கோவைப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சிற்றுலா
முன்னுரை
கோவை அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள்
மாணவன் என்ற முறையில் எனக்கு அக்கல்லூரியுடன் தொடர்பு உண்டு. குறிப்பாக வரலாற்றுத்துறையுடன்.
முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்கள், வரலாற்றுத் தொடர்புள்ள இடங்களுக்குச் செல்லுதல்
மூலம் அவர்கள் நூற்சூழலோடு களச்சூழல் உணர்வையும் பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும் என்று
பேராசிரியர்களிடம் உரையாடுவது வழக்கம். அவ்வாறான களப்பயணங்கள் ஏனோ பெரும்பாலும் நிகழுவதில்லை.
கல்லூரிகளின் நிருவாக முறையில் ஏதேனும் நடைமுறை இடர்ப்பாடுகள் இருக்கக் கூடும். எனவே, அண்மையில், அக்கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜூலியானா அவர்கள்
என்னைத் தொடர்பு கொண்டு, கோவையின் சுற்றுப்பகுதியில் வரலாற்றுத் தடயங்கள் உள்ள ஒரு
சில இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறோம்; நீங்களும் உடன் வாருங்கள் என அழைத்தபோது
மகிழ்ச்சியுற்றேன்.
தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம்
மேற்படிப் பயணத்தில் பார்க்கவேண்டிய
இடங்களைத் தெரிவு செய்து, வழிகாட்டி அழைத்துப்போனது கோவையில் உள்ள தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம்
என்னும் ஓர் அமைப்பு. இது, தமிழக மரபிலும், கோவை வரலாற்றிலும் ஆர்வமுள்ள ஓர் இளைஞர்
அணி. அண்மையில் வரலாற்றுத் தேடல் மூலம் சில
தொல்லியல் கண்டுபிடிப்புகளை இவர்கள் இனம் கண்டுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களை இது
போன்ற பயணங்களில் ஈடுபடுத்தி வரலாறு, தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும், அறிமுக அறிவையும்
வழங்கி வருகின்றனர்.
பயணம் தொடங்கியது
பயண நாளன்று காலை, அரசு கலைக்கல்லூரியிலிருந்து ஒரு சிற்றுந்தில் புறப்பட்டோம். இருபது மாணவர்களுடன் பேராசிரியரும் நானும். பார்வையிடவேண்டிய இடங்களில் முதலாவது உக்கடம் பகுதியில் அமைந்துள்ள புலிகுத்திக்கல். உக்கடம் புறவழிச்சாலையோரத்தில் இந்தப்புலிகுத்திக்கல் அமைந்துள்ளது. சிற்றுந்து அந்த இடத்தை அணுகும் முன்பே அங்கு
நமது மரபுசார் சங்கத்து இளைஞர் அணி வந்திருந்தது. நான்கு பேர் கொண்ட அணி. இரு
சக்கர வண்டிகள் இரண்டு. அமைப்பின் பொறுப்பில் செயல்படும் விஜயகுமார், ஆனந்தகுமார்
ஆகிய இருவர்; மற்றுமிருவர் உறுப்பினர்.
அனைவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளையர். விடுமுறை நாள்களில்
வரலாற்றைத் தேடும் பயணர்கள்.
உக்கடம் புலிகுத்திக்கல்
கொங்குநாட்டின் கோவைப்பகுதி பண்டைய நாள்களில், மலை சார்ந்த குறிஞ்சி
நிலத்தை அரணாகக் கொண்ட காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருந்த காரணத்தால், கால்நடை
வளர்ப்புச் சமுதாயமே மேலோங்கியிருந்தது. கால்நடைகளே செல்வமாகக் கருதப்பட்ட
காலங்களில், கால்நடைகளைக் காத்தல் பெரும்பணியாயிருந்தது. கால்நடைகளைக்
கவர்வதிலும், அவற்றைக் காத்தலிலும் வீரர்கள் போரிடுதல் இயல்பான சமூக
நிகழ்வாயிருந்தது. அது போலவே, கால்நடைகளைக் காட்டு விலங்குகளினின்றும்
காப்பதற்காகக் காவல் வீரர்கள் விலங்குகளோடு சண்டையிட்டு விலங்குளைக் கொல்லுதலும்,
சண்டையின்போது வீரர்கள் இறந்துபடுதலும் மிகுதியாக நிகழ்ந்தன. இவ்வகை வீரர்களுக்கு
நடுகல் எடுப்பித்து வழிபடுதல்
நாட்டார் மரபு.
இவ்வகை நடுகற்கள், கோவைப்பகுதியில்
புலிகுத்திக்கல் என்னும் பெயரில் வழங்கும். இடைக்காலக் கொங்குச் சோழரின் ஆட்சியின்
கீழ் கொங்குப்பகுதி வந்த பின்னர் வேளாண்மை செழிப்புற்றது. கொங்குச்
சோழர் ஆட்சிக்கு முன்புவரை கோவைப்பகுதி முன்னிலையில் ஒரு நகரப்பகுதியாக்
இருந்திருக்கவில்லை. கோவைக்கருகில் அமைந்துள்ள பேரூரே பெரியதொரு நகரமாக இருந்தது.
கொங்குநாட்டின் இருபத்து நாலு நாட்டுப்பிரிவுகளில் பேரூர் நாடும் ஒன்றாக இருந்தது.
கோவைப்பகுதி, காடுகள் சூழ்ந்த பகுதியாகவும், கால்நடை வளர்ப்புப் பகுதியாகவும்
இருந்துள்ளது. பின்னரே, கொங்குச்சோழர்காலக் கல்வெட்டுகளின்படி, கி.பி. 10-ஆம்
நூற்றாண்டுக்குப் பின்னர் கோவன்புத்தூர் என்று புதியதாக ஓர் ஊர்
அமைக்கப்பட்டதாகவும், அது பேரூர் நாட்டில் இருந்ததாகவும் செய்தி காணப்படுகிறது.
காடழித்து ஊராக்கப்பட்ட கோவன்புத்தூர், நாயக்கர் காலத்திலும், காடுகள், கால்நடை
வளர்ப்பு, கால்நடைகளை விலங்குகளிடமிருந்து காத்தல் ஆகிய கூறுகளைக் கொண்டிருந்தது.
எனவே, மேற்படி உக்கடம் புலிகுத்திக்கல் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட
நடுகல்லாகும்.
உக்கடம் -புலிகுத்திக்கல் கோயில் |
புலிகுத்திக்கல் சிற்பம்-முழுத்தோற்றம் |
அண்மைத் தோற்றம் |
உக்கடம் நடுகல் ”மதுரை வீரன் சாமி” என்னும் பெயரில் வழிபடப்பட்டுவருகிறது. ஒரு வகையில், வழிபாடு காரணமாகவே இந்த
நடுகல் இதுவரை அழிவுக்குட்படாமல் ஒரு தொல்லியல் எச்சமாகப்
பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது எனலாம்.
ஒத்தக்கால் மண்டபம்
அடுத்து நாங்கள் சென்ற இடம். ஒத்தக்கால் மண்டபம். கோவை
- பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர். நூறு கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம்
எனப் பல மண்டபங்கள் இருக்கையில், இங்கே, ஒற்றைக்கால் கொண்ட மண்டபம் எவ்வாறு
இருக்கமுடியும்? ஊர்ப்பெயருக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும். இங்குள்ள நவகோடி
நாராயணப் பெருமாள் கோயில்தான் எங்கள் வரலாற்றிலக்கு. கோயிலைச் சுற்றியுள்ள இடம்
பெருங்கற்காலத்தைச் சேர்ந்த (MEGA LITHIC PERIOD) ஓரிடம். இவ்வகை இடங்கள் “சாம்பல் மேடு” என்று மக்கள் வழக்காற்றில்
வழங்கும். இங்கு, பழங்கால மக்களின் வாழ்விடமும், ஈமக்காடும் இருந்துள்ளன
என்பதற்குச் சான்றாக, முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்புச் சிறு பானைகள்
ஆகியவற்றின் துண்டுப்பகுதிகள் எச்சங்களாக மண்மேடுகளில் காணப்படுகின்றன. இங்குள்ள மற்றுமொரு சிறப்பு, இம்மண்மேடுகளில்
உள்ள மண்ணைக் கொண்டே கோட்டைச் சுவர் போல எழுப்பப்பட்ட, இடிந்த நிலையில் உள்ள
சுவர்ப்பகுதிகள். இச்சுவர், திப்பு சுல்தான் காலத்தில் ஏதோ ஒரு பாதுகாப்புக் கருதி
இப்பகுதி மக்கள் எழுப்பியது எனக் கருதப்படுகிறது. சுவர்க் கட்டுமானத்தின் சரியான பின்னணிக்காரணம் தெரியவில்லை.
இங்குள்ள பெருமாள் கோயிலில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட
பல பலகைக் கற்கள் முன்பு இருந்துள்ளன.
தற்போது இரண்டு கல்வெட்டுப்பலகைகளைக் கோயில் வளாகத்தில் வைத்துள்ளனர். இவை
நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம். தொல்லியல் துறையினர் வெளியிட்ட கோவை மாவட்டக்
கல்வெட்டுகள் நூலில் இவை பதிக்கப்படவில்லை. ஆனால், பேராசிரியர் அவிநாசி மா.கணேசன்
அவர்கள், முனைவர் சூலூர் இரா.ஜெகதீசன் அவர்களோடு இணைந்து வெளியிட்ட ”கொங்குநாட்டுக்
கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்” என்னும் நூலில் ஒரே ஒரு
கல்வெட்டு பதிவாகியுள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்துள்ளது; கல்வெட்டில்
அரசர் காலக் குறிப்பு இல்லை; கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற சக ஆண்டும், தமிழ்
ஆண்டும் பொருந்தி வரவில்லை என்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். எங்களது
பயணத்தில் பார்த்த முதல் கல்வெட்டு இதுதான் என்பதாலும், இக்கல்வெட்டின் பாடம்
தொல்லியல் துறையின் நூலில் இடம்பெறாததாலும் அதன் பாடத்தையும் செய்தியையும் இங்கு
தந்துள்ளேன்.
ஒத்தக்கால் மண்டபம் பெருமாள் கோயிலின் கல்வெட்டின்
பாடம்:
1
ஸ்வஸ்திஸ்ரீ செகாப்த்தம் 1410
2
1410 இதன்மேல் செ
3
ல்லாய் நின்ற பார்த்திப
4
வருஷம் அற்பசி மாதம்
5
15 நவகோடி நாரா
6
யணப் பெருமாளுக்கு அ
7
ன பத்த வதொ.................
8
ருமம் ..........மை மு.........ஆளுக்கட்டி
9
..................விட்டபடிக்கு வழக்கப்பட்டு
10
தங்காரிக்கன் சந்தனம்
11
12 மா பாக்குமிழகும் அரை மா ..........
12
ப்பறுசே வெல்லம் மாகாணி எ
13
பேற்பட்ட தீர்வையில்
14
ட்டன் அரை மாவரை
15
யால் கூடி வருகையில் விரப
16
.............யக் கரையல்வர்களு
17
..............ம்மக் கையிலாசப்
18
..................ல்ல பட
19
நாயகன் ...........யந்கட
20
காயிந
21
மாதநட்டார் மாந்தான்
22
மம் பாபால .........நடத்த வரு
23
வதாகளு செல் பாகம் .....முட்
24
டாமல்த் தேவக் காரியத்தை
நவகோடி நாராயணப் பெருமாள்
கோயிலுக்கு வழிபாட்டிற்காகக் கொடை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுச் செய்தி.
பாக்கு, மிளகு, வெல்லம், சந்தனம் ஆகியவை கொடைப்பொருள்கள். கல்வெட்டில்
குறிக்கப்பெறும் காலக் கணக்கு சரியில்லை. சக ஆண்டு 1410-க்கு இணையான ஆங்கில ஆண்டு
1488. பார்த்திப ஆண்டு தொடங்குவது 1405-இல். இரண்டும் பொருந்திவரவில்லை. நேரில்
கல்வெட்டைப் பார்க்கும்போது 12-ஆவது வரியில் உள்ள “வெல்லம்” என்னும் சொல் தெளிவாகத் தெரிந்தது. ஒளிப்படத்தைக்
கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்தாலும் கல்வெட்டைப் படிக்க இயலவில்லை. வரி 22-இல்
வருகின்ற “பாபால” என்ற
சொல் கணினியில் “பரிபால” என்பதாகப் புலப்பட்டது. கோயிலுக்கு
அளிக்கப்பட்ட தன்மம் காக்கப்படவேண்டும் என்பதைக் குறிக்கப் “பரிபாலனம்” என்னும்
வடசொல் எழுதப்படும். எனவே “பாபால” என்பது “பரிபால(னம்)” என்பதாகவே
இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் (25-ஆவது வரியில்) உள்ள “கெங்கை” என்னும் சொல், தன்மத்துக்கு அழிவு செய்வோர் கங்கைக்
கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்பதைக் குறித்து வருகின்ற
கலவெட்டுத் தொடரின் ஒரு பகுதியாகும்.
குமுட்டிபதிப் பாறை ஓவியம்
அடுத்து நாங்கள் செல்லவேண்டிய இடம் குமுட்டிபதி.
தொல்லியல் தடயங்களில் ஒன்றான பாறை ஓவியங்கள் அமைந்த பகுதி. ஒத்தக்கால்
மண்டபத்திலிருந்து பிரியும் சாலை ஒன்று அவ்வூருக்குச் செல்கிறது. சிறிது தொலைவு
சென்றதுமே, சாலையோரத்தில், மீண்டும் ஒரு புலிகுத்திக்கல் கண்டோம். மேலும்
சற்றுத்தொலைவு சென்றதுமே சாலையோரத்தில் கருப்பராயன் கோயில் வீதி முனையில், எழுத்துகள்
உள்ள ஒரு கல்லைப் பார்த்தோம். சிற்றுந்திலிருந்து இறங்கி நெருங்கிப் பார்க்கையில்,
எழுத்துகள் மிகத் தேய்ந்துபோன நிலையில் கல்வெட்டு இருந்ததை அறிந்தோம். மூன்று
வரிகள் இருந்தன. ”குமரன்” , “முருகன்” போன்ற சொற்கள் காணப்பட்டன. மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு.
அருகில் ஊர் மக்களும் சூழ்ந்துகொண்டு கல்வெட்டுச் செய்தியை அறியும்
ஆவலைத்தெரிவித்தார்கள். ஆனால், கல்வெட்டு படிக்கும்படியாயில்லை என்பதில்
அனைவர்க்குமே ஏமாற்றம்தான். மேலே பயணம் தொடர்ந்தது. குமுட்டிபதி ஊரை அடைந்து,
அங்கிருக்கும் குன்றை நெருங்கினோம். குன்றின் அடிவாரத்திலேயே தரைப்பகுதியிலிருந்து
சற்றே பாறையின்மீது ஏறியவுடன், எதிரே பெரும் சுவர் போலச் சரிந்த ஒரு பாறைப்பரப்பு.
பாறைப்பரப்பு முடியும் இடத்தில் பாறை கவிந்து இயற்கையாக ஒரு பெரிய குகைத்தளத்தை
உருவாக்கியிருந்ததைக் கண்டோம். குகைக்குள் கூரைப்பகுதியில் ஓவியங்கள்
வரையப்பட்டிருந்தன. மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு
காலகட்டத்தில் இவ்வோவியங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியலாரின் கணிப்பு.
ஓவியங்கள், வெள்ளை நிறக்கோடுகளால் அமைந்தவை. White Ochre என ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
செங்காவி வண்ணத்திலும் பாறை ஓவியங்கள் வரையப்படுவது உண்டு. குமுட்டிபதியில் உள்ள
ஓவியங்களில் ஒரு யானை உருவமும், தேர் போன்ற ஒரு உருவமும் காணப்படுகின்றன. தேரைப் பலர் கூடி இழுத்துச் செல்வதைப்போல்
ஓவியம் காணப்படுகிறது. அருகிலேயே உள்ள மற்றொரு பாறையில் மனித உருவங்கள்
வரையப்பட்டுள்ளன. வரலாற்றுக்க் காலத்துக்கு முந்தைய தொல்லியல் எச்சங்களும் கோவை
நகரின் அருகிலேயே இருப்பது சிறப்பு.
ஓவியங்கள் இருக்கும் குகைப்பகுதி
ஓவியங்கள் இருக்கும் குகைப்பகுதி
குமுட்டிபதிப் பாறை ஓவியங்களைப் பார்த்து முடியும்போது பகலுணவு நேரம் நெருங்கியிருந்தது. அன்று முழுதுமே கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. களைப்போடு பசியும் சேர்ந்து கொண்டபோது, கல்லூரிப் பேராசிரியரின் ஏற்பாட்டில் சுவையான உணவு உண்டதும் களைப்பு கலைந்து புத்துணர்வோடு தொல்லியல் பயணத்தின் அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம். இங்கே ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மரபு சார் சங்கத்து இளைஞர்கள், கடும் வெயிலிலும் இரு சக்கர வண்டிகளில் தொடர்ந்து சிற்றுந்துக்கு வழிகாட்டியவாறே பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்பதுதான் அது. வரலாற்றின்மீது உள்ள ஆர்வமும், சேவைப்பண்பும்.
சுண்டக்காமுத்தூர்-நாயக்கர்காலக் கிணறு
குமுட்டிபதியை அடுத்து நாங்கள் சென்ற இடம்
சுண்டக்காமுத்தூர். குமுட்டிபதியிலிருந்து ஒரு குறுக்குச்சாலை வழியே
கோவைப்புதூரைக் கடந்ததும் வருகின்ற ஊர். அங்கே, “பிளேக்” மாரியம்மன் கோயிலின் பின்புறம்
ஒரு பழங்காலக் கிணறு. இக்கிணறு, நீண்ட காலமாகத் தூர்ந்து போய் மண்ணும், புதர்களும்
மூடிய நிலையில் இருந்துள்ளது. நமது மரபுச் சங்கத்து இளைஞர் குழு, நீண்ட
உழைப்புக்குப்பின்னர் இக்கிணற்றைத் தூர் நீக்கிப் பலரும் பார்த்து மகிழுமாறு
வெளிப்படுத்தியுள்ளார்கள். இது போன்ற தன்னார்வலரின் பணிகளாலேயே தொல்லியல் தடயங்கள்
பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஊத்துக்குளியில்,
நாயக்கர் காலப் படிக்கிணறு ஒன்று ”இயல் வாகை” என்னும் இளைஞர் அமைப்பினரால் இவ்வாறு வெளிப்பட்டதும், அதைச்
சென்று பார்த்ததும் நினைவுக்கு வந்தது.
சுண்டக்காமுத்தூர் கிணறும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. சதுரமாக வெட்டப்பட்ட ஆழமான கிணற்றுப் பகுதியின் சுற்றுச் சுவரும், கிணற்றுப்பகுதிக்குக் கீழிறங்கிச் செல்லும் படிகளைக்கொண்ட குறுகலான நீள் வழியும் அதன் சுற்றுச் சுவரும் ஆகிய அனைத்தும் கல் கட்டுமானங்கள். கற்கள் செம்மையான நிறத்தில் அமைந்து அழகான தோற்றத்தை அளித்தன. கட்டுமானச் சுவர்ப்பகுதியில், ஆங்காங்கே புடைப்புச் சிற்பங்கள். அவற்றில் பெரும்பாலானவை மீன் உருவங்கள். வளமைச் சின்னங்களைக் குறிப்பதான குறியீடாக மீன் உருவங்களைப் படைப்பது மரபு. சுவர்ப்பகுதியின் மேல் பகுதியில் வரி வரியாகச் செதுக்கல்கள். இந்தச் செதுக்கல்களைப் பல மண்டபங்களில் காணலாம். கிணற்றைச் சுற்றியுள்ள வளாகத்தில் உடைந்த நிலையில் ஒரு சிறிய நந்திசிலையும், கோயில்களில் காணப்படும் கோட்டம் என்னும் பகுதியில் அமைந்த ஒரு தோரணச் சிற்பக்கல்லும் இருந்தன. இத்தோரணச் சிற்பத்தில் பேரூர்க் கோயிலில் உள்ளதுபோல மனித முகம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நந்தியும், தோரணமும், வேறெங்கோ இருந்த ஒரு கோயிலின் துண்டுச் சிற்பங்களாக இருக்கக்கூடும்.
நாயக்கர் காலக் கிணறு |
மீன் - புடைப்புச் சிற்பமும், வரிச் செதுக்கலும் |
தோரணச் சிற்பம்-மனித முகத்துடன் |
தலை உடைந்த நந்திச் சிற்பம் |
சுண்டக்காமுத்தூர் கிணறும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. சதுரமாக வெட்டப்பட்ட ஆழமான கிணற்றுப் பகுதியின் சுற்றுச் சுவரும், கிணற்றுப்பகுதிக்குக் கீழிறங்கிச் செல்லும் படிகளைக்கொண்ட குறுகலான நீள் வழியும் அதன் சுற்றுச் சுவரும் ஆகிய அனைத்தும் கல் கட்டுமானங்கள். கற்கள் செம்மையான நிறத்தில் அமைந்து அழகான தோற்றத்தை அளித்தன. கட்டுமானச் சுவர்ப்பகுதியில், ஆங்காங்கே புடைப்புச் சிற்பங்கள். அவற்றில் பெரும்பாலானவை மீன் உருவங்கள். வளமைச் சின்னங்களைக் குறிப்பதான குறியீடாக மீன் உருவங்களைப் படைப்பது மரபு. சுவர்ப்பகுதியின் மேல் பகுதியில் வரி வரியாகச் செதுக்கல்கள். இந்தச் செதுக்கல்களைப் பல மண்டபங்களில் காணலாம். கிணற்றைச் சுற்றியுள்ள வளாகத்தில் உடைந்த நிலையில் ஒரு சிறிய நந்திசிலையும், கோயில்களில் காணப்படும் கோட்டம் என்னும் பகுதியில் அமைந்த ஒரு தோரணச் சிற்பக்கல்லும் இருந்தன. இத்தோரணச் சிற்பத்தில் பேரூர்க் கோயிலில் உள்ளதுபோல மனித முகம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நந்தியும், தோரணமும், வேறெங்கோ இருந்த ஒரு கோயிலின் துண்டுச் சிற்பங்களாக இருக்கக்கூடும்.
வேடபட்டிக் குளம்
சுண்டக்காமுத்தூர் நாயக்கர்காலக் கிணற்றைப்
பார்த்துவிட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் வேடபட்டிக் குளம். இது
கோவைக்கருகிலுள்ள பெரிய குளங்களுள் ஒன்று. இதன் ஒரு பகுதி கோளராம்பதிக் குளம்
என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. குளம் முழுதும் கருவேல மரங்களின் தொகுப்பு.
ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் மண்மேடு. மற்ற இடங்கள் யாவும் பள்ளம். கடந்த சில
மாதங்களாகக் குளத்தில் தூர் எடுக்கப்பட்டு, அதன் காரணமாகக் குவிந்த மண் முழுதும்
குளத்தின் கரையிலேயே கொட்டப்பட்டதன் மூலம் குளத்தின் கரை நன்கு உயர்த்தப்பட்ட
நிலையில் உள்ளது. மரங்களின் அண்மையைத்
தவிர்த்து மற்ற இடங்களில் மண்ணைத் தோண்டியதாலேயே பள்ளமும் மேடும். குளத்துள்
இறங்கிச் சற்று நடந்ததுமே, மரபுச் சங்க இளைஞர்குழு ஓரிடத்தில் எங்களை நிறுத்தி,
ஒரு மரத்தடி மண்மேட்டைக் காண்பித்தார்கள். அங்கே, மண் தாழிகளின் சிறு சிறு துண்டு
ஓடுகள். அவை தடித்துக் காணப்பட்டன. தொல்லியல் எச்சங்களான முதுமக்கள் தாழிகளின்
ஓடுகளே அவை. இந்த இடத்தில்தான், அண்மையில் இந்த மரபு சார் சங்கக் குழுவினர்,
தொல்லெழுத்தான ‘தமிழ் பிராமி” எழுத்துப் பொறிப்புக் கொண்ட தாழிப்பகுதியைக் கண்டெடுத்தார்கள்.
கொங்குப்பகுதியில் கிடைத்த தமிழ் பிராமிப் பொறிப்புகளில் இக்கண்டுபிடிப்பு
சிறப்புக்குரியது. இதற்கு முன்னர் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளில் ஆள் ஒருவரின் பெயர்
மட்டுமே காணப்பெறும். ஆனால், இங்கே கிடைத்த தாழித்துண்டில், “ஈமத்தாழி” என்னும் சொல்லே இருந்தமை இதற்கு முன்னர் கண்டிராத புதுமை.
இந்தச் சொல்லைத் தொடர்ந்து “ன” என்னும் எழுத்தும் உள்ளது.
இபகுதியை முறையாகத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவேண்டும். தொல்லியல்
ஆய்வுகளுக்கு ஏனோ அரசு முன்னுரிமை அளிப்பதில்லை.
வேடபட்டித் தூம்பு (மதகு)
வேடபட்டிக் குளம் |
மண்மேட்டில் தாழி புதைந்திருந்த இடம் |
”ஈமத்தாழி” - பொறிப்பு |
வேடபட்டித் தூம்பு (மதகு)
வேடபட்டிக் குளத்தின் இன்னொரு பகுதியில், அண்மையில்
நமது மரபுசார் சங்கக் குழுவினர் கண்டுபிடித்த ஒரு மதகைப் (தூம்பு) பார்வையிட்டோம்.
தென் மாவட்டங்களில் மதகு, தூம்பு, கலிங்கு என்னும் பெயர்களில் வழங்கும் நீர்ப்பாசன
அமைப்புகளின் எண்ணிக்கை மிகுதி. கோவைப்பகுதியில் மதகுகளின் எண்ணிக்கை குறைவே. எனவே, வேடபட்டிக் குளத்தில் மதகு
கண்டுபிடிக்கப்பட்டதும் சிறப்பானதே. இந்த மதகில் சில புடைப்புச் சிற்பங்கள்
உள்ளமை, வழக்கமாகக் காணும் மதகுகளினின்றும் இதை வேறுபடுத்துகிறது. ஒட்டகம்,
பாண்டியரின் இலச்சினை, கத்தி ஆகிய மூன்று சிறு புடைப்புச் சிற்பங்கள் ஒருசேர இதில்
காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று வேறுபட்ட பொருள்கள். ஒட்டகம், ஒரு சில
கோயில்களில் காணப்படும் வளமைச் சின்னங்களான மீன், முதலை ஆகியவற்றோடு தொடர்புடையது.
எனவே, ஒட்டகம் வளமைச் சின்னத்தைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. ஒட்டகம், அரேபிய
வணிகர்களோடு தொடர்புடையது எனக் கொள்வோமானால் அரேபிய வணிகர்கள் இந்த மதகினை
அமைப்பதில் பங்கேற்றனர் எனலாம். பாண்டியரின் மீன் இலச்சினை உள்ளதால் 13-ஆம்
நூற்றாண்டில் கொங்கு நாட்டை ஆண்ட கொங்குப் பாண்டியரோடு இந்த மதகு தொடர்புடையது
எனலாம்.
தூம்பு
இவற்றுக்கு முற்றிலும் வேறான கத்தியின் உருவம் எதைக் குறிக்கிறது எனத்
தெரியவில்லை. இது ஆய்வுக்குரியது. மதகைக் கண்டுபிடித்த மரபுச் சங்கத்தவரான
விஜயகுமார், இது ஒரு “ஆண்டெனா” (ANTENNA)
கத்தி
என்று கருதுவதாக நம்மிடம் கூறினார். “ஆண்டெனா” (ANTENNA) கத்தி என்பது பின்-வெண்கலக்
காலக் கருவி என்று அறிகிறோம். 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த HALLSTATT காலத்ததான ஒரு “ஆண்டெனா” கத்தியின் படத்தையும், இந்திய “ஆண்டெனா” கத்தி என்று ஒரு செப்புக் கத்தியின் படத்தையும் இங்கே பார்க்க.
பின்னதன் காலம் கி.மு.1500-500 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படங்கள் யாவும்
இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. வேடபட்டி மதகுச் சிற்பத்திலுள்ள கத்தி, “ஆண்டெனா” வகைக் கத்தியா என்பது ஆய்வுக்குரியது. இம்மதகைத் தொல்லியல்
துறையினர் வந்து பார்வையிட்டுள்ளனர் என அறிகிறோம். அத்துறையின் ஆய்வு முடிவுகள்
என்ன என்பது தெரியவில்லை.
குளத்துள் அனைவரும் குழுமி நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். மாணவர்கள் வழக்கமாகத் தங்களின் இயல்புக் கல்விச் சூழலில், வரலாற்றுப் பாடம் என்னும் வலைப்பின்னலில் நிலைத்திருப்பர் எனலாம். அந்தச் சூழலிலிருந்து அவர்கள் வெளியே வந்து மகிழ்ந்ததை இப்பயணத்தின்போது நேரில் கண்டேன். வரலாற்றறிவும் சிறிது பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில், கோவை மரபு சார் ஆர்வலர் சங்கத்தவர் பெரும் தூண்டுகோலாக இருந்தனர் என்பதிலும் ஐயமில்லை. ஏனெனில் மாணவர்கள் வரலாற்றுப் பயணம் பற்றிய தங்கள் கருத்துகளை விழியப் பதிவு செய்தமையே சான்று. வேடபட்டிக் குளத்துடன், மரபுச் சங்கத்தினர் தம் பங்களிப்பை முடித்துக்கொண்டு விடைபெற்றனர். இதுபோன்ற களப்பணி தொடரவேண்டும் என்பதான எண்ண முடிவு இரு சாராரிடமும் ஏற்பட்டது.
தூம்பு
”ஆண்டெனா” கத்தி ஆண்டெனா கத்தி - விக்கிபீடியா |
ஆண்டெனா கத்தி-இந்தியா-கி.மு.1500-500 |
பாண்டியர் இலச்சினை |
ஒட்டகம் |
குளத்துள் அனைவரும் குழுமி நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். மாணவர்கள் வழக்கமாகத் தங்களின் இயல்புக் கல்விச் சூழலில், வரலாற்றுப் பாடம் என்னும் வலைப்பின்னலில் நிலைத்திருப்பர் எனலாம். அந்தச் சூழலிலிருந்து அவர்கள் வெளியே வந்து மகிழ்ந்ததை இப்பயணத்தின்போது நேரில் கண்டேன். வரலாற்றறிவும் சிறிது பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில், கோவை மரபு சார் ஆர்வலர் சங்கத்தவர் பெரும் தூண்டுகோலாக இருந்தனர் என்பதிலும் ஐயமில்லை. ஏனெனில் மாணவர்கள் வரலாற்றுப் பயணம் பற்றிய தங்கள் கருத்துகளை விழியப் பதிவு செய்தமையே சான்று. வேடபட்டிக் குளத்துடன், மரபுச் சங்கத்தினர் தம் பங்களிப்பை முடித்துக்கொண்டு விடைபெற்றனர். இதுபோன்ற களப்பணி தொடரவேண்டும் என்பதான எண்ண முடிவு இரு சாராரிடமும் ஏற்பட்டது.
பயணத்தின் இறுதியில் பேரூர்க் கோயில்
பயணத்தின் இறுதிக்கட்டத்தில், பேரூர்க் கோயிலைப் பார்த்து ஓரிரு கல்வெட்டுகளைக் கண்டறிதலும் ஒரு நிகழ்வாக இருந்தது. கோயிலின்
தென்புறச் சுவர்களில் ஒன்றிரண்டு கல்வெட்டுகளைப் படித்துக்காண்பித்து சில
எழுத்துகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். வடபுறச் சுவரில், நீர்மேலாண்மை
பற்றிய சிறப்பு வாய்ந்த ஒரு கல்வெட்டு உள்ளது. அதை, ஆர்வமுள்ள சில மாணவர்க்குக்
காண்பித்துச் செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்.
தேவி சிறை என்றோர் அணை
13-ஆம் நூற்றாண்டில், கி.பி. 1224-ஆம் ஆண்டு. கொங்குச்
சோழன் வீரராசேந்திரன் கொங்குநாட்டை ஆண்டுகொண்டிருந்தான். அது அவனது பதினேழாவது
ஆட்சியாண்டு. நொய்யல் நீர் பெருகி வளமாக ஓடிக்கொண்டிருந்ததில் வியப்பில்லை.
நொய்யலின் குறுக்கே ஏற்கெனவே கோளூர் அணை என்றோர் அணை இருக்கின்றது. இந்நிலையில்,
வேளாண்மைத் தேவைக்கென இன்னொரு அணை தேவைப்பட்டதன் காரணமாகத் தேவிசிறை என்னும்
பெயரில் புதியதோர் அணை கட்டப்பெற்றது. இதுவும் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று
அரசன் ஆணையிட்ட பின்னரே நிகழ்ந்தது. புதிய அணை, கோளூர் அணைப்பகுதியின் மேற்பகுதியில்
கட்டப்பெற்றதால் தேவி சிறை அணை மேட்டிலும், கோளூர் அணை பள்ளத்திலும் அமைந்தன. தேவி
சிறை அணையில் நீர் தேக்கினால் கோளூர் அணைக்கு நீர் வராது. ஆனால், அரசன் தன்
ஆணையில், கோளூரணைக்குச் சேதம் வாராதபடிப் புது அணை கட்டப்படவேண்டும் என்று
குறிப்பிடுகின்றான். தேவி சிறையில் நீரைத் தேக்கும்போது கீழுள்ள கோளூர் அணை நீர்
நிரம்பிய பின்னரே தேக்கவேண்டும் என்று அரசன் ஆணையிடுகிறான். நீர் மேலாண்மையில்
மன்னர் காலத்தில் இருந்த அறமும், அறிவும், அக்கறையும் தற்காலத்தே சற்றும்
கற்பனையிலும் காண இயலா.
கல்வெட்டின் பொன் வரிகள: (க.வெ.எண்: 116/2004-கோவை மா. கல்வெட்டுகள்)
1 1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்
சக்கரவத்திகள் கோனேரின்மை
2
கொண்டான் பேரூர் நாட்டு புகலிடங்
குடுத்த சோ
3
ழச் சதுர்வேதி மங்கலத்துச்
சபையாற்கும்
4
பேரூர் ஊரார்க்கும் நம்மோலை
குடுத்தபடியா
5
வது இவர்கள் தங்களூற்கு நீர்த்தட்டப் பெறவே
6
நமக்கு வந்தறிவித்தமையிலிவர்கள்
தங்களூரெல்
7
லையில் தேவி சிறையென்கிற
அணையடைத்து வாய்க்காலும்
8
வெட்டிக் கோளூரணைக்குச் சேதம்
வாராதபடி யவ்வணைக்கு
9
ப் பின்பாக நீர்
விட்டுக்கொள்ளப்பெறுவார்களாகவும்........
முடிவுரை
பேரூர்க் கோயிலும் கல்வெட்டும் பார்த்த, படித்த நல்ல நினைவுகளோடு பயணம்
நிறைவு பெற்றது. மாணவப் பருவத்தை நினைவூட்டும் வகையில், நான் பயின்ற கல்லூரியின்
நிகழ்காலப் பேராசிரியர், மாணவர் ஆகியோருடன் பயணம் நிகழ்ந்தமை மறக்கவியலாப் பொழுது.
துரை.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
சிற்றுலா போலில்லை. பேருலாவாக இருந்தது. அரிய பல செய்திகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
நீக்குநல்ல பயணப் பதிவு பயனுள்ள தொல்லியல் / கல்வெட்டுத் தகவல்கள். பகிர்விற்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குமிக்க நன்றி.
பதிலளிநீக்குஎன் போன்ற புதிய ஆர்வலர்க்கு நிறைய பயனுள்ள தகவல்கள் பெற்றேன்.நன்றி
பதிலளிநீக்கு