மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2019



ஜபல்பூர்க் கல்லறையில் தமிழ்க்கல்வெட்டுகள் -  TAMIL INSCRIPTIONS AT JABALPUR GRAVEYARD



இந்தியக் கல்வெட்டியல் ஆண்டறிக்கை 1950-51.

1945 – 1952 ஆண்டுகளுக்கான கல்வெட்டியல் அறிக்கைகள் அடங்கிய தொகுதி நூலைப்படித்துக் கொண்டிருக்கையில், 1950-51 ஆண்டுக்குரிய பகுதியில் ஒரு செய்தி கருத்தை ஈர்த்தது. இப்பகுதியின் பதிப்பாசிரியரான என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள், 1857-ஆம் ஆண்டில் இந்திய நாட்டில் எழுச்சியுற்ற சிப்பாய்க் கலகத்துடன் தொடர்புள்ள இராணுவ நடவடிக்கைகளுக்குச் சான்று பகரும் வகையில் அமைந்த இரு கல்வெட்டுகளைக் குறித்துச் செல்கிறார்.  மத்தியப் பிரதேசத்து மாநில ஜபல்பூர் (JABALPUR) மாவட்டத்தில் ஸ்லீமனாபாத் (SLEEMANABAD) நகரில் இருக்கும் இரண்டு கல்லறைகளில் தமிழ்க் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன எனப்பதிவு செய்கிறார். தமிழ்ச் சிப்பாய்கள் இருவர் இறந்துவிட்ட நிகழ்வைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கல்லறைகள் அவை. அவை பற்றிய விரிவான செய்தியை அறிந்துகொள்ளத் துணையாக, இவ்விரண்டு கல்வெட்டுகளும் INDIAN HISTORICAL QUARTERLY  என்னும் இந்திய வரலாற்றைக் கூறும் காலாண்டு இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் இந்தியா முழுமைக்குமான தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வாளராக (GOVERNMENT EPIGRAPHIST FOR INDIA) இந்தக் காலகட்டத்தில் (1947-1951) பணியாற்றியுள்ளார். மேற்படிக் குறிப்பை வைத்து வரலாற்றுக் காலாண்டிதழை இணையத்தில் தேடிப் படித்ததில் அறியவரும் செய்திகளின் பதிவு இங்கே.  

கல்லறைக் கல்வெட்டுகள்

இந்தியக் கல்வெட்டு ஆய்வாளரான மேற்குறித்த என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள், தம் பணிப் பொறுப்பில், 1951-ஆம் ஆண்டு துறையின் களப்பணிப் பயணத்தின்போது ஸ்லீமனாபாத் (SLEEMANABAD) நகரில் இவ்விரு கல்வெட்டுகளையும் படியெடுத்துள்ளார். அது பற்றி இந்திய வரலாற்றுக் காலாண்டிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கல்லறைக் கல்வெட்டுகள் இரண்டையும் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார்.

ஸ்லீமனாபாத் (SLEEMANABAD)

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் (JABALPUR) மாவட்டம்  சிஹோரா (SIHORA)  வட்டத்தில் அமைந்துள்ள ஊரே ஸ்லீமனாபாத் (SLEEMANABAD). லக்னோவில் (LUCKNOW)  பிரிட்டிஷாரின் சார்பில் 1849-1856 காலப்பகுதியில் இருந்து வாழ்ந்த SIR WILLIAM SLEEMAN என்பவரின் பெயரால் அமைந்த ஊர் ஸ்லீமனாபாத் (SLEEMANABAD). இந்த ஊரில்,  ஜபல்பூர் (JABALPUR) -  கத்னி (KATNI)  சாலையில் 39/5  எண்ணிட்ட மைல் கல்லின் அமைவிடப்பகுதியில் இவ்விரு கல்லறைக் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளைப் பற்றித் தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தியவர் முனி காந்தி சாகர் (MUNI KANTI SAGAR) என்னும் பெயருடைய ஒரு ஜைனத் துறவியர்.  பனாரஸ் (BANARAS)  என்னும் காசியிலிருந்து ”ஞானோதயா”  என்னும் பெயரில் இந்தி மொழியில் ஓர் இதழை வெளியிட்டுவந்தவர். இந்தியத் தொல் பொருள்களைத் (ANTIQUITIES) தேடிக்கண்டுபிடிப்பதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்.

1857-ஆம் ஆண்டுச் சிப்பாய்க்கலகம்

கல்வெட்டுகள் அமைந்துள்ள இப்பகுதி இந்திய நாட்டின் “மஹாகோஷல்”  (MAHAKOSHAL)  என்றழைக்கப்பட்ட பகுதி.  நாடு முழுதும் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்தோடு தொடர்புள்ள, இப்பகுதிக்கான இராணுவச் செயல்பாடுகளுக்குச் சான்றாக இக்கல்வெட்டுகள் திகழ்கின்றன என்கிறார் என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள்.  இரு கல்வெட்டுகளும் கல்லறைகளில் காணப்படுபவை எனினும், முதல் கல்வெட்டு, கல்லறைக் கட்டுமானத்தின் மீது  எழுதப்பட்டுள்ளது. மற்றது கல்லறையின் சிலுவைப்பகுதியின் மீது எழுதப்பட்டுள்ளது. இறந்துபோன இரு சிப்பாய்களும் தமிழர்கள்; இரு கல்வெட்டுகளும் தமிழில் எழுதப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டு

முதல் கல்வெட்டு எழுதப்பட்டது 1857-ஆம் ஆண்டு, நவம்பர் 6-ஆம் தேதி. இராமசாமி என்னும் சிப்பாயின் இறப்பைக் குறிப்பது. இவர், மதராஸ் பீரங்கிப்படையின் (MADRAS ARTILLERY) மூன்றாவது படைப்பிரிவில் பணியாற்றியவர்;   பீரங்கியை இயக்கும் சிப்பாய்ப் பணியாளருள் (GUN LASCAR) ஒருவர்.  முருவாடா என்னுமிடத்தில் நிகழ்ந்த போரில், நெற்றியில் குண்டடி பட்டு இறந்தவர்.  

கல்வெட்டின் பாடம்    (ஆங்கில எழுத்துகளில் தமிழ் ஒலிப்பில்)

1      1857 வரு. நவ
2      ம்பற் மீ 6 தி  மதறாஸ்
3      ஆட்டில்லெறி 3 ணா(ம்)
4      பட்டாளம் டி கம்ப[னி]
5      கன் லஸ்கற் ராமசாமி
6      முருவாடா சண்ட
7      யில் குண்டு நெத்தி
8      யில் பட்டு வெள்ளி
9      கிழமை காலம்பர
10    6 1/2 மணிக்கி மறண
11    ம் அடந்தார் சிலமான்
12    பாதையில் கொண்டுவந்
13    து  அடக்கிலம் செய்தா
14    [ர்]கள் யிது அறியவும்
15    யிவருடைய தம்பி வேம்பிலி செய்[தார்]


கல்வெட்டு, எழுத்து நடைத் தமிழில் எழுதப்படாமல் பேச்சு வழக்குத் தமிழில் எழுதப்பட்டமையால் சில பிழைகளைக் கொண்டுள்ளது.  இராணுவத்தின்  பீரங்கிப்படையைக் குறிக்கும் ARTILLERY என்னும் சொல், ஆட்டில்லெறி என்றும்,  ஸ்லீமனாபாத் (SLEEMANABAD)  என்னும் ஊர்ப்பெயர்  சிலமான்பாதை என்றும் தமிழ்ச் சாயலில் எழுதப்பட்டுள்ளன.  கல்வெட்டின் இறுதி வரி (வரி 15), இடப்பற்றாக்குறையின் காரணமாகக் கல்லறையின்  பக்கவாட்டுப் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.  கல்லறையைக் கட்டி அமைத்தவர், இறந்துபோன வீரரின் தம்பி வேம்பிலி என்பவர் ஆவார்.  தமிழகத்திலிருந்து நீண்ட தொலைவில் இருக்கும் வடநாட்டு ஊர் ஒன்றில் போரில் இறந்துபட்ட தம் அண்ணனுக்கு நினைவுக் கல்லறை எழுப்ப அவருடைய தம்பி முனைந்து செயல்பட்டமை ஒரு பெருஞ்செயல் எனில், கல்லறையில் தமிழ் மொழியில் எழுதிவைத்தமை தமிழ் மொழியின்பால் அவரும் அவருடைய தமையனும் கொண்டிருந்த பற்றுக்குச் சான்று.

இரண்டாம் கல்வெட்டு

இரண்டாம் கல்வெட்டு குறிப்பிடும் தேதி 1858 நவம்பர் 29.  முதல் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்லறைக்கு அருகிலேயே இருக்கும் இன்னொரு கல்லறையின் சிலுவையில் எழுதப்பட்ட கல்வெட்டு.  28-ஆம் படைப்பிரிவைச் சேர்ந்த FIRST MARTIN MADRAS NATIVE INFANTRY  என்றழைக்கப்பட்ட தரைப்படையின் மூன்றாவது ’கம்பெனி’யில் பணியாற்றிய டேனியல் (DANIEL)  என்னும் சிப்பாய் இறந்துபோன நினைவுக்கு எழுப்பப்பட்ட கல்லறையின் கல்வெட்டு. இவர் இறந்தது போரில் அல்ல; படை முகாமில் இருந்தபோது காய்ச்சல் கண்டு ஜன்னியால் இறந்துபோனதாகக் கல்வெட்டு குறிக்கிறது.


கல்வெட்டின் பாடம்       (ஆங்கில எழுத்துகளில் தமிழ் ஒலிப்பில்)

1      1858
2      வரு. 28 வ
3      து றிசிமெண்
4      று மதறாஸ் நே
5      ற்றிவ் இன்பெ
6      ற்றி பஸ்ட்டு மாட்டின் 3 கம்
7      பனி சிலமான்பாத்துக்கு தவு
8      டு வந்து யிருக்கும்போது 3 கம்ப்
9      பனி சிப்பாயி டேனியலுக்கு காச்
10     சல் கண்டு ஜன்னி புறந்து மே மீ
11     29 தேதி சனிக்கிழமைக் கால
12     மே 5 1/2 மணிக்கி ஆ
13     ண்டவருடைய பர
14     கதி அடைந்தார்
15     அதே 3 கம்ப்ப
16     னியில் யிருந்த கி
17     றிஸ்த்தவர்களு
18     ம் டென்ற்று லாஸ்
19     க்கர் கிறாம்ம் மெக்க
20     ஏல் என்பவ
21     ரும் எல்லாரும் யே
22     கோப்பித்துக் கூ
23     [டி] யிந்தக் கல்ல
24     ரை கட்டி வை
25     த்தோம்

இக்கல்வெட்டும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. இவர் கிறித்தவர் என்பதால் முகாமில் உடனிருந்த கிறித்தவச் சிப்பாய்களும், ‘டெண்ட்’  லஸ்கர் கிரஹாம் மைக்கேல் என்பவரும் ஒன்று கூடிக் கலந்து பேசிக் கல்லறை எழுப்பியுள்ளனர். இக்கல்வெட்டில் டேனியலின் உறவினர் யாரும் தமிழகத்திலிருந்து வந்த செய்தி குறிக்கப்படவில்லை. கிறித்தவர் அனைவரும் ஒன்றுகூடிக் கல்லறை எழுப்பியது பற்றிக் கல்வெட்டில் குறிப்பிட்டாலும், தனியே ஒரு கிறித்தவர், கிரஹாம் மைக்கேல் என்பவர் சுட்டப்படுவதால், அவரை இறந்துபட்ட  டேனியலுக்கு நெருங்கியவராகவோ  ஊர்க்காரராகவோ கருத வாய்ப்புண்டு.  இரண்டு கல்வெட்டுகளிலும், சொல்லின் முதலில் வருகின்ற  “இ”கர உயிர் எழுத்து, “யி” என்னும் எழுத்தால் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.  

முதல் கல்வெட்டில்:

வந்து யிருக்கும்போது 3 கம்ப்
[ர்]கள் யிது அறியவும்
யிவருடைய தம்பி வேம்பிலி செய்[தார்]

இரண்டாம் கல்வெட்டில்

னியில் யிருந்த கி
[டி] யிந்தக் கல்ல

இது போல் எழுதும் மரபு 16-17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகரர் காலத்துக் கல்வெட்டுகளில் தொடங்கிப் பிற்காலக் கல்வெட்டிகளிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.  எடுத்துக்காட்டாகச் சென்னை பார்த்தசாரதிக் கோயில் கல்வெட்டு ஒன்றில் (க.வெ.எண் : 535, தெ.இ.க. தொகுதி-8  காலம் கி.பி. 1603 – விஜய நகர அரசர் வீர வெங்கடபதி தேவ மகாராயர்),

“. . . . . . . .    தளிகை அமுது செயிறத்துக்காக . . . . சமைப்பித்த கெட்டி வராகன்
20  யிந்த வராகன் இருவதும்  . . . .    

“ . . . . .   தான சமையமும் யிப்படி  யிவர்கள்  சொன்னபடி  . . . “

என எழுதப்பட்டுள்ளதைக் காண்க.

இரண்டாம் கல்வெட்டில், ஏழாம் வரியில், “சிலமான்பாத்துக்கு தவுடு வந்து யிருக்கும்போது”  என்னும் தொடரில் உள்ள ”தவுடு”  என்னும் சொல் தமிழ்ச் சொல்லா இல்லையா என்னும் ஐயம் எழுகிறது.  ”தவுடு” என்னும் சொல், படை முகாமைக் குறிக்கும் ”தண்டு”  என்னும் சொல்லுடன் தொடர்புள்ளதாக இருக்குமோ? அன்றி , “தவுடு”  என்னும் இந்திச் சொல்லுடன் தொடர்புள்ளதாக இருக்குமோ? மொத்தக் கல்வெட்டு எழுத்துகளையும், மேற்படி நூலில், என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள் தமிழ் எழுத்தின் அச்சு வடிவத்தில் காண்பிக்கவில்லை;  ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழ் ஒலி பெயர்ப்பில் (TRANSLITERATION) காட்டியுள்ளார்.  கல்வெட்டின் படத்தை நூலில் பதிவு செய்யாததால் தமிழ்க் கல்வெட்டின் மூலப்பாடம் அறியப்படவில்லை.



செய்தியின் நம்பகத்தன்மை

கல்வெட்டுகளில் உள்ள செய்திகளின் உண்மைத்தன்மை அல்லது நம்பகத்தன்மைக்கு லெப். கர்னல் இ. ஜி. பிதியன் ஆடம்ஸ்  (Lt. COLONEL E.G. PHYTHIAN ADAMS) என்பவரின் கூற்று உறுதி பகர்கிறது. இவர், “THE MADRAS SOLDIER 1746-1946”  என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நுலினை எழுதுவதற்காக இவர், இராணுவத் துறையின் ஆவணங்களை முழுதும் ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேற்குறித்த கல்வெட்டுகளைக் குறித்து இவரிடம் என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள் தொடர்புகொண்டதையும், ஆடம்ஸ் அவர்கள் கடிதம் மூலம் சில விளக்கக்கள் அளித்ததையும் என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள் குறிப்பிடுகிறார்.  ஆடம்ஸ் அவர்களின் குறிப்பிலிருந்து :

“மதராசைச் சேர்ந்த “FOOT ARTILLERY”  பீரங்கிப் படைப்பிரிவுகள் மொத்தம் நான்கில் மூன்று ஆங்கிலேயர் பிரிவுகள்; ஒன்று இந்தியப் பிரிவு. முன்னதில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கம்பனிகள் என்னும் கணக்கில் பன்னிரண்டு கம்பனிகளும் பின்னதில் (இந்தியப் பிரிவு) பத்துக் கம்பனிகளும் ஆக மொத்தம் இருபத்திரண்டு கம்பனிகள்.  இப் பீரங்கிப்படைப்பிரிவுகள் ஜெனரல் விட்லாக் (GENL. WHITLOCK) தலைமையில் “மஹாகோஷல்”  பகுதியில் இயங்கின. ”கன் லஸ்கர்”  இராமசாமி  இக்கம்பனிகளுள் ஒன்றில் பணியாற்றியவர் என்பதில் ஐயமில்லை. A முதலான ஆங்கில எழுத்துகளின் வரிசையால் பெயர் சூட்டப்பெற்ற கம்பனிகள் மொத்தம் இருபத்திரண்டும் T என்னும் எழுத்துகளுக்குள் அடங்கும்.  இராமசாமி “டி”  கம்பனியில் பணியாற்றியதாகக் கல்வெட்டு குறிப்பதால், அவர் “D”  கம்பனியிலோ “T” கம்பனியிலோ பணியாற்றினார் என்பது தெளிவு. கன் லஸ்கர் பதவியில் இருப்போர் ஐரோப்பியராயினும் இந்தியராயினும் பீரங்கிப் படைப்பிரிவைச் (ARTILLERY) சேர்ந்தவர் கணக்கிலேயே அமைவர்.

THE 28th MADRAS NATIVE INFANTRY என்னும் படைப்பிரிவானது MARTIN-KE-PALTAN என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது. கல்வெட்டில் 2-6 வரிகளில் குறிக்கப்பட்ட ‘28 வது றிஜிமெண்று மதறாஸ் நேற்றிவ் இன்பெற்றி பஸ்ட்டு மாட்டின்’ என்பது மேற்குறித்த  THE 28th MADRAS NATIVE INFANTRY - MARTIN-KE-PALTAN  என்பதையே சுட்டுகிறது என்பது தெளிவு.”

முடிவுரை

மேற்படிக் கல்வெட்டுகள் மூலம் இறந்துபட்ட இரு வீரர்களும் தாம் பணியாற்றிய படையின் நம்பிக்கைக்குரிய வீரர்களாகத் திகழ்ந்தனர் என்றோ, அல்லது, தாம் சார்ந்த நாட்டின் மேல் பற்றுக்கொண்டவராய்த் திகழவில்லை என்றோ இரு வேறு கோணங்களில் பேசப்படலாம். ஆனால், கல்வெட்டுகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டமை,  சொந்த மண்ணை விட்டு எவ்வளவு தொலைவைக் கடந்து சென்றாலும் ஒரு தமிழ்ச் சிப்பாயின் உள்ளத்தில் தாய்த்தமிழின்பால் தீயாய்க் கனன்று நிற்கும் காதலை மெய்ப்பிக்கும் செயலெனவே நிலைத்து நிற்கும்.



துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

1 கருத்து: