பெங்களூர்ப் பகுதியின் கல்வெட்டுகள் - INSCRIPTION STONES OF BANGALORE
முன்னுரை
அண்மையில் TAMIL HERITAGE TRUST
என்னும் அறக்கட்டளையின் சார்பாகப் பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் பி.எல். உதயகுமார்
என்பவர், பெங்களூர் மாநகரின் சுற்றுப்பகுதிகளில் இருக்கும் கல்வெட்டுகளைப் பற்றி உரையாற்றிய
காணொளி ஒன்றை “மின் தமிழ்” அன்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார். பெங்களூரின் பழமை, அங்கு கண்டறிந்த கல்வெட்டுகள்
பற்றிய பல செய்திகளைத் தொல்லியல் பிண்னணியில்
அந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிந்தது.
உரை ஆங்கில மொழியில் அமைந்ததால், தமிழ் வழி அதனைப் பகிர்ந்து கொள்ளும் விழைவு
இப்பதிவு.
பெந்தகாளூர்
பெங்களூரைப் பற்றிய, புனைவு மரபாக
வழங்கும் ஒரு பழங்கதை உண்டு. போசள (ஹொய்சள) மன்னன் ஒருவன் வழி தவறிப்போய்ப் பசியோடு
அலைந்த வேளையில் ஒரு கிராமத்துக் கிழவி அவனுக்கு வேகவைத்த அவரைப் பயற்றினை உண்ணக் கொடுத்தாள்;
“பெந்த” என்னும் சொல் தமிழை ஒத்தது. “வெந்த”
என்பதன் திரிபாகலாம். ”வேகவைத்த” என்னும் பொருளைத் தருதல் தெளிவு. ”வ” கரம் ”ப” கரம் ஆதல் கன்னட மொழியில் இயல்பானதொன்று. ”காளு”
என்பது பருப்பு வகைகளையும் குறிப்பாக அவரை வகையைச் சேர்ந்த “பீன்ஸ்” (whole beans) பயற்றினையும் குறிக்கிறது.
அதன் காரணமாகப் “பெந்தகாளூர்” என்னும்
பெயர் பெங்களூருக்கு அமைந்தது.
பெங்களூரின் சுற்றுப்புறத்தில் பழங்கல்வெட்டுகள்
பெங்களூர் நகரின் சுற்றுப்பகுதி
முழுவதிலும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருந்துள்ளன. உதயகுமார் தலைமையிலான குழுவினரின் தேடுதலில் தற்போது
முப்பத்திரண்டு கல்வெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இக்குழுவினரால்,
அவற்றின் இருப்பிடம், தோற்றம், அவற்றின் பாடங்கள், அவை கூறும் செய்திகள், அவற்றின்
படங்கள் எனப் பலவும் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில கல்வெட்டுகளின்
செய்திகள் பற்றிய தொகுப்பினைக் கிழே காணலாம். உதயகுமர்ரும் அவரது நண்பர் வினயகுமாரும் இணைந்து இந்த வரலாற்றுத்தேடல்களில் ஈடுபட்டுவருகின்றனர். பி.எல்.ரைஸ் (BENJAMIN LEWIS RICE) கருநாடகப்பகுதியின்
தொல்லியல் துறைத் தலைவராக இயக்குநர் பதவியில்
பணியாற்றியபோது (1885-1906) ஏறத்தாழ ஒன்பதாயிரம் கல்வெட்டுகளைப் படித்துப் பதிவு
செய்துள்ளார். இவர், தமிழ், கன்னடம் ஆகிய இரு
மொழிகளிலும் புலமையுடையவர். முதன் முதலாக மைசூரில் ஆசிரியப்பணியில் சேர்ந்தாலும் பின்னர்
தொல்லியலில் தடம் பதித்தவர். தாம் படித்த கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் பன்னிரண்டு
தொகுதிகளாகப் பதிப்பித்தார். LONDON
MISSIONARY SOCIETY சங்கத்தைச் சேர்ந்த
இவரது தந்தையார் பி.எச். ரைஸ் (BENJAMIN
HOLT RICE) ஒரு பாதிரியார். இப் பாதிரியார்
நினைவாகப் பெங்களூரில் ஒரு தேவாலயம் கட்டப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அ) சர்ஜாபூர்-கனலி-நடுகல்
சர்ஜாபூர் என்பது பெங்களூர் மாவட்டத்தில்
அமைந்த ஆனெ-(க்)-கல் வட்டத்தில் உள்ள ஊர்.
அவ்வூரிலிருந்து அடுத்துள்ள கனலி என்னும் பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில்
நடுகல் சிற்பம் ஒன்றுள்ளது. அதில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. கனலியைச் சேர்ந்த வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட
நடுகல் என்பதைக் கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 900 என்று அறியப்படுகிறது.
ஆ) தாசரஹள்ளி – நடுகல்
தும்கூர் சாலையில் தாசரஹள்ளி என்னும்
ஊரில் கல்வெட்டுடன் கூடிய நடுகல் சிற்பம் உள்ளது. நடுகல் எடுக்கப்பட்ட வீரனின் பெயர்
மாறசிங்கன் என்பதாகும். வீரனின் ஊர் இம்பத்தூர் எனக் கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 750.
தாசர ஹள்ளி நடுகற்கள் - சில தோற்றங்கள்
இ) க3னிக3ர ஹள்ளி – நடுகல்
பெங்களூர் வடக்கைச் சேர்ந்த ஓர்
ஊர் க3னிக3ர ஹள்ளி.
இங்குள்ள நடுகல் போசளர் காலத்தது. காலம் கி.பி. 1342.
ஈ) ஜக்கூர் – நடுகற்கள்
பெல்லாரி சாலை என்றழைக்கப்படும்
பெங்களூர்-ஐதராபாத் நெடுஞ்சாலையில் அமைந்த நகர்ப்புறம் ஜக்கூர். இங்குள்ள விமான நிலையம்
இவ்வூரை எளிதில் அடையாளப்படுத்துகிறது. இவ்வூரில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் நான்கு
கல்வெட்டுகள் முறையான பேணுதலின்றிக் கிடக்கின்றன.
அவற்றில் ஒரு கல்வெட்டு போசளர் (ஹொய்சளர்) காலத்தது. இக்கல்வெட்டு, சேனபோவா என்னும்
பதவியில் இருந்த அல்லாள(ன்) என்பவருக்கு ஜக்கூர் கிராமம் கொடையாக அளிக்கப்பட்டது எனக்
கூறுகிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 1342-
மற்றொரு கல்வெட்டு, கங்கர்-இராட்டிரகூடர்
காலத்துக் கல்வெட்டு. இதன் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு. இக்கல்வெட்டு ஒரு போரைக்
குறிப்பிடுகிறது. ஆனால் போரைப்பற்றிய விளக்கமான செய்தி எதுவும் இல்லை. கல்வெட்டில்,
இப்பகுதியின் குறுநில ஆட்சியாளரான பலவபதிராய(ன்) என்பவன் பெயர் காணப்படுகிறது.
ஜக்கூர் நடுகல் |
உ) பே3கூ3ர் – நடுகல்-கல்வெட்டு
பேகூர்-நாகேசுவரர் கோயில் |
பேகூர்-நாகேசுவரர் கோயில் - 1868-இல் தோற்றம் |
பெங்களூர் – ஒசூர் நெடுஞ்சாலையில்
அமைந்த ஊர் பே3கூ3ர்.
இங்குள்ள நாகேசுவரர் கோயிலில் காணப்படும் நடுகல் கல்வெட்டு ஒரு சிறப்பைக்கொண்டுள்ளது.
முதன் முதலாக, “பெங்களூர்”
என்னும் பெயரைச் சுட்டுகின்ற கல்வெட்டு இதுதான். கல்வெட்டின் காலம் கி.பி.
890. கல்வெட்டு, பெங்களூர்ப் போர் பற்றிக் கூறுகிறது. கங்கருக்கும் நொளம்பருக்கும்
நடைபெற்ற போர். போரில் கங்கர் வென்றபோதும், கங்கரின் படைத்தளபதி நாகத்தரா என்பவன் போரில்
இறந்துபோகிறான். நாகத்தராவின் குடும்பத்தினர்க்குப் பன்னிரண்டு கிராமங்கள் கொடையாக
அளிக்கப்படுகிறது. அவற்றுள் ஒரு கிராமம் பேகூர். கல்வெட்டு பழங்கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. பெங்களூர் பற்றிய குறிப்பை முதன் முதலாகக் கொண்ட
கல்வெட்டுகளில் இதுவே பழமையானது.
பேகூர் நடுகற்கள் |
இதே பேகூரில் பஞ்சலிங்கேசுவரர் கோயில்
உள்ளது. இக்கோயில் சோழரின் கீழிருந்த அக்தியார் என்னும் குறுநிலத்தலைவனால் கட்டப்பெற்றது
என்பது இங்குள்ள கல்வெட்டு கூறும் செய்தி.
ஊ) மடிவாள(ம்) கல்வெட்டு
பெங்களூர் மாநகரப்பகுதிகளுள் ஒன்று
மடிவாள(ம்). இங்குள்ள சோமேசுவரர் கோயிலில்
உள்ள சோழர் காலத் தமிழ்க் கல்வெட்டில் காணப்படும் நிலக்கொடை பற்றிய செய்தியில் “வெங்களூர்”க் குளத்தின் கீழ் இருக்கும் நிலம்
என்னும் குறிப்பு வருகிறது. இக்குறிப்பும் பெங்களூரைப் பற்றிய பழமையான குறிப்பாகும்.
கல்வெட்டின் காலம் கி.பி. 1247. வெங்களூர்,
பின்னர் பெங்களூர் எனத் திரிந்தது. தமிழ்ப் பெயர்களில் காணப்படும் ”வ” கரம், கன்னட மொழியில் “ப” கரமாகத் திரிதல் இயல்பு. இக்கல்வெட்டில், தற்போது பெங்களூரின்
பகுதியாக இருக்கும் பேகூர், வேப்பூர் எனக் குறிக்கப்படுகிறது.
எ) பட்டந்தூர் ஏரிக்கல்வெட்டு
பெங்களூரின் கிழக்குப்பகுதியில்
அமைந்துள்ள காடுகொடி என்னும் இடத்தில் இருக்கும் சுடுகாட்டில் கல்லறைகளுக்கிடையில்
எழுத்துப் பொறிக்கப்பட்ட கல் ஒன்று நின்றுகொண்டிருப்பது வியப்புக்குரியதாகும். இதைக்கண்டறிந்த
மேற்குறிப்பிட்ட இளைஞர்கள், இதனை ஆய்வு செய்து செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இக்கல்வெட்டு, முதலாம் இராசேந்திரனின் முப்பத்திரண்டாம்
ஆட்சியாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு என்பது இதன் சிறப்பாகும். கல்வெட்டின் காலம்
கி.பி. 1043 என அறியப்பட்டுள்ளது. கல்வெட்டு அமைந்துள்ள இடத்திலிருந்து ஏழு கல்
(கி.மீ) தொலைவில் உள்ள பட்டந்தூரில் சண்ணை நாட்டு நாட்டுக்காமுண்டன்
பெர்மாடி காமுண்டன் மகனான இராசேந்திர வேளான் என்பவன் ஏரியைக் கட்டுவித்துத் தூம்புகள்
(மதகு) அமைத்த செய்தியும், கொற்றவை, க்ஷேத்திரபாலர், கணபதி ஆகிய கடவுளரை எழுந்தருளுவித்த
செய்தியும் கல்வெட்டில் உள்ளன. தற்போது, ஏரியைக் காப்போம் என்னும் விழிப்புணர்வு நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
ஏ) விபூதிபுரம் கல்வெட்டு
விபூதிபுரத்தில் உள்ள தமிழ்க்கல்வெட்டு கி.பி. 1307-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. போசள அரசன் வீர வல்லாளனின் ஆட்சிக்காலத்தது. கொடையாளி, தன் ஊர் அருகில் உள்ள காட்டுப்பகுதியை அழித்து நிலத்தைச் செப்பனிட்டு ஊர் உருவாக்கிக் குளமும் வெட்டுவித்த செயலைக் கூறுகிறது.
விபூதிபுரம் கல்வெட்டு |
ஐ) ஹெப்3பா3ள – நடுகல் கல்வெட்டு
பெங்களூர் மாநகரின் ஒரு பகுதியே
ஹெப்3பா3ள. இங்கு, சாலைப்பணியின்போது
பாதுகாத்து எடுத்த ஒரு நடுகல் சிற்பத்தில், சிற்பத்தின் கீழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டது
கண்டறியப்பட்டது. ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது, இக்கல்வெட்டு கி.பி. 750 – ஆம் ஆண்டைச் சேர்ந்தது என அறியப்பட்டது. கல்வெட்டு
பழங்கன்னட எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. கங்க அரசன் ஸ்ரீபுருஷ(ன்) காலத்தது. இவனது ஆட்சிக்காலம்
கி.பி. 730-770. கருநாடகக் கல்வெட்டுகளைத் தொகுத்த பி. எல். ரைஸ்
(B.L. RICE) அவர்களின் தொகுப்பில்
இக்கல்வெட்டு இடம்பெறவில்லை.
ஹெப்3பா3ள – நடுகல் கல்வெட்டு |
கல்வெட்டில் பெர்போ3ளல் நாடு என்னும் பெயர்
காணப்படுகிறது. ஹெப்3பா3ளத்தின்
பழம்பெயரே இவ்வாறு கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. ”பெரிய” என்னும் பொருள் தருகின்ற தமிழ்ச்
சொல், கன்னடத்திலும் ”பெர்”
என்னும் வடிவத்தில் பயில்கிறது. பெர்க்3க3டி3
, பெர்மானடி ஆகிய சொற்கள் கன்னடக் கல்வெட்டில்
உள்ளன. ”ப” கரம், “ஹ” என மாற்றம் பெறுவதும், “ஹ” ,“ப” கரமாக மாற்றம்
பெறுவதும் கன்னடத்தில் இயல்பு என முன்னரே பார்த்தோம். அது போலவே, பெர்போ3ளல் என்பது ”ஹெப்3பா3ள” என மருவியுள்ளது. கல்வெட்டில்,
”பெர்போ3ளல் நாடு-30” என உள்ளது. இது பெர்போ3ளல் நாடு,
முப்பது ஊர்களைக் கொண்ட நாட்டுப்பகுதியைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது.
கல்வெட்டின் பாடம்
உதயகுமாரின் காணொளிப் படத்திலிருந்தும், சில நாளிதழ்ச் செய்திகளிலிருந்தும் தெரிய
வந்த செய்திகளின் அடிப்படையில் பழங்கன்னட எழுத்துகளைப் படிக்க முயன்றதின் விளைவாகக்
கீழ்வரும் பாடத்தைப் பெற முடிந்தது. பின்னர், பல தேடல்களுக்குப் பிறகு, பெங்களூர் கல்வெட்டு
ஆய்வாளர்கள் படித்தறிந்த சரியான பாடம் கிடைத்தது.
அதையும் கீழே தந்துள்ளேன். பழங்கன்னட எழுத்துகள், கி.பி. 4-5 நூற்றாண்டுகளில் வடநாட்டில் - அசோக பிராமியின்
வளர்ச்சியுற்ற நிலையில் - வழக்கிலிருந்த குப்தர் கால எழுத்துகளின் வடிவத்தில் அமைந்துள்ளன.
முற்காலப் பல்லவரும் இதே எழுத்தினைத் தம் செப்பேடுகளில் பயன்படுத்தியுள்ளதோடு, இவ்வெழுத்தின்
அடிப்படையில் பல்லவ கிரந்த எழுத்துகளை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெப்பாள - கல்வெட்டுப் பகுதி |
ஹெப்3பா3ள
– நடுகல் கல்வெட்டின் பாடம் (கட்டுரை ஆசிரியர் படித்தது)
1
ஸ்வஸ்திஸ்ரீ ஸிரிபுருஷ மஹாராஜ ப்ருதுவி ராஜ்ய(ம்)
. . . . .
2
பெர்போளல்நாடு மூவத்து (மா) பெள்நாகத்தரஸ . . . .
3
. . . . றர . . துந .. கோடந்தலெயர கித்தய . . . . . .
4
டி . . . .
ஊரளிவினொ .. ளிதிந்து காபு கா (ன)
5
பெர்குந்தியு கிறுகுந்தி த . . .
6
. . . . . . . . . . . . . கல்லு ..
விளக்கக் குறிப்புகள்
கல்வெட்டின் தொடக்கம்,
மரபுப்படி ”
ஸ்வஸ்திஸ்ரீ” என்று அமைகிறது. கங்க அரசனின் பெயரான “ஸ்ரீபுருஷ”
என்பதில், “ஸ்ரீ”
எழுதப்படவில்லை. அதன் தலைமாறாக
(பதிலாக) “ஸிரி” என்று எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு எழுதப்படுவதைத் தமிழ்க்கல்வெட்டுகளிலும் (தமிழில் “சிரி” ) காணலாம். தமிழ் எழுத்து வரிசையில், இடையின எழுத்துகளில்
‘ல”, “ள”
ஆகிய இருவகை லகர எழுத்துகள் பயின்று வருவதைக் காண்கிறோம். இவற்றில் சற்று
வல்லோசை மிகுந்த “ள” கரம் தமிழ்
எழுத்துகளில் மட்டுமல்லாது வடபுல எழுத்துகளிலும் காணப்படுகிறது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில், குஷானர், க்ஷத்ரபர், சாதவாஹனர் ஆகியோர் காலத்திலிருந்து இந்த “ள” கரம் வழக்கில் உள்ளது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் இவ்வெழுத்து
உண்டு. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு மேலைச் சாளுக்கியர்,
கி.பி. 9-ஆம் நூற்றாண்டு இராஷ்ட்ரகூடர் ஆகியோர்
காலங்களில் கன்னடக் கல்வெட்டுகளில் இவ்வெழுத்து காணப்படுகிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் தெலுங்குக்
கல்வெட்டுகளிலும் இவ்வெழுத்து உண்டு.
ஆய்வாளர்கள் படித்த
கல்வெட்டின் பாடம் தற்போதைய கன்னட எழுத்தில் காட்டப்பட்ட படமும், கல்வெட்டின் பாடத்திற்கேற்றவாறு
கணினி நுட்பத்தால் எழுத்துகளைத் தெளிவாகக் காட்டுகின்ற படமும் கீழே தரப்பட்டுள்ளன. இவ்விரண்டு படங்களையும் நன்கு நோக்கும்போது, மேற்குறித்த
“ள” கர எழுத்தின் சரியான வடிவம்
பற்றிய ஐயம் மிகுதியாக எழுகின்றது. கல்வெட்டின் இரண்டாம் வரியில் ”பெர்போளல்
நாடு” என்னும் தொடரிலும், ”பெள்நாகத்தரசராளே” என்னும் தொடரிலும் இந்த “ள” கரம் வருகின்றது. இத் தொடரில் காணப்படும்
முதலிரண்டு ”ள”கர எழுத்துகளும், மூன்றாவதாகக் காணப்படும்
“ள”கர எழுத்தும் (இங்கு “ளே”) மாறுபடுகின்றன. முதலிரண்டு எழுத்துகளின்
வடிவம் வேறு கல்வெட்டுகளில் காணுவதில்லை. மாறாக,
இவ்வடிவம் “ழ’கர எழுத்து
வடிவத்தை ஒத்துள்ளது. இது “ழ”கரமே
ஆகலாம். ஏனெனில், கல்வெட்டின் நான்காம் வரியில் இருக்கும் “ஊரளிவு”
என்னும் சொல்லில் “ழ”கரமே
பொருந்தி வருதலைக் காணலாம். “ஊரழிவு” என்னும் தமிழ்ச் சொல் பழங்கன்னடத்தில் இயல்பாக
(அல்லது பரவலாக?) வழங்கி வரும் சொல்லாகலாம். பழங்கன்னடத்தில் மிகுதியாகத் தமிழ்ச் சொற்கள்
பயின்று வருகின்றன. ஆநிரை கொள்வதிலும் மீட்டலிலும் இறந்துபடுகின்ற வீரனுக்கு எடுக்கப்படும்
நடுகற்களில் (கன்னடத்தில் “வீரகல்லு””)
“துறு”, “துறு கொளல்” , “துறுவ கொண்டு”, ”கல் நிறிசிதர்”, “முடிசிதர்” போன்ற தமிழ்ச் சொற்கள் இடம் பெறுவதைக் காண்கிறோம். அவ்வகையில், ஹெப்3பா3ள
– நடுகல் கல்வெட்டில் உள்ள “ஊரழிவு”
என்னும் சொல்லில் வருகின்ற “ழ”கரம்
”ழ” கரமே ஆகலாம். எனவே, இரண்டாம் வரியில் ”நாகத்தரசராளே” என்னும் சொல்லில் உள்ள எழுத்தும்,
நான்காம் வரியில் “ஊரழிவினொளெறி” என்னும்
சொல்லில் உள்ள எழுத்தும் ( இவை இரண்டும் ஒரே வடிவில் எழுதப்பட்டுள்ளன) “ள”கரத்தைக் குறிக்கும். இவ்வெழுத்துகளின்
வடிவ மாறுபாடு கீழே காட்டப்பட்டுள்ளது.
ஹெப்பாள - கல்வெட்டு - மூலக் கல்வெட்டும் கணினி உருவாக்கமும் |
Hebbal inscription
The exact text of the inscription reads:
ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ ಸಿರಿಪುರುಷ ಮಹಾರಾಜಾ ಪೃಥುವೀ ರಾಜ್ಯಂಗೆಯ್ಯೆ
ಪೆಬ್ರ್ಬೊಳಲ್ನಾಡು ಮೂವತ್ತುಮಾನ್ಪೆಲ್ ನಗತ್ತರಸರಾಳೆ ಆರ
ಕಮ್ಮೊರರ ಮೈಂದುನಂ ಕೊಡನ್ದಲೆಯರ ಕಿತ್ತಯನಾ ರಟ್ಟವಾ
ಡಿ ಕೂಚಿ
ತನ್ದೊಡೆ ಊರಲಿವಿನೊಳೆರಿದಿನ್ದ್ರಕ ಪುಕಾನ್
ಪೆರ್ಗುನ್ದಿಯು ಕಿರುಗುನ್ದಿ ತಮ್ಮ ಕುಳ್ನಿರಿದೊದು ಇ
ಕಲ್ಲುಂ
|
svasti śrī siripuruṣa mahārājā pṛthuvī rājyaṅgeyye
perbboḷalnāḍu muvattumānpeḻnāgattarasarāḷe āra
kammoṟara maindunam koḍandaleyara kittayyanā raṭṭavā
ḍi kūci tanodḍe ūraḻivinoḷeṟidindraka pukān
pergundiyu kiṟugundi tamma kurḷniṟidodu i kallum
|
”ள” எழுத்தைப்போலவே, “ழ” கரமும், வல்லின “ற’கரமும் வடபுலத்துக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. விஷ்ணுகுந்தியர் காலத்திலும் (கி.பி. 6-ஆம் நூ.ஆ.), இராஷ்ட்ரகூடர் காலத்திலும் (கி.பி. 9-ஆம் நூ.ஆ.) மற்றும் பல்லவர் கிரந்தத்திலும் (கி.பி. 7-ஆம் நூ.ஆ.) “ழ” கரம் வழக்கில் உள்ளது. அது போலவே, கி.பி. 4-6 நூ.ஆ. காலங்களில் கதம்பர், சாலங்காயனர், விஷ்ணுகுந்தியர் ஆகியோர் காலங்களில் “ற”கர எழுத்து வழக்கில் இருந்துள்ளது. இவற்றின் வடிவங்களும், ஹெப்பாள கல்வெட்டில் காணப்படும் வடிவங்களும் கீழே காட்டப்பட்டுள்ளன.
முடிவுரை
கல்வெட்டுகள் அழிந்துகொண்டே வருவதைக் கண்டுவருகிறோம். நாம் வாழ்ந்துவரும் பகுதிகளின் வரலாற்றை நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதது என்பதோடு நம் பகுதி வரலாற்றுக்குச் சான்றாய் எஞ்சியுள்ள கல்வெட்டுகளைப் பாதுகாத்தலும் இன்றியமையாதது. பெங்களூர் அன்பர்களின் அமைப்பைப் போல ஒவ்வொரு ஊர்ப் பகுதியிலும் அமைப்புகள் மிகுதியும் தோன்றிப் பணிகள் நடைபெற வேண்டும்.
பெங்களூரின் வரலாற்றுப் பழமையை அறிவதோடு கூடுதலாகப் பழங்கன்னடத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை நாம் அறிய முடிகின்றது. கி.பி. 4-5 நூற்றாண்டின் காலப்பகுதியில், தமிழி என்னும் தமிழ் பிராமி எழுத்திலிருந்து தமிழுக்குத் தனி எழுத்து முறை (வட்டெழுத்து, பல்லவ கிரந்தத் தமிழ்) தோன்றி விட்டது. ஆனால், தக்காணப்பகுதியில் பழங்கன்னடத்துக்குத் தனியே எழுத்து முறை தோன்றியிருக்கவில்லை வட புலத்துப் பிராமி எழுத்தின் வளர்ச்சியுற்ற எழுத்து முறையே பயன்படுத்தப்பெற்றது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில்தான் கன்னட மொழிக்குத் தனி எழுத்து முறை தோன்றியுள்ளது எனலாம். ஆயினும், 8-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தமிழ் சார்ந்த பழங்கன்னட மொழியும், வடபுல எழுத்து முறையும் தொடர் பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதற்குச் சான்றாக ஹெப்பாளக் கல்வெட்டு (கி.பி. 750) அமைகிறது.
துணை நின்ற நூல்கள் :
1 INDIAN EPIGRAPHY AND SOUTH INDIAN SCRIPTS - By C.SIVARAMAMURTI
----------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.
doraisundaram18@gmail.com
புதிய செய்திகளை அறியும் வாய்ப்பினைத் தொடர்ந்து தருகின்றீர்கள்.நன்றி.
பதிலளிநீக்கு