என்னும் வடமொழி உச்சரிப்பு “ (பட்டா)பிசேகம் “ என்றும் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

   ஆங்கிலப்பகுதி “ கடவுள் மன்னரைக் காப்பாற்றுவாராக “ என்னும் பொருள் அமைந்த ஆங்கிலத்தொடருடன் முடிகின்றது.

    மற்ற கடவுளர்க்கும் பிள்ளையார் என மக்களால் வழங்கப்படும் விநாயகருக்கும்  ஒரு வேறுபாடு உள்ளது. மக்கள் நடுவில் எளிமையாக எங்கு வேண்டுமென்றாலும், கூரையே இல்லாமலும் கோவில் எழுப்ப இடங்கொடுக்கும் கடவுள் விநாயகர்தான். அதே போல், மக்கள் அவரவர்க்குத் தோன்றியவாறு புதுமையான பெயரிட்டு அழைக்கும் உரிமையும் பிள்ளையார்மேல்தான் உண்டு. விநாயக சதுர்த்தியின் போது, வெவ்வேறு வடிவக்காட்சிகளில் பிள்ளையார் சிலைகளை அமைப்பதைப்பார்க்கிறோம். அதேபோல், பல்வேறு பெயர்களையும் பிள்ளையாருக்குச் சூட்டிமகிழ்கிறார்கள்.
   மேலே கண்ட அலங்கியம் விநாயகர் “சக்கரவர்த்தி விநாயகர்என்னும் பெயரில் இங்கிலாந்துச்சக்கரவர்த்தி ஜார்ஜ் மன்னரை நினைவூட்டுகிறார்.

   இனி, கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா பற்றிச் சில செய்திகளைக்குறிப்பிட வேண்டியுள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், லண்டனில் “வெஸ்ட் மினிஸ்டர் அப்பே என்னும் வளாகத்தில் 1911-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முடிசூட்டிக்கொண்டார். இந்தியா போன்ற சில நாடுகள் இங்கிலாந்துச் சக்கரவர்த்தியின் ஆளுகைக்கீழ் இருந்தமையால், இந்தியச் சக்கரவர்த்தி என்னும் நிலையை வெளிப்படுத்திக்கொள்ள அவர் தில்லி அரசர்கள் நடத்திவந்த “தர்பார்”  மரபுப்படி, தில்லியில் மீண்டும் முடி சூட்டும் விழாவினை நடத்த விருப்பங்கொண்டு, விழா தில்லியில் காரனேஷன்பூங்காவில் நடத்தப்பட்டது. விழாவில் மேரி அரசியாரும் கலந்துகொண்டார். இதில் சிறப்பு என்னவெனில், இங்கிலாந்தில் சூடிய முடியை இங்கிலாந்தைவிட்டு வெளியில் கொண்டு செல்ல உரிமையில்லை என்னும் காரணத்தால் இந்திய முடிசூட்டு விழாவுக்குத் தனிப்பட ஒரு முடி ( IMPERIAL CROWN OF INDIA )  செய்யப்பட்டது.


   ஆனால், அது இந்தியாவில் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அரச மரபினர்க்கென அணிகலன்கள் செய்து தரும் GARRARDS & CO. என்னும் வணிக நிறுவனம் செய்து தந்தது. விழா 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதியன்று நடைபெற்றது. மரபுப்படி, இந்திய சமஸ்தான மன்னர்கள் தர்பாரில் மன்னர்முன் நின்று வணங்கிச்சென்றனர். இவ்வாறு இங்கிலாந்துக்கு வெளியில் நடைபெற்ற விழாவில் நேரில் அரசர்,அரசியார் கலந்துகொண்ட விழா இது ஒன்றே எனக்கூறப்படுகிறது.

   நாட்டு விடுதலை  பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்பிருந்த காலகட்டமாகையால். ராஜமரியாதையைக்காட்டுவது வழக்கத்தில் இருந்திருக்கவேண்டும். இது போன்ற நினைவுச்சின்னங்கள் நாட்டில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன எனத்தெரிகிறது. சென்னையில் உள்ள கல்வெட்டு அறிஞரான சு.இராசகோபால் அவர்கள் கொடுத்த சில செய்திகளாவன:
         மதுரை அருகே திருவாதவூரில், மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசியார் மேரி இருவரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு விளக்குத்தூண் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நகரத்தார் ஊரான கோட்டையூரில், ஒரு வீட்டு நுழைவாயில் வளைவுகளில் இங்கிலாந்து அரசர் மற்றும் அரசியரின் சுதை உருவங்களும், வீட்டினுள் வண்ணப்படங்களும் காணப்படுகின்றன.

         புதுமையான பெயரில் பிள்ளையார் கோவில் எழுப்பப்படுவது உண்டு. அவ்வகையில், சென்னையில் உள்ள அறுபடை முருகன் கோவிலின் நடுவில், அமெரிக்கா வாழ் நகரத்தார் எழுப்பிய நியூயார்க் பிள்ளையார் “ கோவில் அமைந்துள்ளது.

   மேற்படி அலங்கியம் விநாயகர் கோவில் கல்வெட்டு, தமிழகத்தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்டு 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற “திருப்பூர் மாவட்டக்கல்வெட்டுகள்”  நூலில் தொகுக்கப்பட்டிருப்பினும், அலங்கியம் ஊர் மக்கள் தம் ஊரில் இருக்கும் கல்வெட்டினை அறியாதிருக்கலாம். அறிந்திருப்பவர்களிலும் பலருக்கு அதன் வரலாற்றுப்பின்னணியும், செய்தியும் தெரியாதிருக்கலாம். பண்டைய அரசியல், வரலாறு, சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிய முதன்மைச்சான்றுகளாக அமையும் கல்வெட்டுகளின்”  செய்திகள் மக்களை எட்டவேண்டும் என்பதற்காகவே இக்கல்வெட்டுச்செய்தி வெளியிடப்பெறுகிறது.

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.



 









1 கருத்து:

  1. இந்த பேருந்து நிறுத்தத்தில் பல முறை நின்றிருக்கிறேன். முன்னால் இருக்கும் ஆங்கில எழுத்தை படித்திருக்கிறேன். ஆனால் பக்கவாட்டிலிருக்கும் எழுத்துகளை படித்ததில்லை.

    எங்கோ ஒரு ஆங்கில பிரபு பதவி ஏற்றது அலங்கியத்தில் எதிரொலித்திருக்கிறது. அப்போதும் உலகம் சிறிதாய் தான் இருந்திருக்கிறது போலும். ஜார்ஜ் பிள்ளையார்!

    ஆய்வு செய்து தகவலை வெளிகொண்டு வந்தமைக்கு எனது நன்றிகள். சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு