மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 28 பிப்ரவரி, 2019


தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள்-7

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில், தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தன. கல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும், தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தன. கல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும். ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:

குறிப்பு:  அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படா விட்டாலும்கல்வெட்டில்  உள்ளவையேபொருள்   எளிதில்   விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.


பிள்ளையார் செப்புத் திருமேனிகள்

முதலாம் இராசராசன்  தஞ்சைக் கோயிலில் எழுந்தருளுவித்த (செய்தளித்த) பிள்ளையார் செப்புத்திருமேனிகள் ஏழு. அவற்றுள் ஒன்று, ஒன்றரை விரல் உயரத்தில் நான்கு கைகளுடன் சுகாசனத்தில் எழுந்தருளியிருக்கும்  தோற்றத்தில் செய்யப்பட்ட திருமேனியாகும். கீழ்க்காணும் கல்வெட்டு  இதைப்பற்றி விளக்குகிறது. 






கல்வெட்டுப்படத்தின் பாடம்:

1     து கவித்த ப்ரபை ஒன்
2     று பாதாதிகேசாந்தம் 
3     ஒரு விரலரை உசர(த்)
4     து நாலு ஸ்ரீஹஸ்த
5     ம்  உடையராக ஸுகாஸ
6    நம் எழுந்தருளி இருந்தாராகக்
7    கனமாக எழுந்தருளுவித்
8    த பிள்ளையார் கண
9    பதியார் திருமேனி


குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

விளக்கம்:    
ப்ரபை- திருவாசி
பாதாதிகேசாந்தம் - அடி முதல் முடி வரை 
ஒரு விரலரை - ஒரு விரலும் அரை விரலும் சேர்ந்த; 
அதாவது ஒன்றரை  விரல் உயரம் கொண்ட கைகள். 
உயரம், உசரம் எனப் பேச்சு வழக்கில் அமைந்துள்ளது.

நாலு ஸ்ரீஹஸ்தம் -  நான்கு திருக்கைகள்
சுகாசனம் -  ஒரு காலைக் கிடைமட்டத்தில் இருத்தி, இன்னொரு காலைத்
தரை நோக்கித் தொங்கவிட்ட நிலையில் அமரும் இருக்கையைக் குறிக்கும்.
கனமாக எழுந்தருளுவித்த -  செப்புத்திருமேனி, உட்புறத்தில் பொள்ளல்
(பொக்கு) இன்றிக் கனமாகச் செய்யப்பட்டதைக் குறிக்கிறது. செப்புத்திருமேனிகள், உட்புறப் பொள்ளல் கொண்டதாகவும், பொள்ளலின்றிக்
கனமாகவும் என இரு வகைத் தொழில் நுணுக்கத்தோடு  செய்யப்பட்டமை
இதனால் அறியப்படுகிறது. 

தூண் கல்வெட்டு ஒன்று




கல்வெட்டுப் படத்தின் பாடம் :

1    -- திருக்
2   (கைய்க்)காறை ஒ
3   ன்று பொன் அறு 
4   கழஞ்சே மஞ்சா
5   டி ||-   இவனே கோ
6   ப்பரகேஸரி ந்ம
7   ரான ஸ்ரீ ராஜேந்த்ர
8   சோள தேவர்க்குயா
9   ண்டு மூன்றாவது வ
10  ரை குடுத்தன || மத்
11   தகத்தகடு ஒன்று
12   பொன் பதின் கழ

13   ஞ்சு ||

விளக்கம்:

இக்கல்வெட்டு, மேற்குத் திருச்சுற்று மாளிகையில் உள்ள தூணில் இருக்கின்றது. தூணின் ஒரு  பகுதியை அணுக்கப் பார்வையாகக் கொண்டு பெரியகோயிலின் விமானத்தைப் பின்னணியில்  மங்கலாகத் தெரியும் வண்ணம்  எடுத்த ஒளிப்படம் இது.   கல்வெட்டின் சில வரிகளே பார்வைக் கட்டத்தில் அடக்கம். விரிவான கல்வெட்டுச் செய்தி  வித்துவான் வே. மகாதேவன் அவர்கள் எழுதிய ”சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள்”  நூலில் காணப்படுகிறது.  இராசேந்திர சோழனின் மூன்றாவது ஆட்சியாண்டில்
(கி.பி. 1015)  பொறிக்கப்பட்டது. 
(கல்வெட்டு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி -2  எண்: 86).

இராசராசன் எடுப்பித்திருந்த பரிவார ஆலயத்துப் பிள்ளையாருக்கு, பெரியகோயிலின் ஸ்ரீகார்யநாயகமாக இருந்த பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் வழங்கிய அணிகலன்களை இக்கல்வெட்டு கூறுகிறது.   பொய்கை நாட்டுத் தலைவனின் இயற்பெயர் ஆதித்தன் சூரியன் என்பதாகும். தென்னவன் மூவேந்த வேளான் என்பது அமைச்சு, படை, நாட்டு நிருவாகம் ஆகிய துறைகளில் கல்விப்பயிற்சியில் தேர்ந்து பெற்ற பட்டப்பெயராகும். (ICS, IAS ACADEMY பயிற்சியோடு ஒப்பிடலாம்) இவன் இராசராசன் காலத்திலும் இராசேந்திரனின் மூன்றாவது ஆட்சியாண்டு வரையிலும் இப்பதவியில் இருந்துள்ளான்.  

முதல் ஐந்து வரிகளில்,  கொடையாளி ஏற்கெனவே கொடுத்த திருக்கைக்காறை என்னும் அணிகலன் பற்றிய செய்தி உள்ளது.  அணிகலனின் மதிப்பு  ஆறு கழஞ்சும் மஞ்சாடியுமான பொன்னாகும்.  அதே கொடையாளி கொடுத்த இன்னொரு அணிகலன் பற்றிய செய்தியைக் கல்வெட்டு தொடருகிறது. அதே கொடையாளி என்னும் கருத்து  ஐந்தாவது வரியில் உள்ள “இவனே”  என்னும் சொல் வழி புலப்படுகிறது.  கொடைப்பொருளான இந்த அணிகலனுக்குப் பெயர் “மத்தகத் தகடு” என்பதாகும்.  இவ்வணிகலன்,  செப்புத் திருமேனியில் எவ்விடத்தில் அணியத்தகுந்தது என்பது தெரியவில்லை.  கல்வெட்டு அகராதி, இது ஒரு அணிகலனைக் குறிக்கும் என்பதாக மட்டுமே குறிப்பிடுகிறது. 

இப்பொய்கைக் கிழவன்,  கொம்பின் கொள்கை, கும்பத்தகடு, திருப்பொற்பூ,  திருநயனம், மாம்பழமாகச் செய்த தகடு, திருக்கைக்காறைகள்  ஆகியவற்றை இராசராசனின் காலத்திலும், மத்தகத் தகட்டினை இராசேந்திரனின் காலத்திலும்  தந்துள்ளான்.  மேற்குறித்த அணிகளில், திருநயனம் என்பது இறைவற்குச் சாத்தும் கண்மலர் என்றும், கொம்பின் கொள்கை என்பது தந்தத்தின் பூண் என்றும் கல்வெட்டு அகராதி குறிப்பிடும். 
இறைவரின் திருமேனியில் கண்மலர்  சாத்துவது இன்றைக்கும் தொடரும் மரபு.  பிள்ளையாருக்கு அளிக்கப்பட்ட அணிகலன் என்பதால், தந்தத்தின் பூண் என்பதைப் பிள்ளையாரின் தந்தத்தின்மீது பூட்டிய தந்தப்பூண்  எனக்கொள்ளலாம். 




துணை நின்ற நூல் :  வித்துவான் வே. மகாதேவனின் “சிவபாத சேகரனின் 
தஞ்சைக் கல்வெட்டுகள்”.





------------------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக