கடம்பூர் பகுதியில் தொல்லியல் தடயங்கள்
முன்னுரை
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தர்மராஜ்
அவர்கள் ஒரு நாளிதழ் செய்தியாளர். செய்திகளுக்காக ஆங்காங்கே பயணம் செய்துகொண்டிருப்பவர்.
அவர் புதிய இடங்கள், புதிய காட்சிகள் என்று தேடும் பயணங்களில் சத்தியைச் சுற்றியுள்ள
மலைக்கிராமங்களுக்கும் அவ்வப்போது பயணம் மேற்கொள்வது வழக்கம். அது போன்ற ஒரு பயணத்தில்,
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கடம்பூர் மலைக்கிராமத்தில் நடுகற்கள் சிலவற்றைப் பார்த்ததாகவும்,
வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள் எனவும் கூறியிருந்தார். சத்திப்பகுதியில் ஏற்கெனவே
அறிமுகமாயிருந்த நண்பர் இராமசாமி அவர்களும் கடம்பூர் செல்ல ஆர்வம் காட்டியிருந்தார்.
நாங்கள் மூவரும் முன்னரே, 2016-ஆம் ஆண்டு சில நண்பர்களுடன், நீரில் மூழ்கிய டணாயக்கன்
கோட்டைக் கோயிலை – நீர் வற்றியதால் - வெளியே தெரிந்த நிலையில் சென்று பார்த்திருக்கிறோம். தற்போது நாங்கள் மூவரும் இணைந்து கடம்பூர் செல்ல
முடிவாயிற்று.
மலைச் சாலையில் பயணம்
10-12-2018 அன்று பயணம் தொடங்கியது.
கோவையிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரப்பயணத்தில் சத்தி-அத்தாணி சாலையில் அமைந்த,
”நால் ரோடு”
என்று மக்கள் பேச்சு வழக்கில் குறிப்பிடும் சாலைக் கூடலை அடைந்தேன்.
தமிழகத்தின் நீண்ட சாலைகளில் ஆங்காங்கே நான்கு சாலைகள் இணையும் (அல்லது பிரியும்) இடங்கள்
உண்டு. சாலைகள் இணைவதால் கூட்டுச் சாலை என அழைப்பது பொருத்தமாயிருக்கும். ஆனால், நாட்டுப்புற
மக்களும் தற்காலத்தே சாலை, வழி ஆகிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாது “ரோடு” என்னும் ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தப்
பழகிவிட்டனர். எனவே, கூட்டுச் சாலை, மக்கள்
வழக்கில் நால் ரோடு என்றும் சிற்சில ஊர்களில் கூட்டு ரோடு என்றும் அழைக்கப்படுகிறது.
காலை பத்து மணி அளவில் நான் கூட்டுச் சாலையை அடையும்போது நண்பர்கள் இருவரும் அங்கு
வந்திருந்தனர். பயணம் மகிழுந்தில். கூட்டுச் சாலையில் ஒரு சாலை கடம்பூர் நோக்கிச் செல்கிறது.
கடம்பூர், சத்தியை அடுத்துள்ள மலைத்தொடரில் அமைந்த ஒரு கிராமம். எனவே, கூட்டுச் சாலையிலிருந்து
சற்றுத் தொலைவுப் பயணத்தில் மலைச்சாலை தொடங்கியது.
காலை பத்து மணி ஆகியிருந்த போதும் அன்று வெயில் இல்லை. மெலிதான பனி மூட்டம், வளைவான
சாலை, ஒரு பக்கம் - மலைப்பாறைகளை உடைத்துச் சாலை அமைத்திருந்ததால் - பாறைச்சுவர், மறுபக்கம் மரங்கள் அடர்ந்த மலைச் சரிவு
என மலைப்பாதைகளுக்கே உரிய காட்சி அழகுகள். குளிர்ந்த காற்று. சமவெளியில் நகரங்களுக்கே உரிய கட்டிடக்குவியல்கள்,
மரங்களை இழந்த மொட்டைச் சாலைகள், சாலைகளில் ஊரும் ஊர்திகளின் குவியல்கள், அவை வெளிப்படுத்தும்
மாசுப்புகை, நடந்து செல்லும் மனிதர் வானத்தை அண்ணாந்து ஒரு முறையேனும் பார்க்க இயலாதவாறு
நம் பார்வையை எதிரில் சாலையில் நிலை குத்தவைக்கும் சாலைப் போக்குவரத்தின் நெருக்கடி
எனப் பலவும் நம்மைச் சூழ்ந்து நடத்தும் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு எங்கோ புதியதொரு
உலகுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வு அந்த மலைச்சாலைப் பயணத்தில் ஏற்பட்டது.
மலைச்சாலைப் பயணக்காட்சிகள் சில
மலைச்சாலைப் பயணக்காட்சிகள் சில
மல்லியம்மன் கோயில்
கூட்டுச்சாலையிலிருந்து அரை மணிப்
பயணத்தில் நாங்கள் சேர்ந்த இடம் மல்லியம்மன் கோயில். சாலையின் மலைச் சுவர்ப்பக்கம்
பாறைச் சரிவில் கூரையுடன் கூடிய ஒரு சிறிய அறைதான் மல்லியம்மன் கோயில். கோயிலை ஒட்டிப் பாறைக்கற்களால் அமைந்த, மழைக்காலங்களில்
மட்டுமே அருவியாகத் தோற்றமளிக்கும் நீர் வழிந்தோடும் பாதை. அண்மையில் பெய்த பெருமழையின்போது காட்டருவி நீர்,
கோயிலை மூடியவண்ணம் பாய்ந்தோடியுள்ளது என்றார் நாளிதழ் நண்பர்.
மல்லியம்மன் கோயில் |
மேலே தொடரவிருக்கும் மலைச் சாலைப்பயணத்துக்கு
முன்னர் இந்த அம்மனை வணங்கியே ஊர்திகள் செல்வது வழக்கம். ஒவ்வொரு மலைச் சாலையிலும்
இவ்வகையான சிறு தெய்வங்களின் கோயில்களைக் காணலாம். மல்லியம்மன், காடுறை தாய்த் தெய்வத்தின்
ஒரு வடிவம். நாட்டார் வழக்கிலும், பழங்குடிகள், காடுவாழ் குடிகள் ஆகியோர் மரபிலும்
வந்த வழிபாட்டுத் தொடரெச்சங்களே இது போன்ற சிறு தெய்வக் கோயில்கள். மக்கள் நம்பிக்கையில்
இத்தெய்வங்கள் காவல் தெய்வங்கள்; இத்தெய்வங்களின் மீது பல்வேறு புனைவுகள் சாத்தப்படுகின்றன.
கோபால் என்னும் பெயருடைய கோயில் பூசையாளர் – ஓர் இளைஞர் - மல்லியம்மனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். இந்த
மலைத்தொடரில் மேலே இரண்டு மலை அடுக்குகளின் உச்சியைக் கடந்து சென்றால் மல்லியம்மன்
துர்கம் என்னும் ஓரிடம் உள்ளது. அங்கு இயற்கையின் வியப்புக்குரிய பல கூறுகளும், காட்சிகளும்
உள்ளனவாம். குகைகள், சுருங்கைகள் மட்டுமல்லாது, தொல்லியல் தொடர்பான வேறு சிலவும் இருப்பதாக
அவர் கூறியது மிகுந்த வியப்பை அளித்தது. ஒரு வேளை, கற்கால மக்களின் வாழ்விடங்களும்,
பாறை ஓவியங்களும் அங்கிருக்கக் கூடும். ஆங்கிலேயர் காலத்துத் தடயங்களும் அங்கிருப்பதாக
அவர் கூறினார்.
கோயிலுக்கு எதிரில் ஆங்காங்கே குரங்குகள்.
பயணம் செல்வோர் அவற்றுக்குப் பல தின்பண்டங்களைக் கொடுத்துப் பழக்கியதால், அவை எதிர்பார்ப்போடு
ஊர்திகளின் அருகில் வர முயல்வதைக் கண்டோம்.
கடம்பூர்
மேற்கொண்டு இருபது நிமிடப்பயணத்தில்
கடம்பூர் மலைக்கிராமத்தை அடைந்தோம். கடம்பூரைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. பசவணபுரம்,
மாக்கம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர் ஆகியன ஒரு சில ஊர்ப்பெயர்கள். இவை அனைத்தும்,
கடம்பூர் உட்படக் குத்தியாலத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவை. கடம்பூரில், அரசு மருத்துவ
மனை, வனச் சரக அலுவலகம் ஆகியவை உள்ளன. கடம்பூரை அடைந்ததும் பேருந்து நிலையத்தைக் கடந்து,
கடைத்தெரு போல விளங்கிய சாலையில் எங்களை இறங்கச் சொல்லிய நாளிதழ் நண்பர், அருகே ஒரு
நடுகல் சிற்பம் உள்ளதாகக் கூறினார்.
கடம்பூர் புலி குத்தி நடுகல்
நண்பர் காட்டிய இடத்தில் சாலையிலிருந்து
மேட்டுப்பாங்காக ஒரு மண்பாதை உயர்ந்து சென்றது. அதில் சற்று ஏறிச்சென்றதும், புதரும்
செடியுமாய் இருந்த ஓரிடம். தென்னை மரம் ஒன்றை ஒட்டிக் கற்களை அடுக்கிச் சிறிய மேடை
போலாக்கி வைத்திருந்தனர். அந்த இடத்தில் நிறுத்தப்பட்ட ஒரு பலகைக் கல் காணப்பட்டது. நெருங்கிச் சென்று, கல்லைச் சுற்றிலும் இருந்த சிறு
செடிகளைக் களைந்தோம். அது ஒரு மூன்றடுக்கு கொண்ட நடுகல். புலிகுத்திக்கல் என்று கொங்குப்பகுதியில்
அழைக்கப்படும் வீரக்கல். பெரும்பாலும், ஒற்றைக்கல் முழுதுமே புலியை வீரன் குத்துவது
போன்ற சிற்பக்காட்சி இருக்கும். சிற்சில இடங்களில், பலகைக் கல்லானது மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு புடைப்புச் சிற்பமாக மூன்று சிற்பங்களைக்
கொண்டிருக்கும். இவ்வகை நடுகற்கள், அடுக்கு நிலை நடுகல் என்றழைக்கப்படும். அருகில் சென்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.
கடம்பூர் புலி குத்தி நடுகல் - சில தோற்றங்கள்
முதல் அடுக்கில், வீரன் ஒருவன் தன் வலக்கையால் நீண்ட வாளினைப் புலியின் நெஞ்சுப்பகுதியில் பாய்ச்சியவாறு காணப்படுகிறான். அவனுடைய இடக்கை, புலியின் வாய்ப்பகுதியில் காணப்படுகிறது. பெரும்பாலான புலிகுத்திக் கற்களில் காணப்படும் அமைப்பே இது. இடக்கையில் உள்ள குறுவாளினைப் புலியின் வாய்ப்பகுதியில் செலுத்தியது போல் அமைந்திருக்கும். இச் சிற்பத்தில் கையின் வடிவம், குறுவாளின் வடிவம் ஆகியவை தெளிவாகப் புலப்படவில்லை. சிற்பம் நேர்த்தியாகவும், நுண்மையாகவும் வடிக்கப்படாததே காரணம். புலியின் வால் நிமிர்ந்த நிலையில் உள்ளது. வீரனின் அருகில் அவனது மனைவியின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அவள் தன் கையில் ஒரு மதுக்குடுவையை வைத்திருக்கிறாள். இருவருமே தலையின் வலப்புறத்தில் கொண்டை முடிந்திருக்கின்றனர். இருவர் கைகளிலும் வளைகள் காணப்படுகின்றன. கண், மூக்கு ஆகியவை தடித்துச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த முதல் அடுக்கு முழுதும் மண்ணும் சாணமும் பற்றுப்போல் படிந்துவிட்டதால் சிற்ப நுணுக்கங்களைப் பார்க்கக் கூடவில்லை. இருவரின் ஆடை அமைப்புப் புலப்படவில்லை.
கடம்பூர் புலி குத்தி நடுகல் - சில தோற்றங்கள்
முதல் அடுக்கில், வீரன் ஒருவன் தன் வலக்கையால் நீண்ட வாளினைப் புலியின் நெஞ்சுப்பகுதியில் பாய்ச்சியவாறு காணப்படுகிறான். அவனுடைய இடக்கை, புலியின் வாய்ப்பகுதியில் காணப்படுகிறது. பெரும்பாலான புலிகுத்திக் கற்களில் காணப்படும் அமைப்பே இது. இடக்கையில் உள்ள குறுவாளினைப் புலியின் வாய்ப்பகுதியில் செலுத்தியது போல் அமைந்திருக்கும். இச் சிற்பத்தில் கையின் வடிவம், குறுவாளின் வடிவம் ஆகியவை தெளிவாகப் புலப்படவில்லை. சிற்பம் நேர்த்தியாகவும், நுண்மையாகவும் வடிக்கப்படாததே காரணம். புலியின் வால் நிமிர்ந்த நிலையில் உள்ளது. வீரனின் அருகில் அவனது மனைவியின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அவள் தன் கையில் ஒரு மதுக்குடுவையை வைத்திருக்கிறாள். இருவருமே தலையின் வலப்புறத்தில் கொண்டை முடிந்திருக்கின்றனர். இருவர் கைகளிலும் வளைகள் காணப்படுகின்றன. கண், மூக்கு ஆகியவை தடித்துச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த முதல் அடுக்கு முழுதும் மண்ணும் சாணமும் பற்றுப்போல் படிந்துவிட்டதால் சிற்ப நுணுக்கங்களைப் பார்க்கக் கூடவில்லை. இருவரின் ஆடை அமைப்புப் புலப்படவில்லை.
அடுத்த (இரண்டாம்) அடுக்கில் மூன்று
பெண்ணுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அடுக்கு நிலை நடுகல் எழுப்பும் மரபுப்படி, இப்பெண்ணுருவங்கள்
தேவலோகப் பெண்டிரைக் குறிப்பன. அதாவது, இறந்து பட்ட வீரனைத் தேவ மகளிர் தேவர் உலகுகுக்கு
அழைத்துச் செல்வதைக் குறிக்கும் குறியீடு. இந்த அடுக்கிலும் சற்றே மண்ணும் சாணமும்
படர்ந்திருந்தாலும், சிற்ப உருவங்களில் ஆடை அமைப்பு காணப்படுகிறது. மூன்று பெண்டிரும்
தம் இரு கைகளையும் உயர்த்திய நிலையில் வைத்திருக்கிறார்கள். மூவருமே, வலப்புறமாகக்
கொண்டை முடிந்துள்ளனர்.
மூன்றாம் அடுக்கில், நடுவில் சிவலிங்கமும்,
சிவலிங்கத்தின் ஒருபுறம் நந்தி உருவமும், மறு புறம் சிவலிங்கத்தை வணங்கிய நிலையில்
உள்ள நடுகல் வீரனின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சி, வீரன் சிவபதவி அடைந்ததைக்
குறிக்கும் குறியீடு. பிறைநிலவின் உருவமும் கதிரவனைக் குறிக்கும் முழு வட்ட உருவமும்
செதுக்கப்பட்டிருந்தன. நிலவும் கதிரும் உள்ளவரை இந்த நினைவு வீரக்கல் பாதுகாக்கப்படவேண்டும்
என்னும் கருத்தைக் குறிப்பது. கல்வெட்டுகளில் “சந்திராதித்தவரை”
என்று எழுதப்படும் அதே மரபு.
கல்கடம்பூர் - நடுகற்சிற்பம்
அடுத்து, நாளிதழ் நண்பர் எங்களை
அழைத்துச் சென்றது கல்கடம்பூர் என்னும் பகுதி. கடம்பூரை ஒட்டியுள்ள புறக்குடியிருப்புப்
பகுதியே கல்கடம்பூர். மிகுதியான தொலைவு இல்லை. சாலை மிகவும் சிதைந்திருந்தது. சாலையின்
இருபுறமும் விளை நிலங்கள். அங்கே மருத்துவர் தோட்டம் என்று மக்கள் அழைக்கும் ஒரு புன்பயிர்
நிலத்தருகே நண்பர் எங்களை நிறுத்தி, அந்தத் தோட்டத்துக்குள் இருக்கும் நடுகல்லைக் காட்டினார்.
பக்கத்து நிலத்திலெல்லாம் வேலி இல்லை. ஆனால் இந்தத் தோட்டத்தில் கற்றூண்களில் சுற்றிக்
கட்டப்பட்ட முள் முடிச்சுகளுடன் கூடிய கம்பிகளாலான வேலி இருந்தது. நடுகல் சிற்பம் சாலையிலிருந்தே
பார்வைக்குத் தெரிந்தாலும் ஒரு பலகைக் கல்லாக மட்டுமே தோற்றமளித்தது. அதில் இருக்கும்
சிற்ப வடிவங்கள் புலனாகவில்லை. முள் கம்பிகளின் மீது கால் வைத்து ஏற இயலாது. ஆனால்
தோட்டத்துக்குரியவர் அந்நிலத்துக்குள் சென்றுவர இரும்புக் கட்டமைப்பில் ஒரு பெரிய நுழைவு
வழி (GATE) அமைத்திருந்தனர்.
அது பூட்டப்பட்டிருந்ததால், நண்பர் அதன் மீது ஏறி உள்ளே சென்று தாம் மட்டும் ஒளிப்படம்
எடுத்துவருவதாகக் கூறினார். இன்னொரு நண்பர் உடல் நலக்குறைவின் காரணமாக வண்டியிலேயே
அமர்ந்துகொண்டார். நடுகல் சிற்பத்தை அண்மையில் பார்க்கவேண்டும் என்னும் ஆவலில், அகவைக்குரிய
இயலாமையைப் பொருட்படுத்தாது நான் கம்பிகளின் இடையே கால்களை நுழைத்து ஒருவாறு மேலே ஏறிக்
கீழிறங்கினேன். செடிகளுக்கிடையில் நடந்து சென்று
நடுகல்லைப் பார்வையிட்டோம். ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். நடுகல், வேலிக் காலாக இருந்த
கல் தூணின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கீழே கடம்பூரில் பார்த்த நடுகல் போலவே
இதுவும் ஒரு மூன்றடுக்கு நடுகல்லாகும். அதே அமைப்பு. அதில் உள்ள சிற்பக்காட்சிகளே இதிலும்.
கல்கடம்பூர் - நடுகற்சிற்பம் - சில காட்சிகள்
கல்கடம்பூர் - நடுகற்சிற்பம் - சில காட்சிகள்
பாட்டப்பன் சாமி
கல்கடம்பூரிலிருந்து மீண்டும் கீழே
கடம்பூருக்குத் திரும்பும் வழியில் கல்கடம்பூரின் ஊருக்குள் நுழைந்து செல்லும்
மற்றொரு பாதையில் சென்றோம். ஒரு சிறிய திடல். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின்
அருகில் மரத்தடி மேடை ஒன்று. மேடை மேல் நிறுத்தப்பட்டிருந்த சிற்பம் கண்ணில்
பட்டது. அருகில் சென்று பார்த்தால், அது ஒரு சிறிய கோயில் அமைப்பாகக் காணப்பட்டது.
ஒரு மரத்தைச் சுற்றி, ஓரிரு படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்ட மேடை. மேடையின்
காரைப்பூச்சு மரத்தின் அடிப்புறத்தில் இல்லை. மரத்தைச் சுற்றிலும் நிலத்தை மண்ணோடு
விட்டு வைத்துள்ளனர். மண்ணில் சிறு சிறு
கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இது போன்ற
சிறு கற்களை அடுக்கி வழிபடும் இவற்றைப் பொட்டுசாமிகள்
எனக் கிராமங்களில் அழைப்பார்கள்.
சக்தி பிரகாஷ் என்பவர் தம் முக நூலில் கீழ்க்கண்டவாறு
பதிவிட்டுள்ளார்:
”கொங்குப் பகுதியில் பெருவாரியான ஊர்களில் இன்றளவிலும் மக்களால் வணங்கப்படும் ஒரு தெய்வம்தான் "பொட்டுசாமி". இந்த பொட்டுசாமி நமது தொன்ம வழிபாடான நடுகல் வழிபாட்டின் நீட்சியாக கருதலாம். கொங்குப்பகுதிகளில் பொட்டு சாமியை ஊர் மந்தையிலும், குலதெய்வக் கோவில்களிலும், பிள்ளையார் மாரியம்மன் கோவில்களுக்கு நடுவிலும்,
நடுகற்களின் அருகிலும் காணலாம். பொட்டுசாமியை 1,3,5,7,9 என வரிசையாக கூர்மையான கற்களை நட்டு வழிபடுவர் . சில இடங்களில் அதற்கு வெள்ளையடித்தும் , சிவப்பு கருப்பு இட்டும் வழிபடுகின்றனர் . பெரும்பாலும் தனிமேடை அமைத்து அதன்மீது வைக்கப்பட்டுள்ளது.”
பொட்டுசாமிக் கற்களுக்கு நடுவில், பலகைக் கல்லில்
வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் ஒன்று காணப்பட்டது. ஆண் ஒருவரின் சிற்பம். மனித
உருவத்தின் அளவீடுகளும், சிற்ப அழகும் இன்றி வடிக்கப்பட்ட சிற்பம். முறையாகச்
சிற்ப இலக்கணங்களை அறிந்திராத, நாட்டுப்புறக்
கைவினையாளர் ஒருவர் வடித்த சிற்பமாக இருத்தல்வேண்டும். முகத்தை உள்ளடக்கிய
தலைப்பகுதி பெரிதாகத் தோற்றமளித்தது. தலைப்பகுதியில் முடி இல்லை. நீண்ட செவிகள்.
மூடிய நிலையில் கண்கள். மேற்புறமாக வளைந்த கொடுக்கு மீசை. கழுத்துக்குக் கீழே,
மாட்டு வண்டியின் நுகத்தடியை ஒத்த நேர்கோட்டு வடிவத்தில் தோள்கள்.
தோள்களின் வடிவத்திலேயே முழங்கைகளும் சேர்ந்துள்ளன. தோள்பகுதியிலிருந்து கீழே
இறங்கும் முன் கைகள். இடக்கை இடுப்புப்
பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வலக்கை உடலின் மீது படாமல் தொங்கும் நிலையில்
உள்ளது. மார்புப் பகுதியிலிருந்து கால்கள் வரை சதுர வடிவம். கால்களின் இறுதியில்
விரல்களோடு கூடிய பாதங்கள் காணப்படவில்லை.
அருகிலிருந்த முதியவர் ஒருவரைக் கேட்டபோது, இது பாட்டப்பன்
சாமி என்னும் பெயரில் ஊர் மக்களால் வழிபடப்படுகிறது என்று கூறினார். கிராமக்கோயில்
வழிபாட்டு மரபில், முனியப்பன், அய்யனார், வேடியப்பன் போன்ற நாட்டார் தெய்வங்களில்
பாட்டப்பன் சாமியும் ஒன்று. ஈரோடு
மாவட்டம், பவானி வட்டத்தில் செம்புலிச்சாம்பாளையம், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி,
நாமக்கல் மவட்டம், இராசிபுரம் வட்டம், திம்மநாயக்கன் பட்டி, ஈரோடு மாவட்டம் இலுப்பிலி ஆகிய ஊர்களில்
பாட்டப்பன் சாமி கோயில்கள் உள்ளன. இவ்வழிபாடு, நாட்டார் மரபில் முன்னோர்
வழிபாட்டின் இன்னொரு வடிவம் ஆகலாம்.
திடலின் ஓரத்தில் ஆங்காங்கே பெருங்கற்காலச் சின்னங்களில்
காணப்படும் கற்கள் கிடந்தன. கடம்பூர்ப் பகுதி, பெருங்கற்காலத்துடன் தொடர்புடைய
இடம் என்பதற்கான சான்றுத் தடயங்கள்.
குன்றி – அணில் நத்தம்
கடம்பூரிலிருந்து இருபத்து மூன்று கல் தொலைவில் உள்ள
மாக்கம்பாளையத்தில் சில தொல்லியல் தடயங்களைப் பார்த்து வருவதுதான் அடுத்த திட்டமாக
இருந்தது. ஆனால், அவ்வூருக்கு மகிழுந்து போன்ற வண்டிகள் செல்ல இயலா. மோசமான
மலைப்பாதை. ’ஜீப்’
வகை வண்டிகள் மட்டுமே செல்ல இயலும். வாடகைப் பயணத்துக்குக்
கிடைக்கும் ‘ஜீப்’ வண்டிகள் அன்று கிடைக்காததால் அருகில் உள்ள குன்றி என்னும் மலைக்கிராமம் வரை
சென்று திரும்ப முடிவு செய்து எங்கள் பயணத்தை மகிழுந்திலேயே தொடர்ந்தோம். இந்த
மலைப்பாதையும் சற்று மோசமான பாதையே. பாதை முழுக்க யானைகள் நடமாடும் பகுதிகள்
நிறையக் குறுக்கிட்டன. தார்ச்
சாலையிலிருந்து இரு புறமும் பிரிந்து செல்லும் யானைத்தடங்கள். ஒரு சில இடங்களில்
நீர் நிலைகளும் அவற்றைக் கடந்துள்ள யானைத் தடங்களும். பகல் நேரமே ஆயினும், எந்த
நேரத்திலும் யானைகள் குறுக்கிடும் அச்சமான சூழ்நிலை. ஆயினும், கடம்பூரிலிருந்து
குன்றி மலைக்கிராமத்துக்கு கிராம மக்கள் இரு சக்கர வண்டிகளில், பெரும்பாலும்
ஆண்கள் தனித்தும், சில சமயங்களில் தம் துணையருடன்
சேர்ந்தும் சென்ற வண்ணமாக இருந்தனர். யானைகளை எதிர்கொள்தல் பலருக்கும்
நிகழ்வதுண்டு. சற்றுத் தொலைவிலேயெ
யானைகளைக் கண்டுவிட்டு அமைதியாக நின்று, யானைகள் அகன்றதும் பயணத்தைத் தொடர்வதை
வழக்கமாகக் கொள்கிறார்கள். நாளிதழ் நண்பர், தாம் ஒரு முறை, பத்தடித் தொலைவில்
யானையைப் பார்த்து நின்று, யானை அகன்றபின் மேலே பயணத்தைத் தொடர்ந்த ஒரு நிகழ்வைச்
சொல்லும்போதே அச்சமாக இருந்தது. அந்த இடத்தையும் காட்டினார். சாலையை ஒட்டிய நீர்
நிலை.
யானையின் இருப்பை நமக்கு உணர்த்தி அச்சம் சேர்க்கும் வகையில், சாலையில் ஆங்காங்கே யானைச் சாணம் காணப்பட்டது. அரவமற்ற சாலை. சாலையின் இருபுறமும் காடு. தனிமையும், அமைதியும் அச்சத்தை ஏற்படுத்தினாலும், விலங்குகள் எவற்றையும் எதிர்கொள்ளாதவரை, நம் பயணம் நம்மை இழுத்துச் சென்றது. குன்றி மலைக்கிராமத்தை அதன் எல்லையில் நெருங்கும்போதே ஓரிடத்தில் மூன்று நான்கு இளைஞர்கள் தம் வண்டியை நிறுத்திவிட்டுக் கைப்பேசியில் பேசியவண்னம் இருப்பதைக் கண்டு வியந்தோம். அந்த இடம், மலைப்பாதையில் வருகின்ற காட்சி முனை போன்று, கைப்பேசிகளின் இயக்கத்துக்கான அலை வீச்சு முனை என்றார் நண்பர். காரணம், அந்த முனைக்கப்பால் கைப்பேசிகள் இயங்கா. மொத்தத்தில் குன்றி கிராமத்துக்குள் சென்றுவிட்டால் உலகத்தொடர்பு இருக்காது. இயற்கை மட்டுமே. நகரத்தின் இயல்பு வாழ்க்கையிலிருந்து விடுபட இதை விடுத்து வேறிடம் இல்லை எனலாம்.
யானையின் இருப்பை நமக்கு உணர்த்தி அச்சம் சேர்க்கும் வகையில், சாலையில் ஆங்காங்கே யானைச் சாணம் காணப்பட்டது. அரவமற்ற சாலை. சாலையின் இருபுறமும் காடு. தனிமையும், அமைதியும் அச்சத்தை ஏற்படுத்தினாலும், விலங்குகள் எவற்றையும் எதிர்கொள்ளாதவரை, நம் பயணம் நம்மை இழுத்துச் சென்றது. குன்றி மலைக்கிராமத்தை அதன் எல்லையில் நெருங்கும்போதே ஓரிடத்தில் மூன்று நான்கு இளைஞர்கள் தம் வண்டியை நிறுத்திவிட்டுக் கைப்பேசியில் பேசியவண்னம் இருப்பதைக் கண்டு வியந்தோம். அந்த இடம், மலைப்பாதையில் வருகின்ற காட்சி முனை போன்று, கைப்பேசிகளின் இயக்கத்துக்கான அலை வீச்சு முனை என்றார் நண்பர். காரணம், அந்த முனைக்கப்பால் கைப்பேசிகள் இயங்கா. மொத்தத்தில் குன்றி கிராமத்துக்குள் சென்றுவிட்டால் உலகத்தொடர்பு இருக்காது. இயற்கை மட்டுமே. நகரத்தின் இயல்பு வாழ்க்கையிலிருந்து விடுபட இதை விடுத்து வேறிடம் இல்லை எனலாம்.
குன்றியில் பழங்காலக் கிணறு
குன்றியில் ஒரு பழங்காலக் கிணற்றைக் காட்டினார்
நண்பர். ஆண்டு முழுதும் வற்றாத ஊற்று
நீரைக் கொண்ட கிணறு. மிகுந்த வறட்சிக் காலத்திலும் நீர் நிறைந்திருக்கும்
கிணறு. குன்றி-அணில் நத்தம் ஆகிய இரு
பெயர்களையும் சேர்த்தே இந்தப் பகுதி அறியப்படுகிறது. ஊற்றுக் கிணற்றுக்கு அருகில்
வீடமைத்து வாழும் சிவபசவன் என்ற இளைஞர், ஊரை அடுத்துள்ள காட்டுக்குள் பல தொல்லியல் தடயங்கள்
இருப்பதாகக் கூறினார். பின்னொரு நாள் இங்கு வரவேண்டும். அணில் நத்தத்தில்
ஓராசிரியர் பள்ளி ஒன்றுள்ளது. மலைக்கிராம மக்கள் சிறிய அளவில் வேளாண்மையில்
ஈடுபட்டிருக்கிறார்கள். பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
குன்றியில் பழங்காலக் கிணறு - சில தோற்றங்கள்
குன்றியில் பழங்காலக் கிணறு - சில தோற்றங்கள்
ஆஞ்சநேயர் சிற்பம்
குன்றியிலிருந்து கடம்பூர் திரும்பும் வழியில், ஒரு பெரிய
பாறையில் ஆஞ்சநேயர் சிற்பம் புடைப்புருவமாகச் செதுக்கப்பட்டிருந்ததைக்
கண்டோம். அதன் முன்புறம் சில வேல்கள்
நடப்பட்டிருந்தன. விளக்குக்கென ஒரு மாடமும் உள்ளது. மக்கள் வழிபாட்டில் இச்சிற்பம்
உள்ளது. ஆஞ்சநேயர் தம் இடது கையை அபய
முத்திரையில் தூக்கி வைத்தவாறும், தம் இடது கையில் சௌகந்தி மலரைத்
தாங்கிப்பிடித்தவாறும் காணப்படுகிறார். அவர்தம் வால், தலைக்கு மேல் உயர்த்தப்பட்ட
நிலையில் உள்ளது. வாலின் நுனியில் மணி கட்டப்பட்டுள்ளது. இவ்வகை அமைப்பு வியாசராஜர் எழுந்தருளிவித்த ஆஞ்சநேயர் சிற்பங்களில்
காணப்படுகின்ற அமைப்பாகும்.
ஆஞ்சநேயர் சிற்பம் - சில தோற்றங்கள்
ஆஞ்சநேயர் சிற்பம் - சில தோற்றங்கள்
பெரும்பள்ளம் அணை
கடம்பூரிலிருந்து திரும்பும் பயணத்தின்போது, மலைப்பாதையில்
பார்வை முனை ஒன்றில் நின்று, கீழே பள்ளத்தாக்கில்
தெரிந்த பெரும்பள்ளம் அணையின் காட்சியைக் கண்டு மகிழ்ந்தோம்.
தொலைவில் - பெரும்பள்ளம் அணை |
கொடிவேரியில் ஒரு கல்வெட்டு
மலைப்பகுதியை விட்டுக் கீழே வந்தபோது மாலைப்பொழுதாகிவிட்டிருந்தது.
நண்பர் இராமசாமி அவர்கள், அருகில்
கொடிவேரி பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டைக் காண்பிப்பதாகச் சொல்லி அங்கு
அழைத்துச் சென்றார். கொடிவேரி என்னும்
இவ்வூர் இங்குள்ள ஒரு தடுப்பணைக்குப் புகழ் பெற்றது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில்
(கி.பி. 1125) மைசூர்ப்பகுதியில் ஆட்சி
செய்த ஜெயங்கொண்ட சோழ கொங்காழ்வான் என்னும் அரசனால் கட்டபெற்றது. கல்வெட்டுகளில் இவ்வூர் ”கொடுவேலி”
என்று அழைக்கப்பெறுகிறது.
கொடுவேலி என்னும் ஒரு தாவரம் இங்கு மலிந்திருந்ததன் காரணமாக இப்பெயர்
ஏற்பட்டதாக வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின்
இணையதளத்தில் உள்ள குறிப்பு, கொடிவேரி என்னும் பெயர் “கொடிவரி” என்னும் பெயர்
அடிப்படையில் அமைந்ததாகக் கூறுகிறது. கொடிவரி என்பது புலியைக் குறிக்கும் தமிழ்ச்
சொல்; கொடிவேரியைச் சூழ்ந்த வனப்பகுதியில் புலிகள் நிறைய இருப்பதன் காரணமாகக் கொடிவரி என்னும் பெயர்
பெற்றுப் பின்னர் கொடிவேரி என மருவியது.
பத்ரகாளியம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டு ஒரு
தனிப்பலகைக் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல், தரையிலேயே நீண்ட காலம்
கிடந்ததாலும், அதன் மேற்பரப்பில் மக்கள் அமர்ந்ததாலும் மேற்பரப்பில் பொறிக்கப்பட்ட
எழுத்துகள் தேய்ந்துபோயின. இன்னொரு பக்க எழுத்துகள் காணுமாறு உள்ளன. தற்சமயம்,
இக்கல்லைக் கிடப்பு நிலையிலிருந்து மேலெழுப்பி நிறுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டு எழுத்துகளின் மீது மாவு பூசிப்
படித்தோம்.
கல்வெட்டுப் பாடம்
1 ஸ்வஸ்திஸ்ரீ . . . . .
2 [ஸம்வத்]ஸரத்து ஐற்பசி (மீ) . .
3 தியதி ஒடுவங்கா நாட்
4 டுக் கொடுவேலி[யி]
5 ல் ஊரு[ம்] ஊராளிகளு
6 ம் எங்க ஊரில் தந்
7 திரத்தா(ர்) உபைய
8 ப்ரமாணம் பண்ணி
9 குடுத்த பரிசாவது
10 எங்கள் ஊரில் இரு
11 க்கு[ம்] கைக்கோள[ர்]க்கு
விளக்கம்
கல்வெட்டு அகராதியில் தந்திரத்தார் என்னும் சொல் இல்லை.
தந்திரம் என்பதற்கு அருச்சனை அல்லது கோயில் பூசை என்பதாகத் திருவாங்கூர்ப்
பகுதியில் உள்ள கல்வெட்டு வழக்கிலிருந்து அறிகிறோம். தந்திரி என்பதற்கு கல்வெட்டு அகராதி, சேர
நாட்டுக் கோயில் பூசாரி என்று குறிப்பிடுவதும் மேற்படி தந்திரம்=அருச்சனை (பூசை)
என்பதைத் தெளிவாக்குகிறது. அகராதி,
தந்திரம் என்பதற்கு ‘வீரர் தொகுதி; படை’ என்றும்,
தந்திரிமார் என்பதற்கு ‘படை வீரர் கொண்ட சாதி’ என்றும் பொருள் தருவதால், கொடிவேரிக் கல்வெட்டில் வருகின்ற தந்திரத்தார்
என்பது ‘படை வீரர் கொண்ட சாதி’
என்பதையே குறிக்கும் எனலாம். மேலும், கைக்கோளர் என்பவர்
கைக்கோளப்படைப் பிரிவினரைச் சார்ந்தவர் ஆவர். எனவே, தந்திரத்தார் என்னும்
குழுவினர், கொடுவேலி ஊரில் இருக்கும் கைக்கோளர்க்குச் சில உரிமைகள் அல்லது
சலுகைகளைத் தந்துள்ளனர் எனக்கொள்வதே பொருத்தமுடையது. அவ்வாறு தந்ததைக் கல்வெட்டு
“உபைய ப்ரரமாணம்” என்னும் சொல்லால் குறிக்கிறது. இந்தக் கொடையில் (உபையத்தில்)
ஊரும் ஊராளிகளும் பங்கு பெறுகின்றனர் எனலாம்.
கொடிவேரியின்
பழம்பெயர் கல்வெட்டில் கொடுவேலி எனக் கூறப்படுகிறது. பழங்கொங்கு நாட்டின் இருபத்து
நான்கு நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றான ஒடுவங்க நாட்டில் கொடுவேலி இருந்ததாகக் கல்வெட்டு
குறிப்பிடுகிறது. ஒடுவங்க நாடு, தற்போதுள்ள சத்தியமங்கலம் பகுதியாகும்.
முடிவுரை
கொங்குநாட்டின்
உட்பிரிவான ஒடுவங்கநாட்டின் சில பகுதிகளில் உள்ள தொல்லெச்சங்களைக் காணும் வாய்ப்பாக இப்பயணம் முடிந்தது.
பின் குறிப்பு :
இக்கட்டுரை பதிவிடப்பெறும் இன்று காலை, கட்டுரை ஆசிரியருக்கு வந்த ஒரு செய்தி - சத்திய மங்கலத்துப் பகுதியின் மூத்த வரலாற்று ஆய்வாளர் நண்பர் ’உழவர் ஐயா’ தூ.நா. இராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்பது. அன்னாரது மறைவு பேரிழப்பு. அகவை எண்பத்தைந்திருக்கலாம். என்னிலும் பல ஆண்டுகள் மூத்தவர். இருப்பினும் அன்பான அணுக்க நண்பர். கட்டுரை ஆசிரியரின் நீண்ட நாள் கனவு, நீரில் மூழ்கிய டணாயக்கன் கோட்டைக் கோயிலைக் காணவேண்டும் என்பது. அதை ”உழவர் ஐயா” இரு முறை நனவாக்கினார். அப்பயணங்கள் தந்த இன்பம் மறக்கவொண்ணாதது. கடம்பூர் பயணத்தின் போதே அவர் உடல் நலம் குன்றியிருந்தார். நலக்குறைவு காரணமாக அவர் மகிழுந்தை விடுத்து மிகுதியும் வெளிவரவில்லை. கடம்பூர்ப் பயனத்தின்போது அவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ளாதது மனதை வருத்துகிறது. டணாயக்கன் கோட்டைப் பயணத்தின்போது அவருடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் அவர் நினைவை நிலை நிறுத்திக்கொண்டே இருக்கும்.
அவர் நினைவைப் போற்றும் முகமாக இக்கட்டுரைப் படையல்.
உழவர் ஐயாவுடன் கட்டுரை ஆசிரியர் - டணாயக்கன் கோட்டையில்
பின்னணியில் (ப)வாநி ஆறு
பின் குறிப்பு :
இக்கட்டுரை பதிவிடப்பெறும் இன்று காலை, கட்டுரை ஆசிரியருக்கு வந்த ஒரு செய்தி - சத்திய மங்கலத்துப் பகுதியின் மூத்த வரலாற்று ஆய்வாளர் நண்பர் ’உழவர் ஐயா’ தூ.நா. இராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்பது. அன்னாரது மறைவு பேரிழப்பு. அகவை எண்பத்தைந்திருக்கலாம். என்னிலும் பல ஆண்டுகள் மூத்தவர். இருப்பினும் அன்பான அணுக்க நண்பர். கட்டுரை ஆசிரியரின் நீண்ட நாள் கனவு, நீரில் மூழ்கிய டணாயக்கன் கோட்டைக் கோயிலைக் காணவேண்டும் என்பது. அதை ”உழவர் ஐயா” இரு முறை நனவாக்கினார். அப்பயணங்கள் தந்த இன்பம் மறக்கவொண்ணாதது. கடம்பூர் பயணத்தின் போதே அவர் உடல் நலம் குன்றியிருந்தார். நலக்குறைவு காரணமாக அவர் மகிழுந்தை விடுத்து மிகுதியும் வெளிவரவில்லை. கடம்பூர்ப் பயனத்தின்போது அவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ளாதது மனதை வருத்துகிறது. டணாயக்கன் கோட்டைப் பயணத்தின்போது அவருடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் அவர் நினைவை நிலை நிறுத்திக்கொண்டே இருக்கும்.
அவர் நினைவைப் போற்றும் முகமாக இக்கட்டுரைப் படையல்.
உழவர் ஐயாவுடன் கட்டுரை ஆசிரியர் - டணாயக்கன் கோட்டையில்
பின்னணியில் (ப)வாநி ஆறு
----------------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.
சுற்றுலா..வரலாறு..தொல்லியல்..நாட்டுப்புறவியல்..அப்பப்பா ஒரே பதிவில் பல துறைகள் தொடர்பான செறிவான செய்திகள். பாராட்டுகள்.
பதிலளிநீக்கு