மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 26 பிப்ரவரி, 2020


பவானி – பிரம்மதேசம் ஏரிக்கல்வெட்டு

முன்னுரை

23-02-2020 அன்று, தமிழ் நாளிதழ்களான ‘தினமலர்’,  ‘தினமணி’  ஆகியவற்றிலும் பிறிதொரு ஆங்கில நாளிதழிலும் வெளியாகியிருக்கும் ஏரிக்கல்வெட்டு பற்றிய செய்தி, கொங்கு நாட்டில்  ஏரிகள் வெட்டப்பட்டமை கருதியும், அக்கல்வெட்டின் எழுத்தமைதியின் பழமை கருதியும் சிறப்புப் பெறுகிறது. கல்வெட்டு,  ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள பிரம்மதேசம் என்னும் கிராமத்தில் கண்டறியப்பட்டது. தமிழ் நாட்டில் பிரம்மதேசம் என்னும் பெயரில் நிறைய ஊர்கள் காணப்படுகின்றன.  இவை அனைத்தும்,  ’பிரமதேயம்’  என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் பிராமணர் (கொடை) ஊர்களாகும். பவானி-பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை என்று ஊர் மக்கள் வழங்கும் ஓர் ஓடையின் அருகில் பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டே மேற்படி கல்வெட்டு.











’வடகொங்கு வரலாற்றுத்தேடல் குழு’  என்னும் அமைப்பைச் சேர்ந்த தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்களான வேலுதரன், சக்தி பிரகாஷ் ஆகிய இருவரும் தம் களப்பணியில் இந்த ஏரிக்கல்வெட்டைக் கண்டறிந்தனர் என்பதாகக் கருதுகிறேன். இக்களப்பணியில் தொல்லியல் அறிஞர் புலவர் செ. இராசு ஐயா அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும், கல்வெட்டைக் கண்டறிந்த ஆர்வலர்கள் புலவர் ஐயாவைச் சந்தித்துக் கல்வெட்டுப்படியைக் காட்டி, அவர் படித்தறிந்த செய்திகளை அவர் கூறிய விளக்கங்களை ஒட்டி நாளிதழில் வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் கருதுகிறேன். கல்வெட்டின் படி (COPY) துல்லியமாக எடுக்கப்படவில்லை. (இது குறையன்று. களப்பணியில் ஈடுபடுகின்ற ஆர்வலர்க்குக் கல்வெட்டின்  மீது சுண்ணமோ, மாவோ பூசி ஒளிப்படம் எடுக்க மட்டுமே வாய்ப்புகளும் தேர்வுகளும் உள்ளன. ஆனால் இங்கு, ஆர்வலர்கள், கல்லெழுத்துகளின் மீது பொடியைத் தூவிப் படி எடுக்காமல் பொடியால்/சாக்கட்டியால்  விளம்பிப் படி எடுத்துள்ளனர் என்று தோன்றுகிறது. எனவே, கல்லெழுத்துகளின் துல்லியம் குறைவு படுகிறது)  

தம் கைக்குக் கிடைத்த கல்வெட்டுப்படியைக் கொண்டு புலவர் ஐயா கல்வெட்டின் பாடத்தைத் துல்லியமாகப் படித்தறிந்து அதன் செய்திகளையும், தனிச்சிறப்புகளையும் அழகாக எடுத்துச் சொல்லியிருகிறார். இக்கல்வெட்டு, கல்வெட்டு ஆய்வாளர்கள் கல்வெட்டுகளைப் படிப்பதில் பாடநூலின் ஒரு பகுதியாகவே கருதித் தம் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் சிறப்புடையது.

செருக்கலி

பழங் கொங்கு நாட்டில் இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகள் இருந்துள்ளன.  ஈரோட்டுப்பகுதி பூந்துறை நாட்டிலும், அந்தியூர், பவானி ஆகியன வடகரை நாட்டிலும் இருந்தன எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. பிரம்மதேசம் ஏரிக்கல்வெட்டின் மூலம், செருக்கலி நாடு என்பதாக ஒரு நாட்டுப்பிரிவு இருந்துள்ளமை அறியவருகிறது.  செருக்கலி நாடே பின்னர் வடகரை நாடு எனப்பெயர் பெற்றது எனப் புலவர் ஐயா கூறுகிறார்.

நாடாளர்

தமிழகம் முழுவதிலும் நாட்டுப்பிரிவுகள் இருந்துள்ளன. அவற்றின் தலைவர்கள் நாடாள்வார், நாட்டுக் கிழார் என்ற பெயரில் அழைக்கப்பெற்றனர். நாடுகளின் நிருவாகச் சபையினரும்  நாட்டார் என்று அழைக்கப்பட்டனர். ஆனால், இந்த ஏரிக்கல்வெட்டு, “நாடாளர்”  என்றொரு புதிய சொல்லாட்சியைக் கொண்டுள்ளது. இச்சொல்லே பிற்காலத்தில் “நாட்டார்”  என மாற்றம் பெற்றது என்பது புலவர் ஐயாவின் கருத்து.

சிறையும் சிறைவாயும்

சிறை என்பது அடைத்தல் என்னும் பொருளுடையது. நீரை அடைத்தலால் இச்சொல் அணையைக் குறிப்பதாகவும் அமைகிறது.  பேரூர் ஆன்பட்டீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்றில் (கொங்குச்சோழன் வீரராசேந்திரன் காலத்தது-கி.பி. 1224),

“. . . . தேவி சிறை யென்கிற அணையடைத்து  வாய்க்காலும் வெட்டி”

என வரும் வரி, சிறை என்னும் சொல் அணையைக் குறிப்பதையும், அடைத்தல் பொருள் தோன்றுதலையும் காட்டுகிறது. எனவே, ஏரிக்கல்வெட்டில் வருகின்ற “சிறை” என்பதை ஏரியின் கரை என்று புலவர் ஐயா விளக்கம் கொடுத்துள்ளார். நீர் வெளியேறும் இடம் ”வாய்”  எனப்படுகிறது. இங்கு, நீர் வெளியேறும் இடம் ஏரியாதலால் “வாய்”, ஏரியின் மதகைக் குறித்தது.

நட்டன்

நக்கன் என்னும் சொல் சிவனைக்குறிப்பது போலவே, நட்டன் என்னும் சொல்லும் சிவனைக் குறிக்கும். “நட்டப்பெருமான்”  என்னும் சொல்லைக் கல்வெட்டுச் சொல்லகராதி ‘சிவன்’ என்றே குறிக்கிறது. பவானி ஏரிக்கல்வெட்டு, ஏரிக்கு ‘நட்டன் ஏரி’  எனப்பெயர் சூட்டியுள்ளனர் எனத்தெரிவிக்கிறது. ஏரியின் பெயரே ‘நட்டன்’ என்றானதால், அதன் கரை ”நட்டன் சிறை” எனவும், அதன் மதகு “நட்டன் வாய்” எனவும் அழைக்கப்பட்டன.


மக்கள் மக்கள் -  பேர் பேர்

செருக்கலி நாடாளரால் உருவாக்கப்பட்ட ஏரியின் பொறுப்பு மற்றும் பயன்பாட்டு மேலாண்மை நாடாளரின் மக்கள், மக்களின் மக்கள், அவர்தம் பேர் (பெயரன்)  ஆகியோர் கையில் என்பதைக் கல்வெட்டு குறிப்பதாகப் பொருள் கொள்ளவேண்டும். நாளிதழ்ச் செய்தியில் இருப்பதுபோல், ஏரியின் பயனை நாடாளரின் வழி வந்தோர் மட்டுமே ‘அனுபவி’க்கவேண்டும் என்பதல்ல; இவர்களன்றி வேறு யாராவது ‘அனுபவி’த்தால் அவர்கள் ’வம்சம்’ அற்றுப்போவார்கள் என்பதும் நேர்மையாகாது.  ஊர்த்தலைவன் ஏரி அமைத்துக் கொடுத்தால் அது ஊருக்குத்தானே பயன்படவேண்டும்?  ஆனால்,

4  . .   இவை மக்கள் மக்கள்
5  பேர் பேர் அல்லாதார் நச்சு
6  வார் வழி அறுவார் . . . . .

என்பதாகக் கல்வெட்டு கூறுவது பெரும் ஐயத்தை எழுப்புகிறது. (நச்சுவார்=விரும்புவார்).  இங்கு, காளிங்கராயன், நீண்டதொரு வாய்க்காலை வெட்டுவித்துத் தன் வழி வந்தவர் அவ் வாய்க்காலின் நீரைப் பயன்பாட்டுக்குக் கொள்ளலாகாது எனக்குறிப்பிட்டுக் கல்வெட்டுப் பொறித்தான் என்பது நினைவுக்கு வருகிறது. ஏரிக்கல்வெட்டின் இறுதியில், “காத்தான் அடி என் தலை மேல்” என்பதாக, இத்தன்மம் காக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறது. கட்டுரை ஆசிரியர், நாளிதழில் வெளியாகியுள்ள கல்வெட்டுப் படங்களின் அடிப்படையில் படித்தறிந்த பாடம் கீழே தரப்பட்டுள்ளது.





கல்வெட்டுப்பாடம்

1    ஸ்ரீ  செருக்கலி நாடாள{ரா}ல் பணி
2    க்கப்பட்டது நட்டன் ஏரியும்
3    நட்டன் சிறையும் நட்டன் வா
4    யும் வை மக்கள் மக்கள்
5    பேர் பேர் அல்லாதார் நச்சு
6    வார் வழி அறுவார் கா[த்]தான்
7    அடி என் தலைய் மேலு
8    து


குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்

கல்வெட்டின் எழுத்தமைதி

கிரந்தம்

கல்வெட்டுச்செய்தியில் “ஸ்ரீ”  என்னும் கிரந்த எழுத்து மட்டுமே சுட்டப்பெற்றுள்ளது. ஆனால், கல்வெட்டுப் படத்தை ஊன்றிப் படித்த கட்டுரையாசிரியர் கண்டறிந்த மற்றொரு கிரந்த எழுத்து ”இ”  என்பதாகும். இது நான்காம் வரியின் மூன்றாவது எழுத்தாகும். இந்த எழுத்தின் வரி வடிவம் கி.பி. 4-6  நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்துள்ளது. (பார்வை : தி.நா. சுப்பிரமணியம் அவர்களின் ‘கோயிற் சாசனங்கள்’ நூல்- பக்கம் 1532)






கிரந்த எழுத்தில்  “இ”



தமிழ்

கல்வெட்டில் காணப்படும் சில தமிழ் எழுத்துகள் ’தமிழி’ என்னும் தமிழ் பிராமியின் தாக்கமும், சிலவற்றில் வட்டெழுத்தின் சாயலும் இருப்பதாகச் செய்திக்குறிப்பு கூறுகிறது.  பிராமி எழுத்துப் பயன்பாடு அதன் செம்மையான வடிவத்தை இழந்து பின்னர் நிகழ்ந்த மாறுதலில் தமிழ் எழுத்தும், வட்டெழுத்தும் தோன்றத்தொடங்கின.  மாற்றத்தின் பின்னரும், சில காலம், ‘க’ எழுத்தும், ‘ச’ எழுத்தும் பிராமியை ஒத்திருந்தன. அவற்றை இக்கல்வெட்டில் காணலாம். வட்டெழுத்தின் சாயலாக இக்கல்வெட்டில், ”லி”  (வரி-1),  ”சி” (வரி-3),  “ழி” (வரி-6) ஆகியவை காணப்படுகின்றன.  



                           தமிழ் எழுத்து              கல்வெட்டில் வட்டெழுத்து சாயல்



                         தமிழ் எழுத்து              கல்வெட்டில் வட்டெழுத்து சாயல்



                       தமிழ் எழுத்து              கல்வெட்டில் வட்டெழுத்து சாயல்



முடிவுரை

மொத்தத்தில், அருமையானதொரு கல்வெட்டினைக் கண்டறிந்து வெளிப்படுத்திய கல்வெட்டு ஆர்வலர்களுக்கும், கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு ஐயா அவர்களுக்கும் நன்றி.








துரை சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.




2 கருத்துகள்: