மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 9 மார்ச், 2019


தொண்டாமுத்தூரை நோக்கி ஒரு சிறு பயணம்

முன்னுரை

கோவையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் குமரவேல் என்னும் இளைஞர். அவருக்கு அவர் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல், கோவை-தொண்டாமுத்தூர் அருகில் தென்னமநல்லூரில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது என்பது. அக்கல்வெட்டைச் சென்று பார்த்துப் படிக்கவேண்டும் என்று குமரவேல் கேட்டிருந்தார். எனவே, ஒரு நாள் இருவரும் புறப்பட்டோம்..

தொண்டாமுத்தூர் நடுகல் சிற்பம்


தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயில்


தொண்டாமுத்தூரை அடைந்ததும், அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஒரு நடுகல் சிற்பம் இருப்பதாக நண்பர் கூறவே, மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். நுழைவாயில தூணுக்கு அருகிலேயே நடுகல் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. சிற்பத்தில், வீரன் ஒருவனின் உருவமும், காளை ஒன்றின் உருவமும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் நின்று கொண்டிருக்கிறான். அவனுடைய இடது கை காளையின் கொம்பைப் பிடித்தவாறுள்ளது. வழக்கமாக இதுபோன்ற நடுகற் சிற்பத்தில் வீரனின் கால்கள், நடந்துகொண்டிருக்கும் ஒரு தோற்ற நிலையில் பக்கவாட்டில் அமைக்கப்பெற்றிருக்கும். முகம் மட்டும் நேராகக் காண்பிக்கப்பட்டிருக்கும். இத்தகைய கால் அமைப்பை ஆலிடா  என்னும் கலைச்சொல்லால் குறிப்பர். ஆனால், இச்சிற்பத்தில், கால்கள், முகம் இரண்டுமே நேராகக் காட்டப்பட்டுள்ளது. வீரனின் இடது கை வாள் ஒன்றினை உயர்த்திப் பிடித்துள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால், வாளினின்றும் சாட்டை போன்ற ஒன்று கிளைத்ததுபோல் கீறப்பட்டுள்ளது.  சிற்பம் முழுதுமே, அதன் மூலக் கற்சிற்பத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டுள்ளது. சிற்பம் செதுக்கப்பட்ட கற்பரப்பு  முற்றாகச் ‘சிமெண்டு  கொண்டு பூச்சுப்பணி செய்யப்பட்டு வழவழப்பாக்கப்பட்டதோடு அல்லாமல் சிற்ப உருவங்கள் இரண்டிலுமே ‘சிமெண்டுகொண்டு ஒட்டுப் பூச்சு செய்யப்பட்டுள்ளது. எனவே, சிற்பத்தின் மெய்யான வடிவம் மாறியுள்ளது. கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகளும் பூச்சு வேலையால் அழிந்துபோயின. இச்சிற்பமும், இதில் உள்ள கல்வெட்டும் ஆவணப்படுத்தப் பெற்றுள்ளனவா எனத் தெரியவில்லை. ‘சிமெண்டு’ப் பூச்சினை முழுவதுமாக நீக்கிய பின்னரே எழுத்துகளைப் படிக்க இயலும்.



நடுகல் சிற்பம்


இச்சிற்பம், ஏறு தழுவலுக்கு எடுத்துக்காட்டாக அமைந்த நடுகல் சிற்பம் என்று கருதத் தோன்றினாலும் நுண்மையான ஆய்வுக்குப் பின்னரே முடிவை எட்ட இயலும். ஏறு தழுவுகின்ற காட்சியில் சிற்பம் இல்லை.



தென்னமநல்லூர்க் கல்வெட்டு

தொண்டாமுத்தூர் நடுகல் சிற்பத்தைக் கண்டுவிட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் தென்னம நல்லூர். தென்னம நல்லூரில் கரிய காளியம்மன் கோயிலுக்கருகில், சாலையோரம் அமைக்கப்பெற்ற குடி நீர்க் குழாய்க்கு அடியில், மக்கள் நீர் பிடிக்கத் தோதாகக் குடங்களை வைப்பதற்கென்றே செய்யப்பட்ட கல் போல இந்தத் துண்டுக்கல் பயன்பட்டு வந்துள்ளது. குடங்கள் வைக்கப்பட்டதாலும், மக்கள் கால் பதிப்பதாலும் எழுத்துப் பொறிப்பு தேய்ந்து போனது. தொடர்ந்த நீர் ஒழுக்கினால், கல்வெட்டுப் பரப்பில் பாசி படர்ந்திருந்தது. நண்பர், கல்லின் மீது மண்ணைக்கொட்டி, அருகில் கிடைத்த தென்னை நார் கொண்டு தேய்த்துத் தேய்த்து நீரில் கழுவி ஒருவாறு தூய்மைப்படுத்திய பின்னர் அந்த இடத்திலிருந்து பெயர்த்து வெயிலில் வைத்துக் காய வைத்து மாவு பூசிய பிறகு, எழுத்துகளை அங்கேயே படித்தோம். கல்வெட்டு பிற்காலக் கல்வெட்டு.


தென்னமநல்லூர்க் கல்வெட்டு


கல்வெட்டின் பாடம் :

1     (வி)க்கிர(ம வரு.) தை மீ  உயந  (23) தேதி
2     தென்னம நல்லூரிலிருக்கு
3     ம் (சின்)னக்கவுண்டன் பெ
4     ண்சாதி (கன்னி)யம்மா(ள்)
5     . . . . . . . . . .  ன் கோ[யில்]
6     . . . . . . . . . . ர்  க்கிற......

விளக்கம் :

கல்வெட்டின் முதல் வரியில் விக்கிரம் வருடம் என்னும் குறிப்பு காணப்படுகிறது. விக்கிரம் வருடம் தமிழ் ஆண்டு வட்டத்தில் 1880-ஆம் ஆண்டு அல்லது 1940—ஆம் ஆண்டைக்குறிக்கும். இக்குறிப்பின் அடிப்படையிலும், எழுத்தமைதியின் – குறிப்பாக ஆறாம் வரியில் “க்கி”  என்னும் எழுத்துகள் ஒரே எழுத்தாகச் சுருக்கிக் கூட்டெழுத்து முறையில் எழுதியுள்ளதின் - அடிப்படையிலும் கல்வெட்டின் காலம் கி.பி. 1880 ஆகலாம் என்று கருதலாம். அங்குள்ள மக்களின் கூற்றுப்படி, அந்தத் துண்டுக்கல் அருகிலிருக்கும் சக்தி விநாயகர் கோயில் என்னும் பழங்கோயில் புதுப்பிக்கப்பட்டபோது புறக்கணித்து எறிந்த கற்களில் ஒன்றாகும்.  எனவே,  கல்வெட்டில் வருகின்ற கோ[யில்]   மேற்படி விநாயகர் கோயில் ஆகலாம். இக்கோயிலுக்கு எதோ ஒரு தன்மம் அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு கூறுகிறது எனலாம். தன்மத்தைப் பற்றிய குறிப்புள் இடத்தில் எழுத்துகள் மறைந்துவிட்டன. தன்மத்தை அளித்தவர், தென்னமநல்லூரிலிருக்கும் சின்னக்கவுண்டர் என்பாரின் பெண்சாதி (மனைவியார்) கன்னியம்மாள் என்பவர் ஆவார். பெண்கள் சொத்துரிமை உடையராய் விளங்கியுள்ளமையும், அவர்கள் தம் சொத்தைக் கொண்டு தன்மங்கள் செய்தமையும் கோவைப் பகுதியில் கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த பல பிற்காலக் கல்வெட்டுகளில் காணப்படுகின்ற செய்திகளே.

தாளியூர்

தென்னமநல்லூர்க் கல்வெட்டைப் பார்த்துப் படித்த பின்னர் மீண்டும் தொண்டமுத்தூர் வழியே சென்றோம். ஒரு பிரிவுச் சாலையைக் குறிக்கும் கைகாட்டி, தாளியூர்- 1 கி.மீ. என்று காட்டியதைப் பார்க்கையில், தொல்லியல் தேடலில் தாளியூரில் (தாழியூர் என்பதே சரியாக இருக்குமோ என்னும் ஐயம் ஏற்பட்டது) ஏதாகிலும் தடயங்கள் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தாளியூர் சென்றோம். அங்கு பழங்கோயில்கள் எவையுமில்லை. ஓரிரு வயது மூத்தோரிடம் பேசியதில், தொண்டாமுத்தூர் வஞ்சியம்மன் கோயிலிலும், நரசிபுரம்- வெள்ளிமலைப் பட்டணத்துக் கோயிலிலும்   கல்வெட்டுகள் உள்ளன என்பதாகச் செய்தி கிடைத்தது. மீண்டும், தொண்டாமுத்தூர் திரும்பி வஞ்சியம்மன் கோயிலை அடைந்தோம்.

வஞ்சியம்மன் கோயில்

ஒற்றைக் கருவறையும் அதன்மீது எழுப்பப்பட்ட விமானமும் கொண்ட கல் கட்டுமானத்தால் அமைந்த ஒரு கோயிலே வஞ்சியம்மன் கோயில். கோயிற் சுவர்களில் சில கற்களில்  எழுத்துப் பொறிப்புகள் காணப்பட்டன. ஆனால், கற்சுவர்களின் மீது தொடர்ந்து பூசப்பட்ட சுண்ணாம்புப் பூச்சின் காரணமாக எழுத்துகளைப் படிக்க இயலவில்லை. சுண்ணாம்புப் பூச்சு முழுவதையும் அகற்றிவிட்டே கால்வெட்டுகளைப் படிக்க இயலும். பிறிதொரு முறை இங்கு வந்து அம்முயற்சியை மேற்கொள்ளலாம் என அங்கிருந்து அகன்றோம். பயணம், வெள்ளிமலைப் பட்டணத்தை நோக்கித் தொடர்ந்தது.

வஞ்சியம்மன் கோயில்


வீடு வந்து சேர்ந்து, கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலைப் பார்க்கையில், வஞ்சியம்மன் கோயில் துண்டுக் கல்வெட்டுகள் 2003-ஆம் ஆண்டில் படிக்கப்பட்டுப் பதிவாகியுள்ளது தெரிந்தது. அத் துண்டுக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்ற செய்தி கீழே:

வஞ்சியம்மன் கோயில் கல்வெட்டுச் செய்திகள்

இக்கோயிலின் துண்டுக்கல்வெட்டுகள் பலவற்றில் சித்தார்த்தி வருடம் குறிப்பிடப்படுவதால், அந்த ஆண்டில் கோயில் செங்கல் கட்டுமானத்திலிருந்து கற்றளியாக மாற்றப்பட்டமை உணரப்படுகிறது. இதற்குச் சான்றாக, கல்வெட்டுகள் யாவும், சுவர்க் கட்டுமானத்துக்காகவும், நிலைக்கால் கட்டுமானத்துக்காகவும் கற்கள் கொடுக்கப்பட்டதைக் கூறுகின்றன. கொடை கொடுத்தோர் பட்டியலில் மத்திப் பெருமாள், தாண்டவ(ன்), சுவாமி ஆகிய பெயர்கள் உள்ளன. மேலும், வேட்டுவர் ஒருவரும், மங்கலவன்  (நாவிதன்)  ஒருவரும் கொடையாளிகளாகச் சுட்டப்பெறுகின்றனர். கொடையாளிகள் யாவரும் தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. கற்கள் கொடை அளிக்கப்பட்டமையைக் குறிக்கையில், கல்வெட்டுகளில் “ஒடுக்கின கல்லு”  என்னும் தொடர் கையாளப்படுவதைக் காண்கிறோம். இதில் உள்ள “ஒடுக்கின” என்னும் சொல் பயின்று வருதல் இடைக்காலச் சோழர் கல்வெட்டுகளிலிருந்து தொடரும் மரபு.  இதையும், சித்தார்த்தி வருடக் குறிப்பையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, கல்வெட்டின் காலத்தைக் கி.பி. 1859 எனக் கணிக்கலாம். எனவே, வஞ்சியம்மன் கோயில் 1859-க்கு முன்னரே இருந்துள்ளது என்பதும், 1859-ஆண்டு கற்றளியாகக் கட்டப்பட்டது என்பதும் பெறப்படும். 


வஞ்சியம்மன் கோயில் கல்வெட்டு-எடுத்துக்காட்டுக்கு ஒன்று 


கல்வெட்டுகளின் பாடங்கள் ;

அ)

1       ஸ்வஸ்திஸ்ரீ சித்தார்த்தி வருஷம் ஆவணி மீ ய (10) தொ
2       ண்டாமுத்தூரிலிருக்கும் செல்லய்யன்
3       மகன் மத்திப்பெருமாள் உபயம்

ஆ) 

1                க்கு
2                குள்ளவின ….
3                திருநிலை க[ல்]லு
4                உபயம்

இ)

1    சித்தார்த்தி வரு. சித்திரை மீ
2    தொண்டாமுத்தூரிலிருக்கும்
3    …………… ஒடுக்கின
4    கல்லு ……….

ஈ)

1    சித்தார்த்தி வருஷம் வையாசி மீ ..
2    ….தொண்டாமுத்தூரிலிருக்கும்
3    தாண்டவ …[மசு]வியார்…ஒ
4    டுக்கின கல்லு
உ)

1     ………….வரு. ஆடி
2     ….னா .. தொண்டா
3     முத்தூரிலிரு[க்கும்] சுவாமி
4     உபயம் கெச….

ஊ)

1      சித்தார்தி வரு. ஆவனி மீ……. [வேட்டுவ] ….

எ)

1    பில[வங்க] வருஷம் …..
2    …… குடுத்து விட்டோம் …..
3    ம[ட]ம் தொண்ட ….
4    முத்தூரு நவிதன் …..



தேவராயபுரம் தொட்டிக் கல்வெட்டு


தேவராயபுரம் தொட்டிக்கல்வெட்டு


வெள்ளிமலைப்பட்டணத்தை நோக்கிய பயணவழியில், தேவராயபுரத்தில் நண்பர், கால்நடைகளுக்கான நீர்த்தொட்டியொன்றில் கல்வெட்டு இருப்பதைக் காட்டினார். ஒளிப்படம் மட்டும் எடுத்துக்கொண்டேன். நின்று, மாவு பூசிப் படிக்க நேரமின்றிப் பயணத்தைத் தொடரவேண்டியதாயிற்று. ஒளிப்படத்தைக் கணினியில் பார்க்கையில், செய வரு.,  தெவராயபுர(ம்),    கவுண்டன் மகன்,   உபையம்   ஆகிய சொற்கள் புலப்பட்டன. செய வரு. என்பது ஜெய வருடத்தைக் குறிக்கும். அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு வட்டத்தில் ஜெய வருடம் 1894-ஆண்டில் அமைகிறது.

  
செலம்பனூர் நடுகல் கோயிலும், கல்வெட்டுகளும்.

தேவராயபுரத்தை அடுத்துச் செலம்பனூர் என்னும் ஊர் வந்தது. அங்கு வெள்ளிமலைப்பட்டணத்துக்கு வழி கேட்கையில் தொல்லியல் பற்றிய உரையாடல் ஏற்பட்டது. அங்கிருந்த ஒருவர் செலம்பாத்தா கோயிலில் உள்ள கல்வெட்டைப் பற்றிச் சொன்னதும், செலம்பனூர் செலம்பாத்தா கோயிலுக்குச் சென்றோம். அங்கு சென்று கோயில் சிற்பத்தைப் பார்த்ததும், 2013-ஆம் ஆண்டு, நான் இங்கு வந்ததும் இங்குள்ள நடுகல் சிற்பம் மற்றும் கல்வெட்டுகளைப் பார்த்ததும் நினவுக்கு வந்தன.  

செலம்பனூர் நடுகல்லும் கல்வெட்டும் - 2013-ஆண்டில் தோற்றம்


செலம்பனூர் நடுகல்-1


செலம்பனூர் நடுகல்-2


செலம்பனூர் கல்வெட்டு-1


செலம்பனூர் கல்வெட்டு-2


தேவராயபுரத்தைச் சேர்ந்த தொல்லியல் கழக நண்பர் மேகலா அவர்கள் தம் ஊருக்கருகில் இருக்கும் நடுகல் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை 2013-ஆண்டில் மே மாதத்தில் ஒரு நாள் காண்பித்தார். அப்போது கோயில் இல்லை. திறந்த வெளியில் சுற்றிலும் செடி கொடிகள் சூழ்ந்த நிலையில் அவற்றைப் பார்த்தேன். கல்வெட்டுகளின் மீது சுண்ணம் பூசிப்பார்த்தும் படிக்க இயலவில்லை. எழுத்துகள் சரியான நேர்கோட்டில் அமைந்திராமையும், பிற்கால எழுத்து வடிவம் சரியாகப் பொறிக்கப்படாமையும காரணம். பின்னர், அவர் எடுத்த முயற்சியால் ஊரார் கோயில் எழுப்பி நடுகல் சிற்பங்களையும், கல்வெட்டுக் கற்பலகைகளையும் கோயிலில் நிறுவி வழிபாட்டுக்குரியதாக மாற்றியுள்ளனர்.  தொல்லியல் எச்சங்களுக்கு வழிபாடே பாதுகாப்பான வழி என்றாகிறது.

செலம்பனூர் நடுகல்லும் கல்வெட்டும் – இன்றைய தோற்றம்

சுவர்களோடும் கூரையோடும் கூடிய நீண்டதொரு முற்றம் அமைத்துக் கட்டிடம் எழுப்பியிருக்கிறார்கள்., முற்றத்தின் இறுதியில் மேடை ஒன்றை அமைத்து மேடையில் நடுகல் சிற்பத்தை நிறுத்தியிருக்கிறார்கள். முற்றத்தின் பக்கப்பகுதியில், கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும் பலகைக் கற்களை நிலத்தில் பதித்திருக்கிறார்கள்.  கல்வெட்டுகளை ஒட்டி இன்னொரு நடுகல்லைப் பதித்திருக்கிறார்கள்.  முதன்மை நடுகல் வழிபாட்டில் உள்ளது. நடுகல்லில் காணப்படும் பெண்ணுருவம் செலம்பாத்தா என்னும் பெயரிலும், ஆண் உருவம் ஈசுவரன் என்னும் பெயரிலும் மக்களால் வணங்கப்படுகின்றன. நடுகல் சிற்பங்கள் நாயக்கர் காலப் பாணியில் அமைந்துள்ளன. ஆண், பெண் இருவருமே தம் தலை முடியைக் கொண்டையாக முடிந்துள்ளனர். ஆணின் கொண்டை இடப்புறம் சாய்ந்தும், பெண்ணின் கொண்டை வலப்புறம் சாய்ந்தும் காணப்படுகின்றன. பெண்னின் கொண்டை சற்றுத்தூக்கலாக உள்ளது. இருவருக்குமே அணிகலனோடு கூடிய நீள் செவிகள். கழுத்து, கைகலில் அணிகலன்கள் உள்ளன. பெண்னின் ஆடைக்கட்டு நன்கு  அமைந்துள்ளது. பெண்ணின் ஆடைக்கட்டு கனுக்கால் வரையிலும், ஆணின் ஆடைக்கட்டு முழங்கால வரையிலும் உள்ளன. ஆண், தன் இடது கையைத் தொடையில் ஊன்றியும், வலது கையில் கட்டாரி ஒன்றினைத் தரை நோக்கிக் கீழ்ப்புறமாக அழுத்திப் பிடித்தவாறும் தோற்றமளிக்கிறான். பெண், தன் இரு கைகளையும் கூப்பிய நிலையில் தோற்றமளிக்கிறாள்.  இருவரது உருவங்களுக்கு இடையில் தலைப்பகுதிக்கருகில் பூ வேலைப்பாடு செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளோடு இணைத்து நிறுத்தப்பட்டிருக்கும் இன்னொரு நடுகல் சிற்பம், இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அடுக்கிலும் இரண்டு உருவங்கள்.


செலம்பனூர் நடுகல்-கோயிலில் வழிபாடு

செலம்பனூர் நடுகல்-2


கல்வெட்டுகளின் ஒளிப்படங்களைத் தற்போது ஊன்றிப்படிக்கையில் ஒரு கல்வெட்டுப் படத்தின் சில வரிகளை இனம் காண இயன்றது.  அவ்வரிகளின் பாடம் கீழ் வருமாறு :


செலம்பனூர் கல்வெட்டுகள்


1    துன்துமி வரு. வய்யாசி
2    மீ 3 தேதியில் . . . . .
3    . . . . . யன் யூருலே யிருக்கும்
4    செலம்பன கவுண்டன்
5    கோயல்  மேல்படி புதூருலே
6    யிருக்கும் (வாலி) செட்டி
7    மகன் குப்பி செட்டி


விளக்கம் : கல்வெட்டுப்படி, செலம்பன கவுண்டன் கோயில் என்ர பெயரில் முன்னரே கோயில் இருந்துள்ளமை தெரியவருகிறது. அதாவது, முன்னரே நடுகல் கோயில் வழிபாடு இருந்துள்ளது என்பதாக அறிகிறோம்.


முடிவுரை

பயணத்தின் இறுதியில், நாங்கள் வெள்ளிமலைப்பட்டணம் சென்றபோது, அங்கு எங்களுக்கு  எந்தத் தொல்லியல் தடயமும் கிட்டவில்லை.  தொண்டாமுத்தூரைச் சுற்றியுள்ள பகுதியின் தொல்லியல் தடயங்களைக் காணும் வாய்ப்பும் அவற்றை இங்கு பதிவு செய்யும் நிகழ்வும் மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றன.   






துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.

2 கருத்துகள்:

  1. ஒரு பயணம். பல செய்திகள். கண்டுபிடிப்புகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நான் பிறந்த ஊர் செலம்பனூர் அது பற்றிய கட்டுரை காண்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது பதிவு செய்தமைக்கு என் நன்றிகள்

    பதிலளிநீக்கு