மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 27 ஜனவரி, 2014

கோட்டமங்கலத்தில் வரலாற்றுச்சின்னம் – வீரக்கம்பம்

கோட்டமங்கலத்தில் வரலாற்றுச்சின்னம் வீரக்கம்பம்

                                                       து.சுந்தரம், கோவை.







         நடுகல் வழிபாடு, தமிழகத்தில் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது. வீரச்செயல் புரிந்து இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் எடுத்து, அதில் அவனுடைய உருவத்தைச்சிற்பமாக வடித்து, மாலை அணிவித்துப் படையல் இட்டு வழிபடுவது மரபு.  நடுகற்களில் காணப்படும் வீரர்கள், தங்கள் கிராமங்களில் கால்நடைகளைக் காவல் காக்கும் கடமையில் ஈடுபட்டிருக்கும்போது, கால் நடைகளைத்தாக்க வருகின்ற புலி, கரடி, பன்றி ஆகிய விலங்குகளை எதிர்த்துப் போரிடும்போது, அவ்விலங்குகளைக் கொன்ற பின்னர் அவர்களும் இறக்க நேரிடும். அவ்வாறு இறந்துபடும் வீரர்களுக்கு நினைவுச்சின்னமாக வீரக்கல் எனப்படும் நடுகல் எடுக்கப்பட்டது. இதேபோல், ஒரு கிராமத்தின் ஒரு குழுவைச்சேர்ந்த மக்களின் கால் நடைகளை, மற்றொரு ஊரின் குழுவினர் (வீரர்கள்) போரிட்டுக் கவர்ந்து செல்வதும், அவற்றை மீட்கும் முயற்சியாகப் போரிடுவதும் தொறுப்பூசல் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. தொறுப்பூசலில் இறந்துபடும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் தமிழகத்தில் நிறையக்காணப்படுகின்றன.

      சில நடுகற்களில், வீரனுடைய மனைவியும் சிற்பமாகக் காட்டப்படுவதுண்டு. வீரனுடைய மனைவி, தன் கணவனின் இறப்பைத்தொடர்ந்து அவளும் தீயில் பாய்ந்து மாண்டு போவதையே இது குறிக்கும். இத்தகைய கல், மாசதிக்கல் எனப்படும். பெரும்பாலும் ஒற்றைக் கல்லிலேயே இச்சிற்பங்கள் வடிக்கப்படும். சில ந்டுகற்களில், மூன்று அடுக்குகளாகச் சிற்பங்கள் செதுக்கியிருப்பார்கள். முதல் அடுக்கில், வீரன் விலங்கோடு போரிடும் காட்சியும், இரண்டாவது அடுக்கில், உடன்கட்டை ஏறி உயிர் நீத்த வீரனின் ம்னைவி சொர்க்கம் போவதுபோன்ற காட்சியும், மூன்றாவது அடுக்கில், வீரன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற காட்சியும் காணப்படும். (வீரன் சிவலோகம் அடைந்தான் என்பதன் குறியீடு).

      மிகவும் அரிதாக, நான்கு பக்கங்களுடைய தூண் வடிவில் அடுக்குநடுகல் சிற்பமும் காணப்படுவதுண்டு. அவ்வகை தூண் நடுகல் சிற்பம் ஒன்று, திருப்பூர்-உடுமலைச் சாலையில், குடிமங்கலத்தை அடுத்துள்ள கோட்டமங்கலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  தஞ்சையில் இயங்கும் தமிழகத்தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களான, விழுப்புரம் சி.வீரராகவன் மங்கையர்க்கரசி, கோவை து.சுந்தரம்  ஆகியோர் உடுமலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்தத் தூண் நடுகல்லைக்கண்டறிந்தனர். கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோயிலை ஒட்டியுள்ள ஊர்ப்பகுதியில் இந்தத் தூண் நடுகல் காணப்படுகிறது. ஊர் மக்கள் இதை “ மாலக்கோயில் “ என அழைக்கின்றனர். ஏறத்தாழ, 8 அடி உயரமும், 2 அடி அகலமும், 1 ¼ அடி கனமும் கொண்டு பிரமாண்டமாக நிற்கும் இந்த அடுக்கு நடுகல் தூணில் 9 அடுக்குகள் உள்ளன. இவ்வடுக்குகள், போட்டோக்களுக்கு சட்டம் அமைத்ததுபோல் நேர்த்தியாகச் செவ்வக வடிவில் பிரிக்கபட்டுள்ளன. தூணின் நான்கு முகங்களிலும் உள்ள எட்டு விளிம்புகளும் புடைப்பு அமைப்பில் வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. தூணின் உச்சி, ஒரு கோயில் கருவறை விமானம்போல் அழகுற அமைக்கப்பட்டுத் தெய்வச்சிற்பங்களைக் கொண்டுள்ளன.
      தூணுக்கு இருபுறமும், இரண்டு தனிக்கல்லில் அரசர்களின் உருவில் சிற்பங்கள். அரசர்களின் அருகில் அவர்களது மனைவியர் உருவங்கள்.  இவையும் நடுகல் சிற்பங்களே.  இவர்கள், இப்பகுதியிலிருந்த பாளையப்பட்டு  நாயக்கர்களாக இருக்கக்கூடும்.

     தூணின் நான்கு முகங்களில் மைய முகத்தில், உச்சியில் நடராசர் சிற்பம், அதன் கீழே உள்ள அடுக்குகளில் வியாக்கிரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) சிவனை வழிபடும் சிற்பம், கஜலட்சுமி, குழலூதும் கண்ணன், சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் சிற்பம், பல்லக்கேறி வீரர்கள் செல்லும் காட்சியில் சிற்பம் போன்ற பல சிற்பங்கள். தூணின் மற்ற முகங்களில், யானை,குதிரை ஆகியவற்றின் மீது வீரர்கள் அமர்ந்து போரிடும் காட்சி, வில்லேந்தி வீரர்கள் போரிடும் காட்சி ஆகிய பல்வேறு சிற்பங்கள் உள்ளன. இவை தவிர வரிசையாக வீரர்கள் மற்றும் பெண்கள் (உடன்கட்டை ஏறிய மனைவியர்களாக இருக்கக்கூடும்) ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பெண்கள் வில்லேந்திப் போரிடும் காட்சியில் அமைந்த சிற்பங்கள் என,  நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் தூணில் காணப்படுவதை ஆய்ந்து நோக்கும்போது, ஒரு போர்ச்சூழலில் இறந்து போன பெரும் வீரர்களுக்கும், அவர் மனைவிமார்க்கும், பாளையப்பட்டுக் குறு நில மன்னர் நிலையில் இருந்தவர்க்கும் எடுக்கப்பட்ட மிகப்பெரிய  நினைவுக்கல்லாக இதைக் கருத வேண்டும். தூணின் உயரம், பெரும் வடிவம், நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சிற்பங்கள், சிற்பங்களின்   நேர்த்தியான வேலைப்பாடுகள், அதன் ஒட்டுமொத்த பிரமாண்டம், பக்கத்திலே உள்ள வேலைப்பாடுகள் மிகுந்த தனிச் சிற்பங்கள் ஆகியவற்றை நோக்கும்போது மிகவும் முக்கியமான நிகழ்வு கருதி இந்த நினைவுத்தூண் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்பதையும், நினைவுத்தூண் எழுப்பியவரும் ஒரு முக்கியத்துவம் நிறைந்த பெரிய பதவியில் இருந்த தலைவராகத்தான் இருந்திருக்கவேண்டும் எனவும் கருதலாம். இக்கருத்தை, இவ்வூர்ப் பெரியவர்கள் கூறும்-மரபு வழியில் காப்பாற்றி வைத்திருக்கும்-செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
 
      நினைவுத்தூண் அமைந்துள்ள இந்த மாலக்கோயிலில் வழிபாடு நடத்துபவர்கள் இங்குள்ள “ பாலவாரு “  குலத்தவர். இவர்கள், ராஜ கம்பள நாயக்கர் வழி வந்தவர்கள்.
ராஜ கம்பள நாயக்கர் மொத்தம் ஒன்பது வகையினர் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்குக் குலதெய்வம் வல்லக்கொண்டீசுவரி என்னும் வல்லக்கொண்டம்மன் ஆகும். இந்தப் பாலவாரு குலத்தினர் திருமணச் சம்பந்தம் வைத்திருப்பது சில்லண்ணவார் குலத்தில். இந்தப் பாலவார் மக்கள், இந்த மாலக்கோயிலில் வாரத்துக்கு இருமுறை திங்கள், வெள்ளி ஆகிய நாள்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். ஆண்டுக்கொருமுறை, மாசி மாதம் மகாசிவராத்திரியன்று இரவு 12 மணியளவில் வல்லக்கொண்டம்மனுக்குத் திருக்கல்யாணம்  நடத்தி, அன்னதானம் செய்து சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். குலதெய்வப்பாடல்களாக இங்குள்ள மூதாட்டிகள் பாடும் நாட்டுப்பாடல்களில் போர் பற்றிய செய்திகளும், பாளையப்பட்டுத் தலைவர்களின் பல்வேறு பெயர்களும் காணப்படுவதாகச் சொல்கிறார்கள்.

      மேலே கூறப்பட்ட மரபு சார்ந்த செய்திகளை உறுதிப்படுத்துவதுபோல், தூணின் மைய முகத்தில் அமைந்துள்ள புடைப்பு விளிம்புகளில், கல்வெட்டு எழுத்துகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் மூவரும், இந்த எழுத்துகளை ஆய்ந்து படித்து அதில் உள்ள செய்திகளை அறிந்தனர்.
கல்வெட்டு வரிகள் கீழே உள்ளவாறு படிக்கப்பட்டன.

                      சிறீமுக வருடம் ஆடி மாதம் 8 தேதி ஏகாதெசி
              பெற்ற திங்கள் கிளமை னாள்
              பாலவாரில் காம நாயக்கர் மகன்
              வல்லைக்கொண்டம நாயக்கர் உண்டாக்கின
              வீரகம்பம்.


தமிழ் வருடமான ஸ்ரீமுக ஆண்டில், ஆடி மாதம் எட்டாம் தேதி ஏகாதசி நாளன்று, பாலவார் குலத்தைச்சேர்ந்த காம நாயக்கர் மகன் வல்லக்கொண்டம நாயக்கர் என்பார் இந்த நினைவுச்சின்னமான வீரகம்பத்தை நிறுவினார் என்பது கல்வெட்டுச்செய்தி.

      கல்வெட்டில் வரும் “ பாலவார் “ என்னும் சொல், இந்த நினைவுச்சின்னத்தை வழிபட்டு வரும் இவ்வூர் பாலவார் மக்களே என்று உறுதி செய்கிறது. வீரகம்பம் என்பது வீரக்கல் அல்லது நடுகல், தூண் ( கம்பம் ) வடிவில் எழுப்பப்பட்டதை உறுதி செய்கிறது. ஸ்ரீமுக ஆண்டு, கி.பி. 1693, கி.பி. 1753 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் பொருந்தி வரும் ஆண்டாகும். கி.பி. 1693-ஆம் ஆண்டு, பாளையக்கார நாயக்கர்களின் காலத்தை ஒட்டிவருவதால் இந்த வீரகம்பமானது, பாலவார் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த வல்லைக்கொண்டம நாயக்கர் என்பவரால் எடுப்பிக்கப்பட்டது எனக்கொள்ளலாம். இவர் பெயரும், இக்குலத்தவரின் குலதெய்வமான வல்லக்கொண்டம்மனுடன் இயைந்து போவதைப்பார்க்கிறோம். மேலும், கி.பி. 1693-ஆம் ஆண்டுக்காலகட்டத்தில் கம்மவாரு, கொல்லவாரு ஆகிய பாளையக்கார நாயக்கர்கள் மதுரை நாயக்க அரசர்களுக்குக் கீழ்ப்படிந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதைக்கொண்டு இக்கல்வெட்டு மற்றும் இந்த வீரகம்பத்தின் காலம் கி.பி. 1693 எனக்கொள்வதில் தவறில்லை.

      குலதெய்வ வழிபாடு நடத்துவதன் மூலம், பாலவார் குல மக்கள் இந்த வரலாற்றுச் சிறப்புடைய தூண் நடுகல்லைப் பாதுகாத்து வருகிறார்கள் என்பதோடு தொடர்ந்து பாதுகாப்பார்கள் என்பது திண்ணம்.









து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
















3 கருத்துகள்:

  1. அருமையான பதிவு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு மற்றும் தகவல்கள்.... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  3. பழனியிலிருந்து ஆனைமலை செல்லும் சாலையில் புங்கமுத்தூர் அருகில் மாலகோயில் மேடு என்று ஒரு இடம் உள்ளது.
    2004 க்கு முன்பு இந்த பகுதியில் ஒரு நடுகல் இருந்தது.. இப்போது அங்கு இல்லை. இது குறித்து ஆய்வு செய்தால் ஏதேனும் தகவல் கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு