பழங்கால ஓடுகளும் பண்பாடும்
முன்னுரை
கோவையில் ’பாரதீய வித்யா பவன்’ வளாகத்தில் அமைந்துள்ள ஓர் அரங்கு சிந்தனை அரங்கம். 18-02-2020 அன்று, இந்த அரங்கத்தில் ஒரு சொற்பொழிவு
நிகழ்ச்சி நடந்தது. கோவையில் உள்ள ’இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி’யில் மொழித்துறையில்
உதவிப்பேராசிரியராய் இருக்கும் முனைவர் ந.இராஜேந்திரன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
ஒளிப்படங்களின் தொகுப்புக் காட்சிகளைக்கொண்டு அவரது பேச்சு அமைந்தது. ’வணக்கம்’ என்னும் தலைப்பில் அவருடைய பெயர், பதவிப்பெயர்,
பணியாற்றும் கல்லூரி, மின்னஞ்சல் முகவரி, பேசியின் எண் ஆகியன கொண்ட காட்சிப்படம் வழியே
தம்மை அறிமுகப்படுத்தினார். மின்னஞ்சலில் ’இளையவன்’ என்னும் பெயர் இருந்தது போலவே, அவர் ஓர் இளைஞர். மதுரை-கீழடிக்கருகில் அமைந்த எட்டிசேரி என்னும்
ஊரினர். தொல்லியலில், பெருங்கற்கால எச்சங்களை அவருடைய ஊர்ப்பகுதியில் அடையாளம் காணும்
ஆய்வு ஆர்வத்தால் பல ஆண்டுகள் களப்பணி மேற்கொண்டு நிறைய எச்சங்களக் கண்டறிந்து தம்
இல்லத்தில் சேர்த்து வைத்துள்ளார் என்பதை அவருடைய காட்சிப்படங்கள் சான்றளித்தன.
தொல்லியலில் அவரை வழி நடத்திய காரைக்குடியிலிருக்கும்
பேராசிரியை வள்ளி சொக்கலிங்கம் அவர்களைத் தம் ஆசான் என்று அவர் குறிப்பிட்டார். தொல்லியல்
கழகத்தில் இணைந்து அதன் தலைவராகப் பணியாற்றிய இப்பேராசிரியை அவர்களைக் கண்டு பேசும்
வாய்ப்பு தொல்லியல் கழக 22-ஆம் ஆண்டுக் கருத்தரங்கு காரைக்குடி-கோட்டையூரில் நிகழ்ந்தபோது
இக்கட்டுரை ஆசிரியருக்குக் கிடைத்தமையும் அதனைத் தொடர்ந்த பல ஆண்டுக்கருத்தரங்களில்
அவரோடு உரையாடி மகிழும் வாய்ப்பு அமைந்தமையும்
இங்கு நினைவு கூறப்படுகிறது. நல்ல பண்பாளர். அவரது மாணாக்கரான முனைவர் ந.இராஜேந்திரன்
இன்றுள்ள இளைஞர்க்கு வழிகாட்டும் தகவு கொண்டவராகத் தொல்லியலில் வளர்ந்து நிற்பது பாராட்டுக்குரியது.
அவரது உரைத்தலைப்பு ’பழங்கால ஓடுகளும் பண்பாடும்’ என்பதான ஒரு பொதுத் தலைப்பாகத் தோன்றினும்
அவரது உரை முழுதும் அவருடைய பகுதியின் இரண்டு ஊர்களில் கண்டறிந்த தொல்லியல் எச்சங்கள்
பற்றி இருந்தது. ஆனால், இவ் எச்சங்களைப்பற்றிய உரையின் வழியே தலைப்புப் பொருள் விளக்கப்பட்டமை
அவரது சிறப்பைக் காட்டும். அவருடைய உரையும்
காட்சி விளக்கமும் நமக்களித்த செய்திகளின் பதிவே இக்கட்டுரை.
பெருங்கற்காலம்
’பழங்கால ஓடுகளும் பண்பாடும்’ என்னும்
தலைப்பில் பொதுமக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், அவர் பழங்காலம் என்று குறித்தது
‘பெருங்கற்கால’த்தையே (MEGA LITHIC PERIOD). கி.மு. 1000- கி.மு. 300 என்கிற காலக்கட்டம் பெருங்கற்காலம்
என உலகத் தொல்லியல் அறிஞர்கள் வரையறுத்துள்ளனர்.
இதன் இறுதிப்பகுதியில், தமிழின் சங்ககாலம் அமைகிறது. பெருங்கற்காலம் என்னும் பெயர்
எப்படி வந்தது? பெரும் பெரும் கற்களால் ஈமச் சின்னங்களை அமைத்ததனால்தான். ஈமச் சின்னங்கள்,
கல்வட்டம், கல் பதுக்கை, கல் கிடை, பரல் உயர் பதுக்கை, நெடுநிலைக்கல் எனப் பல்வேறு
வடிவில் அமைக்கப்பட்டன. இவை கற்களால் ஆனவை. மண்ணாலான முதுமக்கள் தாழிகளும் ஈமச் சின்னங்களே.
கொடுமணல் பகுதியில் பல ஈமச் சின்னங்களைக் காணலாம். இவையெல்லாம் மக்களைப் புதைத்த இடங்கள்
அல்லது இறந்தவர்களின் எலும்புகளைப் புதைத்த இடங்கள் ஆகும்.
பெருங்கற்காலச் சின்னங்கள்
பெருங்கற்காலச் சின்னங்கள்
பானை ஓடுகள்
பெருங்கற்காலச் சின்னங்களில் பானை ஓடுகள்
கிடைக்கின்றன. இரண்டு வகையாக இவற்றைப் பிரிக்கலாம். ஒன்று, மக்களின் வாழ்விடம். இன்னொன்று,
மக்களின் நினைவிடம். இவை, மக்களின் புழங்கு பொருள்களாகும். கருப்பு, சிவப்பு ஆகிய இரு
நிறங்களும் கொண்ட கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள். இவற்றைச் செய்தவர்கள் மண்ணீட்டாளர்கள்
என அழைக்கப்பட்டனர். (கலம் செய் கோ எனச் சங்கப்பாடல்கள் குறிக்கின்றன). பானை செய்தல்
ஒரு கலையாக வளர்ந்துள்ளது.
எட்டிசேரி
சொற்பொழிவாளர் தம் ஊராகிய எட்டிசேரிப்பகுதியில்
இவ்வகையான பானை ஓடுகளைக் கண்டறிந்து சேர்த்திருக்கிறார். எட்டிசேரி என்னும் ஊர்ப்பெயர்,
எட்டி என்னும் வணிகர்களின் சிறப்புப் பெயரின் அடிப்படையில் வழங்கியிருக்கக்கூடும் எனக்
கருதுகிறார். இவ்வூர் கீழடிக்கு அருகில் அமைந்துள்ள ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூரின், நாட்டார் கால்வாய் என்னும் பெயரமைந்த இடத்தில் பெரிய இயந்திரங்கள்
கொண்டு தோண்டியபோது பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றைப் பார்க்கையில் மலைப்பு (பிரம்மிப்பு) ஏற்பட்டது. மிக நுணுக்கமாகச் செய்திருக்கிறார்கள்.
கருப்பு சிவப்பு பானை ஓடுகள்
ஒரே ஓட்டில் எவ்வாறு கருப்பு வண்ணமும்
சிவப்பு வண்ணமும் வந்திருக்கும்? களிமண்ணைப் பதப்படுத்தி வடிமைத்துச் சுட்டெடுத்திருக்கிறார்கள்.
அவ்வாறு சுட்டெடுக்கும்போது பானையின் உட்புறத்தில் கருப்பு வண்ணப் பொடியைச் சேர்த்த
காரணத்தால் பானையின் உட்புறம் முழுதும் கருப்பு நிறமும், வெளிப்புறத்தில் திறந்த நிலையில்
சிவப்பு நிறமும் ஏற்பட்டிருக்கலாம். பானையின் மேற்புறத்திலேயே ஒரு பகுதி கருப்பாகவும்
அதனை அடுத்துக் கிழே சிவப்பாகவும் காணப்படுவதும் இது போன்ற ஒரு நுணுக்கத்தால் செய்திருப்பார்கள்
எனலாம். இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் இந்த நுணுக்கமான
கலைத்திறனை இன்றைய அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டால் மீண்டும் மலைப்பே
ஏற்படுகிறது. கீழடிக்கு அருகிலே அமைந்துள்ள எட்டிசேரியிலும் கீழடியில் கிடைத்த பானை
ஓடுகளை ஒத்த ஓடுகள் கிடைத்துள்ளன. கீழடி, தற்போது நடைபெற்ற அகழாய்வுகளின் பின்னர் மிகப்பெரிய
வெளிச்சம் பெற்ற நிலையில், எட்டிசேரியில் கீழடி அகழாய்வுகளுக்கு முன்னரே சொற்பொழிவாளர்
கண்டறிந்த ஓடுகள் கீழடிக் கூறுகளைக் கொண்டிருந்தன என்பதைக் குறிப்பிடவேண்டும்.
தாங்கிகள்
மண்பானைகளை வீட்டுத் தரையில் வைத்துப்
புழங்கிய காலத்தில் அவற்றைத் தாங்கி நிற்கப் பயன்ப்ட்ட வட்டவடிவப் பொருள்கள் தாங்கி
எனப்பட்டன. நம் வீடுகளில் இவற்றைப் பிரிமணை எனச் சொல்வதுண்டு. எட்டிசேரியில் கிடைத்த
தாங்கியின் படம் கீழே தரப்பட்டுள்ளது. இது வாழ்விடத்தில் கிடைத்த ஒன்று. இந்தத் தாங்கியும்
அனைத்திடங்களில் கிடைத்தது போலவே இருக்கின்றது.
பானை ஓடுகளில் குறியீடுகள்
பானை ஓடுகளில் குறியிடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சிந்துவெளிப் பண்பாட்டுமக்கள் யார்? அவர்கள்
பேசிய மொழி எது? பல்வேறு வினாக்கள். சிந்துவெளி, ஈரானிலிருந்து மக்கள் புலம் பெயர்ந்த
இடம் என்றும், தென்னிந்தியாவிலிருந்து மக்கள்
புலம் பெயர்ந்த இடம் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. புலம் பெயர்ந்த இவ்விரு
மக்களும் சேர்ந்து வாழ்ந்த இடம் சிந்துவெளி என்கிற கருத்தும் உண்டு. சிந்துவெளியில்
கிடைத்த முத்திரைகள் இவ்விருவகை மக்களுக்கும் சொந்தமானவை. பானைக் குறியீடுகள் குறியீடுகள் மட்டுமே; எழுத்தல்ல என்று இராஜன் அவர்களும்,
பானைக்குறியீடுகள் சிந்து எழுத்துகளே என்று மதிவாணன் அவர்களும் கருதுகிறார்கள்.
எட்டிசேரிப் பானை ஓடுகளில் இருக்கும்
குறியீடுகளும், கீழடிப் பானை ஓடுகளில் இருக்கும் குறியீடுகளும் ஒன்றாக இருப்பதன் காரணம்
யாது? இக்குறியீடுகள் குறிப்பது என்ன? இவை
எழுத்துகளா? அன்றி வேறா? இவற்றின் பயன்பாடு என்னவாக இருந்தது? இராஜன் அவர்கள் அனைத்துக்
குறியீடுகளையும் தொகுத்து வகைப்படுத்தி ஆய்வு செய்துள்ளார். இக்குறியீடுகள் மக்களின்
குலக்குறியீடுகளாக இருக்கலாம்; அல்லது ஒரு கூட்டத்தாரின் குறியீடுகளாக இருக்கலாம்.
எல்லா நாடுகளின் குறியீடுகளை ஒப்பிட்டுப்பார்த்தாலும் குறியீடுகளிடையே உள்ள ஒற்றுமை
புலப்படும். பாண்டிய நாட்டிலிருந்து வெளியேறிப் பெயர்ந்து உலகின் பல இடங்களுக்குச்
சென்றிருக்கிறார்கள்; பின்னர் அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள் என்கிற
கருத்து சிந்தனைக்குரியது. சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. அன்றேல் குறியீடுகள் எப்படிப்
போயின? எவ்வாறு ஒன்றுபோல் அமைந்தன?
குறியீட்டில் ”ம” எழுத்து
”ம” என்ற எழுத்தைக்குறிக்கும் குறியீடு பொறித்த பானை
ஓடு எட்டிசேரியில் கிடைத்துள்ளது. இதே போன்ற குறியீடு கீழடியிலும் கிடைத்துள்ளது.
”ம” எழுத்தைக் குறிக்கும் குறியீடு |
எட்டிசேரியில் கிடைத்த சில குறியீடுகள், கீழடி, கொடுமணல்,
சிந்துவெளி ஆகிய இடங்களில் கிடைத்த குறியீடுகளை ஒத்துள்ளன என்பதைக் கீழுள்ள படங்கள்
காட்டுகின்றன.
ஸ்வஸ்திகம்
எட்டிசேரியில் ஸ்வஸ்திக வடிவில் இரண்டு
மூன்று கோடுகள் நெருக்கமாகக் கீறப்பட்ட ஓடு கிடைத்துள்ளது. சிந்துவெளிக்குறியீட்டு
முத்திரைகளாகக் காணும் பல வகை ஸ்வஸ்திக் வடிவக் குறியீடுகளில் ஒன்றுடன் எட்டிசேரி ஓடு
பொருந்திப்போவதைக் காணலாம்.
ஸ்வஸ்திகக் குறியீடு |
பானை ஓட்டில் முப்பரிமாணத் தோற்றம்
எட்டிசேரியில் கிடைத்த சில பானை ஓடுகள்
வேறொரு வகையில் சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றன. இவற்றில் காணப்படும் நீரோட்டத் தோற்றத்தில்
அமைந்த வரிவடிவங்கள் முப்பரிமாணத் தோற்றம் (3D EFFECT) கொண்டவையாக நுட்பத்துடன் செய்யப்பட்டுள்ளதைக்
காண்க. இந்த முப்பரிமாணத் தோற்றம், பானை ஓட்டினைக் குறிப்பிட்ட கோணங்களில் வைத்து ஒளிப்படம்
எடுத்தால் மட்டுமே புலப்படும் வகையில் அமைந்துள்ளது. பழங்கால மக்கள்தாம் எப்படிப்பட்ட சிந்தனையாளர்கள்? வியப்பு ஏற்படுகிறது.
பானை ஓட்டில் முப்பரிமாணத்தோற்றம் |
சிறிய பானை-அதற்கொரு தாங்கி!
எட்டிசேரியில் கிடைத்துள்ள வியத்தகு
மட்கலன்களில் மிகச்சிறிய அளவிலான பானைகள் அடங்கும். இரண்டே கால் அங்குல அளவில் தொடங்கிச்
சிறு சிறு அளவில் உயர்ந்து செல்லும் ஆறுவகைப்பானைகளும், அந்தப்பானைகளுக்கேற்ற சிறிய
தாங்கிகளும் நம்மை வியப்பிலாழ்த்தும். இவை எல்லாம் எதற்குப் பயன்பட்டன? கேள்வியும்
வியப்பையே எழுப்பும். பயன்பாடு பற்றிச் சிந்திக்கவேண்டும்.
துளை கொண்ட பானை
எட்டிசேரியில் கிடைத்த மற்றொரு பானை
ஓட்டில் நேர்த்தியான துளை காணப்படுகிறது. துளை
எதற்காக? நாம் நம் காலத்தில் பயன்படுத்திய
பானை-உரிப் பயன்பாட்டினக் கற்பனை செய்கையில், ஒருவேளை முழுப்பானையில் மேலும் துளைகள்
(மூன்று துளைகள்?) இருந்து பானைகளை உரியில்
தொங்கவிடும் பயன்பாடு பழங்காலத்தில் இருந்திருக்குமோ என்று யூகிக்க வைக்கின்றது. அல்லது
மூன்று துளைப் பானை, இறப்புச் சடங்காகச் சுடுகாடு நோக்கிச் செல்கையில் கையில் எடுத்துச் செல்லும் தீச்சட்டியாய்ப் பயன்பட்டிருக்குமோ
என்றும் எண்ணவைக்கின்றது. மொத்தத்தில், பழங்கால
மக்களுடைய வாழ்க்கை முழுவதும் மண்; மண்; மண். அருமையானதொரு வாழ்க்கை. மண் சார்ந்த வாழ்க்கை.
எடைக்கல்லா? குண்டா?
அடுத்து, எட்டிசேரியில் கிடைத்த ஒரு
பழம்பொருள். உருண்டை வடிவிலான கல். இது எடைக்கல்லாகப்
பயன்பட்டிருக்கலாம். ஆனால், எதை நிறுக்கப் பயன்பட்டது? அறியக்கூடவில்லை. இது ஒரு குண்டாக
இருக்கலாம். அவ்வாறெனில் எதற்குப்பயன்பட்டது?
மாட்டுவண்டிச் சக்கரம்
அடுத்துக் கிடைத்த ஒரு பொருள் மண்ணாலான
சக்கரம். இதன் மையத்தில் ஒரு துளை. விளையாட்டுப் பொருள்களில் ஒன்றான வண்டிக்குப் பயன்படுத்திய
சக்கரம். செய்திதாள்களில் இது பற்றிச் செய்தி தருகையில் பிழையாகப் பெண்கள் அணிந்திருந்த
தோடு எனக் குறிப்பிட்டுவிட்டார் சொற்பொழிவாளர். பின்னர், இது வண்டிச்சக்கரமாக இருக்கக்
கூடும் என்னும் கருத்துத் தோன்றியது.
வட்டுச் சில்லுகள்
எட்டிசேரியில் நிறைய வட்டுச் சில்லுகளைக்
கண்டறிந்து சேர்த்து வைத்துள்ள சொற்பொழிவாளர், சிறிது முதல் மூன்றங்குலம் அளவு பெரிது
வரை கிடைத்துள்ளன என்கிறார். இவை, பெண்கள் விளையாடப் பயன்பட்டிருத்தமை பொதுக் கருத்தாகக்
கொண்டாலும், இவை காசாகப் பயன்பட்டிருக்கலாம் என்னும் ஐயமும் எழுகிறது.
முதுமக்கள் தாழி
முதுமக்கள் தாழியின் பயன்பாடு இரண்டு
வகையாக அமைந்தது எனக்கருதுகிறார்கள். ஒன்று, இறந்தவர்களின் உடலை அதில் அப்படியே வைத்து
மண்ணில் புதைத்து விடல்; மற்ரது, இறந்தவர்களின் உடல் நாள்கள் சென்றபின் மிஞ்சும் எலும்புகளைத்
தாழியில் வைத்துப் புதைத்தல். பெருந்தாழிகள் கிடைத்த இடங்களில், அவற்றுக்கு அருகிலேயே
சிறு தாழிகளும் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழி ஒன்றின் அடிப்பகுதியில் அடுக்கடுக்காகச்
சில பதிவுகள் காணப்பட்டன. இவை, தாழிகளை ஓலைத்தடுக்குகளின்மீது வைத்ததால் ஏற்பட்ட சுவடுகளாக
இருக்கக்கூடும்.
விலங்கு மற்றும் மனித எலும்புகள்
எட்டிசேரியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த
விலங்குகளின் பற்கள், எலும்புகள் மற்றும் கருகிய நிலையில் மனித எலும்புத்துண்டு
- கை விரல் பகுதியை நினைவூட்டியது - ஆகியவை கிடைத்துள்ளன. மனித எலும்பின் கருகிய நிலை, இப்பகுதியில் ஏதோ ஒரு
அழிவு நிகழ்ந்திருப்பதைச் - குறிப்பாகத் தீயால் நிகழ்ந்த அழிவு - சுட்டுகிறது எனலாம்.
நாகமுகுந்தன் குடி
எட்டிசேரியை அடுத்துள்ள இன்னொரு ஊர்
நாகமுகுந்தன் குடி. இங்கும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சில பொருள்கள் கிடைத்துள்ளன.
கையில், பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் பிடித்துக்கொள்ளும் அளவிலான சிறு
சிறு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. ஒன்றேகால் அங்குல அளவிலிருந்து இரண்டு அங்குல அளவு
வரையிலானவை. இவ்வளவு சிறிய பாண்டங்களின் பயன்பாடு என்னவாக இருக்கும்? பாண்டங்கள் செய்யப்பட்ட அமைப்பு மிக நேர்த்தி கொண்டது.
விளக்காக இருக்கலாமோ?
தாழி வடிவில் அமைந்த சிறு சிறு பாண்டங்கள், ஆதிச்ச நல்லூரிலும்,
கீழடியிலும் கிடைத்தவற்றைக் காட்டிலும் நாகமுகுந்தன் குடியில் கிடைத்தவை மிக நேர்த்தியாக
வடிவமைக்கப்பட்டுள்ளமை மிகுந்த வியப்பைத் தருகிறது. சிறு பாண்டங்களுக்கும் மூடிகள்
செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாழி வடிவில் சிறு பாண்டம் மூடிகளும் கைப்பிடிகளும் |
இவ்வாறான
மூடிகள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளவற்றை ஒத்துள்ளன. மூடிகளை விரல்களால் பிடிக்கும்
வண்ணம் குமிழ்கள் அமைத்துச் செய்திருக்கிறார்கள். மூடியும் குமிழ்களும் பல வடிவங்களில்
உள்ளன. சில மூடிகள் சதுரங்க விளையாட்டுக் காய்களை நினைவூட்டுகின்றன. மூடிகளின் குமிழ்கள்
சில பறவையின் தோற்றத்தை நினைவூட்டுகின்றன.
நாகமுகுந்தன் குடியில், கையில் பிடித்துக்கொள்ளும்
வகையில் அமைந்த சிறு குடுவைகள் கிடைத்துள்ளன.
இவை, மருந்துக் குடுவைகளாகலாம். மதுக்குடுவைகள் என்றும் கூறலாம். ஆனால், மதுவை இவ்வளவு
சிறிய குடுவையில் அருந்தினார்களா? ஐயம் எழுகிறது.
கற்காலக் கருவி ஒன்று
இறுதியாக, நாகமுகுந்தன் குடியில் கற்காலக்
கருவி ஒன்றும் கிடைத்திருப்பதைச் சொற்பொழிவாளர் பதிவுசெய்துள்ளார். இதன் காலம் கி.மி.
4000 – கி.மு. 1000.
முடிவுரை
தமிழகத்தில், ஆதிச்சநல்லூர், கீழடி
ஆகிய இடங்களுக்குச் சமமான தொல்லியல் இடங்கள் – அகழாய்வுத்தகுதிக்குரிய இடங்கள் - பல
பகுதிகளில் பல உள்ளன என்பதுதான் உண்மை. அதற்குச் சான்றாக, எட்டியூர் மற்றும் நாகமுகுந்தன்
குடியில் கிடைத்த தொல்பொருள்கள் அமைந்துள்ளன என்று உணர்த்தும் வகையில் முனைவர் ந.இராஜேந்திரன்
அவர்களின் சொற்பொழிவு அமைந்தது. அவருடைய நீண்ட உழைப்பு, ஆர்வம், வரலாற்று அறிவு ஆகியவை
இன்றைய இளைஞர்கள் பின்பற்றத்தக்கவை. நிறைய இளைஞர்கள் ஊக்கமுடன் முன்வருவர் என்று நம்பலாம்.
குறிப்பு : சொற்பொழிவாளரின் படங்கள் திரையில் காட்டப்பட்டபோது
கட்டுரையாளர் எடுத்த ஒளிப்படங்களே மேலே கட்டுரையில்
இடம்பெற்றுள்ளன. எனவே, படங்களில் ஒளி மற்றும் வடிவக்
கூர்மை அமையவில்லை.
துரை. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :
9444939156.
மின்னஞ்சல் : doraisundaram18@gmail.com
பொழிவில் கலந்துகொண்ட உணர்வு. நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
பதிலளிநீக்குதவறாமல் என் கட்டுரைகளைப் படித்துவிடும் உங்களுக்குக்
கடமைப்பட்டுள்ளேன் ஐயா.