கல்லாபுரத்தில் 900 ஆண்டுகள் பழமையான புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
கல்லாபுரம்
கல்லாபுரம், உடுமலைக்கருகில் அமராவதி ஆற்றை ஒட்டி அமைந்துள்ள ஊராகும். இவ்வூர் பழமையான ஊர்களில் ஒன்றாகும். கொங்குச் சோழனான வீரராசேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்றில், இவ்வூர், கல்லாபுரமான வீரசோழ நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவனை அடுத்து ஆட்சி செய்த விக்கிரம சோழனின் கல்வெட்டில், கல்லாபுரமான விக்கிரமசோழ நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு அரசர்களும் கி.பி. 1207 - 1265 இடையிலான காலத்தில் ஆட்சி செய்தவர்கள், எனவே, கல்லாபுரம் என்னும் இவ்வூர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை கல்லாபுரம் என்னும் தன் இயற்பெயரைக் கொண்டுள்ளதை அறியலாம். கல்வெட்டில், இவ்வூர் கரைவழி நாடு என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது என்று ஒரு குறிப்புள்ளது.
கல்லாபுரத்துக்கருகில் உள்ள மதகடிப்புதூரில் இருக்கும் ஜயசிங் என்பவர் தம்முடைய தோட்டத்தில் இரண்டு மூன்று துண்டுக்கற்கள் இருப்பதாகவும் அந்தத் துண்டுக்கற்களில் எழுத்துகள் காணப்படுவதாகவும் கூறிக் கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் அவர்களை அழைத்துக்காட்டினார். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், இந்தக் கல்வெட்டுத் துண்டுகளை ஆய்வு செய்து எழுத்துகளைப் படித்துக் கூறிய செய்திகளாவன.
கல்வெட்டுச் செய்திகள்
முதல் இரண்டு துண்டுக் கற்களில் காணப்படும் எழுத்துகளிலேயே முக்கியமான செய்தி கிடைத்துள்ளது வியப்புக்குரியது. வழக்கமாகக் கல்வெட்டுகள் “ஸ்வஸ்திஸ்ரீ” என்னும் மங்கலச் சொல்லுடன் தொடங்கும். அடுத்து வரும் பகுதியில் ஆட்சியிலிருக்கும் அரசனின் பெயர், அவனுடைய ஆட்சியாண்டு ஆகிய செய்திகள் எழுதப்படும். கண்டறிந்த ஒரு துண்டுக்கல்லில் இவ்வாறான முதல் பகுதி காணப்படுகிறது. கொங்குநாட்டை ஆண்ட கொங்குச்சோழன் வீரராசேந்திரன் என்னும் அரசனின் பெயர் இந்தத் துண்டுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அவனுடைய ஆட்சியாண்டு “பத்தொன்பது” என்னும் குறிப்பும் இந்தக்கல்லில் உள்ளது. எனவே, கல்வெட்டு எழுதப்பெற்ற காலம் எது என்னும் செய்தி நமக்குக் கிடைதுள்ளது. வீரராசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரை என வரையறை செய்யப்பட்டதால் கல்வெட்டின் காலம் அவனுடைய 19-ஆம் ஆண்டில் அமைந்த கி.பி. 1226 எனக் கணிக்கப்படுகிறது.
துண்டுக் கல்வெட்டுகள்
துண்டுக்கல்வெட்டு-1 |
துண்டுக்கல்வெட்டு-2 |
துண்டுக்கல்வெட்டுகள் 1 மற்றும் 2 - இணைத்த நிலையில் கிடைக்கும்
வரிகள் :
கல்-1 கல்-2
1 (வீ)ரராசேந்திர (தேவ)ற்கு யா
2 ண்டு பத்தொ (வ)து கடற்
3 றூரில் யிருக்கு ல் மகள்
4 யிரமந் பூமி (யி)ட்ட தூ
5 ண்
மலையாட |
(க)ளில் |
இன்னொரு துண்டுக்கல்லில் உள்ள எழுத்துகள் கடற்றூர் என்னும் ஊர்ப்பெயரையும், ஒரு பெண்ணைக் குறிக்கும் ‘மகள்’ என்னும் சொல்லையும் தாங்கியுள்ளன. இரண்டு கற்களையும் இணைத்து கல்வெட்டு கூறும் செய்தியை ஒருவாறு அறிந்துகொள்ள முடிகின்றது. இரண்டு கற்களிலும் உள்ள இரண்டு எழுத்துகள் “யிட்ட தூண்” என்னும் சொல்லைக் குறிப்பதால், கடற்றூரில் இருக்கும் பெண்மணி ஒருவரின் மகள் தூண் ஒன்றைக்கொடையாகச் செய்து தந்திருக்கிறாள் என்னும் செய்தியைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். கடற்றூர் என்று கல்வெட்டில் வரும் ஊர், தற்போதுள்ள கடத்தூராகும். ஒரு கோவில் புதுப்பிக்கப்படும் போது அல்லது புதிதாக ஒரு மண்டபம் கட்டப்படும்போது தூண்கள் செப்பனிடப்பட்டுப் புதிய தூண்கள் அமைக்கப்படும். கடத்தூர் மருதீசர் கோயிலில் இவ்வாறான திருப்பணிகள் நடைபெற்றதற்கும், தூண்களை அமைத்துக் கொடுத்ததற்கும் கல்வெட்டுகள் உள்ளன. அந்த வகையில், மண்டபம் ஒன்றுக்குத் தூண் கொடையளிக்கப்பட்டுள்ளதைத் துண்டுக்கல்வெட்டு எழுத்துகள் தெரிவிக்கின்றன. இச்செய்திக்குத் துணைசெய்வது போல், இப்பகுதியில் ஒரு மண்டம் இருந்துள்ளதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மண்டபம் இடிந்துபோனதாகவும் இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.
மேலும் இரண்டு கற்களில் ஒன்றில், ”மலையாட” என்னும் எழுத்துகளும், மற்றொன்றில், “ ளில்” என்னும் எழுத்துகளும் காணப்படுகின்றன. ஆனால், இதன் மூலம் எந்தச் செய்தியையும் யூகிக்க முடியவில்லை.
முடிவாக, ஏறக்குறைய 900 ஆண்டுகள் பழமையான கொங்குச் சோழர் காலக் கல்வெட்டு கிடைத்துள்ளது மிகவும் சிறப்புக்குரியது. கல்லாபுரத்தின் பழமைக்குச் சான்றாகவும் இந்தத் துண்டுக்கற்கள் அமைவதும் குறிப்பிடத்தக்கது.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கல்லாபுரக் கண்டுபிடிப்பு அருமை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
பதிலளிநீக்குThank you Mr.Vignesh
பதிலளிநீக்கு