உத்தமம்-கே.ஜி. பொறியியல் கல்லூரி கோவை இணைந்து நடத்திய
கல்வெட்டு-ஆவணப்படுத்துதல் பயிலரங்கு
UTHTHAMAM-KCT WORKSHOP ON EPIGRAPHY
உத்தமம்
தமிழ் மொழியையும் தமிழ் எழுத்தையும்
கணினிக்குள்ளும் கணினி வழி இணையத்துள்ளும் கொண்டு சேர்க்கத் தனி ஒருவராகவும், குழுவாகவும்
பல்வேறு அமைப்புகள் பணியாற்றியுள்ளனர்; பணியாற்றிக்கொண்டும் வருகின்றனர். இவ்விருவகைப்
பயன்பாடுகளையும் நாம் பயன்படுத்திக்கொண்டு வருகின்றோம். கணினி யுகத்துக்கேற்றவாறு தமிழ் மொழியை தகவமைக்கும் வளர்த்தெடுக்கும் பணியாகும்
இது. தமிழின் தொல்லெழுத்தான ‘தமிழி” அல்லது
“தமிழ் பிராமி” , தமிழ் வட்டெழுத்து ஆகிய எழுத்துருக்கள் இணைய வழிப் பயன்பாட்டில் உள்ளன.
”அன்றாள் கோ”, “அன்றாடு நற்காசு” என்னும் தொடர்களைக்
கல்வெட்டுகளில் காணலாம். கல்வெட்டு எழுதப்பெற்ற காலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த அரசனையும்
(கோ), அக்காலத்தே புழக்கத்திலிருந்த நாணயத்தையும் (காசு) குறிக்கும் தொடர்கள் இவை.
அதுபோல, அன்றாடு தமிழ் எழுத்துகளில் நாம் எழுதுவனவற்றைத் தமிழி எழுத்து வடிவத்திலும்,
வட்டெழுத்து வடிவத்திலும் நாம் காணுமாறு மாற்றித்தருகின்ற கணினி நுட்பங்கள் பல நடைமுறையில்
வந்துவிட்டன.
தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைத்
தகவல் தொழில் நுட்பம் வாயிலாக உயர்த்தும் ஒரு நோக்கத்தில் இயங்கிவருகின்ற ”உத்தமம்”
(உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – INTERNATIONAL FORUM FOR INFORMATION
TECHNOLOGY IN TAMIL), தமிழ் மொழி, எழுத்து
சார்ந்த பல நுட்பங்களில் ஒன்றாகக் கல்வெட்டுகளைக் கணினிக்குள் கொணர்ந்து ஆவணப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
அப்பாசாமி முருகையன்
உத்தமம் அமைப்பின் தலைவரான அப்பாசாமி
முருகையன் அவர்கள், 29-09-2018 அன்று, கோவை குமரகுரு பொறியியற் கல்லூரியில் நடத்திய
ஒரு நாள் பயிலரங்கில் கல்வெட்டுகளின் தொகுப்பு, ஆவணப்படுத்துதல், பகுத்தாய்தல் ஆகியவற்றைப்
பற்றி உரை நிகழ்த்தினார். கல்வெட்டுகளைப் பற்றிய அவரது இருபத்தைந்து ஆண்டுக்கால உழைப்பு
நம்மை வியப்பில் ஆழ்த்தியது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள்.
இரண்டையும் போற்றிக் கொண்டாடினால்தான் அவற்றின் மதிப்புப் புலப்படும். கல்வெட்டுகளை
அவர் போற்றிக் கொண்டாடியதை என்னால் நன்கு உணரமுடிந்ததது. காரணம், கல்வெட்டுகளைப் படித்துத்
தெரிந்துகொண்ட சில ஆண்டுகளில் எனக்குக் கிடைக்கபெற்ற பட்டறிவே. அது பற்றிய ஒரு பகிர்வே இந்தக் கட்டுரை.
பயிலரங்கு
பயிலரங்கு நடந்த இடம் முன்னர்க்
குறித்தவாறு, கோவை குமரகுரு பொறியியற் கல்லூரி. கல்லூரியின் வளாகம் மிகப்பெரியதொரு
வளாகம். சாலையில் அதன் நுழைவுத் தோரணத்திலிருந்து
வளாகத்துள் செல்லும் பாதை நீண்ட தொலைவு செல்கிறது. பாதையின் ஒரு புறம் மரங்கள் அடர்ந்த
சோலை. சோலையைக் கடந்த பின்னரே கல்லூரியின் முதன்மைக் கட்டிடம் தொடங்குகிறது. ஓர் அரண்மனையை
நினைவூட்டும் பழங்கால மாட மாளிகை அமைப்பில் கட்டபெற்ற மாபெரும் கட்டிடம். அதன் மூன்றாவது
தளத்தில், விரிவுரை அரங்கு ஒன்றில் நிகழ்வு. ஐம்பது பேர் கலந்துகொண்ட பயிலரங்கு, வருகைப்பதிவு
நிறைவுற்றதும் பத்து மணிக்கு முன்னரே தொடங்கியது. அறிமுகங்கள் நடந்தேறியதும் மேல் நிகழ்வுகள்
அ.முருகையன் அவர்கள் பொறுப்பில்.
தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய ஓர்
அறிமுகம், அடுத்து நடுகற்கள், அதனை அடுத்துத் தமிழ்க்கல்வெட்டுகளின் மொழியும் அதன்
புரிதலும் என மூன்று அடுக்குகளாக அ.முருகையன் அவர்களின் காலை நேர விளக்கவுரை அமைந்தது. தம் இருபத்தைந்து ஆண்டுக்கால உழைப்பின் அறிவை ஓர்
ஐந்து மணிக் கூற்றுக்குள் எவ்வளவு வெளிப்படுத்தமுடியும்? கேள்வியும் இயல்பானது; அவர்
முயற்சியும் இயல்பானது. அயர்வு சிறிதும் உணரப்படவில்லை.
கல்வெட்டுகளின் மொழி
கல்வெட்டுகளில் காணப்படுகின்ற மொழி
தூய்மையானதல்ல என்று சற்றே தாழ்த்திப்பார்க்கும் பார்வை வெகு காலம் இருந்துள்ளது. ஆனால்
மெய்யாக அவ்வாறில்லை. நல்ல இலக்கியத் தமிழுக்கு எவ்வாறு ஓர் இலக்கணம் உள்ளதோ அவ்வாறே
கல்வெட்டுத் தமிழுக்கும் ஓர் இலக்கணம் உண்டு. உயர்வு தாழ்வு அங்கே இல்லை. ஊர்திகளின்
உலகம் என்றாகிவிட்ட இன்றைய சாலைகளில் ஊர்தியில் பயணம் செய்கையில் நாம்(நமது ஊர்தி),
சாலை இருவருக்குமாக ஒரு தொடர்பு மொழியும் இலக்கணமும் உள்ளன. சாலைக் குறியீடுகளும் விதிகளும்
அந்த இலக்கணத்தில் அடங்கும்; அதைப் புரிந்து கொண்டால்தான் பாதுகாப்பான பொருள் பொதிந்த
பயணம். அது போலவே, கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ள அவற்றின் இலக்கணம் அல்லது விதிமுறை
நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். நாம் அறிந்துள்ள
தமிழ் மொழிக்கும் கல்வெட்டுகளில் பயிலும் தமிழ் மொழிக்கும் வேறுபாடு உண்டு.
தொல்லியல் துறை
தொல்லியல் துறை ஆங்கிலேயரால் முதன்முதலில்
ஆசியக் கழகம் (ASIATIC SOCIETY) என்னும் பெயரில் 1784-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுப் பின்னர்
சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (ALEXANDER CUNNINGHAM) என்பவரால் தொல்லியல் ஆய்வுக் கழகமாக
(ARCHAEOLOGICAL SURVEY OF INDIA), 1861-இல் இத்துறை வளர்ச்சியுற்றது.
கல்வெட்டுகள்
தமிழ் நாட்டு (அரசர்) வரலாறு, மக்கள்
வாழ்க்கை, மக்கள் பண்பாடு, மொழி ஆகிய பல்வேறு கூறுகளை அறிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத
சான்றாதாரங்களுள் கல்வெட்டுகள் மிக முதன்மையானவை.
கல்வெட்டுகளைப் படிக்கத் தற்காலம் நிறையக் கருவிகள் உள்ளன. முற்காலம் போல் அல்ல.
கல்வெட்டுகள் தவிர செப்பேடுகள் அடுத்து முதன்மையானவை. தமிழ் மொழியல்லாது அரபு மொழிக்
கல்வெட்டுகளும் இங்கே உள்ளன. பெரும்பாலான செப்பேடுகள் இரு மொழி கலந்து பொறிக்கப்பட்டவை.
அவற்றின் தொடக்கத்தில் சமற்கிருத மொழியும் அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியும் காணப்படுகின்றன.
சமற்கிருத மொழியை எழுதக் கிரந்த எழுத்து பயன்பட்டது. தமிழ் மொழியை எழுத வட்டெழுத்தும்
தமிழ் எழுத்தும் பயன்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பெற்ற கல்வெட்டுகள் மிகக்
குறைவான சொற்களைக் கொண்டவை. இவற்றில், பிராகிருதம், சமற்கிருதம், தமிழ் ஆகிய மூன்று
மொழிச் சொற்களும் கலந்து காணப்படும். தமிழ் நாட்டின் வரலாற்றையும், தமிழ் மொழியின்
வரலாற்றையும் அறிந்துகொள்ள இவை இன்றியமையாதவை.
இந்திய நாடு முழுமையும் கி.மு.
3-ஆம் நூற்றாண்டு முதல், இரண்டு நூற்றாண்டுக் காலம் பிராகிருத - இந்தோ ஆரிய மொழிகள்
(PRAKRIT MIDDLE INDO ARYAN LANGUAGES - MIA) செல்வாக்குப் பெற்றிருந்தன. அசோகனின்
பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு அளவிலானவை. ஆனால், தமிழ் நாட்டில்
தேனி மாவட்டம் புலிமான் கோம்பையில் கிடைத்த தமிழ் பிராமிக்கல்வெட்டு, அசோகனின் காலத்துக்கும்
முற்பட்டது என நிறுவப்பட்டுள்ளது. எனவே, சங்ககாலம் எது என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு
சான்று.
கல்வெட்டுகளில் காணப்பெறும் மொழி
வடிவம் வேறு. கி.பி. 4 – கி.பி. 5 நூற்றாண்டு
அளவில்தான் கல்வெட்டுகளில் சமற்கிருதம் நுழைகின்றது. அதுவரை, தமிழ் மொழி மட்டுமே. காரணம்,
இந்திய நாடு பண்பாட்டளவில் வட நாடு, தென்னாடு என்னும் அமைப்பில் மாறுபட்டிருந்தது.
எனவே, கல்வெட்டுகள், இந்திய வரலாற்றுக்கும், தமிழக வரலாற்றுக்கும் மூலச் சான்றுகளாக
உள்ளன. கல்வெட்டுகளை யார் எழுதினர்? யாருக்காக எழுதினர்? என்பது தெரிந்துகொள்ளவேண்டும்.
மக்கள் பார்க்கவேண்டும் என்னும் நோக்கத்தில், கோயில்களில் நம் பார்வை அளவில் கல்வெட்டுகள்
எழுதப்பெற்றன. தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில், நம் பார்வை அளவில் நாயன்மாரின் வரலாற்று
நிகழ்வுகளை எடுத்துக் கூறும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
அவை நம்மைப் பார்க்கவும் படிக்கவும் தூண்டுபவை.
கல்வெட்டுகளைப் படிக்கையில் சமூகச்
சூழல் சார்ந்த உண்மைகளின் துணையும், மொழி சார்ந்த விதிமுறைகளின் துணையும் தேவைப்படும்.
கல்வெட்டுகளைப் படிக்கையில் நமக்கு இயல்பாகவே ஒரு பொறையுடைமைப் (TOLERANCE) பண்பு ஏற்படுதலைக்
காணலாம். கல்வெட்டுகளின் தோற்றத்தைச் சற்றே ஆய்ந்தால், கல்வெட்டுகளில் தமிழ்க்கல்வெட்டுகளே
மிகத் தொன்மையானவை என்னும் உண்மை பெறப்படுகிறது.
கல்வெட்டுகளின் தோற்றம் – காலம்
ஒரு பார்வை:
மொழி தோற்றம்(காலம்)
வங்காளம் கி.பி. 15-ஆம்
நூற்றாண்டு
குஜராத்தி கி.பி. 14-ஆம்
நூற்றாண்டு
மராத்தி கி.பி. 11-12-ஆம்
நூற்றாண்டு
ஒடியா கி.பி. 11-12-ஆம்
நூற்றாண்டு
இந்தி ?
கன்னடம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு
தெலுங்கு கி.பி. 6-ஆம் நூற்றாண்டு
மலையாளம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு
தமிழ் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டுகள், ஆட்சியிலிருக்கும்
அரசருக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்பைக் குறிப்பன. நாடு முழுதும் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் தமிழ்க் கல்வெட்டுகளே எண்ணிக்கையில் மிகுதியானவை.
தமிழ்க் கல்வெட்டுகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு சோழர் காலக் கல்வெட்டுகளாகும்.
கல்வெட்டுகள் குறித்த ஆய்வுக்குப்
பயன்பட்ட சான்று மூலங்களும், நிறுவனங்களும் கீழுள்ளவாறு:
1 தொல்லியல் ஆய்வுத் துறை
(ARCHAEOLOGICAL SOCIETY OF INDIA) 1890-ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட கல்வெட்டுத் தொகுதிகள் 37. (SOUTH INDIAN
INSCRIPTIONS – VOLUMES).
2 தொல்லியல் கழகம், தஞ்சை (ARCHAEOLOGICAL
SOCIETY, THANJAVUR).
3 தமிழ்நாடு அரசு – தொல்லியல் துறை 1961-ஆம் ஆண்டிலிருந்து
வெளியிட்ட நூல்கள்.
4 கல்வெட்டியல் பேரா. எ.சுப்பராயலு அவர்களின் கல்வெட்டு
அகராதி.
5 கல்வெட்டு அகராதி – மதுரைப் பல்கலை வெளியீடு – ஆசிரியர்
கோவிந்தராஜ்.
6 தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் 110. கி.மு. 2 – கி.பி. 4 நூ.ஆ.
7 நடுகல் கல்வெட்டுகள் 317. கி.மு. 3 – கி.பி. 5-15 நூ.ஆ.
8 கோயில் கல்வெட்டுகள், செப்பேடுகள் 28,000-க்கும் மேற்பட்டவை.
கி.பி. 5 – கி.பி. 19 நூ.ஆ.
கோயில் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில்,
பல்லவர் காலம்
6 - 9 நூ.ஆ.
முற்காலப் பாண்டியர் காலம்
6 - 9 நூ.ஆ.
பிற்காலப் பாண்டியர் காலம் 12 - 14 நூ.ஆ.
சோழர் காலம் 9 - 13 நூ.ஆ.
இவற்றில் சோழர் கல்வெட்டுகள் எண்ணிக்கையில்
மிகுதி என்பதோடு மெய்க்கீர்த்தி என்னும் கல்வெட்டுப்பகுதியின் தோற்றமும் வளர்ச்சியும்
கொண்டவை.
கல்வெட்டுகளின் அமைப்பு
கல்வெட்டுகள் மிகுந்த கட்டமைப்பைக்
(STRUCTURE) கொண்டவை. அவையாவன:
1
இறைவழிபாடு அல்லது மங்கலத் தொடக்கம்
2
மெய்க்கீர்த்தி
3
விரிவான கொடைச் செய்தி – கொடையாளி, பயனாளி போன்றவை.
4
சான்றாளர்கள், கொடையறத்தின் காப்பு
நடுகற்கள்
கருநாடகத்தில் “வீரகல்லு” என்று வழங்கும் நினைவுக்கற்கள் (HERO STONES), தமிழகத்தில்
நடுகற்கள் என வழங்கும். நாட்டுப்புறப் பகுதிகளில் பொது நிலை மக்களில் ஒருவராய் இருக்கும்
வீரர்கள் ஒரு பூசலின்போது இறந்துபடும் நிலையில் அவர் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கற்கள் நடுகற்களாகும். கல் நாட்டப்படுவதால் நடுகல் (PLANTED STONES). வடபுலத்தார் இதை “சாயா ஸ்தம்பா” (SHADOW PILLARS) என்பர். பூசல் என்பது ஒரு சிறு
சண்டை என்னும் நிலையைக் குறிக்கும். போர் என்னும் அளவில் பெரிய சூழல் இதில் இல்லை.
ஆங்கிலத்தில் உள்ள “SKIRMISH“ என்னும் சொல்லை இதற்கு இணையாகக் குறிப்பிடலாம். பெரும்பாலும்
இந் நடுகற்கள் தனிப்பட்டவர் ஒருவரின் புலத்தில் இருக்கும். பூசல், பெரும்பாலும் ஆநிரை
கவரும் நிகழ்வாகவோ அல்லது ஆநிரை மீட்டல் நிகழ்வாகவோ அமையும். ஆநிரை கவர்தல், ஆநிரை
மீட்டல் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் தொல்காப்பிய இலக்கண வகையில் குறிக்கப்பெறுகின்றன.
சங்க இலக்கியங்களில் காணப்பெறும் “ஆகோள்” என்னும்
சொல், இவ்விருவகைப் பூசல்களையும் குறிக்கும். சங்க இலக்கியச் சொல்லான “ஆகோள்” , புலிமான்
கோம்பை நடுகல்லில் கையாளப்பட்டமை கண்டறியப்பட்டதாலும், இச்சொல் தமிழ் பிராமி எழுத்துகளால்
பொறிக்கப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி எழுத்து அசோகனின் காலத்துக்கு முற்பட்டது என்று
நிறுவப்பட்டுள்ளது. இதன்வழி, சங்ககாலத்தின் தொன்மையும் அறியப்பட்டுள்ளது. பெரும்பாலான
நடுகற்கள் ஊர் மக்கள் எடுப்பித்தவை; அமைவிடம், பெரும்பாலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள்;
கருநாடகத்தையும், ஆந்திரத்தையும் ஒட்டியுள்ள பகுதிகள். சோழ நாடு மற்றும் பாண்டிய நாட்டுப்
பகுதிகளில் நடுகற்கள் மிகக் குறைவு. நடுகற்கள், கருநாடகத்துத் தாக்கம் கொண்டவை எனலாம்.
பெரும்பாலும் ஊரின் புறத்தே காணப்படும்.
நடுகல் சிற்பம் - எடுத்துக்காட்டு
குறிப்பு : கருநாடகத்துப்பாணியில் நிறுவப்பட்ட நடுகற்கள் மூன்று அடுக்குகள் கொண்ட புடைப்புச் சிற்பங்களைக்கொண்டிருக்கும். கீழ் அடுக்கில் வீரன் இறந்துபடக் காரணமான சூழல் காட்டப்பெற்றிருக்கும் . அதாவது போர் அல்லது பூசலின் சூழல். அதர்கு அடுத்த அடுக்கில், இறந்த வீரனை விண்ணுலகுக்குத் தேவ மாதர் அழைத்து செல்வது போன்ற குறிப்புடன் சிற்பம் இருக்கும். இறுதி அடுக்கில், விண்ணுலகை அடைந்த வீரன் சிவலிங்கத்தை வணங்கும் காட்சி வடிக்கப்பட்டிருக்கும். (வைணவத்தில் வைணவம் சார்ந்த காட்சி இருக்கும்).
நடுகற்களில் வட்டெழுத்து
நடுகற்களில் வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகல் வட்டெழுத்துப் பொறிப்புகளில் தமிழ் மொழி மட்டுமே
காணப்படுகிறது. சமற்கிருதம் முற்றாக இல்லை என்பது சிறப்பு. 9-ஆம் நூற்றாண்டு அளவில்
சமற்கிருதத்தின் உள்ளீடு இந்தோ-ஆரிய மொழிகளிலும் பரவியது. நடுகற் கல்வெட்டுகள் ஏறத்தாழ 450 கல்வெட்டுகள். இவற்றின்
காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு வரையிலானவை. இவற்றில்
தொண்ணூறு விழுக்காடு திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ளன. எண்பது விழுக்காடு
பல்லவர் காலத்தவை. நடுகற்கள், முன்னர்க் குறிப்பிட்டவாறு,
ஆநிரை தொடர்பான பூசல் பற்றியன. ஆநிரை, தொறு என்னும் சொல்லாலும் குறிக்கப்பெறும். எனவே,
நடுகல் கல்வெட்டுகளில், தொறுப்பூசல், தொறு கோள், தொறு மீள் என்னும் குறிப்புத் தொடர்களும்,
தொறுப்பூசல் அல்லாத வேறு பூசல்கள் பற்றிய கல்வெட்டுகளில் “நாடு பாவுதல்” என்னும் குறிப்புத் தொடரும் காணப்படும்.
கல்வெட்டுகளில் சமற்கிருதக் கலப்பு
முன்னர்க் குறித்தவாறு 9-ஆம் நூற்றாண்டு
வரை, கல்வெட்டுகளில் சமற்கிருத மொழியின் தடயம் காணப்படவில்லை. சமற்கிருத மொழியைக் கடன்
வாங்கும் சூழலும் நிகழவில்லை. 9-ஆம் நூற்றாண்டுக்கு
மேல் சமற்கிருதம் இந்தியாவின் வடபுலம் தென்புலம் ஆகிய இரு பகுதிகளிலும் கல்வெட்டுகளில்
கலந்து வருவதைக் காண்கிறோம். அரசர்கள் தம் விருதுப்பெயராகச் சமற்கிருதப் பெயர்களை அணிந்துகொண்டனர்.
‘பாண்டிய குலாசனி’, ‘பாண்டிய குலாந்தக’, “பாண்டிய குலபதி”, “பராந்தக” என்பன போன்ற பெயர்களைக் காண்க. தமிழ்ச் சொற்களைச்
சமற்கிருதச் சொற்களாக மாற்றும் சூழலும் உண்டு. நிலமடந்தை, பூமாதேவியாகிறாள். பெண்ணோர்
பாகன், அர்த்தநாரி ஆகிறான். பல்லவர் கல்வெட்டுகளில் சமற்கிருதச் சொற்கள் தமிழ் ஒலிப்புடன்
தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டன. “மஹேந்திர” , ’மயீந்திர” எனவும், “ஹஸ்தி கோஸ” என்பது “அத்திகோயத்தார்” எனவும் எழுதப்பட்டன. சமற்கிருதச் சொற்களின் ஒலிப்பைச்
சரியாக எழுதும் முயற்சியில் கிரந்த எழுத்து முறை பயன்பாட்டுக்கு வந்தது. அந்த வகையில்,
“மஹாஸபை”, “ஸிலாலேகை” போன்ற சொற்கள் எழுந்தன.
சில போது, வடசொல்லின் ஈற்றில் தமிழ் ஒட்டுகளும் சேர்த்து எழுதப்பெற்றன. எடுத்துக்காட்டாக
“ஸபையோம்” என்னும் சொல். இதை, ஸபை + ய் + ஓம் எனப்பிரிக்கலாம். இதில் ஸபை என்பது வடசொல். மற்றொரு சொல் அல்லது தொடர்
“பிராப்தியினாலே” என்பது. இதை, ப்ராப்தி +
இன் + ஆல் + ஏ எனப்பிரிக்கலாம். இதில், “ப்ராப்தி” என்பது வடசொல். சில தமிழ்ச் சொற்கள், சமற்கிருதச்
சொல்லுக்குத் தமிழ் வடிவம் கொடுத்துள்ளனர் எனக்கருதுமாறு அமைகின்றன. எடுத்துக்காட்டாக,
“அதுல்” (ATUL) என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு “ஒப்பற்ற” என்று பொருள் அமையும். ஒப்பற்ற அரசன் எனக் குறிப்பதற்கு
இந்த “அதுல்” சொல்லைக் கையாண்டு, தமிழ் வடிவம் கொடுத்து “கோநேரின்மைகொண்டான்” என எழுதினர்
எனலாம். [கட்டுரை ஆசிரியர் குறிப்பு : ”துல்” என்பது “துலாம்” என்பதன் அடிப்படையில் ஒரு பால் கோடாமல் நிறை காட்டுதலைக்
குறிக்கும். துலாக்கோலின் தட்டுகள், இணைத்தட்டுகள்; எனவே, இணை அற்ற என்னும் நிலையைக்
குறிக்க ”அதுல்” என்று குறிப்பர். நேர்மறைச் சொற்களை எதிர்மறைச் சொற்களாக்கச் சமற்கிருதச்
சொற்களில் “அ” எனும் ஒரு முன்னொட்டைச் சேர்ப்பர். எடுத்துக்காட்டாக, “நியாயம்”
-> ”அநியாயம்” ; “தர்மம்” -> “அதர்மம்” என்பன போல், ”துல்” -> “அதுல்” (இணையற்ற, ஒப்பற்ற).]
மணிப்பிரவாளம்
தமிழில் சமற்கிருதக் கலப்பு மிகுந்தபோது
அது, மணிப்பிரவாளம் என அழைக்கப்பட்டது. மணியும் பவளமும் கலந்தது போன்று என்று அதைப்
பெருமைப்படுத்தியதுண்டு. மணிப்பிரவாளத்தைப் பற்றி வீரசோழியம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு மொழி
நாம் அறிந்துள்ள தமிழ் மொழிக்கும்
கல்வெட்டுகளில் பயிலும் தமிழ் மொழிக்கும் வேறுபாடு உண்டு. கல்வெட்டுகளின் இலக்கணமும்
வேறுபடும். ஒரு சில எடுத்துக்காட்டுகள் வழி இவை விளக்கப்படுகின்றன. மொழி இலக்கணத்தில்,
மொழியின் புறவடிவமைப்பைச் சார்ந்து பல வகைகளில் பொருள் காணல் நிகழும். இதை ஆங்கிலத்தில்
(MORPHOLOGICAL CASE MARKING) எனக் குறிக்கலாம். தமிழில் உள்ள எட்டு வேற்றுமைகளில்
ஒன்று இடவேற்றுமை (LOCATIVE CASE). எங்கு, எப்போது என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பது
போல் அமையும் தொடர்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ”நான் கோவையில் குடியிருக்கிறேன்”
என்னும் தொடரில், எங்கு என்னும் கேள்விக்கு “கோவையில்” என்பது விடையாக அமையும். இங்கு,
“இல்” என்னும் வேற்றுமை இடவேற்றுமையாகும். இந்த இடவேற்றுமை, கல்வெட்டுகளில் இல்லாமல்
போவதுண்டு (ABSENCE OF LOCATIVE). எடுத்துக்காட்டாக,
”தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி”
என்னும் கல்வெட்டுத் தொடரில், ”இல்”
என்னும் இடவேற்றுமை உருபு இல்லை. தஞ்சாவூர் என்னும் ஒருவர் கட்டுவித்த கோயில் என்னும்
பொருள் இக்கல்வெட்டுத் தொடரில் அமைகிறதேயன்றித் தஞ்சாவூரில் கட்டுவித்த கோயில் என்னும்
பொருள் நேரடியாக அமையவில்லை. அடுத்து, தமிழில் உள்ள இரண்டாம் வேற்றுமை பற்றியது. யார்,
எது என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பது போல் அமையும் தொடர்களை இதற்கு எடுத்துக்காட்டாகச்
சொல்லலாம். மற்றொரு கல்வெட்டில், கோயிலில்
நந்தா விளக்கெரிக்கத் தொண்ணூற்றாறு ஆடுகளைக் கொடையாக அளித்தது பற்றிக் குறிப்பிடுகையில்,
”…… ஆடு தொண்ணூற்றாறு”
என்னும் தொடர் உள்ளது. இதில், இரண்டாம்
வேற்றுமை காட்டப்படாதது மட்டுமன்றி, எண்ணிக்கையைக் குறிக்கும் சொல் இடவல மாற்றம் பேறுள்லதைக்
காணலாம். இதை ஆங்கிலத்தில், (ABSENCE OF ACCUSATIVE AND QUANTIFIER FLOATING) என்பார்கள். “தொண்ணூற்றாறு ஆடு” என்றமையவேண்டிய வடிவம், ”ஆடு தொண்ணூற்றாறு” என மாற்றமடைந்துள்ளது.
அடுத்து, மொழி அமைப்பில், ஒரு சொற்றொடரில்
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை(வினை முற்று) என்னும் மரபு உண்டு. ஆங்கிலத்தில் இதை
SUBJECT-OBJECT-VERB , SOV என்பர். இந்த அமைப்பு
முறை கல்வெட்டுகளில் இல்லை. இது, பின்வரும் கல்வெட்டுத் தொடர்களின் வாயிலாக அறியப்படும்;
எ-டு 1.
“யாண்டு நந்திப்போத்தரையர்க்கு பத்தொன்பதாவது”
எ-டு 2.
”நம் பிராட்டியார் கைவழி கொடுத்த
காசு இருநூறு”
எ-டு 3.
”திருச்சுற்று
மாளிகை எடுப்பித்தான் சேநாபதி இராமன் கிருஷ்ணன்”
அடுத்து, மொழி
ஒலிப்புத் தொடர்பானது. இரண்டு சொற்களின் சந்திப்பில் ஏற்படும் சந்தி, கல்வெட்டுகளில்
இல்லாமல் போவது (ABSENCE OF SANDHI). கீழ்
வரும் எடுத்துக்காட்டுகளைக் காண்க.
“பொற்றொக்கை
ஆர்”
”பெரும்புலி
ஊர்”
”கோ இல்”
இவற்றைப் பழகு
தமிழில், பொற்றொக்கையார், பெரும்புலியூர், கோயில் என நாம் வழங்குவோம். கல்வெட்டுகளில்
அவ்வாறில்லை.
கல்வெட்டுகளின்
கணினியாக்கமும் தரவு மேலாண்மையும்
(CORPUS
LINGUISTICS AND DATABASE COMPILATION)
கல்வெட்டுகளைக்
கணினிக்குள் கொணர்ந்து அதன் செய்திகளைத் – தரவுகளை - தொகுத்தல், மேலாண்மை செய்தல், அதற்கான தேடு பொறி அமைத்தல் ஆகிய தொழில் நுட்பம் பற்றிய
கருத்துப் பகிர்வு பிற்பகல் நிகழ்வாய் அமைந்தது. ஒரு மொழி (MONOLINGUAL), ஒரு காலம்
(SYNCHRONIC), வரலாற்றுப் பார்வை (DIACHRONIC) ஆகிய பல நிலைகளைப்பற்றி முருகையன் அவர்கள்
எடுத்துரைத்தார்கள். கணினி மற்றும் கணினியாக்கம் தொடர்பான நுட்பமான செய்திகள். கணினித்
தொழில் நுட்ப ஆய்வாளர்களைக்கொண்டு பல நிரல்களை (PROGRAMS) உருவாக்கிக் கல்வெட்டுகளின்
தரவுத்தொகுப்பினை அமைத்துக் கல்வெட்டுகளின் பாடங்கள், கல்வெட்டுகளை நாம் புரிந்துகொள்ளும்
நுட்பத்தைக் கணினிக்குள் புகுத்துதல் ஆகிய பல்வேறு கூறுகளை முருகையன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.
முன்னர் அவர்
குறிப்பிட்டவாறு, கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ள அவற்றுக்கான இலக்கணத்தையும் விதிகளையும்
அறிந்திருத்தல், கணினிக்குள் பதிவு செய்யப்பட்ட தரவுத்தொகுப்பிலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல்
(INFORMATION EXTRACTION) ஆகிய செயல்பாடுகளைக் கையாள என்னென்ன செய்யவேண்டும் என்பது
பற்றிய ஓர் அலசல். இலக்கியம் மட்டுமே அறிந்த தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், கல்வெட்டியல்
அறிந்த என் போன்றோருக்கும் இந்தக் கணினி நுட்பங்கள் புதியன. ஆனால், கணினிப் பொறியாளர்களுக்கு இது வழிகாட்டும்
கல்விமுறை. மேற்குறித்த வெவ்வேறு மூன்று தளங்களிலும் பயிற்சியுடைய மூவகையினரும் ஒருங்கிணைந்து
பணியாற்றும்போது கல்வெட்டுகளின் கணினியாக்கம் வரலாற்றையும் ஒருங்கிணைக்கவல்லது.
கல்வெட்டுகளைக்
கணினிக்கு எவ்வாறு புரியவைத்தல் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் விளக்கப்பட்டன.
செங்கம் நடுகற்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கல்வெட்டுப் பாடம் (TEXT), பல
பகுதிகளாகப் (SEGMENTATION) பிரிக்கப்படுகின்றன. முழுப்பொருள் தருகின்ற சொற்களாகவோ,
இடத்தைப் பொறுத்துப் பொருள் கொள்ளும் சொற்களாகவோ பிரிக்கப்படுகின்றன. பின்னர் அவை,
ஆள் பெயர், இடப்பெயர், எண்ணுப்பெயர் என்பது போன்ற அடையாளப்படுத்தும் பெயர்களாகக் குறிக்கப்படுகின்றன.
கல்வெட்டு
-1
கோவிசைய மயீந்திர
பருமற்கு முப்பத்தெட்டாவது
1 2 3 4
1, 2, 3
- ஆள் பெயர் (pn.dat
PERSON NAME)
4 -
38 – எண்ணுப்பெயர் ( 38.ord )
கல்வெட்டு
-2
வாணகோ அரைசரு
மருமக்கள் கந்தவிண்ணனார் கூடல்
1 2 3 4 5
தொறுக்கொண்ட ஞான்று
6 7
1, 2 -- ஆள் பெயர்
- (pn)
3 - உறவு -
(kindred)
4 - ஆள்
பெயர் -
(pn)
5 - இடப்பெயர் - (pln
PLACE NAME)
6 - ஆநிரை
கொள்ளல் – (cattle-lift)
7 - போது -
(while)
கல்வெட்டுகள் சில
முருகையன் அவர்கள் சிறப்பான சில
கல்வெட்டுகளின் படங்களைக் காண்பித்துச் செய்திகளைச் சொன்னார். அவற்றுள் சில இங்கே காட்டப்பெறுகின்றன:
கல்வெட்டு-1
1
பகாப்பிடுகு லளிதாங்குரன்
கல்வெட்டு-2 (வல்லம் குடைவரைக் கோயில்)
1
சத்துரும் மல்லன் குணபரன்
2
மயேந்திரப் போத்தரைசரு அடியான்
3
வயந்தப்பிரி அரைசரு மகன் கந்த சேன
4
ன் செயிவித்த தேவகுலம்
குறிப்பு : முதல் இரு கல்வெட்டுகளும் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனுக்குரியது. மஹேந்திர என்பது மயேந்திர என்று மாற்றம் பெற்றது. அது போலவே, வஸந்த என்பது வயந்த என மாற்றம் பெற்றது. இரண்டாம் கல்வெட்டில் தேவகுலம் என்பது கோயிலைக்குறிக்கும்.
கல்வெட்டு-3 (பள்ளன் கோயில் கல்வெட்டு)
1
டுத்து விடுதகவென்று நாட்டார்க்குத் திருமுகம் விட
நாட்டா
2
ருந் திருமுகங் கண்டு தொழுது தலைக்கு வைத்துப் படா
3
கை நடது கல்லுங் கள்ளியு நாட்டி நாட்டார் விடுந்த
4
அறையோலைப் படிக்கெல்லை கீழ்பா
5
லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி
6
ன் மேற்குமோமைக்கொல்லை எல்லை இன்னு
7
ம் தென்பாலெல்லை வேள் வடுகன் கேணியி
8
ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபாடி
குறிப்பு : பள்ளன்கோயில் செப்பேடு, பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும் சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறது. மேலே நாம் பார்க்கும் செப்பேட்டுப் பாடத்தில் வரும் சில தொடர்களுக்கு விளக்கம்—வருமாறு:
நாட்டார்-நாட்டுச்சபையார்
திருமுகம்-அரசனின்ஆணை எழுதப்பெற்ற ஓலை
நாட்டார்-நாட்டுச்சபையார்
திருமுகம்-அரசனின்ஆணை எழுதப்பெற்ற ஓலை
தொழுது தலைக்கு வைத்து - நாட்டார் அரசனின் திருமுகம் வரக்கண்டு தொழுது தலைமேல் வைத்துக்கொண்டனர்.
படாகை-பிடாகை=உட்கிடை ஊர்
படாகை நடந்து கல்லுங்கள்ளியு(ம்) நாட்டி - பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நட்டனர். சிவன்கோயிலாக இருப்பின் சூலம் பொறித்த கற்களும், திருமால்கோயிலாக இருப்பின் சக்கரம் (ஆழி) பொறித்த கற்களும் நடுவது மரபு.
விடுத்த அறையோலை - கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவித்தனர்.
முடிவுரை
கல்வெட்டுகள் மெய்யானவையா? கல்வெட்டுகள்
நம்பிக்கைக்குரியனவா? என்று சில கேள்விகள் எழுந்தன. கல்வெட்டுகள் எவ்வாறு பொறிக்கப்பட்டன
என்பதை அறிந்தால் ஐயங்கள் அகலும். அரசன் நிலக்கொடை பற்றிய ஆணையை நேரடியாக வாய் மொழி
அறிவிக்கிறான். வாய்மொழி ஆணையைக் குறிக்கும் சொல் திருவாய்க்கேழ்வி. அதைச் செவிமடுத்துக்
கேட்டு எழுதும் அரசு அதிகாரி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் திருமந்திர ஓலை. எழுதப்பட்ட
ஓலையின் படி (நகல்) ஒன்று கொடை நிலம் இருக்கும் ஊரின் நாட்டார் சபைக்குச் செல்கிறது.
அரசனின் ஆணையாதலால் அது திருமுகம் எனப்படுகிறது. திருமுகம் கிடைக்கப்பெற்ற நாட்டார்
அதனைத் தொழுது தலைமேல் வைத்துக் கொள்கின்றனர். பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து நிலத்தின் எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நடுகின்றனர். கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றனர். கோயில் சுவரில் அரசனின் ஆணை, கல்வெட்டாகப் பொறிக்கப்படுகிறது.
கல்லின்மேல் பொறிக்கும் முன்பு கல்வெட்டு வாசகம் கல்லில் செங்காவி கொண்டு எழுதப்படுகிறது.
மக்கள் பார்வைக்கு அரசனின் ஆணை எட்டுவது இவ்வகையில்தான்.
கல்வெட்டுகள்
மிக முதன்மையான சான்றாதாரங்கள். கல்வெட்டுகளைப்
படித்தறிதல் ஓர் அருமையான கலை. கல்வெட்டுகளைக் கணினிக்கும் இணையத்துக்கும் கொண்டு சென்று
தரவுத் தொகுப்பாக்கிப் பயன்படுத்தும்போது வருங்காலத்தவர் வரலாறு அறியவும் பாதுகாத்து
முன்னெடுத்துச் செல்லவும் மிகப்பயன்படும் என்றும்,
இலக்கியப் பேராசிரியர்கள், கல்வெட்டு அறிந்தவர்கள், கணினித் தொழில் நுட்பம் அறிந்தவர்கள்
அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுகோள் விடுத்தும் முருகையன் அவர்கள் கல்வெட்டியல்
பயிலரங்கை நிறைவு செய்தார்.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
கோவை.
அலைபேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக